இறைவனை அடையும் மார்க்கம்

0

— மு.கோபி சரபோஜி.

திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான். இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்துக் காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார். மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.

Kannappaஅன்பினால் தன்னைக் கட்டும் பக்தனின் வழிபாட்டைக் காலையில் மறைந்திருந்து பார்க்கும் படி அவர் கனவில் வந்து சொல்லிச் சென்ற இறைவன் மறுநாள் திண்ணனுக்காகக் காத்திருந்தார். வழக்கம் போலப் பன்றி இறைச்சி சகிதம் வந்தவன் சிவலிங்கத்தின் ஒருபக்கக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதறிப்போனான். தன் கையால் நிறுத்த முயன்றான். முடியவில்லை, பச்சிலைகளைப் பறித்து வந்து ஒற்றி எடுத்தான். பலனளிக்கவில்லை. சட்டெனக் கையில் வைத்திருந்த வில்லால் தன் கண்களில் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த கண் மீது அப்பினான். இரத்தம் நின்று விட்டது. ஆனந்தம் அடைந்தான். இன்னும் அவனைச் சோதித்துப் பார்க்க நினைத்த இறைவன் அடுத்த கண்ணில் இருந்து இரத்தம் வடித்தார். இம்முறை பதறாத திண்ணன் அடையாளம் காண வசதியாகத் தன் கால் கட்டைவிரலை இரத்தம் வடிந்த கண்ணின் மீது வைத்துக் கொண்டு தன்னுடைய இன்னொரு கண்ணையும் வில்லால் தோண்டி எடுக்க முயன்றான். பக்தனின் அன்பைக் கண்டு பதறிப்போன இறைவன் நிறுத்து கண்ணப்ப என்ற குரலோடு அவன் முன் தோன்றி ஆசி வழங்கினார். அன்பினால் செய்யும் பக்தி எதுவானாலும் அது தனக்கு உகந்தது என்பதை சிவகோசாரியாருக்கு மட்டுமல்ல உலகிற்கும் இறைவன் உணர்த்திக் காட்டினான். திண்ணன் கண்ணப்ப நாயனாராய் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவராய் புகழ் பெற்றார். அவரைப் போல நாம் நம் கண்களை எல்லாம் இறைவனுக்குத் தர வேண்டியதில்லை. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்தாலே போதும்!

பிரார்த்தனை செய்வதால் மனமானது கடவுளிடம் ஐக்கியமாகிறது. அதன்வழி கிடைக்கும் இறை சக்தியும், மனதின் ஆன்ம சக்தியும் ஒன்று சேரும் போது நம் மனதின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட்டு மனமானது தூய்மை அடைகிறது. நம்முடைய மனதைச் செம்மையாக்கிக் கொள்வதற்கான வழிகளை வேண்டுவது மட்டுமே பிரார்த்தனையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

பிரார்த்தனையின் இன்னொரு வடிவம் “பஜனை”! ”பஜ்” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. பஜ் என்றால் ”அடைக்கலமாதல்”, “துணையால் சந்தோசமடைதல்” என்று பொருள். பஜனையைக் குறிக்கக் கூடிய கீர்த்தனைகள், சங்கீதங்கள், மந்திர ஜபங்கள், இறைநாமம் பாடுதல் ஆகியவற்றின் மூலம் இறைவனை நாடிச் செல்லும் போது நமக்குள் இருக்கும் அகந்தை, அகங்காரம் ஆகியவை தானே அகன்று விடுகிறது. ”அகங்காரம் தொலைத்து ஆலயம் நுழை” என்றார்கள். அப்படி நுழைகிறோமா? இறைவனைச் சேவிக்கச் செல்லும் சமயங்களில் கூட அதிகாரம், அந்தஸ்து போன்ற பகட்டுத்தனங்களைக் காட்டிக் கொண்டு வரிசை பிடிக்கிறோம். இவற்றை இறைவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவனின் விருப்பமின்மையை நாமும் உணர்வதில்லை. அதனால் தான் இறைவனை அணுகுவதற்கான எளிய வழிகளை எல்லாம் சிக்கலான மதச்சடங்குகளாகவும், வழிபாட்டு முறைகளாகவும் மாற்றிக் கொண்டு அவஸ்தைகளுக்கு உள்ளாகி நிற்கிறோம்.

இவ்விரு வழிகள் தவிர இறைவனை அடைய ஞானிகளும், ரிஷிகளும் உருவாக்கிக் காட்டிய இன்னொரு எளிய மார்க்கம் அன்பு! ”அன்பே கடவுள்” என்கிறார் திருமூலர். அவரின் வாக்கை உலகிற்கு உய்ப்பித்துக் காட்டியவர் பிள்ளையார்!

பக்தன் ஒருவனின் வழிபாட்டிற்குப் பிள்ளையார் உருவம் தேவைப்பட்டது, தன் கையில் இருந்த வெல்லத்தைப் பிள்ளையாராய் பிடித்து வைத்தான். அவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரும் அதில் உறைந்தார். கையிலிருந்த வெல்லத்தைப் பிள்ளையாராக்கி விட்டதால் நிவேதனம் செய்ய அவனிடம் ஏதுமில்லாமல் போனது, இறை வழிபாட்டில் நிவேதனம் செய்தல் முக்கியம். அவரையே கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தான். திண்ணனின் அன்போடு கொடுத்த பன்றி இறைச்சியை சிவபெருமான் ஏற்றதைப் போல தன் பக்தனின் அன்பையும் பிள்ளையார் ஏற்றதன் அடையாளமாகப் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற பழமொழி உருவானது.

இறைவனிடம் அன்பு செலுத்தும் போது அதில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். அதற்குப் பற்றற்று இருக்கப் பழக வேண்டும். பற்றுக்கு அடிமையான மனதில் கிளர்ந்தெழும் ஆசைகள் துன்பங்களை உற்பத்தி செய்த படியே இருக்கின்றன, அதனால் தான் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் புத்தர். சுட்டது போலும் விட்டது ஆசை என்று அருணகிரிநாதர் கூறுவதைப் போல ஆசைகளைத் தூண்டும் பற்றை விட வேண்டும். சட்டென எப்படி விடுவது?. பருந்து ஒன்று மூக்கில் ஒரு மீனைக் கவ்விச் சென்றது, அம்மீனைப் பறிப்பதற்காகச் சில காகங்கள் அந்தப் பருந்தைச் சுற்றிலும் ஆரவாரம் செய்தன. தொடர்ந்து பறக்க முடியாதவாறு அவை குறுக்கும், நெடுக்குமாய் பின் தொடர்ந்த படியே இருந்தன. தொந்தரவு பொறுக்க முடியாத பருந்து மீனை அங்கேயே போட்டதும் காகங்கள் பருந்தைத் தொந்தரவு செய்யவில்லை. தன் போக்கில் பருந்து பறந்து சென்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இந்தக் கதையில் வரும் பருந்து மீனை விட்டதைப் போல பற்றுக்களை விடப் பழகினால் அந்தக் கணமே நம்மாலும் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். நாம் எப்பொழுதாவது அப்படி விடுபட முயன்று இருக்கிறோமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.