அறிந்துகொள்வோம் – 22 (சிந்தனையாளர் ரூசோ)
-மேகலா இராமமூர்த்தி
இருபுரட்சிகளுக்கு வித்திட்ட ஒருவர்!
சமூகம் என்ற மக்கள்தொகுதியின் சிந்தனையானது காலந்தோறும் சிறிதளவேனும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலவோட்டத்தில் இயல்பானதே. ஆனால் இம்மாற்றங்கள் நல்லனவாகவும், மக்களுக்கு நன்மை பயப்பனவாகவும் இருப்பின் வரவேற்கத்தக்கவையே. இவை மெல்லவும் நிகழலாம்; புரட்சியெனும் மக்களெழுச்சி மூலம் ஒல்லையாகவும் நடந்தேறலாம்.
சமூக மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருக்கும் இத்தகைய புரட்சிகள் பூக்கவேண்டுமாயின் அதற்கான உந்துவிசையாக யாரேனும் அல்லது எவையேனும் இருத்தல் அவசியம். அவ்வகையில் தம் எழுத்துக்கள் மூலம் ஒரு புரட்சிக்கு…இல்லையில்லை இருபுரட்சிகளுக்கு வித்திட்டார் ஓர் சிந்தனையாளர். அவர்தான் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் (Geneva) பிறந்து பின்னர் பிரான்சில் வாழ்ந்து மறைந்த ழான் ழக்கே ரூசோ (Jean Jacques Rousseau).
1712-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் நாள் பிறந்த ரூசோ, பிறந்த பத்தாம் நாளே தாயைப் பறிகொடுத்தார். கதவை மூடிய இறைவன் சன்னலைத் திறப்பான் என்ற மக்கள் நம்பிக்கைக்கேற்ப, தாயில்லாப் பிள்ளையாய் ஆனபோதிலும் தன் அருமை அத்தையால் (தந்தை ஐசக் ரூசோவின் சகோதரி) பரிவோடும் பாசத்தோடும் வளர்க்கப்பட்டார் ரூசோ. இளம்வயதில் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்ததாலோ என்னவோ மிகவும் மென்மையான உள்ளமும் பிறரின் துன்பங்கண்டு துவளும் குணமும் ரூசோவிடம் இயல்பாகவே அமைந்துவிட்டன.
பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று கல்வி கற்றதில்லை ரூசோ; ஆனாலும் எப்படியோ தன் 7 வயதிற்குள்ளாகவே பிரெஞ்சு மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருந்தார் அவர். (ரூசோவின் மூதாதையர் பிரான்சிலிருந்து ஜெனிவாவுக்குச் சென்று குடியேறியவர்கள்). பிள்ளைப் பருவத்திலேயே உலக இலக்கியங்கள், இதிகாசங்கள் முதலியவற்றையெல்லாம் தன் தந்தையோடு சேர்ந்து படித்துமுடித்துவிட்டார் ரூசோ என்று கூறப்படுகின்றது. அவருடைய பத்தாவது வயதில் அவர்தந்தை ஐசக்குக்கும் சில அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் அவரின் தந்தையார் ஜெனிவாவைவிட்டே வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆதலால், தன்மகன் ரூசோவை அவனுடைய அம்மான் (maternal uncle) பெர்னார்ட் (Bernard) என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார் ரூசோவின் தந்தை.
அம்மான் மகனும், ரூசோவும் சிலகாலம் ஒரு பாதிரியாரிடம் அவர் இல்லத்தில் தங்கிக் கல்வி பயின்றுவந்தனர். அங்கு ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையால் கல்வியைத் தொடரமுடியாமல் மீண்டும் வீடு திரும்பிவிட்டனர் இருவரும். கொஞ்சநாட்கள் அம்மான் மகனோடு விளையாடிக்கொண்டும் அங்குமிங்கும் திரிந்துகொண்டும் இருந்தார் ரூசோ. வேலையேதுமில்லாமல் எத்தனை காலத்திற்கு ரூசோவை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பது என்றெண்ணிய அம்மான், ஆபெல் டுகோமான் (Abel Ducommon) என்ற சிற்பியிடம் ஐந்துவருட ஒப்பந்த அடிப்படையில் ரூசோவை வேலைபழகச் சேர்த்துவிட்டார். ஆனால், டுகோமான் மிகவும் கறாராகவும் கெடுபிடிகள் அதிகம் செய்பவனாகவும் இருந்தது சுயேச்சையாகவும், சுதந்திரப் பிரியராகவும் நடந்துகொள்ளும் ரூசோவுக்குச் சரிப்பட்டுவரவில்லை. போதாக்குறைக்கு, வேலைக்குச் சிறிது காலந்தாழ்த்தி வந்தாலும் கடுமையாகத் தண்டிப்பவனாக இருந்தான் அச்சிற்பி.
இவ்வாறு சிலமுறை அச்சிற்பியிடம் தண்டனைபெற்ற ரூசோவுக்கு அவ்வேலையும் அடிமைவாழ்வும் சிறிதும் பிடிக்கவில்லை. ஆகவே, தன்னுடைய 16-ஆவது வயதில் ஜெனிவாவை விட்டு வெளியேறிய அவர், கால்போனபோக்கில் சுற்றி இறுதியாய் இத்தாலிக்கு வந்துசேர்ந்தார். அங்கே உதிரிவேலைகள் பல செய்துகொண்டும் சாலையோரங்களிலும் மரத்தடியிலும் உறங்கியும் காலங்கழித்துவந்தார். இடையில் இசைப்பயிற்சி பெற்று இசையாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். ஒரு கிரேக்கப் பாதிரியாரின் அந்தரங்கச் செயலாளராகச் சிலஆண்டுகள் வேலை செய்தார்.
செய்யாத வேலைகள் இல்லை என்று கூறுமளவுக்குப் பலதரப்பட்ட பணிகளை அவர் மேற்கொண்டாலும் எதிலும் நிலைத்துநிற்கவில்லை. இயற்கையை இரசிப்பதையும் அதில் இறைவனைக் காண்பதையும், கற்பனைகளில் சஞ்சரிப்பதையும் தம் குணங்களாகக் கொண்டிருந்த ரூசோ, எங்கும்தங்காமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தது குறித்துத் தன் வாழ்வில் ஒருபோதும் வருந்தியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்ந்து அனுபவித்தவர் அவர்.
ஒருகட்டத்தில் இத்தாலி வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்த ரூசோ கிளம்பினார் பாரீஸ் மாநகரை நோக்கி! அப்போது அவருடைய வயது முப்பது. அங்கே ஓட்டல் ஒன்றில் தெரேஸே லெவாஷீர் (Therese Le Vasseur) என்ற பெண்ணைச் சந்தித்தார். இருவருக்கும் காதல் பிறந்தது. அப்பெண்ணைத் தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். ரூசோவின் வாழ்வில் எத்தனையோ துயரங்களும் தோல்விகளும் நண்பர்களின் நம்பிக்கை துரோகங்களும் தொடர்ந்தபோதிலும் இறுதிவரை அவருக்குத் துணையாய் நின்றது இப்பெண்மணி மட்டுமே.
”எழுதப்படிக்கத் தெரியாத பெண்ணாயிருந்தாலும் உலகஅறிவு நிரம்பப்பெற்றவள் தெரேஸே; மிகவும் நாகரிகமாக நடக்கத்தெரிந்தவளாகவும், எனக்குத் துன்பம்வந்த காலத்துத் தாங்கும் தூணாகவும், எனக்குப் புலப்படாத விஷயங்கள் பலவற்றைத் தான் எளிதில் விளங்கிக்கொண்டு எனக்கும் விளக்கிச்சொல்பவளாகவும் அவள் இருந்தாள்” என்று தன் துணைவியைப்பற்றி மிகவும் உயர்வாகத் தன்னுடைய சுயசரிதையில் (The Confessions – an autobiographical book by Rousseau) குறிப்பிடுகின்றார் ரூசோ. மனைத்தக்க மாண்புடையளாய்த் திகழ்ந்து தன் காதற்கணவன் அயலார்முன் பீடுநடைபோட இவ்வம்மையார் காரணமாயிருந்திருக்கின்றார் என்பது இதனால் தெளிவாகின்றது.
மிகச்சாதாரணமாய்ச் சென்றுகொண்டிருந்த ரூசோவின் வாழ்வில் திடீரென்று ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது; அவர் புகழ் எங்கும் பரவியது. மக்கள் அவரைக் கொண்டாடத் தொடங்கினர். இதற்கெல்லாம் காரணமாக அமைந்த ஒரு நிகழ்வு 1749—ஆம் ஆண்டு நடந்தது.
அது என்ன?
ஒருநாள் பாரீஸின் சாலையொன்றில் பிரெஞ்சுப் பத்திரிகை ஒன்றை வாசித்தப்படியே சென்றுகொண்டிருந்தார் ரூசோ. அதில் டிஜோன் இலக்கியக்கழகத்தார் (Academy of Dijon) நடத்துவதாக ஒரு கட்டுரைப் போட்டி வெளியாகியிருந்தது. ”கலைகளும் அறிவியலும் வளர்ச்சியடைந்திருப்பதால் மனிதனின் ஒழுக்கம் உயர்வடைந்திருக்கிறதா?” என்பதுதான் தலைப்பு. இதனைக் கண்டதும் ரூசோவின் உடலில் புதுரத்தம் பாய்ந்தது; மூளை சூடேறியது. இந்தத் தலைப்புக் குறித்து எழுதுவதற்கான கருத்துக்கள் அவர் உள்ளத்துள் வெள்ளமெனப் பாய்ந்தன. உணர்ச்சிப்பெருக்கில், சிலநிமிடங்கள் நட்ப்பதை நிறுத்திவிட்டுச் சாலையோரமாய் அமர்ந்துவிட்டார். பின் தன் எண்ணங்களையெல்லாம் எழுத்தாய்வடித்துப் போட்டிக்கு அனுப்பினார்.
அக்கட்டுரைப் போட்டியில் மொத்தம் பதினைந்து பேர் கலந்துகொண்டனர். அதில் முதல்பரிசை வென்றார் ரூசோ. அவருடைய கட்டுரை புத்தகமாக (Discourse on the Sciences and the Arts) வெளிவந்து அவருக்கு மிகுந்த புகழை பிரான்சிலும் வெளிநாடுகளிலும் பெற்றுத்தந்தது. இலக்கிய உலகில் அசைக்கமுடியாத ஓரிடத்தை இப்புத்தகத்தின் மூலம் ரூசோ அடைந்தார். அதுமட்டுமா? ஐரோப்பிய மக்களிடையே மிகப்பெரும் மனக்கிளர்ச்சியை இந்நூல் தோற்றுவித்தது எனலாம்.
பிரான்சின் பிரபுக்களும் சீமாட்டிகளும் ரூசோவின் எழுத்துக்களைக் கொண்டாடத் தொடங்கினர். தங்களுடைய ஆடம்பரக் குடில்களில் அவரைத் தங்குமாறு இறைஞ்சினர். அவர்களின் அன்புக்காக, அத்தகைய ஆடம்பரக் குடில்களில் சிலகாலம் ரூசோ தங்கினார் என்றாலும், அவர்மனம் என்றும் எளிமையையும் சுதந்திரத்தையுமே விரும்பிற்று. ஆகவே அவர்களிடமிருந்து விடைபெற்று, சிறிய, காற்றோட்டமில்லாத இருண்டவீடு ஒன்றில் தங்கினார் அவர். அங்கே அவரோடு எலிகளும் வாசம்செய்தன. அவ்வில்லத்தில் இருந்தபோதுதான் 1762-இல் உலகையே புரட்டிப்போட்ட ’சமுதாய ஒப்பந்தம்’ (The Social Contract) எனும் அரசியல் நூலையும், ’எமிலி அல்லது கல்வி’ (Emile, or On Education) எனும் கல்விகுறித்த நூலையும் அவர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வசித்த அந்த இருண்ட வீடு, அவருடைய அறிவொளியால், அரிய ஆக்கங்களால் தானும் ஒளிபெற்றது என்றே கூறவேண்டும்.
குழந்தைகளுக்குக் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும் என்பதை வெகுசிறப்பாக விளக்கியிருக்கும் நூல் எமிலி. ஐரோப்பாவின் புதிய கல்விக் கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்வது இந்நூலே. (பின்னாளில் பெரிதும் போற்றப்பட்டாலும், எழுதப்பட்ட காலத்தில் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்த எமிலி, பிரெஞ்சு அரசாங்கத்தால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது; இந்நூலால் ரூசோ பிரான்ஸைவிட்டே வெளியேறவேண்டிய அவலநிலைக்கு ஆளானார் என்பது வேதனையோடு இங்கே நினைவுகூரப்படவேண்டிய ஒன்றாகும்.)
எமிலி நூலிலிருந்து சில கருத்துக்கள்…
குழந்தைக்கு முதன்முதலில் கல்வி போதிப்பவள் தாய்தான். ஆகையால் அவள் கெட்டபழக்கவழக்கங்களிலிருந்து குழந்தைகளைக் காத்து அவர்களுக்குச் சரியான முறையில் கல்விகற்பிக்க வேண்டும்.
தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதெப்படி என்பதைப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சுகத்தையும் சோகத்தையும் வளமையையும் வறுமையையும் ஒன்றுபோலத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மையைக் குழந்தைகளிடம் பெற்றோர் ஏற்படுத்துவதும், எளிய உடைகளையும், உண்டிகளையும் அவர்களுக்குப் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியமானது.
பெண்களைப் பெண்களாகவே வளருங்கள்; அவர்களை ஆண்களை வளர்ப்பது போல் வளர்த்தல் (like a tomboy) அவர்களுக்கும் கெடுதல்; வளர்க்கின்ற பெற்றோருக்கும் கெடுதல்.
இதுபோன்ற பல நல்லகருத்துக்களைத் தன்னுடைய எமிலியில் வெளிப்படுத்தியிருக்கின்றார் ரூசோ.
ரஷ்யாவின் புகழ்பெற்ற இலக்கியமேதையான லியோ டால்ஸ்டாய் (One of the most acclaimed Russian writers) ரூசோவின் பரமரசிகராவார். ரூசோவின் வடிவம் பொறித்த பதக்கத்தை (Pendant) எப்போதும் தன்கழுத்தில் அணிந்திருந்தார் அவர் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், எமிலி எனும் கல்வி நூலில் ரூசோ குறிப்பிட்டிருக்கும் வகையில்தான் தன் குழந்தைகளுக்குக் கல்விப்பயிற்சியையும் அவர் அளித்தார் என்று தெரியவருகின்றது.
அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி எனும் இருபெரும் புரட்சிகளுக்கு வித்திட்ட தனிப்பெரும் சிந்தனையாளராய்க் கருதப்படுகின்றார் ரூசோ.
எப்படி என்கிறீர்களா?
இங்கிலாந்திலிருந்து (புரட்சிகரமாய்ப்) பிரிந்துவந்த அமெரிக்கா தன் சுதந்திரப் பிரகடனத்தை 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் வெளியிட்டது. அச் சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்களாவன:
”எல்லா மனிதர்களும் பிறக்கும்போது சமமாகவே பிறக்கின்றார்கள்; அப்படிப் பிறக்கும்போதே படைப்புக் காரணரான (சிருஷ்டிகர்த்தர்) கடவுள் அவர்களுக்குப் பிறரிடம் தொடர்புபடுத்தமுடியாத சில உரிமைகளை அளிக்கின்றார். இவ்வுரிமைகளில் உயிர்வாழ்தல், சுதந்திரமாயிருத்தல், மகிழ்ச்சியான வாழ்வை நாடிச்செல்லுதல் ஆகியவை சேர்ந்திருக்கின்றன.” (All men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness – United States Declaration of Independence).
இதுபோன்றே, 1789-ஆம் ஆண்டு ஆகஸ்டு 4-ஆம் தேதி கூட்டப்பட்ட பிரெஞ்சு தேசியசபையில் மனித உரிமைகள் குறித்த சாசனமொன்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள மூன்று பிரிவுகளாவன:
1.மனிதர்கள் பிறக்கின்றபோது உரிமையோடும் சமமாகவும் பிறக்கின்றார்கள். அவ்வாறே வாழ்கின்றார்கள். ஆகையால் அவரவர் உபயோகத்தைப் பொறுத்துச் சமுதாயத்தில் வேற்றுமைகள் இருக்கலாம்.
2.மனிதனுடைய இவ்வுரிமைகளைக் காப்பாற்றுவதுதான் எல்லா அரசியல் கட்சிகளின் நோக்கமாகும். சுதந்திரம், சொத்து, பாதுகாப்பு, அடக்குமுறையை எதிர்த்துநிற்றல் ஆகியவையே இவ்வுரிமைகளாகும்.
3.அரசுக்கு மூலகாரணமாக இருப்பது மக்கள்சக்தியே; இம் மக்கள்சக்தியிலிருந்து தெளிவாய்ப் பிறவாத எந்த அதிகாரத்தையும் தனிப்பட்ட மனிதரோ, அல்லது தனிப்பட்ட மனிதர்கள் அடங்கிய ஒரு சங்கமோ பிரயோகிக்கக் கூடாது.
நாம் மேலேகண்ட இரு(நாடுகளின்) சுதந்திரப் பிரகடன வாசகங்களும் சீர்திருத்தச் சிந்தனையாளர் ரூசோவின் ’சமுதாய ஒப்பந்தம்’ எனும் அரசியல் நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே.
இப்போது சொல்லுங்கள்…! இருபெரும் புரட்சிகளுக்குக் கால்கோள் இட்டவர் ரூசோ என்பது உண்மைதானே?
மிக எளிய குடும்பத்தில் பிறந்து, பல தோல்விகளையும் வலிகளையும் வாழ்வில் சுமந்து, நாடோடியாய்த் திரிந்துகொண்டிருந்த ரூசோ, தன்னுடைய ஆழ்ந்த அறிவாலும் சிந்தனைச் செழுமையாலும் உலகவரலாற்றில் ஓர் உயரிய இடத்தைப்பெற்று, அவருக்குப்பின் பல்வேறு நாடுகளில் தோன்றிய அறிஞர்பெருமக்களான டால்ஸ்டாய், இம்மானுவல் காந்த் (Immanuel Kant , a German philosopher), ஷெல்லர் (Friedrich Schiller, a great German philosopher, poet, etc.) போன்றவர்களுக்கெல்லாம் ஆசானாய், வழிகாட்டியாய்த் திகழ்ந்திருக்கின்றார் என்பது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதன்றோ?
எவனொருவன் தனக்காகச் சிந்திக்காது, வாழாது பிறருக்காக அனைத்தையும் செய்கின்றானோ அவன் மானுட சமுதாயத்தால் வானுறை தெய்வத்திற்கு இணையாய்க் கொண்டாடப்படுவான் என்பதற்குச் சிந்தனையாளர் ரூசோ சிறந்ததோர் சான்றாய்த் திகழ்கின்றார்.
***
கட்டுரைக்கு உதவியவை:
- https://en.wikipedia.org/wiki/Jean-Jacques_Rousseau
- http://www.britannica.com/biography/Jean-Jacques-Rousseau
- ரூசோ – சாமிநாத சர்மா