Tag: எம். ஜெயராம சர்மா

  • நாமுணர்வோம் !

     
    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவே
    முள்பற்றி எண்ணாமல்
    முறுவலுடன் மலர்ந்துநிற்கும்
    நல்லவர்கள் வாழ்வினிலே
    நஞ்சுநிறை முள்வரினும்
    மெல்லவரும் விலக்கிநின்று
    நல்லவற்றை நமக்களிப்பர் !

    செடிவளரும் கொடிவளரும்
    சிலவெமக்கு மருந்தாகும்
    அதனூடே வளர்ந்துவரும்
    ஆகாத செடியுமுண்டு
    அதுபோல வாழ்வினிலே
    ஆலகாலம் வரும்வேளை
    அதைப்போக்க வருபவரே
    அகிலத்தின் இரட்சகர்கள் !

    வருவார்கள் போவார்கள்
    வரவெமக்குத் தெரியாது
    வரமளித்து விட்டுவிட்டு
    மெளனமாய் போய்விடுவார்
    தெருவோரம் நின்றாலும்
    திரும்பியே நாம்பாரோம்
    அவர்சென்ற பின்னால்த்தான்
    அவர்பெருமை நாமுணர்வோம் !

    Share
  • வாழ்த்துகள் வழங்கவேண்டும் !

         [  எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ]

     

     

     

    உள்ளத்தில் உவகைவந்தால்

    உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்

    கள்ளங்கள் நிறைந்துவிட்டால்

    கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்

    நல்லதை நாடிநின்றால்

    நம்மிடம் சொர்க்கமாகும்

    அல்லவை தவிர்த்தால்வாழ்வு

    ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !

     

    மற்றவர் உன்னைப்பார்த்து

    மனவெறுப் படையாவண்ணம்

    சொற்களை எந்தநாளும்

    சுவைபடப் பேசவேண்டும்

    கற்பன கற்கவேண்டும்

    கவனத்தில் கொள்ளல்வேண்டும்

    அற்பங்கள் அகற்றிநின்று

    அன்பையே பகிர்தல்வேண்டும் !

     

    சிரிப்பினைப் பேணவேண்டும்

    சிறப்பினை நாடவேண்டும்

    பொறுப்புடன் நல்லவற்றை

    போற்றியே நிற்றல்வேண்டும்

    செருக்கினை ஒதுக்கவேண்டும்

    சினமதை ஒழித்தல்வேண்டும்

    அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து

    ஆனந்தம் அடைவாயென்றும் !

     

    வாழ்த்துகள் வழங்கவேண்டும்

    மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்

    ஆத்திரம் அடக்கவேண்டும்

    அன்பினை அளிக்கவேண்டும்

    வேற்றுமை தவிர்க்கவேண்டும்

    விருப்பமாய் பழகல்வேண்டும்

    சாற்றிடும் சொற்கள்யாவும்

    சந்தோஷம் தருதல்வேண்டும் !

     

    Share
  • வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

          ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … .அவுஸ்திரேலியா )

    மடிமீது நான்கிடக்க
    மலர்ந்தவிழி தனைப்பார்த்து
    குடிமுழுதும் காக்கவந்த
    குலசாமி எனவழைத்து
    விரல்சூப்பும் எனைரசித்து
    வேதனைகள் தனைமறக்கும்
    எனதருமை அம்மாதான்
    எப்போதும் என்தெய்வம் !

    என்கண்ணில் நீர்கண்டால்
    ஏங்கியவள் தவித்திடுவாள்
    என்சிரிப்பைப் பார்த்தவுடன்
    எல்லாமே மறந்திடுவாள்
    என்எச்சில் தனையவளும்
    இன்னமுது எனநினைப்பாள்
    எப்படிநான் துப்பிடினும்
    இருகரத்தால் ஏந்திநிற்பாள் !

    பிடிவாதம் பிடித்தாலும்
    பெருங்குறும்பு செய்தாலும்
    கடிகின்ற உணர்வகற்றி
    கருணையுடன் எனைவணைப்பாள்
    அடியுதைகள் நான்கொடுக்க
    அவள்மடியைத் தந்துநிற்கும்
    அன்புநிறை அம்மாவே
    அவனிதனில் என்தெய்வம் !

    கோவிலுக்குச் சென்றாலும்
    குலதெய்வம் பார்த்தாலும்
    சாமியென அம்மாதான்
    சன்னதியில் தெரிகின்றாள்
    தூய்மைநிறை மனமுடையாள்
    துன்பமெலாம் தாங்கிடுவாள்
    வாய்மைநிறை அம்மாவை
    வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

    Share
  • எல்லோரும் பொங்கிநிற்போம் !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    image3

    புத்துணர்வு புதுக்கருத்து

    புறப்பட்டு வந்திடட்டும்

    பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து

    புதுப்பொலிவு பெற்றிடுவோம்

    பொறுமையெனும் நகையணிந்து

    பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்

    இறைநினைப்பை மனமிருத்தி

    எல்லோரும் பொங்கிநிற்போம் !

     

    குறையகன்று ஓடிவிட

    இறைவனைநாம் வேண்டிடுவோம்

    நிறைவான மனதுவரும்

    நினைப்புடனே பொங்கிடுவோம்

    துறைதோறும் வளர்ச்சிவர

    துடிப்புடனே உழைப்பதென

    மனமெண்ணி யாவருமே

    மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

     

    சாந்தியொடு சமாதானம்

    சகலருமே பெற்றுவிட

    சந்தோஷம் வாழ்வினிலே

    சகலர்க்கும் நிலைத்துவிட

    மழைபொழிந்து பூமியெங்கும்

    பயிர்செழித்து வளர்ந்துவிட

    வழிவகுக்க இப்பொங்கல்

    வாய்துவிட பொங்கிநிற்போம் !

     

    பால்பொங்கி வருவதுபோல் பண்புபொங்கி வரவேண்டும்

    பச்சரிசி சிரிப்பதுபோல் பலமனங்கள் விரியவேண்டும்

    சுவைபயக்கும் சர்க்கரையாய் சுகங்கள்பல வரவேண்டும்

    இவையாவும் வாழ்வினிலே இருக்கவெண்ணிப் பொங்கிடுவோம் !

     

    புலம் பெயர்ந்த நாட்டினிலும்

    பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்

    நலந்திகழும் நாளாக நாமெண்ணிபொங்கிடுவோம்

    நிலம் பெயர்ந்து போனாலும்

    நெஞ்சில் பொங்கல் நிறைத்துவைத்து

    உளம் மகிழக் கூடிநின்று

    உவகைபொங்கப் பொங்கி நிற்போம் !

     

    எல்லோரும் இன்பமுற இப்பொங்கல் அமைகவென

    நல்லெண்ணம் மனமிருத்தி நாம்பொங்கல் பொங்கிடுவோம்

    பொல்லாத குணமெல்லாம் போயகல வேண்டுமென்று

    எல்லாமாய் இருக்கின்ற இறைவனைநாம் வேண்டிநிற்போம் !

    Share
  • விருப்பமுடன் செயற்படுவோம் !

        ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    காவிவேட்டி கட்டினால் கயமைக்குணம் ஓடிடும்

    வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வந்திடும்

    பட்டுவேட்டி கட்டினால் பகட்டுவந்து ஒட்டிடும்

    கிளிசல்வேட்டி கட்டுவார் கிடப்பரென்றும் தரையிலே !

     

    வேட்டிகட்டும் போதிலே விதம்விதமாய் கரையெலாம்

    காட்டிநிற்கும் தரத்தினை கண்டபோது தெரிந்திடும்

    அரசியலில் உள்ளார்கள் அவர்கள்கட்சி நிறத்தினை

    வேட்டிக்கரை ஆக்கியே விரும்பிநின்று காட்டுவார் !

     

    வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வரவேணும்

    கள்ளஞ்செய்யும் பலருமே வெள்ளைவேட்டி கட்டுகிறார்

    பள்ளிக்கூட ஆசான்கள் பாங்காய்கட்டிய வெள்ளையை

    கொள்ளை கொள்ளும்கூட்டமும் கூடவைத்து இருக்குது !

     

    துறவுகொண்ட உள்ளத்தார் தூய்மைகாட்டும் காவியை

    அறவுணர்வு அழிப்பவர் ஆடையாக்கி நிற்கிறார்

    காவிவேட்டி கண்டதும் கதிகலங்கும் நிலையினை

    காவிகட்டி கொண்டுளார்  காட்டியிப்போ நிற்கிறார் !

     

    பண்பாடு கலாசாரம் காட்டும் வேட்டி

    பலராலும் தனதுநிலை இழந்தே போச்சு

    வேட்டிகட்டி நிற்கின்றார் நிலையைப் பார்க்க

    விதம்விதமாய் எண்ணம் இப்போ தோன்றலாச்சு !

     

    படித்தவரும் கட்டினார் பாமரரும் கட்டினார்

    உடுத்திநின்ற வேட்டியினால் உவகையுடன் அவரிருந்தார்

    மடித்தகரை சால்வையினை எடுத்துத்தோழில் போட்டதும்

    துடித்தெழுந்து கம்பீரம் துளிர்த்துவிடும் அங்கேயே !

     

    வேட்டியை மடித்துக்கட்டி சால்வையை தலையில்கட்டி

    காட்டிய வீரமெல்லாம் காற்றிலே பறந்துபோச்சு

    நாட்டிலே வேட்டிகட்டி சால்வையை இடுப்பில்கட்டி

    காட்டிடும் அசிங்கம்காண கண்களே கூசுதிப்போ !

     

    தமிழ்நாட்டார் வேட்டிபார்த்து தந்தைகாந்தி கட்டிக்கொண்டார்

    அவரதையும் சுருக்கிக்கட்டி அனைவராலும் மதிப்புப்பெற்றார்

    வேட்டியதன் மகத்துவத்தை மேன்மையுறச் செய்வதற்கு

    வேட்டிகட்டும் நாமெல்லாம் விருப்பமுடன் செயற்படுவோம் !

    Share
  • பொலிந்துவிட வா !

     

        ( என் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    இரண்டாயிரத்துப் பதினேழே

    இன்முகத்துடனே எழுந்தோடிவா

    இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா

    வறுமையொடு பிணியகல

    வரம்கொண்டு வா

    வளங்கொளிக்கும் வாழ்வுவர

    மனங்கொண்டு வா

    அறியாமை இருளகல

    அறிவொளியாய் வா

    அரக்ககுணம் அழித்துவிட

    அஸ்த்திரமாய் வா

    நிலையாக தர்மமெங்கும்

    நிறுத்திவிட வா

    நிம்மதியாய் வாழ்வுவர

    நீநினைந்து  வா !

     

    சாதிமதச் சண்டையினை

    சம்கரிக்க வா

    சமாதானம் குலைப்பார்க்கு

    சவுக்காக வா

    நீதியொடு சமாதானம்

    நிலைநிறுத்த வா

    நிட்டூரம் செய்வாரை

    குட்டிவிட வா

    வாதமிட்டு வம்புசெய்வார்

    வாயொடுக்க வா

    வாழ்வென்றும் வசந்தம்வர

    மனம்சிரித்து வா !

     

    சாந்தியுடன் சமாதானம்

    கொண்டுநீ வா

    சச்சரவு ஒழித்துவிடும்

    தீர்வுடனே வா

    காந்திபோல பலமனிதர்

    பிறக்கவெண்ணி வா

    கசடெல்லாம் கழன்றோட

    காத்திரமாய் வா

    பூந்தோட்டமாய் உலகு

    பொலிந்துவிட வா

    புதுத்தெம்பு வாழ்வெல்லாம்

    புறப்படநீ வா !

     

     

    ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும்

    அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்

    அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்

    அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்

    காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்

    கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்

    நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு

    நன்மைதரும் ஆண்டாக வருவாய் நீயும்!

     

    உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம்

    முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு

    அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்

    அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !

     

    Share
  • இன்புடன் வாழலாம் !

         ( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்

    கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்

    பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்

    இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

     

    பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்

    அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்

    தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்

    வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

     

    போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே

    வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே

    மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்

    காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

     

    இறைவனை எண்ணினால்

    இன்புடன் வாழலாம்

    குறையெலாம் அகன்றுநீ

    நிறைவுடன் வாழலாம்

    கறையுடை மனத்தினை

    காணாமல் செய்திடில்

    உலகினில் உன்னதம்

    உன்னுளே உதித்திடும் !

     

    Share
  • உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் !

       ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    உடல்குறையை உளமிருத்தா

    ஊக்கமதை உளமிருத்தி

    செயற்கரிய பலவாற்றி

    திறலுடனே விளங்கிநின்று

    நலமுடனே இருக்கின்றோம்

    என்றுலகை வியக்கவைக்கும்

    மாற்றுத்திறன் மிக்காரை

    மனமார வாழ்த்திநிற்போம் !

     

    ஆண்டவன் படைப்பினிலே

    அரைகுறையாய் பிறந்தாலும்

    ஆண்டவனே வியந்துநிற்க

    அவர்செயல்கள் ஆற்றுகிறார்

    வேண்டாதார் எனவொதுக்கும்

    நிலையதனைத் தகர்த்தெறிந்து

    வியக்கவே  வைத்துநிற்கும்

    மேனிலையை வாழ்த்திடுவோம் !

     

    ஊனமுற்றார் எனவழைக்கும்

    வார்த்தைதனை பொய்யாக்கி

    வானமென உயர்ந்துநின்று

    வகைதொகையாய் பலவாற்றி

    தேர்ந்தெடுத்த வாழ்க்கைதனை

    சிறப்புடனே வாழவெண்ணி

    சீராகவாழும் அவர்

    செம்மையினை வாழ்த்திடுவோம் !

     

    நெஞ்சமதில் உறுதிகொண்டு

    துஞ்சாமல் பலதொட்டு

    வஞ்சமிலா மனத்துடனே

    வாழவெண்ணி வாழுமவர்

    ஊனமுற்றோர் எனக்கூறும்

    வட்டமதை விட்டுவிட்டு

    வாழ்நாளை மகிழ்வாக்கும்

    மனத்திடத்தை வாழ்த்திநிற்போம் !

     

    ஊனமது உடலில்லை உள்ளத்தில் இருக்கிறது

    ஞானமது வந்துவிட்டால் நம்முணர்வும் விழித்துவிடும்

    உள்ளமெலாம் ஊனம்வைத்து ஊனமதை நாம்பழித்தால்

    ஊனமுற்றார் ஊனமுறார் உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் !

     

    Share
  • எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !

    எம். ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 
    முன்னாள் கல்வி இயக்குநர்

    s-po_

    எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

    1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம்.

    எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.

    இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும்  இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது.
    ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும்  இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

    பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர்  எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

    பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோதான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

    “தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும்.

    இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார்.காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம்.வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை.முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

    எஸ்.பொ ஒரு தனித்துவமான படைப்பாளி.இவர் தனது எழுத்தில் அகலக்கால் பரப்பினாலும் – ஒவ்வொருதுறையின் அகத்தையும் புறத்தையும் உணர்ந்தே செயற்பட்டிருக்கின்றார்.

    இலக்கியத் திறமையைப் பொறுத்தவரை எஸ்.பொ தன்னை ஒரு மன்னனாகவே நினைத்துக்கொள்ளுகின்றார்.சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதத்திலும்,கதைகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது எழுத்துநடையினை மாற்றக்கூடிய வல்லமை மிக்கவராக விளங்கினார்.ஈழத்திலிருந்த மற்ற எழுதாளருக்கு இல்லாத இந்தத்திறமையினை எஸ்.பொ பெற்று விளங்கினார் என்பதே அவரின் தனித்துவம் எனலாம்.

    ” வீ ” இல் இடம்பெறும் பதின்மூன்று கதைகளுமே இந்திய தமிழ் எழுத்தாளருக்கே ஒரு சவாலாக அமைந்திருக்கிறது.” ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு , ” வீ ” யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம் என்று – வீ யின் அணிந்துரையில் இரசிகமணி கனக.செந்திநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

    இரசிகமணியும் எஸ்.பொ வும் வடக்கும் தெற்குமாயிருப்பவர்கள்.எஸ்.பொ வை விமர்சிக்கும் இரசிகமணிக்கே தனது வீ யை அனுப்பி அதற்கு அணிந்துரை கேட்பதென்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும்.இரசிகமணியே எஸ்.பொ வின் புத்தகப் பார்சல் வந்தததும் திகைத்துவிட்டாராம் என்று அணிந்துரையில் குறிப்பிடுகிறார். எழுத்தையும் அதன் திறத்தையும் மதிக்கும் நயத்தகு நாகரிகம் இரசிகமணியிடம் நிறைந்து இருந்ததாலும் – எஸ்.பொ வின் “வீ ” யின் எழுத்துப் புதுமையும் அந்தப்
    படைப்புக்கு இருந்ததாலும் மிகச்சிறந்த அணிந்துரை இரசிகமணியிடமிருந்து வந்துசேர்ந்தது. இதுதான் எஸ்.பொ என்னும் எழுதாளனின் ஆளுமையாகும்.

    பிரச்சனைக்குரிய எழுத்தாளர் எனப் பெயர்வாங்கியவர்தான் எஸ்.பொ. எழுதப்போனால் பிரச்சனை , பேசப்போனால் பிரச்சனை, என்றிருந்தாலும் அவரின் பேச்சையும் எழுத்தையும் இரசிக்கக்கூட்டம் பெருகியது என்றுதான் சொல்லலாம். எஸ்.பொ வின் எழுத்தில் ஒரு நையாண்டியும் கிண்டலும் இளயோடும்.இது அவரின் பேச்சிலும் கலந்துநிற்கும்.இதனால் அவர் அருகில் செல்லவவே பலர் அச்சப்
    படுவதுமுண்டு.

    இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்தயங்குவதில்லை. அவரின் வேலை காரணமாகவும் இந்த இயல்பு வந்திருக்கலாம்.

    ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, ஆங்கிலத்துறை விரிவுரையாளராக அதன் தலைவராக என கல்விசார் துறைகளில் நீண்டகாலம் எஸ்.பொ பணியாற்றிறி இருக்கின்றார்.நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் இவர் இருந்திருக்கிறார்.

    பணியாற்றிய காலத்திலும் இவர் அதிகாரிகளுக்குப் பயந்து நடங்கியதும் கிடையாது .மனதுக்குப் பிடித்ததைச் செய்வார்.தலையிட்டால் நியாயப்படுதுவார். ஆனால் எதற்கும் வளைந்து நெளிந்துபோகும் நிலையை அவர் விரும்பாமலே இருந்தார்.இதனால் அவருக்கு வந்த பதவிகளும், வரவிருந்த பதவிகளுமே நிலைக்காமலேயே காணப்பட்டது. எது எப்படியிருந்தாலும் எழுதுவதைமட்டும் எஸ்.பொ நிறுத்தவே இல்லை.

    குடும்பத்தில் பல துன்பங்கள் வந்துசேர்ந்து எஸ்.பொ வே இல்லாமால் ஆகிவிடுவாரோ என்னும் நிலையினையும் புறந்தள்ளி தமிழையே சுவாசித்து தமிழிலே மீண்டும் பல புதிய படைப்புகளை அளித்தார் என்பது மிகவும் முக்கியமான விஷயம் எனலாம்.

    எஸ்.பொ.வின் நனைவிடை தோய்தல் தமிழிலக்கியத்தில் ஒரு புதுவரவாகும். ” தீ ” எழுதிய பொழுது கையாண்ட எழுத்துக்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்.சொல்லலாமா ? விடலாமா? என்று தயங்காமல் சொல்லுவது யாவர்க்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் எஸ்.பொ மட்டும் இவற்றையெல்லாம் தாண்டி துணிந்து சொல்லியேவிடுவார், இதைத்தான் அவரின் தீயில் காண்கின்றோறோம். ஆனால் அவரின் ” நனைவிடை தோய்தல் ” அப்படியானதன்று.புலம்பெயர்ந்து சென்றாலும், புதுவசதிகள் கிடைத்தாலும், பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணையும் அங்கு இருந்த வாழ்க்கை முறைகளையும் எப்படி மறக்கமுடியும் ? மறக்கத்தான் மனம் வருமா ? என்னும் ஒரு நிலையினை வெளிப்படுத்தும் வண்ணம் புனையப்பட்டதுதான் இப்புதிய முயற்சியாகும்.

    பேனை கிடைத்துவிட்டால் எழுதிவிடலாம் என எண்ணுகின்றவர்களுக்கு மத்தியில் எழுத்தையே தவமாக்கி எழுத்திலே புதுமைகண்டு எழுத்துக்குள் வாழ்ந்தவர்தாதான் எஸ்.பொ எனலாம்.

    இவர் சாதாரணமாக எழுதவிரும்பாமல் – புதிதாக அதாவது பரிசோதனைகள் புகுத்தி எழுதவிரும்பினார்.அவ்வழியில் செயல்பட்டவேளை விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானாலும் விடாது செயற்பட்டார். எஸ்.பொ. என்னும் முத்திரையினைபதித்தும் நின்றார்.

    கூட்டு இலக்கிய முயற்சிகள் தோன்றவேண்டு மென்னும் ஆர்வத்துடன் எஸ்.பொ உழைத்துவந்தார்.முதன் முதலாக ஐந்து எழுதாளர்களை சேர்த்து ” மத்தாப்பு ” என்னும் குறுநாவல் வீரகேசரியில் வெளியிட்டமையும், நவரசங்களைச் சித்திரிக்கும் ” மணிமகுடம் ” என்னும் நாவலும் வீரகேசரியில் பிரசுரமாகியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

    தான் எழுதும் விஷயங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானால் போதும் என்று நினைப்பவர்களுக்குமத்தியில் சேர்ந்து கொள்ளுபவராக எஸ்.பொ ஒருபொழுதும் விளங்கியதில்லை. அவரின் எழுத்தை அவர் மிகவும் நேசித்தார்.அவர் தனது எழுத்தில் தனக்கு விரும்பியதை தந்துநின்றார்.பரிசோதனைகளை தமிழிலக்கியப் பரப்பில் பரவவிட்டார். அதற்குத்தானே ஆகுதியாகியும் நின்றார்.

    ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதப்புகுவார்கள் எஸ். பொ வை விட்டுவிட்டு எழுதமாட்டார்கள்.அந்த அளவுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்த எழுத்து ஆளுமையாக எழுத்தின் எழுச்சியாக எஸ்.பொ விளங்குகிறார் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

    ***************************

    Share
  • ஏங்கிநின்று அழுகுதையா !

     

    எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    unnamed-2

    கந்தர்வக் குரலோனே காலனுனைக் கவர்ந்தானோ
    சிந்தையிலாக் காலனவன் நொந்துவிடச் செய்துவிட்டான்
    உந்தனது இசைகேட்க உலகமே துடிக்குதையா
    உனைக்கவர்ந்த காலனுக்கு உள்ளமே இல்லையையா !

    இசையுலகம் அழுகிறது
    எழுகடலும் அழுகிறது
    இசைச்சுரமும் அழுகிறது
    எல்லோரும் அழுகின்றோம்
    அசையாமல் இசையுலகில்
    அரசாட்சி புரிந்தவரே
    ஆர்வருவார் உனைப்போல
    அருமையிசை தருவதற்கு !

    இளவயதில் இசைக்குள்ளே
    எப்படித்தான் இணைந்தாயோ
    வசையில்லா இசைபாடி
    வைரமென ஜொலித்தாயே
    புதுராகம் புதுத்தாளம்
    புறப்பட்டு வரச்செய்தாய்
    புன்சிரிப்பு முகம்காணா
    புலம்புகிறோம் நாங்களெல்லாம் !

    பொட்டிட்ட உந்தன்முகம் புன்சிரிப்பு பூத்தமுகம்
    அர்த்தமுடன் பலமொழியில் ஆற்றல்நிறை பெற்றவுளம்
    சொர்கமதை வரவழைக்கும் சுந்தரமாம் காந்தக்குரல்
    அத்தனையும் இனிநாங்கள் ஆரிடத்துக் காண்போமோ !

    இசையால் வசமாக்கி எமையெல்லாம் இசையாக்கி
    இசைகேட்க எழுந்தோடி வருகவென எமையழைத்து
    ஏழிசையாய் இசைப்பயனாய் என்னாளும் வாழ்ந்திருந்த
    இசையரசே இசைவழங்க இனிநீயும் வருவாயா!

    பாராட்டுப் பலபெற்றாய் பரிசெல்லாம் குவித்துவைத்தாய்
    பண்புடனே நீயிருந்து பாடிநின்றாய் பலகாலம்
    தாலாட்டும் உன்னிசையால் தவிப்பெல்லாம் மறந்திருந்தோம்
    தவித்தழுது நிற்கின்றோம் தாலாட்டை யார்தருவார் !

    இந்தியத் திருநாட்டின் இணையில்லா இசையரசே
    இசையாலே எல்லோரின் இதயத்துள் அமர்ந்துவிட்டாய்
    இசையுலகில் நீயில்லை எனும்சேதி கேட்டவுடன்
    இசையுலக இதயமெல்லாம் ஏங்கிநின்று அழுகுதையா !

    Share
  • உள்ளமும் உடையும் !

    எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Ed,SLEAS,

    கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்

    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    தலையங்கத்தைப் பார்த்ததும் சிறுகதையா அல்லது நாவலா என்றுதான் எண்ணத் தோன்றும். இது சிறுகதையோ நாவலோ அல்ல. மனித வாழ்விலே உடைகள் இடம்பெற்ற வரலாற்றை ஒரு பார்வையாய்ப் பார்ப்பதாகவே இக்கட்டுரை அமையப்போகிறது. உடையைப் பற்றிய சிந்தனை ஏன் , எதற்கு இப்பொழுது வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம் உடையருமை உணராமல் இருகின்ற நிலைமையேயாகும். உடையில்லா வாழ்ந்த மனிதன் ஒன்றையும் பற்றிச் சிந்திக்காமல் கிடைத்ததை எல்லாம் உண்டு – கிடைத்த இடத்திலே உறங்கி – இருந்தான். ஆனால் காலகதியில் அவனது வாழ்க்கை முறையே மாறுபட்டது. வேறுபட்டது.

    உடையில்லா வாழ்ந்தவனிடத்து ஏற்பட்ட உளமாற்றம் அவனை மரவுரி தரிக்கச் செய்தது. விலங்குகளின் தோலினை அணியச் செய்தது. இந்த வளர்ச்சி படிப்படியாக மாறி பலவித உடைகளை அணிந்து நாகரிக வாழ்விலே வாழுவதற்கு இட்டுச் சென்றது எனலாம்.

    “ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்னும் பழமொழி தோன்று வதற்கும் உடையானது மனித வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. விலங்குகளுடன் காட்டில் தானு மொருவகை விலங்காகவே மனித வாழ்வு அமைந்திருந்தது. பரிணாம வளர்ச்சியில்-  சிந்தனை என்பது மனிதனிடம் ஊன்றத் தொடங்கியதால் வெட்கம் பற்றியும், மான மென்னும் உணர்வு பற்றி யும் உணரத் தொடங்கினான். அப்பொழுது தான் மானத்தைக் காக்க உடையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகினான் என்பது வரலாறு.

    காலகதியில் இந்த உடையானது மனிதனது நாகரிகத்தின் உச்ச வெளிப் பாடாக ஓங்கி நிற்கிறது. உணவு, உடை , உறையுள் என்பன மனிதனது அடிப்படைத் தேவைகள் என்பது யாவருக்கும் தெரியும் விபரமாகும். இதில் உணவுக்கு அடுத்து உடை வருவதை நாம் கவனித்தல் வேண்டும். இதிலேயே பரிணாம வளர்ச்சி காட்டப் படுகிறது. ஆதி மனிதனுக்கு ஆரம்பத்தில் உணவு தான் முக்கியமாகப் பட்டது. உயிர்வாழ உணவுதானே அவசியம். அதனால் உணவு கிடைத்தால் போதும் என்னும் நிலை அப்பொழுது காணப்பட்டது. அதன் பின்தான் உடைக்கே மனிதன் வருகிறான். இந்த உடையைப் பற்றிய சிந்தனை வந்த பின்னர்தான் மனிதனது வளர்ச்சி சிறப்பான பாதையை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது எனலாம்.

    “இரக்கப் போனாலும் சிறக்கப்போ” – “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” “உண்பது நாழி உடுப்பது இரண்டு முளம்” – “உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே” என்றெல்லாம் எடுத்துக்காட்டுகள் வருவதுவே – உடையின் வருகையும் அதன் முக்கியத்துவத்தினாலுமே என்பது தெரிகிறதல்லவா? பண்பாடு , கலை, கலாசாரம், யாவற்றையும் பிரதிபலிக்கும் வகையிலே உடையின் பங்களிப்பு இன்றியமையாததாக  இருக்கிறதல்லவா? உடுத்தும் உடைகளைக் கொண்டே மக்களை இனம்கண்டு கொள்ளலாம். பல்லின கலாசாரத் தொட்டிலாக இன்று உலகம் விளங்குகிறது. அதில் உள்ள மக்களும் பலவித உடைகளில் பவனி வருவதனையும் இன்று காண்கிறோம் அல்லவா? அவரவர் கலாசாரத்துக்கு ஏற்ப வருகின்ற கொண்டாட்டங்கள், விழாக்கள் பண்டிகைகள், இவைகளுக் கெல்லாம் விதவிதமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதனை எங்குமே காணலாம்.

    இன்ப நிகழ்வுகளுக்கு உடுத்தும் உடைகளும் நிறங்களும் வேறுபட்டவை. அதேவேளை துன்பத்தைத் தரும் நிகவுகளுக்கான உடைகளும் அவற்றின் வண்ணங்களும் வேறு விதமானவை. வண்ணவண்ண உடைகளும் அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மங்கலத்திற்கு மஞ்சள் உடையைத் தெரிவு செய்கிறார்கள். அதேவேளை வெள்ளையைத் தேர்வு செய்வாரும் இருக்கிறார்கள். கறுப்பு வண்ண உடையைத் துக்கமாக நினைப்பாருமுண்டு. அதேநேரம் எதற்குமே கறுப்புடையைச் சாதாரணமாக அணிவாரும் காணப்படுகிறார்கள்.

    உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் உடையிலும் பிரதிபலிப்பதைப் பெரும்பாலும் காணக் கூடியதாகவே இருக்கிறது. உலகிலே பலவிதமான ஆட்சிமுறைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் அரசாட்சியில் உள்ளவர்களுக்கு என்று – வண்ணமும் உடையும் வடிவமைக்கப் பட்டிருக்கும். அந்த உடைகளும், வண்ணமுமே அவர்களது நாட்டின் அந்தஸ்த்தை காட்டுவதாகவும் கூட  அமைந்துவிடும்.

    அரசாட்சியில் நம்பிக்கை வைத்து நடக்கும் நாடுகளில் அரச பட்டமளிப்பு விழாக்களிலும், ஆட்சியாளர்களின் உடைகளிலும் பலவண்ணங்களும் பல வடிவங்களும் இடம்பெறுவதை இன்றும் காண்கின்றோம்.

    புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை, தீபத்திருநாள், நத்தார்விழா, இஸ்லாமிய விழாக்கள், என்று இன்னோரன்ன நிகழ்வுகளுக்கெல்லாம் பலவித உடைகளை மக்கள் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழ்ச்சியடைவார்கள். எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் தங்களின் திருமண விழாக்களில் அணியும் உடைகள் மிகவும் நேர்த்தியானதாகவும் உயர்ரகமாகவும் கண்ணையும்,கருத்தையும் கவருவதாய் அமைந்திருக்கும்.

    உள்ளத்துக்கும் உடைகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றால் நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். இதனைக் கருத்தில் கொணடேதான் ” சீருடை ” என்பதை நாடுகள் தோறும் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. நாடுகள் தோறும் இருக்கும் முப்படைகளுக்கும் தனித்தனியாகச் சீருடைகள் இருக்கின்றன. அந்தச் சீருடைகளை அவர்கள் அணிந்ததுமே அவர்களது உள்ள மதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். முப்படைகளில் உள்ளவர்களின் தரத்தினுக்கு ஏற்பவும் அவர்களின் உடைகளின் வடிவமைப்பும் அமைந்திருக்கும்.

    விமான ஓட்டிகள், கப்பல் மாலுமிகள் அவர்களுக்கான சீருடையினை அணியும் பொழுது அவர்கள் தங்கள் வேலைகளை உற்சாகமாகச் செய்யும் நிலை ஏற்படுகிறது. சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள் கடமையாற்றுவோர்க்கு என்று தனிச்சீருடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்தததும் அவர்களை அறியாமலேயே தங்கள் பணிகளைச் சிரத்தையுடன் ஆற்ற விளைந்துவிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் உள்ள பாடசாலைகள் தங்களின் மாணவர்களுக்கு எனத்தனியான சீருடைகளைத் தெரிவு செய்து வைத்திருக்கின்றன. மாணவர்கள் சீருடைகளை அணிந்தவுடன் அவர்களது உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் அதாவது கற்றல் பற்றியும் அதன்வழி நிற்றல் பற்றியுமான எண்ணங்கள் உருவாவதற்கு வழிவகுப்பதை அனுபவித்தால் உணர்ந்து கொள்ளமுடியும்.

    மதங்களை அடையாளப் படுத்தவும் உடைகள் உதவுகின்றன. பலவித சீருடைகளை பல மதத்தைச் சேர்ந்த மதகுருமாரும் அணிகிறார்கள். ஒவ்வொரு மதகுருமாரும் தமக்கென உடைகளையும் வண்ணங்களையும் தேர்ந்தெடுத்து அதனையே அணிகின்றார்கள். இந்துமதத துறவிகளும், பெளத்தமதத் துறவிகளும் காவி வண்ணத்தை உடையாக்கி இருக்கிறார்கள். ஏனைய மதகுருமார் கறுப்பு, வெள்ளை வண்ணங்கொண்ட உடைகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். சீருடைகள் என்பது சிறப்பானது. சீர்மையினை உடையது. சீருடைக்கு உலகு எங்கும் கெளரவமும் மரியாதையும் எக்காலத்தும் வழங்கப்பட்டே வருகிறது. சீருடை அணிந்தால் சிந்தனை வளரவேண்டும். நல்ல சிந்தனையை விதைப்பதற்கே சீருடை என்று பெயரிட்டு, தனியான உடையினைத் தெரிவு செய்திருக்கிறது உலக சமுதாயம். ஆனால் இன்று சீருடை உடுத்திய பலர் சீரழிவு செய்யும் செயல்களை மேற்கொள்வதால் சீருடை என்பதற்கே அர்த்தமற்ற நிலையே ஏற்படுவதை காண முடிகின்றது.

    மாணவர் சீருடையில் செய்யக் கூடாதவற்றைச் செய்கிறார்கள். மதகுருமார் மதத்தின் உச்சத்தில் ஏறி வெறிகொண்டு நெறி அழித்து விலங்கெனவே ஆகி நிற்கிறார்கள். காவல் துறையினர் சீருடையுடனேயே காட்டுமிராண்டிகளாகி நிற்கின்றார்கள். இராணுவச் சீருடையை அணிந்து இழிவான பலவற்றை ஆற்றி இரணியர்களாக மாறி நிற்பதையும் காண்கின்றோம்.

    மதகுருமார் சீருடையை அணிந்து விட்டால் மனத்தில் சாந்தம் வரவேண்டும். அமைதியின் இருப்பிடமாக மாறவேண்டும். அன்பு, கருணை, பாசம், நேசம் நட்பு, அனைத்தும் அவர்களின் உள்ளத்தில் அமர்ந்து விடவேண்டும். ஆண்டவனின் பிரதிநிதியாக அனைவரும் மதகுருமாரை மதிக்கின்றார்கள். அப்படியானவர்கள் அஹிம்சைதனை ஒழித்து அரக்கத்தனமும், ஆவேசமும் கொண்டவராய் அராஜகத்தினைத் தூண்டிவிடும் பாங்கில் செயல்பட்டால் சீருடைக்கே அர்த்தம் இல்லாமல்தானே போய்விடும் !இப்படியானவர்க்குச் சீருடை என்பது எப்படிப் பொருந்தி வரும்? சீருடையினைச் சீரழிக்கும் கீழ்மைக் குணமுடையோரால் சீருடையின் சிந்தனையே சிதறடிக்கப்படுகிறது.

    உடையும் உள்ளம்  – உடைகளால் வரக்கூடாது. உடை உள்ளத்தை மாற்ற வேண்டும். வண்ணங்கள் யாவுமே மனித எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்று உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள். அதனால் தான் யாவரும் வெளிச்சத்தை விரும்புகின்றார்கள். இருட்டை எவரும் இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மனம்கூட வெள்ளையாகவே இருக்க வேண்டும். மனமிருண்டால் அங்கு வாழ்வே சூனியமாகிவிடும். கோவிலுக்குச் செல்லுவதற்கும், குதிரைப் பந்தயத்துக்குச் செல்வதற்கும் கடற்கரைக்குச் செல்வதற்கும், படக்காட்சிக்குச் செல்வதற்கும், விழாக்களுக்குச் செல்வதற்கும், ஒரேவகையான உடைகளை நாம் அணிவதில்லை. எங்கே போகிறுமோ அதற்குத் தகுந்த மாதிரி உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதனை அவசியமாக்கி இருக்கிறோம்.

    “ஆள்பாதி ஆடைபாதி” என்னும் மொழிகள் வருவதற்கும் உடையின் வருகை தான் காரணமாகியிருக்கிறது. உடுத்தும் உடையைக் கொண்டு ஒருவரை மதிப்பிடுகிறோம். சில உடைகளில் வரும்பொழுது எம்மை அறியாமலேயே வணங்குகிறோம். சில உடைகளில் வரும் பொழுது மகிழ்ச்சியுடன் கைகொடுத்து வரவேற்கின்றோம். சில உடைகளை அணிந்து வரும்வேளை சிரித்துக் கிண்டல் செய்கிறோம். சில உடைகள் அணிவதால் சினம்கொண்டு பார்க்கிறோம். இங்கே வருபவர் ஒருவராக இருந்தாலும் – அவரின் உடையின் தன்மையினால் அவருக்கு ஏற்படும் மரியாதை, வரவேற்பு , அனைத்தும் மாறுபடுவதை சாதாரணமாக நடைமுறையில் காணமுடிகிறது.

    பாடசாலையில் மாணவர்களுக்குச் சீருடை இருப்பதுபோல ஆசிரியர்களுக்கு என தனியான சீருடைகள் இல்லாவிடினும் – அநேகமான ஆசிரியர்கள் வெள்ளை நிற உடையில் நேர்த்தியாகப் பாடம் நடத்தவரும் பொழுது – மாணவர்கள் மத்தியில் அவருக்கென்று தனியான ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நடைமுறையில் அதிலும் மாற்றங்கள் வந்தபடியால் ஆசிரியர் நிலையும் சற்று சிந்திக்கும்படி ஆகியிருக்கிறது என்பதையும் கவலையுடன் சொல்லி ஆகவே வேண்டி இருக்கிறது. உடையைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை? மானத்தை மறைக்க வந்ததுதானே உடை! அதை மனம் விரும்பும்படி அணிவதில் என்ன தவறு இருக்கிறது. எல்லா வண்ணங்களும் அழகுதானே! இதில் என்ன வேற்றுமையைக் காண்பது. கிடைக்கும் உடைகளை உடுத்தி, கிடைக்கும் வாழ்வை வாழ்வதை விட்டுவிட்டு இதில் போய் தத்துவம் எல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இருக்கிறதா? என்றெல்லாம் நெஞ்சினிலே பல வினாக்கள் எளக்கூடும்!

    மனிதன் ஒவ்வொருநாளும் வளர்கிறான். அவன் உடம்பு மட்டுமல்ல – உள்ளத்தாலும் என்பதை யாவரும் அறிவோம். அந்த வளர்ச்சியில் உடைமட்டும் என்ன விதிவிலக்கா?    ஆதிமனிதன் அல்ல இப்போது வாழ்கின்றவன்! அந்தமனிதன் அறிவின் உச்சியைத் தொடும் மனிதனாக இப்பொழுது வளர்ந்து விட்டான். எனவே அவனது வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகி இணைந்து நிற்கும் உடையிலே கவனம் செலுத்துவதும் முக்கியமான தொன்று என்பதை மறந்துவிடுதல் கூடாது. உடையென்பதைச் சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது. இன்று உடை தயாரிப்பு பற்றி பல உயர் பட்டப்படிப்புகளும், உடைதயாரிப்பு நிலையங்களும், உடைவிற்கும் பலவித வியாபார நிலையங்களும் உலகம் முழுவதும் நாளும் பொழுது பல்கிப் பெருகியே வருகின்றன. ஏனென்றால் மனித வாழ்விலிருந்து உடையப் பிரிக்கவே முடியாது, உடை மனித வாழ்வுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

    உடைபற்றிய சிந்தனை வந்ததற்கே காரணம் உடையால் பல உள்ளங்கள் உடைக்கப் படுகின்றன. உடையால் பல உயிர்களே பறிக்கப்படுகின்றன. உடையால் பல அசிங்கங்கள் அரங்கேற்றப் படுகின்றன. அந்த உடைகளின் மதிப்பு அதை உடுத்தி நிற்பார் கெடுக்கின்றார். இதனால் உடைகளே உடைந்து நொருங்கி அர்த்தமில்லாது போய்விடும் அவலத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மன நிலையில்தான் இக்கருத்துகள் இங்கே கட்டுரையாகி உங்கள் முன்வந்திருக்கிறது.

    Share
  • வேண்டிநிற்போம் !

     

                ( எம் .ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது

    கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள்

    மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால்

    காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !

     

    அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும்

    அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற

    முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும்

    புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே !

     

    குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது

    குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார்

    என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல்

    எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது !

     

    புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும்

    வெற்றிடமாய் எல்லாமே விரக்தியாய் ஆகிவிடும்

    சுற்றமெலாம் சூழ்ந்திருந்து துக்கத்தில் ஆழ்ந்திடுவார்

    வற்றிவிடும் வாழ்வுநோக்கி மனமழுது நின்றுவிடும் !

     

    எப்படி வருமென்று எவர்க்குமே தெரியாது

    அப்படி வந்துவிட்டால் அதுஅவர்க்கு பெருந்துன்பம்

    தப்பிவிட மாட்டோமா எனவெண்ணும் ஏக்கத்தால்

    தவியாய்த் தவிப்பதுவே பெருந்தவிப்பாய் ஆகிவிடும் !

     

    பலவிதப் புற்றுநோய்கள் பலருக்கும் வருகிறது

    சிலருக்கு சுகம்வந்து சிறிதுகாலம் வாழ்ந்திடுவர்

    புற்றுநோய் பற்றிக்கொண்டோர் புலம்பிநின்று அழுதிடுவர்

    அழுதிடுவார் கவலைபற்றி அதுவலட்டிக் கொள்வதில்லை !

     

    புகைபிடித்தால் புற்றுநோய் வருமென்று சொன்னாலும்

    புகைத்தபடி புற்றுநோய் விளம்பரத்தில் புகைவிடுவார்

    அவர்க்குப்பகை புகையென்று அறிந்து அவரிருந்தாலும்

    அவர்புகையை ரசித்தபடி ஆனந்தம் கொண்டிடுவார் !

     

    விழுப்புணர்ச்சிக் கூட்டங்கள் பலசென்று வந்தாலும்

    விழுப்புணர்ச்சி அவரிடத்தில் விழித்தபடி தானிருக்கும்

    விழுந்தெழும்பி விவரீதம் அவருக்கு வந்தபின்னர்

    விழிபிதுங்கி வேதனையில் வெந்துஅவர் துடித்துநிற்பார் !

     

    புற்றுநோய் கோரமதை புரிந்துணர்ந்து கொள்ளவேண்டும்

    புற்றுநோய் விழிப்புணர்வை பூரணமாய் பெறவேண்டும்

    அற்பமெனப் புற்றுநோயை அலட்சியமாய் பார்க்காது

    ஆரோக்கியம் நல்வாழ்வு அமைந்துவிட வேண்டிநிற்போம் !

     

    Share
  • இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
    சந்தோஷக் கடல்மூழ்கிச் சர்க்கரையை நினைந்திடுவார்
    சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
    தாம்விரும்பும் சர்க்கரையைத் தனியாகச் சுவைத்துநிற்பார்!

    உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
    விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
    பலர்மனதில் பதியாமல் பாதிவழி  நிற்பதுவே
    நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !

    நோய்க்கெல்லாம் தாயாகச் சர்க்கரைநோய் விளங்குதென
    நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
    பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
    வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்!

    சமாதானம் பலசொல்லிச் சர்க்கரையை எடுத்திடுவார்
    சலரோகம் அவரிடத்தில் சன்னதமே ஆடிநிற்கும்
    சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
    அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார்!

    உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
    நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
    இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
    இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார்!

    இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
    தனித்துநின்று இனிப்பதனைச் சுவைத்துநிற்றல்  கூடாது
    மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
    மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !

    நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது
    நாருள்ள  உணவுகளை நாம்மறக்கக் கூடாது  ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும்  முறையனைத்தும்
    மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது!

    பச்சையாய்க் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
    இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
    அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
    அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம்!

    நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
    நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
    நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
    வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில்!

    மைசூர்பாகை மறந்துவிடு
    மணக்குமல்வாவைத் தூக்கியெறி
    கேசரிகிட்டவே போகாதே
    கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
    எந்தலட்டையும் எடுக்காதே
    வந்திடுமுனக்குச் சங்கடமே
    இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
    தவித்துநிற்பாய் நோயாலே
    சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
    சந்தோஷமுன்னைத் தேடிவரும்
    இனிப்பைக்கண்டால் நாவூறும்
    இவைகளனைத்தும் இடையூறே
    இனிப்பைப்பற்றி நினையாமல்
    இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!

    வருமுன்னர்க் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
    வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது
    தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
    தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ!

     

    Share
  • இந்தியாவுக்குதவிடட்டும் !

     

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 

     

    ஐஞ்ஞூறும் ஆயிரமும் ஆலாய்ப் பறக்கிறது

    ஆரிடம் போவதென அங்கலாய்த்து நிற்கிறது 

    வங்கிகளோ நோட்டைமாற்ற மலைத்துமே நிற்கிறது

    எங்கிருந்தோ நோட்டெல்லாம் எட்டியெட்டிப் பார்க்கிறது !

     

    ஏழைகளோ உள்ளநோட்டை இரக்கமுடன் பார்க்கின்றார்

    இருக்கின்றார் அவர்களுடம் எடுத்துவிட முயலுகிறார்

    காவல்துறை இப்போது கண்விழித்துப் பார்க்காவிடின்

    கள்ளரிடம் மறுபடியும் நோட்டுக்கற்றை குவிந்துவிடும் !

     

    மோடியெனும் மூளையது முன்வைத்த திட்டமதை

    ஆடிவிடச் செய்வதற்கு அநேகம்பேர் முயலுகிறார்

    தாடிவைத்த மோடிஐயா தளர்வடைந்து போகாமல் 

    கோடிகளைப் பதுக்குவாரை கொண்டுவந்து நிறுத்துங்கள் !

     

    கறுப்புப் பணமெல்லாமே கால்முளைத்து வெளியில்வர

    எடுக்குமுங்கள் நடவடிக்கை இந்தியாவுக் குதவிடட்டும் 

    பணமுதலை பலவின்று பரிதவிக்கும் நிலைபார்த்து

    பாரதத்தாய் மனம்மகிழப் பார்த்திடலாம் மோடிஐயா !

     

    என்னதிட்டம் கொணர்ந்தாலும் எதிர்ப்புவந்து முன்னிற்கும்

    சொன்னபடி நீங்கள்செய்தால் துட்டர்தமைத் துடைத்திடலாம்

    நாணயத்தைக் காப்பாற்ற நல்லதிட்டம் கொண்டுவந்தீர்

    நாணயமாய் நடக்குமுங்கள் நாநயத்தை மெச்சுகிறோம் !

    Share