(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

A. சேகர்

அவன் வசந்தா மேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, அவனுடன் சுரேஷ், கல்யாண சுந்தரம், சகஸ்ரநாமன் என்ற சாத்து, ஜெமினி, சேகர், நீலகண்டன் போன்ற அவனுக்கு இளவயது முதல் பழக்கமான நண்பர்களும் இருந்தனர்.

1982ம் வருடம் மார்ச் மாதம் அவனுக்கு B. com இறுதி ஆண்டின் தேர்வு எழுத வேண்டி இருந்தது (மைசூர் பல்கலைக் கழகத்தின் தொலைவழித் தொடர்புக் கல்வி). அவன் பாட புத்தகத்தை விட கதை புத்தகங்களையோ, கவிதைப் புத்தகங்களையோதான் விரும்பிப் படித்துக் கொண்டிருப்பான். அனேகமாக நண்பர்களுடன் இரவுக் காட்சித் திரைப்படங்களுக்குச் சென்று விடுவான். இல்லையேல் ஏதேனும் இலக்கியக் கூட்டம் என்று சைக்கிளில் ஊர் சுற்றுவான்.

இராயப்பேட்டையில் உள்ள “ஓடியன்” தியேட்டரில் “ராஜபார்வை” திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இரவில் நண்பர்களுடன் “சைடோஜி மெஸ்”ல் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது,” சுரேஷ்.. நாம இப்ப “ராஜாபார்வை” சினிமாவுக்குப் போகலாம்” என்றான். “கண்ணா…உனக்கு நாளைக்கு “அக்கௌண்டன்சி” (Accountancy) exam இருக்கே..பரீட்சை முடிஞ்சு போலாமே ” என்றான் சேகர். “படம் பார்த்து விட்டு வந்து படிக்கறேன்..நீ எனக்குக் கொஞ்சம் சொல்லிகொடு போதும் ” என்றான் சேகரிடம். “சரி” எனப் புறப்பட்டனர் சினிமாவுக்கு.

இரவு ஒரு மணிக்கு விடுதிக்கு வந்தவுடன், அவன் முகத்தைக் கழுவிக்கொண்டு “அக்கௌண்டன்சி”க்குத் தயாரானான். அதிகாலை ஆறுமணிவரை அவனுக்குப் பாடம் நடத்தினான் சேகர். அவனுக்கு “அக்கௌண்டன்சி”யில் ஆர்வம் இருந்ததால் சேகர் சொல்லிக் கொடுத்ததை அவனால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. சேகர் அப்பொழுது “Fist leasing company”யில் “Company Secretary” யாக வேலை செய்து வந்தான். நல்ல படிப்பாளி. திறமைசாலியும் கூட. மிகத் தெளிவாகப் பாடங்களைச் சொல்லித் தருவதிலும் கெட்டிக் காரன்.

இரவில் சேகர் அவனிடம் “அக்கௌண்டன்சி” வினாத்தாளை வாங்கிப் பார்த்தான். அவன் அந்த வினாத்தாளில் பேனாவால் “டிக்” செய்த வினாக்களைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தபடி ,” கண்ணா …நிச்சயம் உனக்கு இதில் 60 மார்க்குக்கு மேல் வரும்” என்றான். என்னுடைய பலம், பலவீனம் தெரிந்து எனக்குக் கற்றுக் கொடுத்தவன் அல்லவா. அந்தப் பரீட்சையில் அவன் 68 மதிப்பெண்கள் வாங்கினான். சேகரிடம் அவனது “மார்க் ஷீட்” வந்ததும் காண்பித்தான். சேகர், “கண்ணா…”எனக்கு ட்ரீட்” என்று அவனைக் கட்டிக் கொண்டான். “நான் வாங்கிய மார்க்குகள் தான் உனக்கு ட்ரீட்” என்று சேகரை ஆறத்தழுவிக் கொண்டான் அவன். அவனைவிட சேகர் சுமார் ஐந்து வயது இளையவன். வித்தையில் அவனைவிட சேகர் மூத்தவன். அதனால் எப்பொழுதுமே அவனுக்கு சேகரிடம் தனி அன்பு இருந்தது.

“கணபதி சுப்பிரமணியன் என்ற ஜெமினி”

சேகரைப் போலவே “ஜெமினியும்” அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவன் தான். நல்ல புத்திசாலி. கடுமையான உழைப்பாளி. ஏழ்மை நிலையில் இருந்த போதும் செம்மையாக வாழ்ந்தவன். இன்று நல்ல நிலைமையில் இருக்கின்ற பொழுதும் அதே கனிவும், பணிவும் சேர்ந்த செம்மையுடனும் வாழ்கிறான். கணபதி சுப்பிரமணியன் என்ற அவனது பெயர் எப்படி “ஜெமினி” என்ற செல்லப் பெயரானது என்பது தெரியாது.

நகைச்சுவை குணமும், இலக்கிய ஆர்வமும் ஜெமினிக்கு அதிகம். கண்ணதாசன் கவிதைகளும், பாரதி கவிதைகளும் மிகவும் பிடிக்கும். ஒரு முறை ,” கண்ணா …வெட்கத்திற்கும், நாணத்திற்கும் என்ன வித்யாசம்” என்று அவனிடம் கேட்டான். அவன் சொல்வதற்கு முன்பே, ” அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம், அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்” என்று கண்ணதாசன் எவ்வளவு அழகா சொல்லிருக்கான் பாத்தியா” (கவிஞர்களை ரசனை மிகுதியால் ஒருமையில் அழைத்தலும் அழகுதான்) என்று அதை அழகாகப் பாடியும் காட்டினான். தில்லானா மோகனாம்பாளில் வரும் நாகேஷ் “வைத்தி” வசனங்களை அப்படியே பேசிக் காட்டுவான். ஒரு சனிக்கிழமை இரவு முழுவதும் திரைப்படப் பாடல்களும், சுவாமி ஐயப்பன் பாடல்களும் பாடிக் கொண்டிருந்து விட்டு, மறுநாள் காலையில் பத்து மணிக்குமேல் எழுந்து குளித்துவிட்டு, எல்லோருமாகச் சேர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஆலங்காத்தா பிள்ளைத்தெருவில் இருக்கும் “மாமி மெஸ்”ல் சாப்பாடு ஒரு பிடி பிடித்தனர். ஜெமினி நன்றாகச் சமையல் செய்வதிலும் கெட்டிக்காரன். பலசமயங்களில் அவன் ஜெமினியுடன் “கைபேசி”யில் தொடர்பு கொண்டு சமையல் குறிப்புகளைக் கேட்டு அதன் படிச் செய்வதுண்டு. ஜெமினியைப் போன்ற நல்ல நண்பர்கள் அவனுக்கு அறுசுவை விருந்தைப் போலவும், அளவான மருந்தைப் போலவும் இப்பொழுதும் இருக்கின்றனர் என்பது ஆண்டவன் அவனுக்கு அளித்த பேறு.

“K. கல்யாண சுந்தரம்”

அவன் வாழ்க்கையில் மறக்கக் கூடாத நண்பன் கல்யாணசுந்தரம். அமைதியான குணமும், அன்பும் அவனது சொத்து. ஐயப்ப பக்தன். மனம் உருகிப் பிராத்தனை செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணிசெய்து ஓய்வு பெற்றவன். அந்த விடுதியில் உள்ள அவகளின் அறையின் சுவற்றில் ஒரு சிறிய ஐயப்பன் படத்தை மாட்டி வைத்திருப்பான். நேரம் தவறாமல் காலையில் முதலில் எழுந்து குளித்துவிட்டு சரணம் சொல்லிக் கற்பூரம் காட்டுவான். அறையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். “சுவாமிக்குக் கற்பூரம் காட்டறேன்..கொஞ்சம் எழுந்துருங்கப்பா” என்று எழுப்புவான். எல்லோரும் கற்பூரம் கண்ணில் ஒற்றிக்கொண்டு மீண்டும் போர்வைக்குள் போய்விடுவார்கள். ஒருமுறை ,” கல்யாணம்…சாமிக்கு சட்டுப்புட்டாய நம: ” என்று ஒரே ஒரு அர்ச்சனை பண்ணி கற்பூரம் காமிச்சா என்ன?” என்று ரகு வேடிக்கையாகக் கேட்டது அவன் நினைவில் இருக்கிறது.

