Featuredஇலக்கியம்பத்திகள்

உன்னையறிந்தால் ….. ! (5)

உனையறிந்தால்11
குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம்

நிர்மலா ராகவன்

நம்மைச் சுற்றி இருப்பவைகளை அறிவதுதான் விஞ்ஞானம். இந்த விந்தைக்குத்தான் ஐம்புலன்களும் பயன்படுகின்றன.
தாய் அணைத்தால், பிறந்த குழந்தை உடனே அழுகையை நிறுத்திவிடும். ஏனெனில், அவளுடைய மணம் அதற்குப் பரிச்சயமான ஒன்று. கண்களைத் திறந்த உடனேயே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கித் தலையை திருப்பும். கிலுகிலுப்பையால் ஓசை எழுப்பினாலோ, தாய் அருமையாகப் பேசினாலோ, அழுகையை மறந்து பார்க்கிறது. எது கையில் அகப்பட்டாலும் இறுகப் பற்றிக்கொள்கிறது. அதாவது, நுகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி இருப்பவைகளை அறிய முயல்கிறது.

தவழத் தொடங்கியதும், தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும், பூச்சியையும் துரத்திப் பிடித்து, வாயில் போட்டுக்கொள்ளப் பார்க்கும். தாய் தடுத்தால், ஒரே ரகளைதான். (இந்தப் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! சுவை என்பதை பின் எப்படித்தான் அறிவதாம்!– குழந்தை வெறுத்துப்போய் அழுவதன் அர்த்தம் இதுதான்).

குழந்தைகளுக்கு அறிவு வளருவதற்குப் பல்வேறு அனுபவங்கள் அமைய வேண்டும். அவைகளை நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நான்கு நாள் குழந்தையாக இருந்த என் பேரனை நான் முழங்காலிலிட்டுக் குளிப்பாடும்போது, அலுப்பாக இருந்தது. யாருக்காவது, எதையாவது சொல்லிக் கொடுத்தே பழக்கமில்லையா? இயல்பாக, சோப்புக்கட்டியை எடுத்து, குழந்தையைத் தொட வைத்தேன். `இது கெட்டியா இருக்கு, பாத்தியா? Solid!’ பிறகு நீரில் அவன் கையை அளையவிட்டு, ஓசை எழுப்பி, `இது Liquid. எப்படிச் சத்தம் கேக்கறது, பாரு!’ பின்பு, கையை என் மூக்கின்கீழ் கொண்டுவந்து, `இது Gas. ஹை! காத்து மாதிரி இருக்குடா!’ என்று ஆரம்பித்தேன்.

வீட்டில் குழந்தை முதன்முதலாகக் குளிக்கும் அழகைப் பார்க்க வெளியே நின்றிருந்த என் குடும்பத்தினர் பெரிதாகச் சிரித்தார்கள், “இப்போதுமா physics?” என்று. நான் அயரவில்லை. அதற்குப் புரிகிறதோ, இல்லையோ, எனக்குப் பொழுது போயிற்று. நாலைந்து நாட்கள் அதே பாடம்தான்.

கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற சிசுவிடம் பேசுவது முட்டாள்தனமோ என்று தோன்ற, அடுத்த நாள் எதுவும் பேசாது, நீரை மொள்ள ஆரம்பித்தேன். குழந்தையின் தோள் உயர உயர எழுந்தது, `இன்று ஏன் என் கையை எதன்மேலும் வைக்கவில்லை?’ என்று கேட்பதுபோல்.

அனைவரையும் கூவி அழைத்து, “என்னைக் கேலி செய்தீர்களே! இப்போது பாருங்கள்!” என்று என் வெற்றியைக் காட்டினேன். கண் மூடி இருந்தால் என்ன! தொடுதல், கேட்டல் இரண்டும்தான் இருக்கின்றனவே!

மூன்று மாதக் குழந்தையிடம், “குருவி கீச்சுக் கீச்சுனு கத்தறதே! கேக்கறதா?” என்று நாம் எடுத்துக் கொடுத்தால், உன்னித்துக் கவனிக்கும். ஸ்கூட்டர், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகன ஒலிகளையும் இப்போது அறிமுகப்படுத்தலாம்.

`வயதானால், தானே தெரிந்துவிட்டுப் போகிறது! இதையெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்!’ என்கிறீர்களா?
குழந்தை தானே தெரிந்து கொள்வதற்குமுன் நாம் சொல்லிக்கொடுத்தால், அதன் செவிப்புலன் கூர்மையாகி, ஆர்வம் அதிகரிக்கும். இதனால்தான் பிறந்த குழந்தைகளிடம் பேசும்போது, நீட்டி முழக்கி, நாமே குழந்தைபோலப் பேசுகிறோம்.

சிதம்பரத்தில் இசை நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது ஒன்றரை வயதுக் குழந்தை பேசவேயில்லை என்பதைக் கவனித்து, `நீ குழந்தையுடன் பேசமாட்டாயா?’ என்று அவருடைய இளம் மனைவியிடம் கேட்க, `அவள் பேசினால், நானும் பேசுவேன்,’ என்ற பதில் வந்தது.

நான் குழந்தையிடம் என் பாடத்தை ஆரம்பித்தேன். “நேத்திக்கு கோயிலுக்குப் போனியா? அப்பாகூட போனியா? ஸ்கூட்டரிலே போனியா? ஸ்கூட்டர் எப்படிப் போச்சும்மா? டுர்..!’ வாக்கியங்கள் சிறியதாக இருந்தால் நலம்.
குழந்தை மகிழ்ந்து சிரித்து, `டுர்..!’ என்றாள். அதுவரைக்கும் பேசாதவள், அன்று தூக்கத்தில் பாடினாள் என்று மகிழ்ந்தார்கள் பெற்றோர்.

இரு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அதில் சிறு குழந்தையின் கவனம் போகாது. அசையாமல் கிடக்கும். அதுவே, தன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள் என்று தெரியும்போது, புரிகிறதோ, இல்லையோ, மனமகிழ்ச்சியைக் காட்ட, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்.

குழந்தை மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார், `ஒங்களைமாதிரி பாட்டிகிட்டே வளர்ற பிள்ளைங்கதான் நல்லாப் பேசும்!’
வளவளவென்று பேசவேண்டாம். ஆனால், மொழித் திறனையாவது வளர்த்து வைப்போமே!

எட்டு வயதுக் குழந்தைகள் நிறைய பேசும். சற்று கண்டித்து, `வாயைவிட கண்ணையும், காதையும் அதிகமாகப் பயன்படுத்து,’ என்று இப்பருவத்தில் அறிவுரை கூறலாம். எதையும் கூர்ந்து கவனித்தல் விஞ்ஞானத்துக்கு இன்றியமையாத திறன்.

பார்ப்பவைகளை எல்லாம் விளக்குங்கள். வீட்டுக்கு வெளியே நடக்கும்போது, “கீ..ழே புல்லு — பச்சைக் கலர்.., மே..லே வானம். அது நீ..லம். பச்சை, நீலம். சூரியன் பாத்தியா? கண்ணைக் கூசலே?” இப்படி விளையாட்டுப்போல், நமக்கு எளிதான, ஆனால் குழந்தை அறிந்திராதவற்றை ஒவ்வொன்றாக விவரித்தால், குழந்தை மகிழும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனுடன், வளர்ப்பவர்கள்மீது கொண்டுள்ள நெருக்கமும் அதிகமாகும்.

இதேபோல், மரத்தாலான சாமான்கள், உலோகப்பொருட்கள், துணி போன்றவைகளைத் தொட்டுத் தடவி, தட்டி ஓசையெழுப்பினால், சருமத்தின் ஆர்வமும் தூண்டப்படாதா!

சூடான, கூரான, அல்லது மின்சாரம் கசியும் பொருளைத் தொட்டு வைத்தால் என்ன ஆவது என்ற பதைப்புடன், `ஒண்ணையும் தொட்டு. விஷமம் பண்ணக்கூடாது!’ என்று மிரட்டுகிறாள் தாய். (`தாய்’ என்று இங்கே குறிப்பிடுவது பொதுப்படையாகத்தான்). எதையும் அறியவேண்டும் என்ற ஒரு குழந்தையின் இயல்பான ஆர்வத்துக்குத் தன்னையும் அறியாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

மாறாக, கைபொறுக்கும் சூட்டில் ஒருவயதுக் குழந்தையின் விரல் நுனியை வைத்து, `ஊ..!’ என்று சொல்லிக் கொடுத்தால், வலி ஏற்படுத்தும் அனுபவம் இது என்று புரிந்துகொள்ளும். கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால், `ஊ..!’ என்று வலியைப் புலப்படுத்தும்.

எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அமைய, `இது எப்படிப்பா?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போது, `அம்மாவைக் கேளு,’ என்று அப்பா பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகிறார். அம்மாவோ, `ஒனக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும்!’ என்று ஏளனத்தில் இறங்குகிறாள்.

ஏதோ, நம்மையும் மதித்துக் கேட்கிறானே என்று, நமக்குத் தெரிந்த வகையில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரிய விளக்கம் எலாம் தேவையில்லை. எப்படியும், ஒரு குழந்தைக்குத் தெரிவதைவிட நிறையத்தான் தெரிந்திருக்கும் நமக்கு. எதையும் அறியும் ஆர்வத்தைத் தூண்ட இது போதும். வயதானால், தானே ஆசிரியர்களைக் கேட்டுத் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.

ஆசிரியர்களும் பெற்றோர் மாதிரித்தானா! கவலையை விடுங்கள். வாசகசாலைகள் இருக்கவே இருக்கின்றன!
நம் அறியாமையால், அல்லது அலட்சியத்தால் இயற்கையாகவே அமைந்த ஐம்புலன்களின் ஆற்றல்களை நாம் கணிசமாகக் குறைத்து அல்லது அழித்து விடுகிறோம். இளமையிலேயே ஆர்வம் குன்றிவிட்டதால், பள்ளிப்பருவம் வந்தாலும், இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இருப்பதில்லை.

`என் தாய் முட்டாள்!’ என்று சில மாணவிகள் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு மனம் நொந்திருந்தால், அப்படிக் கூறுவார்கள்!

உங்களைவிட அனுபவசாலியாக உங்கள் மகனோ, மகளோ ஆகும்போது, தாம் கற்று அறிந்ததை ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். முற்பகல் செய்யின்…

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க