Blog

  • “அவன், அது, ஆத்மா”

    மீ. விசுவநாதன்

    அத்யாயம்: 49

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    “பாரதி இரா. சுராஜ்”

    “பாரதி கலைக்கழகம்” என்ற அமைப்பு எண். 50, மசூதித் தெரு, சைதாப்பேட்டை என்ற இடத்தில் இயங்கி வந்தது. கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லம்தான் அது. அமைப்பின் நிறுவனத் தலைவர் பாரதி இரா. சுராஜ் அவர்கள். அவனை அந்தக் கவிஞர் குழாமில் சேர்த்து அணைத்து நெறிப் படுத்திய பெரியவர் திரு. பாரதி இரா. சுராஜ் அவர்கள்தான். நல்ல அறிஞர். மிகச் சிறந்த ரசிகர். ஒவ்வொரு கவியரங்க அழைப்புக் கடிதத்திலும் அவனது கவிதைகளை ரசித்து அவர் ஒரு தபால் கார்டில் விமர்சனமாக எழுதி அனுப்புவார். அது அவனுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும். கருத்து பிடிக்கவில்லை என்றால் அதையும் அழகாக ரசிக்கும்படியாக எழுதுவார்.

    ஒரு முறை “பாபநாசம்” என்ற தலைப்பில் கவிதை எழுதி அதை கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரங்கில் படித்தான். கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கவியரங்கத்தை திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அவனது கவிதையில்,

    ” நீருக்குள் நிறவெறியை நீக்கி விட்ட,
    ஏராள மீனினங்கள் எதிர்நீச்சல் போட்டுவரும்,
    கூர்மூக்குக் கொக்குகளோ கூடியதை ரசித்திருக்கும்,
    சேராத நாய்பூனை சேர்ந்தருகே உணவருந்தும்,
    நேர்மாறாய் இருக்குதுபார் நேர்சென்று பார்த்தேனும்
    சீர்ப்படுமா நமது மனம், சீக்கிரம்வா பாபநாசம்”

    என்று அவனது கவிதையில் வரும் வரிகளை மிகவும் ரசித்து, மீண்டும் படிக்கச் சொல்லி “பலே,பலே” என்று கொண்டாடினார். அதன் பிறகு என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ” விஸ்வநாதன்…அந்த பாபநாசம் அருவியைப் போல கவிதையை நீங்கள் தர வேண்டும்” என்று சொல்லுவார். ஒவ்வொரு கவியரங்கத்திலும் கலந்து கொள்ளும் கவிஞர்களின் கவிதைகளில் அவர் ரசித்த வரிகளை அந்த அரங்கம் முடிந்தவுடன் அவர் தொகுத்துச் சொல்லும் அழகே தனிதான். எந்த அரங்கமானாலும் முதலிலேயே வந்து கலந்து கொள்ளும் பண்பு அவருக்கு இன்று வரை இருக்கிறது.

    பாரதி கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் நாகநந்தி அவர்கள் இயக்கிய “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தில் “திருத்தராஷ்டிரன்” பாத்திரத்தில் நடித்திருந்தார் பாரதி சுராஜ். அதில் பாரதியாரின் கவிதை வரிகளை அவர் ரசித்துச் சொல்லும் குரல் இன்றும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பேராசிரியரின் முயற்சியாலும், பாரதி சுராஜ் அவர்களின் ஆர்வத்தாலும்தான் அந்த நாடகம் முழுக்க முழுக்க பாரதி கலைக்கழகக் கவிஞர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    கவியரங்கத்திற்கு பாரதி சுராஜ் தரும் தலைப்பே அழகாக இருக்கும். பலவருடங்களுக்கு முன்பு ஒரு முறை “நினைச் சரணடைந்தேன்” என்ற தலைப்புக் கொடுத்திருந்தார். தண்டமிழ்க் கொண்டால் சிதம்பரம் சாமிநாதன் அவர்கள் அரங்கத்தின் தலைவர். அன்று அவன் காஞ்சிப்பெரியவரைப் பற்றி வெண்பாவில் அந்தாதியாக ஒரு பதிகம் எழுதிப் படித்தான். அவனது அந்தக் கவிதையை மிகவும் ரசித்து,” விசு..ஒன்னோடு வெண்பா அருமை போ” என்று தண்டமிழ்க் கொண்டல் அவனைப் பாராட்டினார். அந்த மோதிரக்கை குட்டுப் பட்டவுடன், பாரதி சுராஜ் அவனிடமிருந்து அந்தக் கவிதையை வாங்கி வைத்துக் கொண்டார். சில நாட்கள் சென்றதும் அவனைத் தொலைபேசியில் அழைத்து,” விஸ்வநாதன் “கவிஞர்கள் நெஞ்சில் காஞ்சி முனிவர்” என்ற தலைப்பில் ஒரு அன்பர் கவிஞர்களிடம் கவிதையை வாங்கித் தொகுத்து வெளியிடவிருக்கிறார். உங்களது “நின்னைச் சரணடைந்தேன்” கவிதையை அவர்களிடம் கொடுத்திருக்கிறேன்” என்றார். அந்தப் புத்தகத்தை தினமணிக் கதிரில் (1997ல் அக்டோபர் மாதம் என்று நினைவு) விமர்சனம் செய்திருந்த திருப்பூர் கிருஷ்ணன் இந்த வெண்பாக்களைப் பாராட்டி எழுதி இருந்தார்.

    அவனது முதல் சிறுகதைத் தொகுப்பு “இரவில் நனவில்” 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அவன் அந்தச் சிறுகதைத் தொகுப்பை பாரதி சுராஜ் அவர்களுக்குக் கொடுத்த பொழுது, மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு,” ஒங்க சிறுகதைகள நான் படிச்சிருக்கேன். நல்ல நடை கைவந்திருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்..நானும் சிறுகதைகள் எழுதி இருக்கிறேன் ” என்று சொன்னதோடு அந்தத் தொகுதியில் இருந்த பதினான்கு சிறுகதைகளையும் விமர்சனம் செய்து ஒரு அருமையான கட்டுரை எழுதி அவனுக்கு அனுப்பி இருந்தார். அவனது திருமண வரவேற்புக்கு பாரதி சுராஜ் முன்னிலை வகிக்க கவிமாமணி வ.வே.சு. தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

    பாரதி கலைக்கழகம் சார்பில் கவிமாமணி விருது வழங்க, அவனது பெயரைத் தேர்வு செய்த விபரத்தை அவனுக்குத் தொலைபேசியில் வாழ்த்தாகச் சொன்ன பெரியவரே பாரதி சுராஜ் அவர்கள்தான். அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ” விஸ்வநாதன்..நீங்கள் எழுதிய கவிதைகளைத் தேர்வு செய்து ஒரு கவிதைத் தொகுப்பும் கொண்டு வாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். அதற்கு ஒரு அருமையான வாழ்த்துரையும் கொடுத்திருந்தார். இப்படி அவனை மாத்திரம் இல்லாமல் அத்தனை கவி உள்ளங்களையும் தேடிச் சென்று வாழ்த்தும் நல்ல உள்ளம் கொண்டவர்தான் பாரதி பக்தர் உயர்திரு. பாரதி சுராஜ்.

    இந்த வருடம் 30.06.2016 அன்று அவருக்கு எண்பத்தி எட்டாவது பிறந்த தினம். அன்று அவன் “காலம்” என்ற தலைப்பில் இப்படி ஒரு வெண்பா எழுதி தன்னுடைய வணக்கத்தை அவருக்குத் தெரியப்படுத்தி இருந்தான்.

    “நேர்மையும் தூய்மையும் நெஞ்சிலே பாரதி
    பார்வையும் எந்தப் பகட்டுமிலாச் சீர்மையும்
    கார்முகில் கண்ணன் கழலடி எண்ணமுமாய்
    ஒர்”சுராஜ்” தானிங்கே உண்டு.”

    07.07.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2

    இன்னம்பூரான்
    ஜூலை 7, 2016

    innam
    நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருடைய 96 வருட வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். சைனா நாட்டின் இன்னல், பின்னல்களும், தீர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் எளியதாக அமைய வில்லை. மிகவும் பின் தங்கிய அந்த நாட்டிலிருந்து பெருமளவு கப்பம் கறக்கப்பட்டிருந்து, மேல் நாடுகளால். அமெரிக்கா கணிசமான அளவுக்கு, அதை திருப்பி அளித்தபோது, அந்த வரவு கல்வி மேன்மைக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதன் மேல்வரவு தான் நமது பேராசிரியர். அவர் உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதையாக அறியப்பட்டார். அவருடைய வளர்ச்சி வியப்பை விளைவிக்கிறது. Tsinghua பல்கலையில் இரண்டாவது இடம் பெறும் மாணவனை பற்றித்தான் ஹேஷ்யம். முதலிடம் இவரது எப்போதுமே.

    சிலருடைய வாழ்க்கைகளில் திருப்புமுனைகள் தெய்வாதீனமாக அமையும். அவ்வாறே, ஜப்பான் சைனா மீது படையெடுத்த போது, சைனாவின் விமானங்களால், ஜப்பானின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவரது ஆசான் Pei Yuan Zhou அவர்கள் இவரை தன்னுடைய ஆய்வை ஏரோடைனகிக்ஸ் பக்கம் திருப்பி, நாட்டின் பாதுகாப்புக்கு உழைக்க தூண்டினார். அத்துறை மேல்படிப்புக்காக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்ற நமது பேராசிரியர் 1944ம் ஆண்டு அத்துறையில் அமெரிக்காவின் கால்டெக் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றதை விட, அது Werner Heisenberg என்ற உலகமே மிகவும் போற்றிய விஞ்ஞானி தனது முனைவர் ஆராய்ச்சியில் எழுப்பிய வினாவுக்கு விடை கண்டது என்ற சாதனை. இவரை மேல்நாட்டு விஞ்ஞானிகள் இடையே சமானமானவராக ஏற்றுக்கொண்டது ஒரு புகழுரை தான். ஏனெனில், ஹைஸன்பர்க் அவர்களை சிந்தனையை, இவர் தெளிவாக வெளியிட்ட அதிசயம் தான்.

    இவரின் அடுத்த சாதனை, கணினி துறையில். ஒரு விருந்தில் இவருடன் சற்றே அளவளாவிய கணினி மேதை John von Neumann அவர்களுடன் சேர்ந்து அக்காலத்து ஐபிஎம் கணினியை உபயோகித்து, பெரும் விஞ்ஞான சிக்கல்களை அவிழ்த்தது.

    கணக்கு சாத்திரத்தை நடைமுறை சாத்தியங்களுக்கு பயன் படுத்தியவர்கள் வரிசையில் இவர் இடம் பெறுகிறார். 1953ம் வருடம் விஞ்ஞானத்தின் மையமாகிய எம்.ஐ.டி. யில் இவர் பேராசிரியர் ஆனார். வாழ்க்கையின் இறுதி பகுதியை சைனாவில் தன் கல்லூரியில், தன் ஆசானை பெருமைப் படுத்தும் வகையில், விஞ்ஞான மையம் அமைத்து, அதை பேணுவதில் நிறைவு கண்டார்.

    மேற்படி வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கும் மேதைகளில் சிலர் தலையெடுக்க எதிர்பாராத நிகழ்வுகள் உதவுவதை கூறுகிறது. ஒரு துறையின் சாதனைகள் மற்ற பற்பல துறைகளும் உதவும் என்பதற்கே இவரே சாக்ஷி.
    இவரை நாம் யாவரும் வணங்க வேண்டும்.

    கலைமகளை போற்றுவுமாக.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://ymsc.tsinghua.edu.cn/guanming/image/CCL.jpg

    படித்தது: https://aas.org/obituaries/chia-chiao-lin-1916-2013

    இன்னம்பூரான்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 203 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் , இங்கிலாந்து அரசியல் வானிலே அடுத்தொரு மின்னல். 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி ஈராக் நாட்டின் மீது அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து நாடும் இணைந்து தொடுத்ததொரு போர். காரணம் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் கொடுக்கும் பயங்கரமான அமைதியின்மை. அவர் வசம் உலகையே ஆட்டி வைக்கக்கூடிய பயங்கரமான இராசயன ஆயுதங்கள் இருப்பதற்கு ஆதரமாக அமெரிக்க, இங்கிலாந்து உளவுப்ப்படைகளின் அறிக்கை.

    b54e68ed-da78-41ab-9d0e-19da24eda6eb

    இவைகள் தான் அன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலே முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் அவர்களால் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னால் ஈராக் அதிபருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு. இவைகளின் அடிப்படையில் அமெரிக்க நாட்டின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மற்றைய நாடுகளின் உதவியையும் அனுசரணையையும் கோரியது.

    அந்நிலையில் இப்பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பிரித்தானியாவும் தன் முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்தது. டோனி பிளேயருக்கும், அமெரிக்க அதிபரான ஜோர்ஜ் புஷ் அவர்களுக்கிடையிலுமான நட்புணர்வு இருநாடுகளுக்கிடையிலுமான நேச உணர்வுகளை விட மிக நெருக்கமாக உருவெடுத்தது.

    758e9b77-9564-46de-b2e9-fc07206771f8

    அடுக்கடுக்காக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஈராக் நாட்டில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒத்துழைப்பு நல்காமல் அந்நாட்டின் அதிபர் சதாம் ஹூசேன் இழுத்தடிப்புச் செய்தது அமெரிக்காவின் ஈராக் மீதான வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமாக அமைந்தது.

    இவ்வாயுத பரிசோதகர்கள் 1991ம் ஆண்டிலிருந்து இவ்வாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆனால் ஈராக் அதிபரோ அவர்களை தம்மால் முடிந்தளவு இடையூறுகளுக்கு முகம் கொடுக்க வைத்து அவர்கள்கின் முயற்சியில் தோல்வியுறச் செய்தார்.

    அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஈராக் நாட்டிற்கெதிராக பல ஜநா சார்பான சட்டங்கள் அமுலாக்கப்பட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஈராக் அதிபரினால்
    மீறப்பட்டு வந்தது.. இந்நிலையில் தான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீதான் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்கா தனது இராணுஇவ மகத்துவத்தை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. அச்சமயம் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது ஈராக்கும், சர்வதேச சட்டதிட்டங்களை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அதன் அதிபர் சதாம் ஹூசேனும்.

    அமெரிக்கா இராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை சதான் ஹூசேன் அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார். எப்படி என்கிறீர்களா ? அனைத்து சர்வதேச சட்டதிட்டங்களுக்கும், புறம்பாக தமது அயல்நாடான குவைத் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றியதே !.

    குவைத் நாட்டை ஈராக்கிடம் இருந்து மீட்பதற்கும் அமெரிக்காவின் தலைமையிலேயே போர் நடந்தது . அப்போதைய அமெரிக்க அதிபர் சீனியர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஈராக் இராணுவத்தை குவைத்திலிருந்து கலைத்ததன் பின்னர் தமது போரை நிறுத்திக் கொண்டார். ஆனால் அப்போரைத் தொடர்ந்து ஈராக்கில் சதாம் ஹூசேனின் ஆட்சியை மாற்றியமைத்திருக்க வேண்டும் என்று சில அரசியல், இராணுவ அவதானிகள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தனர்.

    சரி இந்த அலசலெல்லாம் எதற்காக என்னும் கேள்வி எழுகிறது இல்லையா ? இங்கிலாந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரில் ஈடுபட்டது சட்டத்திற்குப் புறம்பானது எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வந்ததினால் சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் இப்போரின் தன்மைகளைப் பற்றி ஆராய ஒரு விசாரணைக் கமிஷன் “ஜான் சில்க்கொட்” என்பவரின் தலைமையில் நிறுவப்பட்டது.

    சுமார் ஏழு வருடங்களாக இவ்வாரய்வு நிகழ்த்தப்பட்டது. இதை இவர்கள் இழுத்தடிப்பது பூசிமெழுகுவதற்காகவே எனும் அபிப்பிராயம் நிலவியது. இவ்வபிப்பிராயத்தின் பின்னனியில் பலவிதமானோர் சம்பந்தப்பட்டிருந்தனர். இப்போரில் தமது உறவினர்களை பறிகொடுத்த இங்கிலாந்து மக்கள், மூன்று தடவைகள் தொடர்ந்து வெற்றியீட்டிய முதலாவது லேபர் கட்சிப் பிரதமர் எனும் பெயரைத் தட்டிக் கொண்ட டோனி பிளேயர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றுக் கட்சியினர். தமது கலாச்சாரப் பின்னனியான தீவிர இடதுசாரக் கொள்கையினின்றும் விலகி மிதவாத இடதுசாரக் கொள்கையைக் கடைப்பிடித்த டோனிபிளேயர் மீது பகையுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக கங்கணம் கட்டிக் கொண்டவரது கட்சியைச் சேர்ந்த தீவிர இடதுசாரக் கொள்கையைக் கொண்டவர்கள்.

    ஆனால் ஏழு வருடங்களின் இவ்விசாரணைக் கமிஷனின் அறிக்கை நேற்ரு அதாவது 6ம் திகதி வெளியிடப்பட்டது.. இவ்வறிக்கை அநேகரின் கருத்துப்படி பூசிமெழுகப்பட்ட அறிக்கையாக இல்லாமல் மிகவும் அடிமட்டம் வரை சென்று மிகவும் விரிவான ஆய்வு நடாத்தப்பட்டதன் விளைவான அறிக்கையாகவே காணப்படுகிறது.. அவ்வறிக்கையின் முக்கிய முடிவுகள்,

    ஈராக் மீதான போர் மிகவும் அவசரப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை.

    ஈராக் நாட்டில் மிகவும் பயங்கரமான இரசாயனத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளது எனும் உளவுத்துறையின் அறிக்கை சரியான தகவல்களின் அடிப்படையில் அமையவில்லை. இதனை யாரும் தட்டிக் கேட்கவில்லை.

    இப்போருக்கான காரணத்தை நியாயப்படுத்த அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் மிகவும் ஆர்வமாக எல்லையைக் கடந்து செயல்பட்டிருந்திருக்கிறார்.

    நாட்டு மக்களையும் , பாராளுமன்றத்தையும் ஏமாற்றி இப்போரை டோனி பிளேயர் நடத்தவில்லை.

    இப்போருக்கான காரணத்தை உண்மையாக டோனி பிளேயர் ஏற்றுக் கொண்ட காரணத்திலாயே அவர் இப்போரில் இங்கிலாந்தை இணைத்துக் கொண்டார்.

    அமெரிக்காவுடன் நட்பு நாடாக இணைந்து செயலாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்த டொபொனி ப்ளேயர் இதன் மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்கலாம் என்று நம்பியதால் தான் இப்போரில் ஆர்வம் காட்டினார்.

    இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் இப்போரில் தமது உறவினர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் மிகவும் கொப்புடன் உள்ளார்கள்.. தாம் தமது உறவுகளை இழக்கக் காரணமாக இருந்தவர் டோனி பிளேயர் என்றும் இவரைப் போர்க்குற்றவாளியாக்கி சர்வதேச போர்குற்றவாளிகளை விசாரிக்கும் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

    ஆனால் சட்டம் பயின்றவர்களும், சட்டம் அறிந்தவர்களும் இவ்வறிக்கையில் டோனி பிளேயர் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையில் அவரை குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள். இவ்வறிக்கை சமர்ப்பித்ததின் பின்னால் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டோனி பிளேயர் தான் பிரதமராக இருந்த பொழுது தான் எடுத்த முடிவுகளின் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இப்போரில் ஏற்பட்ட பின்விளைவுகளின் பிரகாரம் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் பாரத்தையும் என்னெஞ்சில் எவ்வாறு சுமக்கிறேன் என்பதை அறிந்தவர்கள் இல்லை என்றார். தான் தவறு செய்தாக யாரும் எண்ணியிருந்தால் தான் அவர்களின் மன்னிப்புக் கோருவதாகக் கூறிய அதேசமயம் அன்றைய சூழலில் ஒரு பிரதமராக தான் எடுத்த முடிவு தன் நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பைக் கருதியே எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

    ஆனால் இவரது வாதங்களை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவர் , நாட்டின் எத்தனையோ நன்மை பயக்கக்கூடிய மாற்றங்களுக்கு காரணமாகவிருந்தவர் இன்று குற்றவாளியென விமர்சிக்கப்பட்டு, தன் நாட்டு மக்களையே லட்சக்கணக்கில் கொன்றுகுவித்த சதாம் ஹூசேன் அவர்களுக்கிணையாக விமர்சிக்கப்படுவது முறையா ? என்பது ஒரு நியாயமான கேள்வியே !

    ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னால் அதைப்பற்றிய பலவிதமான விமர்சனங்களையும் செய்வது மிகவும் இலகுவான செயலே. ஆனால் அன்றைய பொழுதில் தான் எடுக்கப் போகும் முடிவு தனது நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு அம்முடிவை எடுத்திருந்தால் இன்று அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முயற்சிப்பது சரியான செயலா ?

    பல கேள்விகள் பல முனைகளில் இருந்து எழுகின்றன. இவையனைத்துக்கும் விடையை காலச்சுழற்சி பகருமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    5f4904b2-8e65-4cf7-bf53-bda50dddb535

    ”கால மரத்தடியில், கோள(கிரகங்கள்) வனமமர்ந்த,
    பால கிருஷ்ணனைப் போற்றுவோம்: -நாளுமே
    வண்ணமாய் கேசவ்கை வந்திடும் கார்மேகக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 1

    ஜூலை 6, 1916

    ast
    இன்னம்பூரான்
    ஜூலை 6, 2016

    சமுதாயத்தில் நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், நல்லது நடக்கவும், தீயது விலக்கவும், விழிப்புணர்ச்சி அளிக்கும் அறிவுரை மிகவும் உதவும். கொசு மருந்திலிருந்து விதவாவிவாகம் வரை, விழிப்புணர்ச்சியும், அதைப் பரப்பும் உத்திகளும், விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன.

    நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினத்தில், ஒரு நிகழ்வு. 1914ஆம் வருடம் தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் அமெரிக்கா பங்கு கொள்ள நிச்சயித்த காலகட்டத்தில், ராணுவத்துக்கு ஆள் பிடிக்க வேண்டியிருந்தது. ‘ நாம் தயார் நிலையில் இருக்கிறோமா? ‘ என்ற வினா எழுப்பி,ஜூலை 6, 1916 அன்று பிரசுரமான லெஸ்லி வாராந்திர இதழ் என்ற பத்திரிகையில், ‘இவர் தான் அமெரிக்க மாந்தர்‘ என்று குறிப்பிடும் வகையில், ஜேம்ஸ் மாண்ட்கோமரி ஃப்லாக் என்பவர் வரைந்த ‘அங்க்கில் சாம்‘ என்ற படம் பிரசுரம் ஆனது. அவர் அமெரிக்கர்களை யுத்த ஆயத்தங்களுக்கு அழைப்பதாக வாசகம் அமைக்கப்பட்டது. இதற்கு ஓஹோ என்ற ஏகப்பட்ட வரவேற்பு. இரு வருடங்களுக்குள் 40 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. மக்களும் திரண்டு உதவினர்.

    நான் சமீபகாலத்தில், கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழிந்த பின்னும், இந்த முத்திரைச் சித்திரம் பயனில் இருப்பதைக் கண்டேன்.

    யார் இந்த சராசரி அமெரிக்கனின் மாதிரி என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கேட்டதற்கு, சிக்கனம் கருதி தன்னையே மாதிரியாக வைத்துக்கொண்டதாக அந்த ஓவியர் விளக்கம் அளித்தார். ஜனாதிபதியும், இதுதான் அமெரிக்க குணாதிசயம் என்று பாராட்டினார். அது யாது என்றால், நடு நிலை நியாயம், பொறுப்பேற்கும் தன்மை, நாணயம், நாட்டுப்பற்று எல்லாம் உள்ள மனிதன்.

    ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!?

    நாம் நம் நாட்டுக்கு எந்த மாதிரி பிரதிபலிப்பு முத்திரை சித்திரம் வரையலாம்?
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Unclesamwantyou.jpg

    படித்தது: James Montgomery Flagg (1877–1960). Wake Up America! New York: The Hegman Print, 1917. Color lithographic poster. Prints and Photographs Division, Library of Congress (58D.6)

    http://www.loc.gov/exhibits/treasures/tr11c.html#obj23

    இன்னம்பூரான்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    67263b5f-3272-4a83-8d41-b254722bd200

    ”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
    நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
    கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
    இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….

    *நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….

    Share
  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கருட காயத்திரி ஹோமம்

    ஸ்ரீ முரளீதர சுவாமிகள்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு அஷ்ட நாக கருடனுக்கு சன்னதி அமைத்து வருகை புரியும் பக்தர்களின் சர்ப தோஷம் நீங்கவும், விபத்துக்களை தடுக்கவும் கருட யாகங்கள் நடத்தி வருகிறார். வருகிற ஜீலை மாதம் 08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கும் 09.07.2016 சனிக் கிழமை காலை 10.30 மணிக்குமேல் வளர்பிறை பஞ்சமியன்று ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீ கருட காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீகருடபகவான் ஸ்ரீமன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இந்த ஹோமத்தில்  சீந்தல்கொடி, வெண்கடுகு, பசும்நெய், தேன், நவசமித்துக்கள்,
    வெண்பட்டு, பஞ்சகவியம் , போன்ற பொருட்களை சேர்க்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து ஸ்ரீ கருடபகவானுக்கு தேன் அபிஷேகம் செய்து சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சினை நடைபெற உள்ளது.

    கருட ஹோமத்தினால் ஏற்படும் பலன்கள்

    1. ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் அகலும்
    2 .நாக தோஷம், சர்ப தோஷங்களினால் ஏற்படும் தோஷங்கள் குறையும்
    3 .விஷஜீரம் விஷபூச்சிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்
    4 .விபத்துக்கள் மற்றும் அகால மரணம் குறையும்.
    5 ஸர்ப்ப திசையினால் ஏற்படும் விபத்துக்கள் குறையும்.
    6 .மரண பயம்- புத்தி பேதலிப்பு- சர்ம வியாதிகள்-
    7 ஆறாத புண்கள்- கட்டிகள்ஆறவும்.
    8புற்றுநோய் குணம் அடையும்
    9 துர்ஆவிகள் பாதிப்பு குறைய.
    10 கோர்ட் கேஸ் வழக்குகள் போன்ற பாதிப்புகள் நிவர்த்தியாகும்.
    11 .பாம்புகள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
    12..பயந்த சுபாவம் கொண்டவர்கள் மனோதிடம் பெறலாம்.
    13.அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் ஏற்படும்
    தொல்லைகள் நீங்க

    ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்

    ஓம் தத்புருஷாய வித்மஹே|
    ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
    தன்னோ கருட ப்ரசோதயாத் ||

    கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-

    “ ஓம் க்ஷிப ஸ்வாஹா “

    மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை.632513
    Phone-04172-230033.230274
    e-mail : danvantripeedam@gmail.com
    web : www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.

    அவ்வை மகள்

     மனோமயமும் அம்மையப்ப உறவும்

    இறையியல் சிந்தனைகள்

    நான் யார்? என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம் பேச்சு வழக்கில் வெகு அதிகமாகவே பயன் படுத்துகிறார்கள். விவாதிக்கிறார்கள் – விளக்கம் தருகிறார்கள். இத்தனை ஊக்கத்திற்கும் ஏதேனும் விளைவு இருக்கிறதா, உண்மையில் நிறைய பேர் “நான் யார்?” என்று தன்னைத்தானே வினவுகிறார்களா என்று நான் சுற்றிலும் பார்த்தால் நாம் காணும் காட்சி வெகுசுவாரசியமான காட்சியாக இருக்கிறது.

    ஒருவர் கேட்கிறார்: நான் யார்? நான் ஒரு கணக்குப்பிள்ளை (Accountant ஐ கணக்குப்ப்பிள்ளை என்னலாமே!). நான் அதற்கேற்ற மிடுக்கோடு உடையணிந்து கொள்ளவேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள வாகனம் வைத்துக்கொள்ள வேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள ஓட்டலில் சாப்பிடவேண்டும் – என் மனைவி மற்றும் குழந்தைகள் என் அந்தஸ்த்துக்கேற்றார் போன்று கவுரவக்குறைவு தராதபடி தோற்றமளிக்க வேண்டும் – என் குழந்தைகள் என் அந்தஸ்தைப் பிரதிபலிக்கும்படியான ஒசத்தியான பள்ளியில் படிக்க வேண்டும்!”

    சாமான்ய மனிதர்களின் ராப்பகல் நினைவும் ஏன் கனவும் கூட இவ்வாறே அமைகிறது. இவ்வாறு இவர்கள் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே சிந்திக்கின்றதான சுய வினாக்கள் நான் யார்? என்பவையே. அதில் சந்தேகம் இல்லை. இங்கு இந்தக் கணக்குப் பிள்ளை எழுப்பியிருக்கிற கேள்விகளிலே எந்தப் பழுதும் இல்லை. வாழ்வின் தரத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும் ஒரு தனி மனிதன் எழுப்புகிற மிக வலுவான கேள்விகள். அந்தத் தனிமனிதனது வாழ்வை இயக்கும் எஞ்சினைப் போன்ற ஆற்றல் கேள்விகள். இது நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

    இன்னொருவர் புலம்பித்தீர்க்கிறார்: “என்னைப் பார்த்து அப்படி கேட்டுப் புட்டானே!” என்று. இவரைப் பார்த்து அவ்வாறு சொன்னவன் எவனோ அந்தச் சொன்னவன் கூட மறந்திருப்பான் தான் பேசியதை – ஆனால் கேட்ட இவரோ இறக்கும் வரையிலும் தான் கேட்ட அந்தச் சொல்லை மறக்க மாட்டாதவராய்த் துடிக்கிறார். தான் யார்? தான் எத்தனைப் பெரிய ஆள் – எத்தனை நல்ல ஆள் என்பது இவருக்கு மிக நன்றாகப் புரிந்திருக்கிறது. அப்படிப் பட்ட தன்னைப் பிறர் இவ்வாறு சொல்லுதல் தகுமா என்பதே இவரது துடிப்பு. ஆக, இவர், “நான் யார்?” எனும் கேள்வியைக் கேட்டவரே எனலாம். உலகு – தான் எனும் இரு தளங்களில் தன்னைப் பரிசோதிக்கும் யதார்த்தம் இம்மனிதரிடத்திலே இருக்கிறது. இவர் கரிசனத்தில் பழுதில்லை – இந்தச் சுய கேள்வி இவரை இன்னமும் கொஞ்சம் தன்னைப் பட்டை தீட்ட உதவும். இதுவும் நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

    இந்த இரண்டு காட்சிகளிலும், நான் யார் எனும் கேள்வி எழுப்பப்பட்டது உண்மையே! இருப்பினும், இவர்கள், “நான்” எனும்போது “என்னை” “எனக்கு”, “என்னுடைய” என்று தான் கேள்வித்தொடுப்பைக் கேட்கிறார்களே தவிர நான் யார் எனும் கேள்வியை முறையாய், வலுவாய், நேரடியாய் எழுப்பியதாகப் புலப்படவில்லை.

    இதுபற்றியே அருணகிரி நாதரும், கந்தரநுபூதியில், “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!” என்கிறார். அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறை அறிந்தவர்கள் இந்த அனுபவ வாசகத்தின் பொருளை ஆழமாய் உணர்வர். யான் – தான் என்கிற எண்ணங்கள் மிக இயல்பானவையே – முதிர்ச்சியுறா நிலையில் அவையே முந்துறும் என்றே அருணகிரியார் காட்டுவது படுகிறது. எனவே, பொதுவாக, நான் என்பதிலே பிழை இல்லை என்றே படுகிறது. ஆனால் நான் என்பது “என்” என ஆகும்போது திடுக்கென எஜமானத்தனம் வந்துவிடுகிறது. அந்த “என்” எனும் சொல்லோடு “ஐ” எனும் எழுத்தையும் இணைத்து “என்னை” என மூன்றெழுத்துச் சொல்லாக மாற்றும்போது எஜமான எழுச்சி மிகுகிறது. ஆக, “நான்” என தன்னந்தனியே சும்மா கிடந்த ஒன்றைப் பிறவற்றோடு கூட்டு சேரும்போது நிகழும் பிறழ்வுகளை, குணோபேதங்களைப் பார்க்கிறோம்.

    ஐ எனும் ஒற்றை எழுத்து தமிழிலாகட்டும் I என்று ஆங்கிலத்திலாகட்டும் மிகுந்த வலிமையுடைய ஒரு சின்னமாகும். பொதுவாக ஐ என்பது வியப்புணர்வு. உளவியல் ரீதியாக I என்பது மனோமயம் எனப்படும் Egoவைக் குறிக்கும். தமிழில் , ஐ எனும் எழுத்து, விந்தைப் பொருள், கணவன், ஆசான், தந்தை, தெய்வம், நுட்பம், அழகு எனப் பல்வகைப் பொருள் படும். ஐ என்பது உடற்கூற்றில் சுவாசத்தையும், மருத்துவத்தில் விஷத்தையும் குறிக்கும். ஐ யின் இத்தனை அர்த்தங்களும் எத்தனை அர்த்தமானவை என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்குள் பரவசம் பெருகும்.

    ஆக, அடிப்படை நிலையாகப் பார்த்தால், ஐ எனும் மனோமயம் மனித வாழ்விற்கு ஜீவாதாரமான மூச்சைப் போன்றது என் அறிகிறோம். மனோமயம் இன்றி எவரும் வாழமுடியாது. அதே நேரத்தில், மனோமயம் விஷத் தன்மை உடையது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். இவ்வகையில் இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் மருந்துகள் யாவுமே விஷம் தான். அது மருந்தா விஷமா என்பது கொள்ளும் முறையிலும் அளவிலும் உள்ளது. ஆக மனோமயம் மூச்சாகுமா – மூச்சடைப்பாகுமா – மருந்தாகுமா விஷமாகுமா என்பதிலே மனோமயத்தை வகிக்கும் வகையிலே தான் அடங்கிக் கிடக்கிறது.

    மனோமயத்தை ஆசானாகக் கொள்கிறோமா, தந்தையாக பாவிக்கிறோமா, கணவனாய் மணந்து கொள்கிறோமா, தெய்வமாய்ப் பேணுகிறோமா, நுட்பத் பொருளாய் அணுகி ஆராய்கிறோமா, புனிதப் பொருளாய், அதன் அழகு கெடாதபடி அதனை ஆராதிக்கிறோமா என்பதிலே மனிதர்கள் வேறுபடுகிறார்கள். அதே நேரத்தில், மனோமயம் என்பது ஒரு நிச்சயமான ஒன்று – அதைவிடுத்து ஒரு வாழ்வு அமையாது எனவும் காண்கிறோம். ஞானிகள் முதல் கடைக்கோடி சாமானியன் வரை, ஆண்-பெண், ஏழை-பணக்காரர், அழகுடையோர்- அழகில்லாதோர் என்கிற பாகுபாடின்றி மனோமயம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.

    இன்னொரு காட்சியைக் காண்போம்: “என் பாப்பா” என்று ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் குழந்தை அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்தபடியே தூங்கிவிடுகிறது. தனது உறக்கம் கலைந்தவுடன் தன் அருகில் குப்புறக் கவிழ்ந்து கிடைக்கும் பொம்மையை உலுக்கி எழுப்புகிறது, “ஏய்! இன்னமுமா தூங்குகிறாய்?” என்று. பரபரவென்று பொம்மையை வாரி அள்ளித் தூக்கிக்கொண்டு ஓடுகிறது – உணவு ஊட்டுகிறது – குளிப்பாட்டுகிறது – உடை மாற்றுகிறது – தலை பின்னுகிறது -செல்லமாய் அடிக்கிறது – முத்தம் தருகிறது – முத்தம் தா எனக்கு எனக் கேட்டு பொம்மையைத் தன் கன்னத்தில் முத்தமிடவைக்கிறது.

    மொத்தத்தில், பொம்மைப் பாப்பா இந்த பாப்பாவின் கட்டளைகளுக்கெல்லாம் ஆளாகிறது. பாப்பா ஆட்டிவைக்க இந்த பொம்மை பாப்பா அதற்கேற்ப ஆடுகிறது. பாப்பாவிற்கும் பொம்மை பாப்பாவுக்கு இடையில் நடப்பவை யாவும் உண்மை. பொம்மையின் இயக்கங்கள் யாவும் எவ்வகையிலும் பொம்மையினுடையவை அல்ல என்பதும் உண்மை. பொம்மை தூங்கியது முதல் – விழித்தது – உண்டது – முத்தமிட்டது வரை யாவும் உண்மை நிகழ்வேயானாலும் பொய்மையே. ஏனெனில் தன்னிச்சையாய் சுய ஆற்றலோடு – குருதியும், சதையும், எலும்புமாய் பொம்மை எதையும் செய்ய வில்லை இருப்பினும், இந்த எல்லாப் பொய்மைகளையும் மெய்மையாக்கியது பாப்பா பொம்மை மீது கொண்ட உறவும். உரிமையும், உணரவும், இயக்கங்களும். அன்றொருநாள், கடையில், அலமாரித்தட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது இந்த பொம்மைக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை – அந்தஸ்து இல்லை – ஆனால் இன்றோ பாப்பாவின் இந்தப் பெரிய வீட்டுக்குள் அந்த பொம்மை எங்கு வேண்டுமானாலும் போய்வரலாம். பாப்பாவுடன் காரில், ரயிலில், படகில், விமானத்தில் என எதிலும் எங்கும் பயணிக்கும் தகுதியும், அரசு அனுமதியும் கூட அதற்குக் கிடைக்கிறது. ஒன்றுமில்லாத பொம்மைக்கு இத்தனை உயர்வும் தகுதியும் வந்தது எவ்வாறு என்று பார்த்தால், “என் பாப்பாவுக்கு” என்று “பெற்றோரால் அது கடையிலிருந்து வாங்கப்பட்டது – பாப்பாவிற்குக்குக் கொடுக்கப்பட்டது. நெஜப் பாப்பா, பொம்மைப் பாப்பாவை “என் பாப்பா!” என்று அங்கீகரித்தது – மடமடவென்று அதற்கு – அதிகாரம், கவுரவம், அந்தஸ்து, இயக்கங்கள் கிடைக்கின்றன. கைவாட்டாய் எங்கேயோ வைத்துவிட்டதால், கொஞ்ச நேரம் அந்த பொம்மை காணோம் என்றால் வீடு முழுக்க சல்லடை போட்டுத் தேடுவார்கள் – அத்தனை மவுசு அதற்கு.

    இக்காட்சியில், “என் பாப்பா” என்கிற அங்கீகாரத்தை இரு தளங்களில் காண்கிறோம். பெற்றோர்-பாப்பா எனும் முதல் நிலை பாப்பா-பொம்மை எனும் இரண்டாம் நிலை. நிலைகள் வேறானாலும் “ownership” என்று ஆங்கிலத்தில் சொல்வதான சொத்துரிமை தான் இங்கு இரு தளங்களிலும் செயல்படுகிறது. குழந்தையைப் பெற்றோர்கள் உரிமைப் பொருளாகக் கொள்வது இந்த இரண்டு தளங்களிலும் தெரிகிறது. இதுதவறா என்றால் “இல்லை”. இது மிகச்ச்சரியான அணுகுமுறை. அது போன்றே குழந்தைகளும் பெற்றோரை உரிமைப் பொருளாகவே கொள்கின்றனர். உரிமைப் பொருள் என்கிற நிலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. சட்ட ரீதியாகப் பார்த்தால் பொருள்-சொத்துப் பகிர்வு போன்ற எண்ண அளவீடுகளுக்கு இட்டுச்செல்லும். மனோமய நோக்கில் பார்த்தால், உரிமைப் பொருள் என்பது உறவுப் பாலத்தைக் குறிக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உறவு கொள்ளும்போது மட்டுமே வாழ்வின் கதவுகள் திறக்கின்றன. உறவு-உரிமை இரண்டு தான் இறைமையின் பண்புகளுமாகும். திருக்குறுந்தொகையில் ஈசனை அடையும் முறையை அப்பர் கூறுவார்:

    உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
    முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!

    மோர் கடைந்து வெண்ணை எடுக்கும் தன்மையது இறைமை என்பதில் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் எளிய எடுத்துக்காட்டு உள்ளது. உறவும் உணர்வும் எத்தனை முக்கியமமானவை என்பதை விளக்கவும் வேண்டுமோ? மத்து உறவாம் – கயிறு உணர்வாம். அடடா எத்தனை எளிமை. மத்தின் மீது கயிறு உரிமையோடு நகரும் பட்சத்தில் தானே உணர்வு பிறக்கும். கயிறு என் மீது நகரக்கூடாதென்று மத்து மறுத்தால் கடைவதெப்போது? வெண்ணை கிடைப்பதெப்போது? எனவே தான் மனிதர்களு க்குள்ளே உறவு பிறக்கும் போது உரிமையும் பிறக்கின்றது. இது தவிர்க்க இயலாதது.

    குழந்தைக்கு மனோமயம் என்பது தாயும் தந்தையுமான அம்மையப்பனோடு அது கொள்ளும் உறவே. கலப்படம் இல்லாத முழு முதல் உறவு இது. ஆனால், சில குழந்தைகளுக்கு நம் நாட்டிலும், பற்பல குழந்தைகளுக்கு அமெரிக்க நாட்டிலும் குழந்தை-அம்மையப்ப உறவுப் பாலம் முறையாய் உருவாவதில்லை அல்லது முளையிலேயே அறுந்து போயிருக்கும் அல்லது அறுக்கப் பட்டிருக்கும். இதற்கு இயற்கைக் காரணங்களும் இருக்கலாம் அல்லது செயற்கைக் காரணங்களும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும், தன்னைப்பெற்ற அம்மையும் தந்தையும் இன்றி வாழ்வின் முதல் படியில் ஏறுவது என்பது சிரமமான செயல். வாழ்வின் தலையாய பிடிப்பான அம்மையப்ப உறவு கிட்டா மகவுகளின் மனோமயத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். திரைக்குப் பின்னே அம்மையப்ப உறவு கொண்டிருவர் உருவாக்கிய மகவு தன்னை உருவாக்கிய அவரிருவரையும் நேரில் காண இயலாத சூழல் அல்லது அவருடன் வாழ இயலாத சூழல் அக்குழந்தையின் மனோமய அலைகளை எவ்வாறெல்லாம் விசைப் படுத்தும் என்று கொஞ்சம் கற்பனையை ஒட்டிப் பாருங்கள். பிறப்பித்த பெற்றோரின்றி வளருவது என்பது எளிமையான விஷயமல்லவே. அவதாரப் புருஷர்கள் இவ்வித அனுபவத்துக்கு விதிவிலக்கல்லர். ஏனெனில் அவர்களும் சர்வசாதாரணக் குழந்தைகளாகவன்றோ பிறக்கிறார்கள் – வளருகிறார்கள். இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் கடந்து வந்திருக்கிற குழந்தைப் பருவம் ஒப்பிடத் தக்கதாகவும் மிக முக்கியமான ஒற்றுமைகளை வெளிக்கொணருவதாயும் இருக்கின்றது. நான் யார் எனும் இவர்களது விசாரத்திலே இவர்களது குழந்தைப் பருவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பேசுவோம்.

    Share
  • விதைத்ததை நாம் காத்துநிற்போம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா

    vivekananda-1

     

     

     

     

     

     

     

    ஆங்கிலத்தில் கற்றாலும்
    ஆன்மீகம் அகம்நிறைத்தார்
    அறிவுடனே ஆன்மீகம்
    அவருரைத்து நின்றாரே
    தன்குருவை சோதித்து
    தன்னுணர்வை அவர்வளர்த்தார்
    தன்குருவின் ஆசியினால்
    தரணியெங்கும் ஒளியானார் !

    ஈரமதைக் கொண்டிருந்தும்
    வீரமுடன் செயற்பட்டார்
    ஊரெல்லாம் அவர்வார்த்தை
    உத்வேகம் ஊட்டியதே
    பாரினிலே புரட்சியுடன்
    பலகருத்தை அவர்பகர்ந்தார்
    பார்வையெலாம் பலநோக்கில்
    பாய்ந்துமே சென்றதுவே !

    சமயத்தின் தத்துவத்தை
    தாமுணர்ந்தே போதித்தார்
    சரியான பாதைசெல்ல
    தன்கருத்தை அவர்தந்தார்
    மனிதமன நிலையாய்ந்து
    மருந்தாகப் பலசொன்னார்
    நிலையான கருத்தெனவே
    நிறுத்திவிட்டு அவர்சென்றார் !

    விளக்கமில்லா நின்றவர்க்கு
    விவேகமாய் விரித்துரைத்தார்
    வேதனையில் இருப்பாரை
    வெளியேற்றல் கடமையென்றார்
    போதனையைச் சொன்னாலும்
    பொறுப்புடனே அவர்செய்தார்
    சாதனையின் சிகரமென
    சகலருமே போற்றுகின்றார் !

    காவிகட்டி வந்தபலர்
    கண்மூடிப் பலசொன்னார்
    மூடிநிற்கும் பலவற்றை
    மூடியே வைத்துநின்றார்
    வாடிநிற்கும் மக்கள்தமை
    மனங்களிலே கொள்ளாமல்
    மூடிநிற்கும் தத்துவத்தை
    முணுமுணுத்தே நின்றார்கள் !

    காவிகட்டி நின்றாலும்
    கண்மூடிக் கொள்கைகளை
    களைந்திடுங்கள் எனச்சொன்னார்
    களத்தில்நின்று விவேகாநந்தர்
    கண்மூடி நில்லாமல்
    கண்திறக்க வைத்தவர்தான்
    காலமெல்லாம் நாம்நினைக்கும்
    கனிவுநிறை விவேகாநந்தர் !

    வாய்மையினை யாவருமே
    வாழ்வியலாய் ஆக்கிடுங்கள்
    வைரமுடை உடலுடனே
    வரநீங்கள் முயன்றிடுங்கள்
    பொறாமைதனைப் புறந்தள்ளி
    புதுத்தெம்பு பெற்றிடுங்கள்
    புதுவாழ்வு உங்களுக்குப்
    பொலிவாக அமையுமென்றார் !

    தேசமதை நேசித்த
    திறலான துறவியவர்
    பாதகங்கள் தனையெதிர்த்த
    பாரதத்தின் துறவியவர்
    வீரமுள்ள உணர்வுதனை
    ஊட்டிநின்ற துறவியவர்
    விவேகநிறை விவேகாநந்தர்
    விதைத்ததைநாம் காத்துநிற்போம் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    c77c5c1c-e436-4f13-ad75-23331f1243e8

    கவிதை வருவது கண்ணன் அருளா ?
    செவியுண்ட செய்யுள் செயலா ?-புவியத்தா
    காவிய வாழ்க்கையா? கைவல்ய வேட்கையா?
    சாவியுன் கையில் செப்பு….

    பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்(சத்தமிடும்)
    சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
    எங்கும் திகழ்வோனை ஏத்து….
    மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
    உய்யுமோர் ஆன்மன் ஒளியாக -அய்யநின்
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
    சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூன் 20 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இமய மலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய தமிழகத்தின் முதல் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள்


    இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள். படம் [2]

    இந்தப் புவி உலக உருண்டையிலேயே ஆகப்பெரிய உயரமான மலை இமயமலையில் உள்ள எவெரெச்சுட்டு முகடே. இதன் உயரம் 8,848 மீட்டர். உலகத்தில் வட அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ, ஆத்திரேலியாவிலோ 7000 மீட்டர் உயரம் உள்ள மலைகூடக் கிடையாது. ஆசியாவைத் தாண்டி உள்ள உலகில் தென்னமெரிக்காவில் அருச்செண்டீனாவில் உள்ள அக்கான்காகுவா (Aconcagua) மலையே மிக உயரமானது. அதன் உயரம் 6,961 மீட்டர் மட்டுமே. ஆனால் இமயமலைத் தொடரில் 8,000 மீட்டர் உயரத்தை எட்டும் மலைமுகடுகளோ 14 உள்ளன! இமயமலைத்தொடரில் 7000 மீட்டரைத்தொடும் மலைமுகடுகள் 126 உள்ளன. இமயமலை அடுக்குத்தொடர் முழுவதுமே கரடுமுரடான, பனிமூடிய கொடுமுடிகள் நிறைந்தவை. இவற்றில் எவெரெசுட்டு மலையானது உலகின் உச்சி. இம்முகட்டை முதன்முதலாக எட்டியவர்கள் செர்ப்பா என்னும் மக்கள் இனத்தைச் சேர்ந்த தென்சிங்கு நோர்கே (Tenzing Norgay) என்பாரும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்டு இல்லரி (Edmund Hillary) என்பாருமே. இவர்கள் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு உச்சியை எட்டி அரியசெயல் செய்து உலகப்புகழீட்டினார்கள்[3]. அதற்குமுன் யாரும் இந்த உச்சியை எட்டவில்லை. 2010 ஆம் ஆண்டுவரை 3,142 பேர் உச்சியை எட்டியிருக்கின்றார்கள் [3]. இந்த எவரெசுட்டு முகட்டைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் எவரும் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள் எட்டும்வரை எட்டவில்லை. ஆனால் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் மூவர் எட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் திரு. மகேந்திரன் முனுசாமி (எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு மோகனதாசு நாகப்பன் ((எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு தி. இரவீந்திரன் (இவர் வடக்கே இருந்து திபெத்திலிருந்து ஏறிய முதல் ஆசியர்; உச்சியை எட்டியது 2013 இல்) ஆகிய மூவரையும் குறிப்பிடல் வேண்டும் [4]. ஆனாலும் தமிழகத்தைச்சேர்ந்த தமிழர் எவரும் திரு சிவக்குமார் எவெரெசுட்டை எட்டவில்லை.

    எவரெசுட்டு மலையை எட்ட முயன்று 200 உக்கும் மேலானவர் உயிர்துறந்துள்ளார்கள். மலையில் உச்சிப்பகுதிகளில் காற்றின் அழுத்தமும் உயிர்வாழ இன்றியமையாத உயிர்வளி எனப்படும் ஆக்சிசனின் அளவும் மூன்றில் ஒருபங்குதான் இருக்கும். கடல்மட்டத்தில் ஒரு மணித்துளிக்கு 20-30 மூச்சிழுப்புகள் இருக்குமென்றால், மலையின் உயரமான பகுதிகளில் அதே அளவு உயிர்வளியை மூச்சாக உட்கொள்ள ஒரு மணித்துளிக்கு 80-90 முறை மூச்சு இழுத்துவிடவேண்டும். எவெரெசுட்டுக் கொடுமுடியை எட்டி அரிய செயல் நாட்டியிருக்கும் அவில்தார் சிவக்குமார் அவர்களைப் பாராட்டி சூன் 20 ஆம் கிழமையின் வல்லமையாளராக அறிவித்து நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூன் 20 அன்று வரவேண்டியது. எதிர்பாராத காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] The Hindu, June 13, 2016
    [3] ஆங்கில விக்கிப்பீடியா ‘Mount Everest”
    [4] முகநூலில் ஐயை மணிமேகலை இராசன் அவர்கள் செ.இரா. செல்வக்குமார் பதிவில் கருத்திட்டதைத் தொடர்ந்து திரட்டிய செய்தி. ஆங்கிலவிக்கிப்பீடியா (https://en.wikipedia.org/wiki/M._Magendran ) (http://malaysianindianhistory.blogspot.ca/2013/08/t-ravindran-first-asian-to-conquer.html)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    5aab7c74-c21a-4c8d-a686-d2b666f242a3

    ”அம்பாள் சவுந்தர்ய ஆழி, சகோதரன்-
    நம்பாள் கிருஷ்ண நவநீதன் -கம்பால்(புல்லாங்குழல்)-
    இசைவழி ஊட்டுகிறான் ஈரிருகால் மாட்டுக்(கு)-
    அசைபோடும் நாவுக்(கு) அமுது’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    3303bf21-699b-430b-ae5c-ab31e994ffd1

    ”பிம்மாலை நேரத்தில் புள்ளில்(கருடனில்) வருகின்ற
    அம்மாலை வேண்ட அடைக்கலம்: -’கம்’மாளே(சும்மா’கம்னு’ இருக்கும் ஆளே!)
    காலைக் கடனாக கேசவ் வரைந்தனுப்ப
    மாலைக்(திருமாலைக்) கடனாக மாற்று’’….

    ”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
    முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்
    கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
    புருடனைப் போற்றல் பிழைப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • இளைஞர்வாழ்க்கை

    விவேக் பாரதி

     

    உலகத்தார் பல்லோரும் இளைஞர் வாழ்வை
    உருப்படாத வாழ்வென்றே எண்ணு கின்றார்
    கலகந்தான் இவராலே நேரு மென்பார்
    கண்டபடி வாழ்ந்திடுவோ ரிளைஞ ரென்பார்
    விலக்கிடுவார் குடியிருப்பு பகுதி தன்னில்
    வீடுதர மறுத்திடுவார் இளைஞர் சேர்ந்தால்
    தலைகால்தான் புரியாமல் ஆட்டம் போட்டுத்
    தன்குடும்பப் பெயரையுமே கெடுப்ப ரென்பார் !!

    உண்மையிலே இளைஞரென்றால் யார்தான் சொல்வீர்
    உலகத்தை இயக்கவல்ல சக்தி காண்க
    நுண்ணறிவைக் கொண்டவர்கள் சாதி பேதம்
    நுகராத பாரதியின் கூட்டங் காண்க
    மண்முழுதும் மலரினங்கள் பூக்க வைக்க
    மனமிசைக்கும் தேனீக்க ளிளைஞர் காண்க
    கண்ணாறக் காண்பதெல்லாம் கலையே வென்று
    கவலைகளை மறக்கின்ற குலமே காண்க !!

    காதலெனும் தவம்புரியும் இளைஞர் ஞானி !
    கனலாகப் புரட்சிசெய்யு மிளைஞர் வீரர் !
    பூதலத்தி லழகுருவா மிளைஞர் பூக்கள் !
    புரியாத புதுமாற்றம் புதிய தோற்றம்
    மேதினியில் உடல்மற்றும் மனத்துக் குள்ளே
    மேன்மையுறக் காணுமவர் ஆய்வுக் கூடம் !
    வாதித்த லெளிதாமோ விடைக ளற்று
    வாழ்கின்ற கேள்வித்தாள் இளைஞர் வாழ்க்கை !!

    -விவேக்பாரதி
    04/07/16

    Share
  • ரயிலு வண்டி

    மீ.விசுவநாதன்

     
    ரயிலுவண்டி வருகிறது – அது
    ராவில் ஊருள் நுழைகிறது
    குயிலுகுரல் கொடுக்கிறது – படு
    குஷியாய்ப் பக்கம் வருகிறது !

    வெளிச்சமுடன் அருகினிலே – ஒரு
    விஷயம் சொல்லத் துடிக்கிறது !
    முளிச்சபுள்ள கதவருகில் – என்
    முகத்தப் பாத்துச் சிரிக்கிறது !

    சிறுவசில தெருவுனிலே – அவள்
    சிலுப்பி நடந்த நினைவிருக்கு
    வறுகடலை எடுத்துவந்து – என்
    வாயில் தந்த உணர்விருக்கு !

    அவளையிங்கு இறக்கிவிட்டு – ரயிலு
    அடுத்த ஊரு நகர்கிறது
    இவளையிங்கு இணைவதற்கு – இந்த
    ரயிலு தானே உதவியது !
    (03.07.2016)

    Share