அவனும் கல்யாண சுந்தரமும் தீவிர சிவாஜி ரசிகர்கள். இரவில் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பும் வழியில் ஏதேனும் சிவாஜி படத்தின் போஸ்டரைப் பார்த்ததும்,” அண்ணா..போவோமா” என்று அவன் கேட்ப்பான். “சரி ..பிடி ஆட்டோவ .. விடு சாந்தித் தியேட்டருக்கு” என்று எத்தனையோ முறைகள் சென்றிருக்கின்றனர். ஸ்வாகத் ஹோட்டலில் வேலை செய்து வந்த சாமிநாதன், முத்துசாமி, தாமோதரன் என்று சுமார் பத்து பதினைந்து பேர்கள் சிவாஜி ரசிகர்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு நண்பர்கள்தான். ஒருமுறை “பைலட்” தியேட்டரில் “வசந்தமாளிகை” படம் பார்க்க கல்யாணசுந்தரம், ஸ்வாகத் நண்பர்கள் என்று ஒரு பெருங்கூட்டமாகச் சென்றனர். திரையரங்கத்தில் ஒரு முழு வரிசையுமே அவர்களால் நிரம்பி இருந்தது. அவர்களுடன், அவனும் அமர்ந்திருந்தான். திரையில் சிவாஜியைப் பார்த்தவுடன் “ஸ்வாகத்” நண்பர்கள் எல்லோரும் எழுந்து நின்று, தாங்கள் கொண்டு வந்திருந்த இரண்டு பெரிய கூடை நிறைய இருந்த பூக்களைத் தூவி மகிழ்ந்தார்கள். முன்வரிசையில் உள்ள அத்தனை பேர்களின் தலையிலும் அந்தப் பூக்கள் விழுந்தன. அவனுக்கும், கல்யாணத்திற்கும் உள்ளூர மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் பூப்போட வில்லை.

“அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன்” என்று சிவாஜி பாட , “கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் உன்னை விடமாட்டேன்” என்று வாணிஸ்ரீ திருப்பி அடிக்க, “உன்னையல்லால் ஒரு பெண்ணை இனிநான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்” என்று சிவாஜி நெகிழ, “உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்” என்று வாணிஸ்ரீ ஒரே போடு போடும் அந்தக் காதல் காட்சியில், கண்ணதாசனின் உயிருள்ள வரிகளில் அவன் அவனை மறந்தேதான் போனான். காதல் என்பது இறைவன் தந்த வரம். அந்த வரத்தைப் பெற்று வாழ்பவர்களும், தோற்றவர்களுமே பாக்கியசாலிகள்தான். அவனும் கல்யாணசுந்தரமும் சேர்ந்தே இந்தப் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது கூட சின்னத்திரையில் சிவாஜியின் “வியட்நாம் வீடு” பார் என்று அவன் சொல்ல, “நீ ஈமெயிலில் அனுப்பிய “அன்புள்ள அப்பா” படத்தைத்தான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கல்யாணம் சொன்னான்.

நண்பர்களோடு சேர்ந்து இப்படிப் படங்கள் பார்த்தாலும், அவன் தனியாகவே, ஒவ்வொரு காட்சியாக ரசிப்பதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்த்த படங்களும் உண்டு. “சிலநேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “யாருக்காக அழுதான்”, “அவள் அப்படித்தான்”, “தண்ணீர் தண்ணீர்”, “அச்சமில்லை அச்சமில்லை”, “உதிரிப்பூக்கள்” , “முதல் மரியாதை” போன்ற படங்கள் அந்த ரகம். சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தின் திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு அதற்காகவே அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தான். ஜெயகாந்தன் எழுதிய “கண்டதைச் சொல்லுகிறேன்” என்ற பாடலும், “வேறு இடம் தேடித் போவாளோ” என்ற பாடலும் இன்றும் அவன் முணுமுணுக்கும் பாடல்கள்தான்.

கந்தர்வகானமணி வீரமணி – கவிஞர் சோமு

73e3c097-4bc5-4b2a-b8cf-0ef947bfd721

கல்யாணசுந்தரமும் அவனும் ஒருநாள் இரவில் சாப்பிடப் போய்க்கொண்டிருக்கும் பொழுது கவிஞர் “சோமு” அண்ணா அவர்களை அவர்களது வீட்டு வாசலில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். கல்யாணசுந்தரம் ஐயப்பன் பக்தனானதால் சோமு அண்ணா மீது மிகுந்த மரியாதை உண்டு. சோமு அண்ணாவுக்கும் கல்யாணதின் பேரில் அதுபோன்ற அன்பு உண்டு. தனது சகோதரர் கந்தர்வ கானமணி வீரமணிக்காக “கவிஞர் சோமு” எழுதிய மணிமணியான பக்திப் பாடல்கள் ஏராளம். அதில் முக்கியமாக “பள்ளிக் கட்டு சபரி மலைக்கு”, “எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது” போன்ற பாடல்கள் இன்றும் பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. “பள்ளிக்கட்டு” பாடலை வீரமணி அண்ணா பாடிக் கேட்கப் புல்லரிக்கும். கண்ணதாசன் எழுதி வீரமணி பாடிய “கோதையின் திருப்பாவை” அவன் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல்களில் ஒன்று. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் இருந்த அவர்களது இல்லத்தில் “பாடல்” பயிற்சி நடக்கும் சமயத்தில் ஓரிரு முறை சோமு அண்ணா அழைப்பின் பேரில் அவன் சென்று பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் சோமு அண்ணா அவனை, தனது சகோதரர் “வீரமணி”க்கு அறிமுகம் செய்து வைத்தார். அவனுக்கு அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. அவர்களது இன்னொரு சகோதரர் கானமூர்த்தி. அவரும் கச்சேரிகளில் தன் சகோதரருடன் சேர்ந்து பாடுவார். பாசமுள்ள ஒரு இசைக் குடும்பம். சோமு அண்ணா மிகவும் எளிமையான மனிதர். அவனது அறைக்கு சோமு அண்ணா வருவார். அவனது கவிதைகளைப் படித்து மகிழ்ந்து பாராட்டுவார். கல்யாணசுந்தரம் அவரைப் பாடும் படிக் கேட்பான். உடனே பாடி மகிழ்விப்பார். “ராஜு”வையும் தன்னுடன் அவர்களது அறைக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த ராஜுவும் அவர்களுக்கு நண்பன்தான். இப்பொழுது “வீரமணி ராஜு” வாக ஜொலிக்கும் ராஜு சோமு அண்ணாவின் மகன்.

அவன் தன்னுடைய திருமணத்திற்கு அழைத்த பொழுது, ” உனது திருமண வரவேற்புக்கு வருகிறேன்” என்று சொன்ன வீரமணி அவர்கள் சொன்னபடியே 23.06.1985 அன்று ஸ்வாகத் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பில் தம்பதியராக வந்து கலந்து கொண்டு அவனை வாழ்த்தினார்.

01.07.2016

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““அவன், அது, ஆத்மா” (48)

  1. திருவல்லிக்கேணி, அங்குள்ள மேன்ஷன்கள், சைடோஜி மெஸ், மாமி மெஸ், இளைஞர் கூட்டம், இரவு நேர சினிமா, . அங்கு வாழ்ந்த பல நாடக நடிகர்கள்… .. படிக்கப் படிக்க சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வாழ்க்கையின் இனிய நினைவுகள் .. ஏதோ ஒரு நிழல் படைத்தை பார்க்கும் உணர்வுகள்… வாழ்த்துக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *