நன்றி : யெஸ். பால பாரதி
திவாகர்
மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர் தன் கையில் இல்லை என்று புரிகிறது. கீழே நான்கு தம்பியரும் மரணப்படுக்கையில், தானோ தனியாள்.. கேள்வி கேட்பவனோ, தங்கள் வீரத்தை விட சிறந்தவன், இல்லையென்றால் வீராதிவீரர்களை, தம் தம்பியரையே, மூர்ச்சை அடையச் செய்வானா.. தங்கள் ஞானத்தை விட சிறந்த ஞானத்தினைப் பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்.. இல்லையென்றால் தன் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீரை அருந்து எனக் கட்டளை இடுவானா.. இருந்தும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்கிறான் தருமன்.
யட்சனின் கேள்விகளில் மிக முக்கியமானது ‘ஆச்சரியமானது என்பது எது’ என்பதுதான். அதற்கு தருமன் பதில்சொல்வான் ‘தானும் ஒருநாளில்லாவிட்டால் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும் எனத் தெரிந்தும் அந்தச் சமயத்தில் இறந்து போனவனுக்காக பரிதாப்படுவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்’ என்பான் அவன்.
மனிதனின் மரணம் என்பது நிச்சயம் என்றாலும் அது வரும் காலத்தில் அதை எதிர்கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்தான். மரணகாலத்தில் மனிதனால் இறைவன் நாமம் சொல்லமுடியாது போகலாம் என்பதால் தான் நன்றாக இருக்கும்போதே ’மாதவனை தன் மார்பில் இருத்தி அனுக்கணமும் பூசை செய்தால்’ இந்தக் கடைசிகால எமபயத்தைப் போக்கிவிடலாம் என்று உபாயம் சொல்வர் பெரியாழ்வார். ஆனால் மரணம் வருபவருக்குதானே இந்தப் பிரச்னை.. முதிர்ந்த வயதில் அந்த மரணம் வரும் வேளையில் அவரைச் சார்ந்தவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள்.. ஒரு குரூரமான நகைச்சுவைத் துணுக்கு கூட உண்டு. கணவன் இறந்துவிட்டான், தேகம் திடீரென பெரிதாக உப்பிவிடுகிறது. வெளியில் எடுத்துச் செல்ல வாசல் நிலைப்படியை இடித்து அகலப்படுத்தி எடுத்துச் செல்லவேண்டும். ஆனால் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. இறந்துபோனபின் அவன், அவள் எல்லாம் வெறும் கட்டைதானே.. இந்தக் கட்டையை வேண்டுமென்றால் அறுத்துச் செல்லவும், வீட்டு நிலைப்படிக் கட்டையை இடிக்கவேண்டாம்’ என்கிறாள்.
ஆனால் சென்ற வார பொங்கல் வல்லமை சிறப்பிதழில் உயிர் போகும்போது கூடி உள்ள உறவினர் நிலையைத் தெளிவாக எளிமையாகச் சொல்லி இருக்கிறார் திரு ரிஷி ரவீந்திரன் அவர்கள். அந்தப் பாட்டியைப் பற்றி அகப் பார்வையாகச் சொல்லாமல் புறப்பார்வையாக சொல்லி இருப்பது சுவையாகவும் இருக்கிறது. இதோ அவரின் கைவண்ணத்தில்
தாடி ராமசாமி மாமா பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில் மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான் பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.
தனிஷ்டா பஞ்சமி என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ, கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம் சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…? என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.
ஊரின் எல்லையில் ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால் வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே ஓடினர். பெரும்பாலான டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட வடிவினில் கிழிந்திருந்தன.
லட்சுமி தன் குடும்பத்துடன் வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய கூடத்தினுள்ளே சென்றார். பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.
பேரக்குழந்தைகள் ஐவரும் ஆஜர், அந்த இடமே இப்பொழுது சாவுக்கலையிலிருந்து மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில் ஒருவித பரவசநிலை.
