சு. கோதண்டராமன்

 வெற்றி யாத்திரை

vallavan-kanavu121

ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே

-சம்பந்தர்

செய்தி வாய்மொழியாகவே அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் பரவியது. அரைக் காத தூரத்தில் பகவதி அம்மையாரின் பிறந்த ஊரான நனிபள்ளியில்* அச்செய்தி கேட்டதும், அவரது பெற்றோர்கள் தங்கள் பேரனை நினைத்துப் பெருமிதம் அடைந்தனர். அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். உடனே தங்கள் மகன் சம்பந்த சரணாலயனை அனுப்பிக் குழந்தையை அழைத்து வரச் செய்தனர். அவ்வூரைச் சேர்ந்த வேறு பலரும் அவருடன் சேர்ந்துகொண்டனர்.

செய்தி ஊர் ஊராகப் பரவி பழையாறையில் இருந்த அரசன் புண்ணிய வளவனையும் எட்டியது. ‘காழிப்பதியில் ஒரு மகான் தோன்றுவார் என்று என் தாத்தாவின் தாத்தா சொல்லி வந்தது உண்மையாகிவிட்டது. அதனால்தான் ஆழிப் பேரலை இந்த நகரை அழிக்கவிடாமல் இறைவன் காப்பாற்றி இருக்கிறான். இந்த மகானை நான் உடனே தரிசிக்க வேண்டும். அரசன் என்ற முறையில் போனால் மக்கள் என்னைத்தான் கவனிப்பார்கள். நானும் இக்குழந்தை மகானின் தொண்டர்களில் ஒருவனாக மறைந்து நின்று தரிசித்துவிட்டு வருவேன்’ என்று சொல்லிக் கொண்டார்.

முதல் அமைச்சரிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு மாறுவேடமணிந்துகொண்டு ஒரு குதிரையில் சென்றார். வழி நெடுக மக்கள் இந்தக் குழந்தை பாடுவதைப் பற்றியே வியந்து பேசுவதைக் கேட்டார். காவிரிக்கரையை அடைந்ததும் அங்கு மக்கள் பேசிக் கொள்வதிலிருந்து நனிபள்ளி என்ற இடத்தில்  பெருமான் வந்திருப்பதை அறிந்தார். அங்கு ஊருக்கு வெளியே இருந்த ஒரு தோப்பில் குதிரையிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றார்.

கோயிலை அடைந்தார். அங்கே மக்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் சிவபாத இருதயர் தோளில் ஆரோகணித்து ஞானசம்பந்தப் பெருமான் வந்தார். கூடவே ஏடும் எழுத்தாணியும் கொண்டு மாமன் சம்பந்த சரணாலயர் வந்தார். வரும்போதே மக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று கோஷம் எழுப்பினர். குழந்தை மகான் தாளத்தைத் தட்டிக் கொண்டு பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடத் தொடங்கினார். கூட்டத்தில்  ஒருவராக அமர்ந்து அரசர் கேட்டார். மெய் மறந்தார். பத்துப் பாடல்கள் முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் பேசத் தொடங்கியதையும் அரசர் கவனித்தார்.

“என்ன அழகான இயற்கை வருணனை! நமது ஊர் இவ்வளவு அழகாக இருக்கிறது என்பது இவர் மூலம்தான் தெரிகிறது. தேரைகள் ஆரைக் கொடிகளை மிதித்துத் துள்ள, அதனைக் கண்ட வாளை மீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் ஊர். இது போல் நாம் யாராவது இந்த ஊரின் அழகை ரசித்திருக்கிறோமா?” என்றார் ஒருவர்.

“இதுவரையில் இந்த ஊரை அழகற்ற பாலைவனம் என நினைத்திருந்தோம். இதன் நெய்தல் வளம் இப்பொழுதுதான் வெளிப்பட்டிருக்கிறது” என்றார் மற்றவர்.

“விதி முறைப்படி நீராடி, அர்க்கியம் தரும் அந்தணர்கள் வாழும் ஊர் என்று ஊரில் குடியிருப்போரின் சிறப்பையும் போற்றுகிறது பாருங்கள். இந்த மாதிரிப் பாடுவதற்கு நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் கற்றிருந்தால் கூட முடியாது, இந்த வயதிற்குள் இக்குழந்தை எங்கே கற்றது?” என்று சிலர் பேசிக் கொண்டனர்.

அவர்கள் கூறுவதை எதிரொலிப்பது போல் கடைசிப் பாட்டு வந்தது.

“காழிப் பதியில் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதுங்கள். இறைவனை நினையுங்கள். வினைகள் கெடும். இது நமது ஆணையாகும்.”

“அடா, அடா, என்ன தன்னம்பிக்கை! ஆணையிட்டுச் சொல்கிறாரே!” என்று வியந்தனர்.

அரசர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு குழந்தை மகானை மனதால் வணங்கி விட்டுச் சத்தமில்லாமல் வெளியேறினார். குதிரை மேல் பயணிக்கும் போது யோசனை செய்துகொண்டே போனார். ‘எதனால் இந்த மகானை நாடி இவ்வளவு கூட்டம் வருகிறது? அவர் குழந்தை என்பதாலா, இறைவனின் சிறப்பையும் அவன் படைத்த இயற்கை அழகையும் அழகிய சொற்களால் போற்றும் அவரது தமிழ்ப் புலமையினாலா, இசை இனிமையாலா, யானையை எதிர்க்கும் சிங்கக் குட்டி என சமணத்தைச் சாடும் துணிச்சலாலா அல்லது இவை எல்லாவற்றின் கலவையாலா? அல்லது இவற்றிற்கு அப்பால் வேறு ஏதாவது உள்ளதா?’ என்று சிந்தித்துக்கொண்டே சென்றார்.

தலைநகர் வந்ததும் முதல் வேலையாகத் தலைமை அமைச்சரைக் கூப்பிட்டுத்தான் கண்டதைச் சொன்னார். “தர்மத்துக்குக் கேடு நேரும்போதெல்லாம் நான் பிறப்பேன் என்று கண்ணன் கூறியது உண்மைதான். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் அவந்தி தேசத்தில் சைவத்தை நிலைநாட்டிச் சமணத்தை வேரறுத்த லகுலீசர், இப்பொழுது அதே நோக்கத்துக்காக, சோழநாட்டில் அவதரித்துள்ளார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாய மந்திரம் என்று லகுலீசர் சொன்னதையே இவரும் சொல்கிறார். வேள்விகள் செய்வோர் செய்யட்டும், முடியாதவர் வேத மந்திரங்களைக் கூறித் துதிக்கட்டும், அதுவும் இயலாதவர் நமச்சிவாய மந்திர ஜபமாவது செய்யட்டும் அல்லது நான் உரைத்த தமிழ்ப் பாடல்களை ஓதினால் போதும் என்கிறார். எதைச் செய்தாலும் இறை அன்புதான் முக்கியம், காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல்தான் உண்மையான சிவநேசம் என்று கூறுகிறார்.

“நாமாலை சூடியும் பூமாலை புனைந்தும் இறைவனை ஏத்துங்கள், வினை போகும் என்ற அம்மையாரின் கருத்தை இவர் எதிரொலிக்கிறார்.  இறை அன்பு இல்லாதவர்களை மட்டும்தான் சாடுகிறார். இதுவே பல தரப்பு மக்களையும் இவர்பால் ஈர்க்கிறது. எப்படியோ சிவன் சோழநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு எந்நாட்டவர்க்கும் இறைவனாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. என் குல முன்னோன் செந்தீ வளவனின் கனவு பலித்துவிட்டது.”

அமைச்சர் கூறினார், “வேத வேதாங்கங்களைக் கற்றவர்கள் வீடு வீடாகச் சென்று எவ்வளவு பிரசாரம் செய்தாலும் அது ஒரு சில மக்களையே சென்றடையும். பெரும்பாலான பாமர மக்களை விந்தைச் செயல்கள்தாம் ஈர்க்கும். இவர் மூன்று வயதில் செய்யுள் புனைவது ஒரு விந்தை. அதை இசையோடு பாடுவது இன்னொரு விந்தை. இவர் இன்னும் பல செய்வார் என்று தோன்றுகிறது. அதனால் மக்கள் சமுதாயம் முழுவதும் அவர் வசப்படும்.”

“இளங்கன்று பயமறியாது என்றபடி, கொஞ்சமும் அச்சமில்லாமல் சமணர்களைத் தாக்குகிறார். அவர்களால் அவருக்குத் தீங்கு வரும் வாய்ப்பு உண்டு. அவர் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மறைமுகமாக அவருக்குப் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேற்று நான் அவரைத் தரிசித்த நனிபள்ளியில் உள்ள கோயிலின் கருவறையை விரிவுபடுத்தி யானை சுற்றிவரும் அளவுக்குப் பெரிதாக அமைத்து அதன் மேல் ஒரு சிறப்பான வேலைப்பாடு உள்ள விமானம் அமைக்க வேண்டும். அவர் காலடி பட்ட எல்லா ஊர்களும் திரு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கப்பட வேண்டும். அவர் பிறந்த காழி மிகவும் புண்ணியம் செய்த மண். அது  இனி சீர்காழி என்று அழைக்கப்பட வேண்டும்” என உத்திரவிட்டார் அரசர்.

———————————————- —————————————————— ————————-

* இன்றைய பெயர் புஞ்சை

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *