பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

பழமொழி: போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு

ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாம் மா கண் காணாதவாறு.

பொருள் விளக்கம்:
ஆகுமா இந்தப் பெரியோர்களால் என்று பெரியோர் முன்னிலையில் (இறுமாந்து) நின்று, தாமாகவே சிறுபுத்தி உள்ளவர் (பெரியோரிடம்) இருந்து மாறுபட்டுச் செயல்படுவது, செல்லும் வழி பற்றிய புரிதல் சிறிதும் இன்றி, தனது மதியை இழந்தவர் போல அவர் செயல்படும் நிலையானது, ஊரினுள் புகுந்து அடிபட்டுச் சாகும் வனவிலங்கின் கண்ணிழந்த செய்கையை ஒத்தது.

பழமொழி சொல்லும் பாடம்:
ஆன்றோர் தமது பட்டறிவால் அறிந்து கூறும் நன்மை தரும் அறிவுரையை இகழ்வாக எண்ணிப் புறக்கணித்து, பெரியோர்களது அறிவுரைக்கு மாறாக நடப்பவர் தமது அழிவைத் தாமே தேடிக் கொள்பவர். பெரியோர் அறிவுரையை மதிக்காது அழிவைத் தேடிக் கொள்பவருக்கு அறிவுரை கூற விரும்பிய வள்ளுவர்,

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள்: 892)

பெரியோரை மதிக்காமல் நடந்து கொள்பவர் நீங்காத துன்பத்தையே எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகிறார். இதையும் விட ஒருபடி மேலே சென்று,

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (குறள்: 896)

தீயால் சுடப்பட்டால் கூட பிழைத்துக் கொள்ள இயலும், ஆனால் பெரியோரை அவமதித்து, அவரை எதிர்த்துக் குற்றம் செய்பவர் உயிர்வாழ்தல் இயலாது என்றும் எச்சரிக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *