ஐந்து கை ராந்தல் (4)
வையவன்
“அகத்து வரூ”
க்வார்ட்டர்ஸின் கதவுக்கு மாட்டியிருந்த பச்சை ஸ்கிரீனை’த் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டாள் பிரீதா. கதவுக்கு வெளியே வாசற்படியருகில் சிவா நின்றான். கையில் குக்கர் வைத்த அட்டைப் பெட்டி.
“எந்தா குக்கரோ?” என்றாள். அவள் புன்னகையில் ஒரு பசுமைக் குளிர்ச்சி இருந்தது.
வெளியே வாட்டிய வெய்யிலில் அவளைப் பார்ப்பதே குளிர்ச்சியாக இருந்தது.
ட்யூட்டி முடித்துக் குளித்திருந்தாள். தலை ஈரம் ஆறும் முன் போட்ட மலையாளக் கொண்டை. பூசினாற் போன்று பருத்த அவளது செம்மஞ்சள் மேனிக்கு இந்த பச்சை நைலக்ஸ் மட்டுமல்ல எந்த உடையும் பொருத்தம்தான்.
விளக்கு வைத்த மாதிரி ஒரு பார்வை. அந்த குறுஞ்சிரிப்பில் கண்களின் சுடர் தெறித்தது.
சிவா காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு படியேறினான். நடுவே ஓடிய காங்க்ரீட் பாதையின் இரு பக்கமும் தண்ணீருக்குத் தவிக்கும் சின்னத் தோட்டம்.
“இண்டர்வ்யூ கழிஞ்ஞோ?” என்ஙறு அவன் கையிலிருந்த குக்கர் பெட்டியை வாங்கிக் கொண்டே கேட்டாள்.
பிரீதாவிடமிருந்து ஒரு பெர்ஃப்யூம் வாசனை வந்தது.
“இவ்விட இரீ” என்று ஒரு பிரம்பு நாற்காலியைக் காட்டி ஆதுரமாகப் புன்னகைத்தாள்.
பிரீதாவின் புன்னகையிலும் சிரிப்பிலும் கண்கள் ஒளிவிட்டன. இவளுக்கும் பாவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவள் முகத்தின் நேர்மை கேட்டது.
எவ்வளவு சுருக்கமாக இவள் தன் பிரியத்தை வெளியிடுகிறாள்!
“இதோ வருந்து” என்று பிரீதா மீண்டும் உள்ளே போனாள்.
பக்கத்திலிருந்த டீப்பாயில் ஒரு மலையாள தினசரி மடிந்து கிடந்தது. புழுக்கத்திற்கு விசிறிக் கொள்ள எடுத்தான். கீழே நந்தவனம். அந்த வாரத்து இதழ். பிரதா தமிழ் கற்று வருகிறாள் என்று நினைவு வந்தது.
எந்த இடத்தில் அவனது கதை பார்க்கக் கிடைக்கிறது!
பத்திரிகையை எடுக்கும் போது கை லேசாக நடுங்கிற்று. அட்டைப்பட ஓவியத்தைப் பார்க்கும் போது அவனுக்கு மறுபடியும் அம்மா நினைவு வந்தது. கண்கள் ஊற்றெடுத்தன-பார்வை மறையுமளவு.
‘மனமே இன்பத்திலும் துன்பத்திலும் சமமாயிரு.’ தாமுவின் முதல் கதை பிரசுரமாயிருந்தால் அவன் இவ்வளவு கிளர்ச்சியுறுவானா? வெற்றிவேல்?
‘லகானை’ இழுத்த மாதிரி அவனுக்குள் ஒரு தன்வசம் கிட்டியது.
‘டபிள் ஸ்ப்ரெட்’டாக அட்டையின் முன்னும் பின்னும் ஏழு வண்ணத்தில் பரவியிருந்த ஓவியம்.
பிரித்தான். அவனது கண்ணீரும் கண் விழிப்பும் உதிரமும் பெருமூச்சும் சிதறியிருந்த வரிகள்; பொடிப் பொடியான ஒவ்வோர் எழுத்தும் அவனது வெற்றியைச் சிற்றுளியால் கொத்திய ஒவ்வொரு கொத்து போன்று சிரித்தன.
பிரீதா ஒரு கண்ணாடித் தம்ளரோடு திரும்பி வந்தாள். லெமன் ஜூஸ்.
“கழிக்கூ”
பிரீதா நீட்டியதை வாங்கிக் கொண்டான். ‘பிரிஜ்’ஜிலிருந்து வந்ததால் டம்ளர் சில்லென்றிருந்தது.
“இண்டர்வ்யூ எந்தாயி?”
ஒரு விழுங்கு குளிர்ச்சியில் வெய்யில் பரவசம் எல்லாமே மட்டுப்பட்டன.
“மாமூல்”
“மாமூலென்னு பரஞ்ஞால்?”
“ஜஸ்ட் ஃபர் நேம் ஸேக். ஆளை ஏற்கெனவே தீர்மானிச்சாச்சு. பத்தாயிரம் ரூபாய்.”
“ஆ லெட்டரினெ கொடுத்தோ?”
அது மாதிரி நூறு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டும் பைலுமாக பருத்த மனிதர்கள் நாலைந்து பேர் இண்டர்வியூ ஹாலுக்கு வெளியே திரிந்தார்கள்.
“அதுக்கு அவசியமே ஏற்படலே”
அவன் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. பிரீதாவின் முகத்தில் வருத்தம் ஏடு கட்டியது.
‘இவளிடம் சொல்லலாமா?”
தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்று நிஜமாய் விரும்பும் இவளுக்கு இது தெரிய வேண்டுமே!
சிவா பத்திரிகையை அந்தப் பக்கத்தின் நடுவில் கை வைத்து அவள் முன்பு நீட்டினான்.
“எந்தாணு?” அவள் வாங்கி எழுத்துக் கூட்டினாள்..
“எதிரெலியே நீ எங்கே?”
சிவா சிரித்து விட்டான்.
“தெற்றாணோ?” தப்பு செய்த குழந்தை மாதிரி அவள் ரசமாக விழித்தாள்.
“எதிரொலியே நீ எங்கே?”
அவன் திருத்திப் படித்தான். அவன் விரல் கீழே எழுதியிருந்த பெயரைச் சுட்டிக் காட்டியது.
“சிவா…’ அவள் விழிகள் ஒரு கணம் நிலை குத்தின. இமைகள் படபடத்துக் கொண்டே அவன் மீது மொய்த்தன.
“ஹாய்.. நிண்டேதோ?”
“ஆம்” அவன் அடக்கப் புன்முறுவலுடன் தலையாட்டினான்.
புது வியப்புடன் பார்த்தாள். பக்கங்களைப் புரட்டினாள் படங்களைப் பார்த்தாள். கவர்ஸ்டோரி என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டிப் படித்தாள்.
அட்டைப் படத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
மீண்டும் அவன் மீது ஒரு பார்வை. அதில் ஒரு புது மரியாதை பிறந்திருந்தது.
இனி அவளுக்குத் தான் பழைய சிவா இல்லை.
வேலை தேடுகின்ற, தங்க நிழல் தந்தவர்களுக்குச் சமைத்துச் சேவகம் புரியும், பரிவிற்குரிய பழைய சிவா இல்லை.
“கங்ராஜூலேன்ஸ்.. க்ளாட். ஐ’ம் வெரி க்ளாட். எனிக்கு எத்ர சந்தோஷமென்னு பரயாம்பாடில்ல”
அவளது கரிய இமைகளில் பருத்துச் சிவந்த உதடுகளில் துளும்பிய களிப்பிலே ஒரு தூய்மை இருந்தது. அது ஒரு கன்று மரமாகிக் கனி குலுங்கக் கண்ட மகிழ்ச்சி.
சிவாவுக்குச் சிலிர்த்தது.
இவள் பார்வைக்கு தான் ஒரு வேலைக்காரன். தன் வெற்றியில் இவள் என்னமாய் பூரிக்கிறாள்!
அந்தத் தூய்மையான களிப்பும் உற்சாகமும் கண்ணுக்குத் தெரியாத ட்யூப் இணைப்புக்களில் சொட்டுச் சொட்டாய் தனக்குள் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.
“இங்ஙன நீ வல்யவனாயி”
நீ பெரிய மனிதனாய் விட்டாய் என்று அவனது உலகம் ஒரு சங்கீத மலையாளத்தில் முதன் முறையாக அவனுக்கே எடுத்துக் கூறியது.
“ஞான் இன்னு நினக்கு ஸ்வீட் தரும்”
சிவா தடுக்குமுன் பிரீதா பச்சைத் திரையின் உள்ளே மறைந்து விட்டாள்.
வெய்யிலில் பசி நடையாய் நடந்த கால் வலி எல்லாம் மறந்து விட்டது.
ஸ்க்ரீனுக்கு மாட்டியிருந்த உலோக வளையங்கள் நகர்ந்து விலகியதால் ரீங்கரித்தன. திரையை ஒதுக்கிவிட்டு பிரீதா வந்தாள்.
“அகத்துவரூ”
அவன் இதுவரை அந்த வீட்டினுள் நுழைந்ததில்லை. தயங்கினான்.
“கம் ஆன்… டோன்ட் பி ஷை!”
லெமன் ஜூஸ் தீர்ந்த காலி டம்ளருடன் அவன் எழுந்தான்.
“தரூ” அதை அவள் வாங்கிக் கொண்டாள்.
நுழைந்தவுடனே ஒரு குளுமை. இள நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். மொசைக் தரை; லாமினேட் ஒட்டிய மேஜை நாற்காலிகள்.
எதிரில் சுவற்றில் ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் குருவாயூரப்பனின் பளிங்குச் சிலை. அதற்கு வெளியே ஊதுவத்தி ஸ்டாண்டில் சந்தன ஊதுவர்த்தி மென்மையாகப் புகைந்தது.
ரூமை ஒட்டி சிறு நடை; வலப்புறம் படுக்கையறையில் நீல நைலான் கொசுவலை கட்டிலுக்கு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது.
உள்ளே நீண்ட நடை வழி. சமையலறையும் பாத்ரூமும் டைனிங் ஹாலும் உள்ளே இருக்க வேண்டும்.
சிவாவை மேஜையருகே உட்கார வைத்துவிட்டு அவள் நேரே உள்ளே போனாள். இரண்டு கைகளிலும் இரு பீங்கான் ‘ஸாஸர்’களை ஏந்தித் திரும்பினாள்.
மேஜையின் மீது வைத்தாள். ரஸகுல்லாவும், வறுத்த முந்திரியும்.
“நீங்க?”
“நீயாணு ‘கஸ்ட்.’ கதா க்ருத்தாய கஸ்ட்”
அவன் ஸ்வீட்டை விண்டு வாயில் போட்டதும் வயிறு பசித்தது.
அவள் அவனுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு மேஜை மீது ஊன்றிய இரு கரங்களாலும் மோவாயைத் தாங்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
அவனுக்குக் கூச்சமாக இருந்தது.
‘உச்சய்க்கு எந்தெங்கிலும் கழிச்சோ?”
மத்தியானம் ஒன்றும் சாப்பிடவில்லை. அந்த தகவல் இவளுக்கு எதற்கு.
“கழிச்சு” அவன் மலையாளம் பேசினான்.
“எந்த கழிச்சு?”
“சோறு”
“நுண”
“இல்லை. மெய்தான்.”
பிரீதா நம்பினாள். மலையாளத்தில் விடுவிடென்று பேசிக் கொண்டு போனாள். அவள் கண்களில் இளமை நினைவுகள் தலையெடுக்கும் மெல்லிய துயர் படர்ந்தது.
“சிவா, எனக்கு ஓர் இளம் பருவத் தோழன்இருந்தான். செரு துருத்தியில். செருதுருத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? ஷோரனூர் ஜங்ஷனுக்குப் பக்கத்தில்…”
“மகாகவி வள்ளத்தோல் பிறந்த ஊர்…”
“அதேதான். கேரள கலாமண்டலி பிரசித்தி ஆச்சே”
“கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“அங்கே கதகளி பயில்வதற்காக கொடுங்கல்லூரிலிருந்து அவன் வந்திருந்தான். செக்கச் செவேலென்று ஒரு பெண் மாதிரி… உன் சாயலில் இருப்பான்.”
“என் சாயல் என்பது எது? பெண் மாதிரியா… சிவப்பா?” சிவா சிரித்துக் கொண்டே கேட்டான்.
“உன் முகம்… உன் நடை… உன் உயரம்”
“அப்போது அவனுக்கு பதின்மூன்று வயது. கவிதை எழுதுவான். பாடுவான்”
“பெண் குரலா?”
“இல்லை… கம்பீரமான ஆண் குரல். உச்ச ஸ்தாயிக்குப் போனால் மனசை அடிமை கொள்ளும் பௌருஷம், முகத்துக்கும் இயல்புக்கும் பொருந்தாத கம்பீரமான குரல்.”
அவனை இவள் காதலித்திருப்பாளோ!
பிரீதாவே சொன்னாள்.
“என்னை அவன் காதலித்தான். நானும்…”
சிவா வாய்க்குக் கொண்டு போன ஸ்பூனை நிறுத்தினான்.
“இட்ஸ் எ காஃப் லங்… கன்றுக்குட்டிக்காதல். கற்பூரம் எரியற மாதிரி, காட்டுக் குயில் பாடற மாதிரி.. மாசுமறு வில்லாத களிப்பு.. எனக்கும் பதின்மூன்று வயது”
அவன் என்னவானான்? ஏமனுக்கோ துபாய்க்கோ தினாரோ ரியாலோ சம்பாதிக்கப் போய் விட்டானா…
பிரீதாவே தொடர்ந்தாள்.
“ஒரு நாள் என் கண்ணெதிரில்.. நான் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே அந்த பிரபாகர் செருதுருத்தியில் ஓடும் பாரதப்புழா நதியில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான்.. நாலாவது மைலில் அவன் பிரேதம் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.”
சமையலறையில் ஒரு டப்பா உருண்டது. பூனையோ! பிரீதா அசையவில்லை.
“சிவா… அதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மரணம்!”
வெண்டிலேட்டர் மீது வெய்யில் தாளாமல் வந்து உட்கார்ந்த இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிட்டன.
“உன்னைப் பார்க்கும் போது பிரபாகர் ஞாபகம் வருகிறது. உன் மாதிரியே, அவனும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான். ராஜவம்சம், அவன் முழுப் பெயர் ஆனப்பாலம் பிரபாகர வர்மா”
இதை ஏன் சொல்கிறாள்? இன்று.. இந்த வேளையில்…
“மாத்ருபூமியில் அவன் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது… ஆனால்…”
“ஆனால் என்ன?”
“அது அவன் மறைந்த பத்தாம் நாள்தான் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று”
சிவா அவள் கண்களில் நீர் துளிர்த்ததைப் பார்த்து தலை கவிழ்ந்தான்.
“அப்புறம் மரணம் அடுத்தடுத்து வந்து முகம் காட்டி விட்டுப் போயிற்று. அம்மா.. தம்பி.. அக்கா… ஒவ்வொருவராய் சட்டுச் சட்டென்று மறைந்து போனார்கள்… ஐம் ஸாரி…” அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டே புன்முறுவல் செய்தாள்.
“ஏன்?”
“என்னவோ பேசிக்கிட்டே போய் உன்னை வருத்தப்படுத்திட்டேன். ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லறேன்…”
“இட்ஸ் ஆல் ரைட்”
“தாமுவுக்குத் தெரியுமோ?…
“இல்லே”
“ரொம்ப சந்தோஷப்படுவார்”
“ஆமாம்”
“சாப்பிடு”
“மதனபள்ளியிலிருந்து தந்தி வந்தது. ஊருக்குப் போயிருக்கார். அப்பா ஸீரியஸாம்…”
“அறியாம், போன் செய்து”
அவன் முந்திப் பருப்பைத் தின்று முடித்துக் கையலம்ப எழுந்தான். அறை மூலையிலிருந்த வாஷ் பேஸினைக் காட்டினாள் பிரீதா.
பேஸின் அருகே சின்ன நாப்கின் தொங்கியது. கழுவியதும் கை துடைத்து கொண்டான்.
“வீடு ரொம்பத் துப்புரவா இருக்கு. பர்ஃபெக்ட்லி க்ளீன்.”
அவள் நாணத்தோடு சிரித்தாள்.
“தாங்க்யூ”
நாற்காலியில் அவன் வந்து உட்கார்ந்தான்.
“சிவா… இனி வேலை தேட வேண்டாம். எழுதணும். அற்புதமாய்… உன்னதமாய் எழுதணும்.”
அவன் அவளை வரம் வழங்கும் தேவதையைப் பார்ப்பது போல் நோக்கினான்.
“ஜீவிதம் அநித்தியமாணு. ஒவ்வொரு நிமிஷமும் அநித்தியமாணு.”
அழகும் ஆரோக்கியமும் இளமையும் பொலிந்து நின்ற அவளிடமிருந்து இந்த வாக்கு வருவது அதிசயமாக இருந்தது.
அவன் பிரீதாவையே உற்றுப் பார்த்தான். அவள் மலையாளத்தில் சொல்லிக் கொண்டே போனாள்.
“ஆனால் இந்த வாழ்க்கையின் மீது நீ நேசம் வைத்தால் அது நிலைத்து நிற்கும். அதற்கு அர்த்தமுண்டு. இந்த ஜனங்கள் மீது நீ அன்பு வைத்தால் நீ காவியங்களைப் படைக்கலாம்…”
சிவாவின் கண்களுக்குள் ஊடுருவியது போன்று அவள் பேசினாள்.
“ஆனா அந்த அன்பு பரிசுத்தமா இருக்கணும். லவ் ஃபர் லவ் ஸேக்”
சிவாவுக்கு இன்னும் சற்று நேரம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அதிக நேரம் இருந்து விட்டோம் என்று நினைத்தான். உடனே விடை பெற்றுக் கொண்டான்.