Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    05c85e32-dffa-4461-9644-90b46a736826

    ”கரணமிட்டேன் வெல்லக் கியாதியில்லை, தோப்புக்
    கரணமிட்டேன் கண்ணாவுன் காலில் , -அரனவர்
    சீமந்தப் பிள்ளைபோல் சேயெனை ஆதரி
    தாயிந்த வேளை தயவு’’….
    ’’நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது’’….

    ’’அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்’’….கிரேசி மோகன்….

    Share
  • மனிதாபிமானம்

    பவள சங்கரி

    ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த தம்பதியரின் நிலையில் இந்த 4000 மிகப்பெரியத் தொகையாகத் தெரிய மலைத்துப்போய் நிற்கிறார்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் பெற்ற மகராசர்கள். மகள் வீட்டில் பெரியவர்கள் ஒரு பகுதியிலும் மகன் ஒரு பகுதியிலும் தனித்தனியாக குடித்தனம் செய்கிறார்கள். மகனும் தன் வசதிக்கு பெற்றவர்களுக்கு சாப்பாட்டிற்கு தன்னால் முடிந்ததைத் தருகிறாராம். இந்த நிலையில் ஓரளவிற்கு வசதியாக இருக்கும் மகள் தன் வீட்டிற்கு பெற்றோர் சரியாக வாடகை தருவதில்லை என்பதற்காக வெளியே முடுக்கிவிடச் சொல்லிவிட்டாராம்… இந்தக்கொடுமையான சூழ்நிலையில் முதியோர் ஓய்வூதியம் பற்றி அறிந்து, அம்மா புண்ணியத்தில் 500 ரூபாய் அதிகம் உயர்ந்து 1500 கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு வந்தால் இங்கு இந்த நிலை..

    முதியோர் ஓய்வூதியம் என்பது அழிவு நிலையில் இருக்கும் பயிருக்கு உயிர்நீர் ஊற்றுவது போலத்தானே.. இதற்கு எத்தனை கையெழுத்துகள், சட்டதிட்டங்கள், கையூட்டுகள்…! சரி அப்படியே இருந்தாலும், இந்த முதியவர்கள் அங்கங்கு அலைந்து திரிந்து கையெழுத்து வாங்கும் சிரமத்தைக் குறைக்கும்விதமாக குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட ஒரு சில மணி நேரங்கள் கிராம நிர்வாக அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு அதிகாரிகளோ அங்கேயே வந்திருந்து அந்த கையெழுத்தை போட்டுத் தருவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாமே? அவர்கள் கையூட்டு தரும் அவலமும் தீரலாமே? இது மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கவேண்டிய பிரச்சனை அல்லவா?

    Share
  • மீராவின் காதல்…..

    க. பாலசுப்பிரமணியன்

     

    கற்சிலையே நீயென்றார்   கண்ணாயென் காதலனே !

    கையிரண்டில் உனையணைத்துக்  காலமெல்லாம் வாழ்வேனே !

    கனவெல்லாம் நீயிருக்க கண்ணிரண்டும் நீர்வடிக்க

    காசினியில் உன்னையன்றி வேறொன்றும் அறியேனே !

     

    கருவண்ணம் நீயென்று யார் சொன்னது ?

    கருவிழியால் பார்த்ததாலே அது வந்தது !

    கருநாகம் வால்பிடித்துக்  கண்ணா! நீயாட

    கண்களெல்லாம் கைகோர்த்து முன் நின்றது !

     

    முன்னிரவும் பின்னிரவும் மனமெல்லாம் உனைத்தேட

    கண்ணருந்தும் விருந்தாக கருவிழியில் நின்றாய் !

    விண்மறந்து  மண்மறந்து உனை நினைத்ததும்

    வண்ணமெல்லாம் உனதென்றே கார்மேகம் சொன்னது !

     

    கருஞ்சடையில் பீலிசூடி குழலூதி நின்றாய் !

    கண்ணா ! காலமெல்லாம் உன்பின்னே நின்றது !

    கோவினங்கள் கூட்டத்திலே நீ மறைந்தாய்

    கோபியர்கள் ஆட்டத்திலே என்னை மறந்தாய் !

     

    கோட்டையினைத் துறந்து கூடிடவே வந்தேன்

    பாட்டையிலே உன் குழலில் என்னை மறந்தேன் !

    சாட்டையடி வாழ்க்கையிலே சமரசங்கள் இல்லை

    சாரதியே !  காதலிலே கலியுகத்தைத் துறந்தேன் !

     

    கொடியவிடத்தைக் குடித்த பின்னும் மரணமில்லை !

    கருநாகம் தீண்டிடவும்  கடுகளவும் பயமில்லை !

    கோகுலனே! துணையிருப்பாய்!கோமகனே! காத்திருப்பாய் !

    கோதையுடன் ஆடுகையில் கொஞ்சமெனை நீநினைப்பாய் !

     

    தஞ்சமென்று வந்தோரை வஞ்சமின்றி ஏற்ப்பவனே !

    மஞ்சமென்று வந்தேன் நெஞ்சமுனது நாடி !

    கொஞ்சிவிட ஆசையில்லை கோதையவள் மாற்றி

    எஞ்சிவிட்ட வாழ்வினையே வாழ்ந்திடுவேன் தாள்போற்றி !

     

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-21

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்!

    இத்தனை நாட்கள் நாம் சிறுமிகள் சிற்றிலிழைத்தும், சிறுவீடு கட்டியும் விளையாடியதனையும், சிறுவர்கள் அவற்றை அழித்துச் சிதைத்ததனையும் கண்டோம். இப்போது காணும் காட்சி கண்ணுக்குப் புதுமையாகவும் இனிமையாகவும் உள்ளதே! பாண்டியமன்னனின் மாபெரும் அரண்மனை. பளிங்குக்கற்கள் பதித்த பெரிய பரந்த முற்றம். வண்ணமலர்கள் போன்ற சிறுமிகள் அரசிளங்குமரியுடன் கூடி அம்மானை ஆடுகிறார்கள். அந்த அரசிளங்குமரியோ தெய்வத்தன்மை படைத்தவள். அவளுடைய ஆட்டம் விந்தைகள் நிறைந்து அனைவர் கருத்தினையும் கவர்கின்றது. வாருங்களேன்! நாமும் சென்று பார்க்கலாம்.

    f4dfebad-fae1-4d89-addc-cc55ff9afc7f
    எவராலும் தடுத்து நிறுத்த இயலாத ஆற்றல் படைத்தவள் எனும் பொருள்கொண்ட பெயர்படைத்த தடாதகையே இவ்விளவரசி. வட்டமிட்டு அமர்ந்துள்ளனர் சிறுமியர். முத்தாலாகிய அம்மானைக்காய்களை எதிர்எதிராக வீசிவீசியெறிந்து விரைந்து ஆடுகின்றார்கள் அவள் தோழியர். அவற்றைப்பற்றி தடாதகை மேலே திரும்பவும் வீசுகிறாள். மற்ற பெண்கள்அவற்றை இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறிமாறித்தாவிப் பிடிக்கின்றனர்; பிடித்தவண்ணமே இருக்கின்றனர்; பிடித்துக் களைக்கின்றனர். அவர்கள் அவற்றைப்பிடித்து நிமிர்ந்து பார்க்கும்முன்பே தடாதகை இன்னொரு ஆயிரம் அம்மனைக்காய்களை எடுத்து உயரே வீசுகின்றாள். “அம்மாடி! இவற்றை எவ்வாறு பிடிப்பது?” என அவர்கள் அயர்ச்சியுறுகின்றார்கள். “என்னடி தடாதகை! ஏன் எங்களை இவ்வாறு அலைக்கழிக்கிறாயோ?” எனச் செல்லமாக வேறு கடிந்துகொள்கின்றனர்!

    தடாதகை உயரே எறிந்த ஓராயிரம் அம்மனைக்காய்கள் வரிசையாக அழகுற அணிவகுத்து நிற்கின்றன. இதனை இப்போது உறைந்துவிட்ட ஒருகாட்சியாகக் காண்போம். சிறுமிகளிடமிருந்து விலகிச் சென்று, குமரகுருபரனாரைக் காணுவோம்! தடாதகைப்பிராட்டியுடன் அவள் தோழிகள் விளையாடும் இந்த அம்மானை விளையாட்டு அவருடைய ஞானக்கண்களில் வேறுவிதமாகத் தென்படுகிறது.

    அகிலாண்ட கோடியீன்ற அன்னையிவள். அவள் ஈன்ற அத்தனை கோடி அண்டங்களையும் ஆகாயத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து அழகுபார்ப்பது போல இந்த வண்ணவண்ணமான அம்மானைக்காய்கள் வரிசையாக நிற்கின்றனவாம். பார்க்கப்பார்க்கப் பரவசமூட்டும் கண்கொள்ளாக் காட்சியிது! அம்மாடி! ‘இத்துணை அண்டங்களையும் நீ படைத்து எம்மையும் காத்தருளுகின்றனையோ அன்னையே!’ என உளம் நெகிழ்கின்றதல்லவா?

    இவர்கள் அம்மானையாடும் பளிங்கு முற்றத்தைச்சுற்றிலும் வண்ணமும் நறுமணமும் தாங்கிய செடிகொடிகள். அவற்றில் வரிகளையுடைய வண்டுகள் மூழ்கித் தேனுண்டு, ரீங்காரம் செய்தபடி, பைந்தாது எனப்படும் மகரந்தப்பொடிகளை குழப்பிக் கலக்கி எழுப்புகின்றன. இச்சிறுமிகள் ஆடும் விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு அவற்றையும் உற்சாகக்கடலில் மூழ்கச்செய்துவிட்டதோ என்னவோ! அவ்வாறு குழப்பியதனால் எழும் மகரந்தப்பொடியின் அடர்த்தியால் உலகமே இருண்டு போனதுபோலத் தெரிகிறதாம்.

    அளகாபுரி, அமராவதி ஆகிய உலகங்களில் வாழும் வானவர்கள், “தடாதகை திரும்பவும் போருக்குப் புறப்பட்டு விட்டனளோ? அவளது பெரிய சேனையும் உடன்வருவதால்தான் இந்தப்புழுதி மண்டலம் எழும்பியுள்ளது போலும்!” எனத்துணுக்குறுகின்றனராம்.

    ‘மதுராபுரித்தலைவியான நீ இவ்வாறு அழகுற அம்மானையாடியருளுக!’ என்பவர் தடாதகையின் தனித்தன்மையை அடுத்தவரிகளில் கண்முன் நிறுத்துகிறார். ‘அண்ணலாகிய சிவபிரானின் உணர்வில் இணைந்து உள்ளங்கலந்து பின் அவருடலில் ஒரு பாகத்தைத் தனதாக்கிக்கொண்ட பெண்ணரசி இவள். ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ எனக்கூறிப் புளகிக்கிறார். இவள் ஒருத்தியே இந்த அடைமொழிக்கு உரியவள் அல்லவா? இதனாலேயே இறைவனும் மாதொருபாகன் எனும் சிறப்புப்பெயர் பெற்றானன்றோ?

