Tag: வையவன்

  • ஐந்து கை ராந்தல் (5)

    வையவன்

    சிவா வீட்டுக்குத் திரும்பிய போது தெரு முனையிலேயே திஷ்யா கதையைப் படித்திருப்பாள் என்று நினைத்தான்.
    அவளைப் பார்க்க வேண்டும் என்று மனசு துடித்தது. படி ஏறி வரும்போதே அவர்கள் வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டன.

    எதிர்ப்பட்ட சீதாவிடம் விசாரித்தான்.
    “பெங்களூர் அத்தை வந்திருக்காங்க.”
    அவனுக்குத் தபாலில் ‘நந்தவனம்’ வந்திருந்தது.

    இரண்டு நாட்கள் தன் மகிழ்ச்சியின் எதிரொலியை திஷ்யாவிடம் கண்டு அனுபவிக்க அவன் தவித்துப் போனான்.
    அதற்கு நேரம் வாய்க்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களுமாக பெங்களூர் அத்தையையே சுற்றினார்கள். திஷ்யாவோடு தனித்துப் பேச வசதிப் படவில்லை.

    அந்த பெங்களூர் அத்தையிடம் அவனை திஷ்யா அறிமுகம் செய்த போது எழுத்தாளர் என்று கூடச் சொன்னாள். அவன் கதை வந்த ‘நந்தவனம்’ இதழை அத்தையிடம் காட்டினாள்.

    எனினும் அந்த மகிழ்ச்சி அதன் முதல் கிளர்ச்சி எல்லாம் சூபர் எக்ஸ்பிரஸில் கடந்து செல்லப்பட்ட சின்ன ஸ்டேஷன் மாதிரி புறக்கணிக்கப்பட்டு விட்டது.

    அந்த இரண்டு நாட்களிலும் அவனுக்குத் தான் மாப்பிள்ளையோ தலைவரோ ஆன ஒரு சுயதிருப்தி. அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

    தாமு இல்லாததால் சமையலில் விமரிசை செய்து கொள்ளத் தோன்றவில்லை. மீண்டும் ஒருமுறை பிரீதாவைப் பார்க்கலாமா என்று யோசித்தான். பஸ் ஏறி எலியட்ஸ் ரோடில் அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கினான்.

    திடீரென்று மனசு மாறி மைலாப்பூர் பீச்சுக்கு அங்கிருந்து நடந்தான். லைட் ஹவுஸின் மீது ஏறினான். கட்டு மரமும் கயிற்றுச் சுருணையையும் காவல் காத்த கரையோரத் தனிமையில் பொங்கி வந்த அலைகளில் தன் குதூகலத்தைக் கரைத்தான்.

    நிலா உதித்தது.
    வெளிர் நீலக் கடல் கறுத்தது.
    அப்புறம் பாதரசம் கொட்டிய மாதிரி கடற் பரப்பு பளபளத்தது.

    ஆங்காங்கே வெள்ளைக் குதிரைகள் நுரைத்துக் கொண்டு உதறிச் சிலுப்பி மேலெழுந்தன.
    அந்த அலைகளில் பிரீதாவின் வாக்கு கேட்டது.
    “எப்படி வாழ்ந்தாலும் அது நிலையற்றது தான்”
    சிவா அலை முழக்கத்தை உற்றுக் கவனித்தான்.

    ஒரு வழக்கை ஆர்ப்பரித்துக் கொண்டே அலைகள் அவனிடம் சொல்ல வந்தன.
    அவன் உற்றுக் கேட்டான்.
    ஜனனம். மரணம். உதயம். அஸ்தமனம். எழுச்சி, வீழ்ச்சி; முடிவற்றது. முடிவற்றது.

    பெரிய அலை ஒன்று சீறிக் கொண்டு வந்து அவன் பாதம் வரை வந்து நனைக்காமல் பின் வாங்கிற்று.
    அவன் பார்வை தொட்ட நடுக்கடல் விளிம்பில் லட்ச தீபம் ஏற்றிய மாதிரி ஒளிப் பாலம் மிதந்தது.
    அங்கே நிர்ச்சலனம்.

    கண்ணுக்குத் தெரியவில்லை. போனவர்கள் சொல்லக் கேட்டு மனசு கற்பித்தது.
    உற்று அலைகள் பேசுவதை சிவா கேட்டான். நடுக்கடல்.
    எங்கும் அமைதி இருக்க முடியாது. அங்கேயும் அமைதி போல் தென்படும் ஓர் இயக்கம்தான் இருக்குமோ?
    இயங்கு, இயங்கு எழுந்து வீழ்ந்து உதித்து அஸ்தமித்து, பிறந்து மரித்து இயங்கிக் கொண்டே இரு. கரை கடக்க முயன்று கொண்டே இரு.

    சிவா யோசித்தான். கரை.. எது கரை? எங்கே கரை?
    எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சிவா பதமுற்றிருந்தான்.
    வெளியே ஒரு கார் நின்றிருந்தது. டோயோடா.
    வாசலில் தெருப்பக்கத்துப் போர்ஷன்காரர் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.
    “ஒங்களைத் தேடிட்டு யாரோ வந்திருக்காங்க”

    “யார்?”
    “ஒரு யங்மேன். மேலே இருக்கார்”
    சிவா அவசரமாகப் படியேறினான்.
    நேர் எதிரே கூடத்தில் எரிந்த விளக்கொளியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், வெற்றிவேல் தெரிந்தான். அவன் கையில் ‘நந்தவனம்.’

    உயரமாக நிமிர்ந்த முதுகோடு வெற்றிவேல் உட்கார்ந்திருப்பது வினோதமாயிருந்தது.
    ஒரு குங்ஃபூ சாம்பியன் மாதிரி…சேச்சே…ஒரு புத்தபிட்சு மாதிரி. ஊஹூம்… ஒரு யோகி மாதிரி…கரெக்ட்.
    உட்கார்ந்திருக்கிற வெற்றிவேலுக்குத் தலைப்பாகை கட்டி விட்டால் அவன் அசப்பில் விவேகானந்தர் மாதிரி இருப்பான்.
    காலடி ஓசை கேட்டு அவன் நிமிர்ந்தான்.

    மின் சக்தி பாயும் கண்கள்.
    “எங்கே போயிருந்தே?”
    “எப்போ வந்தே?”
    “ஒரு மணி நேரம் ஆச்சு”

    ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.
    வெற்றிவேல் உட்கார்ந்து கொண்டே கை நீட்டினான். சிவாவின் கரம் அதைச் சந்தித்தது. ஒரு குலுக்குக் குலுக்கியதுமே உடம்பில் உரம் ஏறிற்று. தான் பாதி பிரிந்து மீண்டும் வந்து இணைந்த பலம்.
    “எதற்கு?” என்று கேட்டான் சிவா.

    “இதற்கு” என்று தன் கையிலிருந்த ‘நந்தவனத்’தை உயர்த்திக் காட்டினான் வெற்றிவேல்.
    “என்னை ரொம்ப காக்க வச்சுட்டே!” என்று கையை விடுவித்துக் கொண்டே குற்றம் சாட்டினான்.
    “நீ வருவேண்ணு தெரியுமா என்ன?”

    “இதைச் சொல்லலே. உங்கிட்டே இருந்து தபாலை எதிர்பார்த்தேன்!”
    “எந்த விலாசத்துக்கு எழுதட்டும்? நீ தான் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஊருக்குப் போறியே!”
    அவன் கிண்டலாக சிவாவைப் பார்த்தான்.
    “அது பாதி உண்மைதான் இல்லியா?”

    அவனிடம் இவனும் இவனிடம் அவனும் உண்மையை ஒளிக்க முடியாது.
    உதட்டை மூடிக்கொண்டு சிவா மெதுவாகத் தலையை அசைத்தான்.
    “நீ எங்கே போய்ட்டே சிவா… இவர் வந்து ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிகிட்டிருக்காரே” என்று கையில் இரண்டு ஷர்பத் டம்ளருடன் வந்தாள் திஷ்யா.

    “பீச்சுக்குப் போயிருந்தேன்”
    டம்ளரைக் கொடுத்து விட்டு உள்ளே போனவள் வெற்றிவேல் மறைகிற மாதிரி சுவர் ஓரம் போய் நின்று கையை அசைத்து அவனைக் கூப்பிட்டாள் திஷ்யா.

    அவன் டம்ளருடன் அவளருகில் போனான்.
    “சப்பாத்தி பண்ணிகிட்டிருக்கேன். ரெண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க”
    “இரு… கேட்டுச் சொல்றேன்”

    சிவா வெற்றிவேலிடம் வந்தான்.
    “சாப்பிடுவோமா?”

    ஷர்பத்தைக் குனிந்து ஒருமுறை பார்த்துவிட்டு ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை கைப்பிடிச் சுவரின் மீது வைத்தான் வெற்றிவேல்.

    “நோ… நாம டெங்கனிக்கோட்டா போறோம்.”
    “எப்ப…”
    “இப்போ….”
    “இப்பவேவா?…”
    “ஏன்… எதாவது வேலையிருக்கா?”

    “இல்லே…” அவன் இழுத்தான்.
    “ஸால்வ் தி ப்ராப்ளம்” என்று திஷ்யாவிற்குக் கேட்காத மாதிரி அவள் நிற்கிற திசைக்குத் தலையைத் திருப்பிக் காட்டினான் வெற்றிவேல்.

    தன் ஷர்பத்தைக் குடித்துவிட்டு சிவா திஷ்யாவிடம் போனான்.
    “ஸாரி… திஷ்யா… நாங்க அவசரமா டெங்கனிக் கோட்டா போறோம்…”
    “எப்ப வருவே?” அவள் கண்களில் ஒரு புதிய உணர்வைக் கண்டான் சிவா.

    ஏக்கம்!
    அந்நியமானது, அவளுக்கு, அவனிடம் அவளுக்கு.
    “தெரியலியே… இரு கேட்டு…” இழுத்தான்
    அவன் நாக்கைக் கடித்தான்.

    வெற்றிவேலைக் கேட்டு அவளிடம் திரும்பி வருகிற நாளைச் சொல்ல நினைத்ததன் அசட்டுத்தனத்தை எண்ணி அவன் கண்ணை மூடிச் சிரித்தான்.

    அந்தச் சிறிய கணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த மானசீக இடைவெளி சட்டென்று குறைந்ததை அவன் உணர்ந்தான்.

    வெளியே வெற்றிவேல் காத்திருக்கிறான். சிவா வந்தான்.
    “சரி… கிளம்பு… நான் ஏதாவது டிரஸ் எடுத்துக்கணுமா?”
    “வேண்டாம்…”

    “எத்தனை நாள் அங்கே இருப்போம்?”
    “ரெண்டு நாள். நாளை மறுநாள் ஒன்னைக் கொண்டு வந்து இங்கே விட்டுடறேன்.”
    திஷ்யாவுக்குக் கேட்டிருக்கோம். கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னானோ?
    வெற்றிவேல் எழுந்தான்.

    “ஒரு லுங்கியாவது எடுத்துக்கறேனே…”
    “லுங்கி… பனியன், வேஷ்டி, சட்டை எல்லாம் காரிலே ரெடியா இருக்கு. கௌம்பு”
    மறு வார்த்தை பேசாமல் காத்திருந்த திஷ்யாவுக்கு சிறிதாகத் தலையசைத்து விட்டு வெற்றிவேலின் பின்னால் படியிறங்கினான் சிவா.

    காரில் உட்கார்ந்து கதவைச் சாத்தும் போது அது மூடும் ஓசை கூட மெல்லத்தான் வந்தது. சொன்ன சொல்லைக் கேட்கிற மாதிரி கார் ஸ்டார்ட் செய்ததும் புறப்பட்டது.

    பின்னால் பார்த்து விட்டு ரிவர்ஸ் எடுத்தான் வெற்றிவேல்.
    சந்து திரும்பி சாலை வந்ததும் பேச்சை ஆரம்பித்தான்.
    “என்னடா?”

    “சொல்லுடா”
    “தேசீயப் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கியா?”
    வெற்றிவேல் குத்தலாகக் கேட்டான்.

    “எதைச் சொல்றே… வேலை தேடறதையா?”
    “இல்லே. ‘லவ் பண்றதை”

    “ஓ… அந்தப் பொண்ணை வச்சு சொல்றியா? டோண்ட்பி ஜெலஸ், அது சும்மா பரிச்சயம்”
    “ஒரு நண்பனை காதலி முதலில் பங்கு போடறா. அப்புறம் முழுசா கபளீகரம் பண்ணிடறா…”
    “எனக்கு இன்னும் அனுபவமில்லே”

    “நம்பறேன். உன் நந்தவனம் கதை…” என்று வெற்றிவேல் இடது கைப் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.
    சிவாவுக்கு மார்பு விம்மிற்று.

    “ஆனா எனக்கு வருத்தமா இருந்தது”
    “ஏன்..”
    “ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ. இன்னிக்கு ஓடிட்டிருக்கிற லட்சியம் இல்லாத வாழ்க்கை மாதிரி…”

    வெற்றிவேல் ஒரு சைக்கிள்காரருக்கு ஹார்ன் செய்தான்.
    “எதிர்மறையா அணுகியிருக்கேன். ஹீரோயிஸம்…நீ சொல்றியே அந்த லட்சியம், அது குற்றுயிரா இருக்குண்ணு காட்டியிருக்கேன்.”

    “எதிர்மறை எதிர்மறையைத் தான் தோற்றுவிக்கும்.”
    “இங்கே எதுவும் எதையும் தோற்றுவிக்காது. ஓயாமே குடுமிபிடிச் சண்டை நடக்கும். ஒரு விஷயம் கிடைச்சா கொஞ்ச காலம் வெறும் பேச்சுப் பேசுவாங்க. அப்புறம் சென்ஷேனலா வேற ஏதாவது கெடைக்குமானா அதை விட்டு நகந்துடுவாங்க.”

    “ஊருக்குப் போயிருந்தேன். நண்பர்களைப் பாத்தேன் எல்லாரும் ஒன் கதைண்ணு தெரிஞ்சுகிட்டாங்க.”
    “என்ன சொன்னாங்க?” சிவா ஆவலோடு கேட்டான்.

    “டர்ஜனீவ் மாதிரி இல்லேண்ணா ஒருத்தன். டால்ஸ்டாய் மாதிரி இல்லேண்ணா இன்னொருத்தன். புதுமைப்பித்தன் ‘பவர்’ இல்லேண்ணான் வேற ஒருத்தன்.”

    “நீ என்ன சொன்னே?”
    “நன்றி சொன்னேன். அத மாதிரி இது மாதிரிண்ணு சொன்னா அவமானப்படுத்தற முயற்சி. இது பரவால்லே நீ ஒன் மாதிரி எழுதியிருக்கேண்ணு மறைமுகமான சர்ட்பிகேட்.”

    சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.
    “ஸோ…தே டோன்ட் லைக் இட்!”
    “யூ டோன்ட் பாதர்… ஒனக்குப் புடிச்சிருக்கு இல்லே, எழுது.”

    “என் அம்மாவைப் பார்த்தியா?”
    “உன் அப்பாவைப் பார்த்தேன்.
    சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான்.
    “எங்கே?”

    “டெங்கனிகோட்டா பக்கத்திலே. அண்செட்டி என்கிற சின்ன ஊரிலே. ஒரு சிவன் கோயில்லே. நேத்து வரிக்கும் அங்கே தான் இருந்தார்… அவருக்கு என்னை அடையாளம் தெரியலே…நான் புரிஞ்சுகிட்டேன். ஒடனே ஒனக்குத் தெரிவிக்கணும்னு.. நோ ஒன்னைக் கூட்டிட்டுப் போயி காட்டணும்னு தோணிச்சு.”

    “தாங்க் யூ…” என்று அவன் தோளைத் தொட்டான் சிவா. அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
    “எப்படி இருக்கார்?”

    “பெரிய ரிஷி மாதிரி தாடி வச்சிருக்கார். தலை நரைச்சு தாடி நரைச்சுப் போயிருக்கு… மீதி எல்லாம் நேரிலே பார்.”
    வெற்றிவேல் ஒரு பெரிய அசைவ ஹோட்டல் எதிரே காரை அதற்காக அனுமதித்திருந்த இடத்தில் நிறுத்தினான்.
    அது அசைவம் என்று தெரிந்தும் வெற்றிவேலுக்காக சிவா ஆட்சேபிக்கவில்லை.

    “கார் வாங்கினயா வெற்றி?”
    “இல்லே… ஒரு பந்தயத்திலே ஜெயிச்சேன்.”
    “பந்தயமா?”

    “ஆமா…” அவன் கதவை மூடிப் பூட்டிக் கொண்டே சொன்னான்.
    “அண்செட்டியிலிருந்து பெங்களூர் போற ரோட்லே என் மோட்டார் பைக்லே இந்தக் காரை ஓவர்டேக் பண்ண முடியாதுண்ணு ஒரு கோடீஸ்வரன் சொன்னான். இந்தக் காரே பந்தயம்ணு கட்டினான். தட் வாஸ் எ சாலஞ்ச்..ஜெயிச்சுட்டேன்.”

    “காரை எப்படி வாங்கிக்கிட்டே? இது ஒன்னாலே முடியாதே!”
    வெற்றிவேல் கம்பீரமாகப் புன்முறுவல் செய்தான்.

    “யூ ஆர் கரெக்ட்… இதை எவன் எடுத்துக்கப் போறான்? ஆனா அந்தக் கோடீஸ்வரனுக்கு இது ரொம்ப அற்ப விஷயம்.. அவன் ஒரு அமெரிக்கன். டெட்ராயிட்லே மோட்டார் கம்பெனி மானேஜிங் டைரக்டராம். கேம் ஈஸ் எ கேம்னு சொன்னான்.”
    இருவரும் சாலையைக் கடந்து கொண்டே பேசிச் சென்றனர்.

    “போட்டி, யந்திரத்துக்கும் மனுஷனுக்கும் தான், பரிசுக்காக இல்லேண்ணு சொன்னேன். யூ… ப்ரீக்ணு சொன்னான். ஆல்ரைட்… இதை நான் ஜெயிச்சேண்ணு ஓர் அடையாளத்துக்காக மெட்ராஸுக்கு எடுத்துட்டுப் போறேன், ஒரே ஒரு ட்ரிப் மட்டும் அப்புறம் திருப்பி எடுத்துக்கோண்ணு சொல்லிக் கொண்டு வந்திருக்கேன்…”
    அவர்கள் ஹோட்டலிற்குள் நுழைந்து கையலம்பினர்.

    வெயிட்டர் வந்ததும் வெற்றிவேல் ஆர்டர் சொன்னான்.
    “ரெண்டு தந்தூரி சிக்கன்…”

    வெற்றிவேலை சிவா இடைமறித்தான்.
    “ஒரு தந்தூரி சிக்கன். ஒரு ப்ரெட் பட்டர் ஜாம்.”

    “மறந்துட்டேண்டா சிவா… நீ இருக்கறப்ப இந்த கசாப்புக் கடைக்கு வந்திருக்க வேண்டாம்.”
    “இட்ஸ் ஆல் ரைட்… நீ எழாதே உட்கார்”
    வெயிட்டர் ஆர்டர் எழுதிக் கொண்டு போனான்.

    இருவரும் காத்திருக்கும் வேளையில் வெற்றிவேல் ஒரு கேள்வி போட்டான்.
    “வேலை கெடைச்சிருச்சா?”
    “கெடைச்சிருந்தா சொல்லியிருப்பேன்.”

    Share
  • ஐந்து கை ராந்தல் (4)

    வையவன்

    “அகத்து வரூ”

    க்வார்ட்டர்ஸின் கதவுக்கு மாட்டியிருந்த பச்சை ஸ்கிரீனை’த் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டாள் பிரீதா. கதவுக்கு வெளியே வாசற்படியருகில் சிவா நின்றான். கையில் குக்கர் வைத்த அட்டைப் பெட்டி.
    “எந்தா குக்கரோ?” என்றாள். அவள் புன்னகையில் ஒரு பசுமைக் குளிர்ச்சி இருந்தது.
    வெளியே வாட்டிய வெய்யிலில் அவளைப் பார்ப்பதே குளிர்ச்சியாக இருந்தது.

    ட்யூட்டி முடித்துக் குளித்திருந்தாள். தலை ஈரம் ஆறும் முன் போட்ட மலையாளக் கொண்டை. பூசினாற் போன்று பருத்த அவளது செம்மஞ்சள் மேனிக்கு இந்த பச்சை நைலக்ஸ் மட்டுமல்ல எந்த உடையும் பொருத்தம்தான்.
    விளக்கு வைத்த மாதிரி ஒரு பார்வை. அந்த குறுஞ்சிரிப்பில் கண்களின் சுடர் தெறித்தது.

    சிவா காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு படியேறினான். நடுவே ஓடிய காங்க்ரீட் பாதையின் இரு பக்கமும் தண்ணீருக்குத் தவிக்கும் சின்னத் தோட்டம்.

    “இண்டர்வ்யூ கழிஞ்ஞோ?” என்ஙறு அவன் கையிலிருந்த குக்கர் பெட்டியை வாங்கிக் கொண்டே கேட்டாள்.
    பிரீதாவிடமிருந்து ஒரு பெர்ஃப்யூம் வாசனை வந்தது.

    “இவ்விட இரீ” என்று ஒரு பிரம்பு நாற்காலியைக் காட்டி ஆதுரமாகப் புன்னகைத்தாள்.
    பிரீதாவின் புன்னகையிலும் சிரிப்பிலும் கண்கள் ஒளிவிட்டன. இவளுக்கும் பாவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவள் முகத்தின் நேர்மை கேட்டது.

    எவ்வளவு சுருக்கமாக இவள் தன் பிரியத்தை வெளியிடுகிறாள்!
    “இதோ வருந்து” என்று பிரீதா மீண்டும் உள்ளே போனாள்.

    பக்கத்திலிருந்த டீப்பாயில் ஒரு மலையாள தினசரி மடிந்து கிடந்தது. புழுக்கத்திற்கு விசிறிக் கொள்ள எடுத்தான். கீழே நந்தவனம். அந்த வாரத்து இதழ். பிரதா தமிழ் கற்று வருகிறாள் என்று நினைவு வந்தது.
    எந்த இடத்தில் அவனது கதை பார்க்கக் கிடைக்கிறது!

    பத்திரிகையை எடுக்கும் போது கை லேசாக நடுங்கிற்று. அட்டைப்பட ஓவியத்தைப் பார்க்கும் போது அவனுக்கு மறுபடியும் அம்மா நினைவு வந்தது. கண்கள் ஊற்றெடுத்தன-பார்வை மறையுமளவு.
    ‘மனமே இன்பத்திலும் துன்பத்திலும் சமமாயிரு.’ தாமுவின் முதல் கதை பிரசுரமாயிருந்தால் அவன் இவ்வளவு கிளர்ச்சியுறுவானா? வெற்றிவேல்?

    ‘லகானை’ இழுத்த மாதிரி அவனுக்குள் ஒரு தன்வசம் கிட்டியது.
    ‘டபிள் ஸ்ப்ரெட்’டாக அட்டையின் முன்னும் பின்னும் ஏழு வண்ணத்தில் பரவியிருந்த ஓவியம்.
    பிரித்தான். அவனது கண்ணீரும் கண் விழிப்பும் உதிரமும் பெருமூச்சும் சிதறியிருந்த வரிகள்; பொடிப் பொடியான ஒவ்வோர் எழுத்தும் அவனது வெற்றியைச் சிற்றுளியால் கொத்திய ஒவ்வொரு கொத்து போன்று சிரித்தன.
    பிரீதா ஒரு கண்ணாடித் தம்ளரோடு திரும்பி வந்தாள். லெமன் ஜூஸ்.

    “கழிக்கூ”
    பிரீதா நீட்டியதை வாங்கிக் கொண்டான். ‘பிரிஜ்’ஜிலிருந்து வந்ததால் டம்ளர் சில்லென்றிருந்தது.
    “இண்டர்வ்யூ எந்தாயி?”
    ஒரு விழுங்கு குளிர்ச்சியில் வெய்யில் பரவசம் எல்லாமே மட்டுப்பட்டன.
    “மாமூல்”

    “மாமூலென்னு பரஞ்ஞால்?”
    “ஜஸ்ட் ஃபர் நேம் ஸேக். ஆளை ஏற்கெனவே தீர்மானிச்சாச்சு. பத்தாயிரம் ரூபாய்.”
    “ஆ லெட்டரினெ கொடுத்தோ?”

    அது மாதிரி நூறு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டும் பைலுமாக பருத்த மனிதர்கள் நாலைந்து பேர் இண்டர்வியூ ஹாலுக்கு வெளியே திரிந்தார்கள்.
    “அதுக்கு அவசியமே ஏற்படலே”

    அவன் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. பிரீதாவின் முகத்தில் வருத்தம் ஏடு கட்டியது.
    ‘இவளிடம் சொல்லலாமா?”

    தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்று நிஜமாய் விரும்பும் இவளுக்கு இது தெரிய வேண்டுமே!
    சிவா பத்திரிகையை அந்தப் பக்கத்தின் நடுவில் கை வைத்து அவள் முன்பு நீட்டினான்.
    “எந்தாணு?” அவள் வாங்கி எழுத்துக் கூட்டினாள்..

    “எதிரெலியே நீ எங்கே?”
    சிவா சிரித்து விட்டான்.
    “தெற்றாணோ?” தப்பு செய்த குழந்தை மாதிரி அவள் ரசமாக விழித்தாள்.

    “எதிரொலியே நீ எங்கே?”
    அவன் திருத்திப் படித்தான். அவன் விரல் கீழே எழுதியிருந்த பெயரைச் சுட்டிக் காட்டியது.
    “சிவா…’ அவள் விழிகள் ஒரு கணம் நிலை குத்தின. இமைகள் படபடத்துக் கொண்டே அவன் மீது மொய்த்தன.
    “ஹாய்.. நிண்டேதோ?”

    “ஆம்” அவன் அடக்கப் புன்முறுவலுடன் தலையாட்டினான்.
    புது வியப்புடன் பார்த்தாள். பக்கங்களைப் புரட்டினாள் படங்களைப் பார்த்தாள். கவர்ஸ்டோரி என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டிப் படித்தாள்.

    அட்டைப் படத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
    மீண்டும் அவன் மீது ஒரு பார்வை. அதில் ஒரு புது மரியாதை பிறந்திருந்தது.
    இனி அவளுக்குத் தான் பழைய சிவா இல்லை.

    வேலை தேடுகின்ற, தங்க நிழல் தந்தவர்களுக்குச் சமைத்துச் சேவகம் புரியும், பரிவிற்குரிய பழைய சிவா இல்லை.
    “கங்ராஜூலேன்ஸ்.. க்ளாட். ஐ’ம் வெரி க்ளாட். எனிக்கு எத்ர சந்தோஷமென்னு பரயாம்பாடில்ல”
    அவளது கரிய இமைகளில் பருத்துச் சிவந்த உதடுகளில் துளும்பிய களிப்பிலே ஒரு தூய்மை இருந்தது. அது ஒரு கன்று மரமாகிக் கனி குலுங்கக் கண்ட மகிழ்ச்சி.
    சிவாவுக்குச் சிலிர்த்தது.

    இவள் பார்வைக்கு தான் ஒரு வேலைக்காரன். தன் வெற்றியில் இவள் என்னமாய் பூரிக்கிறாள்!
    அந்தத் தூய்மையான களிப்பும் உற்சாகமும் கண்ணுக்குத் தெரியாத ட்யூப் இணைப்புக்களில் சொட்டுச் சொட்டாய் தனக்குள் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.

    “இங்ஙன நீ வல்யவனாயி”
    நீ பெரிய மனிதனாய் விட்டாய் என்று அவனது உலகம் ஒரு சங்கீத மலையாளத்தில் முதன் முறையாக அவனுக்கே எடுத்துக் கூறியது.

    “ஞான் இன்னு நினக்கு ஸ்வீட் தரும்”
    சிவா தடுக்குமுன் பிரீதா பச்சைத் திரையின் உள்ளே மறைந்து விட்டாள்.
    வெய்யிலில் பசி நடையாய் நடந்த கால் வலி எல்லாம் மறந்து விட்டது.
    ஸ்க்ரீனுக்கு மாட்டியிருந்த உலோக வளையங்கள் நகர்ந்து விலகியதால் ரீங்கரித்தன. திரையை ஒதுக்கிவிட்டு பிரீதா வந்தாள்.

    “அகத்துவரூ”
    அவன் இதுவரை அந்த வீட்டினுள் நுழைந்ததில்லை. தயங்கினான்.
    “கம் ஆன்… டோன்ட் பி ஷை!”
    லெமன் ஜூஸ் தீர்ந்த காலி டம்ளருடன் அவன் எழுந்தான்.
    “தரூ” அதை அவள் வாங்கிக் கொண்டாள்.
    நுழைந்தவுடனே ஒரு குளுமை. இள நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். மொசைக் தரை; லாமினேட் ஒட்டிய மேஜை நாற்காலிகள்.

    எதிரில் சுவற்றில் ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் குருவாயூரப்பனின் பளிங்குச் சிலை. அதற்கு வெளியே ஊதுவத்தி ஸ்டாண்டில் சந்தன ஊதுவர்த்தி மென்மையாகப் புகைந்தது.
    ரூமை ஒட்டி சிறு நடை; வலப்புறம் படுக்கையறையில் நீல நைலான் கொசுவலை கட்டிலுக்கு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது.

    உள்ளே நீண்ட நடை வழி. சமையலறையும் பாத்ரூமும் டைனிங் ஹாலும் உள்ளே இருக்க வேண்டும்.
    சிவாவை மேஜையருகே உட்கார வைத்துவிட்டு அவள் நேரே உள்ளே போனாள். இரண்டு கைகளிலும் இரு பீங்கான் ‘ஸாஸர்’களை ஏந்தித் திரும்பினாள்.

    மேஜையின் மீது வைத்தாள். ரஸகுல்லாவும், வறுத்த முந்திரியும்.
    “நீங்க?”

    “நீயாணு ‘கஸ்ட்.’ கதா க்ருத்தாய கஸ்ட்”
    அவன் ஸ்வீட்டை விண்டு வாயில் போட்டதும் வயிறு பசித்தது.

    அவள் அவனுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு மேஜை மீது ஊன்றிய இரு கரங்களாலும் மோவாயைத் தாங்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
    அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

    ‘உச்சய்க்கு எந்தெங்கிலும் கழிச்சோ?”
    மத்தியானம் ஒன்றும் சாப்பிடவில்லை. அந்த தகவல் இவளுக்கு எதற்கு.
    “கழிச்சு” அவன் மலையாளம் பேசினான்.

    “எந்த கழிச்சு?”
    “சோறு”
    “நுண”
    “இல்லை. மெய்தான்.”

    பிரீதா நம்பினாள். மலையாளத்தில் விடுவிடென்று பேசிக் கொண்டு போனாள். அவள் கண்களில் இளமை நினைவுகள் தலையெடுக்கும் மெல்லிய துயர் படர்ந்தது.

    “சிவா, எனக்கு ஓர் இளம் பருவத் தோழன்இருந்தான். செரு துருத்தியில். செருதுருத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? ஷோரனூர் ஜங்ஷனுக்குப் பக்கத்தில்…”
    “மகாகவி வள்ளத்தோல் பிறந்த ஊர்…”
    “அதேதான். கேரள கலாமண்டலி பிரசித்தி ஆச்சே”
    “கேள்விப்பட்டிருக்கிறேன்.”

    “அங்கே கதகளி பயில்வதற்காக கொடுங்கல்லூரிலிருந்து அவன் வந்திருந்தான். செக்கச் செவேலென்று ஒரு பெண் மாதிரி… உன் சாயலில் இருப்பான்.”

    “என் சாயல் என்பது எது? பெண் மாதிரியா… சிவப்பா?” சிவா சிரித்துக் கொண்டே கேட்டான்.
    “உன் முகம்… உன் நடை… உன் உயரம்”

    “அப்போது அவனுக்கு பதின்மூன்று வயது. கவிதை எழுதுவான். பாடுவான்”
    “பெண் குரலா?”

    “இல்லை… கம்பீரமான ஆண் குரல். உச்ச ஸ்தாயிக்குப் போனால் மனசை அடிமை கொள்ளும் பௌருஷம், முகத்துக்கும் இயல்புக்கும் பொருந்தாத கம்பீரமான குரல்.”
    அவனை இவள் காதலித்திருப்பாளோ!
    பிரீதாவே சொன்னாள்.

    “என்னை அவன் காதலித்தான். நானும்…”
    சிவா வாய்க்குக் கொண்டு போன ஸ்பூனை நிறுத்தினான்.
    “இட்ஸ் எ காஃப் லங்… கன்றுக்குட்டிக்காதல். கற்பூரம் எரியற மாதிரி, காட்டுக் குயில் பாடற மாதிரி.. மாசுமறு வில்லாத களிப்பு.. எனக்கும் பதின்மூன்று வயது”

    அவன் என்னவானான்? ஏமனுக்கோ துபாய்க்கோ தினாரோ ரியாலோ சம்பாதிக்கப் போய் விட்டானா…
    பிரீதாவே தொடர்ந்தாள்.

