எம். ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 
முன்னாள் கல்வி இயக்குநர்

s-po_

எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம்.

எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.

இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும்  இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது.
ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும்  இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர்  எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோதான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

“தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும்.

இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார்.காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம்.வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை.முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

எஸ்.பொ ஒரு தனித்துவமான படைப்பாளி.இவர் தனது எழுத்தில் அகலக்கால் பரப்பினாலும் – ஒவ்வொருதுறையின் அகத்தையும் புறத்தையும் உணர்ந்தே செயற்பட்டிருக்கின்றார்.

இலக்கியத் திறமையைப் பொறுத்தவரை எஸ்.பொ தன்னை ஒரு மன்னனாகவே நினைத்துக்கொள்ளுகின்றார்.சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதத்திலும்,கதைகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது எழுத்துநடையினை மாற்றக்கூடிய வல்லமை மிக்கவராக விளங்கினார்.ஈழத்திலிருந்த மற்ற எழுதாளருக்கு இல்லாத இந்தத்திறமையினை எஸ்.பொ பெற்று விளங்கினார் என்பதே அவரின் தனித்துவம் எனலாம்.

” வீ ” இல் இடம்பெறும் பதின்மூன்று கதைகளுமே இந்திய தமிழ் எழுத்தாளருக்கே ஒரு சவாலாக அமைந்திருக்கிறது.” ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு , ” வீ ” யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம் என்று – வீ யின் அணிந்துரையில் இரசிகமணி கனக.செந்திநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இரசிகமணியும் எஸ்.பொ வும் வடக்கும் தெற்குமாயிருப்பவர்கள்.எஸ்.பொ வை விமர்சிக்கும் இரசிகமணிக்கே தனது வீ யை அனுப்பி அதற்கு அணிந்துரை கேட்பதென்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும்.இரசிகமணியே எஸ்.பொ வின் புத்தகப் பார்சல் வந்தததும் திகைத்துவிட்டாராம் என்று அணிந்துரையில் குறிப்பிடுகிறார். எழுத்தையும் அதன் திறத்தையும் மதிக்கும் நயத்தகு நாகரிகம் இரசிகமணியிடம் நிறைந்து இருந்ததாலும் – எஸ்.பொ வின் “வீ ” யின் எழுத்துப் புதுமையும் அந்தப்
படைப்புக்கு இருந்ததாலும் மிகச்சிறந்த அணிந்துரை இரசிகமணியிடமிருந்து வந்துசேர்ந்தது. இதுதான் எஸ்.பொ என்னும் எழுதாளனின் ஆளுமையாகும்.

பிரச்சனைக்குரிய எழுத்தாளர் எனப் பெயர்வாங்கியவர்தான் எஸ்.பொ. எழுதப்போனால் பிரச்சனை , பேசப்போனால் பிரச்சனை, என்றிருந்தாலும் அவரின் பேச்சையும் எழுத்தையும் இரசிக்கக்கூட்டம் பெருகியது என்றுதான் சொல்லலாம். எஸ்.பொ வின் எழுத்தில் ஒரு நையாண்டியும் கிண்டலும் இளயோடும்.இது அவரின் பேச்சிலும் கலந்துநிற்கும்.இதனால் அவர் அருகில் செல்லவவே பலர் அச்சப்
படுவதுமுண்டு.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்தயங்குவதில்லை. அவரின் வேலை காரணமாகவும் இந்த இயல்பு வந்திருக்கலாம்.

ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, ஆங்கிலத்துறை விரிவுரையாளராக அதன் தலைவராக என கல்விசார் துறைகளில் நீண்டகாலம் எஸ்.பொ பணியாற்றிறி இருக்கின்றார்.நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் இவர் இருந்திருக்கிறார்.

பணியாற்றிய காலத்திலும் இவர் அதிகாரிகளுக்குப் பயந்து நடங்கியதும் கிடையாது .மனதுக்குப் பிடித்ததைச் செய்வார்.தலையிட்டால் நியாயப்படுதுவார். ஆனால் எதற்கும் வளைந்து நெளிந்துபோகும் நிலையை அவர் விரும்பாமலே இருந்தார்.இதனால் அவருக்கு வந்த பதவிகளும், வரவிருந்த பதவிகளுமே நிலைக்காமலேயே காணப்பட்டது. எது எப்படியிருந்தாலும் எழுதுவதைமட்டும் எஸ்.பொ நிறுத்தவே இல்லை.

குடும்பத்தில் பல துன்பங்கள் வந்துசேர்ந்து எஸ்.பொ வே இல்லாமால் ஆகிவிடுவாரோ என்னும் நிலையினையும் புறந்தள்ளி தமிழையே சுவாசித்து தமிழிலே மீண்டும் பல புதிய படைப்புகளை அளித்தார் என்பது மிகவும் முக்கியமான விஷயம் எனலாம்.

எஸ்.பொ.வின் நனைவிடை தோய்தல் தமிழிலக்கியத்தில் ஒரு புதுவரவாகும். ” தீ ” எழுதிய பொழுது கையாண்ட எழுத்துக்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்.சொல்லலாமா ? விடலாமா? என்று தயங்காமல் சொல்லுவது யாவர்க்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் எஸ்.பொ மட்டும் இவற்றையெல்லாம் தாண்டி துணிந்து சொல்லியேவிடுவார், இதைத்தான் அவரின் தீயில் காண்கின்றோறோம். ஆனால் அவரின் ” நனைவிடை தோய்தல் ” அப்படியானதன்று.புலம்பெயர்ந்து சென்றாலும், புதுவசதிகள் கிடைத்தாலும், பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணையும் அங்கு இருந்த வாழ்க்கை முறைகளையும் எப்படி மறக்கமுடியும் ? மறக்கத்தான் மனம் வருமா ? என்னும் ஒரு நிலையினை வெளிப்படுத்தும் வண்ணம் புனையப்பட்டதுதான் இப்புதிய முயற்சியாகும்.

பேனை கிடைத்துவிட்டால் எழுதிவிடலாம் என எண்ணுகின்றவர்களுக்கு மத்தியில் எழுத்தையே தவமாக்கி எழுத்திலே புதுமைகண்டு எழுத்துக்குள் வாழ்ந்தவர்தாதான் எஸ்.பொ எனலாம்.

இவர் சாதாரணமாக எழுதவிரும்பாமல் – புதிதாக அதாவது பரிசோதனைகள் புகுத்தி எழுதவிரும்பினார்.அவ்வழியில் செயல்பட்டவேளை விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானாலும் விடாது செயற்பட்டார். எஸ்.பொ. என்னும் முத்திரையினைபதித்தும் நின்றார்.

கூட்டு இலக்கிய முயற்சிகள் தோன்றவேண்டு மென்னும் ஆர்வத்துடன் எஸ்.பொ உழைத்துவந்தார்.முதன் முதலாக ஐந்து எழுதாளர்களை சேர்த்து ” மத்தாப்பு ” என்னும் குறுநாவல் வீரகேசரியில் வெளியிட்டமையும், நவரசங்களைச் சித்திரிக்கும் ” மணிமகுடம் ” என்னும் நாவலும் வீரகேசரியில் பிரசுரமாகியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தான் எழுதும் விஷயங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானால் போதும் என்று நினைப்பவர்களுக்குமத்தியில் சேர்ந்து கொள்ளுபவராக எஸ்.பொ ஒருபொழுதும் விளங்கியதில்லை. அவரின் எழுத்தை அவர் மிகவும் நேசித்தார்.அவர் தனது எழுத்தில் தனக்கு விரும்பியதை தந்துநின்றார்.பரிசோதனைகளை தமிழிலக்கியப் பரப்பில் பரவவிட்டார். அதற்குத்தானே ஆகுதியாகியும் நின்றார்.

ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதப்புகுவார்கள் எஸ். பொ வை விட்டுவிட்டு எழுதமாட்டார்கள்.அந்த அளவுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்த எழுத்து ஆளுமையாக எழுத்தின் எழுச்சியாக எஸ்.பொ விளங்குகிறார் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

***************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *