Tag: மு.கோபி சரபோஜி

  • இறைவனை அடையும் மார்க்கம்

    — மு.கோபி சரபோஜி.

    திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான். இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்துக் காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார். மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.

    Kannappaஅன்பினால் தன்னைக் கட்டும் பக்தனின் வழிபாட்டைக் காலையில் மறைந்திருந்து பார்க்கும் படி அவர் கனவில் வந்து சொல்லிச் சென்ற இறைவன் மறுநாள் திண்ணனுக்காகக் காத்திருந்தார். வழக்கம் போலப் பன்றி இறைச்சி சகிதம் வந்தவன் சிவலிங்கத்தின் ஒருபக்கக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதறிப்போனான். தன் கையால் நிறுத்த முயன்றான். முடியவில்லை, பச்சிலைகளைப் பறித்து வந்து ஒற்றி எடுத்தான். பலனளிக்கவில்லை. சட்டெனக் கையில் வைத்திருந்த வில்லால் தன் கண்களில் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த கண் மீது அப்பினான். இரத்தம் நின்று விட்டது. ஆனந்தம் அடைந்தான். இன்னும் அவனைச் சோதித்துப் பார்க்க நினைத்த இறைவன் அடுத்த கண்ணில் இருந்து இரத்தம் வடித்தார். இம்முறை பதறாத திண்ணன் அடையாளம் காண வசதியாகத் தன் கால் கட்டைவிரலை இரத்தம் வடிந்த கண்ணின் மீது வைத்துக் கொண்டு தன்னுடைய இன்னொரு கண்ணையும் வில்லால் தோண்டி எடுக்க முயன்றான். பக்தனின் அன்பைக் கண்டு பதறிப்போன இறைவன் நிறுத்து கண்ணப்ப என்ற குரலோடு அவன் முன் தோன்றி ஆசி வழங்கினார். அன்பினால் செய்யும் பக்தி எதுவானாலும் அது தனக்கு உகந்தது என்பதை சிவகோசாரியாருக்கு மட்டுமல்ல உலகிற்கும் இறைவன் உணர்த்திக் காட்டினான். திண்ணன் கண்ணப்ப நாயனாராய் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவராய் புகழ் பெற்றார். அவரைப் போல நாம் நம் கண்களை எல்லாம் இறைவனுக்குத் தர வேண்டியதில்லை. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்தாலே போதும்!

    பிரார்த்தனை செய்வதால் மனமானது கடவுளிடம் ஐக்கியமாகிறது. அதன்வழி கிடைக்கும் இறை சக்தியும், மனதின் ஆன்ம சக்தியும் ஒன்று சேரும் போது நம் மனதின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட்டு மனமானது தூய்மை அடைகிறது. நம்முடைய மனதைச் செம்மையாக்கிக் கொள்வதற்கான வழிகளை வேண்டுவது மட்டுமே பிரார்த்தனையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிரார்த்தனையின் இன்னொரு வடிவம் “பஜனை”! ”பஜ்” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. பஜ் என்றால் ”அடைக்கலமாதல்”, “துணையால் சந்தோசமடைதல்” என்று பொருள். பஜனையைக் குறிக்கக் கூடிய கீர்த்தனைகள், சங்கீதங்கள், மந்திர ஜபங்கள், இறைநாமம் பாடுதல் ஆகியவற்றின் மூலம் இறைவனை நாடிச் செல்லும் போது நமக்குள் இருக்கும் அகந்தை, அகங்காரம் ஆகியவை தானே அகன்று விடுகிறது. ”அகங்காரம் தொலைத்து ஆலயம் நுழை” என்றார்கள். அப்படி நுழைகிறோமா? இறைவனைச் சேவிக்கச் செல்லும் சமயங்களில் கூட அதிகாரம், அந்தஸ்து போன்ற பகட்டுத்தனங்களைக் காட்டிக் கொண்டு வரிசை பிடிக்கிறோம். இவற்றை இறைவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவனின் விருப்பமின்மையை நாமும் உணர்வதில்லை. அதனால் தான் இறைவனை அணுகுவதற்கான எளிய வழிகளை எல்லாம் சிக்கலான மதச்சடங்குகளாகவும், வழிபாட்டு முறைகளாகவும் மாற்றிக் கொண்டு அவஸ்தைகளுக்கு உள்ளாகி நிற்கிறோம்.

    இவ்விரு வழிகள் தவிர இறைவனை அடைய ஞானிகளும், ரிஷிகளும் உருவாக்கிக் காட்டிய இன்னொரு எளிய மார்க்கம் அன்பு! ”அன்பே கடவுள்” என்கிறார் திருமூலர். அவரின் வாக்கை உலகிற்கு உய்ப்பித்துக் காட்டியவர் பிள்ளையார்!

    பக்தன் ஒருவனின் வழிபாட்டிற்குப் பிள்ளையார் உருவம் தேவைப்பட்டது, தன் கையில் இருந்த வெல்லத்தைப் பிள்ளையாராய் பிடித்து வைத்தான். அவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரும் அதில் உறைந்தார். கையிலிருந்த வெல்லத்தைப் பிள்ளையாராக்கி விட்டதால் நிவேதனம் செய்ய அவனிடம் ஏதுமில்லாமல் போனது, இறை வழிபாட்டில் நிவேதனம் செய்தல் முக்கியம். அவரையே கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தான். திண்ணனின் அன்போடு கொடுத்த பன்றி இறைச்சியை சிவபெருமான் ஏற்றதைப் போல தன் பக்தனின் அன்பையும் பிள்ளையார் ஏற்றதன் அடையாளமாகப் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற பழமொழி உருவானது.

    இறைவனிடம் அன்பு செலுத்தும் போது அதில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். அதற்குப் பற்றற்று இருக்கப் பழக வேண்டும். பற்றுக்கு அடிமையான மனதில் கிளர்ந்தெழும் ஆசைகள் துன்பங்களை உற்பத்தி செய்த படியே இருக்கின்றன, அதனால் தான் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் புத்தர். சுட்டது போலும் விட்டது ஆசை என்று அருணகிரிநாதர் கூறுவதைப் போல ஆசைகளைத் தூண்டும் பற்றை விட வேண்டும். சட்டென எப்படி விடுவது?. பருந்து ஒன்று மூக்கில் ஒரு மீனைக் கவ்விச் சென்றது, அம்மீனைப் பறிப்பதற்காகச் சில காகங்கள் அந்தப் பருந்தைச் சுற்றிலும் ஆரவாரம் செய்தன. தொடர்ந்து பறக்க முடியாதவாறு அவை குறுக்கும், நெடுக்குமாய் பின் தொடர்ந்த படியே இருந்தன. தொந்தரவு பொறுக்க முடியாத பருந்து மீனை அங்கேயே போட்டதும் காகங்கள் பருந்தைத் தொந்தரவு செய்யவில்லை. தன் போக்கில் பருந்து பறந்து சென்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இந்தக் கதையில் வரும் பருந்து மீனை விட்டதைப் போல பற்றுக்களை விடப் பழகினால் அந்தக் கணமே நம்மாலும் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். நாம் எப்பொழுதாவது அப்படி விடுபட முயன்று இருக்கிறோமா?

    Share
  • கலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்

    –மு. கோபி சரபோஜி.

    Ganesh-chaturthi-Hd-images

    காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த சூரபத்மன் வரங்கள் வேண்டி சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பலவாகியும் சிவபெருமான் காட்சி தராததால் கடுப்பானவன் தன் உடல் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறுத்து யாக குண்டத்தில் போட்டு எரித்துக் கொண்டு தானும் அதிலேயே விழுந்தான். அவனின் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி காட்சியளித்ததோடு தேவர்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும், எத்திசையும் செல்ல இந்திரஞாலத் தேர் வேண்டும், அழியாத யாக்கை வேண்டும் என சூரபத்மன் கேட்ட வரங்களையும் கொடுத்தார்.

    வரம் வாங்கியதும் கடலுக்குள் தனக்கான தலைநகரான வீரமகேந்திரபுரத்தை அமைத்தான். தேவலோகத்தின் மீது படையெடுத்து வென்றான். அவனிடமிருந்து தப்பிய தேவலோகத் தலைவனான இந்திரன் தன் மனைவியோடு சீர்காழிக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து மூங்கில் மரத்தில் மறைந்து வாழ்ந்த படியே தன்னைக் காத்தருளுமாறு தன் பதவிக்கே வேட்டு வைத்த சிவபெருமானை வேண்டி நின்றான்.

    இந்திரனின் மனைவியான இந்திராணியின் அழகைப் பற்றி அறிந்த சூரபத்மன் தனக்கு ஏவல் செய்ய அவளையும், அவளோடு சேர்த்து இந்திரனையும் அரண்மனைக்குப் பிடித்து வாருங்கள் என தன் படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டான். கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டதும் நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை சூரபத்மன் படைகள் மேற்கொண்டிருந்த நிலையில் கலகக்காரரான நாரதர் இந்திரனைச் சந்தித்து வளரொளி நாதரை அணுகி அவர் பாதம் பணிந்தால் மட்டுமே உன் தலை தப்பும் எனச் சொல்ல தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தங்களின் குடும்பத்தோடு வளரொளி நாதரிடம் வந்து தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் அடைந்தவர்களின் தலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டதும் மகிழ்ந்து போன தேவேந்திரன் தேவதச்சனை அழைத்து வளரொளி நாதருக்கு ஒரு கோயில் கட்டும் படி பணித்தான். அந்த இடம் தான் இன்று காரைக்குடி பக்கத்தில் இருக்கும் ”வயிரவன் பட்டி”!

    அடையாளம் காட்டிக் கொள்ளாத உளவாளிகளாய் எங்கும் ஊடுருவி தேடுதல் வேட்டையை நடத்திய சூரபத்மனின் ஒற்றர்கள் தேவேந்திரனோடு தேவர்கள் அனைவரும் வயிரவன் பட்டியில் தஞ்சம் அடைந்திருப்பதை அறிந்து தலைமைக்குத் தகவல் அனுப்பினார்கள். தகவல் கிடைத்த உடனேயே சூரபத்மனின் படைத்தளபதிகள் தத்தம் அசுரப்படைகளை வயிரவன்பட்டியை நோக்கிச் செலுத்தினர். செய்தியறிந்த தேவர்கள் பயந்து போய் ஆலயத்திற்குள் சென்று பதுங்கினர். தான் உயிர் உத்தரவாதம் கொடுத்திருக்கும் தேவர்களைத் தன் எல்லைக்குள்ளேயே நுழைந்து தாக்க தயாராகி நின்ற அசுரப்படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்த வளரொளி நாதர் முடிவு செய்தார். தன் படைகளுக்குத் தலைமையேற்றுச் செல்ல ஒப்புக் கொண்ட நந்தி தேவர் போர்க்களத்தில் விநாயகர் முன்னே செல்ல அவரின் பின்னால் படைகள் அணிவகுத்தால் நன்றாக இருக்கும் என அபிப்ராயம் சொல்ல உடனடியாக விநாயகரிடம் பேசி ஒப்புதல் பெற்றுக் கொடுத்த வளரொளி நாதர் தன் படைகளுக்கு வயிரவர் கோலம் தாங்கிய திருவுருவம் காட்டி களத்திற்கு அனுப்பி வைத்தார். நந்தி தேவரின் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து நிற்க விநாயகர் தன் பூதப்படைகள் சூழத் தேர் ஏறினார். நந்தி தேவரின் தலைமையிலான படைகளும், விநாயகரின் பூதப் படைகளும் போர்க்களத்தில் முகாமிட்டிருந்த அசுரப்படைகளைச் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தன.

    தன் பூதப்படைகளுடன் விநாயகர் களத்திற்கு வந்திருப்பதை அறிந்து கோபம் கொண்ட கும்பாண்டகன் என்ற அசுரப் படைத்தளபதி நேரடியாக பூதப்படைகளைத் தாக்கும் படி தேவகண்டன் என்ற தன் துணைத்தளபதிக்கு உத்தரவிட்டான். அவன் தலைமையில் களம் புகுந்த அசுரப்படைகளின் தாக்குதலில் சிக்கி பூதப்படைகள் சிதறி ஓடத் துவங்கின. பூதப்படையில் இருந்த விநாயகரின் தொண்டனான பிரளயனின் தேரை தேவகண்டன் அம்பால் வீழ்த்திச் சாய்த்தான். தன் பக்தர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விடுவாரா விநாயகர்? தேரில் ஏறி நேரே அப்பகுதிக்குள் நுழைந்தார். அதுவரையில் உள்ளூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வம்பு செய்து கொண்டு இருக்கும் கலவரக் கும்பல் அதிரடிப்படை வந்ததும் தெறித்து ஓடுவதைப் போல விநாயகர் கூடுதல் படைகளோடு வந்து சேர்ந்ததும் பூதப்படைகளின் தாக்குதலில் அசுரப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. தன் பக்தனை அம்பால் வீழ்த்திய தேவகண்டனைத் தாக்கிய விநாயகர் அவனின் ஆயுதங்களை இழக்க வைத்து நிராயுதபாணியாக்கினார்.

    தனித்து நிற்பவனைத் தாக்கி அழிப்பது போர் தர்மம் அல்ல என்கிறபோது தான் செய்தால் அது தர்மமாகவே இருக்காது என நினைத்த விநாயகர் ”இன்று போய் நாளை வா” என அவனை உயிரோடு அனுப்பி வைத்தார். இப்படித் தனக்குத் தரப்பட்ட உயிர்ப்பிச்சை தன் திறமைக்கே அவமானம் என நினைத்த தேவகண்டன் ஆயுதமில்லாவிட்டால் என்ன? அசுரபலத்தைக் காட்டுகிறேன் பார் என அருகில் இருந்த ஒரு மலைக்குன்றைப் பிடுங்கி விநாயகரை நோக்கி எறிந்தான். உயிர்ப்பிச்சை கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம் என நினைத்த விநாயகர் தன்னை நோக்கி வந்த மலையை உடைத்தெறிந்த கையோடு அவன் தலையையும் கொய்து எறிந்தார்.

    துணைத்தளபதியின் தலை கொய்து எறியப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த கும்பாண்டகன் பின் வாங்கி நின்ற அசுரப் படைகளை முன்நோக்கிச் சென்று தாக்குமாறு கட்டளையிட்டான். தளபதியின் நேரடி உத்தரவு என்பதால் அசுரப்படைகள் முன்னிலும் வேகமெடுத்துப் பாய்ந்தன, அந்தப் பாய்ச்சலில் விநாயகரின் பூதப்படைகளோடு நந்தி தேவரும் நடுநடுங்கிப் போனார். நிலைமை சிக்கலானதால் மீண்டும் களத்துக்கு வந்த விநாயகர் அசுரப்படைகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தியதோடு இம்முறை உயிர்ப் பிச்சை எல்லாம் தரமுடியாது எனச் சொல்லி விட்டு கும்பாண்டகன் தலையை வெட்டி எறிந்தார்.

    தங்கள் தளபதிகளின் தலைகளைக் காவு கொடுத்து விட்டு அசுரப்படைகள் கலங்கிப் போய் நிற்க விக்கிரதமிட்டிரன் என்ற அசுரத்தலைவன் தன் வலிமை முழுவதையும் திரட்டி மிகப்பெரிய மலை ஒன்றைப் பிடுங்கி விநாயகரின் மீது எறிந்தான். அம்மலை அவரின் மீது மோதி விடாமல் தடுத்து நிறுத்திய பூதப்படைகள் அம்மலையைக் குகை போல வடிவமைப்புச் செய்ய அதில் எழுந்தருளி தன் படை வீரர்களுக்குக் காட்சி தந்து அருள்பாளித்த விநாயகர் இப்படி ஒரு சிம்மாசனம் தந்ததற்குக் கைமாறாக விக்கிரதமிட்டிரனையும் போட்டுத் தள்ளினார். ஆனாலும், ஓயாத அலையாய் அடுத்தடுத்து அசுரப்படைகள் வந்த படியே இருந்தன.

    எத்தனை பேரைத் தான் தானே போட்டுத் தள்ளுவது? தலைமையேற்று வரும் தளபதிகளை எல்லாம் தானே அழித்து விட்டால் படைகளை வழிநடத்தி வந்த நந்தி தேவருக்குக் களங்கம் வந்து விடாதா? என நினைத்த விநாயகர் வயிரவப் படைகளுக்கு உதவியாகத் தன் பூதப்படைகளின் ஒரு பிரிவைக் களத்திலேயே இருக்கச் செய்து விட்டுத் தான் எழுந்தருளிய மலைக்குன்றிலேயே தங்கி விட்டார். அப்படி அவர் தங்கிய தலம் தான் “பிள்ளையார் பட்டி”!

    காரைக்குடியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இந்த விநாயகர் ”கற்பக விநாயகர்” என்றழைக்கப்படுகிறார். ”கல்” என்றால் ”பாறை”, ”பகு” என்றால் ”பகுத்தல்” – ”பிளத்தல்”. பாறையைப் பிளந்து எழுந்தருளி இருப்பவர் என்பதால் கற்பக விநாயகர் எனப் பெயர் பெற்றார். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத இரு கடவுளர்களுள் ஒருவர் விநாயகர். இன்னொருவர் ஆஞ்சநேயர். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத விநாயகரைப் பக்தன் சாணத்திலோ, மஞ்சளிலோ, சர்க்கரையிலோ பிடித்து விட முடியும் என்பதால் தான் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்றழைக்கப்பட்டார்.

    தனக்குத் தானே நாயகராய், கடவுளுக்கெல்லாம் முதல்வராய் இருந்தும் குளத்தங்கரையிலும், முச்சந்தியிலும், தெருமுனைகளிலும் ”ஏழை”க் கடவுளாய் எழுந்தருளி பக்தனுக்காகத் தன்னை எளிமைப் படுத்திக் கொண்ட விநாயகருக்கு உகந்த பல விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மண்ணில் செய்து நீர்நிலைகளில் கரைப்பதற்குப் பெயர் “விசர்ஜனம்”. மனதில் நாம் பல உருவங்களைச் செய்து கொள்கிறோம். அவற்றை ஒரு காலத்தில் உடைத்தெறிய வேண்டும். உருவங்களை வழிபடுபவன் வழிபடு பொருளின் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உன்னதத்தைத் தன்னையே விசர்ஜனம் செய்து கொண்டு விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். நாமோ அதையெல்லாம் உணராமல் அந்நாளில் பூஜை அறையில் இருக்கும் விநாயகரைச் சாலைகளில் இறக்கிக் கலர், கலர் மையிட்டு அழகுபடுத்தி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறோம். கடற்கரைக்குக் கரைக்கக் கொண்டு போகிறேன் பேர்வழி எனக் கலவரங்களை உண்டு பண்ணுகிறோம். ”ஏழை”க் கடவுளை “ஏழரை”க் கடவுளாக ஆக்கியதன் விளைவு பக்தனைக் காக்க வேண்டிய கடவுளை காவலர்கள் காக்க வேண்டிய நிலை உருவானது.

    பக்தனுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம். அந்தக் கடவுளுக்கே சோதனை வந்தால் அவர் யாரிடம் போய் முறையிடுவார்? இதையெல்லாம் யோசித்தால் பக்தனுக்கு மட்டுமல்ல அவன் வழிபடும் கடவுளுக்கும் அது நல்லது. பக்தனோடு கடவுளும் சிக்கிக் கொண்ட கலியுகத்தில் இறைவழிபாட்டை மத வெறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் இதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

    Share
  • பழுதாகி வரும் பட்டிமன்றங்கள்

    — மு. கோபி சரபோஜி.

    பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் தயவு செய்து அதை மறுபரிசீலனை செய்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மின்னல் கீற்றைப் போல ஒரு கருத்தை, சிந்தனையைக் கலகலப்பு என்ற இரசவாதத்திற்குள் வைத்து கவிதையும், கதையும், இலக்கியமும், இன்னபிறவுமாய் இழைத்துச் செவிகளில் அரங்கேற்றி விசேச நாட்களை விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களாய் மாற்றிக் கொடுத்த பட்டிமன்றங்கள் இன்றைக்கு அரிதாகி வருகின்றன. பழுது பார்க்க வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.

    பழந்தமிழர் காலத்தில் பொது இடங்களில், பலர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட கருத்துப் போர் தான் இன்றைய பட்டிமன்றங்களுக்கான முதல் வித்து எனலாம். இந்த வித்தின் தடங்கள் சங்ககால நூல்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் உறைந்து கிடக்கிறது. ”பட்டிமண்டபம்” என்ற இலக்கிய வழக்கின் சொல் வடிவமான ”பட்டிமன்றங்கள்” ஆரம்பக் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்து நடைபெற்றன. குறிப்பாகக் கம்பன் கழகங்கள் கம்பராமாயணம் சார்ந்து அதிக அளவில் பட்டிமன்றங்களை முன்னெடுத்தன. இலக்கியங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றங்களில் சங்க இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், காப்பியங்களின் களிநடையில் தோய்ந்தவர்கள் தங்களின் வாதங்களால் மக்களுக்குச் செய்திகளோடு சேர்த்து இலக்கியங்களையும் கொண்டு சேர்த்தனர். மக்களின் புரிதலுக்கும், அறிதலுக்கும் ஏற்பப் பந்திவைத்தனர்.

    இலக்கியங்களை மட்டுமே சார்ந்து இயங்கி வந்த பட்டிமன்றங்கள் காலத்திற்கேற்ப மாற்றம் பெறத் தொடங்கியது. இலக்கியங்களோடு சேர்த்து சமூகம் சார்ந்த பிரச்சனைகள், மக்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் பற்றியும் விவாதிக்கும் அரங்கமாகப் பட்டிமன்றங்களைச் சமூகத்தின் பக்கமாகத் திருப்பிய தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவற்றை அரங்குகளிலிருந்து வெளியேற்றி பொதுமக்களை நோக்கிக் கொண்டு வந்தார். அதன் பலனாக மக்கள் அதிக அளவில் கூடிக் களிக்கும் ஊர் திருவிழாக்களில் பட்டிமன்றங்களுக்கும் இடம் கிடைக்க ஆரம்பித்தன.

    புதிதாக வரும் எந்தக் கலை வடிவத்தையும் ஆரம்பத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மக்கள் பட்டிமன்றங்கள் பாட்டுமன்றங்களாகத் தன் புதிய கிளையை விரித்த போது பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். ஆனால், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு, நகைச்சுவை என்று மட்டுமே தன்னை நிலை நிறுத்த முயன்ற பாட்டுமன்றங்களில் மக்களுக்கு இருந்த ஆரம்பக் கால ஆர்வம் மெல்லக் குறையத் தொடங்கியதும் அவை மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்பிய சேய் கழகத்தைப் போல சினிமாப் பாடல்களோடு சேர்த்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் பட்டிமன்றங்களின் பாணியில் எடுத்துப் பேச ஆரம்பித்தன.

    பட்டிமன்றம், பாட்டுமன்றம் என்ற இரு முனைகளாய் பட்டிமன்றம் மாறியதாலும், ஆரம்பக் காலத்தில் அதில் வழக்காடியவர்கள் தங்களை ”நடுவர்” என்ற அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டதாலும் வழக்காடுபவர்களுக்கான தேவை அதிகமாகியது. பேச்சுக்கலை விற்பன்னர்கள், இலக்கியம் படித்தவர்கள், சமூகப் பிரச்சனைகளை அங்கதமாக, சாடலாக, உள்ளீட்டோடு நகைச்சுவையாக இலக்கியங்களுக்குள்ளும், இதிகாசங்களுக்குள்ளும், இதரக் கலை வடிவங்களுக்குள்ளும் வைத்து நவீன சாண்ட்விச்சாகத் தரும் பேச்சாளப் பெருமக்கள் ஆகியோரோடு அறிமுகங்களாய் பல புதிய பேச்சாளர்கள் வலம் வர ஆரம்பித்தனர். இந்தப் புதிய வரவின் எழுச்சியில் பட்டிமன்றங்கள் தன் பொலிவை மெல்ல இழக்கத் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டு எல்லா அறிமுகப் பேச்சாளர்களுக்கும் உரியதல்ல என்ற போதும் இந்தக் காலகட்டத்தில் தான் பட்டிமன்றங்களில் வழக்காடுபவர்களை உரைகல் கொண்டு உரசிப் பார்க்கும் நிலை ஆரம்பமானது.

    ”அவிநயம்” என்ற பழந்தமிழ் நூல் உரைக்கும் பட்டிமன்ற நெறிகளை இலக்கியக் கட்டுரைகள் வாசிக்கத் தருகின்றன. ”பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என்கிறது மணிமேகலை. இப்படிப் பாங்கு அறிந்து மேடை ஏறியவர்களில் (!) சிலர் இன்று அந்த மேடைகளில் வங்குழையாகக் கத்துகிறார்கள். அரசியல்வாதிகளின் மேடை முழக்கம் போல அடிவயிற்றிலிருந்து அலறுகிறார்கள். இவர்களின் அலறலில் தொட்டிலில் உறங்கும் சிறு குழந்தை பதறி எழுந்து அழுகிறது!

    சாட்டையைச் சுழற்றுவதாய் சொல்லிக் கொண்டு தன் மனைவி தொடங்கி குடும்ப உறுப்பினர்கள், தான் குடியிருக்கும் வீதியில் வசிப்பவர்கள் வரை அனைவரையும் ஒருமையில் விளித்து விளாசி எடுக்கிறார்கள். சில மென் சொற்கள் கூட இவர்களின் ஓலமிடலில் கதறிக் கதறி அழுகிறது. புகழ்பாடுவதாய் நினைத்து தனிநபர் துதிபாடுகிறார்கள். சிலரைக் குளிர்விக்க சிலரைச் சகட்டு மேனிக்குச் சாடுகிறார்கள், இடித்துரைக்கிறார்கள். இந்தச் சாடல்களையும், இடித்துரைப்புகளையும் கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அச்சரம் மாறா அரசியல் மேடை முழக்கமாகவே ஒலிக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டிமன்றங்களில் மொழிப்புலமை கொண்டு வாதாடும் தேர்ந்த பேச்சாளர்களுக்குப் பஞ்சம் வந்து விட்டதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சிரிக்கச் சொல்வதாய் நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் இவர்களில் பலரின் பின்புலம் ”கல்லூரி பேராசிரியர்கள்” என்பது தான் வேதனையான விசயம்.

    ”பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்” என அரியக் கலைகளை ஆராயும் இடமாகக் கம்பராமாயணம் கூறும் பட்டிமன்றங்களை உங்களின் தரமற்ற வாதங்களால் தயவு செய்து பகடியாடும் மன்றங்களாக மாற்றி விடாதீர்கள் என்றும் – உங்களின் வார்த்தை வீச்சில் பட்டிமன்றங்களுக்கென ஒரு பெரும் கூட்டத்தை இருத்தி வைக்கப் போராடியவர்களை, போராடிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கழுவேற்றி விடாதீர்கள் என்றும் மட்டுமே இவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் இரசிகர்களின் கையில் ரிமோட் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் வரவேற்பறையில் காத்திருக்கிறது என்பதை மட்டுமாவது இவர்கள் நினைவில் கொண்டார்களேயானால் நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் பட்டிமன்றங்களுக்காது வாழ்வு கிட்டும்! அவற்றை வழக்கொழிந்து போன கலைவடிவம் என அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும் அபாயத்திலிருந்து காக்கும்!!

    Share
  • கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?

    மு. கோபி சரபோஜி

    தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துன்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.

    வந்திருப்பவர்கள் ஆயுதம் தாங்கிகளாக இருப்பதால் ஏதாவது ஒரு வேடத்தை நாம பாட்டுக்குப் போட்டுட்டுப் போய் அவனுக பாட்டுக்கு நம்மளைப் போட்டுத்தள்ளிட்டு போயிட்டானுகன்னா என்ன செய்றது? என யோசித்த அனுமன் எவ்வளவு பெரிய வல்லனும் எளிதில் தாக்க யோசிக்கும் அந்தணர் வேடமிட்டு அவர்கள் முன் வந்து நின்றார். ஏம்பா………..உங்களைப் பார்த்தால் எதையோ தேடிக் கொண்டிருப்பவர்கள் போல் தெரிகிறதே. நதிக்கரையில் வந்து என்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்? நீங்க அணிந்திருக்கிற ஆடைக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி இருக்கே? நீங்கள் யார்? எனக் கேட்டார்.

    நாங்கள் அயோத்தியில் இருந்து வருகிறோம். என் தந்தை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நானும், என் மனைவியும் வனவாசம் கிளம்பி வர எங்களுக்குத் துணையாக என் தம்பியும் வந்தான். அப்படி வந்த இடத்தில் என் மனைவி சீதாதேவியை மாரீசனின் வித்தையால் இராவணன் ஆட்டையப் போட்டுட்டு போய்விட்டான். அவளைத் தேடித் தான் இப்பகுதிக்கு வந்திருக்கிறோம் என இராமர் சொன்னதும் அனுமன் தன் அந்தணர் வேடத்தைக் கலைந்து சுயரூபத்தில் நின்று அவர்களை வணங்கினார்.

    அடடா……வந்த இடத்தில் உங்களுக்கு வந்தப் பிரச்சனை மாதிரியே தான் வாழ்ந்த இடத்தில் எங்களின் அரசன் சுக்ரீவனுக்கும் ஒரு பிரச்சனை. அவனுடைய நாட்டையும், மனைவியையும் அவன் சகோதரன் வாலி அபகரித்துக் கொண்டு விரட்டியடித்து விட்டான். அவனுக்குப் பயந்து தான் இங்குள்ள மலையில் எங்கள் அரசன் தங்கி இருக்கிறான் எனச் சொல்லி சுக்ரீவனிடம் அவர்களை அழைத்துச் சென்றான்.

    இராமர் சுக்ரீவனிடம் உங்களின் உதவி தேவை எனக் கோரிக்கை வைக்க சுக்ரீவனும் பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைத்தான். அதன்படி வாலியைக் கொன்று சுக்ரீவனை மீண்டும் அரசனாக்க இராமரும், அதற்குப் பதிலுதவியாக இராமரின் மனைவியைக் கண்டு பிடித்துத் தர சுக்ரீவனும் உதவுவது என ஒப்பந்தம் முடிவானது.

    2905288-sugriva_fighting_vali”பதிலுக்குப் பதில்” என்ற ஒப்பந்த சரத்துப்படி வாலியைப் போட்டுத்தள்ள இராமர் முடிவு செய்தார். ஆனால் அதை அவரால் எளிதாகச் செய்ய முடியவில்லை. காரணம் வாலி பெற்றிருந்த ஒரு வரம். போரில் தன் எதிரில் வந்து நிற்பவனின் பலத்தில் பாதி தனக்குக் கிடைக்கும் படியான வரத்தை வாலி பெற்றிருந்ததால் அவனை நேருக்கு நேர் சந்தித்துக் கொல்லுவது சாத்தியமில்லை என்ற நிலையில் வேறு என்ன செய்யலாம்? என இராமர் யோசித்தார். ”மந்திரம் பலிக்காத இடத்தில் தந்திரம் பலிக்கும்” என்ற நியதிப்படி வாலியை வீழ்த்த முடிவு செய்த இராமர் சுக்ரீவனும், வாலியும் போர் செய்யும் சமயத்தில் ஒரு மரத்திற்கு பின் மறைந்திருந்து தந்திரமாய் அம்பெய்து வாலியைப் போட்டுத் தள்ளினார். போடனும்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் நெத்தியில போட்டா என்ன? நெஞ்சுல போட்டா என்ன? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக வாலியின் கதையை இராமர் முடித்தார்.

    களத்தில் நேருக்கு நேர் எதிர் கொள்வது தான் ஒரு வீரனுக்கு அழகு என்ற நிலையில் தன்னுடைய இந்தச் செயல் தனக்கும், தன் புகழுக்கும் தீராத கலங்கத்தைத் தரும் என இராமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? வாக்குறுதியா? போர் நியதியா? என யோசித்தவர் எல்லாவற்றையும் விட கொடுத்த வாக்கு முக்கியம் என நினைத்தார். வாலியை வீழ்த்தினார். வாலி இன்னொருத்தனின் மனைவியை அபகரித்த பாவி என்பதால் அவன் அழிக்கப்பட வேண்டியவன். அவனைக் கொன்றதைக் கொண்டாட வேண்டுமேயொழிய கொன்ற முறை சரியா? தவறா? என்றெல்லாம் வியாக்கானம் பண்ணக்கூடாது என்பது சிலரின் வாதம். ”கருத்துச் சொன்னா கேட்டுக்கனும். ஆராயக்கூடாது” என்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதையெல்லாம் பட்டிமன்ற நடுவர்களின் முடிவுக்கே விட்டு விட்டு நம்ம விசயத்துக்கு வருவோம்.

    சுக்ரீவனும் இராமருக்கு கொடுத்த வாக்குறுதிப் படி உதவினான். அவனால் இராமருக்கு உதவியாக அனுப்பப்பட்ட ஒருவன் பின்னாளில் அவரின் பரம பக்தனாக, சேவகனாக மாறிப்போனான். அந்தச் சேவக பக்தன் அனுமன்! கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் சுயம் சார்ந்த விசயங்களைப் பார்க்கக்கூடாது என நினைத்து சுக்ரீவன் என்ற குரங்கரசனுக்கு உதவிய  இராமர் உயிரற்ற கல் குன்று ஒன்றிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக எடுத்த இன்னொரு அவதாரம் தான் “கிருஷ்ணவதாரம்”! இராமர் கிருஷ்ணராய் மறுபிறவி எடுத்துவரக் காரணமான அந்தக்குன்றின் பெயர் “கோவர்த்தனகிரி மலை”!

    இராமருக்கும், இந்த மலைக்கும் தீர்க்கப்படாத பழைய பாக்கி ஒன்று இருந்தது. ”விட்ட குறை தொட்ட குறை” என்பார்களே அதுபோல இராம அவதாரத்தில் விட்ட குறை தான் கிருஷ்ணவதாரத்தில் நிறைவடைந்தது! இந்திரன் மதுரா நகர் மக்கள் மீது கொண்ட கோபத்தால் அடைமழையை பெய்விக்க அதிலிருந்து அந்நகர மக்களைக் காப்பதற்காகக் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி மலையை தூக்கிப் பிடித்து அதன் கீழ் மக்களையும், ஆடு, மாடுகளையும் நிற்க வைத்து காப்பாற்றினார் என கிருஷ்ணவதாரத்தில் ஒரு கதை உண்டு. கடவுள் மக்களைக் காப்பது கடமையில்லையா? இதுல என்ன விசேசம் என்கிறீர்களா? விசேசம் கடவுள் காப்பாற்றியது அல்ல. கடவுளுக்கும், அந்த மலைக்குமான முந்தைய உறவு!

    கிருஷ்ணர் தன் ஒற்றை விரலில் தூக்கி நிறுத்திய கோவர்த்தனகிரி மலைக்கு ஒரு நெடிய கதை உண்டு. சேதுபாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக மிகப் பெரிய கற்கள், குன்றுகள், பாறைகள், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வானரங்களால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. பெருங்கற்கள் எல்லாம் இமயமலையிலிருந்து பெயர்த்து எடுத்து கொண்டுவரப்பட்டன. அப்படி அனுமனால் தூக்கி வரப்பட்ட ஒரு குன்றுதான் கோவர்த்தன கிரிமலை!

    இமயமலையில் சிறுகுன்றாய் இருந்த கோவர்த்தன கிரிமலையை அனுமன் தன் பலம் கொண்ட மட்டும் தூக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர் இராமகாரியத்திற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் என்னோடு நீ வருவதால் இராமரின் தரிசனம் பெறும் பலனை அடைய முடியும். அவரின் அருள் கிடைக்க வேண்டுமானால் உன் பலத்தைக் குறைத்துக் கொண்டு என்னோடு வா என்றழைத்தார். உடனே கோவர்த்தனகிரி மலையும் தன் பலத்தைக் குறைத்துக் கொண்டு அனுமனுடன் கிளம்பியது. மலையோடு அனுமன் வரும் வழியில் மற்ற வானரங்கள் செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவை பிறப்பித்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால் இனி கட்டுமானப் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என இராமபிரான் கூறிவிட்டார் என  அனுமனிடம் சொன்னார்.

    தலைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனுமன் அந்தத் தகவலைக் கேட்ட அடுத்த நொடி தான் தூக்கி வந்த மலையை அந்த இடத்திலேயே இறக்கி வைத்தார். நதிக்கரையோரம் தன்னை இறக்கிவிட்டு கிளம்பப் போன அனுமனிடம் என்னை இராமதரிசனத்திற்காக அழைத்துச் செல்வதாய் சொன்னதால் தான் இமயமலையிலிருந்து வந்தேன். நீயோ இப்படி இடையிலேயே விட்டு விட்டுப் போனால் என்ன அர்த்தம்? எனக் கேட்டது.

    சங்கடமான சூழலாகிவிட்டதை உணர்ந்த அனுமன் தலைவரின் உத்தரவுக்கு கீழ் படிய வேண்டியது என் கடமை. அதிலிருந்து என்னால் விலகவே முடியாது. அதனால் உன்னை இங்கு விட்டுப் போவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை, ஆனால், இந்த விசயத்தைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என அனுமன் கூறினார். சொன்னபடியே தலைவர் இராமரைச் சந்தித்து நிகழ்ந்தவைகளைக் கூறினார். தொண்டனுக்கு ஒரு நெருக்கடி என்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல தலைவனுக்கு அழகில்லை என நினைத்த இராமர் உன் வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். கவலைப்படாதே எனக் கூறினார்.

    பாலம் கட்டும் பணி தான் முடிவடைந்து விட்டதே! அப்புறம் எப்படி? என்றார் அனுமன்.

    அடுத்த யுகத்தில் நான் பிறவி எடுப்பேன். நீ தூக்கி வந்த மலையை எங்கு இறக்கி வைத்தாயோ அதே இடத்தில் தான் வளர்வேன். அப்பொழுது என்னை நம்பி வந்த மலைக்கு நீ கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தகவல் உடனடியாக அனுமன் மூலம் கோவர்த்தனகிரி மலைக்குச் சொல்லப்பட்டது. தன்னை நம்பி தன் பக்தன் கொடுத்த வாக்குறுதிக்காக சொன்ன சொல் தவறாமல் அடுத்த யுகத்தில் கிருஷ்ணராய் அவதரித்த இராமர்  தன் விரலால் தூக்கி நிறுத்தி மலையை ஆசிர்வதித்தார். இன்னைக்கு அனுமன் மாதிரி பக்தர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இராமர் மாதிரி தலைவர்களுக்குத் தான் பஞ்சம் நிலவுகிறது!!.

    கொடுத்த வாக்குறுதியை மீறாமலும், அவசியம் ஏற்பட்டால் யுகம் கடந்து வந்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்கிறான் கடவுள். மனிதர்களாக நாமோ கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறோமா? காப்பாற்றாவிட்டாலும் பொய்யான வாக்குறுதிகளையாது கொடுக்காமல் இருக்கலாமே! அப்படி இருந்தாலே போதும். இந்த நாளை மட்டுமல்ல எல்லா நாளையும் இனிய நாளாக்கிக் கொள்ளவும், அந்தக் கடவுளின் நிலைக்கு நம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவும் முடியும். அதெப்படிங்க மனிதன் தெய்வநிலைக்கு வர முடியும்? என்கிறீர்களா? கடவுள் மனித நிலைக்கு இறங்கும் போது மனிதன் மட்டும் கடவுள் நிலைக்கு உயர முடியாத என்ன?

    படத்திற்கு நன்றி: http://www.comicvine.com/sugreeva/4005-26968/

    Share
  • சனியைப் பிடித்த சனி! – கட்டுரை

    மு. கோபி சரபோஜி

    ravananஇப்ப அவனுக்கு நேரம் சரியில்ல. சனி பிடிச்சு ஆட்டுது. ஏழரைச் சனி நடக்குதாம். அதுனால எதைத் தொட்டாலும் ஏழரை தான்! ஒன்னுமே வெளங்க மாட்டேங்குது. துலங்க மாட்டேங்குது. சனிச் சுழி சும்மா இருக்குமா? அதான் அவனைப் போட்டு சுழட்டியடிக்குது. இப்படியான மிரட்டல்களையும், பயமுறுத்தல்களையும் தனக்கே உரிய அடையாளமாகக் கொண்டிருப்பவர் சனிபகவான். இந்தப் பகவானுக்குப் பலம் மிக்க பகவான்கள் பலர் பயந்து ஓடியிருக்கின்றனர். ஒளிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சனிபகவானையே ஓட, ஓட விரட்டியடித்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் அனுமன்!
    சனிபகவான் அனுமனிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதற்கு ஒரு நெடுங்கதை உண்டு. அரக்கர்களின் அரசனான இராவணன் தன் பலத்தால் இறைவனையும் வெல்லும் வலிமை கொண்டிருந்தான். ஒவ்வொருவராக வீழ்த்தித் தன் வெற்றியை நிலை நாட்டி வந்த வேளையில் குபேரனை வென்று அவனுடைய நாடான இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டான். ஏழேழு உலகங்களையும் வெல்லும் ஆவல் கொண்டிருந்தவனுக்கு பம்பர் பரிசாய் குபேரனின் வாகனமான புஷ்பக விமானம் கிடைத்தது. ஆகாயத்தில் பறக்கும் சக்தி கொண்ட அவ்விமானம் மூலம் உலகம் முழுக்க வலம் வந்தான்.

    தன் இயக்கத்தின் மூலம் மனிதர்களுடைய நிலையை, இருப்பை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட எல்லாக் கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். சாஸ்திரங்களில் வல்லவனான இராவணன் தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை அனைவரையும் வெல்லும் வலிமை கொண்டவனாகவும், சகல சம்பத்துக்களை பெற்றவனாகவும் இருக்க வேண்டும் என நினைத்தான். அதற்காகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாக் கிரகங்களையும் குப்புறத் தள்ளி இயங்காதவாறு அவைகளின் மேல் தன் கால்களை வைத்து அழுத்திக் கொண்டான்.

    இராவணனின் இந்தச் செயலால் அவன் நினைத்தபடியே அவனுக்குப் பிறக்கும் குழந்தை இருக்கும் என்பது உறுதியானது. அப்பன் செய்யும் அட்டூழியம் போதாதென்று பிள்ளையும் சேர்ந்து தங்களை இம்சிக்கப் போகிறானே என நினைத்த தேவர்கள் எல்லாக் கிரகங்களையும் சந்தித்து இயக்கத்தின் மூலம் தங்களின் நிலைகளை மாற்றிக் கொள்ளும் படிக் கேட்டனர். காசு கொடுத்தால் மட்டுமே உனக்கு வாக்களிப்பேன் எனச் சொல்லும் நவீன வாக்களனைப் போல உங்கள் கெஞ்சலுக்காக எல்லாம் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றினால் வெற்றி பெற்ற பின் தனக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்கும் அரசியல் தலைவர் போல இராவணன் தன் பலத்தினால் எங்களை உண்டு, இல்லைன்னு ஆக்கி விடுவான். அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கிரகங்கள் எல்லாம் மறுத்து கை விரித்து விட சனிபகவான் மட்டும் தன்னுடைய இயக்கத்தை மாற்றிக் கொண்டு அதன் மூலம் இராவணனின் ஆசைக்கு முதல் சங்கை நான் ஊதுகிறேன் என தேவர்களுக்கு உறுதியளித்தார். உறுதியளித்த கையோடு அப்படிச் செய்ய வேண்டுமானால் இராவணன் தன் மீது வைத்து அழுத்திக் கொண்டிருக்கும் கால்களை சிறிது நேரம் எடுக்க வேண்டும் என்று ஒரு கண்டிசனையும் போட்டார். ”கண்டிசன் அப்ளே” (CONDITION APPLY) அப்பவே இருந்திருக்கு!

    கண்டிசன் என்னமோ கேட்க நல்லாத்தான் இருக்கு? ஆனால் நடைமுறைக்கு உகந்ததாய் இல்லையே? என தேவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். உன் காலைக் கொஞ்சம் எடு என இராவணனிடம் போய் கேட்க அவன் நம் தலையை எடுத்து விட்டால் என்ன செய்வது? இதைக் கேட்ட மாத்திரத்தில் நம்மைக் குதறி எறிந்து விடமாட்டானா? என புலம்பித் தவித்தவர்கள் தங்களுக்கு உதவ நாரதரைத் தேர்ந்தெடுத்தனர். அவரைச் சந்தித்து விசயத்தைச் சொன்னார்கள். வளர்த்த அப்பனுக்கு எதிராக மகனையே கொம்பு சீவி விட்டு அவனுக்காகவே திருமாலை நரசிம்ம அவதாரம் எடுக்க வைத்த நாரதரோ அது ஒன்றும் தனக்குப் பெரிய விசயமில்லை. ஒரு சூழ்ச்சி நாடகத்தைப் போட்டாவது நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறி விட்டு நாராயண நாமத்தைச் சொல்லியபடியே இராவணனை வந்து சந்தித்தார். புகழுக்கு அலையும் இராவணனை அந்தப் புகழ் வார்த்தையாலயே வீழ்த்துவது என முடிவு செய்த நாரதர், “அரக்க மகாராஜாவே! போரில் வென்றவன் வீழ்ந்தவர்களின் மார்பில் கால் வைத்து நிற்பது தானே வழக்கம். ஆனால், பெரும் பலசாலியான, வெற்றி வீரனாகத் திகழும் நீங்கள் கிரகங்களை எல்லாம் குப்புற வீழ்த்தி முதுகில் கால் வைத்து நிற்கிறீர்களே! இது உங்களுக்கு அவமானமில்லையா?” எனச் சொன்னதும் இராவணன் எல்லா கிரகங்களையும் திருப்பி போட்டான். அப்படி சனிபகவானை திருப்பிய விநாடி அவர் இராவணனை பார்த்து விட அவனுக்கு கஷ்டகாலம் ஆரம்பமானது. வந்த வேளையை நாசுக்காய் முடித்த நாரதர் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து கிளம்பினார்.

    அச்சமயத்தில் இராவணனின் சகோதரி இராம, இலட்சுமணரிடம் போய் வம்பிழுத்து மூக்கறுபட்டு வந்து நின்றாள். தன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பழிக்குப் பழி வாங்க முடிவு செய்த இராவணன் அடுத்தடுத்து செய்த செயல்கள் அவனுக்கே தீராத தலைவலியாய் மாறியதால் கடுப்பானவன் இதற்கெல்லாம் காரணமான சனிபகவானை ஒரு இருட்டு அறையில் தள்ளி பூட்டிச் சிறை வைத்தான்.

    அச்சமயத்தில் சீதையைத் தேடி இலங்கைக்கு வந்திருந்த அனுமனைக் கட்டி வைத்து வாலில் தீ வைத்து அரக்கர்கள் பொசுக்க நினைத்த போது அவர்கள் வைத்த நெருப்பைக் கொண்டே அரக்கர்களை அழித்த அனுமன் இலங்கை நகருக்கும் தீ வைத்தான். அப்படி தீ வைத்துக் கொண்டு வந்த சமயத்தில் இருட்டறை ஒன்றிற்குள் முனங்கும் சப்தம் கேட்க அதற்குள் நுழைந்த அனுமன் அங்கு எலும்பும், தோலுமாய் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டு அதிர்ந்து போனார். அழாத குறையாய் நடந்தவைகளைச் சொல்லி தன்னைக் காப்பற்றும் படி சனிபகவான் வேண்டிக் கொள்ள அனுமனும் அவருக்கு உதவினார்.
    இனாமாய் கொடுத்த இடத்தை தன் பெயருக்கே பத்திரம் போட்ட கதையாய் தன்னைக் காப்பாற்றிய அனுமனிடம் ”என் பார்வை யார் மீது படுகிறதோ அவர்கள் ஏழரை ஆண்டுகள் கஷ்டப்பட்டே ஆக வேண்டும்” எனத் தான் வாங்கி வந்த வரம் காரணமாக இப்போது என் பார்வை பட்டதால் நீயும் கஷ்டப்பட்டே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறாய் என சனிபகவான் கூறினார். பரமன் இராமபிரானின் பக்தன் நான். உன் கஷ்டம் என்னை ஒன்றும் செய்து விடாது எனக் கூறிய அனுமன் உன் பார்வை பட்டதால் அப்படி என்ன கஷ்டம் எனக்கு வந்து விடப்போகிறது? எனக் கேட்டார். சனிபகவானோ, ”உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வீட்டை விட்டு விலகிச் சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்” எனச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன், ”இவ்வளவு அப்பிராணியா இருக்கியே சனிபகவானே! நீ சொல்லும் கஷ்டமெல்லாம் சம்சாரிகளுக்கு. சராசரிகளுக்கு. நானோ பிரம்மச்சாரி எனச் சொன்னதோடு நீ வாங்கி வந்த வரம் அப்படி என்பதால் வேண்டும் போது வந்து என்னை பிடித்துக்கொள்” எனச் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
    சிலகாலம் கழித்து சீதையை மீட்க இராம, இலட்சுமணர் தலைமையில் வானர சேனைகளின் உதவியுடன் இலங்கைக்கு பாலம் அமைக்கும் (சேது அணை) பணியில் அனுமன் பிசியாக இருந்த போது அங்கே வந்த சனிபகவான் தங்களை ஒன்றரை மணி நாழிகை பிடிக்க வேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டார். அதோடு, தாங்கள் இராமபக்தராக இருப்பதால் நான் பிடிக்க வேண்டிய இடத்தை நீங்களே தேர்வு செய்து சொல்லலாம் எனச் சலுகையும் தந்தார். இன்னைக்கு சிக்குன சனி இனி நம்ம பக்கமே வரக்கூடாது என முடிவு செய்த அனுமன் பல வீடுகளில் கோபத்தால் ஆண்கள் சொல்லும் டயலாக்கைப் போலவே என் தலையில் உட்காரு எனச் சொன்னார். வீட்டு ஆண்கள் திமிரில் சொல்வதை அனுமன் திட்டமிட்டுச் சொன்னார். அடடா……….இவ்வளவு எளிதாக அனுமதி கிடைச்சிடுச்சேன்னு நினைத்த சனிபகவானும் சமர்த்தாக தலையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

    அடுத்த நொடி சனிபகவானுக்கு பிடித்தது சனி! அனுமன் அணைகட்டுவதற்கு வேண்டிய பெரிய கற்களையும், வேரோடுimages பறித்த மரங்களையும் தன் தலையில் ஏற்றிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்த சனிபகவானுக்கு நேரம் போகப் போக மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. துடி துடித்துப் போனார். உங்களின் பெருமை தெரியாமல் உங்களைப் பிடிக்க வந்தது என் தப்பு தான். என்னை விட்டு விடுங்கள். உங்கள் பக்கமே இனி தலைவைத்துப் படுக்க மாட்டேன் என அனுமனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

    அப்படியானால் எனக்குக் கொடுத்த இதே உறுதிமொழியை என் பக்தர்களுக்கும் சேர்த்து தருவதாய் உத்தரவாதம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என அனுமன் கூறினார். கண்டிசனா? கஷ்டமா? என யோசித்த சனிபகவான் கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டு உத்தரவாதம் தர தலையில் இருந்தவரை தரையில் இறக்கி விட்டார். அதனால் தான் அனுமனின் பக்தர்களிடம் சனி பகவானின் சால்சாப்புகள் எடுபடுவதில்லை. சனிபகவான் மாதிரி தாங்க நம்மில் பலர் விசயம் தெரிந்தவர்களிடம் தன்னுடைய அரைகுறை ஞானத்தைக் காட்ட நினைத்து தங்களுக்குத் தாங்களே சூடு வைத்துக் கொள்கிறார்கள். சரி…நீங்க எப்படி?
    —————————————————————————————————————————————————

    Share
  • இராமனின் சந்தேகமும், அனுமனின் விளக்கமும்

    மு. கோபி சரபோஜி

    எவரிடமாவது கொஞ்சம் முகம் கோண வசவு வாங்கினாலே வதங்கிப் போய்விடுவோம். இந்த வசவு, ஏச்சு, கோபம் எல்லாம் இந்தக்காலத்தில் தான். அந்தக்காலத்தில் எல்லாம் சாபம் தான்! கடுப்பேத்துறார் மை லார்ட் என்பது மாதிரி முனிவர்களும், அவர்கள் வழிபடும் கடவுளும் தனக்கு எதிராக யாராது குழிபறிக்கும் வேலைகளைச் செய்தாலோ, தனக்கு விரோதமாக நடந்து கொண்டாலோ உடனே சாபத்தை கொடுத்து ஒடுக்கி விடுவார்கள். வரம் கொடுக்கும் வாயாலயே சாபங்களும் கொடுக்கப்பட்டன. கூடவே அதற்கான பரிகாரங்களும் இலவச இணைப்பாய் வழங்கப்படுவதுண்டு. சில சமயங்களில் அதில் விதிவிலக்கும் இருக்கும்.

    ஒரு கடவுள் இன்னொரு கடவுளுக்கே சாபம் கொடுத்து வந்த அந்தக்காலத்தில் முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டி வரம் வாங்கி அதைச் சாபங்களாக மாற்றி தங்களுக்கு எதிரானவர்கள் மீது எறிந்து வந்தனர். அப்படி ஒரு முனிவரால் சாப அம்புக்கு உள்ளானவன் தான் நளன்!

    விசுவகர்மாவின் மகனான நளன் குழந்தைப்பருவத்தில் அந்த வயதிற்கே உரிய குறும்புகளுடன் இருந்தான். அப்பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த முனிவர்கள் இருக்கும் பகுதிக்கு அடிக்கடி விளையாடச் செல்லும் சமயங்களில் தன் சேட்டைகளால் அவர்களுக்கு தொல்லைகளையும் கொடுத்து வந்தான். முனிவர்கள் ஆற்றில் மூழ்கி குளிக்கும் சமயத்தில் கரையில் வைத்திருக்கும் அவர்களுடைய துணிமணிகளை அள்ளி தண்ணீரில் வீசி மூழ்கடித்து விடுவான். அதேபோல, அவர்கள் முங்கி எழும் சமயமாக பார்த்து கரையில் கிடக்கும் சிறு, சிறு கற்களை எடுத்து அவர்கள் மீது எறிவான். சிறுபிள்ளை தானே என பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முனிவர்கள் ஒருநாள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். கோபம் வராதவரைக்கும் தான் முனிவர்கள் சாதுக்கள். வந்துவிட்டால் வாயால் சத்ருக்களாக மாறி விடுவார்கள்.
    கோபம் கொண்ட முனிவர்கள், ”இனி நீ எதைத் தண்ணீரில் தூக்கி எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கவே செய்யும். தவிர, குரங்குச் சேட்டை செய்து எங்களுக்கு துன்பம் தந்து வந்ததால் இனி நீ குரங்காக மாறிப்போவாயாக” என்று சாபம் கொடுத்து விட்டனர். சாபம் தன் வேலையைக் காட்ட வானரமாக மாறிய நளன் அனுமன் தலைமையில் வானரப்படையில் சேர்ந்ததோடு இராம சேவைக்கும் வந்தான்.

    சீதையைப் பறி கொடுத்த இராமர் அதற்காக இராவணனிடம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் படையெடுப்பை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். அது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடல் மேல் பாலம் அமைத்து படை நடத்திச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடலரசனிடம் அலைகளின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் இராமர் தவமிருந்தார். அவனின் தகவலுக்காக தர்ப்பைப் புல் மீது அவர் சயனித்திருந்த இடம் தான் “திருப்புல்லணை”. அது பின்னர் மருவி “திருப்புல்லாணி” என்றானது. மூன்று நாட்களாகியும் கடலரசன் வராததால் கோபம் கொண்ட இராமர் கோதண்டத்தை எடுத்து எய்யத் துவங்கிய நொடி கடலரசன் வந்து சேர்ந்தான்.

    DSC02516_thumb[8]
    விசுவாமித்திரரின் யாகத்திற்காக தன் பாணத்தாலயே (அம்பால்) பந்தலிட்டு பாதுகாத்தவர் தன் மீது கோதண்டத்தை எய்தால் என்ன கதியாவது? என நினைத்து பதறி வணங்கி நின்ற கடலரசன் தாங்கள் என்னை முதலில் மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைப்பது போல அகம்பாவத்தால் வராமல் இருக்க வில்லை. வடதுருவத்தில் எனக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சில துரோகிகளை ஒழித்துக்கட்டும் வேலை இருந்ததால் அங்கு சென்றிருந்தேன். அந்தப் பிரச்சனையை முடித்து விட்டு செய்தியறிந்து உங்களைச் சந்திக்க வருவதற்குள் மூன்று தினங்களாகி விட்டது என்று கூறியதுடன் நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டான்.

    இராமர் விசயத்தைச் சொன்னதும் பாலம் கட்ட தன்னால் ஆன எல்லா ஒத்துழைப்பையும் தருவதாக கடலரசன் உறுதியளித்தான். உடனடியாக பாலம் கட்டுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வானரசேனைகள் அணிவகுக்க அனுமன் தலைமையில் வேலைகள் ஆரம்பமானது. இமயமலையிலிருந்து கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு கை மாற்றி, கை மாற்றி சேதுக்கடலுக்கு கொண்டுவரப்பட்டன. கற்களை தூக்கிக் கடலில் போட்டால் ஒரு கல்லும் மிதக்கவில்லை. அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நிலைமை சிக்கலாக இருப்பதை அறிந்து அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் கடலரசன் தங்களின் வானர சேனையில் உள்ள நளன் என்பவன் பெற்றிருக்கும் சாபம் இப்போது நமக்கு வரமாக இருந்து உதவப்போகிறது. அந்த சாப பயனால் இந்தச் சிக்கலைத் தீர்த்து விடலாம். அவன் பெற்றிருக்கும் சாபப்படி எதைத் தூக்கி தண்ணீரில் போட்டாலும் மிதக்கும் என்பதால் முதல் கல்லை அவனைப் போடச்சொல்லி அதன் மீது மற்றவர்கள் கற்களை போடுங்கள் என யோசனை கூறினான்.

    உடனடியாக சித்தாள் போல கல் கொண்டு வரும் வேலையிலிருந்த நளன் வரவழைக்கப்பட்டு பொறியாளராக நியமிக்கப்பட்டதோடு பாலம் கட்டும் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் கூடுதலாகத் தரப்பட்டது. முதல் கல்லை நளன் எடுத்துப் போட அதன் மீது வேரோடு கூடிய மரங்கள், சிறு மலைக்குன்றுகள், பாறைகள் என அனைத்தும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அனுமன் வானுக்கும், பூமிக்குமாய் பறந்து, பறந்து வேலைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். இராமரும், இலட்சுமணரும் அருகில் அமர்ந்து பாலம் கட்டும் வேலையின் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    தங்களின் வழிபாட்டுக்குரியவராக, கடவுளாக நினைக்கும் இராமருக்காக எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க திடீரென இராமருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. மழைக்காக நடந்த யாகத்தில் குடையோடு வந்த சிறுவனின் பேச்சால் தன் சக்தியின் மேல் சந்தேகம் கொண்டு அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சங்கெடுத்து ஊதி சரிபார்க்கப் போய் தன் வீராப்பை இழந்த வருணபகவானுக்கு வந்த மாதிரி இராமருக்கும் தன் சக்தியின் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.

    எல்லோரும் கடலில் போடும் கல் மிதக்கிறது. நாம் போட்டால் மிதக்குமா? என்ற சந்தேகம் பற்றிக் கொள்ள அருகில் கிடந்த கல்லை எடுத்து கடலுக்குள் வீசினார். போட்ட வேகத்தில் கல் தண்ணீருக்குள் மூழ்கிவிட இராமருக்கோ தன் சக்தியின் மீது மெல்ல சந்தேகம் பரவி பதற வைத்து விட்டது. எப்படி யோசித்தும் தன் சந்தேகத்திற்கு விடைகாண முடியாமல் தவித்தபடி உட்கார்ந்திருந்த இராமரின் தவிப்பை அவரின் முகக்குறிப்பால் கண்ட அனுமன் அருகில் வந்து விசாரித்தார்.

    இராமர் விசயத்தைச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன் இதற்கு தானா இவ்வளவு யோசனை? நாங்கள் கற்களைப் போடும் போது “ஹேராம்” என்று உங்கள் நாமத்தை உச்சரித்தபடி போடுகின்றோம். அதனால் மிதக்கிறது. நீங்களோ அப்படிச் சொல்லாமல் போடுவதால் மிதக்காமல் மூழ்குகிறது என்றான். உள்ளன்போடு இறை நாமத்தை உச்சரிப்பவனிடம் இறைவன் கருணை கொள்கிறான். அருள் புரிகிறான் என்பதை அனுமனின் பக்தியும், இறைவனான இராமனின் சந்தேகமும் நமக்கு உணர்த்துகிறது. ஆலயம் சென்று அங்கொரு மனமும், இங்கொரு மனமுமாய் வழிபடுவதை விட இருந்த இடத்தில் இருந்த படியே உள்ளத்தூய்மையோடு அவன் நாமத்தை உச்சரித்தாலே போதும் காரிய சாத்தியமாகும். இந்த உண்மையை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

    ———————————————————————————————————————————————-

    Share
  • இன்னொரு புரட்சி

     

    மு.கோபி சரபோஜி

    img4831ng6

    மேதைகளின்
    வழிகாட்டல்களில்
    உழைப்பாளர்களாய்
    ஒன்றுபட்டோம்.

    முதலாளித்துவத்தின்
    முகமூடிகளை – நம்
    தோள் வலிமை கொண்டு
    கிழித்தெறிந்தோம்.

    கண்ணீர் சிந்தியே
    பழக்கப்பட்ட நாம்
    செந்நீர் சிந்தி
    ஜெயித்துக் காட்டினோம்.

    வியர்வையின்
    விளைச்சலை
    நாடுதோறும்
    நட்டு வைத்தோம்.

    எல்லைகள் கடந்து
    எதிரிகள் மறந்து
    மே தினமாய் – நம்மை
    அடையாளமிட்டுக் கொண்டோம்.

    அன்று
    வீரியமாய் நின்ற அடையாள தினமோ
    இன்று
    வெறும் விடுமுறை தினமாகிப் போனது

    விடுமுறையும்
    வாழ்த்தும் போதுமென
    வீரிய வித்துக்களை

    அழுகச்செய்து விட்டோம்.
    நடந்தவை உணர்ந்து
    நடப்பவை அறிந்து
    இனி ஒரு
    புரட்சிக்குத் தயாராவோம் – அது
    இன்னொரு
    மே தினமாய் இல்லாமல் – நம்மை
    மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.
    ————————————————–

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு!…

    மு.கோபி சரபோஜி

     

    அன்புள்ள மணிமொழிக்கு அப்பா எழுதுவது.

             இங்கு நான், அம்மா, தம்பி மற்றும் வீட்டில் உள்ள அவைவரும் நலம். அங்கு உன் நலத்துடன் உன் தோழிகள், ஆசிரியர்களின் நலன்களையும் அறிய ஆவல். நிற்க:

             கடந்தவாரம் நீ விடுப்பில் வந்த போது உன்னுடன் இருக்க முடியாமல் போய்விட்டது செல்லம். கம்பெனி விசயமாக அவசரமாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது. நீ ரொம்ப கோபமும், வருத்தமும் பட்டதாய் அம்மா சொன்னாள். அப்பா வேலை தான் உனக்கு தெரியுமே? அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள்.  என்னோடு கம்பெனியில் வேலை பார்க்கும் பிரகாஷ் மாமா ஒரு வரன் சொல்லி உள்ளார். நமக்கும் தெரிந்தவர்கள் தானாம். கீழக்கரையில் தான் அவர்கள் குடும்பம் இருக்கிறதாம். பையன் புரபொசராக இருக்கிறாராம். பையனின் அப்பா வணிகவரி துறை அலுவலராக இருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே ஒரு தங்கச்சி. பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கிறதாம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக  இருக்கிறார்களாம். உன்னை பிரவின் கல்யாணத்தில் வைத்து அவர்கள் பார்த்திருக்கிறார்களாம். படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னதால் படிப்பு முடியவும் கேட்கலாம் என நினைத்திருந்தார்களாம். இந்த வருடம் உனக்கு படிப்பு முடிந்து விடும் என்பதால் பிரகாஷ் மாமா மூலம் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். உனக்கு ஏற்ற பையனாக இருப்பான் என பிரகாஷ் மாமாவும் சொல்கிறார். நம் வீட்டில் யாரும் இன்னும் பையனை பார்க்கவில்லை. பையனின் அப்பா மட்டும் ஒருநாள் கம்பெனியில் வந்து என்னை பார்த்தார். உன்னிடமும், வீட்டிலும் கேட்டு சொல்வதாய் சொல்லி உள்ளேன். உன் சின்ன சித்தி சரண்யா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். வரன் வந்திருக்கும் விசயத்தை சொன்னதும் நீயும் கூட்டுக்குடும்பமா நிறைய பேர் இருக்கிற வீட்டிற்கு தான் மருமகளா போவேன்னு அவர்களிடம் முன்பு சொன்னதாய் சொன்னார்கள். உன் விருப்பம் என்ன? நானும் இதுவரை உன்னிடம் கல்யாணம் பற்றி பேசவில்லை. அவசரமில்லாமல் படிப்பு முடிந்ததும் உன் விருப்பத்திற்கேற்ப செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் வரன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டது. நீ அடுத்த வாரம் வந்த பின் உன்னிடம் பேசிய பின்பே முடிவு செய்யலாம் என நானும், அம்மாவும் நினைத்துள்ளோம்.

              இந்த முறையும் நீயும், உன் தம்பியும் பேசிக்கொள்ளவில்லை என்று அம்மா வருத்தப்பட்டாள். அவன் தான் அப்படி செய்கிறான் என்றால் நீயும் அப்படி அவனோடு மல்லுக்கு நிற்கலாமா? நீங்கள் இருவரும் என்ன சிறு பிள்ளைகளா? அவ பிடிவாதம் தான் எனக்கு பயமாக இருக்கு. எல்லாத்துக்கும் நீங்க கொடுக்குற இடம் தான் காரணம் என அம்மா சொல்லிக் கொண்டே இருக்கிறாள். நேற்று சர்மிளா சித்தி வீட்டிற்கு வந்திருந்த போது இதை  அம்மா சொன்னதும் தம்பியை திட்டினார்களாம். அதனால் உடைத்த உன் கேமாராவுக்கு பதில் புதிதாக வாங்கி தருவதற்காக தம்பி  தாத்தாவிடம் பணம் வாங்கி வைத்திருக்கிறானாம். என்னிடம் அவன் சொல்லவில்லை. உன் அப்பத்தா தான் சொன்னார்கள்.

            தவிர,சென்னையிலிருந்து வரும் போது உனக்காக எஸ்.இராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த நூறு சிறுகதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன். எனக்கும், உனக்குமாக கொஞ்சம் கவிதை, கதை புத்தகங்கள் வாங்கி வந்தேன். படிக்காம அப்பாவும், மகளுமா புத்தகத்தை வாங்கி, வாங்கி அடுக்கி வையுங்க. புக் ஃபேர்ல நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்த புத்தகமெல்லாம் இன்னும் தூங்குது. அதுக்குள்ள ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் எதுக்குன்னு அம்மா சண்டை போட்டாள். அப்பா புக்கு பைத்தியம். அம்மா புடவை பைத்தியம். அப்படின்னு சொல்லி தம்பி தான் சமாதானம் செய்து வைத்தான்.

             தம்பிக்கு இண்டர்வியூ ரிசல்ட் வந்து விட்டது. வேலைக்கு தேர்வாகி விட்டான். நாளை மறுநாள் பெங்களூருக்கு போகிறான். அங்கு அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பிரபு சித்தப்பா செய்து கொடுப்பதாய் சொல்லி உள்ளார்கள். அடுத்தவாரம் வேலையில் சேர வேண்டுமாம். பெங்களூர் போகும் வழியில் உன்னை பார்த்து விட்டு போவதாகவும், சஸ்பென்ஸாக இருக்கட்டும் அதனால என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறான். அநேகமாக உனக்கு புது கேமரா வாங்கி வருவான் என நினைக்கிறேன். வந்தால் அவனை வாழ்த்தி அனுப்பி வை. நீயும் ஏதாவது கிஃப்ட் வாங்கி அவனுக்கு கொடுத்து விடு.

            வைரஸ் காய்ச்சலில் இருந்த உன் தோழி காவியா எப்படி இருக்கிறாள்? கேட்டேன் என்று சொல். முடிந்தால் நீ வரும் போது அவளையும் வீட்டிற்கு அழைத்து வா. உன் அம்மாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். கடந்தவாரம் நீ சொன்ன கவிதையை “விதையின் குணம்” என்ற தலைப்பில் எழுதி “வல்லமை” இணைய இதழுக்கு அனுப்பி வைத்துளேன். இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது கவிதை பிரசுரமாகி இருக்கும் என நினைக்கிறேன்.

             உடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளேன். வரும் போது கல்லூரி, விடுதி கட்டணங்களை கட்டி ரசீது வாங்கி கொள். விடுதியை காலி செய்து விட்டு வரும் போது எல்லாவற்றையும் எடுதுக் கொண்டாயா? என சரி பார்த்து விட்டு கிளம்பு. உன் ஆசிரியர்களிடம், நண்பர்களிடமும் சொல்லி விட்டு வா. அங்கிருந்து கிளம்பும் போது போன் செய். இம்முறை தம்பி பெங்களூர் போய்விடுவான். அதனால் நானோ, அம்மாவோ தான் உன்னை பிக் அப் பண்ண வருவோம். உன் தோழிகளிடம் சொல்லி ஒவ்வொரு முறையும் அழைத்து பேசுவது சங்கடமாய் இருப்பதால் மூன்று நாட்களாக பேசவில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். உன் செல் போன் சரியாக வேலை செய்யா விட்டால் குறைந்த விலையில் ஒரு செல் போன் வாங்கி கொள். உனக்கு பிறந்த நாள் பரிசாக தர கார்த்தி சித்தப்பா ஸ்மார்ட்போன் வாங்கி வைத்திருக்கிறாராம். அடுத்த மாதம் மலேசியாவிலிருந்து வரும் தன் நண்பர் மூலம் கொடுத்தனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள்.

             தேர்வை கவனமாக எழுதவும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உன் வரவுக்காக காத்திருக்கிறோம்.

    அன்புள்ள அப்பா

    மு.கோபி சரபோஜி

    Share
  • விளை நிலம் – கவிதை

    சரபோஜிindex

    விளைந்த நிலமாய் – விளையும் நிலமாய்

    இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்

    விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.

    சர்ப்பத்தின் புணர்வுபோல

    அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை

    விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.

    முப்போகம் விளைய வைத்து

    உணவிட்டவனின் தற்கொலைக்கு

    கணிணியில் கையறு நிலை பாடினோம்.

    ஏட்டுப்படிப்பு போதுமென நினைத்த நாம்

    ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை

    ஏன் மறந்து போனோம்?

    கண்ணை விற்று சித்திரம் வாங்கும் உண்மையை

    கையூட்டிற்காய் பணியை இழக்கும் அபாயத்தை

    எப்பொழுது உணரப் போகின்றோம்?

    கழனிப்பானையவும் களத்து மேட்டையும்

    தொலைத்த அவலத்தை

    கல்லையும் மண்ணையும் தின்றா போக்க முடியும்?

    இனி ஒரு விதி செய்து மாற்ற முடியாவிட்டாலும்

    இனி ஒரு விளை நிலத்தையும்

    விலை நிலமாய் – மனை நிலமாய் மாற்றாதிருப்போமே!

    படத்துக்கு நன்றி

    http://www.dreamstime.com/royalty-free-stock-photography-green-field-fertile-land-image2506117

    Share
  • பிரசவ அரங்கேற்றம்

     

    சரபோஜி

     

    எங்களைப்
    பகலவனாக்க
    பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

    உன் இறுதிச்சடங்கில்
    உன்னை மொய்த்த
    ஈக்களை விட
    வந்தவர்கள் குறைவாம். (more…)

    Share
  • விதையின் குணம்

    மு.கோபி சரபோஜி

    பெற்றோர்களே….
    வயது போனதற்காய்
    நீங்கள்
    உதிரமும்,உணவும் தந்து
    கை தூக்கி விட்ட பிள்ளைகள்
    உங்களை
    கை விட்டு விட்டதை எண்ணி
    வருந்தாதீர்கள்.

    நீங்கள் – விருட்சம்
    அவர்கள் – விதை.

    விழுந்து எழுவது தானே
    விதையின் குணம்.

    விட்டு விடுங்கள்
    எழும்போதாவது
    வீரியமாய் எழட்டும்.

    படத்துக்கு நன்றி
    Share
  • பொழுதின் மீதான உறவு – கவிதை

    மு.கோபிசரபோஜி

    மொக்கொன்று
    அப்பொழுது தான்
    பூத்த தருணம் போல இரவு.

    இரவுடனான
    அந்த நெருக்கத்தை
    எந்தவொரு பகலும்
    எட்டவேயில்லை என்னிடம்.

    துருத்தி தெரியும் படி
    தன் இயலாமைகளையும்
    இல்லாமைகளையும்
    வார்த்தை கத்திகளாக்கி……..

    என் நெஞ்சில் தேக்கி
    நெருடலின்றி சன்னமாய்
    கடந்து போகிறவர்கள்
    பகலில் உலவித்திரிகையில்…….

    வஞ்சத்தை விட
    பரிதாபம் மட்டுமே
    மிஞ்சுகிறது
    எனக்கான
    எல்லா பகலிடமும்!

    Share
  • பரஸ்பரம்

    மு.கோபி சரபோஜி

    சுமந்தவர்களின்
    சந்தோஷத்திற்காக
    சுற்றம் சூழ
    வாக்கப்பட்டோம்.

    தாம்பத்தியம்
    நடப்பதாய் சொல்ல
    வாரிசுகளையும்
    பெற்றுக் கொடுத்தோம்.

    பெற்றதில்
    அவர்களுக்கு சந்தோஷம்
    கொடுத்ததில்
    நமக்கு சந்தோஷமா?

    குருதிகளின்
    கூட்டல்களுக்காக
    குற்றச்சாட்டுகளை ஏன்
    பரிசளித்துக் கொள்வானேன்?

    ஊருக்கும், உறவுக்குமான
    வேஷத்தை கலைக்காமலே
    கணவன் ,மனைவியாய்
    கட்டிலுக்கு இருப்பதை விட…..

    நீ…….நீயாகவும்
    நான்……நானாகவும்
    தோள் தூங்கும் நம் குழந்தைகளுக்கு
    தோழமையாய் இருப்போம்!

    படத்துக்கு நன்றி

    http://blogs.forbes.com/davidkwilliams/

    Share
  • ஊனம்

     

    கோபி சரபோஜி

    கூந்தல்
    கருமேகம்.

    நெற்றி
    நிலா.

    புருவம்
    பிறை.

    விழி
    மீன்.

    நாசி
    கிளி.

    வாய்
    கோவைப்பழம்.

    பல்
    முத்து.

    கழுத்து
    சங்கு.

    தனம்
    கவிழ்ந்தமலை.

    இடை
    கொடி.

    தொடை
    வாழை.

    இப்படியான
    உருவகங்களால்
    ஊனமாகிப்போனது
    உன்னையும்
    தன்னைப் போன்றதொரு
    சக மனுசியாய் மதிக்காத
    என் ஆண்மை தனம்!

     
    படத்துக்கு நன்றி
     
    Share
  • உன் அன்பை!

    மு.கோபி சரபோஜி

    இன்னும் யோசித்து

    செய்திருக்கலாமென

    அங்கலாய்கிறார் அப்பா.

     

    வந்து விடு

    பேசி தீர்த்து திரும்பலாமென

    புலம்புகிறாள் அம்மா.

     

    எப்படி இப்படி

    சகித்துக் கொள்கிறாய் என

    சாடுகிறாள் சகோதரி.

     

    இந்த கஷ்டம்

    வேணுமா உனக்கு? என

    வெடிக்கிறான் சகோதரன்.

     

    கிளையின்

    சேதத்தை பார்த்து

    அக்கறை கொள்ளும்

    இவர்களுக்கு

    எப்படி புரியவைப்பேன்?

     

    நசிந்து கிடந்தேனும்

    வேராய் விரவி

    என்னை நேராய்

    பிடித்து வைத்திருக்கும்

    உன் அன்பை!

     படத்துக்கு நன்றி

     

    http://www.zastavki.com/eng/Photoshop/wallpaper-17490-2.htm

     

    Share