Tag: தேமொழி

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன்

    கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்பான் அறிவுடையான்: – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும்
    மூத்தானே யாடு மகன்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
    அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
    நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
    மூத்தானே, ஆடு மகன்.

    பொருள் விளக்கம்:
    முறையான கல்வியறிவைப் பெற்றிராவிட்டாலும், செய்ய வேண்டிய செயலைச் சோம்பலின்றி செய்து முடிப்பவர்தான் அறிவுடையவர் ஆவார். நிறைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பெருக்கெடுத்த நீர்நிலைகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, இளவயதினராக இருப்பினும் முதிர்ச்சி அடைந்தவராகவே கருதப்படுவார் சிறப்பாகச் செயலாற்றுபவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    கல்வியறிவு இல்லாதிருப்பினும் திறம்படச் செயலாற்றுபவரே அறிவுடையவர் எனக் கருதப்படுவார். ஏற்றுக் கொண்ட செயலை முடிக்கும் பொருட்டு இடைவிடாது நல்ல முயற்சி செய்யும் ஆள்வினை உடையவரே அறிவுடையவர் என்பதை வள்ளுவர்,

    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி. (குறள்: 618)

    செய்யவேண்டிய சூழ்நிலையோ வாய்ப்போ இல்லாதிருப்பது ஒரு குறையல்ல, ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே ஒருவருக்குப் பெரும்பழியைத் தரும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கணையிலும் கூரியவாம் கண்

    யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
    தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
    மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
    கணையிலுங் கூரியவாம் கண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
    தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
    மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
    கணையிலும் கூரியவாம் கண்.

    பொருள் விளக்கம்:
    நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

    நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

    ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: மச்சேற்றி ஏணி களைவு

    எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
    உற்றுழி ஒன்றுக் குதவலார், பைத்தொடீஇ!
    அச்சிடை யிட்டுத் திரியின், அதுவன்றோ
    மச்சேற்றி ஏணி களைவு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘எய்ப்புஉழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
    உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
    அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
    மச்சு ஏற்றி, ஏணி களைவு.

    பொருள் விளக்கம்:
    சோதனைக்காலத்தில் உதவும் வைப்புநிதி போலக் காப்பாற்றுவார் எனக் கருதப்பட்ட உற்றார், நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் கைவிடும் செயலானது, பசும்பொன்வளையல்களை அணிந்த பெண்ணே! அச்சம் கொண்டு மறுத்துவிடும் அவரதுசெயலானது அல்லவோ, மாடியில் ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உதவுவேன் என நம்பவைத்து, உதவி கிடைக்கும் என நம்பி வந்த ஒருவரை, அவர் இடருற்ற நேரத்தில் ஏமாற்றாது உதவுவதே நற்பண்பு கொண்ட ஒருவரின் கடமை. இப்பண்பு இல்லாத, இடருற்ற காலத்தில் உதவாத ஒருவரின் உறவு இருப்பதைவிட இல்லாதிருப்பதே நலம் என்பதை வள்ளுவர்,

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை. (குறள்: 814)

    போர்க்களத்தில் உதவ வேண்டிய முக்கியமான நேரத்தில், உதவாது கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் மடத்தனம் கொண்ட குதிரையைப் போன்றவர் உறவை பெற்றிருப்பதைக் காட்டிலும் தனித்திருப்பதே சிறப்பு என்று கூறுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று

     

    புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
    உரையும் பொருண்முடிவும் ஒன்றால் – உரைபிறிது
    கொண்டெடுத்துக் கூறல், கொடுங்கழித் தண்சேர்ப்ப!
    ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
    உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது
    கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
    ஒன்று ஏற்றி வெண்படைக்கோள் ஒன்று.

    பொருள் விளக்கம்:
    கள்ளமற்ற நட்பு கொண்டவர்களுக்குள், நண்பர் கூறிய சொற்களும் அதன் பொருளும் ஒன்றாகவே இருக்கும். மனதில் ஒன்றும் பேச்சில் மற்றொன்றும் கூறும் வஞ்சனையுள்ளோர் சொல்வது, வளைந்த உப்பங்கழிகள் கொண்ட குளிர்ந்த கடல் நாட்டில் வாழ்பவரே, மற்றொருவர் பாடலை தனது வெண்பா எனச் சொல்லி ஏய்க்கும் செயலுக்கு ஒப்பாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உண்மையான நட்பு கொண்டவர் என்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. அவ்வாறின்றி, மனம் வேறு, சொல்வேறாகப் பேசும் வஞ்சம் நிறைந்தவர் நட்பைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்ற அறிவுரையை வள்ளுவர்,

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்: 819)

    சொல்லும் செயலும் மாறுபட்டவரின் நட்பு கனவிலும் துன்பத்தைத் தரும் எனக் கூறி எச்சரிக்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்

    மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
    பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
    கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
    இட்டிகை தீற்று பவர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
    பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
    கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
    இட்டிகை தீற்றுபவர்.

    பொருள் விளக்கம்:
    மறுபிறவி என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    அறிவற்றவர் நன்னெறி புகட்டாது, தீமை தரும் வழியில் வாழும் வகை காட்டுவார். இந்தப்பிறவியில் நாம் ஆற்றும் செயல்கள்தாம் நமது மறுபிறவியில் நாம் வாழும் நிலையை நிர்ணயிக்கும் என்பது மக்களை நல்வழியில் செலுத்துவதற்கான நம்பிக்கை அடிப்படையிலமைந்த ஓர் முயற்சியாகும். ஆதலால், அதனை எடுத்துரைத்து நல்வழி நடப்பீராக என்று வழிகாட்டாது, மனம்போனபடி வாழ அறிவுரை கூறுபவர் சுவை உணவைப் பரிமாறாது, செங்கல்லை ஊட்டுபவர் என்பது இப்பழமொழி பாடல் தரும் விளக்கம். குறள் என்ன நெறி காட்டுகிறது எனப் பார்ப்போமானால்,

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள்: 422)

    மனம் போனபடியெல்லாம் நடக்காமல், தீமைகளில் இருந்து விலகி நல்வழி நடப்பதே அறிவுடையார் செயல் என்று கூறுகிறது. ஆகவே, தீமை விளக்கி நன்னெறி வழி நடப்பது நம் கடமை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்

    தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
    மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
    கொக்கார் வளவய லூர! தினலாமோ
    அக்காரம் சேர்ந்த மணல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
    மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
    கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
    அக்காரம் சேர்ந்த மணல்?

    பொருள் விளக்கம்:
    மதிக்கத்தக்கப் பண்பிற் சிறந்தோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார். (ஆகவே) இவரும் குணம் மிக்கவரே என்றெண்ணி சிறுபுத்தி உடையவர் தம்மை நட்புக்காகத் தேர்ந்தெடுப்பவரில்லை. *கொக்குகள் இரை தேடிவரும் நீர்வளம் கொண்ட வயல்கள் கொண்ட ஊரைக் கொண்டிருப்பவரே, தின்னுவோமா நாம் சர்க்கரையுடன் கலந்துவிட்ட மணலை?

    பழமொழி சொல்லும் பாடம்:
    சிறுமைப்பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை மற்றொரு பழமொழிப்பாடலும் குறிக்கிறது. இத்தகையவர்களை வள்ளுவர்,

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்றும், ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தின் குறளில்,

    குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள்: 793)

    ஒருவரின் குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்கள், அவருடைய குற்றத்தொடர்பற்ற உறவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னரே ஒருவரிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    * “வள வயல்” என்னும் குறிப்பினால் நீர்வளம் கொண்ட வயலில் மீன்களை இரையாகத் தேடி “கொக்குகள்” வருவதாக இரு உரை நூல்கள் பொருள் கொள்கின்றன, மேலும் இரு உரை நூல்கள் கொக்கு என்பதற்கு “மாந்தோப்பு” என்ற பொருளைக் காட்டி, மாந்தோப்புகளும், வயல்வளமும் நிறைந்த மருத நாட்டுத் தலைவன் அறிவுரை பெற்றதாகக் குறிக்கின்றன.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: கடங்கொண்டும் செய்வார் கடன்

     

    அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
    இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
    மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
    கடங்கொண்டும் செய்வார் கடன்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அடர்ந்து வறியராய், ஆற்றாத போழ்தும்,
    ‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
    மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
    கடம் கொண்டும் செய்வர் கடன்.

    பொருள் விளக்கம்:
    மிகுந்த வறுமை சூழ்ந்தவராய், (தேவையுள்ளோருக்கு) உதவ இயலாத நிலையிலும், நமக்கு வசதி வந்தால் உதவுவோம் என்று பண்புடையோர் எண்ணுவதில்லை. பெண்மைக்குரிய மடமைப் பண்பையும், மயிலின் சாயலையும் கொண்ட அழகியே, சான்றோர்கள் கடன்பட்டாவது உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உதவும் பண்புடைய சான்றோர், பிறரிடம் கடன்பட்டாவது தேவையுள்ளவருக்கு உதவும் பண்புள்ளவர்களாகவே இருப்பர். சான்றோருடைய இப்பண்பினைக் குறிக்குமிடத்து வள்ளுவர்,

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். (குறள்: 218)

    பண்பிற் சிறந்த சான்றோர் தம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாது வறுமை சூழ்ந்துவிட்ட காலத்திலும்கூட, வறியவர் தேவையறிந்து அவர்களுக்கு உதவிடும் கடமை நிறைந்தவர்களாகவே விளங்குவர் என்கிறார்.

    Share
  • புலியே! புலியே!

    – தேமொழி.

    tiger

    புலியே! புலியே!

    –வில்லியம் ப்ளேக்
    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன்
    அச்சமூட்டும் வடிவைச் செதுக்கியவர்தான் யாரோ?

    அகிலத்தின் ஆழ்தொலைவிலுள்ள எந்த ஆற்றல்
    கனல் உமிழும் கங்காக்கியது உன் கண்களை?
    உன் கண்களின் கனலைக் கண்டும் விரும்பி
    துணிவுடன் உன்னைப் படைத்ததும்தான் ஏனோ?

    எத்தகைய உறுதியான தோள்களும், வித்தையும்
    துடிக்குமுன் இதயத்தை இயங்கவைத்திருக்கும் ?
    உயிர்த்தெழுந்த உன்னைக் கண்டு அஞ்சி ஓடிடாது
    தொடர்ந்துன்னைப் படைத்திட்ட துணிவுதான் என்ன?

    சுத்தியலா, சம்மட்டியா? கனல்கக்கும் கொதிக்கும்
    உலைகலன்தானா? எதுவழங்கியது ஆற்றலுனக்கு?
    கொல்லன்பட்டறையின் எந்தத் திறமை துணிந்தது
    உன்போன்றதொரு ஆபத்தினை உருவாக்கிட ?

    அச்சமூட்டும் ஆபத்தான உன் ஆற்றலினால்
    அகண்டமும் அகிலமும் கலங்கியதைக் கண்டு
    படைத்தவர் உன்னைப் படைத்ததற்கு மகிழ்ந்தாரா?
    ஆட்டையும் படைத்து உன்னையும் படைத்ததேனோ?

    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன் போன்ற
    அபாயத்தைத் தோற்றுவித்தவர் துணிவுதான் என்னே!

    லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “தி டைகர்” என்ற கவிதை.
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    The Tyger

    –William Blake

    Tyger Tyger, burning bright,
    In the forests of the night;
    What immortal hand or eye,
    Could frame thy fearful symmetry?

    In what distant deeps or skies.
    Burnt the fire of thine eyes?
    On what wings dare he aspire?
    What the hand, dare seize the fire?

    And what shoulder, & what art,
    Could twist the sinews of thy heart?
    And when thy heart began to beat,
    What dread hand? & what dread feet?

    What the hammer? what the chain,
    In what furnace was thy brain?
    What the anvil? what dread grasp,
    Dare its deadly terrors clasp!

    When the stars threw down their spears
    And water’d heaven with their tears:
    Did he smile his work to see?
    Did he who made the Lamb make thee?

    Tyger Tyger burning bright,
    In the forests of the night:
    What immortal hand or eye,
    Dare frame thy fearful symmetry?

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி

     

    ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
    நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்
    புன்மேயா தாகும் புலி.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
    நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
    புல் மேயாது ஆகும், புலி.

    பொருள் விளக்கம்:
    வறுமை தனக்கு ஏற்பட்ட பொழுதும், உயர் பண்புள்ள சான்றோர், சற்றும் மாறாது நிற்பார் தாம் கொண்ட நற்பண்பின் நிலையிலேயே. (இப்பண்பானது) பஞ்சகாலத்தில் தனது உடலை நலிவடையச் செய்யும் பசி பெரிதும் வருத்தினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினை ஒத்ததாகும்

    பழமொழி சொல்லும் பாடம்:
    சான்றோர் எத்தகைய நிலையிலும் தனது நற்பண்பை இழக்கமாட்டார். வறுமை நேரினும் அதற்காகத் தனது தரம் தாழ்ந்து போகமாட்டார். “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று இந்நாளும் வழக்கில் இருக்கும் இந்தப் பழமொழி விளக்குவது போல, தனது வாழ்வே சீரழிந்து போயிருப்பினும், நற்பண்பின் இருப்பிடமானோர் சிறுமை தரும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யவும் முற்படுவதில்லை. இத்தகைய  நற்பண்பின் இருப்பிடமானவரின் பண்பை கூற வரும் வள்ளுவர்,

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர். (குறள்: 954)

    கோடி கோடியாக செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நற்பண்பு கொண்ட சான்றோர் சிறுமை தரும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யார், எத்தகைய சூழலிலும் நற்பண்பைக் கைவிடுவது சான்றோர் இயல்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்

     

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா ததனை அகற்றலே வேண்டும்
    அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
    அமராததனை அகற்றலே வேண்டும்;
    அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
    தமவேனும், கொள்ளாக் கலம்.

    பொருள் விளக்கம்:
    தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை,  அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்குப் பொருத்தமற்ற புகழுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதனை,

    வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை. (குறள்: 439)

    எந்தக் காலத்திலும் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு

    ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
    தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
    போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச்
    சாமாகண் காணாத வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
    தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,
    போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
    சாம் மா கண் காணாதவாறு.

    பொருள் விளக்கம்:
    ஆகுமா இந்தப் பெரியோர்களால் என்று பெரியோர் முன்னிலையில் (இறுமாந்து) நின்று, தாமாகவே சிறுபுத்தி உள்ளவர் (பெரியோரிடம்) இருந்து மாறுபட்டுச் செயல்படுவது, செல்லும் வழி பற்றிய புரிதல் சிறிதும் இன்றி, தனது மதியை இழந்தவர் போல அவர் செயல்படும் நிலையானது, ஊரினுள் புகுந்து அடிபட்டுச் சாகும் வனவிலங்கின் கண்ணிழந்த செய்கையை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    ஆன்றோர் தமது பட்டறிவால் அறிந்து கூறும் நன்மை தரும் அறிவுரையை இகழ்வாக எண்ணிப் புறக்கணித்து, பெரியோர்களது அறிவுரைக்கு மாறாக நடப்பவர் தமது அழிவைத் தாமே தேடிக் கொள்பவர். பெரியோர் அறிவுரையை மதிக்காது அழிவைத் தேடிக் கொள்பவருக்கு அறிவுரை கூற விரும்பிய வள்ளுவர்,

    பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும். (குறள்: 892)

    பெரியோரை மதிக்காமல் நடந்து கொள்பவர் நீங்காத துன்பத்தையே எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகிறார். இதையும் விட ஒருபடி மேலே சென்று,

    எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (குறள்: 896)

    தீயால் சுடப்பட்டால் கூட பிழைத்துக் கொள்ள இயலும், ஆனால் பெரியோரை அவமதித்து, அவரை எதிர்த்துக் குற்றம் செய்பவர் உயிர்வாழ்தல் இயலாது என்றும் எச்சரிக்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தெளியானைத் தேறல் அரிது

     

    ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
    மாறி யொழுகல் தலையென்ப – ஏறி
    வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
    தெளியானைத் தேற லரிது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
    மாறி ஒழுகல் தலை என்ப;-ஏறி
    வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!-
    தெளியானைத் தேறல் அரிது.

    பொருள் விளக்கம்:
    ஆற்றமாட்டாத சினம் கொண்டவர் அறிவற்ற மூடர், அவரை விட்டுவிலகி வாழ்வதே நன்மைதரும் (என்பது பெரியோர் வாக்கு). காற்று நீரை வளைத்து வீசுவதால் கரைமேல் அலை உலவும் நாட்டைச் சேர்ந்தவரே, தெளிவற்ற சிந்தனை உடையவரை நம்புதல் நன்மை தராது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    கடுஞ்சினத்தை கட்டுப்படுத்தத் தெரியாத அறிவற்றவரின் உறவைத் தவிர்க்க வேண்டும். ஆற்றமாட்டாத சினங்கொண்டவருடன் கொள்ளும் உறவு அவரைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் என்பதை,

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும். (குறள்: 306)

    சினம் என்னும் அழிவுதரும் குணம் அவரை தெப்பம் போலக் காக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு

     

    வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
    நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
    புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
    தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வினைப் பயன் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
    நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;
    புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
    தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.

    பொருள் விளக்கம்:
    செய்யும் செயலால் ஒரு பயனும் இல்லாத பொழுது, பகைமை பாராட்டி, (துன்பத்தைக் கொடுக்கும் செயல்களை) திட்டமிட்டு, பிறருக்குத் துயர் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். புலங்களில் மலர்ந்துள்ள பூக்களில் காணும் பொன்னையொத்த மகரந்தத் துகள்கள் போன்ற தேமலையுடைய பூங்கொம்பு போன்றவளே, தனக்குத் துன்பம் தருவனவையே, பிறருக்கும் துன்பம் தரும் (என அறிவாயாக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்குத் துன்பம் தருவதே பிறருக்கும் துன்பம்தரும் ஆதலால், பிறரைத் துன்புறுத்தாதிருக்க வேண்டும். காழ்ப்புணர்வு கொண்டு துன்பம்தரும் வழிகளைத் தேடித்தேடி பிறருக்குத் துன்பம் தருதல் பயனற்ற செயல், தனக்குத் துயர் தரும் செயல்களே பிறருக்கும் துயர் தரும் என்பதை உணரவேண்டும் என்பதைக் கூறும் ,

    தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல். (குறள்: 318)

    தனக்கு இவையிவை துன்பம் தரும் என நன்கறிந்தவர், பிறருக்கு அச்செயல்களை ஏன் செய்யவேண்டும் என்ற திருக்குறள் கருத்தினை இங்கே ஒப்பு நோக்கலாம்.

    Share
  • மகளிர் சமத்துவ நாள்

    –தேமொழி.

    wedஅமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் நாள், “மகளிர் சமத்துவ நாள்” (Women’s Equality Day) எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவின் 95 ஆவது மகளிர் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நாள் அமெரிக்கப் பெண்மணிகள் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதைக் கொண்டாடும் நாளாகும்.

    மிகுந்த போராட்டத்திற்கிடையே, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைகள் பலவற்றை எதிர்கொண்டு அமெரிக்கப் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள். சூசன் பி. ஆண்டனி, எலிசபெத் காடி ஸ்டாண்டன், மற்றும் லுக்ரெஷிய மாட் (Susan B. Anthony, Elizabeth Cady Stanton, and Lucretia Mott) ஆகிய பெண்மணிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர்கள்.

    பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைத் தந்த அமெரிக்க அரசியலமைப்பின் 19 வது சட்டவரையறை திருத்தம் (19th Amendment to the U.S. Constitution: Women’s Right to Vote), 1919 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரசில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் இது நிறைவேறுவது பற்றிய நம்பிக்கையின்மையும், சந்தேகங்கள் பலவும் தோன்றிய காலமது. மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக மாற 36 மாநிலங்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். பழமைவாதத்தில் ஊறிய அமெரிக்க தென்மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மனிதஉரிமைகளைப் பொறுத்தவரையில் பிற்போக்கான கொள்கைகளின் இருப்பிடமான அமெரிக்க தென்மாநிலங்கள், கருப்பின மக்களின் அடிமைத்தளையை நீக்குவதையும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி உள்நாட்டுப் போரைத் துவக்கியதையும், அந்நிகழ்வு அமெரிக்க வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்தியதையும் இங்கு நாம் நினைவுகூரலாம்.

    இச்சட்டத்திற்கு, 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் 35 மாநிலங்களின் சபைகளே இசைவு தெரிவித்திருந்தன. பெண்களுக்கு வாக்களிக்கும் சட்டம் வெற்றிபெறுவதை நிர்ணயிக்கும் நிலை இறுதியில் ‘டென்னசி’ மாநிலத்தின் கைகளில் வந்து விழுந்தது. அந்த மாநிலத்தின் அரசியல்வாதிகள் எடுக்கவிருக்கும் முடிவில் பெண்கள் வாக்களிக்கும் சட்டத்தின் வெற்றிவாய்ப்பு ஊசலாடியது. அவர்களிலும் 48-48 என்ற நிலையில் சரிபாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், சரிபாதியினர் எதிர்த்தும் வாக்களித்திருந்த நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தவர் ‘ஹாரி பர்ன்’ (Harry Burn) என்ற அவை உறுப்பினர். அப்பொழுது 24 வயதே ஆன ஹாரி பர்ன் தனது ஆதரவைத் தெரிவித்ததன் காரணம், அவரது அன்னை அவருக்குக் கடிதம் எழுதி பெண்கள் உரிமைக்கு ஆதரவாகச் செயல்படும் ‘நல்ல பையனாக’ (“be a good boy”) அவரை நடந்து கொள்ளச் சொன்னதால்தான் என்பது வியப்புக்குரிய செய்தி. ஹாரி பர்ன் என்ற ‘தாய் சொல்லைத் தட்டாத தனயனால்தான்’ பெண்கள் வாக்குரிமை சட்டம் வெற்றி பெற்றது என்பது அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு திருப்புமுனை.

    வாக்குரிமை பெற்றாலும், அதனைத் தொடர்ந்து 95 ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்கப் பெண்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே இன்றும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகளிலும் பெண்கள் தலைமை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுவிட்டாலும், முன்னேறிய நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா இதுவரை ஒரு பெண்மணியை அமெரிக்கத் தலைவராக அடைந்ததில்லை. மாநில, நகர அளவிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண் ஆட்சியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதும் பெருங்குறையே. இருப்பினும், கடந்த 35 ஆண்டுகளாக ஆண்களைவிட அதிக அளவில் பெண்களே வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். அமெரிக்க ஆட்சியாளர்களில் ஐந்தில் ஒருவரோ அல்லது நான்கில் ஒருவரோதான் (20-25%) மகளிர் என்பது இந்த நூற்றாண்டிலும் கவலை தரும் நிலையே.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: நெய்த்தலைப் பால் உக்குவிடல்

     

    விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார்
    ஒழுக்குடைய ராகி ஒழுகல், – பழத்தெங்கு
    செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
    நெய்த்தலைப்பா லுக்கு விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
    ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
    செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃது அன்றோ
    நெய்த்தலைப் பால் உக்குவிடல்.

    பொருள் விளக்கம்:
    பெருமைதரத்தக்க பாரம்பரியப் பின்னணியுடன், பழம்பெரும் குடிப்பிறப்பைக் கொண்டவர் ஒருவர், சிறந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்வையும் கடைபிடித்தல் (எத்தகையது எனில்), முதிர்ந்த தேங்காய்கள் வயலில் விழும் வளமும், நீர் வளமும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே; அத்தகைய நிலையன்றோ, பசும் நெய்யில் சிந்திய பால் கலந்துவிட்டது போன்ற நன்மை தருவதை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    நற்குடிப்பிறப்பைக் கொண்டவர், குடிப்பிறப்பின் பெருமையைக் காக்கும் நல்லொழுக்கமும் கொண்டிருப்பதே சிறப்பைத் தரும். நற்குடிப்பிறப்பிற்கேற்ற நல்லொழுக்கத்தின் இன்றியமையாமையை வள்ளுவர்,

    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும். (குறள் – 133)

    ஒருவர் ஒழுக்கமுடையவராக வாழ்வதே நற்குடிப்பிறப்பிற்கேற்ற பண்பாகும், தவறினால் அத்தகவையவர் இழிபிறப்பினராகக் கருதப்படுவர் என்றும்,

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும்என் பார். (குறள்: 956)

    குற்றமற்ற குடிபிறப்பினராக வாழவிரும்புபவர் வஞ்சகச்செயல்களை ஒத்த தகாத செயல்களைச் செய்யார் என்றும் பெருமைமிக்க நற்குடிப்பிறப்பினரின் நல்லொழுக்கத்தின் தேவையை உணர்த்துகிறார்.

    Share