    “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” எனும் கூற்றின்படி, குமரகுருபரர் தாம்கண்ட இவ்வற்புதக்காட்சியை இலக்கியச்சித்திரமாக நாம் பயின்றுமகிழ வடித்துத்தந்துள்ளார்.

    https://soundcloud.com/thiru-arasu-10/ilakkiyam-21

    தமரான நின்துணைச் சேடியரில்ஒருசிலர்
    தடக்கையின் எடுத்தாடுநின்
    தரளவம் மனைபிடித் தெதிர்வீசிவீசியிட
    சாரிவல சாரிதிரியா
    நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய
    நிரைநிரைய வாய்க்ககனமேல்
    நிற்கின்ற தம்மைநீ பெற்ற அகிலாண்டமும்
    நிரைத்துவைத் ததுகடுப்ப
    இமிரா வரிச்சுரும் பார்த்தெழப்பொழிலூ
    டெழுந்தபைந் தாதுலகெலாம்
    இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்
    ஏக்கமள காபுரிக்கும்
    அமரா வதிக்குஞ்செய் மதுராபுரித்தலைவி
    அம்மானை ஆடியருளே
    ஆகங் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்
    அம்மானை ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

    ********

    புலவர் வடிக்கும் இன்னொரு அழகிய நயம்பொருந்திய சித்திரம்! விதவிதமான அம்மானைக்காய்களைக்கொண்டு தடாதகை விளையாடுகின்றாள். அம்மானை விளையாடும்போது உண்டாகும் பலவிதமான மெய்ப்பாடுகள்! அவை தொடர்பான புலவரின் அழகிய உருவகக்கற்பனைகள்! பயில்வோருக்கு இனிய தமிழமுதம்!

    முத்துக்களை அழுத்திவைத்துச் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் அன்னைமீனாட்சியின் தாமரைமலர் போன்ற திருக்கைகளால் பிடிக்கப்பட்டதால் அவ்வம்மானைக்காய்களிலிருந்து அம்மலருக்கே உண்டான இனிய நறுமணம் (முளரிமணம்) கமழ்கின்றது. அம்மானைக்காய்கள் மேலும் கீழுமாக வீசப்படுவதால் விளையாடுவோர் அதனைத் தம்கண்களால் விரைந்து தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும். தடாதகையும் அதனைச் செய்கின்றாள். அவள் விழிகள் மைதீட்டப்பெற்றுக் கருநிறம்கொண்டு இருப்பதால் வண்டுவிழிகளாகக் காணப்படுகின்றன. அவள் கூந்தலில் அணிந்துள்ள இனிய மணம்பொருந்திய மலர்களில் தேனருந்த மொய்க்கும் வண்டினங்கள் கண்களாகிய வண்டுகளைக் கண்டு, அவையும் தம்மினம் எனக்கருதி மயக்கமுறுகின்றனவாம். அவற்றுடன் தாமும்கூடி (முயங்கி) மயங்குகின்றன.

    கொத்தான மாணிக்கக்கூட்டத்தால் செய்யப்பட்டுள்ள மற்றொருவகை அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடுகிறாள். அம்மானையாடும்போது பாடல்களைப்பாடியபடி ஆடுவது சிறுமியர், மகளிர் வழக்கம். இவை விடுகதைகள் வடிவில் இருக்கலாம்1. சிறுமி மீனாட்சியும் தனது குயிலைப்போல் மிழற்றும் இனியகுரலில் குழலிசைபோன்று பாடியவண்ணம் ஆடுகிறாளாம். (என்ன பாடலை அன்னை பாடினாள் எனப்புலவர் கற்பனைசெய்து கூறியிருக்கலாம்- நமக்கு மேலுமொரு அருமையான இலக்கிய விருந்து கிட்டியிருக்கும்!!) அவளுடைய இனிய குரலின் இனிமைக்கு அந்த மாணிக்கங்கள் உருகி, பனிபோன்ற சிறுதிவலைகளைச் சிந்துகின்றனவாம்.

    (இங்கு ஆதிசங்கரர் இயற்றிய ஒரு பாடலை இதனுடன் ஒப்புநோக்கலாம். ‘அழகின் அலைகள்’ எனும் அம்மையின் அழகினைக் கூறும் சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்: ‘வீணையில் இனிய நாதத்தினை எழுப்பி இசைத்தவண்ணம் இருந்த கலைமகள் ‘நன்றாக உள்ளது’ என தேவிகூறத் துவங்கியதும், அவளுடைய குரலினிமையின் முன்பு தன் வீணையின்நாதம் மங்கிவிட்டதனை உணர்ந்து வீணையை உறையிலிடுகிறாள்,’ என்பதே அப்பாடலின் பொருள். இசைக்கும், கலைகள் அனைத்துக்கும் இருப்பிடமும் பிறப்பிடமும் அவளே! அவள் குரலினிமையில் அசையும், அசையாப்பொருட்கள் அனைத்துமே உருகத்தானே வேண்டும்?

    ‘நாதப்ரஹ்மமயீம்’ என்பது மீனாட்சியை வழிபடும் பெயர்களில் ஒன்று. கூறிக்கொண்டே போகலாம்…..)

    பவளத்தால் (வித்துருமம்) செய்யப்பட்ட அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடும்போது அவளுடைய கைவிரல்களின் அழகிய பவளநிறத்தினை அவை திருடிக்கொள்வதற்காக மேலும் கீழும் போய்வருவதாகக் காணப்படுகின்றனவாம்.

    அடுத்துக் கூறுவது அருமையிலும் அருமை! ‘எம்பெருமானின் உள்ளத்தில் உயிரோவியமாகத் தீட்டப்பட்டு விளங்கும் அம்மையே! நீ அம்மானை ஆடுவாயாக!
    அழகு பொங்கிப்பெருகும் கல்யாண சவுந்தரியே! அம்மானை ஆடுக!’ என்கிறார். கல்யாண குணங்கள் எனப்படும் உயர்வான நலங்களின் இருப்பிடமாகத்திகழும் அழகிய வடிவம் கொண்டவள் என்பது பொருள்.

    ‘ஆகம்கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ என்பதும், ‘அத்தன் மனத்தெழுதிய உயிரோவியம்,’ ஆகிய வருணனைகள் அம்மையும் அப்பனும் உலகத்தோருக்கு உணர்த்தும் கருத்தொருமித்த உயர்வான இல்லறத்தின் அழகான காட்சிகளாவன.

    முத்தம் அழுத்திய அம்மனைகைம்மலர்
    முளரிம ணங்கமழ
    மொய்குழல் வண்டுநின் மைவிழிவண்டின்
    முயங்கி மயங்கியிடக்
    கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
    குயிலின்மி ழற்றியநின்
    குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
    குறுந்துளி சிந்தியிட
    வித்துரு மத்தில் இழைத்தவு நின்கை
    விரற்பவ ளத்தளிரின்
    விளைதரும் ஒள்ளொளி திருடப்போவதும்
    மீள்வது மாய்த்திரிய
    அத்தன் மனத்தெழு தியவுயிர்ஓவியம்
    ஆடுக அம்மனையே
    அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
    ஆடுக அம்மனையே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

    **************

    1 அம்மானை எனப்படும் சிறு பெண்கள் அல்லது மகளிர் விளையாட்டு மூவர் அம்மானை என அறியப்படும். விடுகதை போலப்பாடல்களை சமயத்திற்கேற்ப இயற்றிப் பாடியவண்ணம் ஆடுவது பெண்களின் வழக்கம் போலும். இவ்வாறு பாடல்களை அவர்கள் இயற்றி ( ) பாடுவதாகப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரகுருபரனாரே தமது மதுரை, காசிக் கலம்பகங்களில் இவ்வாறு அம்மானைப் பாடல்களை இயற்றியுள்ளார். இது அழகான சிறுமியர் விளையாட்டின் அருமையான பதிவாகும். மதுரைக் கலம்பகத்துப் பாடலைக் காணலாமே!

    மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

    முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள். இது திருவிளையாடல் புராணத்தின் ஒரு கதை.

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’
    (விருது கட்டி- வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

    இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டுத் தனதுஅம்மானையை வீசுகிறாள்.

    ‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்
    அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’
    (உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)
    மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

    ‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’
    (ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)

    முழுப்பாடல் இதோ:

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
    அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை
    ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    இப்பெண்களை சமர்த்திகளாகவும், ஒருவருக்கொருவர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் கற்பிப்பவராகவும் காட்டியுள்ளனர் புலவர் பெருமக்கள். வீணே பொழுதினைப்போக்காமல் புத்திசாலித்தனமாக விளையாடுபவர்களாக உள்ளனரே!

    *************

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    Share
  • “அவன், அது, ஆத்மா” (48)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    A. சேகர்

    அவன் வசந்தா மேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, அவனுடன் சுரேஷ், கல்யாண சுந்தரம், சகஸ்ரநாமன் என்ற சாத்து, ஜெமினி, சேகர், நீலகண்டன் போன்ற அவனுக்கு இளவயது முதல் பழக்கமான நண்பர்களும் இருந்தனர்.

    1982ம் வருடம் மார்ச் மாதம் அவனுக்கு B. com இறுதி ஆண்டின் தேர்வு எழுத வேண்டி இருந்தது (மைசூர் பல்கலைக் கழகத்தின் தொலைவழித் தொடர்புக் கல்வி). அவன் பாட புத்தகத்தை விட கதை புத்தகங்களையோ, கவிதைப் புத்தகங்களையோதான் விரும்பிப் படித்துக் கொண்டிருப்பான். அனேகமாக நண்பர்களுடன் இரவுக் காட்சித் திரைப்படங்களுக்குச் சென்று விடுவான். இல்லையேல் ஏதேனும் இலக்கியக் கூட்டம் என்று சைக்கிளில் ஊர் சுற்றுவான்.

    இராயப்பேட்டையில் உள்ள “ஓடியன்” தியேட்டரில் “ராஜபார்வை” திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இரவில் நண்பர்களுடன் “சைடோஜி மெஸ்”ல் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது,” சுரேஷ்.. நாம இப்ப “ராஜாபார்வை” சினிமாவுக்குப் போகலாம்” என்றான். “கண்ணா…உனக்கு நாளைக்கு “அக்கௌண்டன்சி” (Accountancy) exam இருக்கே..பரீட்சை முடிஞ்சு போலாமே ” என்றான் சேகர். “படம் பார்த்து விட்டு வந்து படிக்கறேன்..நீ எனக்குக் கொஞ்சம் சொல்லிகொடு போதும் ” என்றான் சேகரிடம். “சரி” எனப் புறப்பட்டனர் சினிமாவுக்கு.

    இரவு ஒரு மணிக்கு விடுதிக்கு வந்தவுடன், அவன் முகத்தைக் கழுவிக்கொண்டு “அக்கௌண்டன்சி”க்குத் தயாரானான். அதிகாலை ஆறுமணிவரை அவனுக்குப் பாடம் நடத்தினான் சேகர். அவனுக்கு “அக்கௌண்டன்சி”யில் ஆர்வம் இருந்ததால் சேகர் சொல்லிக் கொடுத்ததை அவனால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. சேகர் அப்பொழுது “Fist leasing company”யில் “Company Secretary” யாக வேலை செய்து வந்தான். நல்ல படிப்பாளி. திறமைசாலியும் கூட. மிகத் தெளிவாகப் பாடங்களைச் சொல்லித் தருவதிலும் கெட்டிக் காரன்.

    இரவில் சேகர் அவனிடம் “அக்கௌண்டன்சி” வினாத்தாளை வாங்கிப் பார்த்தான். அவன் அந்த வினாத்தாளில் பேனாவால் “டிக்” செய்த வினாக்களைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தபடி ,” கண்ணா …நிச்சயம் உனக்கு இதில் 60 மார்க்குக்கு மேல் வரும்” என்றான். என்னுடைய பலம், பலவீனம் தெரிந்து எனக்குக் கற்றுக் கொடுத்தவன் அல்லவா. அந்தப் பரீட்சையில் அவன் 68 மதிப்பெண்கள் வாங்கினான். சேகரிடம் அவனது “மார்க் ஷீட்” வந்ததும் காண்பித்தான். சேகர், “கண்ணா…”எனக்கு ட்ரீட்” என்று அவனைக் கட்டிக் கொண்டான். “நான் வாங்கிய மார்க்குகள் தான் உனக்கு ட்ரீட்” என்று சேகரை ஆறத்தழுவிக் கொண்டான் அவன். அவனைவிட சேகர் சுமார் ஐந்து வயது இளையவன். வித்தையில் அவனைவிட சேகர் மூத்தவன். அதனால் எப்பொழுதுமே அவனுக்கு சேகரிடம் தனி அன்பு இருந்தது.

    “கணபதி சுப்பிரமணியன் என்ற ஜெமினி”

    சேகரைப் போலவே “ஜெமினியும்” அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவன் தான். நல்ல புத்திசாலி. கடுமையான உழைப்பாளி. ஏழ்மை நிலையில் இருந்த போதும் செம்மையாக வாழ்ந்தவன். இன்று நல்ல நிலைமையில் இருக்கின்ற பொழுதும் அதே கனிவும், பணிவும் சேர்ந்த செம்மையுடனும் வாழ்கிறான். கணபதி சுப்பிரமணியன் என்ற அவனது பெயர் எப்படி “ஜெமினி” என்ற செல்லப் பெயரானது என்பது தெரியாது.

    நகைச்சுவை குணமும், இலக்கிய ஆர்வமும் ஜெமினிக்கு அதிகம். கண்ணதாசன் கவிதைகளும், பாரதி கவிதைகளும் மிகவும் பிடிக்கும். ஒரு முறை ,” கண்ணா …வெட்கத்திற்கும், நாணத்திற்கும் என்ன வித்யாசம்” என்று அவனிடம் கேட்டான். அவன் சொல்வதற்கு முன்பே, ” அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம், அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்” என்று கண்ணதாசன் எவ்வளவு அழகா சொல்லிருக்கான் பாத்தியா” (கவிஞர்களை ரசனை மிகுதியால் ஒருமையில் அழைத்தலும் அழகுதான்) என்று அதை அழகாகப் பாடியும் காட்டினான். தில்லானா மோகனாம்பாளில் வரும் நாகேஷ் “வைத்தி” வசனங்களை அப்படியே பேசிக் காட்டுவான். ஒரு சனிக்கிழமை இரவு முழுவதும் திரைப்படப் பாடல்களும், சுவாமி ஐயப்பன் பாடல்களும் பாடிக் கொண்டிருந்து விட்டு, மறுநாள் காலையில் பத்து மணிக்குமேல் எழுந்து குளித்துவிட்டு, எல்லோருமாகச் சேர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஆலங்காத்தா பிள்ளைத்தெருவில் இருக்கும் “மாமி மெஸ்”ல் சாப்பாடு ஒரு பிடி பிடித்தனர். ஜெமினி நன்றாகச் சமையல் செய்வதிலும் கெட்டிக்காரன். பலசமயங்களில் அவன் ஜெமினியுடன் “கைபேசி”யில் தொடர்பு கொண்டு சமையல் குறிப்புகளைக் கேட்டு அதன் படிச் செய்வதுண்டு. ஜெமினியைப் போன்ற நல்ல நண்பர்கள் அவனுக்கு அறுசுவை விருந்தைப் போலவும், அளவான மருந்தைப் போலவும் இப்பொழுதும் இருக்கின்றனர் என்பது ஆண்டவன் அவனுக்கு அளித்த பேறு.

    “K. கல்யாண சுந்தரம்”

    அவன் வாழ்க்கையில் மறக்கக் கூடாத நண்பன் கல்யாணசுந்தரம். அமைதியான குணமும், அன்பும் அவனது சொத்து. ஐயப்ப பக்தன். மனம் உருகிப் பிராத்தனை செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணிசெய்து ஓய்வு பெற்றவன். அந்த விடுதியில் உள்ள அவகளின் அறையின் சுவற்றில் ஒரு சிறிய ஐயப்பன் படத்தை மாட்டி வைத்திருப்பான். நேரம் தவறாமல் காலையில் முதலில் எழுந்து குளித்துவிட்டு சரணம் சொல்லிக் கற்பூரம் காட்டுவான். அறையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். “சுவாமிக்குக் கற்பூரம் காட்டறேன்..கொஞ்சம் எழுந்துருங்கப்பா” என்று எழுப்புவான். எல்லோரும் கற்பூரம் கண்ணில் ஒற்றிக்கொண்டு மீண்டும் போர்வைக்குள் போய்விடுவார்கள். ஒருமுறை ,” கல்யாணம்…சாமிக்கு சட்டுப்புட்டாய நம: ” என்று ஒரே ஒரு அர்ச்சனை பண்ணி கற்பூரம் காமிச்சா என்ன?” என்று ரகு வேடிக்கையாகக் கேட்டது அவன் நினைவில் இருக்கிறது.

    அவனும் கல்யாண சுந்தரமும் தீவிர சிவாஜி ரசிகர்கள். இரவில் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பும் வழியில் ஏதேனும் சிவாஜி படத்தின் போஸ்டரைப் பார்த்ததும்,” அண்ணா..போவோமா” என்று அவன் கேட்ப்பான். “சரி ..பிடி ஆட்டோவ .. விடு சாந்தித் தியேட்டருக்கு” என்று எத்தனையோ முறைகள் சென்றிருக்கின்றனர். ஸ்வாகத் ஹோட்டலில் வேலை செய்து வந்த சாமிநாதன், முத்துசாமி, தாமோதரன் என்று சுமார் பத்து பதினைந்து பேர்கள் சிவாஜி ரசிகர்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு நண்பர்கள்தான். ஒருமுறை “பைலட்” தியேட்டரில் “வசந்தமாளிகை” படம் பார்க்க கல்யாணசுந்தரம், ஸ்வாகத் நண்பர்கள் என்று ஒரு பெருங்கூட்டமாகச் சென்றனர். திரையரங்கத்தில் ஒரு முழு வரிசையுமே அவர்களால் நிரம்பி இருந்தது. அவர்களுடன், அவனும் அமர்ந்திருந்தான். திரையில் சிவாஜியைப் பார்த்தவுடன் “ஸ்வாகத்” நண்பர்கள் எல்லோரும் எழுந்து நின்று, தாங்கள் கொண்டு வந்திருந்த இரண்டு பெரிய கூடை நிறைய இருந்த பூக்களைத் தூவி மகிழ்ந்தார்கள். முன்வரிசையில் உள்ள அத்தனை பேர்களின் தலையிலும் அந்தப் பூக்கள் விழுந்தன. அவனுக்கும், கல்யாணத்திற்கும் உள்ளூர மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் பூப்போட வில்லை.

    “அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன்” என்று சிவாஜி பாட , “கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் உன்னை விடமாட்டேன்” என்று வாணிஸ்ரீ திருப்பி அடிக்க, “உன்னையல்லால் ஒரு பெண்ணை இனிநான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்” என்று சிவாஜி நெகிழ, “உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்” என்று வாணிஸ்ரீ ஒரே போடு போடும் அந்தக் காதல் காட்சியில், கண்ணதாசனின் உயிருள்ள வரிகளில் அவன் அவனை மறந்தேதான் போனான். காதல் என்பது இறைவன் தந்த வரம். அந்த வரத்தைப் பெற்று வாழ்பவர்களும், தோற்றவர்களுமே பாக்கியசாலிகள்தான். அவனும் கல்யாணசுந்தரமும் சேர்ந்தே இந்தப் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது கூட சின்னத்திரையில் சிவாஜியின் “வியட்நாம் வீடு” பார் என்று அவன் சொல்ல, “நீ ஈமெயிலில் அனுப்பிய “அன்புள்ள அப்பா” படத்தைத்தான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கல்யாணம் சொன்னான்.

    நண்பர்களோடு சேர்ந்து இப்படிப் படங்கள் பார்த்தாலும், அவன் தனியாகவே, ஒவ்வொரு காட்சியாக ரசிப்பதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்த்த படங்களும் உண்டு. “சிலநேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “யாருக்காக அழுதான்”, “அவள் அப்படித்தான்”, “தண்ணீர் தண்ணீர்”, “அச்சமில்லை அச்சமில்லை”, “உதிரிப்பூக்கள்” , “முதல் மரியாதை” போன்ற படங்கள் அந்த ரகம். சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தின் திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு அதற்காகவே அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தான். ஜெயகாந்தன் எழுதிய “கண்டதைச் சொல்லுகிறேன்” என்ற பாடலும், “வேறு இடம் தேடித் போவாளோ” என்ற பாடலும் இன்றும் அவன் முணுமுணுக்கும் பாடல்கள்தான்.

    கந்தர்வகானமணி வீரமணி – கவிஞர் சோமு

    73e3c097-4bc5-4b2a-b8cf-0ef947bfd721

    கல்யாணசுந்தரமும் அவனும் ஒருநாள் இரவில் சாப்பிடப் போய்க்கொண்டிருக்கும் பொழுது கவிஞர் “சோமு” அண்ணா அவர்களை அவர்களது வீட்டு வாசலில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். கல்யாணசுந்தரம் ஐயப்பன் பக்தனானதால் சோமு அண்ணா மீது மிகுந்த மரியாதை உண்டு. சோமு அண்ணாவுக்கும் கல்யாணதின் பேரில் அதுபோன்ற அன்பு உண்டு. தனது சகோதரர் கந்தர்வ கானமணி வீரமணிக்காக “கவிஞர் சோமு” எழுதிய மணிமணியான பக்திப் பாடல்கள் ஏராளம். அதில் முக்கியமாக “பள்ளிக் கட்டு சபரி மலைக்கு”, “எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது” போன்ற பாடல்கள் இன்றும் பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. “பள்ளிக்கட்டு” பாடலை வீரமணி அண்ணா பாடிக் கேட்கப் புல்லரிக்கும். கண்ணதாசன் எழுதி வீரமணி பாடிய “கோதையின் திருப்பாவை” அவன் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல்களில் ஒன்று. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் இருந்த அவர்களது இல்லத்தில் “பாடல்” பயிற்சி நடக்கும் சமயத்தில் ஓரிரு முறை சோமு அண்ணா அழைப்பின் பேரில் அவன் சென்று பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் சோமு அண்ணா அவனை, தனது சகோதரர் “வீரமணி”க்கு அறிமுகம் செய்து வைத்தார். அவனுக்கு அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. அவர்களது இன்னொரு சகோதரர் கானமூர்த்தி. அவரும் கச்சேரிகளில் தன் சகோதரருடன் சேர்ந்து பாடுவார். பாசமுள்ள ஒரு இசைக் குடும்பம். சோமு அண்ணா மிகவும் எளிமையான மனிதர். அவனது அறைக்கு சோமு அண்ணா வருவார். அவனது கவிதைகளைப் படித்து மகிழ்ந்து பாராட்டுவார். கல்யாணசுந்தரம் அவரைப் பாடும் படிக் கேட்பான். உடனே பாடி மகிழ்விப்பார். “ராஜு”வையும் தன்னுடன் அவர்களது அறைக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த ராஜுவும் அவர்களுக்கு நண்பன்தான். இப்பொழுது “வீரமணி ராஜு” வாக ஜொலிக்கும் ராஜு சோமு அண்ணாவின் மகன்.

    அவன் தன்னுடைய திருமணத்திற்கு அழைத்த பொழுது, ” உனது திருமண வரவேற்புக்கு வருகிறேன்” என்று சொன்ன வீரமணி அவர்கள் சொன்னபடியே 23.06.1985 அன்று ஸ்வாகத் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பில் தம்பதியராக வந்து கலந்து கொண்டு அவனை வாழ்த்தினார்.

    01.07.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • எழுவகைப் பெண்கள்: 5

     உடம்பெனும் தராசில் இது ஒரு அக்கினிப் பரிட்சை

    அவ்வை மகள்

    “நீங்களே சொல்லுங்கள் இந்தக் காவலர் வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” என்று எதிர் கேள்வி கேட்ட அந்தப் பெண் காவல் அதிகாரியைப் பார்த்து, நான் சொன்னேன்: “வேறு மாதிரியல்லவா கேள்விப் பட்டிருக்கிறோம் – “காவல் துறையில் ஆணாதிக்கம் – பாலியல் பலாத்காரம் – பெண்ணுக்கு அங்கீகாரம் இல்லை –” நான் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டார்.

    “இவையெல்லாம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இல்லாத இடம் ஒன்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்! நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொவொரு பெண்ணும் ஒவ்வொவொரு பணியிடத்திலும் சந்திக்கும் பிரச்சனை அல்லவா அது? சில இடங்களிலே அது அதிகமாய் இருக்கும் – சில இடங்களிலே அது குறைவாய் இருக்கும். பார்க்கப்போனால் சில பணிகள் பெண்ணாதிக்கத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள ஆண்களும் சில கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடலாமே! அங்கே பாலியல் பலாத்காரம் இல்லாமல் இருக்கும் – உண்மை. ஆனாலும் ஒரு சில தகவமைப்புச் அசவுகரியங்கள் ஆணுக்கு அங்கே ஏற்படுவது இயல்பேதான் அல்லவா?”

    தொடர்கிறார்-

    “ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் – இந்நாட்டில் – பாலியல் பலாத்காரம் என்பது மிகப்பபெறிய குற்றம் – அது கடுமையான தண்டனைக்குரியது – அதனைச் செய்ப்பவர் வாழ் நாள் பரியந்தம் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். அது சரியாக எடுத்துச் சொல்லப்படும்போது கண்டிப்பாக அது மேலே செல்கிறது; இங்கே பணியிடப் பாலியல் பலாத்காரத்துக்காக பல பேர் தன்டைனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதை மற்றப் பணியிட அசவுகரியங்களோடு இங்கு இணைக்காதீர்கள் – அது தனியான விஷயம்! அதைத் தனியே விரிவாகப் பேசவேண்டும்! எல்லாப் பணிகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது வெவ்வேறு வடிவங்களில்!”

    “ஆனால் காவல் துறைப்பணியில் முரண்படுவது பெண்ணின் உடம்பும் உள்ளமும் – இப்பணிக்குப் பொருந்தாத இரண்டையும் வைத்துக்கொண்டு அல்லாடுவது அத்தனை சுலபமான செயல் அல்ல. ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பணி பொருந்தலாம். ஆனால் எல்லோரையும் அதில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதும் அதிலே அவர்களை ஆசை காட்டி வலுக்கட்டாயமாக இறங்கச் சொல்வதும் மிகப்பெரிய குற்றம் என்பேன்.” என்றார்.

    “பெண்கள் எல்லாத்துறையிலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா நாடுகளிலும் இருக்கிறதே – ஆண்-பெண் சம உரிமை இன்று மிகவும் வலுவான விஷயம் இல்லையா!” என்றேன்.

    “சமத்துவம்? தீயணைப்புப் பணியில் – உச்சிமேல் நின்று கட்டிடம் கட்டும் கட்டிடப் பணியில், சுரங்கப் பணியில், கடலில் எண்ணைக்கிணற்றைத் தோண்டுவதில் – எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள் என்று போய் முதலில் பார்த்து விட்டு வந்து பேசுங்கள்!” ஆண்-பெண் சமம் என்பது எங்கே இருக்கிறது என்று “ உடலில் சமத்துவம் இல்லாதபோது – இது என்ன பேச்சு?” என்றார்.

    கடினமான பணியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அடுத்த தலைமுறையை ஊக்குவித்து இப்பணிக்கு சிபாரிசு செய்தால் அடுத்த தலைமுறை இப்பணியை சிறப்புற வளர்க்கும் – அதை நீங்கள் செய்யலாமே!” என்றேன்.

    பளீரென வாய் விட்டுச் சிரித்தார்!

    “ஒரு பெற்றோர் என்ற முறையில் என் மகளை இவ்வேலைக்குச் செல்ல நான் எந்நாளும் அனுமதிக்க மாட்டேன்.” “பெண் என்றால் அவளுக்கு சமாதானமும் இசைவும் முக்கியம். என் மகள் இவ்வேலைக்கு வந்தால் அவள் இவ்விரண்டையும் நிச்சயமாய் இழப்பாள்!” ஏற்கனவே இப்பணியில் இருப்பதால் அவளை நான் சரிவர கவனிப்பது கூட இல்லை!” “அது மட்டுமல்ல பெண்ணென்றால் பதவி உயர்வுக்கு இங்கே காவல் துறையில் படாத பாடு படவேண்டும்! – “is it that worth for a female?” பெண்ணுக்குப் பணியில் அததனைப் போராட்டம் தகுமா?” என்றவர் தொடர்கிறார்.

    “அடுத்த தலைமுறை பெண்களுக்குப் போகாத பணியாகக் காவல் பணி மாறிவருகிறது என்றால் இது பெண்களுக்கு ஏற்ற வேலை இல்லை என்று என்னால் ஆணித்தரமாய்க் கூறமுடியும்!”

    “என்னைப் பொருத்தவரையில் பெண் எந்த பணியைச் செய்தாலும் அதில் அப்பெண்ணுக்கு உடம்பின் ஒப்புதல் இருக்க வேண்டும். இவ்வேலையை இவளால் செய்யமுடியுமா – இவளுக்கு இந்த வேலையால் பாதிப்பு நிகழுமா என்பதை நாம் முதலில் அனுமானித்தாக வேண்டும். மற்றவை எல்லாம் அப்புறமே!”

    “நீங்கள் என்னதான் முயற்சி பண்ணினாலும் ஒரு ஆணைப்போல் இங்கு நீங்கள் பிரகாசிக்க முடியாது – இது அவன் பணி – அவள் பணி அல்ல!” போய்ப் பாருங்கள் பென்னி ஹாரிங்டனின் கதையை!” – “கேட்டுக் கொள்ளுங்கள்! மொத்தத்தில், இந்த 110 ஆண்டுகளில் ஏதோ ஓர் சில பேர் இங்கே வெற்றி பெற்றிருக்க முடியும். அது பெண்ணினமே வெற்றி பெற்று விட்டதாகக் கொள்ளும் பெருமிதம் அல்ல!”

    பேசினார் – முடித்தார் – “எனக்கு வேலை இருக்கிறது – நான் செல்ல வேண்டும்” என்று புறப்பட்டார். நான் சற்று நேரம் அசையாது அங்கேயே நின்றேன். அவள் பேசிய ஒவ்வொன்றும் மாணிக்க வார்த்தைகள்! அனுபவத்தின் வாக்குமூலம்! 110 ஆண்டுகள் இந்த நாடு செய்த பரிசோதனையின் முத்தாய்ப்பான கண்டுபிடிப்பு இது. பெண்ணைப் பற்றி பெண்னே பேசின சுய போதனை.

    நினைத்துப் பார்த்தேன் பாரதியை – பாரதியை எடுத்துக்காட்டி எடுத்துக் காட்டி – விளாசிப் பேசும் நம்மவர் துறு துறுப்பை.

    அமெரிக்கக் காவல் துறையில் பெண்கள் வளர்ந்து வந்த கடுமையான பாதையைத் திரும்பிப்பார்த்தேன். அமெரிக்காவின் முதல் பெண் காவல் துறைத் தலைமையான பென்னி ஹாரிங்டன் அசாதாரணப் பெண். உலகத்தில் காவல் பெண்கள் எனும் வரலாற்றில் பென்னி ஹாரிங்டனுக்கு என்றும் நிலைத்த சிரஞ்சிவியான இடம் உண்டு. ஆனால் தலைமையில் அமர்ந்த இரண்டே ஆண்டுகளில் பதவி விலகினார் – இல்லை! நிர்ப்பந்தத்தின் பேரில் பதவி விலக வைக்கப்பட்டார் என்றே சரித்திரம் காட்டுகிறது.. மீண்டும் அவர் காவல் துறையினில் நுழையவே இல்லை – நுழையவும் முடிய வில்லை. காவல்துறையின் வெளிப்புற உபரிப்பணிகளில் தான் அவரால் வேலை பார்க்க முடிந்தது.

    காவல் துறையில் மற்றும் தீயணைப்புத் துறையில் பெண்களுக்குள்ள பிர்ச்சனைகளை, .குறிப்பாக, பாலியல் பிரச்சினைகளை இவர் ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாது அவற்றை அணுகும் – நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் போதித்தவராகிறார். பெண் காவலர்களைப் பணியமர்த்தவும் அவர்களை காவல் பணியில் தக்க வைக்கவும் அவர் வழிமுறைகளை நிறுவி இருக்கிறார்.

    மிகப் பிரசித்தி பெற்ற மூன்று நூல்களை எழுதி இருக்கிறார். பெண்ணியக் குழுமங்களோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்து பெண்களுக்காக மிகப்பெரிய அளவில் கூக்குரல் எழுப்பி இருக்கிறார். காவல் துறைப்பெண்களுக்கான தேசிய வாரியம் நிறுவி இருக்கிறார். இவரது மூசசும் நாடியும் காவல்துறையில் பெண்களின் முன்னேற்றம்” என்கிற ஒன்றையே தான் ஒலித்தவண்ணம் இருந்தன. இரண்டே ஆண்டுகள் தாம் அவர் காவல் தலைமையில் இருந்தாலும், காவல் துறையில் அவர் செய்த மறுமலர்ச்சிகள் முத்தாய்ப்பானவை. எந்த ஒரு ஆண் தலைமையும் சிந்தித்துப் பார்க்கவியலாத புதுமுனைப்பான திருத்தங்களைக் காவல் பணியின் நடைமுறையில் கொண்டு வந்தார். சொந்த கணவனே ஆனாலும் (அதுவும் அவனும் ஒரு காவலரே என்ற போதிலும் ) சட்டத்தின் முன் அவனும் ஒன்றே என பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டவர். அவனைப் பதவியிலிருந்து விலக்கியும் இருக்கிறார்.

    கறுப்பினத்தவர் மீதும், ஏழை எளியோர் மீதும். பெண்கள் – குழந்தைகள் மீதும் காவலர்கள் காட்டும் வன்முறையைச் சாடி அதனைத்தடுத்தார். வெள்ளை இனப் பெண்ணுக்கு எத்தனை நெருக்கடிகள் – இன – சமூக அழுத்தங்கள் – அந்தஸ்து இத்யாதிகள் இருக்கும் என்பதை இங்கிருப்பவர்க்ள நேரடியாக உணரமுடியும். ஆனால் வெள்ளை இனமாய் இருந்த போதும், வெள்ளை இனத்துக்கு சார்பு தராத துணிச்சல் பென்னி ஹாரிங்டனிடம் இருந்தது. அநியாயமான முறையில் ஒரு கறுப்பினக் காவல் அதிகாரி வெள்ளையினக் காவலரால் கழுத்து நெரித்து மூச்சடைக்க வைத்து கொல்லப்படுகிறார். அந்த சம்பவத்தில் அந்த வெள்ளை அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்கிறார் பென்னி. ஆனால் கொல்லப்பட்ட கறுப்பின அதிகாரியின் அடக்க நாளன்று வெள்ளை காவலர்கள் “அவனை நெரிக்காதே! எரித்து விடு!” என்ற வாசகம் பதித்த “டி ஷர்ட்” அணிந்து கொண்டாடுகிறார்கள். இந்தக் கொடுமையான செயலுக்கு காரணமாயிருந்த அந்த இரு கொலை கார வெள்ளை அதிகாரிகளையும் சுட உத்தரவிடுகிறாள் பென்னி. ஆனால் வெள்ளை வலையின் சூழ்ச்சியும் வலிமையும் அவளது பணிக்கு யமனாக அமைகின்றன. பதவி நீக்கம் செய்யப்பட்ட அவளது கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு வெள்ளை சூழ்ச்சி வலுக்கிறது.

    தனது 22 வயதில் (1964ல்) காவல் பணியில் காவலராகப் பணியில் சேர்ந்தவர் பென்னி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் தலைமைக்கு அமர்த்தப் படுகிறார். எனவே காவல் பணியில் பழுத்த அனுபவம் கொண்ட நிலையில் மட்டுமே காவல் தலைமைக்கு பென்னி வந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

    சூழ்ச்சியின் விளைவு நிகழ்ந்தது பணி நீக்கம் மட்டுமல்ல – கணவனையும் கையயோடு விவாகரத்து செய்த்துவிட்டு தான் வெளியேறுகிறார் காவல் துறையை விட்டு. கலிபோர்னியாவின் மாரோ பே நகரில் குடியேறி அங்கு வாசம் செய்து வருகிறார். இன்று அவருக்கு 74 வயது. கடை வைத்து வியாபாரம் பண்ணுகிறார். படிக ஜெபமாலைகள் விற்கிறார் – தியானம் மற்றும் ரெய்கி கற்பிக்கிறார். தெய்வீக – தியான விஷயங்களும் வாடிக்கையாளர்களுடன் சம்பாஷிப்பதுமாக, அவரது வாழ்வின் கடைசி கட்டம் போய்க்கொண்டு இருக்கிறது.

    இவரது கடைக்கு வருபவர்கள் கேட்கும் காவல் துறைப் பணி தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் சொல்கிறார். காவல் துறையில், காவல் பணியில் தனக்கு ஏற்பட்ட ரணங்களை ஆற்றுமுகமாக ஜெபத்தையும், தியானத்தையும், ரெய்கியையும் தான் அப்போதே மேற்கொண்டிருந்ததாகக் கூறுகிறர். பணியிடப் பிரச்சனைகள் பெண்களை மிகவும் பாதிக்கும் அதுவும் உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஒத்துவராத பணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல எனபதை இத்தனைப் போராட்டத்த்திற்குப் பிறகு, தான் மனபூர்வமாய் உணருவதாகக் கூறுகிறார். “பெண்ணென்றால் அமைதி வேண்டும் அவளுக்கு. அவளுடைய உடற் கூறு – அவளுடைய உள்ளக் கூறு இவை இரண்டும் ஆணிலிருந்து வித்தியாசமானவை – அந்தத் தெளிவை நான் பட்டு நொந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று பெண்களின் உன்னதமும் மென்மையும் எத்தனை அற்புதமானவை என்பதை என்னைப்போல் ரசிக்க எத்தனைப் பேரால் முடியும்?” என்கிறார்.

    உடம்பெனும் தராசில் நடக்கும் அக்கினிப் பரிட்சையில் பெண்ணின் உள்ளமும் வேகும் என்று ஹாரிங்டன் சொலவதை எவரே மறுப்பார்?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 202 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வாரம் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் நிறைந்த வாரமாக இடம்பெறப் போகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னால் அடுக்கடுக்காய் வரும் சிறு அதிர்வுகளும் அவ்வதிர்வுகளினால் ஏற்படும் விளைவுகளும் சகஜம் என்பது போல ஜாரோப்பிய ஒன்றியத்தின் உள்ளேயா ? வெளியேயா ? என்பதற்காக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் அரசியல் அதிர்வின் விளைவுகள் இன்னும் விளைந்து கொண்டே இருக்கின்றன.

    23853e20-b8a6-44db-9470-c068ca104c65கடந்த வியாழக்கிழமை 23ம்திகதி நடைபெற்ற இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா ? இல்லை தொடர்ந்து அங்கம் வகிப்பதா எனும் கேள்விக்கு இங்கிலாந்து மக்கள் 52% வெளியேற வேண்டும் என்றும் 48% அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதைற்கமைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பதை அரசாங்கம் மக்கள் ஆணையாக ஏற்று அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    இம்முடிவு ஒரு அரசியல் அதிர்வாகவே அமைந்து விட்டது. இங்கிலாந்து அரசாங்கமும், பிரதமரும், எதிர்க்கட்சியும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை எனது கடந்தவார மடலில் தெரிவித்திருந்தேன். ஆனால் மக்களின் முடிவு அவர்கள் எதிர்பார்த்ததைப் போலல்லாது முக்கியமான அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணானதாக அமைந்து விட்டது.

    தேர்தல் முடிவு வெளியான வெள்ளியன்று காலை பிரதமர் தனது உத்தியோக வாசஸ்தலத்திற்கு வெளியே பத்திரிகைகளுடனான ஒரு சந்திப்பை நடத்தி தான் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற தனது வேன்டுகோளை நிராகரித்த மக்களின் ஆணையை நிறைவேற்றும் தகமையைத் தான் இழந்து விட்டதாகக் கூறிய அவர் , இங்கிலாந்தை ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை புதிய பிரதமரும், புதிய அமைச்சரவையுமே கொன்டு செல்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றார் பிரதமர்.

    ஆயினும் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படும் வரை தான் மூன்றுமாத காலத்திற்கு தொடர்ந்து நாட்டின் தலைமையை முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அரச அதிகாரத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தமக்கான புதிய தலைவரின் மூலம் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு செப்டெம்பர் 9ம் திகதி புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

    சரி இனி இந்த முடிவு கிளப்பிய அடுத்த அதிர்வலையைப் பார்ப்போம். எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தலைவலி. ஜேர்மி கோர்பன் பலகாலமாகவே லேபர் கட்சியின் இடதுசார முன்றலில் நின்றவர், நிற்பவர் அவர் எப்போது ஜரோப்பிய ஒன்றியத்திற்கு முரணான கருத்தையே கொண்டிருந்தார் ஆனால் காலத்தின் கோலத்தால் லேபர் கட்சியின் தலைவராக்கப்பட்டார். லேபர் கட்சியின் பெரும்பான்மையினர் ஜரோப்பிய ஒன்றியத்திற்ல்கு சார்பான கொள்கை கொண்டிருந்ததால் அக்கட்சியின் கொள்கையாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் காரணமாக லேபர் கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் முழுமனதுடன் ஈடுபடவில்லை அதனால் லேபர் கட்சியை ஆதரிப்பவர்கள் மத்தியில் லேபர் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி தெளிவான நிலை இருக்கவில்லை. விளைவு லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட இடங்களிலேயே ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான வாக்களிப்பே நிகழ்ந்தது.

    தமது கட்சியின் தலைவர் கட்சியை வழிநடத்தும் தகமை அற்றவர். இவரின் தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் தமது கட்சி மூழ்கிப் போவது நிச்சயம் எனும் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் வந்தனர். ஒவ்வொருவராக ஏறக்குறைய 75% வீதமான நிழல் அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்தது மட்டுமன்றி தமது தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்திர்கு ஆதரவாக 172 உறுப்பினர்களும் எதிராக 40 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஜெர்மி கோர்பன் அவர்கள் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் அவரோ தன்னைத் தேர்ந்தெடுத்த சாதாரண உறுப்பினர்களின் நம்பிக்கையை தான் சிதறடிக்கப் போவதில்லை என்றும் தன்னைப் பதவியிலிருந்து இறக்க வேண்டுமானால் ஜனநாயக வழியில் தன்னை எதிர்த்து தலைமைப் பதவிக்கு போட்டியிடலம் என்றும் கூறியுள்ளார்.

    சரி அடுத்த அதிர்வலைக்கு வருவோம். ஜக்கிய இராச்சியமானது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாகும். நடந்த இந்த ஜரோப்பிய ஒன்ரியத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து நாட்டு மக்கள் 56% மானோர் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று வாக்களித்துள்ளனர். இதன் பிரகாரம் ஸ்கொட்லாந்து நாட்டின் சட்டசபையின் முதலமைச்சர் தமது நாட்டை தமது மக்களின் ஆணைக்குப் புறம்பாக ஜக்கிய இராச்சியத்தோடு இணைத்து வெளியே எடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனும் வாதத்தை முன்வைக்கிறார் . ஜக்கிய இராச்சியம் தமது விருப்பத்திற்கு எதிராக நடக்க முற்பட்டால் தாம் தமது நாடு ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்லும் மக்களின் அபிலாஷயை அறிந்து கொள்ள இரண்டாவது ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

    அதேபோல் வட அயர்லாந்தும் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க விரும்புவதாக வாக்களித்துள்ளார்கள். அவர்களும் இதன் மூலம் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் ஜக்கிய இராச்சியத்தின் முடிவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

    அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் தீர்வு பற்பல பிரச்சனைகளைக் கிளறி விட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன் பிரஸ்ஸல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்து இங்கிலாந்தின் முடிவைப் பற்றிய விளக்கத்தை மற்றைய ஜரோப்பிய தலைவர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார். அவர்களோ ஜரோப்பிய ஒன்றியத்தின் சாசனத்தில் 50 வது ஷரத்தான விலகுதல் எனும் ஷரத்தை முடுக்கி விட்டால் ஒழிய எதுவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் நாம் இடமளிக்கவே மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்..

    சரி இனி பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக மக்கள் வாக்களித்தது ஏன் ? முதலாவதாக மக்கள் இதுவரை நடந்த அரசியலை தூக்கி எறியும் வண்ணம் நடந்துள்ளார்கள் எனும் கருத்து நிலவுகிறது . அத்தோடு இங்கிலாந்துக்குள் நுழையும் அந்நியதேசத்தவரின் எண்ணிக்கையின் அளவு எதிர்பார்த்த அளவில் கட்டுப்படுத்தாது ஒரு காரணம். இக்காரணமே கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

    மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவெனில் இங்கிலாந்தின் பல்லினக் கலாச்சார மக்கள் வாழும் நகரமாகிய பேர்மிங்காம் நகர் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையேயாகும். பேர்மிங்காம் நகரம் நிச்சயமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ந்த அங்கத்துவத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றே அரசியல் அவதானிகளின் கருத்து அமைந்திருந்தது.

    ஆனால் இந்த “வெளிநாட்டுக்காரரின் இங்கிலாந்து வருகை என்பதை முன்னிலைப்படுத்தி பல முன்னனி அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்தமையால் இங்கிலாந்து மக்களின் மனங்களில் என்றுமில்லாதவாறு நிறவெறி, இனவெறி என்பன தலைதூக்கப்பட்டு விட்டதோ எனும் அச்சம் பலர் மனதில் ஊசலாடுகிறது.

    இனவெறி, நிறவெறி தொடர்பான குற்றச்செயல்கள் கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குப் பின்னர் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் சுனாமி அலை கொடுத்த அரசியல் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று காலை அனைவராலும் அடுத்த பிரதமராவார் என்று எதிர் பார்த்திருந்த முன்னாள் லண்டன் மேயர் பொரிஸ் ஜான்சன் தான் டேவிட் கமரன் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்தது அனைவரின் மத்தியிலும் மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சரி போனவாரம் நான் எவ்வாறு வாக்களித்தேன் என்று இந்தவாரம் சொல்கிறேன் என்று சொன்னதன் பிரகாரம் நான்,

    “ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும்” என்றே வாக்களித்திருந்தேன். ஆனால் முடிவு எதிராக இருக்கிறது . எது எப்படி இருப்பினும் வருவதை எதிர்கொள்வதுதானே யதார்த்தம். காலம் தனது கைக்குள் என்ன வைத்திருக்கிறது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

    கே.எஸ்.சுதாகர்

    எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப – ஓவிய – கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

    பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையில் இருந்த அவளின் கண்கள் இமை மூடி இருந்தன. மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருந்தாள் அந்தப் பெண்.

    வயது இருபதுக்கு மேல் இருக்கலாம் என மதிப்பீடு செய்து கொண்டார். அம்மன் கோவில் விக்கிரகம் மாதிரி அழகாக இருந்தாள். கிழவர் அந்தப் பெண்ணை, தனது பேரனுக்குப்  பொருத்தம் பார்த்துக் கொண்டார்.

    – எப்ப திருமணப் பேச்சு எடுத்தாலுமே தட்டிக் கழிக்கின்றானே!

    ஒருவேளை மனதில் யாரையாவது விரும்பி வைத்திருக்கின்றானோ?

    கிழவரின் மகள், பேரனுக்கு திருமணம் பேசி, போராடி இழைத்து விட்டாள். அவன் திருமணமே வேண்டாம் என்கின்றான்.

    தீர்த்தக்  கிணறுவரை  சென்ற  கிழவர், இன்னுமொரு  முறை   நின்று, திரும்பி   நிதானமாக  அந்தப் பெண்ணைப் பார்த்தார். கிழவர் முடிவு செய்து கொண்டார். பக்தி சிரத்தையுடைய பெண் வீட்டிற்கு வந்தால் வீடும் மங்களகரமாக இருக்கும்.

    காலம் கனிந்தது. கிழவர் ஒருநாள் அந்தப் பெண்ணிடம் மெதுவாக பேச்சைத் தொடக்கினார்.

    – பிள்ளை என்ன செய்கின்றீர்?

    – தாத்தா…! நான் யூனிவர்சிட்டி சோதினை எடுத்திட்டு இருக்கிறன்… இனி மறுமொழி வரும்வரையும் லீவு.

    கணீரென்ற அவளின் குரலில் மெய் மறந்தார் கிழவர்.

    – பிள்ளை… என்று இழுத்தார் கிழவர். அவர் ஏதோ கேட்க நினைக்கின்றார் என்பதை உணர்ந்த அவள்

    – என்னுடைய பெயர் ஸ்ரீநிதி .  அப்பா  ஸ்கூல் பிரின்சிபலா வேலை பார்க்கிறார் என்றாள்.

    – ஆகா நல்ல இடம். நல்ல இடம் என்று புளகாங்கிதம் அடைந்தார் கிழவர்.

    ஐயர் மணியைக் கிலுக்கி மந்திரங்கள் சொன்னார். ஸ்ரீநிதி கண்களைத் திறந்து தரிசனம் பெற்றுக் கொண்டாள். மனதிற்குள் ஏதோ வேண்டிக் கொண்டாள். வரிசையில் நின்று திருநீறு, பிரசாதம் பெற்றுக் கொண்டாள்.

    ஒருநாள் கிழவர் மயக்கத்தில் கோவில் வாசலில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி கோவிலுக்குள் கிடத்தினார்கள். மயக்கம் தீரும் வரைக்கும் பனை ஓலை விசிறியால் காற்று வீசினாள் ஸ்ரீநிதி.

    – தாத்தா வெறுங்காலோடை நடக்காதீங்கோ…!   கல்லு முள்ளு எல்லாம் குத்திப்போடும்.

    – தாத்தா காலிற்கு செருப்பு போடுங்களேன்! என்று ஒரு சோடி செருப்பு வாங்கிக் கொடுத்தாள் ஸ்ரீநிதி.

    ஒரே சந்தோஸத்தில் போய் சாய்வணைக் கதிரையில் பொன்னுக் கிழவர் சரிந்தார். சரிந்தவர் சரிந்தவர்தான்.

    அப்புறம் எழும்பி நடக்க முடியாமல் முடங்கிப் போய்விட்டார். பாரிசவாதம் என்றார்கள் வைத்தியர்கள். கதைப்பதற்குக் கூட கஷ்டப்பட்டார். அதன்பின் கோவிலுக்குப் போகும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. உள்ளத்தை கோவிலாக்கி மனவெளியில் பூஜை செய்தார்.

    காலம் கடந்தது.

    ஒருநாள் இரவு தகப்பனிற்கும் மகனிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிழவர் ஒருகரையில் இருந்து எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார்.

    – நீ திருமணம் செய்யாவிட்டால், உன் தங்கைகளை யோசித்துப் பார்..?

    – நீ யாரையோ விரும்பியிருக்கிறாய்… அதுதான்…  உள்ளுக்கொண்டு வைச்சுக்கொண்டு வெளியிலை ஒண்டு கதைக்கிறாய்! அப்பா கத்தினார்.

    கடைசியில் மகன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். கிழவர் விடிந்தபின் தன் எண்ணத்தைச் சொல்ல எண்ணியிருந்தார். ஸ்ரீநிதி மாத்திரம் இந்த வீட்டிற்கு வந்துவிட்டால் குடும்பத்தைக் கோவிலாக்கி விடுவாள்.

    காலையில் பேரன் அன்றைய தினசரியை கிழவருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனான்.

    – தம்பி ஒரு கதை… இல்லை இல்லை… நான் அம்மாவிடமே கதைக்கிறேனே! கிழவர் சொல்லி விட்டு நாளேட்டைப் புரட்டினார்.

    -கந்தசுவாமி கோவிலுக்கு அனுபவம் மிக்க ஒரு சிற்பி உடனடியாகத் தேவைப்படுகின்றார். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.

    திடீரென அந்த விளம்பரம் கிழவரின் கண்ணில் பட்டது. அது பூதாகாரமாகி எழுந்து கிழவரை விழுங்குவது போல் இருந்தது.

    – கோவிலில் இருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? அருமையான மனிதர்! ஏதாகிலும் சுகமில்லாமல் இருக்கலாம்.

    கிழவரின் மனம் அதை அறியும் ஆவலில் உந்தியது.

    – பிள்ளை மலர்… பத்திரிகை பார்த்தியா? கோயிலுக்கு சிற்பி தேவையாம் எண்டு போட்டிருக்கினம். என்னண்டு விளங்கேல்லை. நானும் கனநாளா கோயிலுக்குப் போகேல்லை. ஒருக்கால் தம்பி சைக்கிளிலை வருவனெண்டால் போயிட்டு வரலாம்.

    எல்லாவற்றையும் விட, பேரனுடன் சைக்கிளில் போகும்போது  மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடலாம் என்பது அவர் எண்ணம். பத்து மணியளவில் போனால் பேரனுக்கு ஸ்ரீநிதியையும் காட்டி விடலாம்.

    கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் வாசலில் பொன்னுக்கிழவரை சைக்கிளிலிருந்தும் இறக்கி விட்டான் பேரன். சங்கு, மணி ஒலிகள் முழங்க பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மந்திர உச்சாடனங்கள், தேவார பாராயணங்கள் அந்த ஒலிகளுடன் கலக்கின்றன. கிழவரின் மனம் அமைதியடையாமல் இருந்தது.

    அருகே இருந்த ஒருவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.

    -நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

    அவர் கிழவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடரலானார். பின்னாலே திரும்பிப் பார்க்கின்றார். ஸ்ரீநிதி வந்திருந்தால் அவளிடமாவது கேட்டுப் பார்க்கலாம். கிழவரின் கண்கள் அகல விரிந்தன. அங்கே அந்தப்பெண்ணைக் காணக் கிடைக்கவில்லை.

    பரீட்சை முடிவுகள் வந்து, பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கலாம் என கிழவர் முடிவு செய்தார்.

    பூஜை முடிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாராயணம் தொடங்கி விடும். பொல்லை ஊன்றிக் கொண்டு சிற்ப வேலை செய்து கொண்டிருந்த வயது முதிர்ந்த சிற்பி ஒருவரிடம் சென்றார் கிழவர்.

    – வணக்கம். முன்பு இங்கே சிலை வடித்துக் கொண்டிருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? சிற்பி தேவை எண்டு பேப்பரிலை விளம்பரம் வந்திருந்தது!

    புதியவர் இருக்கையை விட்டு எழுந்து, வாயிற்குள் குதப்பிக் கொண்டிருந்த பாக்குச்சீவலை வேலிக்கரையோரமாகச் சென்று துப்பி விட்டு வந்தார்.

    -ஐயா பெரியவரே! மூன்று வாரங்களுக்கு முன்னர் பலமான புயல்காற்று வீசியது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

    -ஆம்… தெரியும் என்றார் கதை கேட்கும் ஆவலில் கிழவர்.

    -அந்தப் புயல் காற்றில் செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விழுந்து உடைந்துவிட்டன. அதைக் காப்பாற்றுவதற்காகக் போன சிற்பி, சிற்பங்களுக்கிடையே விழுந்து சிக்குப்பட்டுப் போனார். அவரின் கூக்குரல் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் போன ஸ்ரீநிதி என்ற பிள்ளைக்கும் காயங்கள். இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்தார்கள். நல்ல வேளை ஆபத்து ஒன்றும் இல்லை

    சொல்லிக் கொண்டே போனார் அவர். தலைமேல் கையை வைத்த பொன்னுக்கிழவர் பொல்லு இடறுப்பட கற்குவியல்கள் மீது சரிந்தார்.

    கிழவரைத் தூக்கி கோவில் விறாந்தயில் கிடத்தினார்கள். கிழவரின் நினைவு மெல்லத் திரும்புகின்றது. பேரனது மடிமீது தலையிருக்க, பேரனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் காற்று வீசிக் கொண்டிருக்கின்றாள். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த கிழவர், ஸ்ரீநிதி என்று முனகிக்கொண்டார்.

     

    Share
  • ஆதலால் காதல் செய்வீர்

    மெய்யன் நடராஜ்

     

    ஏழை எளியோர் வாழ்வின்

    இன்னல் களையும் தொண்டு

    மனப்பான்மையை காதல் செய்தார்

    நோபல் வென்றார் அன்னை தெரேசா..

     

    அடிமை விலங்குடைத்து

    விடுதலை சிறகசைக்க

    அஹிம்சையை காதல் செய்தார்

    சுதந்திரம் தந்தார் அண்ணல் காந்தி.

     

    அறிவியல் கண்கொண்டு

    நாளைய நோக்கிய இன்றில்

    ஆராய்ச்சிகளைக்  காதல் செய்தார்

    விஞ்ஞான ஜனாதிபதி அப்துல் கலாம்

     

    புரட்சிக் குரலெடுத்து

    பெண் விடுதலைக்காய் கூவியே

    தமிழைக் காதல் செய்தான்

    கவிஞனாய் மகாகவி பாரதி.

     

    ஆதலால் காதல் செய்வீர்.

    அவர்களாக இல்லாமல் போனாலும்

    நமக்கான அடையாளமாய்

    கொஞ்சம் மனிதாபிமானத்தையேனும் ..!

    Share
  • மதயானை

    மீ.விசுவநாதன்

     

    நல்லவன் போலே தெரிகின்ற

    நடிப்புக் கலைஞன் நானேதான் !

    வில்லனை உள்ளே தெரியாமல்

    வெளியே சிரிப்பவன் நானேதான் !

    சொல்கிற வார்த்தை கனிபோலே

    சுகமாய்த் தருபவன் நானேதான் !

    சல்லடை யிட்டே சலித்தாலும்

    சாந்தி இலாதவன் நானேதான் !

     

    வல்லினப் பேச்சால் வகையின்றி

    வசைகள் பொழிபவன் நானேதான் !

    மெல்லின மாதர் மதிமயக்க

    மெய்யை மறைப்பவன் நானேதான் !

    கல்லிலும் பாலைக் கறக்கின்ற

    காசுக் கலைபவன் நானேதான் !

    துல்லிய மாக எடைபோடும்

    தூய இறையுளம் நானேதான் !

     

    பள்ளியில் தூங்கிப் படிக்காத

    பச்சைத் துரோகியும் நானேதான் !

    சுள்ளியில் கூடக் கவிதையினைச்

    சுண்டும் கவிஞனும் நானேதான் !

    கள்ளிலே தேனின் சுவைதேடும்

    கடைந்த அசடனும் நானேதான் !

    உள்ளிலே உள்ள மதயானை

    உருவாய் இருப்பவன் நானேதான் !

    Share
  • புறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளது

    Pluto with methane

    புதுத் தொடுவான் விண்ணூர்தி
    முதன்முதல் நெருங்கி
    புளுடோ பனிக்கடல் இருப்பைக் கூறும் .
    அணுசக்தி உந்து ஆற்றலில்
    மிகுந்த வேகத்தில்
    கடந்து செல்கிறது விண்கப்பல்.
    புளுடோ வையும்
    சாரன் துணைக் கோளையும்.
    நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த
    முதலிரு வாயேஜர்
    விண்ணூர்திகள் காணாத
    விந்தைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை உளவச் செல்லும் !
    சூரிய மண்டலத்து
    வால்மீன் மந்தைகளின்
    வளர்ப்பிடத்தைத்
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்திகள் போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே
    புதிய மைல் கல்லை நடும்
    நாசாவின்
    புதுத் தொடுவான் கப்பல் !

    ++++++++++++++++++

    New Horizon Spaceship -1

    இது எனக்கோர் விந்தையாய்த் தெரிகிறது.  சூரியனுக்கு வெகு தூரத்தில் புளுடோவிலே பரந்த நீர்மயக் கடல் குடியிருப்புகள் [Habitats] உள்ளதற்கு வாய்ப்புகள்  இருக்க முடியும்.  அதுபோல் வால்மீன் போன்ற கியூப்பர் வளைய அண்டங்களிலும் நீர்மயம் இருக்கக் கூடும் என்பதும் மகத்தான தகவலாகும். நாங்கள் நன்றி கூறுவது தொடர்ந்து, நாசாவின் தொடுவான் விண்ணுளவி அனுப்பிய ஏராளமான தகவல் இலக்கத்துக்கு [Data]. அவற்றில் புளுடோ குள்ளக் கோளில் அடித்தட்டு நகர்ச்சி [Tectonic Features]  இருப்பது தெரிந்தது.  அவற்றை எடுத்துக் கொண்டு எங்கள் வெப்பத்  தோற்றக் கணினி மாடலைச் [Thermal Evolution Model] சீர்ப்படுத்த முடிந்தது. அதனால் புளுடோவில் உறைந்த அடிக்கடல் இருக்கக் கூடும் என்று அழுத்தமாய்க் கருத முடிந்தது.

    நோவா ஹாம்மண்ட் [பிரதம விஞ்ஞானி, பிரௌன் பல்கலைக் கழகம்]

    Historic Encounter

    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto & Beyond)

    புளுடோ குள்ளக் கோளில் பரந்த அடித்தளப் பனிக்கடல் கண்டுபிடிப்பு 

    2015 ஜூலை 15 இல் நாசாவின் தொடுவான் விண்ணுளவி புறக்கோள் புளுடோவை நெருங்கிச் சென்ற போது, ஆங்கே அடித்தள நீர்க்கடல் பனிக்கட்டித் தட்டைச் சுற்றிக் கீழே [Liquid Ocean around / under Icy Crust] இருக்கலாம் என்ற ஓர் ஆர்வத்தை  உண்டாக்கியது.  புதிய ஆய்வு களின்படி, இன்றும் அப்படி ஓர் நீர்க்கடல் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. அதற்குப் பயன்பட்டது புதுத் தொடுவான் விண்ணுளவி அனுப்பிய தகவல்  இலக்கத்தை வைத்து உருவாக்கிய வெப்பத் தோற்ற மாடல் [Thermal Evolution Model].  பில்லியன் ஆண்டுகட்கு முன்பே நீர்க்கடல் உறைந்து போய் இருந்தால், புளுடோ முழுக்கோளும் சுருங்கி இருக்கும். ஆனால் அப்படிக் கோள் முழுதும் சுருங்கி யதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  மாறாக புளுடோ கோள் விரிவாக அறிகுறிகள் தெரிந்தன. குள்ளக்கோள் புளுடோவில் பரந்த பல்வேறு திரட்சியுடைய அடித்தளப் பனிக்கட்டி, [Icy I & Icy II] நீர்க்கடல், நைட்ரஜன், மீதேன் தென்படுகின்றன. உயர்ந்த மலைகள், சமவெளிகள் உள்ளன.   பல கி.மீ. நீளத் தொடர் பூத அடிதட்டு நகர்ச்சிப் [Giant Tectonic Features] பகுதிகள் இருப்பதை புதுத் தொடுவான் விண்ணுளவி காட்டி யுள்ளது.  புளுடோவின் பனிக்கடலை உருக்கத் தேவையான கனல் தரும் கதிரியக்க தனிமங்கள்  [Radioactive Elements] உட்கருவில் இருக்கின்றன. குள்ளக்கோள் புளுடோவின் அடித்தளப் பனிதட்டின் தடிப்பு 300 கி.மீ. [180 மைல்] மேலிருக்கும் என்று கணிக்கப் படுகிறது.

    Pluto frozen Icy Ocean 

    நியூ ஹொரைசன் விண்ணூர்தி புளுடோவையும், அதன் துணைக் கோள்களையும் தேடி ஆய்ந்தது, நாசாவின் கடந்த 50 ஆண்டு வரலாற்றில் நிகழ்ந்த மகுடச் செயலாகும்.  மீண்டும் சாதித்த ஒரு வரலாற்று முதன்மை வெற்றியாகும்.  அமெரிக்கா புளுடோவை நெருங்கி அறிந்த முதல் தேசமாய் முன்னிற்கிறது.  இத்துடன் பரிதி மண்டலக் கோள்கள் அனைத்தையும் சுற்றி முன்னோடி ஆய்வு செய்த தேசமாய், ஈடு இணையற்ற பெயரெடுத்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.

    சார்லஸ் போல்டன் [ நாசா ஆளுமையாளர்]

    Pluto Like Moons

    புளுடோ போன்ற குள்ளக் கோள்கள் வானியல் உயிர்த்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்தறிய [Astrobiological Potential] மிக்க வாய்ப்புகள் அளிப்பவை.  மனித இனம் இதுவரைப் பல்லாண்டுகளாய் முயன்று, புதுக்கோள் ஒன்றைப் பற்றி விபரங்கள் அறிய இப்படியோர் வாய்ப்பு பிற நாடுகளுக்குக் கிடைத்ததில்லை. புளுடோ பற்றி நாம் இப்போது அறிந்து கொளவது எல்லாம் புதிய வெளிப்பாடே [New Revelation].

    அலன் ஸ்டெர்ன்  [நியூ ஹொரைசன் புளுடோ பிரதம  ஆய்வாளர்]

    Pluto and its moons -1

    புதுத்தொடுவான் விண்கப்பல் புறக்கோள் புளுடோவை நெருங்கிப் பத்தாண்டு பயணச் சாதனை வெற்றி.

    2015 ஜூலை 14 ஆம் தேதி நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி சுமார் பத்தாண்டுகள் பயணம் செய்து 3 பில்லியன் மைல்கள் கடந்து நமது பரிதி மண்டலத்தின் விளிம்பில் சுற்றும் புறக்கோள் புளுடோவை 7750 மைல் [மொம்பை – நியூயார்க் தூரம்] தூரத்தில் முதன்முதல் திட்டமிட்ட படி நெருங்கிப் படமெடுத்துப் புதியதோர் விண்வெளிச் சாதனைப் புரிந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாய் நாசா செய்து காட்டிய விண்வெளித் தேடல் சாதனைகளில், இது ஓர் அசுரச் சாதனையாகக் கருதப்படுகிறது.  2006 இல் ஏவிய இதுவே சூரிய மண்டலத்துக் கோள்களின் இறுதித் தேடலாகக் கருதப்படுகிறது.

    Pluto image -1

    நாசா முதன்முதலாக அணுசக்தியைப் பயன்படுத்தி புதுத் தொடுவான் விண்கப்பல் நீண்ட தூரம், நெடுங்காலம் பயணம் செய்து மணிக்கு 30,000 மைல் துரித வேகத்தில் புளுடோவை நெருங்கத் திட்டமிட்டு மாபெரும் வெற்றி பெற்றது.  15 வருடத் திட்டத்தில் உருவாகிய நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் மேலும் தொடர்ந்து பயணம் செய்து, எண்ணற்ற வால்மீன்கள் உற்பத்தியாகும் கியூப்பர் வளையத்தை [Kuiper Belt] அடுத்து நெருங்கப் போகிறது. 700  மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்ட புதுத்தொடுவான் விண்கப்பல் கியூப்பர் வளைய அகிலத் துணுக்குகள் [Cosmic Debris] எவையும் தாக்காபடி தப்பியது பெரு வியப்பைத் தருகிறது.

    Pluto core

    புதுத்தொடுவான் விண்ணூர்தி பூமிக்கு அனுப்பிய புதிய தகவல்

    துருவ பனித் தொப்பி பூண்ட புளுடோவின் விட்டம் 1472 மைல் என்று துல்லியமாய்க் கணிக்க முடிந்தது.  மேலும் நைடிரஜன் வாயு புளுடோவி லிருந்து வெளியாவது அறியப் பட்டது.  புளுடோவில் விண்பாறைகள் விழுந்து குழி விழாமல் [Impact Craters] சமவெளித் தளங்கள் [Plateaus] உள்ள வழவழப்பான பகுதிகள் காணப்பட்டன.  பனிக்கோளான புளுடோவின் தள உஷ்ணம் : [-230 டிகிரி C].  புறக்கோள் புளுடோவின் உட்புற வெப்பச் சூட்டில் நீரான அடிக்கடல் ஒன்று இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  புளுடோவில் உள்ள பனிமலைத் தொடர் 11,000 அடி [3400 மீ] உயரத்தில் அமெரிக்க ராக்கி மலைத்தொடர் போல் இருப்பதாகத் தெரிகிறது. சூரிய மண்டலம் தோன்றி  சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆயினும், புளுடோ தோன்றி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்.

    Pluto Core & atmosphere

    புளுடோ உட்கரு, சூழ்வெளி

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பார்ப்புகள் 2015 ஆண்டு ஜூலையில் நிறைவேறும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto & Charon Cores

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto Satellites

    புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

    புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

    Eris and Moon

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

    Pluto Surface

    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

    New Horizon Spaceship

     புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

    Current Location

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமி யிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html(Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

    15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

    16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/  [March 6, 2015]

    17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

    18.  http://www.ny

    …

    [Message clipped]  View entire message

    Attachments area
    Preview YouTube video The Pluto Files – Documentary

    The Pluto Files – Documentary

    Preview YouTube video Pluto the “Dwarf Planet” HD

    Pluto the “Dwarf Planet” HD

    Preview YouTube video Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Preview YouTube video Launch of NASA’s New Horizons Spacecraft

    Launch of NASA’s New Horizons Spacecraft

    Preview YouTube video ScienceCasts: Countdown to Pluto

    ScienceCasts: Countdown to Pluto

    Preview YouTube video Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ea097e1a-4a72-4a49-b1b7-1c0fb80dd60c

    ’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும்
    கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்….

    Share
  • பிரெக்ஸிட்

    பவள சங்கரி

    brexit_660_062716055214

    பிரெக்ஸிட் – இது pre-exit என்ற முன் திட்டமிட்ட ஒன்றேயொழிய திடீரென ஏற்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த வாக்களிப்பையொட்டி இசுகாட்லாந்து மக்களும் தங்களுடைய விடுதலைக்ககாக வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென வற்புறுத்துகின்றனர். பிரிட்டனில் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிலும் இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் பலமாகவே இருந்துள்ளன. பிரிட்டன் பாராளுமன்ற பிரதமர் கேமரூன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தத் தோல்வியை தமது தோல்வியாக எடுத்துக்கொண்டு பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் எதிர்கட்சியான லேபர் பார்ட்டி தலைவர், ஜெர்மி கார்பைன் லேபர் பார்ட்டியின் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலையும் மீறி பதவி விலக மறுத்து வருகிறார். ஆனால் அவர் கட்சியைச் சார்ந்த முன்னணி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த தலைவர்கள் உடனடியாக விலகும்படி பிரிட்டனை வலியுறுத்தி வருகின்றனர். கேமரூன் அவர்கள் உடனடியாக இதை நடைமுறைப்படுத்த முடியாது. மாற்று வழிமுறைகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த மற்ற நாடுகளுக்கு இந்தப் பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. இந்தியாவின் மத்திய வங்கித் தலைவர் பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்படுவோர்களில் ஒருவரும் இந்திய நிதி அமைச்சக செயலாளரும்மாகிய அரவிந்த சுப்பிரமணியம் அவர்கள் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நேரடி பாதிப்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும் பிரிட்டனும் மட்டுமே இதனால் பாதிக்கப்படும். அரேபிய ஒன்றியமும், இங்கிலாந்தும் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தங்களுடைய நாட்டின் அகதிகளுக்கு மாற்று ஏற்பாடு உடனடியாகச் செய்யவேண்டியதே இன்றைய நிதர்சனம்.

    பிரெக்ஸிட் பற்றி ஒரு இளம் பத்திரிக்கையாளரின் கருத்து:

    http://www.businesstoday.in/current/world/so-uk-voters-have-no-idea-what-european-union-is-or-why-they-brexited/story/234292.html?&toperStarEhJUS=1
    கட்டுரையாளர் திக்‌ஷா ரமேஷ் முதுபெரும் வரலாற்று ஆய்வாளர் உயர்திரு நரசய்யா அவர்களின் மகன் வழிப்பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழாக்கம் கீழே..

    ஜூன் 24 பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான நாளாக இருந்திருக்கலாம். வாக்காளர்கள், தாங்கள் எதற்காக வாக்களிக்கிறோம்  என்பது குறித்த தெளிவு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

    வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான ஒரு நாளுக்குப் பின்பு பிரிட்டானியர்கள் கூகிளில் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

    வாக்கெடுப்பின் முடிவு வெளியான பின்பு கூகிளில் மிக அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளை கூகிள் முன்னெடுத்தபோது அனைவருக்கும் பேராச்சரியம் தரக்கூடிய விசயமாக பிரிட்டானியர்கள், ” What is the EU referendum’ and ‘what happens if we leave the EU’ – அதாவது ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு என்றால் என்ன’ மற்றும் ‘நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகி வந்தால் என்ன நடக்கும்’ என்பதுதான்.

    அதுவும் அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் எனப்பலரும் பிரெக்ஸிட் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகள் குறித்த எண்ணற்ற பிரச்சாரங்கள் செய்த பிறகும் இந்த நிலை.

    கூகிள் பகுப்பாய்வுப் பிரிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றியே மிகப்பெரும் அளவிலான பிரிட்டன் மக்கள் கேள்வி எழுப்பியிருப்பதையே காணமுடிந்தது. வாக்கெடுப்பு முடிந்தவுடன் சற்று நேரத்திலேயே இது போன்ற கேள்விகள் எழுப்பும் மக்களின் எண்ணிக்கையை குறித்து பதிவுசெய்ய ஏற்பாடு செய்தது. தற்செயலாக இந்தத் தேடற்சொற்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் இருந்ததைக்காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்துள்ளன.

    இது நிபுணர்களால் ஏற்படுத்தப்பட்ட முடிவு அல்ல, மாறாக முற்றிலும் வர்க்கம் மற்றும் சமத்துவமின்மையின் அடிப்படையில் குடிமக்கள் எடுத்த முடிவு என்பது இதனால் தெளிவாகிறது.

    பீட்டர்பரோ போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களிடம் சர்வதேச ஊடகங்கள் நேர்காணல் செய்தபோது, ஏராளமான ஐரோப்பிய குடியேறிகளின் வருகையால் குற்றம், போதைப்பொருட்கள், மாசு மற்றும் மது என சிறு நகரங்களும், நகரங்களும் சீரழிந்துவிட்டன என்று சில பிரிட்டானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்கள், இது போன்று சிறிய மற்றும் பெருநகரங்களில் வசிப்பவர்கள் வெளிப்படையாகத் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் விதமாக குடியேறிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகவே வாக்களித்திருக்கிறார்கள் என்றனர். உண்மையிலேயே வந்தேறிகளை வெளியேற்றுவது மட்டுமே இவர்களின் முழுமையான நோக்கமாக இருந்திருக்கிறது.

    தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க பிரெக்ஸிட் வாக்களிக்க இது ஒரு முக்கிய காரணியாக இருந்துவிடக்கூடாது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். குடிமக்களின் குறுகியகால மனநிறைவு, தேசிய தொலைநோக்கு பொருளாதார நிலைப்பாடு மற்றும் உலகப் பொருளாதார நோக்கமும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் ஜூன் 24 இன் நிகழ்வான பிரெக்ஸிட், பேரழிவு நடவடிக்கையாக ஆகியிருந்த காரணத்தை ஊடகச்செய்திகள் வாயிலாக அறிந்த மக்கள் இணைய மனுவின் மூலமாக இரண்டாவது வாக்கெடுப்பை வலியுறுத்தி வருவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதுவரை 30 இலட்சம் கையெழுத்துகளைத் தாண்டிவிட்டது.

    இன்னும் கையெழுத்துகள் அதிகரிக்கும்வகையில் லேபர் பார்ட்டி எம்.பி. டேவிட் லேம்மி தமது டிவீட்டர் செய்தியில் : “பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலமாக இந்த பைத்தியக்காரத்தனத்தை மட்டுமல்லாமல் இந்த கனவையும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். நம் இறையாண்மை பாராளுமன்றம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்பதற்காகவே வாக்களிக்கவேண்டும்..” என்றிருக்கிறார்.

    “வாக்கெடுப்பு என்பது ஒரு ஆலோசனை என்ற வகையில் கட்டுப்பாடற்ற வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். விலகுதல் குறித்த பிரச்சாரங்கள் ஏற்கனவே முறிந்துவிட்டதோடு மக்கள் சிலர் விலகுவதற்கான வாக்களித்திருக்கக்கூடாதெனவும் கருதுகின்றனர்.

    Share
  • இருண்மை

    பவள சங்கரி

    Org201201241041286378000

    மலையில் மணம்வீசும் மென்மலர்கள்
    மாலையில் கலையிழந்து தலைசாயும்
    மறுபடியும் மொட்டாகி மலரும்மணம்
    இது மலரின் வாடிக்கை

    மழையும் புயலும் வெள்ளமும்
    மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும்
    கனியும் சுவையும் காணாமலடிக்கும்
    இது இயற்கையின் வேடிக்கை

    மலையும் அறமும் அசராமல் நிற்கும்
    கலையும் மணமும் கருத்தென கொள்ளும்
    மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும்
    இது மலையின் நிறம்

    பூவோ புயலோ மழையோ வெள்ளமோ
    காயோ கனியோ கருப்போ வெளுப்போ
    மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை
    இது மலையின் வரம்

    பூவும் மணமும் கலையும் மலையும்
    இயற்கையின் அம்சங்கள் மாறா நிலைகள்
    மனமும் குணமும் மதமும் மாற்றமும்
    இயல்பாய் நீளும் இருண்மைகள்

    இணையப் படத்திற்கு நன்றி

    Share