இசைக்கவி ரமணன்

Tamil-Daily-News-Paper_20323908330
அடர்ந்தி ருக்கும் காட்டிலே அமர்ந் திருக்கும் சோதியே
படர்ந் திருக்கும் அண்ட ரண்டம் பார்த்தி ருக்கும் ஆதியே
குடங்க விழ்த்த நீரெனத் தடம்பு ரண்ட வாழ்வுதான்
அடங்க வேண்டி அண்டினேன் அள்ளிக் கொள்க கையிலே

எனைப்பி றக்க வைத்தனை உனைம றக்க வைத்தனை
வினைதுளைக்க வைத்தனை விதிக்கு நேர்ந்து விட்டனை
எனைமறித்த பின்னும்நீ சுனையடைத்த தென்னவோ
உனைமதித்த என்னைநீ தினம்மிதிப்ப தென்னவோ?

வெடித்து வீழ்ந்த தொருவிதை புதைத்தெழுந்த தொருவிரல்
துடித்துநின்ற உயிருளே நுழைந்துகொண்ட தொருதுளி
வடித்தகஞ்சி வழியவும் சோறுவாயு வானதே
கடித்த கார மொன்றுதான் கடைவழிக்கு மிச்சமே

கூட்டிவைத்த என்குரு கூடவந்த என்குரு
மாட்டிவைத்த தேதுக்கோ மறந்துவிட்ட தென்னமோ
ஆட்டிவைக்கும் மாயமோ ஆடுகின்ற தாயமோ
ஈட்டிமுனையில் உயிருடன் ஏழைவாழ்கி றேனடா!

உற்றதுன்பம் தீர்த்திடு, இல்லை உயிரினைப் பறித்திடு
உன்றன்சித்தம் என்னும் தங்க ஓடையில் கலந்திடு
பெற்றவுன்னை அன்றியிந்தப் பிள்ளை வேறும் அறியுமோ
பேச்சுபோதும் வாழ்வுதா! இல்லை மூச்சைக் கொண்டுபோ

04.01.2015 / ஞாயிறு / 23.30

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கொடு இல்லை கொண்டு போ

 1. மாட்டி கொண்டாள் காளியே ! ரமணன் பாட்டில் காலியே!…
  ****
  ஆட்டிவைக்கும் மாயமோ ஆடுகின்ற தாயுமோ -சூல‌
  ஈட்டிமுனையில் உயிருடன் ஏழைவாழ்கி றேனடி!
  ****
  பெற்றவுன்னை அன்றியிந்தப் பிள்ளை வேறும் அறியுமோ
  கொற்றவையே வந்துபோ! இல்லை மூச்சைக் கொண்டுபோ!
  **** 

Leave a Reply

Your email address will not be published.