குறளின் கதிர்களாய்…(72)
-செண்பக ஜெகதீசன்
என்பி லதனை வெயிற்போலக் காயுமே
யன்பி லதனை யறம். (திருக்குறள்-77: அன்புடைமை)
புதுக் கவிதையில்…
எலும்பில்லா உயிரினங்களை
வாட்டி வதைத்துக் கொல்லும்
வெயில்…
அன்பில்லாதவனை
அழித்திடுமே அறம்…!
குறும்பாவில்…
எலும்பில்லா உயிர்களை
வெயில் அழிக்கும்,
அறமழிக்கும் அன்பில்லாதவரை…!
மரபுக் கவிதையில்…
உடலில் எலும்புகள் ஏதுமின்றி
வெயிலில் செல்லும் உயிரினங்கள்
சுடரும் கதிரவன் ஒளியதனின்
சூடு தாங்கிடா தழிந்தொழியும்,
இடரே வாழ்வில் என்றென்றும்
இல்லை யென்றால் அன்பதுதான்,
தடங்கல் வந்திடும் வழியினிலே
தண்டனை தந்திடும் அறமதுவே…!
லிமரைக்கூ…
எலும்பில்லா உயிரினங்கள் சென்றால் புறம்
எரித்துக் கொன்றிடும் வெயில்,
அன்பில்லா மனிதனை அழித்திடுமே அறம்…!
கிராமிய பாணியில்…
வெயிலுவெயிலு கோடவெயிலு
கொன்னுபோடும் கோடவெயிலு,
எலும்பில்லாத உயிரயெல்லாம்
எரிச்சிக்கொல்லும் கோடவெயிலு…
அதுபோல
அன்புவேணும் மனுசனுக்கு,
அன்புயில்லா மனுசனத்தான்
அறக்கடவுள் அழிச்சிருமே
அந்த
வெயிலப்போல அழிச்சிருமே…
வெயிலுவெயிலு கோடவெயிலு
கொன்னுபோடும் கோடவெயிலு…!