ஐந்து கை ராந்தல் (3)

வையவன்

படித்த தந்தியை மடித்து பைக்குள் போட்டுக் கொண்டான் தாமு. முகம் எந்த உணர்ச்சியும் காட்டாத வெற்றுக் காகிதம் மாதிரி இருந்தது.

என்ன விஷயம்?
சொல்ல மாட்டானா என்று சிவா எதிர்பார்க்கவில்லை. சொல்ல வேண்டுவதானால் சொல்லுவான் என்று அவனுக்குத் தெரியும்.

‘சிவா… ஒனக்கு டயம் ஆகுதே!”
“நான் ரெடியாய்ட்டேன்.”
“பீரோவில் பர்ஸ் இருக்கு…செலவுக்கு இருபது ரூபா எடுத்துகுடு.”
“எதுக்கு எவ்ளோ? அஞ்சு ரூபா போதும்.”

இந்த எட்டு மாதத்தல் எத்தனை இண்டர்வியூ எத்தனை ஐந்து… எத்தனை பத்து.
“சைதாப்பேட் போகணுமில்லே”
“ஆமா; அஞ்சு ரூபா போதும்.”

தாமு நிதானமாக அவனைப் பார்த்தான். அவன் மனசைப் புரிந்து கொண்ட மாதிரி ஒரு புன்னகை செய்தான்.
“ஒரு அக்கவுண்ட் வேணும்னா வச்சிக்கோ… வேலை கெடைச்சதும் நீ வாங்கினத்தையெல்லாம் திருப்பிக் கொடுக்க சௌகரியமா இருக்கும்… ஆனா வழியிலே இப்ப கஷ்டப்படாதே!”

எதிராளி நாடித் துடிப்பை தாமு இரக்கமோ மென்மையோ பாராட்டாமல் இப்படி தொட்டு விடுவான். முகத்திரையை விசுக்கென்று இழுத்து விடுவான்.

“அதுக்கில்லே”
தாமுவே எழுந்துபோய் பர்ஸிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை உருவி சிவாவின் கையில் அழுத்தினான். “கீப் இட் ஐ ஸே.” அன்பை, பரிவைக்கூட அதிகாரமாகத் தான் தாமுவுக்கு சொல்லத் தெரியும்.
சிவாவுக்கு மனம் தழுதழுத்தது.

“விஷ் யூ ஆல் த பெஸ்ட்”
“தாங்க்யூ… இன்னிக்கு மார்க்கெட்லே மீன் நல்லால்லே… சிக்கன்தான் பண்ணினேன்”
“நீ?”
“ரசம் வச்சுகிட்டேன்”

தாமு ஒரு ‘ஜோக்’ கேட்ட மாதிரி சிரித்தான்.
“நோ சிக்கன்ங… நோ ஃபிஷ்.. நோ மட்டன்… நோ டிரிங்ஸ்… நோ விமன்… நோ ஸ்மோகிங்… எல்லாம் நோ… நோ… நோ… நீ என்ன மனுஷன் சிவா?”

“ஐ ஆம் நோபடி”
தாமுவின் முகம் சட்டென்று சுருங்கிற்று.
அதைச் சொல்லி இருக்க வேண்டாமோ! புளித்த மாவைப் போல் ஒரு விரக்தி பாத்திரத்தை விட்டு வழிந்து விடுகிறது.
எத்தனை பத்திரப்படுத்தினாலும்.
வெற்றிவேல்!

அவனுக்கு தன்னிரக்கம் பிடிக்காது. விரக்தி பிடிக்காது.
இரண்டு புருவங்களை உயர்த்திக் கொண்டு ஒரு வேலாயுதத்தை மனசில் பதிக்கிற பார்வை பார்ப்பான் இப்போது தாமு அப்படிப் பார்த்தான்.

புதிய பல்ப் மாற்றிய மாதிரி தாமுவின் முகத்தில் ஓர் ஒளி பளிச்சிட்டது.
“இட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி… ஒனக்கு ஒரு வேலை கெடைக்கறதுதான் ரெமடி. கெடைச்சுடும்.”
“ஐ’ம் ஸாரி”
“ஏன்?”

“ஐ வாஸ் பிட்டர். கசப்பா பேசிட்டேன்.”
“கசப்பெல்லாம் இனிப்பாகும் காலம் ஒன்று வரும்.”
“தாங்க்யூ”

சர்ட்டிபிகேட் ஃபைலை எடுத்துக் கொண்டு படியிறங்கப் போனவனை “சிவா” என்று கூப்பிட்டான்.
சிவா நின்றான்.

“நீ எனக்கு ஒரு சின்ன வேலை செய்யணும்.”
“சொல்லுங்க.”

“வர்ற வழியிலே மவுண்ட் ரோடிலே எறங்கு. பிரீதா, ஒரு குக்கர் கேட்டிருந்தா. முந்தா நாள் மாடலை எல்லாம் பார்த்து வச்சிட்டோம். நீ ஸ்பென்சர்லே எறங்கி கேஷ் கவுண்டர்லே தாமு கிட்டேருந்து வந்திருக்கேன்னு சொன்னியானா குக்கரைக் கொடுத்துடுவாங்க. வாங்கிட்டுப் போய் அவகிட்டே சேர்த்துடணும். வுட் யூ மைண்ட் திஸ் ட்ரபிள்…?”
“நோ… நாட் அட் ஆல்”

“அங்கே வேற யாரையும் அனுப்ப நான் விரும்பலே.”
தனது அந்தரங்கத்துக்கு நீதான் உகந்தவன் என்ற மரியாதையை தாமு தருவதை உணர்ந்தான்.
“நான் மதனபள்ளி போறேன். அப்பா சீரியஸ்ணு டெலிகிராம் வந்திருக்கு. வர எவ்வளவு நாள் ஆகும்ணு போய் எஸ்.டி.டி. பண்றேன். இதையும் அவகிட்டே சொல்லிடு.”

தாமுவுக்குத்தான் இப்படி ஓர் அதிர்ச்சியை பக்குவத்தோடு ஏற்க முடியும். ரயில் தவறி விட்டதைப் பற்றிச் சொல்வது மாதிரி அவ்வளவு சாதாரணமாகச் சொல்ல முடியும்?

இவன் கருங்கல் பாறையா…. தண்ணீரில் மிதக்கும் தாமரையா…
சிவா பதறிப்போய் நிற்பதைப் பார்த்தான் தாமு.
“டேக் இட் ஈஸி… அவர் நல்லா ஆயிடுவார். ஐ டுக் இட் ஈஸி… மனுஷனாலே அப்படி எடுத்துக்கறதுதான் முடியும்.”
சிவாவின் பார்வை தாழ்ந்தது.
“நீ பொறப்படு.”
அவன் படியிறங்கினான்.

அரைவாசிப் படிகள் கடந்திருப்பான். அதற்குள் தலைகுனிந்து கொண்டே தண்ணீர்க் குடத்தோடு திஷ்யா படியேறி விட்டாள். நாலைந்து படிகள் கடந்திருந்தாள்.

படி குறுகலானது. மனிதனை விட இடம் முக்கியம் என்ற சென்னையின் சிக்கன சிரத்தையில் கட்டப்பட்டது. இடுப்பில் குடத்தோடு வரும் ஒருத்தியும் கையில் ஃபைலோடு வரும் ஒருவனும் ஒரே நேரத்தில் கடக்க முடியாது.
அவள் ஐந்தாவது படி ஏறின பின்பு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

குளித்து ஈரத்தலையைக் கொண்டை போட்டிருந்தாள். பவுடரும் மெல்லிய மையும் ஒரு சின்ன நேர் கோடு மாதிரி திலகமும் அவள் முகத்தின் செம்மையில் ஒரு சௌந்தர்யம் கூட்டியிருந்தன.
சிவாவைப் பார்த்ததும் அவள் உதட்டில் குறும்புப் புன்னகை பளிச்சிட்டது.
“என்ன காலம்பற வேட்டைக்கு கௌம்பியாச்சா?”

