-பாவலர் கருமலைத்தமிழாழன்

குளிர்நிலவே   எனப்புகழும்
குயில்மொழிக்கு   மயங்காதே
குளிரெரிக்கப்   புறப்பட்ட
குங்குமத்தின்   தீக்கதிர்நீ !

மானென்னும்   புகழ்மொழியால்
மண்ணிலுயிர்   துறக்காதே
தேனுண்ணும்   நரிகள்தம்
தோலுரிக்கும்   பாய்புலிநீ !

கயலென்னும்   புகழ்மொழியால்
கலங்கிவலை   துடிக்காதே
புயலாகி   வலையறுக்கப்
புறப்பட்ட   திமிங்கிலம்நீ !

கற்பென்னும்   பெருமைக்குக்
கல்தன்னை   அணைக்காதே
விற்பனையின்     பொருள்மாற்ற
வெடிக்கின்ற   கந்தகம்நீ !

படிதாண்டாப்   பத்தினியாய்ப்
படிக்குள்ளே   கருகாதே
படிசமைக்கும்   ஓநாயைப்
பதைக்கவைக்கும்   தீச்சுடர்நீ !

தாய்மைக்கு   வித்தென்னும்
தவிப்பினிலே     புதையாதே
பேய்மைக்கு   மண்பிளக்கும்
பிரளயத்தின்   விருட்சம்நீ !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *