Featuredஇலக்கியம்கட்டுரைகள்

குசலம்

இன்னம்பூரான்

க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவேணும். உபயகுசலோபரி… இது வைணவ பரிபாஷை. நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு படி மேல் சென்று. ‘ தேவரீர் பாங்கா?’ என்று கனிவுடன் குசலம் விசாரிப்பதும், ‘அடியேன்! அங்கே? என்று மென்மையாக விடையுடன்,வினவுவதும் செவியில் இன்பமாகத்தான் விழுகிறது. தன் இல்லம் குடிசை. அவரில்லம் திருமாளிகை. பரிபாஷைகளை பற்றிய ஆய்வு சுவையாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெருமாள் கோயிலில் ‘தாயார்’. சிவன் கோயிலில் ‘அம்பாள்’. வீபூதியை திருநீறு என்று சொல்வதில்லையா? எல்லா மொழிகளிலும் இந்த பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு பொருத்தமான தமிழ்ச்சொல் தேடியபோது, ரசிகமணி அவர்களின் இந்த சொல்லாக்கம் கிடைத்தது என் பாக்கியம்.   இப்படி பலவிதமாக அடுக்கிக்கொண்டே போகலாம், தருமமிகு சென்னையின் சேரிவாழ் பாமரமக்களின் பழகுதமிழும் சரி, ‘டீ பார்ட்டி’ போன்ற ஆங்கிலம் கலந்த கடந்த நூற்றாண்டுக்கும் முந்திய நாட்டுப்பாடலும் சரி, மொழியின் அழகு பழகுமொழியில். இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.

இந்த ‘நலம். நலம் அறிய அவா.’ என்ற சொற்றொடர் நமது மடலாடலில் சம்பிரதாயம் மட்டுமா அல்லது மனமறிந்த உணர்வு கூடிய வினாவா என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. சவுக்கடி கடிதங்கள் கூட இத்தகைய சம்பிரதாய பண்பாடுகளை பின்பற்றுவதும் காணக்கிடைப்பது தான். இது எப்படி இருக்கிறது?:

‘என் அன்பார்ந்த எதிர்கட்சி தலைவரே! நீங்கள் என்னை கடுங்கோபத்தில் தாக்கி நாளை நாடாளும் மன்றத்தில் பேசப்போவதாக, ஊடகங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்பே தெரிந்திருந்தால், அதைக் கேட்டு பயன்பெற நான் வந்திருப்பேன். ஆனால் பாருங்கள். நான் நாளை முயல்வேட்டைக்கு வருவதாக என் தொகுதியிடம் வாக்களித்து விட்டேன். மன்னிக்கவும். மறக்காமல் உங்கள் பொருள் செறிந்த உரையின் நகலை இந்த விலாசத்துக்கு அனுப்புங்கள். எனக்கு உபயோகம் ஆகும்.” இப்படிக்கு ஜான் டுகான். [பி.கு. உம்மை நார் நாராக கிழித்துப்போடாவிட்டால் என் பெயரை டுகான் ஜான் என்று மாற்றிக்கொள்வேன்!]

இங்கிலாந்தில் இப்படி ஒரு பண்பாடு! நம்மூரில் அம்மாமி சுஷ்மா ஸ்வராஜுக்கும் அன்னை சோனியா மாமிக்கும் ஒரு மடலோடல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த மடலாடல் குழுக்களுடன் பழகிப், பழகி, நானே திசை மாறுகிறேன், பாருங்கள்! எல்லாம் இந்த ‘வல்லமை’யால் வந்த வினை! சுக்கானே! திரும்பு.

இந்த காலம் யாத்திரை என்றால் டூரிஸ்ட். அந்த காலத்தில் யாத்ரீகர்கள் கால் நடையாகவே, உழவாரப்பணி செய்து கொண்டே, திருத்தலங்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்து, தொழுது, பிரபந்தங்களும், பதிகங்களும் பாடி, பக்தியைப் பரப்பி வந்தார்கள். அப்படித்தான் எங்கள் இன்னம்பூர் எழுத்தறிவிநாதர் பெருமானின் கஜப்புருஷ்ட விமான ஆலயம் பாடஸ்தலமாயிற்று.

“சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்

முனிவனாய் முடி பத்துடை யான்றனைக்

கனிய வூன்றிய காரணம் என்கொலோ

இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”

ஆழ்வாராதிகள் சேவித்த ஆலயங்கள் மங்களாசாஸனம் பெற்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்றபடி எங்கெங்கும் எங்கள் முன்னோர்களும், ராஜ பரம்பரைகளும் (இது பற்றி ஒரு ஆய்வுப் பட்டறை நடக்கப்போகிறது.) பாமரர்களும் கோயில்கள் எழுப்பி வழிபாடு நடத்தியதால், யாத்ரீகர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்களில் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து எதிர்க்கட்சியை சிதறடித்தார். அரசனோ அந்தக்கட்சி. ராணி இவர் பக்கம். ராஜாவும் சாய்ந்து விட்டார். இதற்குள் நாட்கள்/ மாதங்கள் பல கடந்து விட்டன போலும். இவர் ஊர்ப்பக்கம் திரும்பாததால், அப்பாவுக்கு ஒரே கவலை. அடித்துப்பிடித்துக்கொண்டு, மூப்பையும். களைப்பையும் பொருட்படுத்தாமல், ‘பெத்த மனம் பித்தாக’ அவரே மதுரையில் ஆஜராகி விட்டார். பிள்ளையாரையும் கண்டு களித்து, உச்சி முகர்ந்து ஆசு வாசப்படுத்திக்கொண்டபின், பிள்ளையாண்டான் அன்னையைப் பற்றி கேட்கவில்லை. அண்டையை பற்றி கேட்கவில்லை. ஊரார் சுபிக்ஷத்தைப் பற்றி கேட்கவில்லை!

தத்துவமல்லவோ பேசினார், தந்தையுமான மைந்தன்! பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) சிவபாத இருதயரிடம் கேட்டது:

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

“இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா1”

~ அ.ச.ஞானசம்பந்தன்

அதான்! ‘தெய்வம் தந்த வீடு’ என்று பாடினார், கண்ணதாசன்.

இன்னம்பூரான்

20 01 2013

உசாத்துணை: அ.ச. ஞானசம்பந்தன் (2005): இன்னமுதம். பக்கம் 25

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (6)

 1. Avatar

  வல்லமையில் நூறாவது பதிவினை வெளியிட்ட இன்னம்பூரன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

  ….. தேமொழி

 2. Avatar

  வாழ்க வாழ்க

 3. Avatar

  தேவரீர் கட்டுரை தேனினும் இனிமை….இன்னம்பூர் ஈசன் அருள் இருப்பதால்தான் இப்படி அனாயாசமாக எழுதுகிறீர்கள்!

 4. Avatar

  அமுதம்.   இன்னம்பூரான் அவர்கள்  இன்னமும் (என்றென்றும்)  இன்னமுதம் படைத்திட இன்னம்பூர் இறைவன் இறைவியை இறைஞ்சுகிறேன்.

 5. Avatar

  எத்தனை முறை படித்தாலும் திரும்ப திரும்பப் படிக்கத் தூண்டுகிற அருமையான கட்டுரை.அழகான சொற்களால் கோர்க்கப்பட்ட அற்புதமான மாலையாக மிளிர்கிறது. இன்னம்பூர் எழுத்தறிவிநாதப் பெருமானின் (என்ன அழகான திருநாமம்) தூங்கானை மாட(கஜப்ருஷ்ட விமான) ஆலயம் பாடல் பெற்ற ஸ்தலமானதைக் குறித்த விதமும், அதற்கிணையாக இன்னம்பூர் ஈசனைப் போற்றும் திருநாவுக்கரசப்பெருமானின் தேவாரப்பாடலை எடுத்துரைத்ததும் அருமை. நவகோள்களையும் ஆட்டிப்படைத்த இராவணனின்  மனம் திருந்துமாறு, (அவன் திருக்கயிலையை தன் தோள்களால் எடுக்கும் சமயம்) உமது திருவிரலைக் கனிய ஊன்றிய காரணம் என்ன? என்று நாவுக்கரசப்பெருமான் இன்னம்பூர் ஈசனைக் கேட்கிறார். கட்டுரையின் சொல்லழகும் பொருளழகும் உள்ளங்கவர்ந்தன. மிக்க நன்றி.

 6. Avatar

  கருத்துக்களுக்கு நன்றி பல. இது என்னுடைய நூறாவத் வல்லமை கட்டுரையா, தேமொழி? எனக்கு வியப்பாக இருக்கிறது. அவற்றை சேகரித்து வைக்க உதவி நாடுகிறேன். பழமை பேசியின் வாழ்த்து ஒரு நற்சான்று மாதிரி. ஷைலஜா சொல்றமாதிரி, என் எழுத்து சுவை பட இருந்தால், அது தெய்வசங்கல்பம். திரு ராமசாமியின் பிரார்த்தனையே இனிது. திருமதி பார்வதி ராமசந்திரனிடன் ஒரு வார்த்தை. உங்கள் மாதிரி வாசக ப்ரீதி இருந்தால், மெலும் எழுத, எழுதத்தூண்டும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க