“சகுனம்தான் சரியில்லே”
“அப்ப திரும்பிப் போயிட்டு அப்பறமா வர்றது”
“வந்த சகுனம் வந்தாச்சு. திரும்பிப் போனா தப்பிச்சுக்க முடியுமா?”
“குடம் போறதுக்கு எடம் வேணுமே”

மீண்டும் படியேறிச் செல்ல சிவாவுக்கு விருப்பமில்லை.
“நான் ஒதுங்கி ஒட்டி நின்னுக்கறேன்”

குடத்துத் தண்ணீர் சர்ட்டிபிகேட்டில் சிந்திவிடப் போகிறது என எதிர்ப்புறமாக ஒதுங்கினான்.
ஒரு கணம். அந்தக் கன்னமும் விழியும் அவன் சமீபத்திற்கு வந்தன. அவளது இடையும் உடம்பும் அவனை லேசாகத் தொட்டு உரசிற்று.

என்ன ஒதுங்கியும் திஷ்யாவின் இடது தோள் அவன் மார்பில் இடித்து விட்டது.
இவ்வளவு நெருக்கம் இதற்கு முன்பும் ஒருமுறை கிட்டியிருக்கிறது. அது தற்செயல்.
படிக்கட்டின் கீழே அவள் கையிலிருந்து எம்பிக் குதித்த ஆனந்தைத் தூக்க அவள் குனிய அவனும் குனிந்தான். இருவர் தலையும் முட்டிக் கொண்டன.

ஒரு பெண்ணுடலுடன் நேர்ந்த முதலாவது சந்திப்பு அது இரண்டாவது சந்திப்பிலும் இப்படி ஒரு மோதல் தானா? படியேறிய திஷ்யா நின்றாள்.

இடித்து விட்டோம் என்று நாக்கைக் கடித்துக் கொண்டே அவள் திரும்பிப் பார்த்தாள்.
அந்தப் பெரிய கண்களில் மிதந்த மருட்சியும் வெட்கமும் அவன் மனசை எங்கோ கொத்தின. அவள் வாசனையும் அந்தப் பௌடர் வாசனையும் ஒரு வலை மாதிரி தன்னைச் சுற்றிக் கவிந்ததை சிவா உணர்ந்தான்.
ஒரு தித்திப்பு உள்ளில் ஊறிச் சிலிர்த்தது.

சிவா தன்னைச் சுய நிலைக்குக் கொண்டு வந்தான். கசப்பான சிரிப்பு ஒன்று அவனுள் கரைந்து மடிந்தது.
தனக்கு என்று ஒரு வேலை உண்டோ இல்லையோ, விலாசம் உண்டோ இல்லையோ, மனுஷ புத்தி என்ன கூத்தாடுகிறது?
எந்த முரண்பாடான சூழ்நிலையிலும் துளித்துளியாய் சிதறியிருக்கும் தேனுக்கு என்ன ஆவல் காட்டுகிறது!

சிவா அந்த மயக்கத்திலிருந்து தன்னைக் கத்திரித்துக் கொண்டு படியிறங்கி, தெருவைக் கடந்து சாலைக்கு வந்தான்.
வெளியே காலை, ஒன்பதரை மணிச் சென்னை ஜன்னி வேகத்தில் பதறிற்று. ஆபிஸ்… காலேஜ்… ஸ்கூல்.
பஸ் ஸ்டாப்பின் ஓரம், பிரசவ வார்டுகளுக்கு எதிரே ஒரு கூட்டம் கையைப் பிசைந்து நிற்பது மாதிரி கால் மாற்றிக் கால் மாற்றி ஜனம் நின்றது.

நிஜமாகவே ஒரு கர்ப்பிணியும் அங்கே நின்றாள். சிவா தன் உவமையின் பொல்லாங்கை ரசித்தான்.
பிரசவம்! ஒவ்வொரு பஸ்ஸும் ஒரு பிரசவ வேதனை தானா? அவன் பெட்டிக் கடை ஓரமாக நின்றான்.
கொலை, கொள்ளை, குண்டு வீச்சு, சட்ட சபையில் செருப்பு வீச்சு, ரயில் கவிழ்ந்தது என்று வீர சுதந்திரம் நமக்கு வழங்கியிருந்த அன்றாட மாமூல் சுபமங்களங்கள் பெட்டிக் கடைக்கு வெளியே தொங்கிய விளம்பரங்களில் பிரசவமாகியிருந்தன.

ஒரு வாரப் பத்திரிகையின் விளம்பரத் தாள், மன அலை பாய்ந்து சட்டென்று நின்றது.
“எதிரொலியே நீ எங்கே?”

சிவா எழுதிய சிறப்புச் சிறு கதை.
கொட்டை எழுத்துக்களில் தெரிந்த அந்த தலைப்பு எங்கோ கேள்விப்பட்ட மாதிரி யாருடையதோ மாதிரி பளீரென்று மண்டையில் அறைந்தது. தன் கதை என்பதைக் கீழே இருந்த பெயர் சுட்டிக் காட்டிற்று.

ஆம்… அது அவன் எழுதியனுப்பியிருந்த கதை. தபால் பெட்டிற்குள் போடும்போது அது அங்கிருந்தே நேராக ஒரு குப்பைக் கூடையில் போய் விழும் என்று நினைத்துக் கொண்டு போட்டது.

சரியாக ஒரு நிமிஷம். அவன் வெடித்துச் சிதறி வானில் வண்ண வண்ணமான வெளிச்சத் துணுக்குகளாகச் சிந்திய உணர்வு.

ஒரு சூன்ய மூலையிலிருந்து உதைத்து எறியப்பட்டு வேகமாய்ச் சுழன்று ஒரு வெளியில் வந்து விழுந்த இம்சையான சுகப் பிரசவம்.

பிறந்தோம். தின்று குடித்து வளர்ந்தோம். பொங்கிச் சலித்து மடிந்தோம் என்ற விதியிலிருந்து உந்தி எங்கோ ஒரு விதானத்திற்கு தள்ளிவிட்ட திக்பிரமை ஏற்பட்டது.
அவன் பரவசமுற்றான்.

கிளர்ச்சியுற்றான்.
கூடவே சோகமுற்றான். ஏன் இந்த சோகம்? புரியவில்லை.

அப்புறம்தான் சிவா மூச்சு விட்டான். ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது. இதயம் நூறு குதிரை வேகத்தில் துடிப்பது மாதிரி நினைத்தான்.

சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டு கடைக்காரன் முன் நின்று விட்டான்.
“என்ன சார் வேணும்?”

“ஒரு நந்தவனம்” என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அவன் சட்டென்று விழுங்கினான்.
இது தாமுவின் பணம். அவனுடைய சுய மரியாதையை மெச்சுகின்ற தாமுவின் பணம். அவன் வாய்க்கு வந்த வார்த்தைகள் மாறின.

“சில்லறை இருக்கா…?”
“இம்மாங் காத்தாலே சில்லறை கேட்டா எப்பிடி?”
சிவாவின் கண்கள் கயிற்றில் கிளிப் மாட்டித் தொங்கிய அந்த வார நந்தவனத்தைப் பார்த்தன.
“சரி… கொண்டா சார்”

கடைக்காரன் கல்லாவுக்குள் ரப்பர் ‘பேண்டு’ போட்டுக் கட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணினான்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாமுவிடம் வெளிப்பட்ட விரக்தி இப்போது வெகுதூரம் உலவித் திரும்பிய எதிரொலி போல் கேட்டது.

“ஐ ஆம் நோபடி!”
“தட் ஷோஸ் யூ ஆர் ஸம்படி”
ரூபாய் நோட்டுக்களை வாங்கி எண்ணுவதற்கு முன் பஸ் வந்துவிட்டது.

சிவா பாய்ந்து பஸ்ஸில் ஏறினான். அவன் எங்கே நின்றான். எப்படி இடம் படித்தான்…டிக்கெட் வாங்கினான்… எதுவும் அவன் மனசில் பதியவில்லை.

பஸ்ஸின் நெருக்கடியில் அவன் பாதிக்கப்படவில்லை. அம்மாவை நினைத்தான். வெற்றிவேலை நினைத்தான். அப்புறம் அப்பா ஞாபகம் வந்தது. நான் எழுத்தாளனாகி விட்டேன் என்றால் அவர் என்ன நினைப்பார்?

அவர் ஞாபகம் வந்து எத்தனை நாள் ஆகிறது?

சென்னைக்கு வந்தபின் எட்டு மாதங்களிலும் ஒருமுறை கூட அவனுக்கு அவரை நினைக்கிற வாய்ப்பு ஏற்படவில்லை.
இப்போது அவரைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது.

கண்டக்டர் விசில் ஊதியதும் தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துவிட்டது என்று விழிப்புற்றான்.

About வையவன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க