இந்த வார வல்லமையாளர்!
ஜனவரி 5, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு எழுத்தாளர் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள்
நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்கு காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்நூல்களாக வெளியிட்டு வருகிறார். அறிவியல் செய்திபரப்பும் பங்களிப்பின் மூலம் இவர் மக்களுக்கு ஆற்றும் தொண்டினைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் இவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரினை பூர்வீகமாக் கொண்ட, 53 வயதை எட்டியுள்ள இளங்கோ அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். ‘துளிர்‘ என்ற மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏற்காடு இளங்கோ அவர்களின் அறிவியல் நூலாக்கப்பணிகளை பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளயின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் “அறிவியல் மாமணி” என்னும் விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார். தற்பொழுது சேலம் அறிவியல் இயக்கத்தின் (Tamil Nadu Science Forum – TNSF, Salem) மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று அந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் இளங்கோ.
இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் மக்களிடம் இல்லை என்று இளங்கோ கருதுகிறார். குறிப்பாக தொலைகாட்சியில் ஃபேர் அண்ட் லவ்லி, கோக்ககோலா போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து விட்டு அவற்றை பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தன்மைகளை பற்றியோ, அறிவியல் பின்னணியையோ யாரும் பார்ப்பதில்லை எனவும் இதுவே அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை அவர் எழுத துவங்கியதன் காரணம் எனவும் இளங்கோ குறிபிட்டுள்ளார்.
மேலும், இவர் “ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது. சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை,” என்று இன்றைய நிலையில் மக்கள் அறிவியலார்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இக்குறையை நீக்கும் பொருட்டு இவர் எழுதிய நூல்களில் பல அறிவியல் வளர்ச்சியில் அரும்பங்காற்றியவர்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டும் உள்ளன.
ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இளங்கோ அவரது இறப்பிற்குப் பிறகு அவரது உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று அவரது விருப்பத்தை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராகவும், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். அதன் காரணமாக தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் கொண்ட நூல்கள் பலவற்றிற்குத் தான் கொண்டுள்ள காப்புரிமைகளை நீக்கி இலவச மின்னூலாக அவை அனைவரையும் சென்றடையும் பொருட்டு ‘ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் ‘ துணையுடன் தனது நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்.
சென்னை வாழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. சீனிவாசன் அவர்களும் அவரது நண்பர்களான தொழில் நுட்பக் குழுவினரும் இலவச மின்னூல் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள். ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் (freetamilebooks.com) என்ற இணைய தளத்தின் வழி இதுவரை 70 எழுத்தாளர்கள் எழுதிய, 125 மின்னூல்களை இத்தன்னார்வக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள்மற்றும் வரலாறு என்று பலவகை நூல்களும் இவற்றில் அடங்கும். பரந்த மனமுள்ள எழுத்தாளர்கள் பலரும் தங்கள் நூல்களுக்கான காப்புரிமைகளை நீக்கி தங்கள் படைப்பை மின்னூலாக்க அனுமதியளித்து, ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் நிறுவனம் தமிழுக்கு செய்யும் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எழுத்தாளர்களில் தனி ஒருவராக மற்ற யாவரையும்விட அதிக எண்ணிக்கையில், 13 நூல்களுக்கு காப்புரிமைகளை நீக்கி ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் வழியே வெளியிட்டுள்ளார் ஏற்காடு இளங்கோ. கீழ்காணும் சுட்டிகள் வழி அவற்றைத் தரவிறக்கிப் பயனடையலாம்.
[1] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/
[2] இந்திய தேசியச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/
[3] இந்தியாவின் முக்கிய தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/
[4] உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/
[5] விண்வெளிப் பயணம் – http://freetamilebooks.com/ebooks/vinveli-payanam/
[6] விண்வெளியில் ஆய்வு நிலையம் – http://freetamilebooks.com/ebooks/space-research-center/
[7] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் – http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/
[8] உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் – http://freetamilebooks.com/ebooks/first-women-astranaut/
[9] முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா – http://freetamilebooks.com/ebooks/rakesh-sharma/
[10] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/
[11] விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் – http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/
[12] தானியங்கள் – http://freetamilebooks.com/ebooks/thaniyangal/
[13] குடிசை – குறுநாவல் – http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/
ஏற்காடு இளங்கோ மேலும் தனது அறிவியல் செய்திபரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்றும், தமிழுலகம் பயன்பெறும் வகையில் இன்னமும் பல நூல்களை வழங்க வேண்டும் என்றும் வாழ்த்தி வல்லமைக் குழுவினர் இவ்வார வல்லமையாளரான இவரை பாராட்டி மகிழ்கிறோம்.
இவரைத் தொடர்பு கொள்ள:
ஏற்காடு இளங்கோ / Yercaud Elango
(yercaudelango@gmail.com)
Google Plus: https://plus.google.com/102807648316848870666/
ஏற்காடு இளங்கோ பற்றிய தகவல் உதவி:
http://ta.wikipedia.org/s/3pgz
http://tnsfsalem2009.blogspot.com/
http://yercaudelango.blogspot.com/
http://www.noolulagam.com/
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
ஓர் உன்னதத் தமிழ் விஞ்ஞான எழுத்தாளரை தமிழ் வழங்கும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்த தேமொழிக்கும், விஞ்ஞானி ஏர்காடு இளங்கோவுக்கும் எனதினிய பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்