தமிழ்முகிலின் பொன்வண்டு கதைக்கான இறுதிப் பகுதி

0

பி. தமிழ்முகில் நீலமேகம்

பொன் வண்டு சிறுகதையின் முதல் பகுதி

மருத்துவமனையை அடைந்ததும் அவசர அவசரமாய் ஓடிச் சென்று அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினார் நடத்துனர். உடனே, ஒயிலாவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு வருமாறு அங்கிருந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு வேகமாக அவசரப் பிரிவு நோக்கிச் சென்றார்.இதற்குள் விஷயம் கேள்விப்பட ஒயிலரசியின்  தாய் தந்தையர் மற்றும் அவளது பாட்டி அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் நின்று விழித்துக் கொண்டிருந்த அவர்களை, ஓர் செவிலி எதிர்கொண்டாள். “நீங்க தான் அந்த காலேஜ் பொண்ணப் பெத்தவங்களா? அதோ, அந்த ரூம்ல தான் டாக்டர் உங்க பொண்ணப்  பாத்துட்டு இருக்காரு.சத்தம் போடாம அங்க இருக்க பெஞ்ச்ல போய் உக்காந்திருங்க.டாக்டர் வந்துடுவாரு” என்று சொல்லிவிட்டு அவளும் அவசர அவசரமாய் சென்று விட்டாள். மிரண்ட பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மனது ஒரு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
“ஐயோ….எம்புள்ளைக்கு என்னாச்சோ …..அம்மா !!! பண்ணாரி மாரியாத்தா !!! எம்புள்ளைய காப்பாத்தி எங்கிட்ட கொடுத்துப்போடு தாயே !!! உனக்குப் பட்டுச்சேலை சாத்திப் பொங்கப் படையல் வைக்கிறேன்” என்று அழுது  அரற்றிக் கொண்டிருந்தாள் ஒயிலரசியின்  தாய்.சற்று நேரத்தில், ஒயிலரசியின் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விட்டாள்.  அவளைக் கண்டதும் அந்தத் தாயின் அழுகை மேலும் அதிகமாயிற்று.”மஞ்சு கண்ணு !!! அக்காவுக்கு என்னாச்சுன்னே தெரியலடி.டாக்டரும் உள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சுது.எனக்கு என்னமோ பயமா இருக்குடி கண்ணு ” என்றாள்.”அக்காவுக்கு ஒன்னும் ஆகாதும்மா. கவலைப் படாதீங்க” என்று மஞ்சு அம்மாவுக்கு ஆறுதல் கூறினாலும், அவளது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே பயப் பந்து உருண்டோடி அவளது இதயத் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் ” உங்க பொண்ணுக்கு Posterior epistaxis.அதாவது, மூக்கோட பின் பகுதியில இருந்து ரத்தம் வந்திருக்கு.இந்த மாதிரி ஏற்கனவே வந்திருக்கும் போல.ஏன் நீங்க முன்னாடியே வரல? ” என்று கேட்ட மருத்துவரின் முகத்தை மிரட்சியுடன் பார்த்தனர் தாய்தந்தையர்.இருவரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இருவருக்கும் அப்படி ஒன்று நடந்ததை அறிந்திருக்கவில்லை.ஆம்.ஒயிலா அதற்கு முன் சில முறை அங்ஙனம் இரத்தம் வந்ததை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு விட்டிருந்தாள். பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள்.”சாதாரணமாய் மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது தானே.சில்லு மூக்கு உடைந்திருக்கும் என்றெண்ணி உங்க பொண்ணு  அதை பெரிதாக எடுத்துக்  கொள்ளாததால், அது இன்னைக்கு  அவரது உயிருக்கே ஆபத்தாய் ஆகியிருக்கு .ரொம்ப கவலைக்கிடமான நிலைல தான் இருக்காங்க.நாங்க எங்களால முடிஞ்ச அளவு உயிரை காப்பாத்த முயற்சிக்கிறோம்.அதற்கு மேல ஆண்டவனைத் தான் நம்பணும்.” என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டதும் ஒயிலாவின் தாய் மயக்கமுற்று கீழே சரிந்தாள்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும். வெளியே வந்த மருத்துவரின் முகத்தைப் பீதியுடன் பார்த்தனர் அனைவரும். ” Posterior epistaxis னால மரணம் ஏற்படுவது என்பது ரொம்ப அபூர்வம் தான்.ஆனாலும் நடக்க வாய்ப்பிருக்கு. அது தான் உங்க மகள் விஷயத்துலயும் ஏற்பட்டிருக்கு.என்னை மன்னிச்சிடுங்க.என்னால உங்க மகளைக் காப்பாத்த முடியல” என்ற மருத்துவரின் காலடியில் மீதும் மயக்கமுற்று சரிந்தாள் ஒயிலாவின் தாய்.அவ்விடமே சோகமும் அழுகையுமாய் நிறைந்திருந்தது.

சில நிமிடங்கள் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்த ஒயிலாவின் தந்தை, மெல்ல எழுந்து மருத்துவரிடம் சென்றார். “அய்யா, எம் மகள் இந்த உலகத்துல மீண்டும் வாழ வழி செய்வீங்களா? ” என்றவரின் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மருத்துவர். ” எம் மகளோட உடல் உறுப்புகள் எதெல்லாம் தானம் பண்ண முடியுமோ, அதெல்லாம் தேவையானவங்களுக்கு எடுத்துப்  பொருத்துங்க அய்யா. அவங்க மூலியமா எம்மக இந்த உலகத்துல உசுரோட உலவிட்டு இருப்பா.” என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றார் அத்தந்தை. ” நீங்க கையெழுத்து போட சொல்ற எடத்துல கையெழுத்து போடறேன்.சீக்கிரம் உறுப்பு தானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறிவிட்டு சுவற்றில் சாய்ந்தார்.

இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து அழுகையுடன் தரையில் சாய்ந்தாள் ஒயிலாவின் தாய். ஒயிலாவின் அலமாரியை திறந்த மஞ்சு, அங்கு ஒயிலாவிற்குப் பிடித்த பொன்வண்டு அவள் போட்டு வைத்திருந்த தீப்பெட்டியை விட்டு வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். மஞ்சு பெட்டியை எடுத்துத் திறந்தது தான் தாமதம், அது விர்ரென்று பறந்து வந்து வீட்டிலிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றி வந்தது. அது ஒயிலா ” நான் சாகவில்லை. உங்களோடு தான் இருக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது. ஆம். ஒயிலா மீண்டும் இவ்வுலகில் உயிரோடு தான் உலவுகிறாள். தன் உறுப்புகளால் பலரை வாழ வைத்ததன் மூலம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *