நிலைமாறாத் தண்ணீர்!

-துஷ்யந்தி, இலங்கை

இரு மூலக்கூறுகள் ஐதரசனும்
ஒரு மூலக்கூறு ஒட்சிசனும்
இணைந்த ஒரு திரவமாய்
உலகைக் குளிர்மையாக்கும்
திரவ ஊடகமே தண்ணீர்…!

உயிர்களின் தோற்றத்தில்                     water
முக்கியப் பங்கெடுத்து
உடலிலே ஓடும் குருதியாகிக்
கருவைச் சூழ்ந்த பன்னீர்க் குடமாகிக்
கடலிலே உடல் சாம்பல்
கரையும் வரைத் தொடர்ந்திடும்
வாழ்வில் தண்ணீர்.!

கற்பாறைகளுக்கிடையே
தோற்றமாகி மலையன்னையின்
மடியிலே தவழ்ந்து கடலன்னையின்
பாதங்களை அடையும்வரை
பல்வேறு பெயர்களுடன்
உலகை வலம் வரும் தண்ணீர்!

அன்றாடம் மனிதனின்
அத்தியாவசியத் தேவையாகி
காலநிலைக் கோலங்களின்
முக்கியப் பங்காளியாகி
மழைத்தாயின் தாய்ப்பாலாகி
மண்ணில் விழும் தண்ணீர்!

நீ வற்றிப் போனால்
எத்தியோப்பியா…
நீ வளமானதால்
செழிப்பான மண்ணீர்…
நீ இன்றி இறப்பு
உன்னாலே பிறப்பு…
அளவாய்ப் பாவித்தால் சிறப்பு…
அதனால் இன்னொருவருக்குத்
தண்ணீர் கிடைப்பு…!!!

About துஷ்யந்தி

எனது பெயர் துஷ்யந்தி கருப்பையா இலங்கை மலையக மண்ணையும், பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஓர் மருந்தாளராகப் பணி புரிகின்றேன். சிறுவயதிலிருந்தே கட்டுரை, கவிதை, தனி இசைப்போட்டிகள் என்பவற்றில் ஆர்வமாக இருந்தேன். தமிழ் மொழித்தின போட்டிகள் சாகித்திய விழாக்கள் என்பவற்றில் கலந்துள்ளேன். அகில இலங்கை தழிழ் மொழித்தின போட்டிகளான கட்டுரை, பாவேதல் தனி என்பவற்றில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளேன். அது மட்டுமின்றி, வீரகேசரி நாளிதழின் குறுக்கெழுத்துப் போட்டிகளிலும், கட்டுரை, கவிதை, ஆக்கங்கள் என்பவற்றிலும் பங்குபற்றியுள்ளேன். சமீப காலத்திலிருந்து முகநூல் வாயிலாக பல வானொலி அலை வரிசைகளுக்கு கவிதை, கருத்துக்கள் என்பவற்றை வழங்கியுள்ளேன். முக்கியமாக சூரியன் எப். எம் இன் நேற்றைய காற்றுப்பக்கம், சக்கி எப்.எம் இன் மக்கள் கருத்துக்களம் என்பவற்றில் எனது படைப்புக்களைக் காணலாம். எழுத்துக்கள் என்றும் வலிமையானவை. நல்ல கருத்துக்கள் மக்களிவையே பகிரப்படவேண்டும். நம் சிந்தனைகள் தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி என்றும் உயிர் வாழ வேண்டுமென்ற வகையில் எனது எதிர்கால எழுத்துலக இலட்சியங்களாகக் கொண்டு விழிப்புணர்வூட்டும் படைப்புக்களை தொடர்கின்றேன். துஷ்யந்தி இலங்கை

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க