ஒரு வயது நிரம்பாத கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால் பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள்.
http://www.vallamai.com/special/pongal/1878/
ரிஷி இப்படி யதார்த்தத்தை எளிமையாகச் சொல்லும் முறை நன்றாக இருக்கிறது. பிறப்பென்று ஒன்று இருக்கும்போது மரணம் நிச்சயம்தான். வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் பூமியிலே நமக்கிடமேது’ என்பார் கண்ணதாசன். நம்மாழ்வாரோ ஒரு படி மேலே போய், ’இந்த பூமியின் தாங்கமுடியாத ப்ளுவைக் குறைக்க ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தாய், அதுதான் பாரதயுத்தம் கண்ணா!’ என்பார். எது எப்படியாகினும் மரணத்தைக் கண்டு பயப்படாது எல்லையில் போராடும் யுத்த வீரன் போல எல்லா மனித உயிர்களும் இருக்கவேண்டும் என்பேன் நான். நல்லதொரு சிந்தனையை அளித்த திரு ரிஷி ரவீந்திரனை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வல்லமையாளர் ரிஷி வாழ்க என வாழ்த்தி மேலும் பல கட்டுரைகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடைசி பாரா: மனோகரனின் கவிதை
முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!
கோழி மிதித்துக் குஞ்சுகள்
சாவதில்லை!
குஞ்சுகள் மிதிக்கக் கோழி
செத்துச் சீர்குலையும்
பின்னாளில்,
சொத்துப் பிரிக்கையில்!!
ஆனால் இந்தக் குஞ்சுகள்
மொத்தக் குஞ்சுகளாய்
முத்தக் குஞ்சுகளாயின!
அம்மாவுக்கு அம்மாவா இருந்து
எங்களை வளர்த்தினேதானே?
பிரிக்கவே வேண்டாமக்கா
எல்லாத்தையும் நீயே வெச்சிக்க!!
முகில் தினகரன்
(1) காவிரிக்கு ஒரு கடிதம்
அன்புள்ள காவிரியே!
என் நினைவின் பக்கங்களில்
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ
தளும்பித் தளும்பிச் சிரித்த
அந்தக் கருப்பு வெள்ளைக் காட்சிகளை!
உன்னில் மூழ்கிக் குளித்து
உவகை ஊஞ்சலாட
நயாகரா நீர்வீழ்ச்சியே
விண்ணப்பமிட்ட காலமுண்டு!
புது வெள்ளக் காலத்தில்
பூப்படைந்த பெண்ணாய்
நாணம் பொங்க நீ நளினத்தோடு
வளைந்து நெளிந்து
வருவதைப் பார்த்த இந்தக் கண்கள்
இன்று நீரற்று
வெள்ளச் சேலை கட்டிய விதவையாய்…
மொட்டையடித்து நீட்டிப் படுத்திருக்கும்
உனைக் கண்டு சிந்திய கண்ணீர்
எப்போதோ உன்னிடம் பருகிய நீரின் எச்சம்!
உன் கரையில் நடந்து போகும்
உல்லாசத்திற்காக மட்டுமே
நாள் தவறாமல் பள்ளிக்குப் போனவன் நான்!
காவிரியே…
எங்களுக்கு நீதான்
எகிப்தின் நைல்..லண்டனின் தேம்ஸ்…
நியூயார்க்கின் ஹட்ஸன்…ஆக்ராவின் யமுனை!
ஆம்!
சங்கத் தமிழனின் பெருமை நீ
எங்கள் பழைய வாழ்க்கையின்
மிச்சம் நீ….ஆனாலும்
இந்த ஊரை விட்டுப் பலர் வெளியேற
உன்னோட வறட்சியே காரணமானதுதான்
இதயத்தைப் பிழியும் ரண காவியம்!
எங்கள் விவசாய இல்லங்களில்
விடிவிளக்காய் இருந்து விட்டு
இன்று
வறுமை இருட்டை அவர்களுக்கு
வாழ்க்கையாக்கி விட்டாயே..
எந்தப் பாவத்திற்கான பழி தீர்ப்பு இது?
ஓ…இங்கிருக்கும் சில
அரசியல் அகத்தியர்கள்
தங்கள் சுயநலக் கமண்டலத்தில்
உனை அடைத்து விட்டாரென்ற
கோபத்திற்கா?
இறுதியாய் காவிரி..
எனக்கு நம்பிக்கை இருக்கின்றது
மீண்டும் பொங்கிப் பெருகி நீ வருவாய்!
தளும்பித் தளும்பி நீ சிரிப்பாய்!
அப்போது..
உன் கரையிலிருக்கும்
ஏதேனுமொரு சுடுகாட்டில்
என் உடல் எரிந்து கிடக்கும்
ஆனாலும் நான் மகிழ்வேன்!
(2) எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்.
தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…
வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….
இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….
குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
ஆம்!
கன்னித் தமிழும் கணிணித் தமிழும்
கைகோர்த்து நிற்க,
அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்
அரவணைத்து நடக்க,
சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்
சம காலத்தைச் செழிப்பாக்கிட,
சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்
மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,
தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்
தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,
மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்
மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,
கொங்குத் தமிழும் குமரித் தமிழும்
செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,
செந்தமிழ் சீர் பெற..
தனித்தமிழ் தரம் பெற…
நற்றமிழ் நயம் பெற…
முத்தமிழ் முழங்கியெழ…
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
ஆற்றுப் படைகளை
சேற்றுப் படைகளாக்கி
அந்தாதிகளைப் பந்தாடி
ஏலாதிகளை ஏலம் கூவி
நிகண்டுகளை நிர்வாணமாக்கும்
சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த
வித்தைத்தமிழரை விரட்டியடித்து
வீரத் தமிழரின் விலாசங் கூற
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
சொல்லை அறிந்து…அதன்
பொருளை அறிந்து!
தூய்மை அறிந்து….இடத்
தன்மை அறிந்து!
பயனுறுத்தும் பாவலரும்
நயனுறுத்தும் நாவலரும்
தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…
எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!………… .
அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை
அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!
அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்
வார்த்துத் தந்த வள்ளலாரும்!
எழுதுகோலில் நெருப்பை நிரப்பி
கனல் கவி கக்கிய பாரதியும்!
மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்!……
படத்திற்கு நன்றி:
http://www.nivalink.com/orangecounty/
மலர் சபா
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(10)
வலைகொண்டு வாழ்வு நடத்துபவர்
வாழ்கின்ற சேரிதனிலே
வலை உலர்த்தியிருக்கும் முற்றத்திலே
பூங்கொத்து ஒன்றினைக் கைதனில் ஏந்தி
விற்பதற்குரிய வற்றல் மீன்களைக்
காத்து நின்றாள் கன்னியொருத்தி.
அவள்தானும்
தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,
கொலைத்தொழில் புரியும்
நீண்ட வேல்போன்ற விழிகளுடன்,
அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானகத்தில்
இங்ஙனம் வாழ்ந்து வருவதை
முன்னரே நான் அறியேனே!
அறிந்திருந்தால் அங்குதான்
சென்றிருக்க மாட்டேனே!
(11)
நிலை வரி
தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்
கண் எனக் கயலையும்
புருவம் என வில்லையும்
கூந்தல் எனக் கார் மேகத்தையும்
இவற்றுடன் சேர்த்து
எதிர்வரும் என்னையும்
வருத்துகின்ற கொடுந்தொழிலையும்
எழுதி வைத்துள்ள
இவளது முகம்தான் திங்களோ?!
அழகிய பரப்புடைய
வானத்தில் இருந்தால்
பாம்புகள் விழுங்கிவிடுமோ
என்று அஞ்சியே
மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு
வாழ்க்கை நடத்திவரும்
பரதவர் வாழும் சிற்றூரில்
தான் வந்து வாழ்கின்றதோ?!
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html
படத்துக்கு நன்றி:
http://www.shutterstock.com/pic-41345068/stock-vector-fishing-boat-with-seagulls-in-the-night.html
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: இந்த வாரம் பெண்கள் விழா, விருந்து என்று பரபரப்பாக பல பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அலைச்சலில் ஆரோக்கியத்தை கவனிக்க மறந்து விடாதீர்கள். உடன் பிறந்தவருடன் நிலவிய பனிப் போர் மறையும். அக்கம் பக்கத்தாருடன் அளவுடன் பழகி வருவது நல்லது. மாணவர்கள் பாடங்களைப் பயில, பரிட்சை வரும் வரை காத்திராமல், நேரம் கிடைக்கும் போது பயின்று வந்தால் மதிப்பெண்களுடன் உங்கள் நற்பெயரும் உயரும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் ரகசியங்களைக் காப்பாற்றுவதில் உறுதியாய் இருந்தால், வீண் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.
ரிஷபம்: வியாபாரிகள் புதிய முயற்சியில் இறங்குமுன் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். பணியில் இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உடனிருப்பவர்களிடம் வன்மம் பாராட்டாமல் நடந்து கொள்ளுங்கள். உங்களின் கௌரவம் தானே உயரும். மாணவர்கள் எவரையும் எளிதில் நம்பி விடுவது சில சமயங்களில் சிரமத்தைத் தரலாம். எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்தாலும், வீண் செலவினங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வேண்டிய பொருட்களை வாங்க இயலும்.
மிதுனம்: வியாபாரிகள் வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, ஆவணங்களையும், விதிமுறைகளையும் சரிபார்த்துச் செயல்படுதல் நல்லது. இல்லத்தில் அமைதி தவழ்வது பெண்களின் கையில்தான் உள்ளது. தவணை முறையில் பொருள்கள் வாங்குவதற்கு பதிலாக பண இருப்புக்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.பொருளாதரச் சிக்கல்கள் குறையும். பணியில் இருப்பவர்கள் முக்கியமான கோப்புகளைக் கையாள்கையில், மறதிக்கு இடம் அளிக்காதவாறு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.
கடகம்: பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னகளை வளர விடாதீர்கள். உடனடித் தீர்வுகள், உறவின் விரிசல்களை சரிசெய்துவிடும். பொது வாழ்வில் உள்ளவர்கள் உள்ளவர்கள் நிதானமாகச் செயலாற்றினால் அது உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும். இந்த வாரம் நண்பர்களிடையே சிறு சிறு பூசல்கள் வந்து போகும்.எனவே மாணவர்கள் கடந்த கால விஷயங்களைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகடையே நிலவி வந்த குழப்பமும் குதர்க்கங்களும் விலகிவிடும். புதிய வியாபார முயற்சிக்கு உற்சாகத்துடன் துணையிருப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.
கன்னி: பொறுப்பில் இருப்பவர்கள் நண்பர்கள் விஷயத்திலும்,மற்றும் அவர்களுக்கென்று பணம் செலவழிப்பதிலும் அளவோடு இருப்பது நல்லது. மாண வர்கள் புதிய இடங்களுக்குச் செல்கையில், அறிமுகம் ஆகாதவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பணியில் இருப்பவர்கள் . முக்கியமான கோப்புக்களை உங்களின் நேரடி கவன த்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் விரையமாகாமல் விரைந்து பணியாற் றலாம். கலைஞர்கள் வரவுக்கு மீறிய செலவுகளுக்கு இடமளிக்காதீர்கள். எவ்வளவு அதிகமான பணியிருந்தாலும், பெண்கள் வேளை தவறாமல் உணவு உண்டு விட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.
தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.
மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.
கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.
மீனம்: சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்த வாரம் சக ஊழியர்களின் போக்கில், இணக்கமும், சுணக்கமும் கலந்தே காணப்படும். எனவே பணியில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கடந்த கால சோதனைகள் தந்த பாடங்களை நினைவில் கொண்டு செயலாற்றினால், வெற்றியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் . வியாபாரிகள் சரக்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெரிய தொகைக்கான வாக்குறுதி தருவதில் கவனமாய் இருப்பது நல்லது.
செண்பக ஜெகதீசன்
இடையே ஏனிந்த
இடி வந்து மின்னலுடன்
இன்னல் தருகிறது..
நல்லது நடக்கும்போது
நாலு கெட்டது
நடந்துதான் தீரும்..
இப்படிச் சொல்லி
இடியாய்ச் சிரிக்கிறான்
இறைவன்…!
படத்திற்கு நன்றி:
http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html
P.Tamizhmuhil Neelamegam
Droseras, Commonly called as Sundews.They have gummy tentacles which attracts the insects by their bright colour and smell. Sundew is named because of the dew drops at the end of their tentacles which glitter when exposed to sunlight. They primarily grow on acidic bogs and moist sandy areas.
How does it captures its prey?
Once an insect lands on the leaf, the tentacles begin to wrap around the prey and the Sundew produces more digestive fluid. More tentacles wrap around the bug, and the digestive process begins. Within hours the Sundew has ingested its catch, leaving only the skeletal remains. Sundews have one of the more powerful digestive systems in the carnivorous plant world.
This video shows a Drosera plant trapping a midge with its mobile tenticles and rolling its leaf.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cZ7Fws1HaL0
The researchers have found that the secret of the quick tentacles involves the releasing of pent-up hydraulic pressure in a sudden burst, and it happens fast.The sundew takes about 75 milliseconds to capture its prey with snap tentacles. These snap tentacles are one-shot weapons.Once they capture a prey, these tentacles break off.The sundew grows fast, developing new leaves every three to four days, so losing a snap tentacle does not affect the plant.
Medicinal uses of the sundew:
These sundews provide an effective remedy for respiratory ailments and chest problems including coughs, asthma,woophing cough, arteriosclerosis and bronchitis.The plant contains an antibiotic substance that, in pure form, is effective against Streptococcus, Staphylococcus, and Pneumococcus. In European folk medicine, the fresh juice is used for warts and corns, and is taken internally as an aphrodisiac.
References:
http://medicinalherbinfo.org/herbs/Sundew.html
http://www.livescience.com/23488-carnivorous-plants-sundew-tentacles-prey.html
http://www.gublers.com/Pages/Carnivorous%20Tabs/sundew.html
To be Continued…
இன்னம்பூரான்
க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவேணும். உபயகுசலோபரி… இது வைணவ பரிபாஷை. நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு படி மேல் சென்று. ‘ தேவரீர் பாங்கா?’ என்று கனிவுடன் குசலம் விசாரிப்பதும், ‘அடியேன்! அங்கே? என்று மென்மையாக விடையுடன்,வினவுவதும் செவியில் இன்பமாகத்தான் விழுகிறது. தன் இல்லம் குடிசை. அவரில்லம் திருமாளிகை. பரிபாஷைகளை பற்றிய ஆய்வு சுவையாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெருமாள் கோயிலில் ‘தாயார்’. சிவன் கோயிலில் ‘அம்பாள்’. வீபூதியை திருநீறு என்று சொல்வதில்லையா? எல்லா மொழிகளிலும் இந்த பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு பொருத்தமான தமிழ்ச்சொல் தேடியபோது, ரசிகமணி அவர்களின் இந்த சொல்லாக்கம் கிடைத்தது என் பாக்கியம். இப்படி பலவிதமாக அடுக்கிக்கொண்டே போகலாம், தருமமிகு சென்னையின் சேரிவாழ் பாமரமக்களின் பழகுதமிழும் சரி, ‘டீ பார்ட்டி’ போன்ற ஆங்கிலம் கலந்த கடந்த நூற்றாண்டுக்கும் முந்திய நாட்டுப்பாடலும் சரி, மொழியின் அழகு பழகுமொழியில். இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.
இந்த ‘நலம். நலம் அறிய அவா.’ என்ற சொற்றொடர் நமது மடலாடலில் சம்பிரதாயம் மட்டுமா அல்லது மனமறிந்த உணர்வு கூடிய வினாவா என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. சவுக்கடி கடிதங்கள் கூட இத்தகைய சம்பிரதாய பண்பாடுகளை பின்பற்றுவதும் காணக்கிடைப்பது தான். இது எப்படி இருக்கிறது?:
‘என் அன்பார்ந்த எதிர்கட்சி தலைவரே! நீங்கள் என்னை கடுங்கோபத்தில் தாக்கி நாளை நாடாளும் மன்றத்தில் பேசப்போவதாக, ஊடகங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்பே தெரிந்திருந்தால், அதைக் கேட்டு பயன்பெற நான் வந்திருப்பேன். ஆனால் பாருங்கள். நான் நாளை முயல்வேட்டைக்கு வருவதாக என் தொகுதியிடம் வாக்களித்து விட்டேன். மன்னிக்கவும். மறக்காமல் உங்கள் பொருள் செறிந்த உரையின் நகலை இந்த விலாசத்துக்கு அனுப்புங்கள். எனக்கு உபயோகம் ஆகும்.” இப்படிக்கு ஜான் டுகான். [பி.கு. உம்மை நார் நாராக கிழித்துப்போடாவிட்டால் என் பெயரை டுகான் ஜான் என்று மாற்றிக்கொள்வேன்!]
இங்கிலாந்தில் இப்படி ஒரு பண்பாடு! நம்மூரில் அம்மாமி சுஷ்மா ஸ்வராஜுக்கும் அன்னை சோனியா மாமிக்கும் ஒரு மடலோடல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த மடலாடல் குழுக்களுடன் பழகிப், பழகி, நானே திசை மாறுகிறேன், பாருங்கள்! எல்லாம் இந்த ‘வல்லமை’யால் வந்த வினை! சுக்கானே! திரும்பு.
இந்த காலம் யாத்திரை என்றால் டூரிஸ்ட். அந்த காலத்தில் யாத்ரீகர்கள் கால் நடையாகவே, உழவாரப்பணி செய்து கொண்டே, திருத்தலங்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்து, தொழுது, பிரபந்தங்களும், பதிகங்களும் பாடி, பக்தியைப் பரப்பி வந்தார்கள். அப்படித்தான் எங்கள் இன்னம்பூர் எழுத்தறிவிநாதர் பெருமானின் கஜப்புருஷ்ட விமான ஆலயம் பாடஸ்தலமாயிற்று.
“சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரணம் என்கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”
ஆழ்வாராதிகள் சேவித்த ஆலயங்கள் மங்களாசாஸனம் பெற்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்றபடி எங்கெங்கும் எங்கள் முன்னோர்களும், ராஜ பரம்பரைகளும் (இது பற்றி ஒரு ஆய்வுப் பட்டறை நடக்கப்போகிறது.) பாமரர்களும் கோயில்கள் எழுப்பி வழிபாடு நடத்தியதால், யாத்ரீகர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து எதிர்க்கட்சியை சிதறடித்தார். அரசனோ அந்தக்கட்சி. ராணி இவர் பக்கம். ராஜாவும் சாய்ந்து விட்டார். இதற்குள் நாட்கள்/ மாதங்கள் பல கடந்து விட்டன போலும். இவர் ஊர்ப்பக்கம் திரும்பாததால், அப்பாவுக்கு ஒரே கவலை. அடித்துப்பிடித்துக்கொண்டு, மூப்பையும். களைப்பையும் பொருட்படுத்தாமல், ‘பெத்த மனம் பித்தாக’ அவரே மதுரையில் ஆஜராகி விட்டார். பிள்ளையாரையும் கண்டு களித்து, உச்சி முகர்ந்து ஆசு வாசப்படுத்திக்கொண்டபின், பிள்ளையாண்டான் அன்னையைப் பற்றி கேட்கவில்லை. அண்டையை பற்றி கேட்கவில்லை. ஊரார் சுபிக்ஷத்தைப் பற்றி கேட்கவில்லை!
தத்துவமல்லவோ பேசினார், தந்தையுமான மைந்தன்! பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) சிவபாத இருதயரிடம் கேட்டது:
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
கண்ணில் நல்லஃது உறும் கமுமல வள நகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
“இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா1”
~ அ.ச.ஞானசம்பந்தன்
அதான்! ‘தெய்வம் தந்த வீடு’ என்று பாடினார், கண்ணதாசன்.
இன்னம்பூரான்
20 01 2013
உசாத்துணை: அ.ச. ஞானசம்பந்தன் (2005): இன்னமுதம். பக்கம் 25
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI
அஞ்ஞான உலகிலே இன்று
விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு !
நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி
பியூட்டி இழந்தது !
நிறைப் பளுவுக்கு ஏற்ப
கோளின் காலவெளி வளைவு தான்
ஈர்ப்பு விசை யென்று
புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன்
பொது ஒப்பியல் நியதியும் இப்போது
பொய்யாகப் போகுமா ?
புதிய பெயர் ஈர்ப்பு விசைக்கு
“நுட்ப வடிவ வெளிப்பாடு”
ஈர்ப்பு விசை
வெப்பத் தேய்வு விசையென்று
வெர்லிண்டே சொல்கிறார்
காமாவின் பெரு வெடிப்பு விதிப்படி
தாமாகப் பிரபஞ்சம் தோன்றியதும்
புராணக் கதை யாகப் போகுது !
படைப்போன் இன்றித்
சுயமாய்ப் பிறந்த தாம் நமது
பரிதிக் கோள் மண்டலம் !
பால்வீதி விண்மீன் மந்தையில்
காரண விளைவு விதியின்றி
ஓரணுவும் தோன்றாது,
மூலகம் ஆகாது
மூலக் கூறாய்ச் சேராது
உலகியற்றிய
ஊழி முதல் ஏகாந்த மூலனின்றி
ஏழுலகும் தோன்றுமோ ?
குயவனின்றிப் பானைகள் தோன்றா
மாயப் பிரபஞ்சத்தில்
“என் புதிய கண்ணோட்டத்தில் “ஈர்ப்பியல் விசை” என்னும் ஒன்றை நான் நம்புவதில்லை. தற்போதைய விஞ்ஞானம் ஈர்ப்பியல் பண்பாட்டைத் தவறான கருத்தோட்டத்தில் காண்கிறது. எப்படி இழுப்பியல் பண்பாடு [Elasticity] அணுக்களின் இயக்கத்தால் எழுகிறதோ அதுபோலவே ஈர்ப்பியல்பும் வெளியாகிறது. ஈர்ப்பு விசை என்பது ஒருவித வெப்பத் தேய்வு விசையே [Entropy Force]. அது இடம் மாறும் அண்டக் கோள்கள் அமைந்துள்ள அரங்கத்துக் கேற்ப மாறுகிறது. ஈர்ப்பு விசையும், பெரு வெடிப்பு நியதியும் ஒருவித மாயக் கருத்துகளே. [Gravity and The Big Bang Theory could be an illusion.”]
டாக்டர் எரிக் வெர்லிண்டே [பேராசிரியர், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம்]
சனிக் கோளின் வளையங்களைச் சீராய்ச் சுற்ற வைக்கும் ஈர்ப்பு விசை, ஒழுங்கீனத்தை மிகையாக்கும் இயற்கைப் பண்பாட்டின் ஒருவிதக் கிளை விளைவே [Byproduct of Nature’s Propensity to maximize disorder (Entropy)]
டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]
“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)
ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9FVFh3HYaY
“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஓர் உயர்ந்த சக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது. ‘
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்! “
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
‘விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வானவெளி யென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை! மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவது எத்தனை, அத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை! வாயு வாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி! ‘
மகாகவி பாரதியார் (1882-1921)
நூலிழை நியதிவாதி கூறுகிறார் : ஈர்ப்பு விசை, பெரும் வெடிப்பு என்பவை மாயையாய் இருக்கலாம்
1. ஒன்று அண்டக் கோள்களுக்கு இடையில் உள்ள ஈர்ப்பு விசை [Gravitational Force]. அதனால்தான் நாம் யாவரும் பூமியோடு ஒட்டி உலவுகிறோம்.
2. இரண்டாவது மின்காந்த விசை [Electromagnetic Force]. அதாவது மின்காந்தக் கவர்ச்சி விசை.
3. அணுக்கருத் துகள்களை [நியூட்ரான், புரோட்டான்] அணுவுக்குள் இறுக்கிப் பிணைத்துள்ள அழுத்தமான விசை [Strong Force in the Nucleus].
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி’
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி ‘ [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது! புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை! ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர்! மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘ என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி!
இரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்குமாறு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன்! அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜின் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா முதலில் உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனை ஒப்பவைத்துக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவுகள் தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்!
ஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்டுள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த முடத்துவக் கூண்டு நோக்கியிலும் [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம் அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது! ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது! உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது! ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன்! ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது!
கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே தூரத்தில் உள்ள ஓர் அண்டத்திலிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி!
விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு!
ஈர்ப்பியல் உந்து சக்தி [Gravity Assist Flyby]
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Albert Einstein By: Frederic Golden, Time Magazine -Person of the Century [Dec 31, 1999]
2. A Brief History of Relativity By: Stephan Hawking, Time Magazine
3. Einstein ‘s Unfinished Symphony By: Madeleine Nash, Time Magazine
4. The Age of Einstein By: Roger Rosenblatt, Time Magazine
5. 100 Years of Einstein By: Gregory Mone, Popular Science [June 2005]
6. Gravity Probe Launched By: Chad Cooper, Staff Writer, NASA Kennedy Space Center (Apr 2, 2004]
7. http://www.thinnai.com/science/sc0317021.html [Author ‘s Article on Einstein]
8. Einstein Probe Heads into Space BBC News.
9. Einstein Mass Energy Equation Marks 100 Years By: Roland Pease BBC Science Writer.
10 All Systems Go on Gravity Probe B Source NASA [April 30, 2004]
11 Testing Einstein ‘s Universe: Gravity Probe B [Feb 2005]
12. http://spaceplace.nasa.gov/what-is-gravity/
13. http://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_gravity [July 13, 2004]
14. http://en.wikipedia.org/wiki/Gravity_assist Gravity Swing or Flyby [January 12, 2013]
15. http://www.wisegeek.org/what-is-gravity.htm What is Gravity [January 7, 2013]
16. Gravity is an Illusion By : John Hudson [ July 14, 2010]
17. http://en.wikipedia.org/wiki/Entropy What is Entropy [January 18, 2013]
18. http://arxiv.org/pdf/1001.0785.pdf On the Origin of Gravity and the Laws of Newton By : Erik Verlinde [January 6, 2010]
***************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 20, 2013
http://jayabarathan.wordpress.com/
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தேசியக் கருத்தரங்கம்
( 2013பிப்ரவரி 14, 15 )
அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்
அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்
அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு
அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்
அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்
அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை
அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்
தங்களது பங்கேற்பு இசைவினை உடனே தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுரையாளர்கள் கவனத்திற்கு
ஆய்வுக் கட்டுரை வந்து சேரவேண்டிய இறுதி நாள் 28.01.2013
ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் (அ) ஆங்கிலத்தில் அமையலாம்.
கருத்தரங்கத் தேர்வுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே கருத்தரங்க ஆய்வுக் கோவையில் வெளியிடப்படும்.
கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி
முனைவர் கு.சிதம்பரம்
முதுநிலை ஆராய்ச்சியாளர்
அயல் நாட்டுத் தமிழர் புலம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113
மின்-அஞ்சல் – kchiling@yahoo.co.in
கைபேசி 9500106269