    “ஒரு நாள் என் கண்ணெதிரில்.. நான் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே அந்த பிரபாகர் செருதுருத்தியில் ஓடும் பாரதப்புழா நதியில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான்.. நாலாவது மைலில் அவன் பிரேதம் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.”

    சமையலறையில் ஒரு டப்பா உருண்டது. பூனையோ! பிரீதா அசையவில்லை.
    “சிவா… அதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மரணம்!”
    வெண்டிலேட்டர் மீது வெய்யில் தாளாமல் வந்து உட்கார்ந்த இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிட்டன.

    “உன்னைப் பார்க்கும் போது பிரபாகர் ஞாபகம் வருகிறது. உன் மாதிரியே, அவனும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான். ராஜவம்சம், அவன் முழுப் பெயர் ஆனப்பாலம் பிரபாகர வர்மா”
    இதை ஏன் சொல்கிறாள்? இன்று.. இந்த வேளையில்…

    “மாத்ருபூமியில் அவன் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது… ஆனால்…”
    “ஆனால் என்ன?”

    “அது அவன் மறைந்த பத்தாம் நாள்தான் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று”
    சிவா அவள் கண்களில் நீர் துளிர்த்ததைப் பார்த்து தலை கவிழ்ந்தான்.
    “அப்புறம் மரணம் அடுத்தடுத்து வந்து முகம் காட்டி விட்டுப் போயிற்று. அம்மா.. தம்பி.. அக்கா… ஒவ்வொருவராய் சட்டுச் சட்டென்று மறைந்து போனார்கள்… ஐம் ஸாரி…” அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டே புன்முறுவல் செய்தாள்.
    “ஏன்?”

    “என்னவோ பேசிக்கிட்டே போய் உன்னை வருத்தப்படுத்திட்டேன். ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லறேன்…”
    “இட்ஸ் ஆல் ரைட்”
    “தாமுவுக்குத் தெரியுமோ?…
    “இல்லே”

    “ரொம்ப சந்தோஷப்படுவார்”
    “ஆமாம்”
    “சாப்பிடு”
    “மதனபள்ளியிலிருந்து தந்தி வந்தது. ஊருக்குப் போயிருக்கார். அப்பா ஸீரியஸாம்…”

    “அறியாம், போன் செய்து”
    அவன் முந்திப் பருப்பைத் தின்று முடித்துக் கையலம்ப எழுந்தான். அறை மூலையிலிருந்த வாஷ் பேஸினைக் காட்டினாள் பிரீதா.

    பேஸின் அருகே சின்ன நாப்கின் தொங்கியது. கழுவியதும் கை துடைத்து கொண்டான்.
    “வீடு ரொம்பத் துப்புரவா இருக்கு. பர்ஃபெக்ட்லி க்ளீன்.”
    அவள் நாணத்தோடு சிரித்தாள்.

    “தாங்க்யூ”
    நாற்காலியில் அவன் வந்து உட்கார்ந்தான்.
    “சிவா… இனி வேலை தேட வேண்டாம். எழுதணும். அற்புதமாய்… உன்னதமாய் எழுதணும்.”

    அவன் அவளை வரம் வழங்கும் தேவதையைப் பார்ப்பது போல் நோக்கினான்.
    “ஜீவிதம் அநித்தியமாணு. ஒவ்வொரு நிமிஷமும் அநித்தியமாணு.”
    அழகும் ஆரோக்கியமும் இளமையும் பொலிந்து நின்ற அவளிடமிருந்து இந்த வாக்கு வருவது அதிசயமாக இருந்தது.

    அவன் பிரீதாவையே உற்றுப் பார்த்தான். அவள் மலையாளத்தில் சொல்லிக் கொண்டே போனாள்.
    “ஆனால் இந்த வாழ்க்கையின் மீது நீ நேசம் வைத்தால் அது நிலைத்து நிற்கும். அதற்கு அர்த்தமுண்டு. இந்த ஜனங்கள் மீது நீ அன்பு வைத்தால் நீ காவியங்களைப் படைக்கலாம்…”

    சிவாவின் கண்களுக்குள் ஊடுருவியது போன்று அவள் பேசினாள்.
    “ஆனா அந்த அன்பு பரிசுத்தமா இருக்கணும். லவ் ஃபர் லவ் ஸேக்”

    சிவாவுக்கு இன்னும் சற்று நேரம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அதிக நேரம் இருந்து விட்டோம் என்று நினைத்தான். உடனே விடை பெற்றுக் கொண்டான்.

    Share
  • ஐந்து கை ராந்தல் (3)

    வையவன்

    படித்த தந்தியை மடித்து பைக்குள் போட்டுக் கொண்டான் தாமு. முகம் எந்த உணர்ச்சியும் காட்டாத வெற்றுக் காகிதம் மாதிரி இருந்தது.

    என்ன விஷயம்?
    சொல்ல மாட்டானா என்று சிவா எதிர்பார்க்கவில்லை. சொல்ல வேண்டுவதானால் சொல்லுவான் என்று அவனுக்குத் தெரியும்.

    ‘சிவா… ஒனக்கு டயம் ஆகுதே!”
    “நான் ரெடியாய்ட்டேன்.”
    “பீரோவில் பர்ஸ் இருக்கு…செலவுக்கு இருபது ரூபா எடுத்துகுடு.”
    “எதுக்கு எவ்ளோ? அஞ்சு ரூபா போதும்.”

    இந்த எட்டு மாதத்தல் எத்தனை இண்டர்வியூ எத்தனை ஐந்து… எத்தனை பத்து.
    “சைதாப்பேட் போகணுமில்லே”
    “ஆமா; அஞ்சு ரூபா போதும்.”

    தாமு நிதானமாக அவனைப் பார்த்தான். அவன் மனசைப் புரிந்து கொண்ட மாதிரி ஒரு புன்னகை செய்தான்.
    “ஒரு அக்கவுண்ட் வேணும்னா வச்சிக்கோ… வேலை கெடைச்சதும் நீ வாங்கினத்தையெல்லாம் திருப்பிக் கொடுக்க சௌகரியமா இருக்கும்… ஆனா வழியிலே இப்ப கஷ்டப்படாதே!”

    எதிராளி நாடித் துடிப்பை தாமு இரக்கமோ மென்மையோ பாராட்டாமல் இப்படி தொட்டு விடுவான். முகத்திரையை விசுக்கென்று இழுத்து விடுவான்.

    “அதுக்கில்லே”
    தாமுவே எழுந்துபோய் பர்ஸிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை உருவி சிவாவின் கையில் அழுத்தினான். “கீப் இட் ஐ ஸே.” அன்பை, பரிவைக்கூட அதிகாரமாகத் தான் தாமுவுக்கு சொல்லத் தெரியும்.
    சிவாவுக்கு மனம் தழுதழுத்தது.

    “விஷ் யூ ஆல் த பெஸ்ட்”
    “தாங்க்யூ… இன்னிக்கு மார்க்கெட்லே மீன் நல்லால்லே… சிக்கன்தான் பண்ணினேன்”
    “நீ?”
    “ரசம் வச்சுகிட்டேன்”

    தாமு ஒரு ‘ஜோக்’ கேட்ட மாதிரி சிரித்தான்.
    “நோ சிக்கன்ங… நோ ஃபிஷ்.. நோ மட்டன்… நோ டிரிங்ஸ்… நோ விமன்… நோ ஸ்மோகிங்… எல்லாம் நோ… நோ… நோ… நீ என்ன மனுஷன் சிவா?”

    “ஐ ஆம் நோபடி”
    தாமுவின் முகம் சட்டென்று சுருங்கிற்று.
    அதைச் சொல்லி இருக்க வேண்டாமோ! புளித்த மாவைப் போல் ஒரு விரக்தி பாத்திரத்தை விட்டு வழிந்து விடுகிறது.
    எத்தனை பத்திரப்படுத்தினாலும்.
    வெற்றிவேல்!

    அவனுக்கு தன்னிரக்கம் பிடிக்காது. விரக்தி பிடிக்காது.
    இரண்டு புருவங்களை உயர்த்திக் கொண்டு ஒரு வேலாயுதத்தை மனசில் பதிக்கிற பார்வை பார்ப்பான் இப்போது தாமு அப்படிப் பார்த்தான்.

    புதிய பல்ப் மாற்றிய மாதிரி தாமுவின் முகத்தில் ஓர் ஒளி பளிச்சிட்டது.
    “இட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி… ஒனக்கு ஒரு வேலை கெடைக்கறதுதான் ரெமடி. கெடைச்சுடும்.”
    “ஐ’ம் ஸாரி”
    “ஏன்?”

    “ஐ வாஸ் பிட்டர். கசப்பா பேசிட்டேன்.”
    “கசப்பெல்லாம் இனிப்பாகும் காலம் ஒன்று வரும்.”
    “தாங்க்யூ”

    சர்ட்டிபிகேட் ஃபைலை எடுத்துக் கொண்டு படியிறங்கப் போனவனை “சிவா” என்று கூப்பிட்டான்.
    சிவா நின்றான்.

    “நீ எனக்கு ஒரு சின்ன வேலை செய்யணும்.”
    “சொல்லுங்க.”

    “வர்ற வழியிலே மவுண்ட் ரோடிலே எறங்கு. பிரீதா, ஒரு குக்கர் கேட்டிருந்தா. முந்தா நாள் மாடலை எல்லாம் பார்த்து வச்சிட்டோம். நீ ஸ்பென்சர்லே எறங்கி கேஷ் கவுண்டர்லே தாமு கிட்டேருந்து வந்திருக்கேன்னு சொன்னியானா குக்கரைக் கொடுத்துடுவாங்க. வாங்கிட்டுப் போய் அவகிட்டே சேர்த்துடணும். வுட் யூ மைண்ட் திஸ் ட்ரபிள்…?”
    “நோ… நாட் அட் ஆல்”

    “அங்கே வேற யாரையும் அனுப்ப நான் விரும்பலே.”
    தனது அந்தரங்கத்துக்கு நீதான் உகந்தவன் என்ற மரியாதையை தாமு தருவதை உணர்ந்தான்.
    “நான் மதனபள்ளி போறேன். அப்பா சீரியஸ்ணு டெலிகிராம் வந்திருக்கு. வர எவ்வளவு நாள் ஆகும்ணு போய் எஸ்.டி.டி. பண்றேன். இதையும் அவகிட்டே சொல்லிடு.”

    தாமுவுக்குத்தான் இப்படி ஓர் அதிர்ச்சியை பக்குவத்தோடு ஏற்க முடியும். ரயில் தவறி விட்டதைப் பற்றிச் சொல்வது மாதிரி அவ்வளவு சாதாரணமாகச் சொல்ல முடியும்?

    இவன் கருங்கல் பாறையா…. தண்ணீரில் மிதக்கும் தாமரையா…
    சிவா பதறிப்போய் நிற்பதைப் பார்த்தான் தாமு.
    “டேக் இட் ஈஸி… அவர் நல்லா ஆயிடுவார். ஐ டுக் இட் ஈஸி… மனுஷனாலே அப்படி எடுத்துக்கறதுதான் முடியும்.”
    சிவாவின் பார்வை தாழ்ந்தது.
    “நீ பொறப்படு.”
    அவன் படியிறங்கினான்.

    அரைவாசிப் படிகள் கடந்திருப்பான். அதற்குள் தலைகுனிந்து கொண்டே தண்ணீர்க் குடத்தோடு திஷ்யா படியேறி விட்டாள். நாலைந்து படிகள் கடந்திருந்தாள்.

    படி குறுகலானது. மனிதனை விட இடம் முக்கியம் என்ற சென்னையின் சிக்கன சிரத்தையில் கட்டப்பட்டது. இடுப்பில் குடத்தோடு வரும் ஒருத்தியும் கையில் ஃபைலோடு வரும் ஒருவனும் ஒரே நேரத்தில் கடக்க முடியாது.
    அவள் ஐந்தாவது படி ஏறின பின்பு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

    குளித்து ஈரத்தலையைக் கொண்டை போட்டிருந்தாள். பவுடரும் மெல்லிய மையும் ஒரு சின்ன நேர் கோடு மாதிரி திலகமும் அவள் முகத்தின் செம்மையில் ஒரு சௌந்தர்யம் கூட்டியிருந்தன.
    சிவாவைப் பார்த்ததும் அவள் உதட்டில் குறும்புப் புன்னகை பளிச்சிட்டது.
    “என்ன காலம்பற வேட்டைக்கு கௌம்பியாச்சா?”

    “சகுனம்தான் சரியில்லே”
    “அப்ப திரும்பிப் போயிட்டு அப்பறமா வர்றது”
    “வந்த சகுனம் வந்தாச்சு. திரும்பிப் போனா தப்பிச்சுக்க முடியுமா?”
    “குடம் போறதுக்கு எடம் வேணுமே”

    மீண்டும் படியேறிச் செல்ல சிவாவுக்கு விருப்பமில்லை.
    “நான் ஒதுங்கி ஒட்டி நின்னுக்கறேன்”

    குடத்துத் தண்ணீர் சர்ட்டிபிகேட்டில் சிந்திவிடப் போகிறது என எதிர்ப்புறமாக ஒதுங்கினான்.
    ஒரு கணம். அந்தக் கன்னமும் விழியும் அவன் சமீபத்திற்கு வந்தன. அவளது இடையும் உடம்பும் அவனை லேசாகத் தொட்டு உரசிற்று.

    என்ன ஒதுங்கியும் திஷ்யாவின் இடது தோள் அவன் மார்பில் இடித்து விட்டது.
    இவ்வளவு நெருக்கம் இதற்கு முன்பும் ஒருமுறை கிட்டியிருக்கிறது. அது தற்செயல்.
    படிக்கட்டின் கீழே அவள் கையிலிருந்து எம்பிக் குதித்த ஆனந்தைத் தூக்க அவள் குனிய அவனும் குனிந்தான். இருவர் தலையும் முட்டிக் கொண்டன.

    ஒரு பெண்ணுடலுடன் நேர்ந்த முதலாவது சந்திப்பு அது இரண்டாவது சந்திப்பிலும் இப்படி ஒரு மோதல் தானா? படியேறிய திஷ்யா நின்றாள்.

    இடித்து விட்டோம் என்று நாக்கைக் கடித்துக் கொண்டே அவள் திரும்பிப் பார்த்தாள்.
    அந்தப் பெரிய கண்களில் மிதந்த மருட்சியும் வெட்கமும் அவன் மனசை எங்கோ கொத்தின. அவள் வாசனையும் அந்தப் பௌடர் வாசனையும் ஒரு வலை மாதிரி தன்னைச் சுற்றிக் கவிந்ததை சிவா உணர்ந்தான்.
    ஒரு தித்திப்பு உள்ளில் ஊறிச் சிலிர்த்தது.

    சிவா தன்னைச் சுய நிலைக்குக் கொண்டு வந்தான். கசப்பான சிரிப்பு ஒன்று அவனுள் கரைந்து மடிந்தது.
    தனக்கு என்று ஒரு வேலை உண்டோ இல்லையோ, விலாசம் உண்டோ இல்லையோ, மனுஷ புத்தி என்ன கூத்தாடுகிறது?
    எந்த முரண்பாடான சூழ்நிலையிலும் துளித்துளியாய் சிதறியிருக்கும் தேனுக்கு என்ன ஆவல் காட்டுகிறது!

    சிவா அந்த மயக்கத்திலிருந்து தன்னைக் கத்திரித்துக் கொண்டு படியிறங்கி, தெருவைக் கடந்து சாலைக்கு வந்தான்.
    வெளியே காலை, ஒன்பதரை மணிச் சென்னை ஜன்னி வேகத்தில் பதறிற்று. ஆபிஸ்… காலேஜ்… ஸ்கூல்.
    பஸ் ஸ்டாப்பின் ஓரம், பிரசவ வார்டுகளுக்கு எதிரே ஒரு கூட்டம் கையைப் பிசைந்து நிற்பது மாதிரி கால் மாற்றிக் கால் மாற்றி ஜனம் நின்றது.

    நிஜமாகவே ஒரு கர்ப்பிணியும் அங்கே நின்றாள். சிவா தன் உவமையின் பொல்லாங்கை ரசித்தான்.
    பிரசவம்! ஒவ்வொரு பஸ்ஸும் ஒரு பிரசவ வேதனை தானா? அவன் பெட்டிக் கடை ஓரமாக நின்றான்.
    கொலை, கொள்ளை, குண்டு வீச்சு, சட்ட சபையில் செருப்பு வீச்சு, ரயில் கவிழ்ந்தது என்று வீர சுதந்திரம் நமக்கு வழங்கியிருந்த அன்றாட மாமூல் சுபமங்களங்கள் பெட்டிக் கடைக்கு வெளியே தொங்கிய விளம்பரங்களில் பிரசவமாகியிருந்தன.

    ஒரு வாரப் பத்திரிகையின் விளம்பரத் தாள், மன அலை பாய்ந்து சட்டென்று நின்றது.
    “எதிரொலியே நீ எங்கே?”

    சிவா எழுதிய சிறப்புச் சிறு கதை.
    கொட்டை எழுத்துக்களில் தெரிந்த அந்த தலைப்பு எங்கோ கேள்விப்பட்ட மாதிரி யாருடையதோ மாதிரி பளீரென்று மண்டையில் அறைந்தது. தன் கதை என்பதைக் கீழே இருந்த பெயர் சுட்டிக் காட்டிற்று.

    ஆம்… அது அவன் எழுதியனுப்பியிருந்த கதை. தபால் பெட்டிற்குள் போடும்போது அது அங்கிருந்தே நேராக ஒரு குப்பைக் கூடையில் போய் விழும் என்று நினைத்துக் கொண்டு போட்டது.

    சரியாக ஒரு நிமிஷம். அவன் வெடித்துச் சிதறி வானில் வண்ண வண்ணமான வெளிச்சத் துணுக்குகளாகச் சிந்திய உணர்வு.

    ஒரு சூன்ய மூலையிலிருந்து உதைத்து எறியப்பட்டு வேகமாய்ச் சுழன்று ஒரு வெளியில் வந்து விழுந்த இம்சையான சுகப் பிரசவம்.

    பிறந்தோம். தின்று குடித்து வளர்ந்தோம். பொங்கிச் சலித்து மடிந்தோம் என்ற விதியிலிருந்து உந்தி எங்கோ ஒரு விதானத்திற்கு தள்ளிவிட்ட திக்பிரமை ஏற்பட்டது.
    அவன் பரவசமுற்றான்.

    கிளர்ச்சியுற்றான்.
    கூடவே சோகமுற்றான். ஏன் இந்த சோகம்? புரியவில்லை.

    அப்புறம்தான் சிவா மூச்சு விட்டான். ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது. இதயம் நூறு குதிரை வேகத்தில் துடிப்பது மாதிரி நினைத்தான்.

    சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டு கடைக்காரன் முன் நின்று விட்டான்.
    “என்ன சார் வேணும்?”

    “ஒரு நந்தவனம்” என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அவன் சட்டென்று விழுங்கினான்.
    இது தாமுவின் பணம். அவனுடைய சுய மரியாதையை மெச்சுகின்ற தாமுவின் பணம். அவன் வாய்க்கு வந்த வார்த்தைகள் மாறின.

    “சில்லறை இருக்கா…?”
    “இம்மாங் காத்தாலே சில்லறை கேட்டா எப்பிடி?”
    சிவாவின் கண்கள் கயிற்றில் கிளிப் மாட்டித் தொங்கிய அந்த வார நந்தவனத்தைப் பார்த்தன.
    “சரி… கொண்டா சார்”

    கடைக்காரன் கல்லாவுக்குள் ரப்பர் ‘பேண்டு’ போட்டுக் கட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணினான்.
    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாமுவிடம் வெளிப்பட்ட விரக்தி இப்போது வெகுதூரம் உலவித் திரும்பிய எதிரொலி போல் கேட்டது.

    “ஐ ஆம் நோபடி!”
    “தட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி”
    ரூபாய் நோட்டுக்களை வாங்கி எண்ணுவதற்கு முன் பஸ் வந்துவிட்டது.

    சிவா பாய்ந்து பஸ்ஸில் ஏறினான். அவன் எங்கே நின்றான். எப்படி இடம் படித்தான்…டிக்கெட் வாங்கினான்… எதுவும் அவன் மனசில் பதியவில்லை.

    பஸ்ஸின் நெருக்கடியில் அவன் பாதிக்கப்படவில்லை. அம்மாவை நினைத்தான். வெற்றிவேலை நினைத்தான். அப்புறம் அப்பா ஞாபகம் வந்தது. நான் எழுத்தாளனாகி விட்டேன் என்றால் அவர் என்ன நினைப்பார்?

    அவர் ஞாபகம் வந்து எத்தனை நாள் ஆகிறது?

    சென்னைக்கு வந்தபின் எட்டு மாதங்களிலும் ஒருமுறை கூட அவனுக்கு அவரை நினைக்கிற வாய்ப்பு ஏற்படவில்லை.
    இப்போது அவரைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது.

    கண்டக்டர் விசில் ஊதியதும் தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துவிட்டது என்று விழிப்புற்றான்.

    Share
  • ஐந்து கை ராந்தல் (2)

    வையவன்
    2
    “அக்கா”
    “ம் ம் ம்”
    “அக்கோவ்”
    “கேக்குது.. சொல்லு”
    “ஷூ இல்லாமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.”
    “ப்ரேவோ”
    “நெஜம்மா சொல்றேன்!”
    “நானும் நெஜம்மாதான் பாராட்டறேன். உள்ளிருப்பு வேலை நிறுத்தமோ!”
    “ஆமாம்”
    “சரி… ஒடனே கவனிக்க வேண்டியதுதான்…”
    “……”
    “என்ன ஷூ சார் ஒங்களுக்கு வேணும்?”
    இடையில் இட்லிப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து மூடும் ஒலி.
    “அம்பாஸிடரா… கட் ஷூவா.. கமாண்டரா… கான்வாஸ் ஷூவா… ஒனக்கு எது வேணும்?”
    வேறொரு குரல் குறுக்கிட்டது.
    “திஷ்யா… டிபன் ரெடியாம்மா”
    “இட்லி வெந்துகிட்டிருக்குப்பா”
    இடைவெளி விட்டுப் பின் ஒரு வயசான கரகரத்த குரல் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தது.
    “காக்கக் காக்க கதிர்வேல் காக்க…”
    “அக்கா, ஒனக்கு கேலியா இருக்கா?”
    கடுகு பொரிந்தது. தாளிதம் மணந்தது.
    “நீ ஒரு ஜோக் அடிக்கும்போது நான் அடிக்கக் கூடாதா?”
    “ஷý கேக்கறது ஒரு ஜோக்கா? நீ கூட போன வருஷம் வரிக்கும் ஒரு ஸ்டூடண்ட் தானே! எல்லாப் பெண்களும் ப்ளஸ்-டூ க்ளாஸ்லே வாட்ச் கட்டிக்கிட்டு வர்றாங்கன்னு நீ என்ன அடம்பிடிச்சே! இப்போ நான் கிரிக்கெட் ப்ராக்டிஸ் வேற பண்றேன்.”
    “நான் ஒரு சின்ன அட்வைஸ் தரட்டுமா?”
    “ஷý”
    “மொதல்ல இதக் கேளு.”
    “சொல்லு”
    “ஷý இல்லாமே ஸ்கூலுக்குப் போக அவமானமா இருந்தா போகாதே.. நின்னுடு.. பொட்டலம் கட்டப்போ.. சுண்டல் வித்துப் பார்… கிரிக்கெட் கத்துகிட்டு நீ டெஸ்ட் மாட்ச் விளையாடப் போறதில்லே!
    வேலைக்கு அலையறப்ப பிச்சைக்காரன் நோட்டீஸ் நீட்டறா மாதிரி நீ ஸ்போர்ட் சர்ட்டிபிகேட்டைக் காட்டறதைவிட சுண்டல் விக்கறது மேல்.”
    “அக்கா…”
    “இரு… இரு… நான் முடிக்கல்லே… நீ ஏன் ரிஸ்ட் வாட்ச் கட்டிக்கிட்டேண்ணுதான் கேட்கப் போறே….? நான் நர்ஸ் ட்ரெயினிங்கை மனசிலே வச்சிகிட்டுதான் அதை வாங்கணும்னு அடம் பிடிச்சேன்! இப்ப எல்லாமே எவ்வளவு பெரிய மடத்தனம்ணு தெரியுது!”
    நடுவிலே ஓர் அபாய அறிவிப்பு கிறீச்சிட்டது. சீதா கத்தினாள்.
    “அக்கா… இந்த ஆனந்து என் கலர் பாக்ஸை எடுத்துணு தரமாட்டேங்கறான்.”
    திஷ்யாவின் கவனம் ஆனந்துக்குத் திரும்பிற்று.
    “ஆனந்து… கீதா கலர் பாக்ஸ் அழுக்கு… கோரம்.. உவ்வே… ஒனக்கு வேண்டாம்டா கண்ணு…”
    “நான் தரமாத்தேன்… எனக்கு அவளுக்குதான் ஓணும்… உவ்வேதான் ஓணும்”
    “அப்ப சரி… அதை நீயே வச்சுக்க… சீதா நான் ஒனக்கு பளபளாண்ணு கோல்டன் கலர்பாக்ஸ் வாங்கிக் குடுக்கறேன்… என்ன?”
    “எனுக்கு?”
    “ஒனக்குதான் உவ்வே

    போதுமே”
    “வாந்தாம்… எனக்குத்தான் கோத்லன் கலர் பாக்ஸ்… இது கோரம்… ஆயி…”
    “அம்மாடி… அக்கா, நீ ஜீனியஸ்”
    “ஒன் சர்டிபிகேட் போதும். கொழந்தையே எதிரிலே வச்சுகிட்டு கலர் பாக்ஸை ஏன் காட்டறே…?”
    “ஸாரிக்கா”
    “அக்கா…”
    “என்ன பிரேம்?” ஆயாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கேட்டாள் திஷ்யா.
    “நீ சுண்டல் விக்கச் சொல்றியே… விக்கறேன்… பண்ணித் தர்றியா?”
    “ஓ… எஸ்…”
    “திஷ்யா…”
    “வாங்கப்பா டிபன் ரெடி”
    “இன்னிக்கு டி.எம்.ஓ. இன்ஸ்பெக்ஷன்! வந்திருக்கிற ஆள் கிங்கரன். கம்பவுண்டர்னாலே எரிச்சலாம். ஸ்டாக் ரிஜிஸ்டரைக் குடை குடைண்ணு குடையறானாம். சாப்பாட்டுக்கு வர டயம் இருக்காது. வார்டு பாயை அனுப்பறேன். நீ கொடுத்து அனுப்பிச்சுடு”
    “சரிப்பா… நீங்க வாங்க”
    திஷ்யாவுக்கு குரல் தாழ்ந்தது.
    “டேய் பிரேம், ஒன் ‘பிரச்னை’ புரியுது. கீழ்ப் போர்ஷன் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போறதாம். வாட்ச் ஒண்ணு வேணும்னாங்க. என் வாட்சைக் காட்டினேன். பிடிச்சுப் போச்சாம். ஒண்ணாந்தேதி பணம் தருவாங்க. அப்பறம் நீ ஷý வாங்கலாம்.. ரைட்டா?”
    “ரைட்… ரைட்… டபிள் ரைட்…”
    “அப்ப தட்ட எடுத்துட்டு வந்து நீயும் உட்காரு… ஸ்கூலுக்கு டயம் ஆகப்போறது”
    சிவா வெகு நேரமாக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தான். பக்கத்துப் போர்ஷனில் நடந்த ஒலிச் சித்திரம் நின்று விட்டது. மாடிப்படி ஏறியதும் நேர்க்குத்தாகத் தெரியும் சமையல் அறையில் அவன் காதில் பக்கத்துப் போர்ஷன் சங்கதிகள் ஒட்டுக் கேட்காமல் தானாகக் காதில் வந்து விழுந்தன.
    இந்த திஷ்யாவுக்ள் எத்தனை திஷ்யாக்கள்.
    சண்டைக்காரி… சமாதான விரும்பி… சைக்காலஜிஸ்ட்… ராஜதந்திரி…
    இந்தப் பாராட்டை அவளிடமே வாய்விட்டுச் சொல்லத் தோன்றியது. சொன்னால்?
    முந்தானையை விசுக்கென்று வரிந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டுக் கொண்டு சூடு பறக்க திஷ்யா முறைத்து நிற்கும் ஒரு காட்சியை அவன் கற்பனை செய்தான்.
    “இப்படித்தான் ஐஸ் வைக்க ஆரம்பிக்கறது. பூ சுத்தி விட்டு லவ்வுண்ணு வந்து அசடு வழிய வேண்டியது!”
    வாணலியில் காய்ந்த எண்ணெயில் அவன் சிதறிய நீர்த்துளி ஆக்ரோஷமாய்ச் சீறிற்று. சிவா கடுகைத் தூவினான்.
    “இது காதலா?”
    அட கஷ்டகாலமே.. அந்தக் கேள்வியை நிஜமாகவே திஷ்யா கேட்டு விட்ட மாதிரி சிவா மிரண்டான்.
    “டூ ஐ லவ் ஹர்?”
    என்ன சனியன் இங்கிலீஷ் வேண்டியிருக்கிறது. நான் அவளைக் காதலிக்கிறேனா?
    கடுகு கருகிவிட அரிந்த வெங்காயத்தை சிவா அதில் கொட்டினான்.
    ரஷ்ய நாவலாசிரியர் டர்ஜனீவின் கதாநாயகன் மாதிரி தான் கொண்டிருப்பது காதல் தானா என்று அலசுகிற வியாதிக்குத் தான் ஆளாய் விட்டது அவனுக்கே விநோதமாக இருந்தது.
    டாங்.. டாங்.. என்று கூடத்துக் கடிகாரம் மிலிட்டரிக் கண்டிப்போடு ஒன்பது அடித்தது.
    பத்தரைக்கு இண்டர்வ்யூ. இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பல்லவன் பிடித்து வேர்த்து விறுவிறுத்து பல்லைக் காட்டத் தயாராக வேண்டும்.
    இன்னும் ‘சிக்கன்’ தயாராகவில்லை. அவனுக்கு இருக்க நிழலும் உண்ணச் சோறும் ஒரு விலாசமும் தந்திருக்கும் தாமுவுக்கு இந்த ‘சிக்கன்’ பிடிக்க வேண்டும்!
    காலையில் எழுந்ததும் அவன் எங்கே போனான்?
    சிவாவின் மனசு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மீண்டும் காதலுக்கு வந்தது.

    திருப்பத்தூரில் கல்லூரி வாழ்க்கையில்… மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில்… நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அசட்டுத்தனங்களும் துணிச்சல்களும் நினைவு வந்தன.
    கான்வெண்ட் விடும்போது… சினிமா விடும்போது… ஆரம்பிக்கும்போது… கோவில் வாசலல்… எவ்வளவு அசட்டு மூட்டைகள்… எத்தனை பரிதாப ரகங்கள்.
    கடைசியில் அவர்களிடமிருந்து விலகி விலகி இப்போது நானும் அதற்கு ஆட்பட்டு விட்டேனா?
    தெரியவில்லை.
    நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேலை இல்லை.
    வேலை இல்லாத ஒவ்வொருத்தனும் கொஞ்சம் காதல் பண்ணிக் கொண்டிருப்பான். வேலை கிடைத்ததும் எல்லாம் சரியாகிவிடும்.
    வேலை என்ற எண்ணம் ஒரு பந்தயக் குதிரை மாதிரி ஓடி வெற்றிக் கம்பத்தின் அருகே நின்றது.
    சர்ட்டிபிகேட்டுகள் அரைக் கிலோ தேறும். அந்தப் போட்டியில் முதல்… இந்தப் போட்டியில் இரண்டாவது அந்த கேம்ஸ்… இந்த ஸ்போர்ட்ஸ்…
    சிவாவுக்கு அவற்றின் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. தாமுவின் சிநேகிதி பிரீதா ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொடுத்திருந்தாள். அமைச்சரின் பி.ஏ.வுடைய ஆசை நாயகிக்கு பிரீதா தங்கள் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் பிரசவம் பார்த்திருந்தாள். கஷ்டமான கேஸாம். அவளது வாஞ்சையான சிகிச்சைக்குக் கிடைத்த சின்ன வெகுமதி அது.
    அதை வாங்கிக் கொள்ள முதலில் அவனுக்குப் பிடிக்கவில்லை.
    “இதாணு லோகம்” என்று அவன் கையில் திணித்தாள் பிரீதா.
    அதை வாங்கும்போது அவன் கை தயங்கியது.
    வெற்றிவேல் நினைவு வந்தான்.
    ‘மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்களென்றால்என் கூட வெளியினில் வாருங்காணும்?’ – என்று டெஸ்கின் மீது இரண்டு கைகளால் தாளம் தட்டிக் கொண்டு அவன் பாடும் பாட்டு நினைவு வந்தது.
    வெற்றிவேல்… மன்னித்துக் கொள்… நீயும் நானும் மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்கள்தான்…
    இப்போது சிங்கங்களை மதிப்பவன் இல்லையடா… சிங்கங்கள் அசட்டு மிருகங்கள் என்று உதறிவிட்டு ஜனம் பறக்கிறது. சிங்கத்தைவிட சிங்க மேக்கப்தான் இப்போது கவர்ச்சி…
    அரைத்த மசாலாவை எண்ணையில் வெந்து கொண்டிருந்த சிக்கனில் கலந்து கொண்டே உள்ளூர சிவா தொலைதூரத்தில் இருந்த வெற்றிவேலிடம் மன்னிப்புக் கோரினான்.
    ராயப்பேட்டை ஹைரோடில் ஒரு மாவு மிஷின் கிறீச்சிடுகின்ற ஒலி காற்றில் மிதந்து வந்தது. அந்த ஓசை. மாவை அரைத்து முடித்துவிட்டு கைப்பிடிச் சக்கரத்தை சுழற்றிவிடும் அந்த ஓசை அவனுக்குப் பிடிக்கும்.
    திருப்பத்தூர் முதலியார் ரைஸ் மில்லின் ஓசையில் ஒரு பாராயண ஒலி கேட்டும்.
    அதை நாராயண நாமமாகெ நனைத்துக் கொண்டே தவிடு விடுவாள் அம்மா.
    அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் கர்ண கடூரமாகக் கிறீச்சிடும் அந்த ஓசை பழகிப் பிடித்து விட்டது.
    எதுவெல்லாம் மனிதனுக்குப் பிடித்து விடுகிறது!
    பிடிப்பதற்குப் பழக்கம்தான் தேவையோ! இடை விடாத பழக்கம். அப்புறம் லயிப்பு. இப்போது திஷ்யாவிடம் லயிக்கிற மாதிரி. தின்று தின்று தின்றதையே மீண்டும் தின்கிற வேட்கை மாதிரி.. தாமுவுக்குப் பிடித்த சிக்கன் மாதிரி… தாமுவுக்குப் பிடித்த பிரீதா மாதிரி…
    தாமுவுக்கு பிரீதா ஒருத்தி தானா? எத்தனையோ…? மீண்டும் மீண்டும் இந்தப் பெண்களிடம்… அவ்வப்போது ஒவ்வொருத்தியுடன் தாமு எதைத் தேடுகிறான்? என்ன கண்டுபிடிக்கிறான்?
    ‘சிக்கன்’ மணம் கும்மென்று வந்தது.
    போன வாரம் தான்செய்தது ‘டாப்’ என்று தாமு பாராட்டிய ஞாபகம் வந்தது. இன்றைக்கு அப்படி இருக்குமா?
    போன வாரத்தின் சுவை… அதற்கொரு மறுபதிப்பு… மீண்டும் ஒரு புதுப்பதிப்பு…
    பழக்கம் என்ற பாதையில் மனதனின் மனச் சக்கரம் முன்னும் பின்னும் பின்னும் முன்னும் விடுதலை இல்லாமல் ஓடி அதற்குச் சுகம் என்று அர்த்தம் கற்பித்துக் கொள்கிறதோ!
    சுகம்…அது என்னவென்று இன்னும் முழுக்கப் பரிச்சயமாக வில்லை.
    கெரஸின் தீர்ந்து வருவதால் ஸ்டவ்வில் ஒலி குறைந்தது. அடுத்த வாரம் காஸ் அடுப்பு வந்து விடுமென்று தாமு சொல்லிக் கொண்டிருந்தான்.
    சுகம் என்பது கெரஸின் அடுப்பிலிருந்து காஸ் அடுப்பில் சமைக்கும் மாற்றமா?
    சுகம் தெரியவில்லை. துக்கம் தெரிந்தது. பளு தெரிந்தது.
    என்ன படித்து என்ன பட்டம் வாங்கி என்ன பயன் என்ற உழற்சியில் நெஞ்சை ஏதோ ஒரு பாறாங்கல் அழுத்திற்று.
    ரைஸ் மில்லின் தவிட்டு நெடியிலிருந்து இம்மி இம்மியாக அம்மாவின் நுரையீரல்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்த வியாதியிலிருந்து அவளுக்கு ஒரு சிறை மீட்சிக்கு வழியில்லை.
    ஒண்ட இடம் தந்து உணவளிக்கும் தாமுவுக்கு இன்னும் சோற்றுச் சுமையாயிருப்பதிலிருந்து விடுதலையில்லை.
    “ஸார்…ஸார்”
    வெளியே ஓர் அதிகாரக் குரல்.
    அவன் எழுந்து வருவதற்குள் மீண்டும் ஓர் அவசரம்.
    “வீட்லே யாரு?”
    சிவா லுங்கியை இறக்கிவிட்டு வெளியே வந்தான் தந்திச் சேவகன் கேசவன்.
    “ஹலோ நீங்களா சார்?…இங்கியா இருக்கீங்க?”
    சிவா புன்னகையுடன் தலையசைத்தான்.
    “போன மாசம் அனுப்பிச்சீங்களே கதை… அது வந்துடுச்சா சார்”
    கதையைப் போஸ்ட் செய்யும்போது அவன் பார்த்தான்.
    “இன்னும் வரலியே…”
    “வந்தா எனக்கு பத்திரிகையைக் கொடுங்க சார்”
    “வந்தாதானே… ஓ”
    “டெலிகிராம் சார்.”
    “பேரு”
    “ஜே. தாமோதரன்”
    “அவர் வெளியே போயிருக்காரே”
    “நீங்க ஸைன் பண்ணி வாங்கிக்குங்க”
    சிவா கையெழுத்திட்டான்.
    மதன பள்ளியிலிருந்து வந்த தந்தி. தாமுவின் அப்பா அடித்திருக்க வேண்டும்.
    எப்போதோ பார்த்த அவர் போட்டோ மனசில் ஒரு ‘ப்ளாஷ்’ அடித்துவிட்டுப் போயிற்று.
    இருபுறமும் ஒதுக்கிவிட்ட கிருஷ்ண தேவராயர் மீசை. கண்ணில் இன்னும் ஜமீன் மிடுக்கு. இறுகிய கீழுதட்டில் ராஜரீகம்.
    ஜமீன் போய்விட்டது.
    ஜமீன் வம்சக் கொடியில் பீட்டர்ஸ் ரோடில் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தும் மெக்கானிக் முளைத்தாயிற்று. இன்னும் மிடுக்கு போகவில்லை.
    தர்மராஜ ரெட்டிகாரு உடம்பில் ஓடும் அதே ஜமீன் ரத்தம் தாமுவிடமும் ஓடுகிறது. அதே ராஜரீகம்.
    நான் தான் என் ஹீரோ. இதே செய்திதான் அவனிடமும் ஓடுகிறது.
    தாமு மதனபள்ளி மண்ணை உதறி எட்டு வருஷமாகப் போகிறது. நூற்றுப் பதினெட்டு ஏக்கர் நிலத்தை தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக உதறிவிட்டு சென்னைக்கு வந்தவன் தாமு.
    ராயப்பேட்டையில் மட்டுமல்ல, சென்னையில் பல பகுதிகளில் காரும் ஸ்கூட்டரும் வைத்திருப்பவர்கள் தாமுவுக்குப் புன்னகையுடன் கை உயர்த்துகிறார்கள்.
    அவனது ஒர்க்ஷாப்பில் கார்களும் வேன்களும் கியூவிலே காத்திருக்கின்றன.
    சிவா வந்த எட்டு மாதத்தில் எத்தனையோ மதன பள்ளிக்காரர்கள் தாமுவைத் தேடி வந்து போயினர். தர்மராஜ ரெட்டிகாரு வந்ததில்லை.
    மகனின் பாதை சரியாயிருக்கும் என்ற எண்ணமா? அல்லது வெறும் மோட்டார் மெக்கானிக் என்ற இளக்காரமோ?
    எவனானால் என்ன?
    வெற்றிவேல் பாடுவது மாதிரி ஆண்பிள்ளைச் சிங்கம்.
    மரியாதை அவனைத் தேடிவரும். பிரீதா மாதரி… பல பெண்கள் மாதிரி.
    பிரீதாவும் தாமுவும்…
    ஒழுக்கத்தின் எந்த அளவு கோலை வைத்து அவர்கள் உறவை அளப்பது?
    அவன் அங்கே ராத்தங்குகிறான்… அவர்கள் இருவரும் விஸ்கி குடிக்கிறார்கள்.
    இப்படி ஒருத்தியல்ல பலர் உண்டு என்று தர்மராஜ ரெட்டிகாருவுக்குத் தெரியுமா?
    இந்த தந்தி என்ன சொல்ல வந்திருக்கிறது?

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல்

    வையவன்

    என்னுரை

    தனி மனிதன் X சமூகம்
    லட்சியம் X நடைமுறை
    கருத்துக்கள் X செயல்கள்
    சத்தியம் X கலைப்படைப்பு

    இந்த முரண்பாடுகள் மனித சமூகம் தோன்றியது முதல் தொடா்பவை. ஒரு நூற்றாண்டு மாறும்போது இவற்றின் கூா்மை மாறுபடுகிறது.

    ஒரு பொது நோக்கில் இவை ஒன்றுடன் ஒன்று மோதும் முரண்பாடுகளாகத் தோற்றம் அளிக்கலாம். தீர யோசித்தால் இவை ஒவ்வொன்றும் அதன் எதிர்மறையாகத் தென்படும் மற்றொன்றின் உந்து சக்தியே என்பது தெரிய வரும்.

    ஒன்று மற்றொன்றினை முழுமைக் கூறாக்கும் (Complementary) சங்கிலியே என்று அறியலாம்.

    இந்த முரண்பாடுகள் இன்றி எந்த நாவலையும் எழுதுவது சாத்தியமில்லை. சார்ந்திருக்கும் நிலைகளில், எழுதும் நோக்கத்தில் தான் வேறுபாடு.

    மக்களை அந்த நேரத்தில் மகிழ்விப்பது. இதுவே பல நாவல்களின் நோக்கம். சில நாவல்களுக்கு வெவ்வேறு உத்தேசங்கள்.
    அந்தச் சிலவற்றிலும் கருத்துக்கள் பேசும் வகை ஒன்று. பேசாத வகை ஒன்று. இந்த நாவல் இரண்டாம் வகை.
    இன்று கேலிக்குரியதாகக் கருதப்படும் தேசபக்தி (பயப்படாதீா்கள், இது சுதந்திரப் போராட்ட நாவல் அல்ல) எனக்குள் ஆழ்ந்து வேரோடி விட்டது. ஒரு கையறு நிலைதான் (Helplessness). அந்த களத்தில் விளைந்த கருத்துக்கள் இந்த நாவலில் வெயில் காய்கின்றன.

    எத்தனை வெடிகுண்டுகள் எங்கெங்கே வெடித்தாலும் என்னுள் இருந்து நீங்க மறுக்கிற தேச பக்தி, இந்த நாவலில் சில கருத்துக்களைச் செயல்வடிவமாக்கிய ஒரு மனிதனைச் சிருஷ்த்திருக்கிறது. இதுவே நான் வழங்க விரும்பும் வாக்குமூலம்.

    முதற்பாகம்

    உலகம் எத்தனை பரிணாம கதிகளைக் கண்டிருக்கிறது? யுகத்திற்கு ஒரு தரம் இயற்கையும் எத்தனை ஜீவராசிகளை உற்பத்தி செய்து அவற்றிற்குப் புதிய புதிய வளா்ச்சிகளைக் கொடுத்திருக்கும்?

    முடிவற்ற இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் புதிர் தான் என்ன?

    ஜனன மரணம் என்ற தொடா் நிகழ்ச்சியில், அா்த்தங்களையும் அனுபவங்களையும் தேடுவதுமான – வாழ்க்கை என்ற – இந்த மாயமான வேட்டை எதைக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

    இதன் ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே?

    கன்யாகுமரிக் கடற்கரை.

    சித்ரா பௌர்ணமிக்கு முந்திய தினம். பதினாலாம் பிறை.

    யாருமற்ற அந்த நெடுமணற் பரப்பில், மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு, கால் சட்டையும் அரைக்கைச் சட்டையும் அணிந்தவாறு, எதிரில் அலை மோதுகின்ற சமுத்திரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ரகுநாதன்.

    புதிர்களில் எல்லாம் பெரும் புதிர் போன்ற அந்தச் சமுத்திரம் அவனது சித்த வெளியில் எண்ணிலா அலைகளை எழுப்பி விட்டது.

    வானிலே அமுதகலசம் வைத்தாற் போன்ற நிலவு. மத்தியானமெல்லாம் தகித்த வெயிலின் கொடுமை, ஒரு துா்க் கனவு போல் நீங்கி, விறுவிறுப்போடு காற்று வீசிக் கொண்டிருந்தது.

    ரகுநாதன் மெல்லக் கரையோரமாக நடக்கத் தொடங்கினான்.

    எல்லையற்ற அந்தச் சமுத்திரவெளி, அதில் பொதிந்த மகத்தான அா்த்தங்கள்.

    ஓங்கார கர்ஜனைக்குள்ளே – அந்த ஓசைகளின் கா்ப்பக்கிரகத்தில் கொலு வீற்றிருக்கும் அந்த மஹா சாந்தியையும் நிதானமாகத் தரிசித்துக் கொண்டிருந்தான் ரகுநாதன்.

    மனத்தின் அடிவாரத்தில் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. சந்திர ஒளியின் வெள்ளி ஜரிகைகள், ஆா்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் மேலே கண்ணின் எல்லை வரை சிந்தி இருந்தன.

    ஜலப் பரப்பில் அங்கங்கே சின்னஞ்சிறு தீபங்கள் வைத்தது போல் ஜொலிப்பு…அலைகள்…சீறும் அலைகள்…ஓங்கி எழுந்து விஸ்வரூபம் காட்டும் அலைகள்…

    தணிந்து தலை குனிந்து புதிய மனைவியைப் போல், நாணத்துடன் கரையை முத்தமிடும் அலைகள்… தாயின் அணைப்பை நாடி ஆவேசத்தோடு வருவது போன்ற அலைகள்.

    ரகுநாதன் வானை நிமிர்ந்து பார்த்தான்.

    மேலே நிலவிய நிலவு வெளிச்சம்! குழந்தையின் விளையாட்டைப் புன் சிரிப்போடு பார்ப்பது போல் வானம் சாந்தமாக இருந்தது.

    ஆறடி உயரமுள்ள அந்த ஆஜானுபாகுவான உடல், நிலவெரியும் வானின் கீழ் கடலின் முன்னால் மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அந்தக் காட்சி, மனித குலத்தின் லட்சியம் ஒன்று இயற்கையின் முன்னே ஒரு வெற்றிச் சின்னம் போல் நிற்பது போலிருந்தது.

    ரகுநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் என்பதையும், நண்பா்கள், உல்லாசப் பயணம் என்ற உலக ஞாபகங்களையும் ஒரு கணம் மறந்தான்.

    இரண்டு கடல்கள் ஒரு மகாசமுத்திரத்தின் மடியில் ஐக்கியமாகி நிற்க, தொண்ணூறு கோடி மக்களின் ஜன்ம பூமியான ஒரு தேசமே – அவா்களது நிலைக்களமான ஒரு மாபெரும் தேசமே அந்தச் சங்கமத்தை மௌனமாகச் சந்தித்துக் கொண்டிருப்பது போல் ஓா் நினைவு அவன் நெஞ்சில் மூண்டது.

    அவன் மெல்லக் கண்களை மூடினான்.

    ஒவ்வொரு தரமும் வீசிய காலத்தின் அலைகளால், இந்த தேசத்தின் மீது வந்து குவிந்த மாற்றங்கள், ஒவ்வொரு அலையும் எழுதி விட்டுச் சென்ற நாகரிகச் சின்னங்கள்.

    இதன் உயா்வு தாழ்வு மாண்புகள், சீா்கேடுகள் யாவற்றையும் இதோ ஆா்ப்பரிக்கும் இந்தச் சமுத்திரம்…இதே வானம்….இவை பார்த்துக் கொண்டே இருந்தன என்று எண்ணுவதில் ஓா் இணையற்ற சோகம் நெஞ்சில் மூள்கிறது.
    திடீரென்று விர்…விர்ரென்று விசில் ஊதும் ஓசை கேட்டதும்தான் அந்த மனோ நிலை கலைந்தது. விசிலின் ஒலி நாலா பக்கத்திலும் பரவிக் கேட்டது.

    “தன்னைத் தேடுகிறார்கள்!”

    ரகுநாதன் தனது நினைவுகளிலிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்தான்.

    கால்கள் கடற்கரை மணலில் நெறிய நடப்பது சுகமாக இருந்தது. மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் காந்தி நினைவு மண்டபம்.
    வலது புறமாக கடலின் எதிரே அரங்கம் கட்டியது போன்ற ஒரு கல் மண்டபம். எங்கும் ஆள் சந்தடியே இல்லை. தூரத்தில் கேட்கும் விசிலொலி. அலையோசையில் கரைந்து கனவில் எங்கோ கேட்பது போல் தொனித்தது.

    கையை வீசி வீசி ஆட்டிக்கொண்டே, புரொபஸா் ராமபத்ரன், ஒா்க்ஷாப் போர்மனுடனும், குரூப் கேப்டன் பாலுசாமியுடனும் வந்து கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

    ரகுநாதன் அவா்களை எதிர் கொள்வதற்காக வேகமாகச் சென்றான்.

    “இட் இஸ் வெரி ரெக்லெஸ் மிஸ்டா் ரகுநாதன்!” என்று சூடாக ஆரம்பித்தார் ராமபத்ரன்.

    “ஸாரி சார்….!” என்று அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஆளுக்கொரு பக்கமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

    “நீங்கள்ளாம் கொயந்தைங்களா சார், ஒரு வாட்டி ரெண்டு வாட்டி சொல்லிச் சொல்லி அய்வுறதுக்கு! இம்மா ராத்திரியிலே தன்னந்தனியா இப்படி வந்து நிக்கறீங்களே இல்லே எதினாச்சியும் ஒண்ணு அசந்தா்ப்பமா நடந்துச்சுன்னா ஆா் சார் ஜவாப்பு?” போர்மன்.

    “என்னப்பா ரகு, எல்லாப் பாவியும் நிம்மதியா தூங்கறானுங்க. மோகினிப் பிசாசு மாதிரி இந்த நடு ராத்திரியிலே இங்கே நின்னுட்டு இருக்கறியே, நாங்க அங்கே என்னா அலை அலைஞ்சுகிட்டிருக்கோம் தெரியுமா? போன மனுஷன் என் கிட்டேயாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக் கூடாது?” – பாலுசாமி.

    “மிஸ்டா் ரகுநாதன்; நாங்கள்ளாம் குடும்பஸ்தா்கள். இப்படிப் பொறுப்பில்லாமே நடந்து எந்த விபரீதமாவது ஆயிட்டா என்ன ஆகும்னு யோசிக்க வேண்டாம்” – பாலுசாமி.

    தனது செய்கைக்கு வருந்துவது போல் ரகுநாதனின் பரந்த முகம் சற்று இருண்டது.

    தலை குனிந்தவாறே “ரொம்ப ஸாரி, மன்னிச்சுக்கோங்க!” என்றான்.

    எதையோ உணா்ந்த ராமபத்ரன் சட்டென்று சாந்தமடைந்தார்.

    “நோ… நோ… இட் ஈஸ் நாட் எ கொஸின் ஆஃப் ஃபர்கிவிங்! நீங்களா தெரிஞ்சுக்கிட்டா சரி தான்” என்று அடங்கிய குரலில் சொன்னார்.

    அவரது முகம் சற்று சங்கடப்பட்டது.

    “சரி… சரி! போகலாம் நடங்க சார்” என்று போர்மேன் முனுசாமி சொல்லவும், நால்வரும் கடற்கரையிலிருந்து மாணவா்கள் தங்கியிருந்த சத்திரத்திற்கு நடந்தனா்.

    வழியில் சிறிது நேரம் வரை அந்த நிகழ்ச்சியின் வெப்பம் தணிய, எல்லோரும் மௌனமாக நடந்தார்கள். பாலுசாமி தான் முதலில் ஆரம்பித்தான்.

    “மூன்லைட் ரொம்பப் பிரமாதம் சார்! வழியெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்த அரட்டையையும் கூத்தையும், கடற்கரையிலே வச்சுக்கிட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”

    “எங்கே சார்! அதான் வந்ததுமே ஓஞ்சிப் போயி படுத்துக்கினீங்களே!”

    “ரகு. பரவாயில்லே சார், கடற்கரை நிலவை ரொம்ப அனுபவிச்சிருக்கான். கட்டைப் பிரம்மசாரிகள் கடற்கரை நிலாவை ஒரு வேதனையோட தான் அனுபவிப்பாங்க! ”

    “அது உன் மாதிரி ஆசாமிக்கு, ரகுவுக்கு வேறே ஏதாவது பெரிய ஃபீலிங் உண்டாகியிருக்கும். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டா் ரகு?” பேச்சாகிய சொக்கட்டானை, ரகுவை சமாதானப்படுத்துவதற்காக நகா்த்தினார் ராமபத்ரன்.

    “ஊஹும், அப்படியென்ன பிரமாதமான உணா்ச்சிகள் சார்! கடலும், காத்தும், நிலவும் நல்லா இருந்தது. அதான் அப்படியே நினைவு மறந்து நின்னுட்டேன். நேரம் ஆன ஞாபகமே இல்லை. அதனாலே தான் ஒங்களுக்குத் தொந்தரவு. ”

    “இல்லை மிஸ்டா் ரகு! நீங்க அதை தப்பா ஃபீல் பண்ணவே வேண்டாம். மத்தவங்களை விட ஒங்களை எனக்கு நல்லாத் தெரியும். வழியெல்லாம் கரெக்டா நடந்துட்டு இங்கே இந்த எடத்திலே இப்படி நடந்ததாலே, இந்த எடம் ஒங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன் பரவாயில்லே.”

    “எல்லாம் நிம்மதியாத் தூங்கறானுங்க….நாம்ப நிலாவையும் அனுபவிச்ச பாடில்லை… தூக்கத்திலேயும் சிவராத்திரி. ”
    “அடடா, பாலுசாமி, அதான் பஸ்ஸிலே வழியெல்லாம் துங்கிட்டு வர்றலே. என்னய்யா ஓயாமே பேசிகிட்டு போரடிக்கிறே!”
    “ஒங்களுக்கென்ன சார், நீங்க குடும்பஸ்தர்! எங்களைச் சொல்லுங்கோ?” என்று உஸ்ஸென்று பெருமூச்சு விட்டு ஆயாசப்பட்டுக் கொண்டான் பாலுசாமி. அரட்டைக் கலைஞன் அவன்.

    “யூ ஸ்கௌண்டிரல்” என்று அவன் காதைச் செல்லமாக முறுக்கியவாறே சிரித்தார் ராமபத்ரன்.

    காலேஜ் டூா் என்றால் மாணவா்களோடு அவரைத் தான் சோ்த்து அனுப்பி வைப்பார்கள். நிறையச் சுதந்திரம் கொடுப்பார்.
    எந்த இடத்தில் கட்டி மேய்க்க வேண்டுமோ அங்கே கறாராகவும் இருப்பார்.

    ‘ஊ ஊ’ என்று கத்தினான் பாலுசாமி.

    “இவரைப் போய் குரூப் கேப்டனாகப் போட்டிருக்காங்களே” என்று கையை விரித்துக் கொண்டு அங்கலாய்த்தான் போர்மேன் முனுசாமி.

    ரகுநாதன் புன்னகையுடன் நடந்தான். லாட்ஜ் நெருங்கவே எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்.

    லாட்ஜிற்குள் பெட்ஷீட்டும் ஹோல்டாலுமாக மூலைக்கொருவா், ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருப்பது போல் படுத்திருந்தான்.

    ஒவ்வொருவரும் ஓா் உலகம்; குறும்பு, கிண்டல், சர்ச்சை, உல்லாசம், அபிப்ராயம், ஆசைகள், உள்ள உலகம். ரகுநாதன் பறவைக் கண்ணோட்டம் விட்டான்.

    வாழ்க்கை ஆச்சரியமாக இருந்தது. அற்புதமாக இருந்தது. எத்தனையோ இரவுகளில் தூங்குவதில் அவா்கள் ஆழ்ந்து கிடப்பதை ரகுநாதன் பார்த்ததுண்டு. ஆனால், இப்போது தொலைவில் ஒலி செய்யும் கடலின் குரலும், அந்த சமுத்திர தரிசனத்தால் உயா்ந்து நின்ற நினைவுகளும் சேர, தேசத்தின் தென் கோடியில் அவா்களை ஒன்றாகச் சோ்த்துப் பார்க்கும் போது புதுமையாகவே இருந்தது.

    இவா்கள் ஒவ்வொருவரும் என்ன ஆவார்கள்?

    பொதுவாக அவா்களைப் பற்றி ஏற்கனவே சில அபிப்ராயங்கள் ரகுநாதனுக்கு இருந்தன. மாணவப் பருவத்தின் வேடிக்கை, தன்னிச்சையான போக்கு எல்லாம் தெரிந்தது தான்.

    ஆனால், வீறும் பொலிவும் மிக்கதொரு புதிய எதிர்காலத்தை இந்த தேசத்திற்கு இவா்களே சிருஷ்டிக்கப் போகிறார்கள்.
    அறிந்தோ அறியாமலோ, தடுக்க முடியாத ஒரு பிரளயம் போல் ஒரு தினம் – இன்று வரை கனவிலும் நம்பிக்கையின் ஊமை ஒளியிலும் மட்டுமே நிற்கும் அந்த தினம் வரும் போது!

    இவா்களே அந்தப் புது யுகத்தின் சிற்பிகளாகப் போகிறார்கள் என்று தோன்றியதும் மார்பு விம்மியது.

    அவா்கள் அனைவரின் மீதும் அடக்க முடியாத பாசம் தோன்றியது.

    “எஸ், குட் நைட் மிஸ்டா் ரகுநாதன்!”

    “குட் நைட் சார்!”

    “ஸ்வீட் ட்ரீம்ஸ்!” என்று குறும்புக்காரப் பாலுசாமி குதா்க்கமாகச் சொன்னான்.

    “மறுபடியும் சமுத்திரக் கரைக்குப் போயிடப் போறீங்க!”

    “ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அவன் வாய் தனக்குள் மெல்ல முணுமுணுத்தது. எதிர் காலம், தேச முழுவதும் மாற்றம் பெறும் ஓா் எதிர்காலம். அதைத் தவிர வேறென்ன இனிய கனவுகள் என்று எண்ணியவாறே நரேந்திரனை நெருங்கினான்.

    தூக்கத்தில் நரரேந்திரன் வாய் சிறிது திறந்து விட்டிருந்தது.

    அவனுக்குப் பக்கத்திலிருந்த காலியிடத்தில் தன் படுக்கையை விரித்தான்.

    கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக! (May God Bless You.) என்று கோணல் கோணலாகத் தனது ஆங்கில ஞானமும் தையல் ஞானமும் சொற்பம் என்று அறிவிப்பது போல், அம்மா பின்னிய தலையணை உறை தென்பட்டது.

    அம்மா!

    அவள் எந்த நேரமும் எங்கும் என் பக்கத்திலேயே இருக்கிறாள்.

    அவளை மறந்து விடும் சந்தா்ப்பங்களில் எங்காவது எளிமையான ஆனால், தலை வணங்க வேண்டிய ஞாபகங்களுடன் அவள் தோன்றி விடுகிறாள்.

    அவனது விண்ணுயரப் பறக்கும் நினைவுகளுக்கு இறக்கைகளாக இருக்கிறாள்.

    ஞானம், உணா்ச்சி, உடல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவளே வித்தாக இருந்து அவனுள் விளைந்திருக்கிறாள்.

    ரகுநாதன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

    விடியற்காலையில் சூரியோதயம் பார்ப்பதற்காக ஒரு கோஷ்டி, தூங்கிக் கொண்டிருப்பவா்களைத் தட்டியெழுப்புவதும், கிண்டலாகப் பஜனை பாடுவதும், அமாக்களப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரகுநாதன் விழித்துக் கொண்டான்.

    நரேந்திரன், காலையிலேயே எழுந்து சமுத்திரக் குளியலுக்காக ரகுவுக்கும் தனக்குமாகத் துணிகளையும் சோப்புப் பெட்டியையும் தேடிக் கொண்டிருந்தான்.

    ஒற்றை நாடி உடம்பு, பெரிய உதடுகள், உணா்ச்சி ததும்பும் கண்கள்.

    “அடடே நரேன், என்னப்பா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே?” என்று உடலை முறுக்கியவாறே எழுந்து படுக்கையைக் சுற்றத் தொடங்கினான்.

    “அப்பப்பா, இந்த கலாட்டாவிலே தூங்கினா அது யோக சாதனை தான். சூர்யோதயம் பார்க்கணுமே அது தான்” என்று இழுத்தான் நரேந்திரன்.

    சாதாரணமாக அவன் எழுந்திருப்பதற்கு மணி ஏழரையாகி விடும்.

    “பாத்துக்கோ….பாத்துக்கோ…. நீ சூரியோதயத்தைப் பாத்து எத்தனை வருஷம் ஆச்சோ, ஏதோ கன்யாகுமரி தயவிலே…” என்று இழுத்தான் பக்கத்திலிருந்த நந்தகோபால்.

    “டேய், டேய்! நீ பெரிய இவன். இவன் எழுந்திருக்கிறப்போ பொழுது சாஞ்சு போவுது. இவன் போயி அவனைச் சொல்ல வந்துட்டான்” என்று நந்தகோபால் மூக்கை உடைத்தான் ஸ்ரீதரன்.

    புரொபஸா் ராமபத்ரன், இரண்டு மாணவா்கள் புடை சூழ மௌனமாக ஒவ்வொருத்தரையும் பார்த்து அட்டெண்டன்ஸ் குறித்துக் கொண்டார்.

    “ஹலோ குட்மார்னிங் சார். ராமகிருஷ்ணன் எங்கே சார்? காக்கா ஓட்டப் போயிட்டானா?”

    “யப்பா கிவிக் ஸாட்! வேலையைப் பாருடா” என்றான் உடன் வந்தவா்களில் ஒருவன்.

    “குட் குட்” என்று அவனுடைய “கட்டிங்” கை ஆமோதித்தார் புரொபஸர்.

    “கேரி கூப்பா்…. கேரி கூப்பா்….” என்று பூமிநாதனுடைய இடுகுறிப் பெயரை ஹைக்கோர்ட் பியூனைப் போல ஒருவன் கூப்பிட்டான்.

    “ஹலோ ரகுநாதன்”

    “குட்மார்னிங் சார்!”

    “வாட் எ ஒண்டா். நரேந்திரனா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டான்?”

    “என்ன சார் பண்றது. நாலு வீட்டுக் கல்யாண லவுட் ஸ்பீக்கர் மாதிரி கார்த்தாலேந்து ஒரே கலாட்டா”

    “குட்…. குட்” என்று அவா்களை தாண்டினார் புரொபஸா்.

    “ரகு இந்தப் பசங்களோட சேர்ந்தா சூரியோதயத்தை உருப்படியாகப் பார்க்க முடியாது. ஸோபியா லாரனும் பிரிஜிட்டி பார்டெட்டும் தான் பேசுவானுங்க. பொறப்படு சீக்கிரம்.”

    இளைஞா் பட்டாளம் வெளியே வந்தது ஒரு வழியாக.

    விடியற்காலை நேரத்தின் குளா்ச்சி. வானத்தில் சாம்பல் வெளுப்பு.

    கிழக்கே உதய ஸ்தானத்தைச் சுற்றி விசிறியது போன்ற வெள்ளை ஒளி திசைக்குக் காவிய சோபை தந்தது.

    பல ஜீன்ஸுகளுக்கும் டீ ஷா்ட்டுகளுக்கும் மத்தியில் கதா் ஜிப்பாவும் வேட்டியுமாக வித்தியாசமாகத் தெரிந்தான் ரகுநாதன்.

    அந்த இளைஞா் கூட்டத்தில் தீ நாக்கின் நிறம் போல் பளிச்சென்ற சிவப்பும், அகன்ற தோள்களும், கம்பீரமான உயரமும் முகத்தில் இரண்டு கனல் எரிவது போன்று ஆழ்ந்து ஒளி பொருந்திய கண்களும் தனித்து நின்றன.

    பரந்த நெற்றி, பழங்கால ரோமானிய சிற்பங்களைப் போன்ற முகக்கட்டு.

    அதில் தசை வலிமையின் மிடுக்கிற்குப் பதில் ஆத்ம ஒளி தவழ்ந்தது.

    நோஞ்சானாக இருந்தது, ஏழ்மை இவைகளால் பால்யப் பருவத்தில் ஒரு தாழ்வு பனப்பான்மை அவனுக்கு.

    எல்லாப் பாடங்களிலும் முதல் மார்க் வாங்கும் அவனை வஞ்சந் தீா்த்துக் கொள்ள மற்றப் பிள்ளைகள் சீண்டிச் சீண்டித் துன்புறுத்துவார்கள்.

    உடம்பு இருந்தால்?

    அந்த நாளில் ஏக்கம் மனசைக் கவ்வும். ஒரு பயில்வான் வீட்டுப் பையனுடன் சினேகம் ஏற்பட்டது.

    அவா் பஸ்கி, தண்டால், சிலம்பம் சுற்றுதல், பிடிவேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்.

    பொழுது விடிந்ததும் அவா் வீட்டுக்குத் தான் போவான். அப்படிப் பழகி வளா்த்த உடம்பு.

    காந்தி நினைவு மண்டபத்தை நோக்கி ரகுநாதனும் நரேந்திரனும் பிரிந்து நடந்தனர். சங்கு விற்கும் கடைகளும், இளநீர்க் கடைகளும் ஓரிரண்டு காலையிலேயே திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    இரவில் கேட்ட கடலின் கர்ஜனை மட்டுப்பட்டிருந்தது. விடுமுறைக் காலமானதால் நிறையப் பேர் சூா்ய தரிசனத்திற்காக அந்த விடியற் காலையிலேயே கூடி விட்டனர்.

    வடக்கத்தியக் குடும்பம் ஒன்று காதிலும் கழுத்திலும் நகைகள் தொங்க, நிறையக் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தது.

    காந்தி நினைவு மண்டபத்திற்குள் இருவரும் நுழையும் போதே, மனதில் எல்லா அலைகளும் அடங்கிய அமைதி தோன்றிற்று.

    காந்தியடிகளின் மார்பளவுச் சிலை மட்டும் வைக்கப் பட்டிருக்கும் அந்த விசாலமான கூடம். அங்கு நிலவிய மௌனம்.
    சத்தியத்தின் வெற்றி போன்ற காந்திஜியின் புன்னகை, மனித சிந்தனை அந்த மகத்தான புருஷனுக்கு நினைவுச் சின்னம் எழும்பத் தோ்ந்தெடுத்த இடம்.

    ரகுநாதனின் மனம் பொங்கி, உணா்ச்சிகள் முகத்தில் சுனை போல் பெருகின.

    மண்டபத்தின் மாடிக்குச் சென்றால் வெகு அருகில் கடலைப் பார்க்கலாம்.

    வானில் பீடிகையாக, கிழக்கே வெள்ளைப் பூச்சின் நடுவில் கணப்பு நெருப்பின் தணல் போல் ஜ்வாலை விட்டது.

    மெல்ல மெல்ல அவை பொன்னொளி பெற்றன. நீலமயமான கடல் நீரில் பொற்பாலமிட்டவாறே கதிரவன் மெதுவாகத் தலை நீட்டினான்.

    தகிக்கின்ற நெருப்புக் கோளம் ஒன்று மெதுவே “மோகனமாம் சோதி பொருந்தி முறை தவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாட” பேருண்மை ஒன்று தனக்குகந்த ராஜஸப் பொலிவோடும், ஆக்கினையோடும் எழுவது போல் அவனது உதயகதியில் ஒரு ஞான சன்னதம் வெளிப்பட்டது.

    இரு நண்பா்களும், பேச்சற்று அவனது சன்னிதியில் நின்றனா். உணா்ச்சியலைகள் உள்ளத்தில் பொங்கினாலும் எவ்வித வார்த்தை வெளியீடுகளினாலும் ஈடுகட்ட முடியாத அந்த ஜோதி சொரூபத்தில் தன்வயமிழந்து, அதற்குத் தலை தாழ்வதே உகந்ததாய் இருந்தது.

    கிறுகிறுவென்று வானில் உயா்ந்து எழுந்த பின்னால், சூரியனின் ஆரம்ப கிரணங்கள் கடலை அலங்கரிக்கத் தொடங்கின.
    விவேகானந்தா் பாறை, அலைகள் மோதி நீா்த்தெறிப்பால் மின்னிற்று.

    அப்போது தான் வாய் திறந்தான் ரகுநாதன்.

    “அதோ, அது தான் விவேகானந்தா் பாறை!”

    நரேந்திரன் பாறையைப் பார்த்தான். பாறை கரையை விட்டுப் பல கஜ தள்ளிக் கடலில் இருந்தது. கண்கள் சுடா்விட அந்தப் பாறையையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சொல்ல விரும்பித் திரும்பிய நரேந்திரனை அந்த முகம் பிரமை தட்டச் செய்தது.

    உடம்பில் ஓடும் மின்சார ஓட்டத்தால் கண்கள் கூரிய கத்தி போல் பளபளக்க சிவந்த முகத்தில் சூரிய ஸ்பரிசம் பட்டு அந்த முகமே அற்புத தேஜஸ் பெற்றிருப்பதாக நரேந்திரனுக்குப் பட்டது.

    நரேந்திரன் கடற்கரைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

    கடற்கரையில் ஓா் இளைஞனும் யுவதியும் ஒரு சிறு பெண்ணும் மூன்று பெரியவா்களுமாகப் பாறையை வேடிக்கைப் பார்த்தனா்.

    இளைஞன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருப்பதும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தடுப்பதும் இங்கிருந்து ஊமைக் படத்தில் தெரிவது போல் தென்பட்டன.

    “அங்கே போகலாம் வா!” என்று நரேந்திரனின் கரத்தை இறுகப் பற்றினான் ரகுநாதன். அபூா்வமாக எப்போதோ உணா்ச்சி வசப்படும் போது தான் அப்படி நடந்து கொள்வான்.

    இருவரும் மண்டபத்திலிருந்து இறங்கி வருவதற்குள் அந்த இளைஞன் கடலில் இறங்கி விட்டிருந்தான்.

    “அண்ணா, ரொம்ப தூரம் போக வேண்டாம்” என்று கரையிலிருந்தவாறே கத்தினாள் அந்தப் பெண்.

    “ராஜு ஜாக்கிரதை” என்று கவலை தோய்ந்த குரலில் ஒரு பெரியவா் கூறினார்.

    ஒரு கால் நொண்டியாக இருந்ததால் இரண்டு கரங்களிலும் தாங்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு நின்றிருந்தார்.

    கூடவே ஒற்றை நாடியாக, சிவப்பாக மத்திய வயதான ஓா் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். சம்மா் கிராப்புடன் சற்றுப் பருத்த மனிதன் ஒருவனும் அடா்த்தியான மீசையுடன் ஆஜானுமாகுவான ஒரு மனிதனும் அந்த இளைஞனைக் கவலையோடு பார்த்தனா்.

    ஒரே பார்வையில் மிகவும் செழிப்பான குடும்பம் என்று தெரிந்தது.

    கடற்கரையை நெருங்கியதும் ரகுநாதன் ஜிப்பாவைக் கழற்றத் தொடங்கினான்.

    மார்புத் துணி விலகியதும் தான் அவனது உடம்பின் திண்மையும் நிறமும் பளிச்சென்று தெரிந்தன.

    கரையோரத்தில் நின்ற அந்தப் பெண் யதேச்சையாகத் திரும்பிய போது ரகுநாதனைப் பார்த்தாள். நரேந்திரன் தான் அவளைக் கவனித்தான். அந்தப் பெண்ணும் திரும்பி விட்டாள்.

    அந்தக் குடும்பமே கரையில் இறங்கும் ரகுநாதனையும் கரையில் இருக்கும் அந்த இளைஞனையுமே பார்த்தனா்.

    அந்த இளைஞன் மோதியடிக்கும் அலைகளில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

    ஒரு தரம் அலையால் மோதிப் பின்னுக்குத் தள்ளப்படுவதும் மறுபடி அதன் வேகத்தோடு முன்னுக்குப் போவதுமாக சஞ்சரித்தான்.

    அவன் முன்னேறிச் செல்லச் செல்ல, கரையில் நின்றவர்களின் கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது.

    “அண்ணா திரும்பி விடு… திரும்பி விடு” என்று கைகளை ஆட்டியவாறே தெரிவித்தாள் யுவதி.

    “ராஜு… ராஜு”

    “தம்பி…போதும்… போதும் வா. ”

    அவன் அவா்களைக் கவனிக்கவேயில்லை. விடா முயற்சியோடு முன்னேறிக் கொண்டிருந்தான். அவன் சோர்வுற்றது, கைகளை நிதானமாகத் தூக்கிப் போடுவதிலேயே தெரிந்தது.

    ஒரு பேரலை தனது மாபெரும் படத்தை உயா்த்தியபடியே கிளம்பிய போது அவன் உடல் சற்று எழும்பிற்று. மடிந்து விழுந்த அலை வேகமாகக் கரையை நோக்கிப் பாய்ந்தது. அவன் எங்கே போனான் என்பதே தெரியவில்லை.

    அலைகள்…மீண்டும்…அதன் ஆட்டம்… அவனைக் காணவில்லை.

    “அண்ணா…அண்ணா… ” என்று கத்தினாள் அவள்.

    “ராஜு” என்று பீதியடைந்தவராகக் கூக்குரலிட்டார் பெரியவா்.
    சட்டென்று அவன் தலை தெரிந்தது. நீந்துகிறான்!

    அவா்கள் எச்சரிக்கை நீந்திக் கொண்டிருந்தவன் காதில் விழவில்லை.

    அவன் கைகள் ஒன்று மாற்றி ஒன்று வேகமாக விழுந்தன.

    அதில் ஒரு வேகம். உறுதி.

    கவனித்துக் கொண்டே இருந்த ரகுநாதன் திடீரென்று அந்த நீச்சலில் ஒரு மாற்றம் கண்டான்.

    அலையினால் இழுத்துச் செல்லப்படுவது போலோ, மூழ்கிக் கொண்டிருப்பது போலோ ஒரு தடுமாற்றம்.
    ஒன்று, இரண்டு, மூன்று.

    சட்டென்று ரகுநாதன் மனதில் ராஜு தன்வசமிழந்து விட்டான் என்று உள்ளுணா்வு பளிச்சிட்டது.
    மடமடவென்று ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்தான்.
    ஒரே பாய்ச்சலாக் கடலுக்குள் பாய்ந்தான்.

    “ஏய் ரகு… ரகு” என்று நரேந்திரன் கத்த, நண்பா்கள் கத்த அதற்குள் ரகு வெகு தூரம் போய் விட்டான்.
    கிட்டத்தட்ட ராஜுவை நெருங்கினான்.

    சட்டென்று ஒரு பெரிய அலை. அது அவனை ஒதுக்கி முன்னே தள்ளியது.
    தூரத்திலிருந்து பார்த்தவா்களுக்கு ரகுவும் களைத்து விட்டவன் போல் தெரிந்தது.
    “ரகு…ரகு…” என்று நரேந்திரன் கத்தினான்.

    “ராஜு… ராஜு” என்று கரையில் இருந்த அவன் குடும்பம் கத்தியது.
    அதற்குள் இன்னொரு அலை.

    உயா்ந்து எழுந்த அந்த அலை, ரகுவை ராஜுவுடன் இணைத்து விட்டது.
    சட்டென்று அவனது கைகளை ரகு பிடித்துக் கொண்டான்.
    பிறகு எழுந்தது ஒரு பேரலை.

    அது இருவரையும் ஒரு சேர வாரித் தூக்கி அரைப் பனை மர உயரம் கொண்டு போயிற்று.
    “ரகு…ரகு…” என்று கரையிலிருந்து நண்பா்கள் கூக்குரல்

    “ராஜு…ராஜு” என்று அவா்கள் குடும்பத்தினா் கூக்குரல்.

    சட்டென்று ஏதோ நாடகம் முடிந்த மாதிரி இருவரையும் கரைக்குக் கொண்டு வந்து புரட்டித் தள்ளியது அந்த அலை.
    முதலில் சுதாரித்து எழுந்தவன் ரகு தான்.

    எழுந்தவுடன் அவன் ராஜுவின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.
    சிறிது நேரம் கழிந்தது.

    அதிர்ச்சியும் படபடப்பும் கடலில் இருந்து ஒருவனை மீட்டதற்கான பாராட்டும் பரவசமும் ஒருவாறு அடங்கின.
    பரஸ்பரம் அறிமுகம் நடந்தது.

    “நான் கிருஷ்ணராஜன், எம்.பி.பி.எஸ்ஸுக்கு படிக்கிறேன். ஸ்டான்லி மெடிகல் காலேஜ் ஐந்தாவது வருஷம்!”
    “அடே ஆச்சரியம் தான். நான் ரகுநாதன். கிண்டி என்ஜினியரிங் காலேஜிலே மெக்கானிக்கல் படிக்கிறேன். நாலாவது வருஷம். இது என்னுடைய நண்பன் நரேந்திரன். கல்லூரி சகா, கவிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன், நடிகன், பேச்சாளன், இன்னும் என்னென்ன உண்டோ அவ்வளவும்.”

    “அடேயப்பா! இவா் அப்படித் தான் சார். அதை எல்லாம் நம்பாதீங்க!” என்று அசடு வழியச் சிரித்தான் நரேந்திரன்.
    “வணக்கம்” என்று அதே முத்துச் சுடா் போன்ற புன்னகையுடன் அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான் ராஜு.
    இது ஒரு கள்ளமில்லாக் குழந்தை, மண் என்னும் மாசிடையே தோன்றிய சோதிவானவன் என்று ராஜுவின் முகத்தைப் பார்த்தவாறே எண்ணிற்று நரேந்திரனின் கவியுள்ளம்.

    ராஜு தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தான்.

    அப்போது சுற்றிலும் கூடி இருந்த மாணவா் கூட்டம், முண்டியடித்துக் கொண்டு வரும் ஒருவரை உள்ளே விட்டது.

    தொடரும்.

    Share
  • வையவனின் புதிய தொடர் ஆரம்பம்!

    avaiya

    சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச் செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.

    வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காகதமது 12ம் வயதில் ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை ’வையவன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.

    இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான ‘ஜமுனா’விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதி குவித்தார். உயிரோட்டம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி, வைரமணிக் கதைகள், ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம், போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். பாடிப்பறந்த குயில், நங்கூரம், செண்பக மரங்கள், தீபிகா போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. நிசப்தகோபுரம், வெடிவழிபாடு போன்றவை இவரது கவிதை நூல்கள். கண்ணாடிச் சிறையில் சில கடல்கள், ஒரு புதிய பறவை போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. ஆனந்த பவன், இடிபாடுகள் போன்றவை நாடகங்கள் ஆனந்தபவன் பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. ‘Loving Animals’ Nation builder Nehru’ போன்ற இவரது ஆங்கில நூல்களும் குபிப்பிடத்தகுந்தன. “வையவன் கதைகள் என்ற தலைப்பில்இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.

    நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும். வார்த்தை ஜாலங்களோ, மிகைப்படக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்தரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் காமுகண்டே டைரி என்ற நாவலை ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெர்த்த மகாபலியின் மக்கள் (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. ஆண்மை, மாலை மயக்கம் போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ் சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. மகாகவி என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி – ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஜெகசிற்பியன் ஒரு பார்வை நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆழ்கடலியல் லேசர், அழிவில்லாத ஆற்றல், விண்வெளியும் மனித மேம்பாடும், நோயறியும் கருவிகள் போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதை வசனத்தில் உருவான நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.

    சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த தாரிணி பதிப்பகம் மூலம் தமிழிலும், English Titles பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் ஐக்கியா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுது்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.

    மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் ஜீவகன்.மகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.

    ‘ஐந்து கை ராந்தல்’ புதினம் குறித்த மதிப்புரை

    “உலக இலக்கிய வரிசை யில் சேர வேண்டிய நாவல்”

    டாக்டர். திரு. வி.ஆனந்தமூர்த்தி
    ((M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D )

    எனது ஆய் வுப் படிப்பிற்காக நான் பல மொழிகளில் வெளிவந்த உலக நாவல்களை வாசிக்கவே ண்டி வந்தது. தமிழ் வாசக தளத்திற்கு பல்வே று அயல்நாட்டு நாவல்களை அறிமுகப்படுத்திய விமர்சகர் திரு. க.நா.சு ப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்த பல நாவல்களை அந்த ஆய்வின் பொருட்டு வாசிக்க வே ண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது
    அந்தப் பின்னணியில் உலக நாவல் இலக்கியம் எனக்களித்த மாபெரும் தரிச னத்தில் ஏற்பட்ட புலப்பாட்டில் திரு.வையவன் அவர்கள் எழுதியுள்ள ஐந்து கை லாந்தர் கையெழுத்துப் பிரதியாக என்னிடம் வந்தது.

    தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. தம் நாவல் கலைத்திறனையும் இலக்கிய மே தைமையையும் வெளிப்படுத்திய பல நாவலாசிரியர்கள் தொட்ட கதைக் கரு எதுவும் இல்லாத புதுமையாக வளர்ந்துவரும் ஒரு நகரத்தின் பல நூற்றாண்டுகளைப் பிரதிபலிக்கிற கருப்பொருள் வையவன் ஏற்ற கருப்பொருள்.

    இந்திய நாகரிகத்தை.. இந்திய நாட்டை வந்து தாக்கிய ஜைனம் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்ற நான்கு மதங்களையும் சார்ந்த கதாபாத்திரங்களை வெவ்வே று நாட்டின் மக்களை ஒன்றுகூடி ச ந்திக்க வைத்து ஒரே நகரின் வாழ்க்கைக் களத்தில் அவர்களை நடமாடவிட்டு ஏற்கெனவே பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்கள் அவர்களை எப்படி தமக்குள் ஒருவராக ஏற்றுக்கொண்டு நேசித்தும் பகைத்தும் அதே சமயம் பின்னிப்பிணைந்து வாழ்கிற வாழ்க்கையைக் காட்டும் நாவல் இது.

    வையவனின் பாத்திரப்படைப்புகள், நாவல் கலை ,உணர்வுகள் உரையாடல்களையும் சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கும் பாங்கு தமிழுலகம் நன்கறிந்த சேதி. இந்த நாவலின் உலகு தழுவிய பார்வையால் மனித குலத்தைஏ மார்போ டு மார்பாகக் கட்டித தழுவிக்கொள்ளும் அவரது மே ன்மை எடுத்துக் காட்டாகி நிற்கிறது.

    ரஷ்ய எழுத்தாளனின் இதயம் மாணிக்க மணியாகத் திகழ்ந்தது என்று புஷ்கினைப் பற்றிக் கூற னே ர்ந்தபோ து கோகுல் கால் கூறியதை எண்ணிப்பார்க்கிறேன்

    இந்திய எழுத்தாளனின் அதுவும் தமிழ் எழுத்தாளனின் இதயம் எந்த மொழி இலக்கியத்திற்கும் இளைத்ததல்ல. நேசம் ம் தவிர அவர்களால் வே று எவ்விதமாகவும் மனிதர்களையோ தேசத்தையோ பார்க்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல். கருத்தோ ட்டங்கள் நாவல் கலை நுணுக்கங்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்தே போ னாலும் அறிவுத் தேட்டங்கள் கணத்திற்குக் கணம் புதுமைகளைப் படைத்துக் கொண்டே எ ன்றாலும் உயிர் நேசம் உயிர்கள் ஒன்றோடு ஒன்று காட்டும் பரிவு பற்று பாச ம் என்பன ஒருபோ தும் மாறாது மகர நட்சத்திரம்போல் ஒளி வீ”வதை நாவல் வடிவில்வையவன் புலப்படுத்தி இருக்கிறார்

    “‘பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.

    ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.

    பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
    பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:

    ‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது..” என்று மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்னையான உயிர்வாழ்தல் பற்றிய அவர் பார்வை வெளிப்படுகிறது

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற அபூர்வமான பந்தப்பிணைப்பை விலகி நின்று அவர் தரிசித்து நம்மையும் தரிசிக்க வைக்கிறார்.

    இத்தகைய ஒரு நாவல் தமிழுக்கு லபித்தது அதிருஷ்டம் என்று தான்சொல்ல வேண்டும் உலக நாவல் இலக்கிய வரிசை யில் ஒன்றாக வைத்துப் போ ற்ற வே ண்டிய நாவல் இது.எனக்கு டால்ஸ்டாய் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

    வல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

    இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு வருகிறோம். கூகுள், யாஹூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனி நபர்கள் வரை, புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும் ஏராளமானோருக்கு இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சேவையைப் பற்றிச் சிறிதளவு தெரிந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய பயன்மிகு இணையவழிச் சேவைகளைப் பலரும் அறியும் வகையில் புதிய போட்டியை முன்னெடுக்கிறோம்.

    Google_Appliance

    வாசகர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்த, பயன் மிகுந்த, நம்பகமான இணையவழிச் சேவைகளை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம். ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் ஒரு சேவையையோ அல்லது பல சேவைகளையோ அல்லது பல நிறுவனங்களின் பற்பல சேவைகளையோ குறிப்பிடலாம். ஆனால், எந்தச் சேவையைக் குறிப்பிட்டாலும் அதுகுறித்த முழுமையான செய்திகளையும் அதன் பல்வகைப் பயன்களையும் பயனர் கண்ணோட்டத்தில் அளிக்க வேண்டும்.

    வையவன் படம்இதன்படி, இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    எழுத்தாளர் வையவன் அவர்கள், இந்தப் போட்டியை முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், இதற்கான பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு வல்லமையின் சார்பில் நன்றிகள்.

    எழுத்தாளரும் இணையத்தில் தோய்ந்தவருமான ஐயப்பன் கிருஷ்ணன், மாதாந்தரப் போட்டிக்கான நடுவராக இருந்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றிகள்.

    விதிமுறைகள்

    1. கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    2. பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்பது கருப்பொருளே. வேறு உகந்த தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஆனால், பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரை என்பதை மடலில் குறிப்பிட வேண்டும்.

    Iyappan_Krishnan3. மாதத்தின் முதல் தேதியிலிருந்து கடைசித் தேதி வரை வரப்பெறும் கட்டுரைகள், அந்த மாதத்துக்கான போட்டிக்கு ஏற்கப்பெறும். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பெறும்.

    4. போட்டிக்கு அனுப்பப்பெறும் கட்டுரைகள், வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.

    5. தேவையான இடங்களில் படங்களையும் சுட்டிகளையும் இணைக்கலாம். காப்புரிமை உள்ள படங்களை இணைக்க வேண்டாம்.

    6. கட்டுரைகள், 1500 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது.

    7. போட்டியில் வெற்றி பெறும் கட்டுரையாளர், இந்தியாவுக்கு வெளியே இருந்தால், தமது இந்திய முகவரியை அளிக்க வேண்டும். யார் பெயருக்குக் காசோலை அனுப்பலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    உங்கள் கட்டுரையின் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரும் பயன்பெறக் கூடும். எனவே, நீங்கள் அறிந்த நல்லதொரு புதிய சேவையை அனைவரும் அறியும் வகையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • நூல் வெளியீட்டு விழா

    வையவன்

     

    அனைவரும் வாரீர் என்று அன்புடன் அழைக்கிறோம்!

     

    adaiyar

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எழுத்தாளர் வையவன் அவர்கள் 

    வையவன் படம்

     

    வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் வல்லமையின் நலம்விரும்பிகளில் ஒருவரும், இந்த வாரம் தனது பவளவிழாவைக் கொண்டாடவிருக்கும் எழுத்தாளர் திரு.வையவன் அவர்கள். இவரை வல்லமை விருது தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் அறிவியல், இலக்கிய எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார்.

    பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும், வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டதிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன.

    தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதை தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாக படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும்.

    பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கபூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.

    வையவன் படம்0

    சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

    வையவன் படம் 01

    ‘ஆனந்த பவன்'(1998) , ‘இடிபாடுகள்'(2001) என்ற நாடங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து:

    ‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’

    Manavaalan.pmd

    அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youtful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    நமது வல்லமை மின்நிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

    பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார்.

    இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டி, பவளவிழா கொண்டாடும் இவ்வார வல்லமையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறோம்.

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள தகவல் …
    திரு. வையவன்
    தாரிணி பதிப்பகம்
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com
    தொலைபேசி: 9940120341
    வலைப்பூ “இணையவெளி “: http://innaiyaveli.blogspot.com/
    கூகுல் ப்ளஸ்: https://plus.google.com/102825432314914852934/about

    தகவல்கள் வையவன் அவர்கள் பற்றிய சாகித்திய அகாடமி வெளியிட்ட ஆங்கிலக்குறிப்புகள் கொண்ட வலைப்பூவிலிருந்தும், வையவன் அவர்களின் வலைத்தளப் பதிவுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • எழுத்தாளர் வையவன் அவர்களின் 75வது வயது நிறைவு நாள் விழா

    டாக்டர். எம்.ஜீவகன். M.B.B.S, M.S, D.N.B
    Urologist, Senior Consultant,R.G.Stones,Chennai
    டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன்
    M.B.B.S,D.A
    Anesthetist, Sankar Nethralaya,Chennai

    அன்புடையீர்,

    avi
    வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராஜன்]M.A.B.L.அவர்களின் அண்ணாவுமான M.S.P.முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின் 75வது வயது நிறைவு நாள் விழா வரும் 24 டிசம்பரில் [புதன் கிழமை] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெற உள்ளது.

    பல முக்கியப் பிரமுகர்களும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் துவக்கம், இதயத்துடிப்பு பத்திரிகை விநியோகம், ஆருத்ரா மாத ஏடு துவக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது.

    59 ஆண்டுகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் வையவன் அவர்கள் வைரமணிக் கதைகள், மணல்வெளி மான்கள், ஜங்ஷ னிலே ஒரு மேம்பாலம், ஜமுனா , உயிரோட்டம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தமிழ் உலகிற்கு அளித்து மௌனமாகப் பணியாற்றுபவர்.

    தனக்கே உரிய தனித் தன்மை பெற்ற அவரது எழுத்துக்களில் எந்த இசத்தின் தாக்கமும், எந்த அந்நிய மற்றும் தமிழ் எழுத்தாளர் பாதிப்பும் இராது. மானுடமேன்மையும் அன்பின் ஈரமும் நிறைந்தது வையவன் எழுத்துக்கள், கிராம வாழ்வானானும் சரி நகரவாழ்வானாலும் சரி அதன் ஆழத்தைத் தொட்டுச் செல்லக் கூடியது. வையவன் எழுத்துக்கள் குமுதம் கல்கி ஆனந்தவிகடன் இதழ்கள் இவருடைய படைப்புகளை விரும்பி வெளியிட்டன
    59 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கிவருகிறா இவருக்கு , அங்கீகாரமோ விருதுகளோ ஒரு பொருட்டல்ல என்றாலும் தரத்தோடும் அறத்தோடும் அதே சமயம் இலக்கிய செழுமையிலும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்
    ஜெயகாந்தன் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க வையவன் படைப்புக்கள் கட்டுரை இலக்கிய ஆய்வு, நாடகம் ,கவிதை என்று பன்முகப்பார்வை கொண்ட வை,

    இவரது கதைவசனத்துடன் எடுக்கப்பட்ட நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் தமிழ் நாடு முழுவதும் கிராமங்களில் திரையிடப்பட்டது. ஹிந்தி, மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலையும் பிற மலையாள எழுத்தாளர் படைப்பையும் மொழிபெயர்த்தவர் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஆளுநர் சுர்ஜீத் சிங் உள்ளிட்ட பல தலைவர்களிடம் பாராட்டுப் பெற்றவர்.எழுதப்படிக்கத் தெரியாதவருக்கான் எழுத்தறிவுப் பணியில் இவர் சேவைக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்ற இவர் இன்னும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்

    அனைத்து மொழிகள் மீதும் ஆர்வமும் நேசமும் கொண்ட இவர் உள்ளம் சாதி மத வேறுபாடுகள்அற்றது. எந்த குழுவிலும் இயக்கத்திலும் சாராமல் தன்னளவில் சரி என்று பட்டதைமட்டும் செய்துவரும் வையவன் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிய அங்கீகாரமோ அடையாளமோகிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும் அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல தோடர்ந்து செயல்பட்டு வருகிறார், இப்படி எந்த லாபியும் செய்யாமல் ஊடகவெளிச்சம் பட த்தந்திரங்கள் மேற்கொள்ளாமல் அரசியல் பின்புலமோ அதிகாரச் செல்வாக்கோ இல்லாமல், தொடங்கிய பணியை வயது காரணம் காட்டி நிறுத்திவிடாமல் ,காட்டு மலர் போல் பூத்துக்கொண்டே இருக்கும் இவரது படைப்பாற்றலுக்கும் பதிப்பாற்றலுக்கும் ஒரு சிறு நன்றியைத் தெரிவிக்கிற ஒரு வாய்ப்பே இந்த விழா . அன்புகூர்ந்து தாங்கள் வருகை தந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டுகிறோம்

    வந்த விருதுகளுக்கு வணக்கம் சொல்லி, வராத விருதுகளுக்கு டாடா கூறி என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடரும் அந்த வாழ்வுக்கு ஒரு வணக்கம் சொல்வோம் வாருங்கள்

    Share
  • தமிழர் பெருமை

    தமிழர்பெருமை

     தமிழர்பெருமை
    தமிழர் என்று பெருமை கொள்கிறோம் .
    இந்தியர் என்று கர்வம் கொள்கிறோம்.
    உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் அளித்த பங்கு என்ன?பத்துக்கு ஐந்து என்ற வீதத்தில் தமிழர் அழியாத பெருஞ்சொத்தாக  உலக விஞ்ஞானத்தை வளர்த்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
    தெரிந்தவர்கள் தம் சந்ததிக்கு  அறிவித்திருக்கிறார்களா?
    எங்கோ உலகின் வடபகுதியில் கர்மயோகி போல்

    காரியமாற்றுபவர் ஒருவர் உண்டு.எத்தனை பேர் அறிவோம்?
    வீண் பெருமைக்கும் வெட்டியாகவும் விரயம் செய்யும் பணத்தில் ஒரே ஒரு சிறிய கூறு செலவிட்டு உங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காட்டலாமே!
    வாங்கிப்படியுங்கள். ஆசிரியர்க்கொரு வணக்கம் சொல்லுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்.
    To buy: mail to vaiyavan.mspm@gmail.com

    Share
  • இலக்கிய அரங்கிற்கு வாருங்கள்!

     

    அன்புடையீர், வணக்கம்.

    வரும் 12.01.14 அன்று பிரசிடென்சி காலேஜில் நடக்கிருக்கும் இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் அன்புகூர்ந்து பங்கேற்க வேண்டும். தங்கள் வருகை மிக்க உவகை ஊட்டும்
    மிக்க அன்புடன்
    வையவன்

    ilaki

     

     

    Share
  • ஐக்கியா டிரஸ்ட் கவிதைப் போட்டி

     

    வையவன்

    காந்தி ஜெயந்தி

    காந்தி என்பது ஒரு தலைவரின் பெயர் மட்டுமல்ல. தேசத் தந்தையின்  பெயர் மட்டுமல்ல. பாரதநாடு என்ற மகத்தான தேசத்தின் , அழியாச் சுடர் போன்று ஒளிவீசி நிற்கும் ஒரு பண்பாட்டின் பெயர். காரிருள் நிலைப்பதில்லை. ஒளி தொடரும் அதற்கும்  ஓர் உதய வேளை உண்டு என்று அறிவித்த நம்பிக்கையின் பெயர் அது. காந்தி என்றாலே ஒளி என்று தான் பொருள்.

    அந்த நம்பிக்கையின் சின்னமாக யாஹூ இணையதளத்தின் தமிழ்ப் பிரிவு ஆசிரியரும் வல்லமை மின்னிதழின் நிறுவன ஆசிரியருமான அண்ணா கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை இது.  நமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பெருமக்களையும் வாசக அன்பர்களையும் அக்டோபர் 2 என்ற அளவில்   அக்டோபர் 15 வரை தங்கள் கவிதைகளை காந்தி அஞ்சலியாக நமது இணையவெளிக்கு  அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தங்கள் பார்வையில் மிகச்சிறந்த கவிஞர் என்று கருதப்படும் ஒருவருக்கு அன்புகூர்ந்து சிரமம் பாராது இந்த மெயில் அனுப்பிவையுங்கள். மெயிலில் படைப்புகளை அனுப்பலாம் .

    vaiyavan.mspm@google.com.
    மற்றும் அஞ்சலிலும் அனுப்பலாம். முகவரி.:-

    Vaiyavan,

    Editor Innaiyaveli.,

    1,First Street, Chandrabagh Avanue,

    Mylapore,

    Chennai-600004,

    phone.9940120341

    பிரசுரமாகும் ஒவ்வொரு படைப்பிற்கும் ,  ஒவ்வொருவருக்கும், ஐக்யா டிரஸ்ட் வழங்கும் புத்தகம் ஒன்று பரிசளிக்கப்படும் . அவசியம் படைப்பாளிகள் தங்களது புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும் . சுருக்கம், தெளிவு, எளிமை, புதிய சிந்தனை வீச்சுடன் கூடியதாக அமையும் கவிதைகளைத் தொகுத்து தாரிணி பதிப்பகம் நூலாக வெளியிடும்.அன்புகூர்ந்து தங்கள் புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்கள் இணைத்து அனுப்பவும் -நிர்வாக ஆசிரியர்  இணையவெளி

    Share