இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (164)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.

இப்பொழுதுதான் 2015 ஆம் ஆண்டு பிறந்தது போலொரு உணர்வு, அதற்குள்ளாக ஒரு குதிரையைத் தட்டி விட்டதும் அது கண்மூடித் திறப்பதற்குள் காததூரம் கடந்து விடுவது போல காலமும் ஓடி செப்டெம்பர் மாதத்தில் வந்து நிற்கிறது. மனிதனின் வாழ்வில் அவன் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் அவன் தனது முடிவை நோக்கி எடுத்து வைக்கும் வினாடிகள் என்பதே உண்மையாகிறது. ஆனால், அதற்காக எமது வாழ்வை எப்படி வாழ்ந்தாலும் வாழ்ந்து முடித்தால் சரி எனும் வகையில் வாழ்ந்து விடுவது சாத்தியமா? இல்லை, அப்படி வாழ்வதற்காகத்தான் நாம் இப்புவியில் மனிதராக அவதரித்திருக்கிறோமா ?

வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அறிந்த நிஜமான உண்மை, பிறந்தவர் அனைவரும் ஓர் நாள் இறப்பர் என்பதே. ஆனால் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வுலகத்தில் எமது வாழ்க்கை எவ்வகையில் அமைந்திருந்தது என்பதே நாம் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாகிறது. வாழ்வில் நாம் எண்ணியதெல்லாம் நடப்பதுமில்லை, விரும்பாத நிகழ்வுகள் நடக்காமல் போகப் போவதும் இல்லை. நாம் எண்ணியது நடந்தால் மகிழ்கிறோம், அது நடைபெறாவிட்டாலோ ஏமாற்றமடைகிறோம்.

வாழ்வில் இத்தகைய அடிப்படைகளின் பின்னணியில் தான் சமூகங்கள் உருவாகின்றன. அவற்றின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. நான், நீ எனும் உணர்வுகள் நாம் என்று மாறும் போதுதான் அங்குச் சமுதாய உணர்வுகள் துளிர்க்கின்றன. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் அச்சமுதாய அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் எவ்வகையில் அச்சமுதாயத்தின் அங்கமாக தம்மைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது.

multicultural-britainஇன்றைய இங்கிலாந்து ” Cosmopolitan “ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சமூக அமைப்பை அடித்தளமாகக் கொண்டது. இதை ” Multicultural Society” அதாவது பல்லின கலாச்சாரமிக்க மக்களைக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பாகவே பலரும் கருதுகிறார்கள். இத்தகைய ஒரு சமுதாய அமைப்பு இங்கிலாந்தின் மீது திணிக்கப்பட்டதா அல்லது அது தானாகவே விரும்பி இத்தகைய சமுதாய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டதா என்பதல்ல தற்போதைய கேள்வி. இச்சமுதாய அமைப்பு இங்கிலாந்தின் ” Indigenous Population “ அதாவது இங்கிலாந்து நாட்டின் பழங்குடி மக்கள் அல்லது இங்கிலாந்து நாட்டின் தொன்மையான மக்கள் என்று கருதப்படும் “ஆங்கிலோ சாக்ஸன்”(Anglo saxon) இன மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே தற்போதைய ஆதங்கமாகும்.

QHv5fH1இங்கிலாந்து ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக “பெரிய பிரித்தானியா” எனும் மாபெரும் பலம் பொருந்திய நாடாக விளங்கிய காலங்கள் உண்டு. “Gum Boat Diplomacy” என்றழைக்கப்படும் பீரங்கிப் படகின் அடிப்படையிலமைந்த ராஜதந்திரம் எனும் வகையில் உலகின் பல நாடுகளையும் அப்போதைய பெரிய பிரித்தானியா கைப்பற்றியது உண்மையே. பிரித்தானிய ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று அவர்கள் மார்தட்டிக் கொண்ட காலங்களும் உண்டு. உலகின் பல பாகங்களிலும் தமது வாழ்க்கைமுறையையும் தமது மொழியையும் புகுத்தியதால் அந்நாடுகள் விடுதலையடைந்ததும் அந்நாட்டு மக்கள் தாம் புலம்பெயர எண்ணிய நாடு இங்கிலாந்து என்பதே இங்கிலாந்தைப் பொறுத்தவரை கசப்பான உண்மையாகும்.

IPA-The-New-Britain-Reportஅது மட்டுமின்றி அந்நாளைய இங்கிலாந்தின் ரெயில்வே கட்டமைப்புக்கும், மற்றைய நாட்டின் கட்டமைப்புக்கும் பணியாட்கள் தேவையென்பதால் அவர்களாகவே தமது நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தவர்கள் ஏராளம். இப்பின்னணிகளின் காரணமாக பல்வேறு இங்கிலாந்து அரசுகள் “காமன்வெல்த்” என்றழைக்கப்படும் பொதுநலவாய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டவருக்கு விசேட சலுகைகள் அளித்து அவர்களை வரவேற்றதும் உண்மையே ! ஆனால், இன்றைய இங்கிலாந்தின் பிரச்சனைகள் வேறு. உலகின் பொதுவான பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக இங்கிலாந்திலும் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

விளைவு !…12graphicDM0404_468x386

வாழ்வின் சகல வசதிகளையும் குறைவின்றி அனுபவித்து வந்த இங்கிலாந்து நாட்டு மக்கள், பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டது.  இதற்குப் பின்னணியாக பல காரணங்கள் இருக்கலாம். மாறி மாறி வந்த அரசாங்கங்களின் பிழையான பொருளாதாரக் கொள்கைகள், அவரவர்கள் தமது அரசியல் கொள்கைகளில் கொண்டிருந்த அழுத்தமான பிடிகளினால் எடுத்துக் கொண்ட பிழையான திருப்பங்கள் எனப் பலவற்றை குறிப்பிடலாம். ஆனால், அனைவர் கண்களிலும் தென்பட்ட ஒரு பொதுவான காரணி “வெளிநாட்டவரின் குடியேற்றமே.” போகும் இடங்களில் தொகை தொகையாகக் காணப்படும் ஐரோப்பிய, ஆசிய வெளிநாட்டவர்களின் வருகை இங்கிலாந்து நாட்டு மக்களின் மனதில் தாம் தமது வசதிகளை இழக்கக் காரணம் தமது வளங்களை இத்தகைய வெளிநாட்டவருடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட நிர்ப்பந்தமே எனும் கருத்து வலுவாக நிலை கொள்ள ஆரம்பித்தது.

immigration-open-your-eyes_2எதிர்க்கட்சிகளாக இயங்கிக் கொண்டிருந்த பல சிறிய கட்சிகள் தமது பலத்தைப் பெருக்கி தாம் பிரபலமடைய இந்த “வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கையை” முன்வைத்து பிரசாரம் செய்ய ஆரம்பித்ததினால் அவற்றிற்கு ஆதரவு பெருகியது. அச்சமடைந்த பிரதான கட்சிகள் தமது பக்கம் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வதற்காக இதே கருத்தினை தமது பிரசாரத்திற்கு அடிப்படையாக்கினார்கள். இதேசமயம் தற்போது மத்தியக்கிழக்கு நாடுகளில் இருந்து படகுகள் மூலம் தப்பியோடி வரும் பலர் ஐரோப்பாவுக்குள் நுழைந்து, அதனூடாக இங்கிலாந்து நாட்டு எல்லையில் முகாமிட்டு இங்கிலாந்துக்குள் கள்ளமாக நுழையும் முயற்சியில் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலை இங்கிலாந்து நாட்டு மக்களின் மனநிலையில் வெளிநாட்டவர்களை நோக்கிய கருத்தில் மிகவும் அதீத நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியுள்ளது.
அதே நேரம் சில பிரித்தானிய இஸ்லாமியர் சிரியா, ஈராக்கில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் “ஐ,எஸ்.ஐ.எஸ்” எனும் அமைப்பில் இணைந்து கொள்ள சட்டவிரோதமாகச் செல்வதும் இந்நாட்டவரின் கருத்தை மேலும் இறுக்கமடையச் செய்கின்றன.

பலமுனைகளில் கூர்மையடைந்து வரும் இப்பிரச்சனைக்கான தீர்வு எந்தத் திசையில் செல்கின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

 

 

 

picture sources:
IPA The New Britain Report
http://www.barenakedislam.com/2014/11/30/awwww-muslims-face-worst-job-discrimination-of-any-minority-group-in-britainbut-its-their-own-fault/
http://www.bnp.org.uk/news/it-multiculturalism-which-has-failed
http:  //imgur.com/gallery/QHv5fH1/
https://jodylancastle.wordpress.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.