Featuredஇலக்கியம்பத்திகள்

இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-21

மீனாட்சி பாலகணேஷ்

ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்!

இத்தனை நாட்கள் நாம் சிறுமிகள் சிற்றிலிழைத்தும், சிறுவீடு கட்டியும் விளையாடியதனையும், சிறுவர்கள் அவற்றை அழித்துச் சிதைத்ததனையும் கண்டோம். இப்போது காணும் காட்சி கண்ணுக்குப் புதுமையாகவும் இனிமையாகவும் உள்ளதே! பாண்டியமன்னனின் மாபெரும் அரண்மனை. பளிங்குக்கற்கள் பதித்த பெரிய பரந்த முற்றம். வண்ணமலர்கள் போன்ற சிறுமிகள் அரசிளங்குமரியுடன் கூடி அம்மானை ஆடுகிறார்கள். அந்த அரசிளங்குமரியோ தெய்வத்தன்மை படைத்தவள். அவளுடைய ஆட்டம் விந்தைகள் நிறைந்து அனைவர் கருத்தினையும் கவர்கின்றது. வாருங்களேன்! நாமும் சென்று பார்க்கலாம்.

f4dfebad-fae1-4d89-addc-cc55ff9afc7f
எவராலும் தடுத்து நிறுத்த இயலாத ஆற்றல் படைத்தவள் எனும் பொருள்கொண்ட பெயர்படைத்த தடாதகையே இவ்விளவரசி. வட்டமிட்டு அமர்ந்துள்ளனர் சிறுமியர். முத்தாலாகிய அம்மானைக்காய்களை எதிர்எதிராக வீசிவீசியெறிந்து விரைந்து ஆடுகின்றார்கள் அவள் தோழியர். அவற்றைப்பற்றி தடாதகை மேலே திரும்பவும் வீசுகிறாள். மற்ற பெண்கள்அவற்றை இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறிமாறித்தாவிப் பிடிக்கின்றனர்; பிடித்தவண்ணமே இருக்கின்றனர்; பிடித்துக் களைக்கின்றனர். அவர்கள் அவற்றைப்பிடித்து நிமிர்ந்து பார்க்கும்முன்பே தடாதகை இன்னொரு ஆயிரம் அம்மனைக்காய்களை எடுத்து உயரே வீசுகின்றாள். “அம்மாடி! இவற்றை எவ்வாறு பிடிப்பது?” என அவர்கள் அயர்ச்சியுறுகின்றார்கள். “என்னடி தடாதகை! ஏன் எங்களை இவ்வாறு அலைக்கழிக்கிறாயோ?” எனச் செல்லமாக வேறு கடிந்துகொள்கின்றனர்!

தடாதகை உயரே எறிந்த ஓராயிரம் அம்மனைக்காய்கள் வரிசையாக அழகுற அணிவகுத்து நிற்கின்றன. இதனை இப்போது உறைந்துவிட்ட ஒருகாட்சியாகக் காண்போம். சிறுமிகளிடமிருந்து விலகிச் சென்று, குமரகுருபரனாரைக் காணுவோம்! தடாதகைப்பிராட்டியுடன் அவள் தோழிகள் விளையாடும் இந்த அம்மானை விளையாட்டு அவருடைய ஞானக்கண்களில் வேறுவிதமாகத் தென்படுகிறது.

அகிலாண்ட கோடியீன்ற அன்னையிவள். அவள் ஈன்ற அத்தனை கோடி அண்டங்களையும் ஆகாயத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து அழகுபார்ப்பது போல இந்த வண்ணவண்ணமான அம்மானைக்காய்கள் வரிசையாக நிற்கின்றனவாம். பார்க்கப்பார்க்கப் பரவசமூட்டும் கண்கொள்ளாக் காட்சியிது! அம்மாடி! ‘இத்துணை அண்டங்களையும் நீ படைத்து எம்மையும் காத்தருளுகின்றனையோ அன்னையே!’ என உளம் நெகிழ்கின்றதல்லவா?

இவர்கள் அம்மானையாடும் பளிங்கு முற்றத்தைச்சுற்றிலும் வண்ணமும் நறுமணமும் தாங்கிய செடிகொடிகள். அவற்றில் வரிகளையுடைய வண்டுகள் மூழ்கித் தேனுண்டு, ரீங்காரம் செய்தபடி, பைந்தாது எனப்படும் மகரந்தப்பொடிகளை குழப்பிக் கலக்கி எழுப்புகின்றன. இச்சிறுமிகள் ஆடும் விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு அவற்றையும் உற்சாகக்கடலில் மூழ்கச்செய்துவிட்டதோ என்னவோ! அவ்வாறு குழப்பியதனால் எழும் மகரந்தப்பொடியின் அடர்த்தியால் உலகமே இருண்டு போனதுபோலத் தெரிகிறதாம்.

அளகாபுரி, அமராவதி ஆகிய உலகங்களில் வாழும் வானவர்கள், “தடாதகை திரும்பவும் போருக்குப் புறப்பட்டு விட்டனளோ? அவளது பெரிய சேனையும் உடன்வருவதால்தான் இந்தப்புழுதி மண்டலம் எழும்பியுள்ளது போலும்!” எனத்துணுக்குறுகின்றனராம்.

‘மதுராபுரித்தலைவியான நீ இவ்வாறு அழகுற அம்மானையாடியருளுக!’ என்பவர் தடாதகையின் தனித்தன்மையை அடுத்தவரிகளில் கண்முன் நிறுத்துகிறார். ‘அண்ணலாகிய சிவபிரானின் உணர்வில் இணைந்து உள்ளங்கலந்து பின் அவருடலில் ஒரு பாகத்தைத் தனதாக்கிக்கொண்ட பெண்ணரசி இவள். ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ எனக்கூறிப் புளகிக்கிறார். இவள் ஒருத்தியே இந்த அடைமொழிக்கு உரியவள் அல்லவா? இதனாலேயே இறைவனும் மாதொருபாகன் எனும் சிறப்புப்பெயர் பெற்றானன்றோ?

“யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” எனும் கூற்றின்படி, குமரகுருபரர் தாம்கண்ட இவ்வற்புதக்காட்சியை இலக்கியச்சித்திரமாக நாம் பயின்றுமகிழ வடித்துத்தந்துள்ளார்.

https://soundcloud.com/thiru-arasu-10/ilakkiyam-21

தமரான நின்துணைச் சேடியரில்ஒருசிலர்
தடக்கையின் எடுத்தாடுநின்
தரளவம் மனைபிடித் தெதிர்வீசிவீசியிட
சாரிவல சாரிதிரியா
நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய
நிரைநிரைய வாய்க்ககனமேல்
நிற்கின்ற தம்மைநீ பெற்ற அகிலாண்டமும்
நிரைத்துவைத் ததுகடுப்ப
இமிரா வரிச்சுரும் பார்த்தெழப்பொழிலூ
டெழுந்தபைந் தாதுலகெலாம்
இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்
ஏக்கமள காபுரிக்கும்
அமரா வதிக்குஞ்செய் மதுராபுரித்தலைவி
அம்மானை ஆடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்
அம்மானை ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

********

புலவர் வடிக்கும் இன்னொரு அழகிய நயம்பொருந்திய சித்திரம்! விதவிதமான அம்மானைக்காய்களைக்கொண்டு தடாதகை விளையாடுகின்றாள். அம்மானை விளையாடும்போது உண்டாகும் பலவிதமான மெய்ப்பாடுகள்! அவை தொடர்பான புலவரின் அழகிய உருவகக்கற்பனைகள்! பயில்வோருக்கு இனிய தமிழமுதம்!

முத்துக்களை அழுத்திவைத்துச் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் அன்னைமீனாட்சியின் தாமரைமலர் போன்ற திருக்கைகளால் பிடிக்கப்பட்டதால் அவ்வம்மானைக்காய்களிலிருந்து அம்மலருக்கே உண்டான இனிய நறுமணம் (முளரிமணம்) கமழ்கின்றது. அம்மானைக்காய்கள் மேலும் கீழுமாக வீசப்படுவதால் விளையாடுவோர் அதனைத் தம்கண்களால் விரைந்து தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும். தடாதகையும் அதனைச் செய்கின்றாள். அவள் விழிகள் மைதீட்டப்பெற்றுக் கருநிறம்கொண்டு இருப்பதால் வண்டுவிழிகளாகக் காணப்படுகின்றன. அவள் கூந்தலில் அணிந்துள்ள இனிய மணம்பொருந்திய மலர்களில் தேனருந்த மொய்க்கும் வண்டினங்கள் கண்களாகிய வண்டுகளைக் கண்டு, அவையும் தம்மினம் எனக்கருதி மயக்கமுறுகின்றனவாம். அவற்றுடன் தாமும்கூடி (முயங்கி) மயங்குகின்றன.

கொத்தான மாணிக்கக்கூட்டத்தால் செய்யப்பட்டுள்ள மற்றொருவகை அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடுகிறாள். அம்மானையாடும்போது பாடல்களைப்பாடியபடி ஆடுவது சிறுமியர், மகளிர் வழக்கம். இவை விடுகதைகள் வடிவில் இருக்கலாம்1. சிறுமி மீனாட்சியும் தனது குயிலைப்போல் மிழற்றும் இனியகுரலில் குழலிசைபோன்று பாடியவண்ணம் ஆடுகிறாளாம். (என்ன பாடலை அன்னை பாடினாள் எனப்புலவர் கற்பனைசெய்து கூறியிருக்கலாம்- நமக்கு மேலுமொரு அருமையான இலக்கிய விருந்து கிட்டியிருக்கும்!!) அவளுடைய இனிய குரலின் இனிமைக்கு அந்த மாணிக்கங்கள் உருகி, பனிபோன்ற சிறுதிவலைகளைச் சிந்துகின்றனவாம்.

(இங்கு ஆதிசங்கரர் இயற்றிய ஒரு பாடலை இதனுடன் ஒப்புநோக்கலாம். ‘அழகின் அலைகள்’ எனும் அம்மையின் அழகினைக் கூறும் சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்: ‘வீணையில் இனிய நாதத்தினை எழுப்பி இசைத்தவண்ணம் இருந்த கலைமகள் ‘நன்றாக உள்ளது’ என தேவிகூறத் துவங்கியதும், அவளுடைய குரலினிமையின் முன்பு தன் வீணையின்நாதம் மங்கிவிட்டதனை உணர்ந்து வீணையை உறையிலிடுகிறாள்,’ என்பதே அப்பாடலின் பொருள். இசைக்கும், கலைகள் அனைத்துக்கும் இருப்பிடமும் பிறப்பிடமும் அவளே! அவள் குரலினிமையில் அசையும், அசையாப்பொருட்கள் அனைத்துமே உருகத்தானே வேண்டும்?

‘நாதப்ரஹ்மமயீம்’ என்பது மீனாட்சியை வழிபடும் பெயர்களில் ஒன்று. கூறிக்கொண்டே போகலாம்…..)

பவளத்தால் (வித்துருமம்) செய்யப்பட்ட அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடும்போது அவளுடைய கைவிரல்களின் அழகிய பவளநிறத்தினை அவை திருடிக்கொள்வதற்காக மேலும் கீழும் போய்வருவதாகக் காணப்படுகின்றனவாம்.

அடுத்துக் கூறுவது அருமையிலும் அருமை! ‘எம்பெருமானின் உள்ளத்தில் உயிரோவியமாகத் தீட்டப்பட்டு விளங்கும் அம்மையே! நீ அம்மானை ஆடுவாயாக!
அழகு பொங்கிப்பெருகும் கல்யாண சவுந்தரியே! அம்மானை ஆடுக!’ என்கிறார். கல்யாண குணங்கள் எனப்படும் உயர்வான நலங்களின் இருப்பிடமாகத்திகழும் அழகிய வடிவம் கொண்டவள் என்பது பொருள்.

‘ஆகம்கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ என்பதும், ‘அத்தன் மனத்தெழுதிய உயிரோவியம்,’ ஆகிய வருணனைகள் அம்மையும் அப்பனும் உலகத்தோருக்கு உணர்த்தும் கருத்தொருமித்த உயர்வான இல்லறத்தின் அழகான காட்சிகளாவன.

முத்தம் அழுத்திய அம்மனைகைம்மலர்
முளரிம ணங்கமழ
மொய்குழல் வண்டுநின் மைவிழிவண்டின்
முயங்கி மயங்கியிடக்
கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
குயிலின்மி ழற்றியநின்
குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
குறுந்துளி சிந்தியிட
வித்துரு மத்தில் இழைத்தவு நின்கை
விரற்பவ ளத்தளிரின்
விளைதரும் ஒள்ளொளி திருடப்போவதும்
மீள்வது மாய்த்திரிய
அத்தன் மனத்தெழு தியவுயிர்ஓவியம்
ஆடுக அம்மனையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
ஆடுக அம்மனையே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

**************

1 அம்மானை எனப்படும் சிறு பெண்கள் அல்லது மகளிர் விளையாட்டு மூவர் அம்மானை என அறியப்படும். விடுகதை போலப்பாடல்களை சமயத்திற்கேற்ப இயற்றிப் பாடியவண்ணம் ஆடுவது பெண்களின் வழக்கம் போலும். இவ்வாறு பாடல்களை அவர்கள் இயற்றி ( ) பாடுவதாகப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரகுருபரனாரே தமது மதுரை, காசிக் கலம்பகங்களில் இவ்வாறு அம்மானைப் பாடல்களை இயற்றியுள்ளார். இது அழகான சிறுமியர் விளையாட்டின் அருமையான பதிவாகும். மதுரைக் கலம்பகத்துப் பாடலைக் காணலாமே!

மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள். இது திருவிளையாடல் புராணத்தின் ஒரு கதை.

‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’
(விருது கட்டி- வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டுத் தனதுஅம்மானையை வீசுகிறாள்.

‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்
அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’
(உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)
மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’
(ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)

முழுப்பாடல் இதோ:

‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை
ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

இப்பெண்களை சமர்த்திகளாகவும், ஒருவருக்கொருவர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் கற்பிப்பவராகவும் காட்டியுள்ளனர் புலவர் பெருமக்கள். வீணே பொழுதினைப்போக்காமல் புத்திசாலித்தனமாக விளையாடுபவர்களாக உள்ளனரே!

*************

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க