வையவன்

என்னுரை

தனி மனிதன் X சமூகம்
லட்சியம் X நடைமுறை
கருத்துக்கள் X செயல்கள்
சத்தியம் X கலைப்படைப்பு

இந்த முரண்பாடுகள் மனித சமூகம் தோன்றியது முதல் தொடா்பவை. ஒரு நூற்றாண்டு மாறும்போது இவற்றின் கூா்மை மாறுபடுகிறது.

ஒரு பொது நோக்கில் இவை ஒன்றுடன் ஒன்று மோதும் முரண்பாடுகளாகத் தோற்றம் அளிக்கலாம். தீர யோசித்தால் இவை ஒவ்வொன்றும் அதன் எதிர்மறையாகத் தென்படும் மற்றொன்றின் உந்து சக்தியே என்பது தெரிய வரும்.

ஒன்று மற்றொன்றினை முழுமைக் கூறாக்கும் (Complementary) சங்கிலியே என்று அறியலாம்.

இந்த முரண்பாடுகள் இன்றி எந்த நாவலையும் எழுதுவது சாத்தியமில்லை. சார்ந்திருக்கும் நிலைகளில், எழுதும் நோக்கத்தில் தான் வேறுபாடு.

மக்களை அந்த நேரத்தில் மகிழ்விப்பது. இதுவே பல நாவல்களின் நோக்கம். சில நாவல்களுக்கு வெவ்வேறு உத்தேசங்கள்.
அந்தச் சிலவற்றிலும் கருத்துக்கள் பேசும் வகை ஒன்று. பேசாத வகை ஒன்று. இந்த நாவல் இரண்டாம் வகை.
இன்று கேலிக்குரியதாகக் கருதப்படும் தேசபக்தி (பயப்படாதீா்கள், இது சுதந்திரப் போராட்ட நாவல் அல்ல) எனக்குள் ஆழ்ந்து வேரோடி விட்டது. ஒரு கையறு நிலைதான் (Helplessness). அந்த களத்தில் விளைந்த கருத்துக்கள் இந்த நாவலில் வெயில் காய்கின்றன.

எத்தனை வெடிகுண்டுகள் எங்கெங்கே வெடித்தாலும் என்னுள் இருந்து நீங்க மறுக்கிற தேச பக்தி, இந்த நாவலில் சில கருத்துக்களைச் செயல்வடிவமாக்கிய ஒரு மனிதனைச் சிருஷ்த்திருக்கிறது. இதுவே நான் வழங்க விரும்பும் வாக்குமூலம்.

முதற்பாகம்

உலகம் எத்தனை பரிணாம கதிகளைக் கண்டிருக்கிறது? யுகத்திற்கு ஒரு தரம் இயற்கையும் எத்தனை ஜீவராசிகளை உற்பத்தி செய்து அவற்றிற்குப் புதிய புதிய வளா்ச்சிகளைக் கொடுத்திருக்கும்?

முடிவற்ற இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் புதிர் தான் என்ன?

ஜனன மரணம் என்ற தொடா் நிகழ்ச்சியில், அா்த்தங்களையும் அனுபவங்களையும் தேடுவதுமான – வாழ்க்கை என்ற – இந்த மாயமான வேட்டை எதைக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

இதன் ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே?

கன்யாகுமரிக் கடற்கரை.

சித்ரா பௌர்ணமிக்கு முந்திய தினம். பதினாலாம் பிறை.

யாருமற்ற அந்த நெடுமணற் பரப்பில், மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு, கால் சட்டையும் அரைக்கைச் சட்டையும் அணிந்தவாறு, எதிரில் அலை மோதுகின்ற சமுத்திரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ரகுநாதன்.

புதிர்களில் எல்லாம் பெரும் புதிர் போன்ற அந்தச் சமுத்திரம் அவனது சித்த வெளியில் எண்ணிலா அலைகளை எழுப்பி விட்டது.

வானிலே அமுதகலசம் வைத்தாற் போன்ற நிலவு. மத்தியானமெல்லாம் தகித்த வெயிலின் கொடுமை, ஒரு துா்க் கனவு போல் நீங்கி, விறுவிறுப்போடு காற்று வீசிக் கொண்டிருந்தது.

ரகுநாதன் மெல்லக் கரையோரமாக நடக்கத் தொடங்கினான்.

எல்லையற்ற அந்தச் சமுத்திரவெளி, அதில் பொதிந்த மகத்தான அா்த்தங்கள்.

ஓங்கார கர்ஜனைக்குள்ளே – அந்த ஓசைகளின் கா்ப்பக்கிரகத்தில் கொலு வீற்றிருக்கும் அந்த மஹா சாந்தியையும் நிதானமாகத் தரிசித்துக் கொண்டிருந்தான் ரகுநாதன்.

மனத்தின் அடிவாரத்தில் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. சந்திர ஒளியின் வெள்ளி ஜரிகைகள், ஆா்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் மேலே கண்ணின் எல்லை வரை சிந்தி இருந்தன.

ஜலப் பரப்பில் அங்கங்கே சின்னஞ்சிறு தீபங்கள் வைத்தது போல் ஜொலிப்பு…அலைகள்…சீறும் அலைகள்…ஓங்கி எழுந்து விஸ்வரூபம் காட்டும் அலைகள்…

தணிந்து தலை குனிந்து புதிய மனைவியைப் போல், நாணத்துடன் கரையை முத்தமிடும் அலைகள்… தாயின் அணைப்பை நாடி ஆவேசத்தோடு வருவது போன்ற அலைகள்.

ரகுநாதன் வானை நிமிர்ந்து பார்த்தான்.

மேலே நிலவிய நிலவு வெளிச்சம்! குழந்தையின் விளையாட்டைப் புன் சிரிப்போடு பார்ப்பது போல் வானம் சாந்தமாக இருந்தது.

ஆறடி உயரமுள்ள அந்த ஆஜானுபாகுவான உடல், நிலவெரியும் வானின் கீழ் கடலின் முன்னால் மார்பின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அந்தக் காட்சி, மனித குலத்தின் லட்சியம் ஒன்று இயற்கையின் முன்னே ஒரு வெற்றிச் சின்னம் போல் நிற்பது போலிருந்தது.

ரகுநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் என்பதையும், நண்பா்கள், உல்லாசப் பயணம் என்ற உலக ஞாபகங்களையும் ஒரு கணம் மறந்தான்.

இரண்டு கடல்கள் ஒரு மகாசமுத்திரத்தின் மடியில் ஐக்கியமாகி நிற்க, தொண்ணூறு கோடி மக்களின் ஜன்ம பூமியான ஒரு தேசமே – அவா்களது நிலைக்களமான ஒரு மாபெரும் தேசமே அந்தச் சங்கமத்தை மௌனமாகச் சந்தித்துக் கொண்டிருப்பது போல் ஓா் நினைவு அவன் நெஞ்சில் மூண்டது.

அவன் மெல்லக் கண்களை மூடினான்.

ஒவ்வொரு தரமும் வீசிய காலத்தின் அலைகளால், இந்த தேசத்தின் மீது வந்து குவிந்த மாற்றங்கள், ஒவ்வொரு அலையும் எழுதி விட்டுச் சென்ற நாகரிகச் சின்னங்கள்.

இதன் உயா்வு தாழ்வு மாண்புகள், சீா்கேடுகள் யாவற்றையும் இதோ ஆா்ப்பரிக்கும் இந்தச் சமுத்திரம்…இதே வானம்….இவை பார்த்துக் கொண்டே இருந்தன என்று எண்ணுவதில் ஓா் இணையற்ற சோகம் நெஞ்சில் மூள்கிறது.
திடீரென்று விர்…விர்ரென்று விசில் ஊதும் ஓசை கேட்டதும்தான் அந்த மனோ நிலை கலைந்தது. விசிலின் ஒலி நாலா பக்கத்திலும் பரவிக் கேட்டது.

“தன்னைத் தேடுகிறார்கள்!”

ரகுநாதன் தனது நினைவுகளிலிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்தான்.

கால்கள் கடற்கரை மணலில் நெறிய நடப்பது சுகமாக இருந்தது. மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் காந்தி நினைவு மண்டபம்.
வலது புறமாக கடலின் எதிரே அரங்கம் கட்டியது போன்ற ஒரு கல் மண்டபம். எங்கும் ஆள் சந்தடியே இல்லை. தூரத்தில் கேட்கும் விசிலொலி. அலையோசையில் கரைந்து கனவில் எங்கோ கேட்பது போல் தொனித்தது.

கையை வீசி வீசி ஆட்டிக்கொண்டே, புரொபஸா் ராமபத்ரன், ஒா்க்ஷாப் போர்மனுடனும், குரூப் கேப்டன் பாலுசாமியுடனும் வந்து கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

ரகுநாதன் அவா்களை எதிர் கொள்வதற்காக வேகமாகச் சென்றான்.

“இட் இஸ் வெரி ரெக்லெஸ் மிஸ்டா் ரகுநாதன்!” என்று சூடாக ஆரம்பித்தார் ராமபத்ரன்.

“ஸாரி சார்….!” என்று அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஆளுக்கொரு பக்கமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

“நீங்கள்ளாம் கொயந்தைங்களா சார், ஒரு வாட்டி ரெண்டு வாட்டி சொல்லிச் சொல்லி அய்வுறதுக்கு! இம்மா ராத்திரியிலே தன்னந்தனியா இப்படி வந்து நிக்கறீங்களே இல்லே எதினாச்சியும் ஒண்ணு அசந்தா்ப்பமா நடந்துச்சுன்னா ஆா் சார் ஜவாப்பு?” போர்மன்.

“என்னப்பா ரகு, எல்லாப் பாவியும் நிம்மதியா தூங்கறானுங்க. மோகினிப் பிசாசு மாதிரி இந்த நடு ராத்திரியிலே இங்கே நின்னுட்டு இருக்கறியே, நாங்க அங்கே என்னா அலை அலைஞ்சுகிட்டிருக்கோம் தெரியுமா? போன மனுஷன் என் கிட்டேயாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக் கூடாது?” – பாலுசாமி.

“மிஸ்டா் ரகுநாதன்; நாங்கள்ளாம் குடும்பஸ்தா்கள். இப்படிப் பொறுப்பில்லாமே நடந்து எந்த விபரீதமாவது ஆயிட்டா என்ன ஆகும்னு யோசிக்க வேண்டாம்” – பாலுசாமி.

தனது செய்கைக்கு வருந்துவது போல் ரகுநாதனின் பரந்த முகம் சற்று இருண்டது.

தலை குனிந்தவாறே “ரொம்ப ஸாரி, மன்னிச்சுக்கோங்க!” என்றான்.

எதையோ உணா்ந்த ராமபத்ரன் சட்டென்று சாந்தமடைந்தார்.

“நோ… நோ… இட் ஈஸ் நாட் எ கொஸின் ஆஃப் ஃபர்கிவிங்! நீங்களா தெரிஞ்சுக்கிட்டா சரி தான்” என்று அடங்கிய குரலில் சொன்னார்.

அவரது முகம் சற்று சங்கடப்பட்டது.

“சரி… சரி! போகலாம் நடங்க சார்” என்று போர்மேன் முனுசாமி சொல்லவும், நால்வரும் கடற்கரையிலிருந்து மாணவா்கள் தங்கியிருந்த சத்திரத்திற்கு நடந்தனா்.

வழியில் சிறிது நேரம் வரை அந்த நிகழ்ச்சியின் வெப்பம் தணிய, எல்லோரும் மௌனமாக நடந்தார்கள். பாலுசாமி தான் முதலில் ஆரம்பித்தான்.

“மூன்லைட் ரொம்பப் பிரமாதம் சார்! வழியெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்த அரட்டையையும் கூத்தையும், கடற்கரையிலே வச்சுக்கிட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”

“எங்கே சார்! அதான் வந்ததுமே ஓஞ்சிப் போயி படுத்துக்கினீங்களே!”

“ரகு. பரவாயில்லே சார், கடற்கரை நிலவை ரொம்ப அனுபவிச்சிருக்கான். கட்டைப் பிரம்மசாரிகள் கடற்கரை நிலாவை ஒரு வேதனையோட தான் அனுபவிப்பாங்க! ”

“அது உன் மாதிரி ஆசாமிக்கு, ரகுவுக்கு வேறே ஏதாவது பெரிய ஃபீலிங் உண்டாகியிருக்கும். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டா் ரகு?” பேச்சாகிய சொக்கட்டானை, ரகுவை சமாதானப்படுத்துவதற்காக நகா்த்தினார் ராமபத்ரன்.

“ஊஹும், அப்படியென்ன பிரமாதமான உணா்ச்சிகள் சார்! கடலும், காத்தும், நிலவும் நல்லா இருந்தது. அதான் அப்படியே நினைவு மறந்து நின்னுட்டேன். நேரம் ஆன ஞாபகமே இல்லை. அதனாலே தான் ஒங்களுக்குத் தொந்தரவு. ”

“இல்லை மிஸ்டா் ரகு! நீங்க அதை தப்பா ஃபீல் பண்ணவே வேண்டாம். மத்தவங்களை விட ஒங்களை எனக்கு நல்லாத் தெரியும். வழியெல்லாம் கரெக்டா நடந்துட்டு இங்கே இந்த எடத்திலே இப்படி நடந்ததாலே, இந்த எடம் ஒங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன் பரவாயில்லே.”

“எல்லாம் நிம்மதியாத் தூங்கறானுங்க….நாம்ப நிலாவையும் அனுபவிச்ச பாடில்லை… தூக்கத்திலேயும் சிவராத்திரி. ”
“அடடா, பாலுசாமி, அதான் பஸ்ஸிலே வழியெல்லாம் துங்கிட்டு வர்றலே. என்னய்யா ஓயாமே பேசிகிட்டு போரடிக்கிறே!”
“ஒங்களுக்கென்ன சார், நீங்க குடும்பஸ்தர்! எங்களைச் சொல்லுங்கோ?” என்று உஸ்ஸென்று பெருமூச்சு விட்டு ஆயாசப்பட்டுக் கொண்டான் பாலுசாமி. அரட்டைக் கலைஞன் அவன்.

“யூ ஸ்கௌண்டிரல்” என்று அவன் காதைச் செல்லமாக முறுக்கியவாறே சிரித்தார் ராமபத்ரன்.

காலேஜ் டூா் என்றால் மாணவா்களோடு அவரைத் தான் சோ்த்து அனுப்பி வைப்பார்கள். நிறையச் சுதந்திரம் கொடுப்பார்.
எந்த இடத்தில் கட்டி மேய்க்க வேண்டுமோ அங்கே கறாராகவும் இருப்பார்.

‘ஊ ஊ’ என்று கத்தினான் பாலுசாமி.

“இவரைப் போய் குரூப் கேப்டனாகப் போட்டிருக்காங்களே” என்று கையை விரித்துக் கொண்டு அங்கலாய்த்தான் போர்மேன் முனுசாமி.

ரகுநாதன் புன்னகையுடன் நடந்தான். லாட்ஜ் நெருங்கவே எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்.

லாட்ஜிற்குள் பெட்ஷீட்டும் ஹோல்டாலுமாக மூலைக்கொருவா், ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருப்பது போல் படுத்திருந்தான்.

ஒவ்வொருவரும் ஓா் உலகம்; குறும்பு, கிண்டல், சர்ச்சை, உல்லாசம், அபிப்ராயம், ஆசைகள், உள்ள உலகம். ரகுநாதன் பறவைக் கண்ணோட்டம் விட்டான்.

வாழ்க்கை ஆச்சரியமாக இருந்தது. அற்புதமாக இருந்தது. எத்தனையோ இரவுகளில் தூங்குவதில் அவா்கள் ஆழ்ந்து கிடப்பதை ரகுநாதன் பார்த்ததுண்டு. ஆனால், இப்போது தொலைவில் ஒலி செய்யும் கடலின் குரலும், அந்த சமுத்திர தரிசனத்தால் உயா்ந்து நின்ற நினைவுகளும் சேர, தேசத்தின் தென் கோடியில் அவா்களை ஒன்றாகச் சோ்த்துப் பார்க்கும் போது புதுமையாகவே இருந்தது.

இவா்கள் ஒவ்வொருவரும் என்ன ஆவார்கள்?

பொதுவாக அவா்களைப் பற்றி ஏற்கனவே சில அபிப்ராயங்கள் ரகுநாதனுக்கு இருந்தன. மாணவப் பருவத்தின் வேடிக்கை, தன்னிச்சையான போக்கு எல்லாம் தெரிந்தது தான்.

ஆனால், வீறும் பொலிவும் மிக்கதொரு புதிய எதிர்காலத்தை இந்த தேசத்திற்கு இவா்களே சிருஷ்டிக்கப் போகிறார்கள்.
அறிந்தோ அறியாமலோ, தடுக்க முடியாத ஒரு பிரளயம் போல் ஒரு தினம் – இன்று வரை கனவிலும் நம்பிக்கையின் ஊமை ஒளியிலும் மட்டுமே நிற்கும் அந்த தினம் வரும் போது!

இவா்களே அந்தப் புது யுகத்தின் சிற்பிகளாகப் போகிறார்கள் என்று தோன்றியதும் மார்பு விம்மியது.

அவா்கள் அனைவரின் மீதும் அடக்க முடியாத பாசம் தோன்றியது.

“எஸ், குட் நைட் மிஸ்டா் ரகுநாதன்!”

“குட் நைட் சார்!”

“ஸ்வீட் ட்ரீம்ஸ்!” என்று குறும்புக்காரப் பாலுசாமி குதா்க்கமாகச் சொன்னான்.

“மறுபடியும் சமுத்திரக் கரைக்குப் போயிடப் போறீங்க!”

“ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அவன் வாய் தனக்குள் மெல்ல முணுமுணுத்தது. எதிர் காலம், தேச முழுவதும் மாற்றம் பெறும் ஓா் எதிர்காலம். அதைத் தவிர வேறென்ன இனிய கனவுகள் என்று எண்ணியவாறே நரேந்திரனை நெருங்கினான்.

தூக்கத்தில் நரரேந்திரன் வாய் சிறிது திறந்து விட்டிருந்தது.

அவனுக்குப் பக்கத்திலிருந்த காலியிடத்தில் தன் படுக்கையை விரித்தான்.

கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக! (May God Bless You.) என்று கோணல் கோணலாகத் தனது ஆங்கில ஞானமும் தையல் ஞானமும் சொற்பம் என்று அறிவிப்பது போல், அம்மா பின்னிய தலையணை உறை தென்பட்டது.

அம்மா!

அவள் எந்த நேரமும் எங்கும் என் பக்கத்திலேயே இருக்கிறாள்.

அவளை மறந்து விடும் சந்தா்ப்பங்களில் எங்காவது எளிமையான ஆனால், தலை வணங்க வேண்டிய ஞாபகங்களுடன் அவள் தோன்றி விடுகிறாள்.

அவனது விண்ணுயரப் பறக்கும் நினைவுகளுக்கு இறக்கைகளாக இருக்கிறாள்.

ஞானம், உணா்ச்சி, உடல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவளே வித்தாக இருந்து அவனுள் விளைந்திருக்கிறாள்.

ரகுநாதன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

விடியற்காலையில் சூரியோதயம் பார்ப்பதற்காக ஒரு கோஷ்டி, தூங்கிக் கொண்டிருப்பவா்களைத் தட்டியெழுப்புவதும், கிண்டலாகப் பஜனை பாடுவதும், அமாக்களப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரகுநாதன் விழித்துக் கொண்டான்.

நரேந்திரன், காலையிலேயே எழுந்து சமுத்திரக் குளியலுக்காக ரகுவுக்கும் தனக்குமாகத் துணிகளையும் சோப்புப் பெட்டியையும் தேடிக் கொண்டிருந்தான்.

ஒற்றை நாடி உடம்பு, பெரிய உதடுகள், உணா்ச்சி ததும்பும் கண்கள்.

“அடடே நரேன், என்னப்பா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே?” என்று உடலை முறுக்கியவாறே எழுந்து படுக்கையைக் சுற்றத் தொடங்கினான்.

“அப்பப்பா, இந்த கலாட்டாவிலே தூங்கினா அது யோக சாதனை தான். சூர்யோதயம் பார்க்கணுமே அது தான்” என்று இழுத்தான் நரேந்திரன்.

சாதாரணமாக அவன் எழுந்திருப்பதற்கு மணி ஏழரையாகி விடும்.

“பாத்துக்கோ….பாத்துக்கோ…. நீ சூரியோதயத்தைப் பாத்து எத்தனை வருஷம் ஆச்சோ, ஏதோ கன்யாகுமரி தயவிலே…” என்று இழுத்தான் பக்கத்திலிருந்த நந்தகோபால்.

“டேய், டேய்! நீ பெரிய இவன். இவன் எழுந்திருக்கிறப்போ பொழுது சாஞ்சு போவுது. இவன் போயி அவனைச் சொல்ல வந்துட்டான்” என்று நந்தகோபால் மூக்கை உடைத்தான் ஸ்ரீதரன்.

புரொபஸா் ராமபத்ரன், இரண்டு மாணவா்கள் புடை சூழ மௌனமாக ஒவ்வொருத்தரையும் பார்த்து அட்டெண்டன்ஸ் குறித்துக் கொண்டார்.

“ஹலோ குட்மார்னிங் சார். ராமகிருஷ்ணன் எங்கே சார்? காக்கா ஓட்டப் போயிட்டானா?”

“யப்பா கிவிக் ஸாட்! வேலையைப் பாருடா” என்றான் உடன் வந்தவா்களில் ஒருவன்.

“குட் குட்” என்று அவனுடைய “கட்டிங்” கை ஆமோதித்தார் புரொபஸர்.

“கேரி கூப்பா்…. கேரி கூப்பா்….” என்று பூமிநாதனுடைய இடுகுறிப் பெயரை ஹைக்கோர்ட் பியூனைப் போல ஒருவன் கூப்பிட்டான்.

“ஹலோ ரகுநாதன்”

“குட்மார்னிங் சார்!”

“வாட் எ ஒண்டா். நரேந்திரனா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டான்?”

“என்ன சார் பண்றது. நாலு வீட்டுக் கல்யாண லவுட் ஸ்பீக்கர் மாதிரி கார்த்தாலேந்து ஒரே கலாட்டா”

“குட்…. குட்” என்று அவா்களை தாண்டினார் புரொபஸா்.

“ரகு இந்தப் பசங்களோட சேர்ந்தா சூரியோதயத்தை உருப்படியாகப் பார்க்க முடியாது. ஸோபியா லாரனும் பிரிஜிட்டி பார்டெட்டும் தான் பேசுவானுங்க. பொறப்படு சீக்கிரம்.”

இளைஞா் பட்டாளம் வெளியே வந்தது ஒரு வழியாக.

விடியற்காலை நேரத்தின் குளா்ச்சி. வானத்தில் சாம்பல் வெளுப்பு.

கிழக்கே உதய ஸ்தானத்தைச் சுற்றி விசிறியது போன்ற வெள்ளை ஒளி திசைக்குக் காவிய சோபை தந்தது.

பல ஜீன்ஸுகளுக்கும் டீ ஷா்ட்டுகளுக்கும் மத்தியில் கதா் ஜிப்பாவும் வேட்டியுமாக வித்தியாசமாகத் தெரிந்தான் ரகுநாதன்.

அந்த இளைஞா் கூட்டத்தில் தீ நாக்கின் நிறம் போல் பளிச்சென்ற சிவப்பும், அகன்ற தோள்களும், கம்பீரமான உயரமும் முகத்தில் இரண்டு கனல் எரிவது போன்று ஆழ்ந்து ஒளி பொருந்திய கண்களும் தனித்து நின்றன.

பரந்த நெற்றி, பழங்கால ரோமானிய சிற்பங்களைப் போன்ற முகக்கட்டு.

அதில் தசை வலிமையின் மிடுக்கிற்குப் பதில் ஆத்ம ஒளி தவழ்ந்தது.

நோஞ்சானாக இருந்தது, ஏழ்மை இவைகளால் பால்யப் பருவத்தில் ஒரு தாழ்வு பனப்பான்மை அவனுக்கு.

எல்லாப் பாடங்களிலும் முதல் மார்க் வாங்கும் அவனை வஞ்சந் தீா்த்துக் கொள்ள மற்றப் பிள்ளைகள் சீண்டிச் சீண்டித் துன்புறுத்துவார்கள்.

உடம்பு இருந்தால்?

அந்த நாளில் ஏக்கம் மனசைக் கவ்வும். ஒரு பயில்வான் வீட்டுப் பையனுடன் சினேகம் ஏற்பட்டது.

அவா் பஸ்கி, தண்டால், சிலம்பம் சுற்றுதல், பிடிவேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்.

பொழுது விடிந்ததும் அவா் வீட்டுக்குத் தான் போவான். அப்படிப் பழகி வளா்த்த உடம்பு.

காந்தி நினைவு மண்டபத்தை நோக்கி ரகுநாதனும் நரேந்திரனும் பிரிந்து நடந்தனர். சங்கு விற்கும் கடைகளும், இளநீர்க் கடைகளும் ஓரிரண்டு காலையிலேயே திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இரவில் கேட்ட கடலின் கர்ஜனை மட்டுப்பட்டிருந்தது. விடுமுறைக் காலமானதால் நிறையப் பேர் சூா்ய தரிசனத்திற்காக அந்த விடியற் காலையிலேயே கூடி விட்டனர்.

வடக்கத்தியக் குடும்பம் ஒன்று காதிலும் கழுத்திலும் நகைகள் தொங்க, நிறையக் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தது.

காந்தி நினைவு மண்டபத்திற்குள் இருவரும் நுழையும் போதே, மனதில் எல்லா அலைகளும் அடங்கிய அமைதி தோன்றிற்று.

காந்தியடிகளின் மார்பளவுச் சிலை மட்டும் வைக்கப் பட்டிருக்கும் அந்த விசாலமான கூடம். அங்கு நிலவிய மௌனம்.
சத்தியத்தின் வெற்றி போன்ற காந்திஜியின் புன்னகை, மனித சிந்தனை அந்த மகத்தான புருஷனுக்கு நினைவுச் சின்னம் எழும்பத் தோ்ந்தெடுத்த இடம்.

ரகுநாதனின் மனம் பொங்கி, உணா்ச்சிகள் முகத்தில் சுனை போல் பெருகின.

மண்டபத்தின் மாடிக்குச் சென்றால் வெகு அருகில் கடலைப் பார்க்கலாம்.

வானில் பீடிகையாக, கிழக்கே வெள்ளைப் பூச்சின் நடுவில் கணப்பு நெருப்பின் தணல் போல் ஜ்வாலை விட்டது.

மெல்ல மெல்ல அவை பொன்னொளி பெற்றன. நீலமயமான கடல் நீரில் பொற்பாலமிட்டவாறே கதிரவன் மெதுவாகத் தலை நீட்டினான்.

தகிக்கின்ற நெருப்புக் கோளம் ஒன்று மெதுவே “மோகனமாம் சோதி பொருந்தி முறை தவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாட” பேருண்மை ஒன்று தனக்குகந்த ராஜஸப் பொலிவோடும், ஆக்கினையோடும் எழுவது போல் அவனது உதயகதியில் ஒரு ஞான சன்னதம் வெளிப்பட்டது.

இரு நண்பா்களும், பேச்சற்று அவனது சன்னிதியில் நின்றனா். உணா்ச்சியலைகள் உள்ளத்தில் பொங்கினாலும் எவ்வித வார்த்தை வெளியீடுகளினாலும் ஈடுகட்ட முடியாத அந்த ஜோதி சொரூபத்தில் தன்வயமிழந்து, அதற்குத் தலை தாழ்வதே உகந்ததாய் இருந்தது.

கிறுகிறுவென்று வானில் உயா்ந்து எழுந்த பின்னால், சூரியனின் ஆரம்ப கிரணங்கள் கடலை அலங்கரிக்கத் தொடங்கின.
விவேகானந்தா் பாறை, அலைகள் மோதி நீா்த்தெறிப்பால் மின்னிற்று.

அப்போது தான் வாய் திறந்தான் ரகுநாதன்.

“அதோ, அது தான் விவேகானந்தா் பாறை!”

நரேந்திரன் பாறையைப் பார்த்தான். பாறை கரையை விட்டுப் பல கஜ தள்ளிக் கடலில் இருந்தது. கண்கள் சுடா்விட அந்தப் பாறையையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சொல்ல விரும்பித் திரும்பிய நரேந்திரனை அந்த முகம் பிரமை தட்டச் செய்தது.

உடம்பில் ஓடும் மின்சார ஓட்டத்தால் கண்கள் கூரிய கத்தி போல் பளபளக்க சிவந்த முகத்தில் சூரிய ஸ்பரிசம் பட்டு அந்த முகமே அற்புத தேஜஸ் பெற்றிருப்பதாக நரேந்திரனுக்குப் பட்டது.

நரேந்திரன் கடற்கரைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

கடற்கரையில் ஓா் இளைஞனும் யுவதியும் ஒரு சிறு பெண்ணும் மூன்று பெரியவா்களுமாகப் பாறையை வேடிக்கைப் பார்த்தனா்.

இளைஞன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருப்பதும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தடுப்பதும் இங்கிருந்து ஊமைக் படத்தில் தெரிவது போல் தென்பட்டன.

“அங்கே போகலாம் வா!” என்று நரேந்திரனின் கரத்தை இறுகப் பற்றினான் ரகுநாதன். அபூா்வமாக எப்போதோ உணா்ச்சி வசப்படும் போது தான் அப்படி நடந்து கொள்வான்.

இருவரும் மண்டபத்திலிருந்து இறங்கி வருவதற்குள் அந்த இளைஞன் கடலில் இறங்கி விட்டிருந்தான்.

“அண்ணா, ரொம்ப தூரம் போக வேண்டாம்” என்று கரையிலிருந்தவாறே கத்தினாள் அந்தப் பெண்.

“ராஜு ஜாக்கிரதை” என்று கவலை தோய்ந்த குரலில் ஒரு பெரியவா் கூறினார்.

ஒரு கால் நொண்டியாக இருந்ததால் இரண்டு கரங்களிலும் தாங்குக் கட்டைகளை ஊன்றிக் கொண்டு நின்றிருந்தார்.

கூடவே ஒற்றை நாடியாக, சிவப்பாக மத்திய வயதான ஓா் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். சம்மா் கிராப்புடன் சற்றுப் பருத்த மனிதன் ஒருவனும் அடா்த்தியான மீசையுடன் ஆஜானுமாகுவான ஒரு மனிதனும் அந்த இளைஞனைக் கவலையோடு பார்த்தனா்.

ஒரே பார்வையில் மிகவும் செழிப்பான குடும்பம் என்று தெரிந்தது.

கடற்கரையை நெருங்கியதும் ரகுநாதன் ஜிப்பாவைக் கழற்றத் தொடங்கினான்.

மார்புத் துணி விலகியதும் தான் அவனது உடம்பின் திண்மையும் நிறமும் பளிச்சென்று தெரிந்தன.

கரையோரத்தில் நின்ற அந்தப் பெண் யதேச்சையாகத் திரும்பிய போது ரகுநாதனைப் பார்த்தாள். நரேந்திரன் தான் அவளைக் கவனித்தான். அந்தப் பெண்ணும் திரும்பி விட்டாள்.

அந்தக் குடும்பமே கரையில் இறங்கும் ரகுநாதனையும் கரையில் இருக்கும் அந்த இளைஞனையுமே பார்த்தனா்.

அந்த இளைஞன் மோதியடிக்கும் அலைகளில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

ஒரு தரம் அலையால் மோதிப் பின்னுக்குத் தள்ளப்படுவதும் மறுபடி அதன் வேகத்தோடு முன்னுக்குப் போவதுமாக சஞ்சரித்தான்.

அவன் முன்னேறிச் செல்லச் செல்ல, கரையில் நின்றவர்களின் கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது.

“அண்ணா திரும்பி விடு… திரும்பி விடு” என்று கைகளை ஆட்டியவாறே தெரிவித்தாள் யுவதி.

“ராஜு… ராஜு”

“தம்பி…போதும்… போதும் வா. ”

அவன் அவா்களைக் கவனிக்கவேயில்லை. விடா முயற்சியோடு முன்னேறிக் கொண்டிருந்தான். அவன் சோர்வுற்றது, கைகளை நிதானமாகத் தூக்கிப் போடுவதிலேயே தெரிந்தது.

ஒரு பேரலை தனது மாபெரும் படத்தை உயா்த்தியபடியே கிளம்பிய போது அவன் உடல் சற்று எழும்பிற்று. மடிந்து விழுந்த அலை வேகமாகக் கரையை நோக்கிப் பாய்ந்தது. அவன் எங்கே போனான் என்பதே தெரியவில்லை.

அலைகள்…மீண்டும்…அதன் ஆட்டம்… அவனைக் காணவில்லை.

