ஒரு விதி — இரு பெண்கள்

 

நிர்மலா ராகவன்

“என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல்.

அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை.

“மத்த ரெண்டு பேர்?” என்று கேட்டேன். இரண்டு மணி நேரம் போகவேண்டுமே! அத்துடன், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்த எனக்கு ஒரு புதிய உலகத்தைப் பார்ப்பது போலிருந்தது.

“நம்பர் ஒன் இறந்து போயிட்டார். ரெண்டாவது ப்ளே பாய்! அப்படின்னா ஒங்களுக்குத் தெரியுமா?”

`இப்படியும் ஒரு அப்பாவியா!’ என்று வியந்துகொண்டு, “உம்” என்றேன்.

“அவர் ரொம்ப அழகா இருப்பார். மாடல்!”

“மாடல்மாதிரியா?”

“மாடலேதான். அழகான பொண்ணுங்க பணக்காரியாவும் இருந்துட்டா, விடமாட்டார். அவங்களை மயக்கிடுவார். அவங்க நிறைய காசு குடுப்பாங்க! அவர் வேற வேலை எதுவும் செய்யல”.

எனக்குச் சில தமிழ் நடிகர்கள் ஞாபகம் வந்தது.

_DSC9556“எங்கிட்ட அந்தக் காசைக் குடுப்பார். ஆனா, எனக்கு வாங்கப் பிடிக்கலே. என் கையிலே தொழில் இருக்கு. கெட்ட வழியில வர்ற காசு எதுக்கு! அவரை விவாகரத்து பண்ணலாம்னு பாத்தேன். ஆனா அவர் விடலே”. பேசிக்கொண்டே போனாள். நானும் சுவாரசியமாகக் கேட்டேன்.

“கல் ரொம்ப சூடா இருந்தா சொல்லுங்க, மாம்!” என்றபடி, கொதிக்கும் நீரில் அமிழ்ந்துகிடந்த எரிமலைக் கற்களை என் கால்களில் மேலிருந்து கீழே தேய்த்தாள். இதமாக இருந்தது.

கைகள் அவள் போக்கில் பழகிய வேலை செய்ய, தன் கதையைத் தொடர்ந்தாள். “என் ஃப்ரெண்ட் ஒருத்தி, என்னை ஒரு போமோகிட்ட (BOMOH, MALAY VILLAGE MEDICINE MAN) கூட்டிட்டுப் போனா — `ஒன் புருஷனோட நடத்தையை இவரால மாத்த முடியும்’னு! இப்ப அந்த `இந்தோன்’தான் என்னோட மூணாவது புருஷன்!”

எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

“அவரோ, `நீ கட்டியிருக்கிற ஆளு BLACK MAGIC பயன்படுத்தறான். அவனை மாத்த முடியாது. ஆனா, ஒன்னை மாத்த முடியும்,’னு சொன்னார். அந்த ப்ளே பாய் ஒருவழியா எனக்கு விவாகரத்து குடுத்தார்!”

“எத்தனை வருஷமாச்சு நீ இந்த..?”

நான் கேள்வியை முடிப்பதற்குள், “ரெண்டு வருஷம். அவர்தான் முதலில் கேட்டார். நான் ரொம்ப யோசிச்சேன். என் மூத்த மகன் ஹலீம்தான், `இந்தோனீசியரா இருந்தா என்ன? அவரும் மனுசன்தானே!’ன்னு புத்தி சொன்னான். அவனுக்கும் கல்யாணமாகி, ரெண்டு பிள்ளைங்க ஆகிடுச்சு. நாளைக்கே, நாலு பிள்ளைங்களும் தனித் தனியா போயிட்டா, என்னை யாரு பாத்துப்பாங்க? அதான், `சரி’ன்னுட்டேன்”.

பேச்சு சுவாரசியத்தில் ரொம்ப சூடாக இருந்த கல்லை அய்னுல் என் வயிற்றுப் பகுதியில் வைக்க, “ஆ!” என்று அலறினேன். உணர்ச்சியற்ற குரலில் மன்னிப்பு கேட்டபடி (வழக்கமாகச் செய்வதுதானோ?) தொடர்ந்தாள். “இவர் என்னை நல்லா பாத்துக்கிறார், மாம். சம்பாதிக்கிறதை அப்படியே எங்கிட்ட குடுத்துடறார்! பக்கவாதம் வந்தவங்களுக்கு, அவங்க வீட்டுக்கே போய் சிகிச்சை குடுக்கறார்!” என்றவள், எதையோ பகிர்ந்து கொள்ளலாமா என்று சற்று யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

“எங்க மாநில சுல்தானோட அம்மாவுக்கு இவர்தான் மஸாஜ் செய்வார். அவங்க ஸ்ட்ரோக் வந்து, படுத்தபடுக்கையா கிடந்தவங்க. இப்ப நல்லா நடக்கிறாங்க!” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

அவளுடைய பூரிப்பைப் பகிர்ந்துகொண்ட விதத்தில், ஏதேனும் சொல்ல வேண்டும்போல இருந்தது எனக்கு. “நீ இன்னும் அழகா இருக்கியே! அதான் ஒனக்காக போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க!” என்றேன். அவளுக்கு ஐம்பது வயதுக்குமேல் என்று தெரியும்.

“நெசமாவா?” என்றாள். குரலில் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி இல்லை. பல பேர் புகழ்ந்திருப்பார்கள். அதனால், அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, முக அழகு இயற்கையில் அமைந்ததுதானே, இதில் தான் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற் நினைத்திருக்கலாம்.

மஸாஜ் முடிந்ததும், வாய்வு விலக, துருவிய இஞ்சியை பழுப்புச் சீனியுடன் கொதிநீரில் போட்ட டீ கொடுப்பார்கள். ஊதிக் குடித்தபடி, ஆற அமர உட்கார்ந்து யோசித்தேன்.

கும்பகோணத்தில் நடந்த அக்கல்யாணத்திற்கு நான் போய் மூன்று வருடங்கள் ஆகியிருக்குமா? கல்யாண சத்திரத்தில், மாப்பிள்ளையின் பெரியம்மா, விசாலி, ஏதோ சாமானை ஒழுங்காக அடுக்கப்போக, மணமகளின் தகப்பனார், “நீங்க தொடாதீங்கோ!” என்று அலறியதை எப்படி மறக்க முடியும்! ஐம்பது பிராயத்தைத் தாண்டியிருந்த விசாலி, தன் கையிலிருந்ததை மெதுவாகக் கீழே போட்டுவிட்டு, உள்ளே போனாள். அவள் முகத்தில் காணப்படாத அதிர்ச்சி அப்போது என் முகத்தில் அப்பி இருந்திருக்கும்.

முப்பது வயதுக்குள் கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டவள், பாவம்! எந்தப் புடவை அணிந்தாலும், ரவிக்கை என்னவோ வெள்ளைதான். நெற்றியில் எப்போதும் விபூதி. பிற ஆண்களுடன் இன்னொரு பெண் சிரித்துப் பேசினாலே, இரண்டு சாராருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்பதுபோல் இவள் ஏன் வம்பு பேசுகிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் உறவைத் தவிர, வேறு எந்தவிதமான தொடர்பும் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக விசாலியை நம்பவைத்தது சமூகத்தின் கட்டுப்பாடுகளா? அதனால் உடைந்த உள்ளத்தின் எதிரொலியா?

பல தலைமுறைகளாகப் பெண்கள் கடைப்பிடித்து வந்தததை எதிர்க்கத் துணிவின்றி, அடங்கிப்போவதுபோல் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சிகள் அடங்கிவிடுமா, என்ன! இம்மாதிரியான பேச்சுதான் இவளுக்கு வடிகாலோ? பிற சமுதாயங்களில் பெண்கள் எந்த வயதிலும் துணை தேடிக்கொண்டு, எப்படி நிறைவோடு இருக்கிறார்கள் என்பதை அவளுக்குப் புரியவைக்க வேண்டும்.

அடுத்த முறை அய்னுல்லின் கதையை விசாலியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதை எப்படி ஏற்பாள்? தன் பாடு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துகொள்வாளோ?

ஊகும்!

`கஷ்டகாலம்! சில பேருக்கு கல்யாணம்னா கத்திரிக்காய் வியாபாரம்!’ என்று தலையில் அடித்துக்கொள்வாள் என்றுதான் தோன்றியது.

 

 

படம் உதவி: http://www.coppolaresorts.com/blancaneaux/amenities/waterfall-spa

http://ffcp.s3.amazonaws.com/coppolaresorts/blancaneaux/313_amenities/5_waterfall_spa/_DSC9556.jpg

Leave a Reply

Your email address will not be published.