வாசகர் கடிதம்: இப்படியும் ஒரு கொடுமை
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்
விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டிய தொலைக்காட்சி நாடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை இழிவுபடுத்தி, தங்களது நாடகங்களின் ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு வருவது வேதனையான விஷயம்.
தமிழகத்தின் பெருமை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் குடும்ப வாழ்க்கையும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒவ்வொருவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துகொண்டே வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் இந்தத் தொலைக்காட்சிகள் தாங்கள் ஒளிபரப்பும் நாடகங்கள் மூலம், கொஞ்சமாக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டு உள்ளார்கள்.
எந்த ஒரு நாடகத்தைப் பார்த்தாலும் இரண்டு பொண்டாட்டிகள் அல்லது மணமான ஹீரோவின் மீது மையல் கொள்ளும் பெண்கள் எனப் பெண்களை இழிவுபடுத்தியே தொடர்களை இயக்கிக்கொண்டு உள்ளார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பெண்களை இழிவுபடுத்தி இப்போது சமீபத்தில் ஒரு நாடகத்தில் “பள்ளிக்குப் பிள்ளைகளைக் கொண்டு இறக்கிவிட்டு வரும் பெண்ணை வழிமறித்து, செல்பி எடுத்துக் கொடுமை செய்கிறார்கள். அதை அங்கு வரும் வேறு பெண்கள் குத்திக்காட்டிக் கொடுமை செய்யும் புது விதக் கொடுமையைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்தக் காட்சியை முன்னிறுத்தி மற்ற நாடக இயக்குநர்களுக்கும் இந்த கான்செப்ட் விரிவுபடுத்தி எடுக்க, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இருப்பார்கள்.
இதுபோன்ற கொடுமையான காட்சிகளை அடிக்கடி காண்கிறோம். அவர்கள் எடுக்கும் நாடகங்களின் ரேட்டிங் உயர்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, பெண்களை இழிவு செய்யும் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இவற்றைக் கண்டு எந்தப் பெண் விடுதலை இயக்கமும் குரல் கொடுக்க முன்வருவது இல்லை. இதுதான் கொடுமையான விசயம்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களைத் தணிக்கை செய்ய, சென்சார் போர்டு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும். மாதர் சங்கங்கள் இதுபோன்ற நாடகங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முன்வரவேண்டும். இதற்கு வல்லமை மின்னிதழ் தகுந்த ஆலோசனைகளை மாதர் சங்கங்களுக்கும் அரசுக்கும் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை.
நன்றி
அன்புடன்
சித்திரை சிங்கர்
அம்பத்தூர்