( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

 

காவிவேட்டி கட்டினால் கயமைக்குணம் ஓடிடும்

வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வந்திடும்

பட்டுவேட்டி கட்டினால் பகட்டுவந்து ஒட்டிடும்

கிளிசல்வேட்டி கட்டுவார் கிடப்பரென்றும் தரையிலே !

 

வேட்டிகட்டும் போதிலே விதம்விதமாய் கரையெலாம்

காட்டிநிற்கும் தரத்தினை கண்டபோது தெரிந்திடும்

அரசியலில் உள்ளார்கள் அவர்கள்கட்சி நிறத்தினை

வேட்டிக்கரை ஆக்கியே விரும்பிநின்று காட்டுவார் !

 

வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வரவேணும்

கள்ளஞ்செய்யும் பலருமே வெள்ளைவேட்டி கட்டுகிறார்

பள்ளிக்கூட ஆசான்கள் பாங்காய்கட்டிய வெள்ளையை

கொள்ளை கொள்ளும்கூட்டமும் கூடவைத்து இருக்குது !

 

துறவுகொண்ட உள்ளத்தார் தூய்மைகாட்டும் காவியை

அறவுணர்வு அழிப்பவர் ஆடையாக்கி நிற்கிறார்

காவிவேட்டி கண்டதும் கதிகலங்கும் நிலையினை

காவிகட்டி கொண்டுளார்  காட்டியிப்போ நிற்கிறார் !

 

பண்பாடு கலாசாரம் காட்டும் வேட்டி

பலராலும் தனதுநிலை இழந்தே போச்சு

வேட்டிகட்டி நிற்கின்றார் நிலையைப் பார்க்க

விதம்விதமாய் எண்ணம் இப்போ தோன்றலாச்சு !

 

படித்தவரும் கட்டினார் பாமரரும் கட்டினார்

உடுத்திநின்ற வேட்டியினால் உவகையுடன் அவரிருந்தார்

மடித்தகரை சால்வையினை எடுத்துத்தோழில் போட்டதும்

துடித்தெழுந்து கம்பீரம் துளிர்த்துவிடும் அங்கேயே !

 

வேட்டியை மடித்துக்கட்டி சால்வையை தலையில்கட்டி

காட்டிய வீரமெல்லாம் காற்றிலே பறந்துபோச்சு

நாட்டிலே வேட்டிகட்டி சால்வையை இடுப்பில்கட்டி

காட்டிடும் அசிங்கம்காண கண்களே கூசுதிப்போ !

 

தமிழ்நாட்டார் வேட்டிபார்த்து தந்தைகாந்தி கட்டிக்கொண்டார்

அவரதையும் சுருக்கிக்கட்டி அனைவராலும் மதிப்புப்பெற்றார்

வேட்டியதன் மகத்துவத்தை மேன்மையுறச் செய்வதற்கு

வேட்டிகட்டும் நாமெல்லாம் விருப்பமுடன் செயற்படுவோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *