பழுதாகி வரும் பட்டிமன்றங்கள்
— மு. கோபி சரபோஜி.
பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் தயவு செய்து அதை மறுபரிசீலனை செய்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மின்னல் கீற்றைப் போல ஒரு கருத்தை, சிந்தனையைக் கலகலப்பு என்ற இரசவாதத்திற்குள் வைத்து கவிதையும், கதையும், இலக்கியமும், இன்னபிறவுமாய் இழைத்துச் செவிகளில் அரங்கேற்றி விசேச நாட்களை விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களாய் மாற்றிக் கொடுத்த பட்டிமன்றங்கள் இன்றைக்கு அரிதாகி வருகின்றன. பழுது பார்க்க வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.
பழந்தமிழர் காலத்தில் பொது இடங்களில், பலர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட கருத்துப் போர் தான் இன்றைய பட்டிமன்றங்களுக்கான முதல் வித்து எனலாம். இந்த வித்தின் தடங்கள் சங்ககால நூல்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் உறைந்து கிடக்கிறது. ”பட்டிமண்டபம்” என்ற இலக்கிய வழக்கின் சொல் வடிவமான ”பட்டிமன்றங்கள்” ஆரம்பக் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்து நடைபெற்றன. குறிப்பாகக் கம்பன் கழகங்கள் கம்பராமாயணம் சார்ந்து அதிக அளவில் பட்டிமன்றங்களை முன்னெடுத்தன. இலக்கியங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றங்களில் சங்க இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், காப்பியங்களின் களிநடையில் தோய்ந்தவர்கள் தங்களின் வாதங்களால் மக்களுக்குச் செய்திகளோடு சேர்த்து இலக்கியங்களையும் கொண்டு சேர்த்தனர். மக்களின் புரிதலுக்கும், அறிதலுக்கும் ஏற்பப் பந்திவைத்தனர்.
இலக்கியங்களை மட்டுமே சார்ந்து இயங்கி வந்த பட்டிமன்றங்கள் காலத்திற்கேற்ப மாற்றம் பெறத் தொடங்கியது. இலக்கியங்களோடு சேர்த்து சமூகம் சார்ந்த பிரச்சனைகள், மக்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் பற்றியும் விவாதிக்கும் அரங்கமாகப் பட்டிமன்றங்களைச் சமூகத்தின் பக்கமாகத் திருப்பிய தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவற்றை அரங்குகளிலிருந்து வெளியேற்றி பொதுமக்களை நோக்கிக் கொண்டு வந்தார். அதன் பலனாக மக்கள் அதிக அளவில் கூடிக் களிக்கும் ஊர் திருவிழாக்களில் பட்டிமன்றங்களுக்கும் இடம் கிடைக்க ஆரம்பித்தன.
புதிதாக வரும் எந்தக் கலை வடிவத்தையும் ஆரம்பத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மக்கள் பட்டிமன்றங்கள் பாட்டுமன்றங்களாகத் தன் புதிய கிளையை விரித்த போது பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். ஆனால், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு, நகைச்சுவை என்று மட்டுமே தன்னை நிலை நிறுத்த முயன்ற பாட்டுமன்றங்களில் மக்களுக்கு இருந்த ஆரம்பக் கால ஆர்வம் மெல்லக் குறையத் தொடங்கியதும் அவை மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்பிய சேய் கழகத்தைப் போல சினிமாப் பாடல்களோடு சேர்த்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் பட்டிமன்றங்களின் பாணியில் எடுத்துப் பேச ஆரம்பித்தன.
பட்டிமன்றம், பாட்டுமன்றம் என்ற இரு முனைகளாய் பட்டிமன்றம் மாறியதாலும், ஆரம்பக் காலத்தில் அதில் வழக்காடியவர்கள் தங்களை ”நடுவர்” என்ற அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டதாலும் வழக்காடுபவர்களுக்கான தேவை அதிகமாகியது. பேச்சுக்கலை விற்பன்னர்கள், இலக்கியம் படித்தவர்கள், சமூகப் பிரச்சனைகளை அங்கதமாக, சாடலாக, உள்ளீட்டோடு நகைச்சுவையாக இலக்கியங்களுக்குள்ளும், இதிகாசங்களுக்குள்ளும், இதரக் கலை வடிவங்களுக்குள்ளும் வைத்து நவீன சாண்ட்விச்சாகத் தரும் பேச்சாளப் பெருமக்கள் ஆகியோரோடு அறிமுகங்களாய் பல புதிய பேச்சாளர்கள் வலம் வர ஆரம்பித்தனர். இந்தப் புதிய வரவின் எழுச்சியில் பட்டிமன்றங்கள் தன் பொலிவை மெல்ல இழக்கத் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டு எல்லா அறிமுகப் பேச்சாளர்களுக்கும் உரியதல்ல என்ற போதும் இந்தக் காலகட்டத்தில் தான் பட்டிமன்றங்களில் வழக்காடுபவர்களை உரைகல் கொண்டு உரசிப் பார்க்கும் நிலை ஆரம்பமானது.
”அவிநயம்” என்ற பழந்தமிழ் நூல் உரைக்கும் பட்டிமன்ற நெறிகளை இலக்கியக் கட்டுரைகள் வாசிக்கத் தருகின்றன. ”பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என்கிறது மணிமேகலை. இப்படிப் பாங்கு அறிந்து மேடை ஏறியவர்களில் (!) சிலர் இன்று அந்த மேடைகளில் வங்குழையாகக் கத்துகிறார்கள். அரசியல்வாதிகளின் மேடை முழக்கம் போல அடிவயிற்றிலிருந்து அலறுகிறார்கள். இவர்களின் அலறலில் தொட்டிலில் உறங்கும் சிறு குழந்தை பதறி எழுந்து அழுகிறது!
சாட்டையைச் சுழற்றுவதாய் சொல்லிக் கொண்டு தன் மனைவி தொடங்கி குடும்ப உறுப்பினர்கள், தான் குடியிருக்கும் வீதியில் வசிப்பவர்கள் வரை அனைவரையும் ஒருமையில் விளித்து விளாசி எடுக்கிறார்கள். சில மென் சொற்கள் கூட இவர்களின் ஓலமிடலில் கதறிக் கதறி அழுகிறது. புகழ்பாடுவதாய் நினைத்து தனிநபர் துதிபாடுகிறார்கள். சிலரைக் குளிர்விக்க சிலரைச் சகட்டு மேனிக்குச் சாடுகிறார்கள், இடித்துரைக்கிறார்கள். இந்தச் சாடல்களையும், இடித்துரைப்புகளையும் கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அச்சரம் மாறா அரசியல் மேடை முழக்கமாகவே ஒலிக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டிமன்றங்களில் மொழிப்புலமை கொண்டு வாதாடும் தேர்ந்த பேச்சாளர்களுக்குப் பஞ்சம் வந்து விட்டதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சிரிக்கச் சொல்வதாய் நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் இவர்களில் பலரின் பின்புலம் ”கல்லூரி பேராசிரியர்கள்” என்பது தான் வேதனையான விசயம்.
”பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்” என அரியக் கலைகளை ஆராயும் இடமாகக் கம்பராமாயணம் கூறும் பட்டிமன்றங்களை உங்களின் தரமற்ற வாதங்களால் தயவு செய்து பகடியாடும் மன்றங்களாக மாற்றி விடாதீர்கள் என்றும் – உங்களின் வார்த்தை வீச்சில் பட்டிமன்றங்களுக்கென ஒரு பெரும் கூட்டத்தை இருத்தி வைக்கப் போராடியவர்களை, போராடிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கழுவேற்றி விடாதீர்கள் என்றும் மட்டுமே இவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் இரசிகர்களின் கையில் ரிமோட் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் வரவேற்பறையில் காத்திருக்கிறது என்பதை மட்டுமாவது இவர்கள் நினைவில் கொண்டார்களேயானால் நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் பட்டிமன்றங்களுக்காது வாழ்வு கிட்டும்! அவற்றை வழக்கொழிந்து போன கலைவடிவம் என அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும் அபாயத்திலிருந்து காக்கும்!!