– புலவர் இரா. இராமமூர்த்தி.

திருக்குறளில் ஒப்புரவறிதல், ஈகை ஆகிய இரண்டு அதிகாரங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன! ஒப்புரவு அறிதல் என்ற தொடரின் பொருள் ஈகையிலிருந்து வேறு பட்டது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே, இவற்றை வள்ளுவர் அடுத்தடுத்து வைத்தார்! ஈகைக்கும் ஒப்புரவுக்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடு அறிந்து மகிழ்தற்கு உரியது. பரிமேலழகர் ஒப்புரவறிதல் இம்மை நோக்கியது; ஈகை மறுமை நோக்கியது என்கிறார்!

ஒப்புரவு என்பது உலகத்தாரோடு ஒத்துச் செய்கின்ற சிறந்த தொழில். அதாவது ஒரு தொழிலைச் செய்பவன் அதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் வருகின்ற பயனை மட்டும் கருதிச் செய்யாமல் தம்முடன் வாழும் உலகினர்க்கும் பயன்படும்படிச் செய்தல்! இதனை மேலும் விளக்குவோம்! உழவுத்தொழில், நெசவுத்தொழில், வீடுகட்டும் தொழில் போன்ற, இவ்வுலக வாழ்விற்கு உதவும் தொழில்களைச் செய்வோர், தமக்கு மட்டுமே என்று கருதாமல் மற்ற மக்களுக்கும் பயன்படும்படி அத்தொழிலைச் செய்தல்! நெசவு நெய்வோன் தனக்கு மட்டுமே தேவையான துணியை நெய்து கொள்வதில்லை, பிறருக்கும் நெய்து தருகிறான். உழவுத் தொழில் செய்வோன் குடும்பத்துக்குத் தேவையான உணவை மட்டும் உற்பத்தி செய்வதில்லை, பிறருக்கும் உணவு தருகிறான். உடை தைப்பவர் தனக்கு மட்டுமே சட்டை தைத்துக் கொள்வதில்லை, பிறருக்கும் தைத்துத் தருகிறார். ஊதியம் கருதும் தொழிலாக இவற்றைக் கருத இயலாது! ஊதியத்தை நாடாமல் பிறருக்கு உதவும் பொருட்டே இவற்றைச் செய்வார் உலகில் உளர்! இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையில் எல்லாருக்கும் பயன் தரும் சிறந்த தொழிலை உபகாரமாகச் செய்தாலே ஒப்புரவறிதல்! ஒப்புரவால்தான் உலகின் நடைமுறை சிறப்பாக அமைகிறது!

வேதம் இன்னது செய் என்று விதித்திருந்த அறங்களைச் செய்தல் வேறு; ஒப்புரவு அறிதல் வேறு. வேதம் விதித்த அறங்களைச் செய்யாத போது அதற்குரிய கழுவாய் உண்டு! ஆனால் உலக நடை வழுவி விட்டால் கழுவாய் இல்லை; ஆதலால்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்!(214)

என்று திருவள்ளுவர் கூறுகிறார்! இந்த அதிகாரத்தில் ஒப்புரவினைப் பற்றி நான்கு உவமைகள் கூறப்படுகின்றன! அவை திருவள்ளுவரின் நுட்பமான புலமைக்குச் சான்றாவன! முதல் உவமை மேகங்கள் போன்று மழைநீரை வழங்குபவர்கள் கைம்மாறு கருதாதவர் ஆவர். மழை வழங்கும் மேகத்துக்கு நன்றியாக மீண்டும் மேகத்துக்கு நாம் ஏதும் செய்ய இயலாது! தவிர்க்க முடியாத ஒப்புரவைக் கடப்பாடு என்கிறார் திருவள்ளுவர்.

அடுத்து அவர் கூறும் மூன்று உவமைகள் ஒப்பற்றவை! முதல் உவமை ”ஊருணி நீர் நிறைந்தற்றே,” அடுத்த உவமை ”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று” அதற்கடுத்த உவமை ”மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” என்பனவாகும்.

1) ஊர்மக்கள் தாகம் தீரக் குடிப்பதற்கும் பசிதீர உணவு சமைத்து உண்பதற்கும் உரிய நீரைக் குறிக்கின்ற வள்ளுவர்,” ஊர் பருகி” என்று கூறாமல் ”ஊருணி” என்றார்! மக்கள் தமக்கு வேண்டிய அளவு நீரை, வேண்டிய நேரத்திலெல்லாம் தாமே சென்று முகந்து கொள்வதற்கேற்ப ஏரி, குளம் போன்ற ஊருணி நீர் நிரம்பிக் கிடந்தாற் போல்பவன் உதவுகிறான் என்கிறார் வள்ளுவர். இந்த உவமையில் பேரறிவாளனுக்குக் கிட்டிய பெருஞ்செல்வம் நீர் நிறைந்த ஊருணி போன்றது என்கிற போது, நீர்நிலை எந்த முயற்சியும் செய்யாமல் தானாக வந்த நீரை எல்லாரும் எடுத்துக் கொள்ளுமாறு கிடந்த சிறப்பினை உணர்த்துகிறார்.

2) அடுத்து, நன்கு பழுத்த பழமரம், ஊரின் நடுவே வளர்ந்து, அனைவர்க்கும் உண்ணக் கனிகளை உதவுவது போல, ஒப்புரவு உடையவனிடம் உள்ள செல்வம் உதவும் என்கிறார். இந்த உவமையின் தனித்தன்மை யாதெனில், பழமரத்தை உள்ளூரில் உள்ளவர்கள் நீரூற்றி வளர்க்காவிட்டாலும், வழியில் செல்வோருக்கு அப்பழமரம் கனிகளைத் தரும். இவ்வகையில் அம்மரத்தை வழியில் பழுத்த பனைமரத்தையே இந்த உவமை குறிக்கும்! இதனை, நாலடியார்,

”நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை அன்னவர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத் தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை”

என்று பாடுகிறது! இத்தகைய பனைமரமும் வளர்ப்பாரின்றி உயர்ந்து பழம் தரும்!

இந்த இரண்டு உவமைகளையும் கம்பர் ,

”ஊருணி நிறையவும் உதவும் மாடுயர்
பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்?”

என்று பாடுகிறார்

3) அடுத்து எல்லாப்பிணிகளையும் நீக்கும் மருந்து மரம் , மக்களின் பார்வைக்குத் தப்பாமல் வளர்ந்து, தன் கொழுந்து, இல்லை, பூ, பட்டை , வேர், காய், கனி, கொட்டை, கட்டை ஆகிய உறுப்புக்களை வழங்குவது போன்றது ஒப்புரவறிந்தான் செய்யும் உதவியை வள்ளுவர் கூறுகிறார்! இந்த உவமையின் தனிச்சிறப்பு யாதெனில், மருந்துமரம் எப்படியோ, எங்கோ, நம் இல்லத்தருகிலும், மலைமேலும், காட்டினுள்ளும் யாரும் நீரூற்றாமல் தானே வளர்ந்து நம் பார்வைக்குள் அகப்பட்டுத் தன் எல்லா உறுப்புக்களையும், மக்களின் நோய்தீர்க்க உதவும் பெரிய செயலைச் செய்கிறது!

ஏரிநீர் தானாகச் சேர்ந்த செல்வம்; பழமரம் பிறர் பராமரித்தமையால் வளர்ந்து பயன் தருவது; மருந்துமரம் யாரும் நீரூற்றாமல் , வேர்களால் முயன்று நீரைத்தேடி வளர்ந்த மரம். இவை மூன்றும் முன்னோர்செல்வம், பிறர் உதவியால் சேர்த்த செல்வம், தானாக மிகவும் முயன்று சேர்த்த செல்வம் ஆகிய மூவகைச் செல்வங்களை உணர்த்துகின்றன! மேலும் சிந்தித்தால் புதிய பொருள்களை இந்த மூன்று குறட்பாக்களும் தரும்! சிந்திப்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *