உன்னையறிந்தால் (2)
நிர்மலா ராகவன்
ஆர்வம் — ஒரு கோளாறா?
கேள்வி: என் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு என்னைப் பிடிப்பதேயில்லை. நான் நிறைய கேள்விகள் கேட்கிறேனாம். `சும்மா, ஏன், எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே,’ என்று கண்டிக்கிறார்கள். இதில் என் தவறு என்ன? புரியவில்லையே!
பதில்: சிறு வயதிலேயே, `எல்லாம் விதி. அல்லது கடவுள் கொடுத்தது,’ என்று எதையும் ஏற்றுக்கொள்ள உங்கள் ஆசிரியை பழக்கப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.
பெரியவர்கள் சொல்வதை இம்மியளவுகூட மீறாமல், அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பது நெடுங்காலமாக இருந்த வழக்கம். இதனால், பலருடைய கற்பனைத்திறன் நசுக்கப்பட்டுவிட்டது வருந்தத்தக்க விஷயம்.
ஆப்பிள் எப்போதுமே மரத்திலிருந்து தரையில்தான் விழுந்து கொண்டிருந்தது. `இது எப்படி?’ என்று யோசிக்க ஒரு நியூடன் வேண்டியிருந்தது. அவரும் பிறரைப்போல், `இது இயற்கை’ என்று ஏற்றுக்கொண்டு, வாளாவிருந்தால், நமக்கு எவ்வளவு நஷ்டம்!
`நாம் வழக்கமாக இப்படித்தான் செய்து வருகிறோம். இதை மாற்றுவானேன்?’ என்ற கேள்வி முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.
மிருகங்களை வேட்டையாடி, பச்சையாகவே உண்டுவந்த ஆதிமனிதன் உணவைப் பக்குவமாகச் சமைக்க நெருப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தது எப்படி தெரியுமா?
ஒரு முறை அவர்கள் குடியிருந்த இடம் நெருப்புக்குப் பலியானபோது, உள்ளேயிருந்த இறைச்சி மட்டும் எளிதில் உண்ணத் தக்கவாறு பக்குவமாகியிருந்தது. பின்னர், மெனக்கெட்டு வீடுகளைக் கட்டி, எரித்து, உணவைப் பதப்படுத்தினார்கள்! `மிகுந்த பிரயாசையுடன் கட்டிய வீட்டை எரிக்காமல், உணவை மட்டும் சமைக்க முடியுமா?’ என்ற யோசனை ஒருவருக்கு எழ, நெருப்பில் சமைக்கும் பழக்கம் நடைமுறை ஆயிற்று.
கடவுள், விதி, இயற்கை — ஏதோ ஒன்று எல்லாவற்றையும் நிச்சயிக்கிறது. அவைகளைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டினால், அது துரோகம் இல்லை. நமக்கும் மூளை இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும் என்று கல்வித் திட்டங்கள் வகுப்பார்கள். ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதை ஒட்டி, ஏதாவது பரீட்சை இருந்தால், தாம் கற்றவைகளை எழுதுவார்கள். அத்துடன் முடிந்தது.
பயிற்சி முடிந்தவுடன், அவர்கள் தாம் வளர்க்கப்பட்ட விதத்திலேயேதான் நடப்பார்கள். இல்லாவிட்டால், அவர்களும், அவர்களது பெற்றோரும் எங்கோ தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஆகிவிடுமே!
ஓர் உண்மைச் சம்பவம்: வியாசத்திற்கான விஷயங்களை ஆசிரியை வகுப்பில் விவாதித்தபடி அலசிவிட்டு, அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட கருத்து ஒன்றையும் எழுதிய `துணிச்சலான’ மாணவி, தன் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்காக வருந்தவில்லை. `இது என் தவறல்ல, ஆசிரியையிடம்தான் ஏதோ கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிட்டாள்.
இம்மாதிரியான ஆசிரியைகளைச் சமாளிக்கும் வழி: வகுப்பில் வாயே திறக்கக்கூடாது. சொல்லப்படுவதை நாம் ஏற்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றிற்கும் தலையாட்டி வைக்க வேண்டும்.
சகமாணவிகளிடமும் இப்படிச்செய்தால், நிறையபேர் நம் நட்பை நாடுவார்கள்.
ஆனால், ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். பின்னால் வருபவர்கள்தாம் கும்பலாக வருவார்கள்.
திறமைசாலியாக, வெற்றி பெற்றவராக முன்னால் நிற்க வேண்டுமா, இல்லை, எல்லாருக்கும் இனியவளாக, சராசரியாகவே இருந்துவிட வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.