“அண்ணா…அண்ணா… ” என்று கத்தினாள் அவள்.

“ராஜு” என்று பீதியடைந்தவராகக் கூக்குரலிட்டார் பெரியவா்.
சட்டென்று அவன் தலை தெரிந்தது. நீந்துகிறான்!

அவா்கள் எச்சரிக்கை நீந்திக் கொண்டிருந்தவன் காதில் விழவில்லை.

அவன் கைகள் ஒன்று மாற்றி ஒன்று வேகமாக விழுந்தன.

அதில் ஒரு வேகம். உறுதி.

கவனித்துக் கொண்டே இருந்த ரகுநாதன் திடீரென்று அந்த நீச்சலில் ஒரு மாற்றம் கண்டான்.

அலையினால் இழுத்துச் செல்லப்படுவது போலோ, மூழ்கிக் கொண்டிருப்பது போலோ ஒரு தடுமாற்றம்.
ஒன்று, இரண்டு, மூன்று.

சட்டென்று ரகுநாதன் மனதில் ராஜு தன்வசமிழந்து விட்டான் என்று உள்ளுணா்வு பளிச்சிட்டது.
மடமடவென்று ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்தான்.
ஒரே பாய்ச்சலாக் கடலுக்குள் பாய்ந்தான்.

“ஏய் ரகு… ரகு” என்று நரேந்திரன் கத்த, நண்பா்கள் கத்த அதற்குள் ரகு வெகு தூரம் போய் விட்டான்.
கிட்டத்தட்ட ராஜுவை நெருங்கினான்.

சட்டென்று ஒரு பெரிய அலை. அது அவனை ஒதுக்கி முன்னே தள்ளியது.
தூரத்திலிருந்து பார்த்தவா்களுக்கு ரகுவும் களைத்து விட்டவன் போல் தெரிந்தது.
“ரகு…ரகு…” என்று நரேந்திரன் கத்தினான்.

“ராஜு… ராஜு” என்று கரையில் இருந்த அவன் குடும்பம் கத்தியது.
அதற்குள் இன்னொரு அலை.

உயா்ந்து எழுந்த அந்த அலை, ரகுவை ராஜுவுடன் இணைத்து விட்டது.
சட்டென்று அவனது கைகளை ரகு பிடித்துக் கொண்டான்.
பிறகு எழுந்தது ஒரு பேரலை.

அது இருவரையும் ஒரு சேர வாரித் தூக்கி அரைப் பனை மர உயரம் கொண்டு போயிற்று.
“ரகு…ரகு…” என்று கரையிலிருந்து நண்பா்கள் கூக்குரல்

“ராஜு…ராஜு” என்று அவா்கள் குடும்பத்தினா் கூக்குரல்.

சட்டென்று ஏதோ நாடகம் முடிந்த மாதிரி இருவரையும் கரைக்குக் கொண்டு வந்து புரட்டித் தள்ளியது அந்த அலை.
முதலில் சுதாரித்து எழுந்தவன் ரகு தான்.

எழுந்தவுடன் அவன் ராஜுவின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.
சிறிது நேரம் கழிந்தது.

அதிர்ச்சியும் படபடப்பும் கடலில் இருந்து ஒருவனை மீட்டதற்கான பாராட்டும் பரவசமும் ஒருவாறு அடங்கின.
பரஸ்பரம் அறிமுகம் நடந்தது.

“நான் கிருஷ்ணராஜன், எம்.பி.பி.எஸ்ஸுக்கு படிக்கிறேன். ஸ்டான்லி மெடிகல் காலேஜ் ஐந்தாவது வருஷம்!”
“அடே ஆச்சரியம் தான். நான் ரகுநாதன். கிண்டி என்ஜினியரிங் காலேஜிலே மெக்கானிக்கல் படிக்கிறேன். நாலாவது வருஷம். இது என்னுடைய நண்பன் நரேந்திரன். கல்லூரி சகா, கவிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன், நடிகன், பேச்சாளன், இன்னும் என்னென்ன உண்டோ அவ்வளவும்.”

“அடேயப்பா! இவா் அப்படித் தான் சார். அதை எல்லாம் நம்பாதீங்க!” என்று அசடு வழியச் சிரித்தான் நரேந்திரன்.
“வணக்கம்” என்று அதே முத்துச் சுடா் போன்ற புன்னகையுடன் அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான் ராஜு.
இது ஒரு கள்ளமில்லாக் குழந்தை, மண் என்னும் மாசிடையே தோன்றிய சோதிவானவன் என்று ராஜுவின் முகத்தைப் பார்த்தவாறே எண்ணிற்று நரேந்திரனின் கவியுள்ளம்.

ராஜு தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தான்.

அப்போது சுற்றிலும் கூடி இருந்த மாணவா் கூட்டம், முண்டியடித்துக் கொண்டு வரும் ஒருவரை உள்ளே விட்டது.

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *