இராமனின் சந்தேகமும், அனுமனின் விளக்கமும்

மு. கோபி சரபோஜி

எவரிடமாவது கொஞ்சம் முகம் கோண வசவு வாங்கினாலே வதங்கிப் போய்விடுவோம். இந்த வசவு, ஏச்சு, கோபம் எல்லாம் இந்தக்காலத்தில் தான். அந்தக்காலத்தில் எல்லாம் சாபம் தான்! கடுப்பேத்துறார் மை லார்ட் என்பது மாதிரி முனிவர்களும், அவர்கள் வழிபடும் கடவுளும் தனக்கு எதிராக யாராது குழிபறிக்கும் வேலைகளைச் செய்தாலோ, தனக்கு விரோதமாக நடந்து கொண்டாலோ உடனே சாபத்தை கொடுத்து ஒடுக்கி விடுவார்கள். வரம் கொடுக்கும் வாயாலயே சாபங்களும் கொடுக்கப்பட்டன. கூடவே அதற்கான பரிகாரங்களும் இலவச இணைப்பாய் வழங்கப்படுவதுண்டு. சில சமயங்களில் அதில் விதிவிலக்கும் இருக்கும்.

ஒரு கடவுள் இன்னொரு கடவுளுக்கே சாபம் கொடுத்து வந்த அந்தக்காலத்தில் முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டி வரம் வாங்கி அதைச் சாபங்களாக மாற்றி தங்களுக்கு எதிரானவர்கள் மீது எறிந்து வந்தனர். அப்படி ஒரு முனிவரால் சாப அம்புக்கு உள்ளானவன் தான் நளன்!

விசுவகர்மாவின் மகனான நளன் குழந்தைப்பருவத்தில் அந்த வயதிற்கே உரிய குறும்புகளுடன் இருந்தான். அப்பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த முனிவர்கள் இருக்கும் பகுதிக்கு அடிக்கடி விளையாடச் செல்லும் சமயங்களில் தன் சேட்டைகளால் அவர்களுக்கு தொல்லைகளையும் கொடுத்து வந்தான். முனிவர்கள் ஆற்றில் மூழ்கி குளிக்கும் சமயத்தில் கரையில் வைத்திருக்கும் அவர்களுடைய துணிமணிகளை அள்ளி தண்ணீரில் வீசி மூழ்கடித்து விடுவான். அதேபோல, அவர்கள் முங்கி எழும் சமயமாக பார்த்து கரையில் கிடக்கும் சிறு, சிறு கற்களை எடுத்து அவர்கள் மீது எறிவான். சிறுபிள்ளை தானே என பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முனிவர்கள் ஒருநாள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். கோபம் வராதவரைக்கும் தான் முனிவர்கள் சாதுக்கள். வந்துவிட்டால் வாயால் சத்ருக்களாக மாறி விடுவார்கள்.
கோபம் கொண்ட முனிவர்கள், ”இனி நீ எதைத் தண்ணீரில் தூக்கி எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கவே செய்யும். தவிர, குரங்குச் சேட்டை செய்து எங்களுக்கு துன்பம் தந்து வந்ததால் இனி நீ குரங்காக மாறிப்போவாயாக” என்று சாபம் கொடுத்து விட்டனர். சாபம் தன் வேலையைக் காட்ட வானரமாக மாறிய நளன் அனுமன் தலைமையில் வானரப்படையில் சேர்ந்ததோடு இராம சேவைக்கும் வந்தான்.

சீதையைப் பறி கொடுத்த இராமர் அதற்காக இராவணனிடம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் படையெடுப்பை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். அது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடல் மேல் பாலம் அமைத்து படை நடத்திச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடலரசனிடம் அலைகளின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் இராமர் தவமிருந்தார். அவனின் தகவலுக்காக தர்ப்பைப் புல் மீது அவர் சயனித்திருந்த இடம் தான் “திருப்புல்லணை”. அது பின்னர் மருவி “திருப்புல்லாணி” என்றானது. மூன்று நாட்களாகியும் கடலரசன் வராததால் கோபம் கொண்ட இராமர் கோதண்டத்தை எடுத்து எய்யத் துவங்கிய நொடி கடலரசன் வந்து சேர்ந்தான்.

DSC02516_thumb[8]
விசுவாமித்திரரின் யாகத்திற்காக தன் பாணத்தாலயே (அம்பால்) பந்தலிட்டு பாதுகாத்தவர் தன் மீது கோதண்டத்தை எய்தால் என்ன கதியாவது? என நினைத்து பதறி வணங்கி நின்ற கடலரசன் தாங்கள் என்னை முதலில் மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைப்பது போல அகம்பாவத்தால் வராமல் இருக்க வில்லை. வடதுருவத்தில் எனக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சில துரோகிகளை ஒழித்துக்கட்டும் வேலை இருந்ததால் அங்கு சென்றிருந்தேன். அந்தப் பிரச்சனையை முடித்து விட்டு செய்தியறிந்து உங்களைச் சந்திக்க வருவதற்குள் மூன்று தினங்களாகி விட்டது என்று கூறியதுடன் நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டான்.

இராமர் விசயத்தைச் சொன்னதும் பாலம் கட்ட தன்னால் ஆன எல்லா ஒத்துழைப்பையும் தருவதாக கடலரசன் உறுதியளித்தான். உடனடியாக பாலம் கட்டுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வானரசேனைகள் அணிவகுக்க அனுமன் தலைமையில் வேலைகள் ஆரம்பமானது. இமயமலையிலிருந்து கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு கை மாற்றி, கை மாற்றி சேதுக்கடலுக்கு கொண்டுவரப்பட்டன. கற்களை தூக்கிக் கடலில் போட்டால் ஒரு கல்லும் மிதக்கவில்லை. அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நிலைமை சிக்கலாக இருப்பதை அறிந்து அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் கடலரசன் தங்களின் வானர சேனையில் உள்ள நளன் என்பவன் பெற்றிருக்கும் சாபம் இப்போது நமக்கு வரமாக இருந்து உதவப்போகிறது. அந்த சாப பயனால் இந்தச் சிக்கலைத் தீர்த்து விடலாம். அவன் பெற்றிருக்கும் சாபப்படி எதைத் தூக்கி தண்ணீரில் போட்டாலும் மிதக்கும் என்பதால் முதல் கல்லை அவனைப் போடச்சொல்லி அதன் மீது மற்றவர்கள் கற்களை போடுங்கள் என யோசனை கூறினான்.

உடனடியாக சித்தாள் போல கல் கொண்டு வரும் வேலையிலிருந்த நளன் வரவழைக்கப்பட்டு பொறியாளராக நியமிக்கப்பட்டதோடு பாலம் கட்டும் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் கூடுதலாகத் தரப்பட்டது. முதல் கல்லை நளன் எடுத்துப் போட அதன் மீது வேரோடு கூடிய மரங்கள், சிறு மலைக்குன்றுகள், பாறைகள் என அனைத்தும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அனுமன் வானுக்கும், பூமிக்குமாய் பறந்து, பறந்து வேலைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். இராமரும், இலட்சுமணரும் அருகில் அமர்ந்து பாலம் கட்டும் வேலையின் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தங்களின் வழிபாட்டுக்குரியவராக, கடவுளாக நினைக்கும் இராமருக்காக எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க திடீரென இராமருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. மழைக்காக நடந்த யாகத்தில் குடையோடு வந்த சிறுவனின் பேச்சால் தன் சக்தியின் மேல் சந்தேகம் கொண்டு அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சங்கெடுத்து ஊதி சரிபார்க்கப் போய் தன் வீராப்பை இழந்த வருணபகவானுக்கு வந்த மாதிரி இராமருக்கும் தன் சக்தியின் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.

எல்லோரும் கடலில் போடும் கல் மிதக்கிறது. நாம் போட்டால் மிதக்குமா? என்ற சந்தேகம் பற்றிக் கொள்ள அருகில் கிடந்த கல்லை எடுத்து கடலுக்குள் வீசினார். போட்ட வேகத்தில் கல் தண்ணீருக்குள் மூழ்கிவிட இராமருக்கோ தன் சக்தியின் மீது மெல்ல சந்தேகம் பரவி பதற வைத்து விட்டது. எப்படி யோசித்தும் தன் சந்தேகத்திற்கு விடைகாண முடியாமல் தவித்தபடி உட்கார்ந்திருந்த இராமரின் தவிப்பை அவரின் முகக்குறிப்பால் கண்ட அனுமன் அருகில் வந்து விசாரித்தார்.

இராமர் விசயத்தைச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன் இதற்கு தானா இவ்வளவு யோசனை? நாங்கள் கற்களைப் போடும் போது “ஹேராம்” என்று உங்கள் நாமத்தை உச்சரித்தபடி போடுகின்றோம். அதனால் மிதக்கிறது. நீங்களோ அப்படிச் சொல்லாமல் போடுவதால் மிதக்காமல் மூழ்குகிறது என்றான். உள்ளன்போடு இறை நாமத்தை உச்சரிப்பவனிடம் இறைவன் கருணை கொள்கிறான். அருள் புரிகிறான் என்பதை அனுமனின் பக்தியும், இறைவனான இராமனின் சந்தேகமும் நமக்கு உணர்த்துகிறது. ஆலயம் சென்று அங்கொரு மனமும், இங்கொரு மனமுமாய் வழிபடுவதை விட இருந்த இடத்தில் இருந்த படியே உள்ளத்தூய்மையோடு அவன் நாமத்தை உச்சரித்தாலே போதும் காரிய சாத்தியமாகும். இந்த உண்மையை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

———————————————————————————————————————————————-

2 thoughts on “இராமனின் சந்தேகமும், அனுமனின் விளக்கமும்

  1. கண்ணதாசனின் வரிகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா. பின்னொரு நாளில்  தொகுப்பாகும் சாத்தியமிருந்தால் கட்டுரையில் கண்ணதாசனின் வரிகளை இணைக்கிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க