என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ.. நெஞ்சில் ஓர் ஆலயம் கவியரசு கண்ணதாசன்
கவிஞர் காவிரி மைந்தன்
நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்குனர் =தரின் இயக்கத்தில் நம் நெஞ்சில் நிற்கும் ஓர் ஆலயம் என்றைக்கும் நெஞ்சில் ஓர் ஆலயம்தான்! முக்கோணக் காதலை முழுமையான காவியமாய் திரையில் வடித்து வெற்றி பெற்றவர் இயக்குனர் =தர்! இந்தப் பாடல் உருவான கதை இனிமையானது! கதையின்படி இந்தக் காட்சி உணர்ச்சிகரமானது! திரைப்படம் முழுமையாக எடுத்தாகிவிட்டது! படம் முடிவதைக் குறிப்பதற்காக பூசணிக்காய் எல்லாம் சுற்றியாகிவிட்டது! அன்றிரவு இயக்குனர் =தருக்கு திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒரு பாடல் முழுமையாக இல்லையென்றாலும் ஒரு நான்கு வரிகளேனும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிட உடனே, கவிஞருக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து வேண்டுகோள் வைக்கிறார்.
கவிஞரோ.. அடுத்த நாள் காலை வெளிநாடு பயணத்தை முன்னிட்டு விமான நிலையம் செல்லவிருப்பதாக சொல்கிறார். அப்போதும் இயக்குனர் =தர் – கவிஞரை, விமான நிலையம் செல்லும் வழியில் அலுவலகத்திற்கு வந்து நான்கே வரிகள் வழங்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிடுகிறார். கண்ணதாசன் வருகிறார்.. இயக்குனர் காட்சியினை விளக்குகிறார்.. மற்றுமொரு முறை கவிதை கங்கை வழிகிறது.. ஆம்.. நான்கு வரிகளில் நின்றுவிடாமல் முழுப் பாடலும் எழுத்தில் வந்து விழுகிறது..
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ..
முன்னம் இருந்த நிலை மறந்தாயோ..
முகத்தைக் காட்டிக் கொள்ள துடித்தாயோ..
வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ ஒரு
வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
மாயப்பறவை ஒன்று வானில் பறந்துவந்து
வாவென்று அழைத்ததைக் கேட்டாயோ..
பறவை பறந்து செல்ல விடுவேனா அந்தப்
பரம்பொருள் கேட்டாலும் தருவேனா
உன்னை அழைத்துச்செல்ல எண்ணும்
தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனோ?
கவியரசர் கூடுவிட்டு கூடுபாய்ந்து தேவிகா பாத்திரமேற்று எழுதினாரோ.. பவித்ரமான அன்பை இதைவிட எப்படி பறைசாற்றமுடியும்??
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் எழுதிய கவிதைக்கு மகுடம் சூட்டப்படுகிறது பி.சுசீலா அவர்களின் குரலில்!!
உங்கள் இதயப்பரப்பை அகலமாக்கி இதோ இந்தப்பாடலை வழியவிடுங்கள்! சுமைதாங்கிவரும் சுகம் என்றால் என்ன என்பது புரிந்துவிடும்!
இயக்குனர் ஸ்ரீதர் போன்ற கலாரசிகர்களால் உருவாக்கப்பட்ட காவியங்களில் நெஞ்சில் ஓர் ஆலயமும் ஒன்று!!