இலக்கியம்

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.

பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்றுபவர்.

பொருள் விளக்கம்:
மறுபிறவி என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

பழமொழி சொல்லும் பாடம்:
அறிவற்றவர் நன்னெறி புகட்டாது, தீமை தரும் வழியில் வாழும் வகை காட்டுவார். இந்தப்பிறவியில் நாம் ஆற்றும் செயல்கள்தாம் நமது மறுபிறவியில் நாம் வாழும் நிலையை நிர்ணயிக்கும் என்பது மக்களை நல்வழியில் செலுத்துவதற்கான நம்பிக்கை அடிப்படையிலமைந்த ஓர் முயற்சியாகும். ஆதலால், அதனை எடுத்துரைத்து நல்வழி நடப்பீராக என்று வழிகாட்டாது, மனம்போனபடி வாழ அறிவுரை கூறுபவர் சுவை உணவைப் பரிமாறாது, செங்கல்லை ஊட்டுபவர் என்பது இப்பழமொழி பாடல் தரும் விளக்கம். குறள் என்ன நெறி காட்டுகிறது எனப் பார்ப்போமானால்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள்: 422)

மனம் போனபடியெல்லாம் நடக்காமல், தீமைகளில் இருந்து விலகி நல்வழி நடப்பதே அறிவுடையார் செயல் என்று கூறுகிறது. ஆகவே, தீமை விளக்கி நன்னெறி வழி நடப்பது நம் கடமை.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க