Blog

  • நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது

    பேராசிரியர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்

    maanikavasagar

     

     

     

     

     

     

     

     

     

    நரியைப் பரியாக்கிய சிவபெருமானின் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது என்பது சைவசமயிகளின் உணர்வில் கலந்த நிகழ்வு. இந்நிகழ்வு தனக்காக நிகழ்த்தப்பட்டதென்றோ, தனது வாழ்வில் நிகழ்ந்ததென்றோ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்; இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பதுபோலத்தான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகின்றாரே அன்றித் தன்வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது இவர்கள் வாதம். அதனால் திருவாசகத்தில் உள்ள அகச்சான்று வலுவாக இல்லை என்றும், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பது மறைமலையடிகளைப் போன்ற ஒரு சிலரின் கருத்தேயன்றி, ஆய்வு முறையில் நோக்கினால் இது ஒரு வலுவற்றவாதம் என்றும் முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் கருதுகின்றனர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை நிறுவ திருவாசகத்தின் கீர்த்தித் திருஅகவல் ஒன்றே போதுமானது. திருவாதவூரர் குதிரை வாங்கப் பாண்டியன் அரண்மனையிலிருந்து பொன் எடுத்துப் போனதும், எடுத்த பொன்னுக்குக் குதிரை வாங்கமுடியாமற் போனதும், நரிகளைப் பரிகளாக்கிப் பாண்டியனுக்கு விற்ற இறைவன், (முன்பே பாண்டியனிடமிருந்து திருவாதவூரர் குதிரை வாங்கப் பொன் எடுத்துச் சென்றமையால், வாதவூரரின் கடனை அடைக்க) பாண்டியன் கொடுத்த பொன்னை ஏற்றுக்கொள்ளாது சென்றதையும், திருவாதவூரர் எல்லாம் அவன் அருள் விட்டவழி என்று இருந்ததுவும் கீர்த்தித்திருவகவலில்

    “அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான் நரியைக் குதிரையாக்கிய நன்மையையும்

    ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று

    ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப”

                                                                                                       –     திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்

    என்று மணிவாசகப் பெருமான் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    திருவம்மானை இருபதாம் பாட்டிலே, தம்மை பிறரால் அறிவதற்கு அரிய பெருந்துறைப் பெருமான், பெற்ற பொன்னுக்குக் குதிரை வாங்காமல் நிற்கும் அடியவரான தனது குற்றங்களை நீக்கியதோடல்லாமல், தன்னைச் சுற்றிய வினைத்தொடரறுத்து, பற்றிய பாசங்களைப் பற்றுஅற அப்பெருமானைப் பற்றியப் பேரானந்தத்தை இதோ மகிழ்வோடு பாடுகின்றார்:

    ‘பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 

    கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்

    குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 

    சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே

    பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 

    பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.

                                                            –     திருவாசகம்: திருவம்மானை-20

    திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட பெருமானே கொற்றக் குதிரையின் மீதேறி வந்து தனது குற்றங்களை நீக்கினான் என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகப் பெருமான்.

    திருவாசகத்தில் ஆனந்தமாலைப் பதிகத்தின் ஏழாம் பாட்டில் ‘நரியைக் குதிரைப் பரியாக்கி, இவ்வுலகோரெல்லாம் அறியும்வண்ணம் மதுரையெல்லாம் பிச்சேற்றிய பெரிய தென்னனாம் எம் பெருந்துறைப் பெருமானே!’ என்று ஆனந்திக்கின்றார் மணிவாசகப் பெருமான்.

    ‘நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்

    பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்’

                                                                              –     திருவாசகம்: ஆனந்தமாலை-7

    மீண்டும் திருவாசகம் திருவேசறவுப் பதிகத்தின் முதற்பாடலில், ‘கங்கையை முழுவதுமாக தனது சடையினிலே உலவுமாறு செய்த எம் உடையானே! நரிகளை எல்லாம் பெருங்குதிரைகளாக்கியது உன் பேரருளே அல்லவா!’ என்று பரவசமடைகின்றார் பெருமான்.

    ‘ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்

    பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே’

                                                                           –     திருவாசகம்: திருவேசறவு-1

    கீர்த்தித்திருவகவல் தொடங்கி, திருவாசகமெங்கும்   சிவபெருமானின் மற்ற திருவிளையாடல்களைக் குறித்துப் பாடும்போதெல்லாம், சிவபெருமானைத் தன்மையில் வைத்துப் பாடிவரும் மணிவாசகப் பெருமான், சிவபெருமான் நிகழ்த்திய நரியைப் பரியாக்கி, குதிரைச் சேவகனாக வந்த திருவிளையாடளைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘திருப்பெருந்துரையானே! என்றும், ‘உன்பேரருளே!’ என்றும், முன்னிலையில் வைத்துப் பாடுவது அத்திருவிளையாடல் அவர் பொருட்டே சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான வலுவான சான்றுகளாகும்.

    இவைகளுக்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல, திருவாசகத்தின் திருப்பாண்டிப்பதிகத்திலே ‘இருக்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்தி சிவபெருமான் மேல் அன்புசெய்யுங்கள்! நம் கருத்தினால் அறிவதற்கு அரியவனான ஈரேழுஉலகங்களைஎல்லாம் உண்ட திருமாலொடு, நான்முகனும், வானவர்களும் அடைதற்கு அரிய ஆலகால விடத்தையுண்ட எங்கள் பாண்டிப்பிரானாகிய சிவபெருமான் தன் அடியவருக்காக  மூலபண்டாரமாகிய பேரின்பச் செல்வத்தை வழங்குகின்றான்;   விரைந்து வந்து பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்று அடியவர்களை எல்லாம் விரைந்து அழைக்கும் மணிவாசகப்பெருமான், குதிரைச் சேவகனாக வந்த எம்பெருமான் வடிவையன்றி யாருடைய வடிவத்தையும் என் உள்ளம் அறியமாட்டாது (‘பரிமேல் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாது என்றன் உள்ளமதே!’’) என்று முதற்பாடலிலேயே உருகிப் பாடுகின்றார்..

    இத்துணை அளவு ‘நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்’ குறித்து மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திலே அகச்சான்றுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தும்,  முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் ஐயம் எழுப்புவதின் நுண்ணரசியலைச் சற்று உற்றுக் காண்போம்.

    நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்ற  உண்மை ஆய்வு மூலம் நிறுவப்பட்டுவிட்டால், மாணிக்கவாசகரின் காலம் குறித்த பல தமிழாய்வுகள் நீர்த்துப்போய்விடும்; இறைக்கொள்கையின்றி துறவைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்த பௌத்த, சமண ஆதிக்கத்தால், பெருவாரித் தமிழர்கள் இல்லறம் துறந்ததால், மக்கள்தொகை குறைந்து போர்த்தொழில் மறந்த தமிழினம், களப்பிரர் வசம் எளிதில் வீழ்ந்தது;  தமிழினத்தைத் துறவினின்று மீட்டுத் தலைநிமிரச் செய்தது கி.பி. மூன்று மற்றும் நான்கு ஆண்டுகளில் தொடங்கிப் பின் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பேரெழுச்சி பெற்ற சைவமறுமலர்ச்சி இயக்கம், அம்மையப்பனாக, சிவசக்தியாக இறைவனை முன்னிறுத்தி, இல்லறமே நல்லறம் என்றும், இல்லறக்கடமையாற்றி, முழுமையான அன்புவழிபாட்டினால் இறைவனை அடைய இயலும் என்றும் முழங்கிற்று. அதன் காரணமாகக் களப்பிரர் ஆதிக்கத்தினின்று விடுபட்டு வீறுகொண்டு மீண்டது தமிழினம். சைவம் தமிழின மீட்பு இயக்கமாவே தோற்றமாகியது என்பதை நினைவு கொள்வது அவசியம்.

    வேள்வியை மையமாகக் கொண்ட வேதமதமும், பக்தியை மையமாகக் கொண்ட சைவமதமும் முற்றிலும் வேறுவேறு நிலைப்பாடு கொண்டவை என்றாலும், வேதமதம் இறைக்கொள்கை கொண்டதாதலால் அதனுடன் சமரசம் செய்துகொண்டு, சைவம் பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காரைக்கால் அம்மையார், திருமூலர், மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகள். இவர்களின் பாடல்களில் வேதமதத்தைக் குறித்த சமநோக்கு சமரசக்கோட்பாடு மட்டுமே காணப்படுவது இவர்கள் வேதமத சமரசக்கோட்பாடு முன்னோடிகள் என்பதற்குச் சான்றுகள்.

    வேதங்களைக் குறித்த மிகுதியான பதிவுகளைப் பிற்காலச் சைவ இலக்கியங்களில் காணப்பெறலாம். வேதமதப்பதிவுகள் அதிகம் உள்ள சைவ இலக்கியங்களான மூவர் தேவார காலங்களை முன்னோக்கி நகர்த்த வேண்டியது வேதமதத்தை சைவத்தில் முதன்மை பெற வைப்பதற்கு முதல் தேவை; மேலும் அப்பர் மற்றும் சம்பந்தர் தேவாரங்களில் காணக்கிடைக்கும் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் பதிவுகள் மாணிக்கவாசகரின் காலத்தை முன்னோக்கி நகர்த்திவிடுவதைத் தடுக்க ஒரே வழி அத்திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிரூபிப்பதே ஆகும். அதைச் செய்துவிட்டால் வேதத்திலிருந்தே சைவம் தோன்றியது என்ற கருத்துரு நிலைநிறுத்தப்படும். வேதகாலத்திற்கு முற்பட்ட சங்கத்தமிழனின் தத்துவப்பின்புலங்கள் வேதத்தில் கரைக்கப்பட்டுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழனுக்கென்று சொந்தமாக வழிபாடு முறைகளோ, சமயமோ, மெய்யியலோ, தத்துவமோ, மெய்யியல்தத்துவமோ கிடையாது; இவையெல்லாம் வேதமதம் தமிழனுக்கிட்ட பிச்சை என்று எளிதாக நிறுவிவிடலாம். இந்த சமயநுண்ணரசியலே நரியைப்-பரியாக்கும் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிறுவ முயலும் முயற்சிகளின் பின்னணி.

    ஏழாம் திருமுறை தேவாரம் அருளிய சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளால் திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கு அடியேன்’ என்று அடையாளம் காட்டப்பெற்ற மணிவாசகரின் திருவாசகம் எட்டாம் திருமுறையிலும், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று வெளிப்படையாக அடையாளம் காட்டப்பெற்ற திருமூலதேவநாயனாரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையிலும், காரைகாலம்மையாரின் பதிகங்கள் பதினொன்றாம் திருமுறையிலும் வைக்கப்பட்டதற்கு அக்காலகட்டத்தில் நிலவிய ‘சைவசமயாசிரியர் என்பவர் சுயமத ஸ்தாபனமும் பரமதக் கண்டனமும் தீர்க்கமாகச் செய்தவரே ஆவர்’ என்னும் வரைவிலக்கணத்தை உள்ளடக்கிய சமயநுண்ணரசியலே காரணமன்றி, சைவசமயாசிரியர்கள்  வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் அன்று என்பதை அறிதல் நலம்.

    வேள்வியை மையமாகக் கொண்டு, வேள்வித்தீ மூலம் படையல்களைக் கடவுளர்க்குப் படைக்கும்  வேதமதத்தின் ஆணிவேரான வேதங்களே அனைத்து சமயங்களின், குறிப்பாக தமிழர்களின் சமயமான சைவசமயத்தின் மூலம் என்று நிறுவுவதே, சைவசமயத்தில் ஊடுருவிய வேத தத்துவவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

    எல்லாம் சரி! இது ஒன்று மட்டுமா காரணம்? ஏன் மாணிக்கவாசகர் அறுபத்து மூவரில் ஒருவராக ஏற்கப்படவில்லை? திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுவது மணிவாசகரையா? பட்டினத்துப் பிள்ளைக்கு முற்பட்ட அப்பர், சம்பந்தர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி,  சேக்கிழார் உள்ளிட்ட சைவ ஞானியர்களும், சைவ அறிஞர்களும் ஏன் வெளிப்படையாக மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தை முன்மொழியாமல், மறைவாகவே தங்கள் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர்? சைவச் சாத்திர நூலான திருமூலரின் திருமந்திரம் ஏன் சைவத் தோத்திர நூலாக பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டது? திருமுறைகளின் தொகுப்பு வைப்புமுறைகளின்  அடிப்படைகள் யாவை?  இந்தக் கேள்விகளுகெல்லாம் விடை காண்பது சைவ இலக்கிய வரலாற்றை நேர் செய்ய உதவும்; மேலும் வேதக் கலப்பை சுத்திகரித்துத் தமிழனின் சுய தத்துவ வரலாற்றை மீட்டெடுக்கவும், தமிழ்ச் சைவ மரபை மீள்நிறுத்தவும் அவசியமாகும். இவை குறித்து விரிவான கட்டுரைகள் எழுதப்படும். இந்தக் கட்டுரை நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை மாணிக்கவாசகரின் திருவாசக அகச்சான்றுகளின் வழி நிறுவுதல் என்ற அளவில் நிறைவு பெறுகின்றது.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ?

     aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

    Multi-universe -1

    இணைப் பிரபஞ்சங்கள்

    இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்” (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் காலவெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Superstring Universe

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி ! இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் !

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற “சவ்வியல் குமிழிகளில்” (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

    Multiverse Raising

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

    Multiverse -5

    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சிகரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

    Multiverse -4

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

    Parallel Universe

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்” (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

    யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

    Superstring Univers.

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

    கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

    (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

    Multiverse -1

    வகுப்பு : 3

    நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

    (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

    (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    Level IV Universes

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூலை எழுதிய ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

    நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

    Multiverse -2

    இணைப் பிரபஞ்சங்கள்

    +++++++++++++++++++

    1.  http://www.bing.com/videos/search?q=multiverse+parallel+universe&qpvt=Multiverse+parallel+universe&FORM=VDRE
    2.  https://youtu.be/aUW7patpm9s
    3.  https://youtu.be/z4rifLtsrX4
    4.  https://youtu.be/EwQEBWepRlY
    5.  https://youtu.be/Ywn2Lz5zmYg

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.scientificamerican.com/article/multiverse-the-case-for-parallel-universe/

    12.  http://www.bing.com/videos/search?q=multiverse+parallel+universe&qpvt=Multiverse+parallel+universe&FORM=VDRE

    13. http://www.dummies.com/how-to/content/string-theory-parallel-universes-and-the-multivers.html

    14. http://www.npr.org/2011/01/24/132932268/a-physicist-explains-why-parallel-universes-may-exist  [January 24, 2011]

    15.  https://en.wikipedia.org/wiki/Multiverse   [July 12, 2016]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) July 12, 2016

    Attachments area
    Preview YouTube video Multiverse: One Universe or Many?

    Multiverse: One Universe or Many?

    Preview YouTube video MULTIVERSE AND PARALLEL UNIVERSES – Discovery Life Universe (full documentary)

    MULTIVERSE AND PARALLEL UNIVERSES – Discovery Life Universe (full documentary)

    Preview YouTube video Parallel Universe or Multiverse Theory Documentary: Why we may Live in a Multiverse

    Parallel Universe or Multiverse Theory Documentary: Why we may Live in a Multiverse

    Preview YouTube video The True Science of Parallel Universes

    The True Science of Parallel Universes
    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 5

    அவ்வை மகள்

    நெஞ்சகம் நைந்து தொலைந்தழுத நோன்பு

    இறையியல் சிந்தனைகள்

    உறவுதான் உயிரிகளின் அடையாளம் என்றோம். உறவில் உதிப்பதே உயிரி. உறவுகொண்டொழுகலே உயிரியின் இயக்கம். முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பார்களே அதைப்போன்றது உயிரி – உறவின் தன்மை. சந்யாசிகள் கூட உறவு கொண்டு ஒழுகுபவர்களே. சன்யாசம் பூணும் முன் இருந்த உறவுகள் எத்தனையோ என்றாலும் சன்யாசம் பூண்ட பின், மதம், ஆச்சாரம் என்கிற ஷரத்துக்களுக்காய், குருவுடனும், சிஷ்யர்களுடனும் உறவு நீள்கிறது. பொதுஜனத் தொடர்பெனும் உறவு பெரிதாய் நீள்கிறது – பிற சொந்தங்களை விலக்கினாலும் கூட, தாயுடன் உள்ள உறவு விடாது பின் தொடருகிறது.

    சொந்தம் – சமூகம் என்னும் இந்த இரு வட்டங்களைத் தாண்டி தலைமை உறவாக – சன்யாசம் பூண்ட நிலையில் கொள்ளும் சிறப்பு உறவு இறைவனிடம் – இறைமையிடம் – அதுவும் சமூகப் பிரக்ஞையுடன் (வடமொழியில், லோக க்ஷேமம்) எழுகிறது. எனவே, காஷாயம் தரிப்பது என்பது உறவுகளை வெட்டிவிட்டுத் தனியே செல்வது அல்ல, உறவுகளை வலுப்படுத்தும் செம்மாந்த இலக்கை ஒட்டித்தான்.

    உறவு என்பது பசுஞ்செடி. அதிகமாகக் கிளைக்கும்போது செடியின் கிளைகளை வெட்டி எறிந்து, மிச்சமிருப்பவற்றை இழுத்துக் கட்டி, தேவைப்பட்டால், ஒரு கோலை நாட்டி, இன்னமும் தேவைப்பட்டால், கம்பி வலையையோ அல்லது முட்படலையோ சுற்றிலும் கட்டி, செடி எவ்வாறு பாதுகாப்புடன் போஷித்து வளர்க்கப் படுகிறதோ அவ்வாறு வளர்க்கப்படுவது உறவு.

    ஒரு மனிதனுக்கு உறவு எப்போது முளைக்கிறது என்று பார்த்தால் அது ஆதியிலே ஏற்பட்டுப்போவதைப் பார்க்கிறோம்.

    பிறந்த குழந்தை, தாயின் முகத்தை மூன்றாவது மாதமே அடையாளம் கண்டு கொள்கிறது. அப்படியென்றால் அதற்கு முன் தாயை அக்குழந்தை அறியாதா எனக் கேட்கலாம். பிறந்த நிமிடமே குழந்தை, தாயின் மார்பகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிரசவத்தின் போது தாயின் புறவழியை அடையாளம் கண்டு கொள்கிறது. உருவாகும்போது தாயுடன் தந்தையையும் அடையாளம் கொள்கிறது. அவர்கள் இருவரின் என்னென்னெ க்ரோமோசோம்களின் கலவையில் தான் உருவாக வேண்டும் என்றும் கூட அதுவே தான் முடிவு செய்கிறது – அந்த முடிவை எடுக்கும் உள் ஆற்றல் அதற்கு இருக்கிறது! அவ்வாறு உருவான அந்த நொடி, தாயின் கருப்பைச் சுவற்றை அடையாளம் கண்டு கொண்டு அங்குபோய்ச் சேர்ந்து அங்கே ஒட்டிக்கொள்கிறது. உறுப்பென்று ஏதும் இல்லா நிலையில் விகுதிப்பகுதிகள் நிகழாது ஒற்றைச் செல்லாக இருக்கும்போதே ஒரு சிசு உறவு கோல் நாட்டி உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தெடுத்துக் கொள்ளுகிறது உயிரியான தனது அடையாளத்தை.

    ஒரு சிசு இந்தச் சாயலோடு இந்த உளப்பாங்கோடு உருவாகிறது என்பதைப் பெற்றோர் நிர்ணயிக்க முடியாது – அதனை நிர்ணயிக்கும் வல்லமை உருவாகும் அந்த சிசுவுக்கு மட்டுமே உண்டு. இந்த நிர்ணயத்தை நாத்திகர்கள் புள்ளியியல் வாயிலாக, “probability” என்பர். நாத்திகர்கள் விளக்கம் இவ்வாறு இருக்கும்: “Chance Theory” யின் படி அன்னை-தந்தை இருவரின் க்ரோமோசோம்கள் கலக்கும்போது சாத்தியமாகக் கூடிய எத்தனையோ கலப்பு விகிதாசாரங்களில் (permutation/combination), உருவாகும் சிசுவின் விகிதாச்சாரம் ஒன்று என்பதால் அது அவ்வாறு உருவாகிறது.” ஆனால், “ஏன் அந்த விகிதாச்சாரம் இந்தத் தருணத்தில் நிகழ வேண்டும் வேறு விகிதாச்சாரம் இப்போது நிகழக்க்கூடாதா” என்று அவர்களைக் கேட்டால் திரு திருவென முழிப்பர். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?” அறிவியலில், கணிதத்தில் உள்ள ஷரத்துக்களின் பற்றாக்குறை நிலை இது. இறையியலோ இந்த நிகழ்வை மிக எளிதாக “சஞ்சித பாவம்” என்று அனாயாசமாகச் சொல்லிப் போந்தது. இதிலே “பாவம்” என்பதை நம்மவர்கள் Paavam என்று பொருள் கொள்வது சரி என்றாலும் அது சஞ்சிதத்தின் ஒரு பக்கமே. பாவம் என்பதை Bhaavam என்றும் கொள்வதும் மிகப் பொருத்தமாக இருக்கும். இது பாவத்தின் இன்னொரு பக்கம். Bhaavam என்பதை அவதாரம் என்று கொள்ளலாம். வடிவு, கோலம், ஒளி (Form, Appearance, and Radiance) ஆகிய மூன்றும் அவதாரத்தில் அடக்கம். ஒரே பிரசவத்தில் உருவான இரட்டையர்களைக் கவனித்துப் பார்த்தால் வடிவு, கோலம், ஒளி ஆகிய மூன்றும் ஒவ்வொரு ஜீவிக்கும் வேறு என்பது புலப்படும்.

    இறையியல் காட்டும் “சஞ்சிதம்” என்பது என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. சஞ்சிதம் என்றால் “ஏற்கனவே உள்ள அறிவு” (pre-existing knowledge) என்று பொருள். அப்படியென்றால், ஒரு சிசு ஏற்கனவே எதையோ தெரிந்துவைத்துக்கொண்டு தான் இங்கு வந்து ஜனிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். எனவே சிசு சும்மா வரவில்லை எதையோ எதையோ தன்னுடன் எடுத்துக்கொண்டு எந்த காரணம் பற்றியோ இங்கு வந்து சிருஷ்டியாகிறது என்பது விளங்குகிறது. அது மட்டுமல்ல ஒரு சிசு இங்கு வரும் அதன் நோக்கம் நிறைவேறத்தேவையான சக்தியோடு, உருவத்தோடு, ஆயுளோடு அது உருவாகிறது. அந்த நோக்கம் நிறைவானவுடன் அது வேறு இலக்கு நோக்கிப் பயணிக்கிறது. ஆக, சஞ்சிதம் எனப்படும் “ஏற்கனவே உள்ள அறிவு” என்பது தான் சிசுவின்- ஜீவனின் “பூர்வ ஜென்மப் பலன்” என்பதே ஆன்மீகஆய்வியலின் குறிப்பாகும்.

    இன்று, கணித – பௌதீக – புள்ளியியல் – ஆய்வாளர்கள் ஏன் ஒரு கலப்பு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் ஒரு தருணம் நிகழ வேண்டும் என்பதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்கிறார்கள் – ஒரு புதிய கலவை உருவாகிறபோது பழைய கலவை விகிதாச்சாரங்கள் நிகழ்வதில்லை என்பதை இப்போது அவர்கள் உணர்ந்து விட்டார்கள் – மேலும் ஏதோ ஒரு காலக்கணக்கும் பழைய சரித நினைவும் (time and past history) கொண்டதாய் ஒவ்வொரு கலவையும் ஜனிப்பதாகவும் அவர்கள் உணர்ந்து விட்டார்கள்- ஆனால் – அதனை விளக்கத்தெரியாமல் அவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதேதோ கணித சமன்பாடுகளைப் போடுகிறார்கள் – ஒருவருக்கொருவர் விதண்டாவாதம் செய்கிறார்கள் (காண்க: http://philosophy.fas.nyu.edu/docs/IO/4990/meacham.pdf). இவ்வாறு அவர்கள் விதம் விதமாக தர்க்கம் செய்தாலும் கூட – Chance-credence எனப்படும் வாய்ப்புக்கும் – உண்மையான ஜனனத்துக்கும் உள்ள தொடர்பில் காலக்கணக்கும் பழைய சரிதமும் இருப்பதை அந்த விதண்டாவாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிப் பேசுவதைக் நிதர்சனமாய்க் காண்கிறோம். அறிவியல் எப்போதும் ஜரூராகச் செல்லும் ஆனால் ஓரிடம் வரை போய் நின்று விடும் – அங்கிருந்து அதை மேலும் இட்டுச் செல்ல ஆன்மீகத்தால் மட்டுமே முடியும்.

    எது எப்படி இருப்பினும், Time and Past History எனும் காலச்சரிதம், மற்றும் Bhaavam எனப்படும் அவதாரம் (credence) இரண்டையுமே Chance-Credence theory மூலம் நிரூபித்து, சஞ்சித பாவத்தை அறிவியல் வாயிலாக அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.

    இது நிற்க.

    ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு ஜனித்தார் என்பது இன்று உலகம் அறிந்த உண்மை. திருமணமாகாத நிலையில் ஆணும் பெண்ணும் உருவாக்கிய சிசு அவர். அந்த ஆண்-பெண் இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் கலாச்சாரம் என்ற காரணத்தினாலும் – மகளுக்கு ஏற்ற துணைவன் இவன் இல்லை என்று பெண்ணின் தந்தை கருதியதாலும் – அந்த ஆணும்-பெண்ணும் இருவருமே கூட – தாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழும் முதிர்ச்சி அற்றவர்கள் என்று எண்ணியதாலும் – இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் கூடத் தடையானது. அதே நேரம், கருச்சிதைவு செய்யலாகாது என்று சட்டம் இருந்த கால நிலைமை இருந்ததால் – மறைவில் ஒளிந்து வாழ்ந்து – கர்ப்ப காலத்தைக் கழிப்பது – குழந்தையைப் பிரசவித்து உடனே தத்து கொடுத்து விடுவது என்று முடிவானது. குழந்தை அவ்வாறே பிரசவிக்கப் படுகிறது. மதப்பற்று நிரம்பிய, படித்த, பணவசதி உள்ள பெற்றோரிடம் மட்டுமே தன் பிள்ளையைத் தத்து கொடுக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுகிறாள் – பிரயாசையும் படுகிறாள் – அவ்வாறே ஒரு ஜோடி கிடைக்கிறது – குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று இணங்கி வந்தவர்கள் ஏனோ கடைசி நிமிடம் மனம் மாறி – வேண்டாம் என்று பின்வாங்கிக்கொள்கின்றனர் – தேடல் தொடர்ந்தது – ஆனால் இறுதியில் கிடைத்ததோ, படிக்காத பெற்றோர் மட்டுமே – அமெரிக்காவில் பள்ளி செல்ல வேண்டும் என்பது சட்டமே என்பதால் இருவரும் பள்ளிப்படிப்பு பெற்றிருந்தனரே தவிர – கல்லூரி சென்றவர்கள் அல்லர். எனவே குழந்தையின் தாய்க்கு, அவர்களிடம் குழந்தையைத் தத்து கொடுக்க மனம் வரவில்லை – ஆனால் குழந்தையை வளர்க்கும் அருகதை அற்றவள் என்பதால் தத்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதையும் அவள் விரும்பவில்லை. எனவே தத்து எடுக்கும் பெற்றோர்கள் இருவரும் – கல்லூரிப் படிப்பு படிப்பேன் என்று சத்தியம் செய்தாலொழிய என் குழந்தையை தத்து கொடுக்க மாட்டேன் என்று நீதி மன்றம் வரை சென்று உறுதி மொழி வாங்கிய பின்பே தத்து கொடுக்கும் படலம் நிறைவு பெறுகிறது. இருப்பினும் தத்து எடுத்தப் பெற்றோர்கள் குழந்தையிடம் முதலில் அன்பு காட்ட மறுத்தனர் – கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் எந்த காரணம் காட்டி குழந்தையைத் தாய் எடுத்துக் கொண்டு போய்விடுவாளோ – அன்பு செலுத்திவிட்டுப் பின்னால் பிரிவில் துயருறக் கூடாது என்றே அந்த வளர்ப்புப் பெற்றோர் – அன்பு மறுத்ததனர். சட்டப்படியாக அளிக்க வேண்டிய உணவும், இருப்பிடமும், பராமரிப்பும் மட்டுமே முதல் ஆறு மாதம் அந்த குழந்தைக்கு கிடைத்தன. இருப்பினும் கருத்தரிக்க இயலாத உடல் நிலை (இனப்பெருக்க மண்டலாக் கோளாறு காரணமாக) கொண்ட அந்த வளர்ப்புத் தாய் குழந்தையின் மதிப்பு அறிந்தவள் எனவே – கல்லூரிப் படிப்பு படித்தால் தான் சட்டப்படி குழந்தையின் தாயாக முடியும் எனும் நிர்ப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெல்கிறாள் என்றாலும் – இக்கால கட்டத்தில் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிடுகிறது. “நானே தாய்” என்று வழக்கில் வெற்றி பெற்றபின் – குழந்தையை அணுகிப் பார்த்தால் – குழந்தை பிடிவாதம் கொண்ட குழந்தை என்பது புலப்படுகிறது. குழந்தைக்குப் பிறருடன் பழகும் பாங்கு இல்லை என்பதும் புலப்படுகிறது. இருப்பினும் குழந்தையை வெறுக்காமல் அவள் வளர்க்கிறாள்.

    அடுத்தடுத்து அதிர்ச்சிகள் – குழந்தைக்குப் – பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை ஏனெனில், அங்கு ஆசிரியர்களுக்குத் தெரிந்திருப்பதை விட, குழந்தைக்கு அதிகம் தெரிந்திருக்கிறது – புத்தகங்களில் இல்லாததையே குழந்தையின் மனம் நாடுகிறது – பிற மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு குறும்புத்தனம் நிறைய பண்ணுகிறது – மொத்தத்தில் பொல்லாப் பிள்ளையாகக் குழந்தை பார்க்கப்படுகிறது.

    தாய் கொஞ்சம் கலவரப்பட்டாலும் வளர்ப்புத் தந்தை அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிறுவயதில் பல்விதக் கொடுமைகளுக்கு ஆளானவர் அவர் என்பதால் வளர்ப்புக்கு குழந்தையின் நிலைமையை உணர்ந்தவராகவே தெரிந்தார்.

    ஏறக்குறைய இதே நிலைமையை வள்ளலாரின் சரித்திலும் காண்கிறோம். கலாச்சார வேறுபாடுகள் மற்றும் நிகழ்வுகளின் தன்மையில் வேறுபாடுகள் ஆகியன இருப்பினும், நிஜப் பெற்றோர்கள் இன்றி அண்ணன் அண்ணியின் பராமரிப்பில் வள்ளலார் வாழ்ந்ததையும் – பள்ளிப்படிப்பில் – குறும்பு செய்தததையும் – சட்டாம்பிள்ளையைக் காட்டிலும் அவருக்கு குழந்தைப் பருவத்திலேயே அதிகமாகத் தெரிந்திருந்தையும் அறிகிறோம். ஸ்டீவ் ஜாப்ஸ் – வள்ளலார் இருவருமே conventional system of education எனப்படும் முறைசார் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

    இருவருக்குமே தம் பிறவியின் தாத்பரியம் பற்றி அறிந்து கொள்ளும் முனைப்பு சிறுவயதிலேயே இருந்திருக்கிறது. ஆறு மாதத்தில் கோயிலில் செம்மாந்து வள்ளலார் சிரித்த நிகழ்வை இங்கு கவனத்தில் கொள்ளலாம். ஸ்டீவ், வள்ளலார் இருவருமே தம் பிறப்பு பற்றி அறிந்து கொண்ட தெளிவை பின்னாளில் அவர்கள் வாய்மொழியே காட்டுகிறது.

    இதில், ஸ்டீவிற்கு தன் உடலாய்ந்த (bodily) பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இருந்த நெருக்கடி வள்ளலாருக்கு இல்லை. எனவே ஸ்டீவ் தன் நிஜப் பெற்றோர்கள் எவரென அறிந்து கொள்ளும் வேட்கை கொண்டவராக இருந்தார். பெற்றோர் யாரென அறியாமல் குழந்தைப் பருவத்தில் நெஞ்சகம் நைந்து நொந்து அவர் வாடியிருக்கிறார். தன் “மூலம்” எதுவென அறிய வெகுபிடிவாதமாய் முயன்றிருக்கிறார். இந்தத் தேடல் எத்தனை கொடுமையானது என்பதை விவரிக்க வார்த்தைகள் போதா. ஆனால் அந்த நோன்பின் பயனாய், தனது 27ஆம் வயதில் தான் தாயைக் கண்டிருக்கிறார். தந்தையை – (இருவருக்குமே தான் தான் தந்தை தான் தான் மகன் என்று தெரியாமலேயே) ஒருமுறை பார்த்திருக்கிறார். ஆனால், இறக்கும் வரைத் தந்தையை நேரில் சந்தித்ததில்லை. விரும்பவில்லை – முயலவும் இல்லை என்றே படுகிறது. தாயிடம் சிறிது நாள் தொடர்பு இருந்திருக்கிறது ஆனால் நிலைத்ததாய் எவ்விதத் தொடர்பையும் பெற்ற தாயிடம் கூட ஏற்படுத்திக்கொள்ளவில்லை. செஞ்சோற்றுக்கடன் எனும் எல்லை தாண்டி தான் வளர்ப்புப் பெற்றோரை அவர் நேசித்தது தெரிகிறது. “என் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்” என்று வளர்ப்புப் பெற்றோரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் ஸ்டீவ் . இதே போன்று தன்னை வளர்த்த அண்ணன் அண்ணியின் மீது வள்ளளார் உயர்ந்த அன்பும் அபிமானமும் கொண்டிருந்தார் எனவும் அறிகிறோம்.

    தன்னைப் பெற்ற நிஜப் பெற்றோர்களைப் பற்றி ஸ்டீவ் குறிப்பிடும்போது, “எனது விந்து-முட்டையின் வங்கி” என்று கூறுகிறார். “my sperm and egg bank. That’s not harsh, it’s just the way it was, a sperm bank thing, nothing more.”

    இருவர் வாழ்விலும் ஜீவிகளின் சிருஷ்டிக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் கருவிகளைப் போன்ற வகையில் மட்டுமே இயங்குகின்றனர் என்பதைக் காண்கிறோம். சிசுவின் சிருஷ்டியின் நோக்கத்தை பெற்றோர் கட்டுப்படுத்தும் அமைப்பு இயற்கையில் இல்லை என்பதும் புலப்படுகிறது. அதே நேரத்தில், சிருஷ்டிகள் தாய்-தந்தை எனும் உறவின்பால் மிகுந்த பக்தி கொண்டிருந்ததைக் காண்கிறோம். திருவருட்பாவில் தாயும் தந்தையும் அவர்களது அன்பும் எண்ணிறந்த வகையில் கையாளப் படுவதைக் காண்க

    அவதார புருஷர்களின் உறவு உடலாய்ந்த உறவு எனும் நிலையை விட்டு உணர்வாய்ந்த நிலையை எட்டி அங்கிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல ஆயத்தமாவதைக் காண்கிறோம். இதில் ஸ்டீவ் மற்றும் வள்ளலார் கொண்டிருந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் ஒப்பிடற்குரியது.

    மேலும் பேசுவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 71 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13599462_1042198989167633_571495808_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் சாந்தி வீ ஜே. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த வார படக்கவிதைக்கான ஒளிப்படத்தில்  நம் கருத்திற்கு விருந்தாக காக்கையோடு ஒன்றாக கூடி உண்ணும் பசுவும், கன்றும் இடம் பெற்றுள்ளன. இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    இங்கு இடம் பெற்றுள்ள கவிதைகள் பொதுவாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.

                    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்

                     பெற்றத்தாற் பெற்ற பயன்.

    என்ற குறள் கருத்தினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது செண்பக ஜெகதீசனின் கவிதை.  மனிதன் உயர்வு பெற விலங்குகளிடமிருந்தாவது சுற்றம் பேணுதலை கற்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர்.

    பாலைக் கொடுத்தாலும் பசுக்கள் பராமரிப்பு இல்லாமல் உணவிற்காக வீதியில் அலையும்  நிலையையும், பகுத்துண்டு உயிர் ஒம்பும் நிலை மற்ந்த மனித மனத்தின் அவல நிலையையும் எடுத்துக்காட்டுகின்றார் சரஸ்வதி இராசேந்திரன்.

    ஐந்தறிவுடைய  உயிரினங்கள் கூட ஒற்றுமையுடன் ஒன்று கூடி உண்டு, எந்த வித பேதமின்றி, எங்கு சென்றாலும் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவ்வாறிருக்க மனிதன் பேதம் கொண்டு வாழ்ந்தால் ஆறறிவு இருந்தும் என்ன பயன்  என்கின்றார் ராதா விஸ்வநாதன்.

    கோமாதாவாகவும், குலமாதாவாகவும் போற்றப்படும் பசுக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகின்றது இக்கவிதை,

    பசுக்கள் உணவிற்காக வீதியையும், குப்பை தொட்டியையும் நாடும் நிலையையும், ஊசி போட்டு பால் கரந்தும், அடிமாடாகவும் வதைக்கப்படும் நிலையையும்  எடுத்துக்காட்டி, பசுக்களுக்கு  எதிராக நடக்கும் உயிர் வதைச் சட்டப்படி குற்றம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்  கவிஞர். உயிரோம்பல் குறித்த கருத்தினை எளிமையான வரிகளில் வெளியிட்டுள்ள  ரா.  பார்த்தசாரதியின்  கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • வேளாளர் பெண்கள் கல்லூரியின் ஆண்டு மலர் (2015)

    பவள சங்கரி

    பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பள்ளியின் கற்பிக்கும் திறன், ஆசிரிய உறுப்பினர்கள், உள்கட்டமைப்பு, மாணவர்களின் ஆற்றல் போன்ற அனைத்தையும்  குறிப்பிட்ட அந்த கல்வி நிறுவனங்களின் மூலம் வெளியிடப்படும் ஆண்டு மலர் வழியாக அறிந்துகொள்ள இயலும். அந்த வகையில் உயர் மேன்மைக்குரிய முதல் தர தகுதி பெற்ற வேளாளர் பெண்கள் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு மலர் மேலும் தனித்துவம் பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட முடிகிறது. உயர்தரமான வழுவழு காகிதங்களுடன், வண்ணப் படங்களும் நவீன ஓவியங்களுடன் அட்டைப் படமும், நூலின் புறத்தோற்றத்தை கவர்ச்சிகரமாக வைத்திருக்கிறது. கல்லூரி ஆரம்பத்தின் ஆணிவேர் முதற்கொண்டு, இன்றும் கல்லூரி சீரான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உறுதுணையாய் இருக்கும் நிர்வாகக் குழுவினர், மீப்பெரும் கல்வியாளர்களை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்கள், உதவியாளர்கள் என அனைவரையும் அழகாகப் படம்பிடித்துக்காட்டி தற்போது இக்கல்விக் கழகத்தில் இணைந்திருப்போரையும், இனி இணையத் தயாராக இருப்போரையும் பாரபட்சமின்றி கவர்ந்திருப்பதும் யதார்த்தம். தமது ஆசிரியப்பணிக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்ற உத்திரவாதத்தை புதிதாக இணைபவர்களுக்கு வழங்கும் விதமாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் கல்விச் சேவையை தொடர்ந்து தங்கள் ஒரே கல்லூரியில் அளித்திருப்பவர்களை கௌரவித்துள்ளதை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. அதிக மதிப்பெண் பெற்று முதல் நிலையில் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் புதிய மாணவர்களையும் ஊக்கப்படுத்தியிருப்பதும் நல்ல முயற்சி. போட்டிகளும் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம் என்பதையும் உணரச் செய்திருப்பதும், கல்வி முடித்து வெளியில் சென்று சாதனை படைத்துவரும் பழைய மாணவர்களை கண்டடைந்து வெளிக்கொணர்ந்திருப்பதும் சிறப்பு. நேர்காணல் மூலமாக, உண்மையான உழைப்பினால் உலக சாதனை புரிந்து வெற்றி கண்ட பெண்மணியை பேட்டிகண்டு அவர்தம் சக்தியை தங்கள் மாணவச் செல்வங்களுக்குள் ஊடுறுவச் செய்திருக்கும் முயற்சியும் அருமை!  இதில் பல மாணவிகளை பங்கேற்கச் செய்திருப்பதும் சிறப்பு.

    ஒவ்வொரு துறை சார்ந்த முனைவர்களின் ஆய்வேடுகள் பற்றிய தகவல்களை அளித்திருப்பது ஆய்வாளர் ஆகப்போகிறவர்களுக்கு  சுவை கூட்டுவது. வழமைபோல் விளையாட்டுத் துறை, வித்தியாசமான நிகழ்வுகள், ஆய்வு மாணவர்களின் குறிபிடும்படியான சாதனைகள் என மிக இனிமையாக நீள்கிறது நூல்.

    அடுத்து அனைத்திற்கும் முத்தாய்ப்பாக தமிழ்துறை ஆரம்பித்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு, கணினி அறிவியல், வணிகத்துறை, பொருளாதாரம், நூலகம் என அனைத்துத்துறைகளின் சிறப்புகளையும் மிக இயல்பாக எடுத்துரைத்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாணவிகளின் படைப்பாற்றல் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான, சுவையான பல படைப்புகளை வெளியிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தியிருப்பதும் பாராட்டுதலுக்குரியது. அனைத்துப் படைப்புகளும் ஆக்கப்பூர்வமாகவும், மேன்மை பொருந்தியதாகவும் அமைந்திருப்பது கல்லூரியின் தரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று.

    இறுதியாக தேசிய சாரணர் இயக்கம், செஞ்சுருள் சங்கம், சுற்றுச் சூழல், சுகாதாரம், தொழில் முனைவோர் முன்னேற்றம், பசுமை இயக்கம், வெளிச்சங்கள் இலக்கிய அமைப்பு, கல்லூரி ஆண்டு மலர் ஆசிரியர் குழுவினரின் பக்கங்கள் என அனைத்து தன்னார்வத் துறையினரின் சாதனைகளையும் மிக அழகாக வடிவமைத்திருப்பது ஆக்கப்பூர்வமான செயல்.

    ஆக வேளாளர் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டின் ஆண்டு மலர் பல சிறப்புகளைக் கொண்டதோடு, கல்லூரியின் தனிச்சிறப்புகளை முழுமையாக எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட இந்த நூல் வாசிப்பவர்களை எந்த வகையிலும் தொய்வின்றி சுவையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தவல்லது என்பதில் ஐயமில்லை. இந்நூலை செம்மையாக வடிவமைத்துள்ள ஆசிரியர் குழுவினருக்கும், ஆகச் சிறந்த படைப்புகளை வழங்கி கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்டியுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்  வல்லமை இதழின் வளமான வாழ்த்துகள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    3998539e-1270-4b8e-b991-7e531859ad3a

    ‘’ஆகுலக் கன்றை அதன்தாய் இடம்சேர்த்து
    வ்யாகுலம் தீர்த்திட வாத்ஸல்ய, -கோகுலத்தோன்
    மல்லாண்ட திண்தோளன் மாட்டுக்காய் ஆனானே
    புல்லாண்ட தோள(ழ)னாய் பார்’’….கிரேசி மோகன்….

    Share
  • வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

     

          

                    ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா) 

     

            செம்பவள வாய்திறந்து 

            சிரித்துநிற்கும் உன்முகத்தை

            தினமுமே பார்த்திருந்தால் 

            சிந்தனையே தெளிந்துவிடும்

            வந்தநோவும் ஓடிவிடும்

            வலியனைத்தும் மறைந்துவிடும்

            எந்திருவே உனையணைத்து

            என்னாளும் இன்புறுவேன் !

     

            முழுநிலவு வடிவான

            அழகுநிறை உன்முகத்தை

            முத்தமிட்டு முத்தமிட்டு

            மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே

            கொழுகொழுத்த கையாலே

            குறும்புநீ செய்கையிலே

            ஒழுகிவரும் இன்பமதை

            உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

     

            பொட்டுவைத்து தலைசீவி

            புதுச்சட்டை போட்டுனக்கு

            மெத்தையென என்மடியில்

            விரல்சூப்ப விட்டிருப்பேன்

            சூப்பிவிட்டு துப்புகின்ற

            எச்சிலெனை நனைக்கையிலே

            பார்க்கின்ற அத்தனையும்

            பரவசமாய் தெரியுமப்போ !

     

            மழலை  மொழிபேசி

            மயக்குவாய் எனைநீயும்

            மாமருந்தாய் வந்தமைந்த

            மாமணியே நீயெனக்கு 

            மாதவத்தால் உனப்பெற்றேன்

            வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்

            வையகத்தில் நான்வாழ

            வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (3)

    இசைக்கவி ரமணன்

    kural

     

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 2

     

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு. (01:01)

     

    எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டவை.

     

    சொற்பொருள் – இலக்கணம்

     

    அ = அந்த, (அப்பசியை, அவ்வூன்) உடைய

    அகரம் = சாரியை பெற்ற எழுத்து

    சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

    ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.

     

    முதல = முதலை உடையன = அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று

     

    எழுத்து = எழுதப் படுவது. எழும் எண்ணம் வரிவடிவம் பெறுவது எழுத்து.

     

    ஆதி = முதல் (அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் 55:செங்கோன்மை:543) வடமொழி, காலப் பெயர்

     

    பகவன் = கடவுள், ஆரியம் பகவான். ஆண்பால், பொருட்பெயர். பகவு என்றால் பிளவு, எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு 89: உட்பகை:889)

     

    ஆதி பகவன் = Primal Deity

     

    முதற்றே = முதலையுடையது, அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று.

     

    உலகு = உலகம், இடப்பெயர்

     

    படைப்பு என்பது மூன்று குணங்களாலானது. அவற்றின் விகிதாசார வேறுபாடுகளே மலையும், மனிதனும், விண்மீனும், புழுவும், புயலும், ஐம்பூதங்களும்! அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அறியப்படும். அவற்றுள், சத்வத்தால் அறமும், ரஜஸால் பொருளும், தமஸால் காமமும் விளைகின்றன என்பது உரை. இந்த மூன்று குணங்களும் ஒரு சரிசமமான முக்கோணமாக அமையும்போது மனிதன் என்பவன் தெய்வமாகிறான். அவற்றை எப்படிச் சமநிலையில் அமைத்துக்கொள்வது என்பதைச் சொல்லவே வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துப் பாடினார்.

    அகரம் என்பது எல்லா எழுத்துக்களுக்கும் மூலம். `அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்` என்று கீதையில் கண்ணன் மொழிகிறான். (10:33) `அ` என்னும் எழுத்து கடவுளைக் குறிப்பதாக வடமொழி அகராதி நமக்குச் சொல்லும். `அ` என்பது எழுத்து மட்டுமல்ல, படைப்பின் ஆதாரமான நாதத்தின் ஆரம்பம். `அ` ஓர் எழுத்தாகத் தனியாகவும் நிற்கும். மற்றைய எழுத்துக்களுக்கு ஏற்பாகவும், அவற்றோடு இணைந்தும் நிற்கும். இறைவன், அவனளவில் தன்னந் தனியன். ஆயினும், தான் படைத்த படைப்பில் உட்புகுந்து ஊடுருவியும் நிற்பவன்.

    ஆக, எழுத்துக்களுக்கு அகரம் மூலம். உலகுக்கு ஆதிபகவன் மூலம். பகவனாய் அறியப்படும், வேறுவிதம் அறியமுடியாத ஆதி.

    மேலும், நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் முதல்முதல் வாயைத் திறந்ததும் வெளிப்பட்ட ஒலி `அ` தானே! நமக்கு, இதைச் செய்வதற்கே கூட, உடம்பு, வயிறு, தொண்டை எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் இறைவனுக்கு? அவன் `அ` என்று சொல்லுமுன் தோன்றி முடிந்துவிட்டதுதானே படைப்பு! அவ்வளவு அநாயாசம்!

    ஆதி என்றால் பழமை என்று மட்டுமா பொருள்? அனைத்துக்கும் மூலம் அவன் என்றுமல்லவா புரிந்துகொள்ள முடிகிறது!

    ஓரொலி உள்ளொளி ஓம்.

    இதைப் பிரபஞ்ச ரீங்காரம், பிரணவமாகிய ஓங்காரம் என்று நாம் அறிவோம். அதிலிருந்துதான் சிருஷ்டி என்னும் படைப்பு தோன்றியது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஒலியின் சிறப்பு என்ன? இது விகாரமற்ற நாதம். அதாவது, இதில் வளர்ச்சி, தேய்வு போன்ற மாற்றங்கள் எதுவும் இல்லை. அதன் ஒலி கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. அது யாரும் ஏற்பாடு செய்த ஒலியில்லை. அது தான்தோன்றியாய், தன்னிச்சையாய் இடையறாது ஒரே ரீதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒலி `ஓ` என்று தொடங்கி `ம்` என்று முடிவதில்லை. `ஓம் ஓம்` என்றும் ஒலிப்பதில்லை. ஒரே ஓம். ஓம் ஒன்றே. இது அது என்று இதனை விளக்க முடியாததால், இது, எதுவுமேயில்லை எனப்படுகிறது. இது, எதுவுமே இல்லை என்பதால்தான் இதுவே அனைத்தும் என்றாகிறது. ‘Om, like Guru, is the biggest nothing; that is why, it is everything,’ என்பார் என் குருநாதர்.

    இந்த ஒலி, ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒலிக்கிறது. இதயம் என்றால் பெளதிகமான இதயம் அல்ல. நட்ட நடு நெஞ்சு. யோக மொழியில் அனாஹதம் என்னும் நிலையம். `ஆஹதம்` என்றால் இரண்டு பொருட்கள் மோதுவதால், உரசுவதால், அல்லது தொடர்புகொள்வதால் விளையும் ஒலி. `அனாஹதம்` என்றால் எதன் விளைவாகவும் இல்லாமல் தன்னிச்சையாக விளங்கிக்கொண்டிருக்கும் ஒலி. குருவருளாலும், இடைவிடாத பயிற்சியாலும் ஒருவன் இந்த ஒலியைத் தன்னகத்திலிருந்து கேட்கிறான். அப்போது பிரபஞ்சம் மட்டுமல்ல, படைப்பு முழுதும் பரவியும், அனைத்திலும் ஊடுருவியும், எதனாலும் விகாரப்படாமலும் இருக்கும் ஒலியை உணர்ந்துகொள்கிறான். உள், வெளி போன்ற பேதங்கள் தொலைந்து, விரிவில் ஒடுங்குகிறான்.

    ’அ உ ம’ சேர்ந்ததுதான் ஓம் என்று கேள்விப்படுகிறோம். இப்போது `அகர முதல` அதாவது எல்லாவற்றுக்கும் தலைமை `அ` என்பது விளங்குகிறதல்லவா? `அ` என்பது எழுத்துக்களுக்கு மட்டும் தலைமை அல்ல. படைப்புக்கே அதுதான் தலைமை. `அ` வின் விளைவு எழுத்துக்கள் மட்டுமல்ல, நாம் காணும், நாம் இன்னும் காணவிருக்கின்ற பிரபஞ்சமுமே என்று புரிகிறதல்லவா?

    இதைப் பேராசிரியர் தி. வேணுகோபாலன் அவர்கள் நயம்பட விளக்குவார்:

    • காணப்படுவது உலகம். அது த்ருஷ்டம். காணப்படாதது கடவுள். அது அத்ருஷ்டம். காணப்படுவதை வைத்துக் காணப்படாததைச் சொல்வது அனுமானப் பிரமாணம். மரமும் வேரும் போல! மரம் என்ற ஒன்று காணப்படுமானால், அது வேர் என்ற ஒன்று இருப்பதால்தான்.
    • `முதற்றே உலகு` என்னும்போது அந்த முதலுக்கு உரியது உலகு; கடவுளுடைய உடைமை உலகம். உலகுக்கு உடமை கடவுளன்று என்று புரிந்துகொள்ள வேண்டும்.
    • நாதம் என்பது உருவமில்லாதது. அதன் வரிவடிவம் `அ.` அதேபோல் கடவுள் உருவமற்றவன், அவனுக்குக் கணக்கற்ற வடிவங்கள். அகரம் பலவித எழுத்து உருவங்களாய் விரிகிறது. கடவுளுக்கும் பல பெயர்கள். வடிவம், வண்ணம், பயன்படுபொருள் எல்லாம் எழுத்துக்கும் இறைவனுக்கும் ஒற்றுமையாய் இருக்கிறது என்பதை விளக்கவே இந்த உவமை.
    • அகரமே ஆதி; மற்றவை யாவையும் அதன் விளைவே.
    • `எழுத்தெல்லாம்` என்று நீட்டியது ஏன்? மீண்டும் எழுத்தையும் உலகத்தையும் இணைத்துப் பார்ப்போம். அங்கே உயிரெழுத்து, இங்கே உயிர்கள். அங்கே மெய்யெழுத்து, இங்கே சடப்பொருட்கள். அங்கே வல்லினம், மெல்லினம், இடையினம். இங்கே தூலம், திரவம், வாயு. அங்கே உயர்திணை, அஃறிணை. இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர். அங்கே வினைமுற்று, வினையெச்சம். இங்கே செயலை முடித்தவன், முடிக்காமல் விட்டுவைத்திருப்பவன். உலகம் எழுத்தைப் போலவே அல்லவா இருக்கிறது! எழுத்துகளுக்கு அகரம். உயிர்களுக்கு இறைவன்.
    • `முதல` என்றவர், மீண்டும் `முதற்றே,` என்கிறார். முதல் என்னும் சொல்லுக்கு இறைவன் என்று பொருள் சொல்கிறது நிகண்டு!
    • முதல் என்றால் வேர் என்று பொருள். ஊடி அவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்தற்று (1304) (நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்) என்னும் குறளில் முதல் என்பது வேரைத்தானே குறிக்கிறது? வேர், மரத்திலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை இரண்டுமே சரிதான்! அலை, கடலிலிருந்து வேறுபட்டதா? மரத்தை வெட்டினாலும் மறுபடி முளைவிடும். ஆனால் வேரின்றி அமையாது மரம்.
    • முதல் என்றால் காரணம் என்று பொருள். எப்படி? நோய்நாடி நோய்முதல் நாடி` என்கிறாரே! காரணம் கடவுள். காரியமாகிய விளைவு உலகம். காரணம் அகரம். விளைவு எழுத்தெல்லாம்.
    • முதல் என்றால் மூலதனம் என்று பொருள். விவசாயி, விதைநெல்லை வித்துமுதல் என்பான். வியாபாரத்திற்காகச் செலவிட வேண்டியதைக் கைமுதல் என்பான். அறுவடைக்குப் பின்வருவதைக் கண்டுமுதல் என்பான். இன்னும் கொள்முதலும் உண்டுதானே? இந்த முதல் எல்லாம் எதற்கு? ஊதியத்திற்கு. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, என்கிறாரே! எனவே, அகரம் என்னும் முதல் இல்லையென்றால் பிற எழுத்துக்கள் என்னும் விளைவாகிய ஊதியம் இல்லை. ஆண்டவன் என்னும் முதல்தான் உலகம், வாழ்க்கை என்னும் ஊதியத்திற்குக் காரணம்.
    • முதல் என்றால் எண்ணிக்கையில் முதல் என்று பொருள். ஒன்று என்பது ஒன்று. இரண்டு என்பது இரண்டு ஒன்று. கோடி என்பது கோடி ஒன்று. ஆக ஒன்றுதானே யாவும்? எந்த எண்ணிலும் ஒன்றுதானே ஒன்றியிருக்கிறது? எல்லாம் ஒடுங்குவது அந்த ஒன்றில்தானே? தொகை என்பதில் மருளாமல் அதன் ஆதாரமாகிய துளியைக் காண்பவர்கள் வித்தகர்கள். வள்ளலார் `மயில், குயிலாச்சுதடி` என்றதும், திருமூலர் `மரத்தை மறைத்தது மாமத யானை` என்றதும் இதைத்தானே?

    எழுத்துக்களுக்கு அகரம் முதல். உயிர்களுக்கு ஆண்டவன் முதல். இடையில் அதுபோல் என்ற சொல்லில்லை. ஒன்றுக்கொன்று உவமையில்லை. இரண்டு தனிப்பட்ட கூற்றுகள், இங்கே சொல்லப்பட்டன என்பர் சிலர்.

     

     தொடருவோம்


     

    Share
  • படக்கவிதைப் போட்டி (72)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13652649_1046331315421067_1817652577_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    100914400@N08_rபிரபு வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்

    முனைவர் மு.பழனியப்பன்,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    அரசு கலை , அறிவியல் கல்லூரி,

    திருவாடானை.

         வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்த்துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இதுமுதல் வைணவ இலக்கியத்தின்பால் பேராசிரியரின் நோக்கு ஆழம் பெற்றது. இவர் வைணவம் தவிர பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படைத்தளித்தவர். அடிப்படையில் அறிவியல் மாணாக்கர் என்ற போதும் தமிழின்மீது விருப்பம் ஏற்பட்டுக் கற்றவர். இவர் அறிவியல் தமிழின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறார். இவரின் நூல்களில் காணப்படும் எளிமையான தமிழ் நடை கற்போரைத் தெளிவடையச் செய்கிறது. மேலும் கற்கத் தூண்டுகிறது. இவரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இப்பொழுதில் இவரின் ~கலியன் குரல்| என்ற நூலில் அடங்கியுள்ள வைணவ முப்பொருளில் ஒன்றான இதம் பற்றிய கருத்துகளைத் தொகுத்தும் பகுத்தும் உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    கலியன் குரல்

                    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வைணவ இலக்கியம் தத்துவம் பற்றிப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் நிகழ்த்திய அறக்கட்டளைப் பொழிவு ~கலியன் குரல|; என்னும் தலைப்பில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நூல்வடிவம் பெற்றது. திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களில் காணப்படும் இலக்கிய இன்பம், தத்துவ ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அமைப்பில் இந்தப் பொழிவுகள் அமைந்தன. திருமங்கை ஆழ்வாரை மையப்படுத்தி இப்பொழிவை அமைத்ததற்குப் பல காரணங்களை மொழிகிறார் பேராசிரியர். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பலைக்கலைக்கழகம் திருமங்கை ஆழ்வார் ஆண்ட. பிறந்த பகுதிகளுக்கு அருகில் இருப்பது முக்கிய காரணம் என்பது அவர் தரும் முதற்காரணம் ஆகும்.; தேர்ந்து ஒரு செயலைச் செய்யும் வல்;லமையைத் தனக்குள் கொண்டவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் என்பதற்கு இச்சொற்பொழிவு சான்றாகிறது.

    வைணவ முப்பொருள்

                    திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களுள் காணலாகும் வைணவ தத்துவக் கருத்துகளை எளிமைபட தம் பொழிவில் எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். வைணவ தத்துவங்களில் மூன்று அடிப்படைக் கருத்துகள் அமைந்துள்ளன. அவை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்பனவாகும். இவை துவைதம்,அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவங்களுக்கு முற்பட்ட பழமை உடையவை.

                    இவற்றுள் தத்துவம் என்பது மூன்றாக அமைவது. சித்து. அசித்து, ஈசுவரன் ஆகியன கொண்டது. இதனை தத்துவத்திரயம் என்பர். இதம் என்பது வீடுபேற்றிற்காக கடைபிடிக்கப்படும் வழியாகும். இது இருவகைப்படும். பக்தி, பிரபக்தி என்பன அவையிரண்டும் ஆகும். புருஷார்த்தம் என்பது பரமபதநாதனுக்கு அடிமைத் தொழில் புரிவது, அதன் காரணமாக எம்பெருமான் மகிழ்தல் ஆகியன கொண்டதாகும்.

                    வைணவ தத்துவங்களில் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது ~இதம் | என்பதாகும்.  ~~இதம்|| என்பது உயிர்கள் கடைத்தேற வழிகாட்டுவது. இறைவனைப் பக்தி வழியில் அணுகுவது, அல்லது சரணாகதி அடைந்து பெறுவது என்பதாகும். இப்பொருள் பற்றி கலியன் குரலில் காட்டப்பெற்றுள்ள செய்திகளை வகுத்துரைப்பது என்பது இக்கட்டுரையின் அமைப்பாகும்.

    பக்தி நெறி

                    ~இதம்| என்பதின் இருநிலைகளில் ஒன்றாக அமைவது பக்தி நெறியாகும். இப்பக்தி நெறியின் இயல்பினைப் பின்வருமாறு பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் காட்டுகிறார். ~~பக்தி நெறி- இதில் பல படிகள் உண்டு. இதனை வீடுபேறு அடையும் வரையில் அநுட்டித்துக்கொண்டே இருத்தல் வேண்டும். பலன்பெற நெடுங்காலம் கழிய வேண்டும். இதனை அங்கங்களுடன் அநுட்டிக்கும் முறை மிகக் கடினமானது. இக்கால்தில் பக்தி நெறியை அநுட்டிப்பதற்கு அதிகாரிகள் இலர் என்று கூடக் கூறலாம். நாதமுனிகள் போன்ற யோகமுறை தெரிந்தவர்கள் தாம் இதற்கு அதிகாரிகளாவர்| (கலியன் குரல், ப.174) என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர். இக்கருத்தின் வாயிலாக பக்திநெறி வழி எம்பெருமானை அணுகுவது என்பது காலஅளவில் நீண்டது என்பதை உணரமுடிகின்றது.

    பிரபக்தி நெறி

                    பிரபக்தி நெறி என்பது உயிர்கள் தாமாக முன்வந்து தம்மைப் பரம்பொருளிடம் அடைக்கலப்படுத்திக்கொள்ளும் நிலை ஆகும். பிரபக்திநெறி பற்றி பின்வருமாறு குறிக்கிறார் பேராசிரியர். ~பிரபக்தி நெறி- இதுவே சரணாகதி நெறியாகும். எல்லோரும் எளிதாக அநுட்டிக்கக் கூடியது. சுக்கிரீவன், வீடணன், காகம் (காகாசுரன்) போன்றோர் இந்நெறியைக் கடைபிடித்தே உயந்தவர்கள். இந்த பிரபக்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் ~பிரபந்த ஜன கூடஸ்தர்| என்று வழங்குவதும் உண்டு. பிரபக்தி நெறியைக் கடைபிடிக்கும் வைணவர்கள் யாவர்க்கும் தலைவர் என்பது இதன் பொருள். திருமங்கை ஆழ்வார் கடைப்பிடித்த நெறியும் இதுவே|| (கலியன் குரல், ப. 114) என்பது பிரபக்தி நெறி பற்றிப் பேராசிரியர் தரும் விளக்கம் ஆகும்.

                    இக்கருத்தின்வழி ;வைணவ சம்பிரதாயங்களில் சரணாகதி என்பது முக்கியமானது. அனைவராலும் எளிமைபட கைக்கொள்ளத்தக்கது என்பது தெரியவருகிறது. எனவே உயிர்கள் அனைத்தும் சரணாகதியாக ஆண்டவனைப் பெற்றால் கடைத்தேறுவது எளிது என்பது உறுதியாகின்றது.

                    திருமங்கை ஆழ்வார் பிரபக்தி நெறியில் நின்றமைக்கு பெரிய திருமொழியில் உள்ள ஒன்பதாம் திருமொழியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் ஒன்பது முறை தன்னை இத்திருமொழியில் அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.

                    தாயேதந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

                    நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

                    வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா

                    நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே (பெரியதிருமொழி-1028)

    என்ற பாடலின் ஒருபகுதியை எடுத்துரைத்துப் பேராசிரியர் திருமங்கையாழ்வார் அடைக்கலப்படுத்திக்கொண்டமையை அடையாளப்படுத்தியுள்ளார். ~ஆனாய் வந்தமைடந்தேன், அன்றே வந்தடைந்தேன், அலந்தேன் வந்தடைந்தேன், அப்பா, வந்தடைந்தேன், அண்ணா, வந்தடைந்தேன், அரிய வந்தடைந்தேன், ஆற்றேன் வந்தடைந்தேன், அற்றேன் வந்தடைந்தான் என்று ஒன்பது பாடல்களில் தன்னை அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார் திருமங்கை ஆழ்வார். மேற்பாடலில் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் ஆகியோரின் தொடர்பினைக் கொண்டதால் நோயே பற்றியது. அவற்றை விடுத்து, எம்பெருமானே உன்னை அடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இது அடைக்கலப்படுத்துவதில் முதல்நிலையாகும். மேலும் இவரின் அடைக்கலப்படுத்தியத்தன்மைக்கு

                    துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம், துறந்தமையால்

                    சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே

                    அறம்தான் ஆய்த்திரிவாய் உன்னைஎன மனத்தகத்தே

                    திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே ( பெரிய திருமொழி. 1469)

    என்ற மூன்றாம் பெரிய திருமொழிப்பாடலையும் காட்டுகிறார் பேராசிரியர். இதற்கு காஞ்சி பிரதிவாதி அண்ணங்கராசாரியார் எழுதிய உரை பின்வருமாறு. ~~ப்ராக்கருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவம் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலை நிற்கமாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச் செய்து தேவரீர் திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன் என்கிறார். ~ப்ரித்யக்தா மாய லங்கா|| (விட்டொழித்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போல் அருளிச்செய்கிறார் காண்மின்|| என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

                    அடைக்கலமாகின்றபோது, நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் ஆகியோர்களின் உறவுகளை விட்டொழித்து கடவுளைச் சரணடையவேண்டும் என்பது இத்திருமொழி வாயிலாகப் பெறப்படும் கருத்தாகும். அடைக்கலப்படுத்திக்கொள்வதில் இது இரண்டாம் படிநிலையாகும். அடுத்து,

                    வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள்எந்தாய்

                    ஆறா வெந்நகரத்து அடியேனை இடக்கருதி

                    கூறா ஐவர்வந்து குமைக்க குடிவிட்டவரைத்

                    தேறா துன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே|| (1464)

    என்ற பாடலில் ஐம்புலன் ஆசைகள் விடுத்து வந்த உன்னை அடைந்தேன் என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். இதன்வழியாக அடைக்கலம் புகுமுன் ஐம்புல வேட்கையினை விட்டொழிக்கவேண்டும் என்று தெரிகிறது. ~~படைப்புக்காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்பலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. அவற்றை  நம்பாமல் உன்னிடம் சரண் புகுகின்றேன். காத்தருள்க|| என்று இப்பாசுரத்திற்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். இது மூன்றாம் படிநிலையாகும்.

                    நைமிசாரண்யத்து எம்பெருமானைப் பாடும்போதும் ~திருவடி அடைந்தேன்| என்று குறிப்பிட்டுப் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

                    வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்ப்பொருள்தாரம் என்றிவற்றை

                    நம்பினார் இறந்தால் நமன் தமர்ப்பற்ற எற்றி வைத்து எரியெழுகின்ற

                    செம்பினாலியன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதர்க்கஞ்சி

                    நம்பனே வந்துத் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

    என்ற பாடலில் இழிவான செயல்களில் இருந்து மீண்டு பரம்பொருளை வந்தடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். தம் மனைவியைத் துறந்து, பிறன் மனைவி, பொருள் இவற்றை விரும்பும் ஒருவன் இறந்தால் அவனை எமதூதர்கள் வந்து இழுத்துச்சென்று,  செம்பின் குழம்பினால் செய்யப்பெற்ற தீப்பற்றி எரிகின்ற பொம்மையைக் கொடுத்துத் தழுவச் சொல்வார்கள் என்று தண்டனை அளிக்கப்பெறும் என்று ஆழ்வார் குறிக்கிறார்.. அதற்கு அஞ்சி நம்பன் திருவடி அடைந்தேன் என்று குறிக்கிறார் ஆழ்வார். இது நான்காம் படிநிலையாகும். பாவச்செயல்களைச் செய்பவன் பாவி. அவனை அழுத்திக் குறிக்க இப்பாசுரத்தில் பாவீ என்று நீட்டல் விகாரம் அளிக்கப்பெற்றுள்ளது. பாவங்களில் இருந்து நீங்கி நிற்பது என்பது அடைக்கலப்படுத்துவதில் நான்காம் நிலையாகும்.

                    ஆழ்வாரின் பாடல்களை, தாய், தந்தை, மக்கள், நண்பர், எதிரிகள்,சுற்றம், ஐம்புலன்கள் ஆகிய தொடர்பினை அறுத்துக் கொண்டால் அடைக்கலம் பற்றுவது எளிது என்ற நிலையில் பேராசிரியர் வரிசைப் படுத்தித் தந்துள்ளார். மேலும் பாவச் செயல்களைப் புரியாது அதிலிருந்து மீண்டு ஆண்டவனை அடைக்கலமாகவேண்டும் என்ற நிலையையும்  ஆழ்வார் காட்டுவதை வெளிப்படுத்தியுள்ளார் பேராசிரியர். மேற்சுட்டப்பெற்ற நான்கு படிநிலைகளைக் கடந்தால் பரம்பொருளை அடைக்கலமாகலாம்.

    நம்மாழ்வாரின் அடைக்கலநிலை

                    திருமங்கை ஆழ்வாரின் அடைக்கல நிலையை எடுத்துரைக்க வந்த பேராசிரியர், அதனுடன் நம்மாழ்வார் தம்மை அடைக்கலப்படுத்திக் கொண்ட நிலையையும் எடுத்துரைக்கிறார். பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் உள்ளம் நம்மாழ்வார் பாடல்களில் தோய்ந்தது என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது. ~~சரணாகதித் தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்தர்களின் தலைவராக விளங்கும் நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய்மொழியில் ~நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்;ச்சடகோபன்|, (5.9.11) என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்;ச்சடகோபன் (5.8.11) என்றும், தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ~எனக்கு நின் பாதமே சரணாகத் தெந்தொழித்தேன்|| (5.8.11) என்று எம்பெருமான் தமக்குச் சரணாக அமைந்தமையையும் ~உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே| (6.10.10) என்று தாம் எம்பெருமானின் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார்|| (கலியன் குரல், ப. 177)  என்ற குறிப்பு நம்மாழ்வாரின் சரணாகதி நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. வைணவத்தில் மிக முக்கியமான பக்தி நிலை பிரபக்தி நிலை என்பதை இக்கருத்துகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சரணாகதி நிலையின் பெருமை பற்றியும் அதனை அடைய உயிர்கள் தொடர்பற்று இருக்கவேண்டிய நிலையையும் திருமங்கை ஆழ்வாரின் வாக்கின் வழியாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    பிரபத்தி செய்வோருக்கு வேண்டப்பெறுவன

                    பிரபத்தி செய்வோருக்கு இரு நிலைகள் வேண்டப்பெறுகின்றன. அவை. 1. ஆகிஞ்சந்யம், 2. அநன்னியகதித்துவம் என்பனவாகும்.

    ஆகிஞ்சநயம்

    ஆகிஞ்சநயம்; என்பது, கன்ம ஞான பக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருக்கை. அதாவது முன்னர் சொன்ன தாய்,தந்தை, பிள்ளைகள், உறவுகள். ஐம்புலன்கள் தொடர்பற்று இருத்தல். இவை திருமங்கை ஆழ்வார் வாக்கின் வழியாகவே இக்கட்டுரையில் விவரிக்கப்பெற்றுள்ளன.

    அநன்னியகதித்துவம்

                    அநன்னியகதித்துவம் என்பது ஆன்மா பதிகாப்பிற்கு எம்பெருமாளைத் தவிர வேறொரு காக்கும் பொருள் அற்றிருக்கை. இதற்கு திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாடலைச் சான்றாக்குகிறார் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்.

                    குலந்தானெத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்

                    நலந்தானொன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்

                    நிலம்தோய் நீள முகில்சேர் நெறியார் திருவேங்கடவா

                    அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (1031)

    என்ற பாடலில் எம்பெருமானைத் தவிர வேறுயாரும் என்னை ஆட்கொண்டருள இயலாது என்று தெளிந்து உரைக்கிறார் திருமங்கையாழ்வார்.

                    இவ்வகையில் கலிகாலத்தில் கலியன் குரல் கொண்டு எம்பெருமானை அடைய சரணாகதியே சிறந்தவழி என்று காட்டுகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    Share
  • ஒளிப்பிழம்பு

     
    மீ.விசுவநாதன்
    ஊரெல்லாம் கண்விழிக்க உயரத்தில் உள்ள
    ஒளிகக்கும் ஆதவனோ வானில் மெல்லச்
    சீரோடு செங்கதிரைத் தெளித்துக் கொண்டே
    சிந்துகிறான் மஞ்சளுடன் நீலம் சேர்த்து !
    தேரோடும் வீதியிலே சாண நீரைத்
    தெளித்தபின்னே பெருக்கிவிட்டுப் புள்ளிக் கோலம்
    போடுகிற பெண்பார்த்துச் சிவந்த கண்ணாய்ப்
    பொலிகிறது கிழக்கினிலே ஒளியாம் கோளம் !

    விடிந்ததுபார் என்றங்கே பறக்கும் புட்கள் !
    வேதியர்கள் நீராட நதிக்கே செல்வர் !
    மடிந்ததுபார் இரவென்றே வெள்ளைக் கொக்காய்
    மடமடெனக் கதிரவனும் மேலே ஏறிக்
    கொடியுயர்த்திச் சாதிமதம் பாரா வண்ணம்
    குறைவின்றிக் கொட்டிடுவான் வெளிச்சப் பூவை !
    படிப்படியாய்ச் சூடுதனை பறக்க விட்டும்
    பசுமைக்குக் காவலனாய் இருக்கின் றானே !

    எத்தனையோ கோள்களெல்லாம் இருந்த போதும்
    எரிகின்ற சூரியனே உற்ற நண்பன் !
    வித்தகர்கள் வீசிவிடும் ராக்கெட் கூட
    விண்ணினிலே இவன்பக்கம் செல்வ தில்லை!
    நித்திலமாய்த் தோன்றுகிற நிலா வுக்கும்
    நீட்டுகிறான் தன்னொளியைக் குளிர்ச்சி யாக !
    புத்தியிலே காயத்ரி வேத மாகப்
    புகுந்திட்டப் பொன்னொளியைப் போற்று கின்றேன் !

    (10.07.2016)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -35

    க. பாலசுப்பிரமணியன்

    எப்படி எப்போது படிக்கவேண்டும்?

    education

    பல வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப்  பற்றிச் சொல்லும் பொழுது:

    ” படிக்கும் போது இவனுக்கு கவனமே இருப்பதில்லை”;

    “ஏண்டா. கன்னத்திலே கைவைத்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டு படிக்கிறே?”;

    “நீ படிக்கிற இடத்திலே புத்தகத்தில் வெளிச்சமே விழலே.. என்னதான் படிக்கிறாயோ?”

    “இப்படி உட்கார்ந்து படித்தால் முதுகிலே கூனல் விழுந்து விடும்”

    “படிக்கும்பொழுது எதுக்கு ஐ போனைக் காதிலே  வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு படிக்கிறாய்?”

    “சோபாவிலே படுத்துக்கொண்டு படிச்சா எப்படி மண்டையிலே ஏறும்?” – என்றெல்லாம் சொல்லுவதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

    படித்தல் என்பது ஒரு தனி நபருடைய ஈடுபாடான செயல். அது ஒவ்வொருவரின் உள்ளுணர்வுகளை ஒட்டி வேறுபட வாய்ப்பிருக்கின்றது. இருந்தாலும் பொதுவாக படிப்பத்தைச்  சீர்படுத்த சில விதிமுறைகள் உள்ளன. அந்த கோட்பாடுகளை பின்பற்றும் பொழுது அந்தச் செயல் சிறப்பாக அமைகின்றது. .

    உதாரணமாக:

    1. படிப்பதற்க்கென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து படித்தல் நலம்.
    2. படிக்கும் இடம் அமைதியான இடமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
    3. படிக்கும் இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.
    4. படிக்கும் இடத்தில் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் பொருள்களை நீக்கிவிட வேண்டும்,
    5. படிக்கும் இடத்தில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும்.
    6. படிக்கும் இடம் காற்றோட்டமாக இருத்தல் நல்லது,
    7. நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல் கவனத்தை அதிகரிக்க வாய்ப்பு தரும்.
    8. படிக்க ஆரம்பிக்கும் முன் சில நிமிடங்கள் கண்களைமூடி கவனத்தை நிலைநிறுத்தினால் கவனம் சிதறாது.
    9. படிக்கும் நேரத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி, அலைபேசி, கணினி ஆகியவற்றை அந்த இடத்தில் இருந்து நீக்குதல் நல்லது.
    10. எதை படிக்கவேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்தல் நல்லது.
    11. கண்கள் சோர்வாக இருக்கும் பொழுது படிப்பதை தவிர்ப்பது நல்லது.
    12. மூளை சோர்வடைந்த நிலையில் இருக்கும்போது படித்தலைத் தவிர்த்தல் நலம்.
    13. செடிகொடிகள் சன்னலருகில் இருக்கும் இடங்களில் அமர்ந்து படித்தல் பயன் தரும்.
    14. மெல்லிய இசை அலைகள் படிப்பதற்கான சூழ்நிலையை மேம்படுத்தும்.
    15. கடின உழைப்பிற்குப் பின் ஓய்வின்றி படித்தலைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது படித்தல் அதிக பலனைத் தராது. மேலும் அது நீண்ட நாட்கள் தொடரும்போது கண்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தலாம்.

    மூளை செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் மூளையின் கற்கும் திறனை வகைப்படுத்தும் வகையில் வலது மூளை மற்றும் இடது மூளையின் சிறப்புத் திறன்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

    இதைப் பற்றி தனது ( Brain Based Learning ) “மூளை சார்ந்த கற்றல் ” என்ற புத்தகத்தில் எரிக் ஜான்சன் என்பவர் வலது மூளை- இலக்கியம், இசை, மொழிவல்லமை, கலைத்திறன்கள் போன்றவற்றிக்கு உறுதுணையாகவும், இடது மூளை -கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மற்றும் தர்க்க சம்பந்தமான கற்றலுக்கு உறுதுணையாகவும் இருப்பதை விளக்கியுள்ளார். மேலும் மூளை- வலது மூளைத் திறன்களையும், இடது மூளைத்திறன்களையும் மாறி மாறி உபயோகப் படுத்துவதாகக் கூறியுள்ளார். ஆகவே, ஒரு சாதாரண மனிதனின் மூளை 90 நிமிடங்கள் வலது சார்புடையதாகவும் அடுத்த 90 நிமிடங்கள் இடது சார்புடையதாகவும் வேலை செய்வதாகவும், இதுபோன்று  24 மணி நேரத்தில் 18 முறை மாற்றங்கள் நடப்பதாகவும் ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். இதன் பொருள் அந்த நேரத்தில் மூளையின் மாற்றுப் பகுதி வேலை செய்யாது என்பதல்ல. அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கலாம் என்பதே. தற்போது மூளையின் இருபகுதிகளும் இணைந்து வேலை செய்யும் (Whole Brain Learning) திறன்களைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் வெளி வந்துள்ளன.

    ஆகவே, படிக்கும் பொழுது பாடங்களையும் நேரத்திற்கும் மூளையின் செயல்பாடுகளுக்குத்  தக்கபடியும் மாற்றியமைத்தல் படிப்பு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிக்கூடங்களில் பாடங்களுக்கான அட்டவணை அமைக்கும் பொழுது கற்றலுக்கான விஷயங்களை இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைத்தல் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 12

    நிர்மலா ராகவன்

    வெண்ணையும், சுண்ணாம்பும்

    நலம்-
    மூத்த மகன் அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பப்பட, இளையவன் தனியார் பள்ளிக்குப் போனான். ஏனெனில், மூத்தவன் கறுப்பு.

    தம் செல்வச் செழிப்பு, உயர் கல்வி இதிலெல்லாம் அடைந்த பெருமையைவிட, பெற்றோர் இருவருக்கும் தாம் கறுப்பாக இருக்கிறோமே என்பதுதான் பெரிய குறையாக இருந்தது. அதைப் போக்கவேபோல் இரண்டவதாகப் பிறந்த `வெள்ளையனை’ (அவனுடைய செல்லப்பெயர்) தெய்வமாகவே மதித்து நடத்தினார்கள்.

    வெள்ளையன் கேட்பதற்கு முன்னாலேயே அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும். பெரியவன் `கருப்பையா’வுக்கோ தந்தையிடமிருந்து அடிதான் கிடைத்தது.

    `நான் எந்த தப்புமே பண்ணலியே! அப்பா ஏம்மா என்னை அடிக்கிறார்?’ என்று தாயிடம் முறையிட்டான் மகன்.

    “அப்பாதானே! பரவாயில்லே. வாங்கிக்கோ,’ என்றாளாம் தாய்! (அவள் என்னிடம் கூறியது).

    மகனும் பொறுத்துப்போனான். எலும்பும் தோலுமாக மகன் ஆனபின்னர்தான் தாய் விழித்துக்கொண்டாள்.

    மகனை இன்னமும் அடித்தால், தான் அவனை அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிடுவதாக கணவனை எச்சரிக்க, அவர் தன் போக்கை மாற்றிக்கொண்டார். அடிக்குப் பதில் ஓயாத வசவு.

    “அவன் ரொம்ப ஒடுங்கி இருக்கிறான். ஏதாவது செய்யுங்களேன்!’ என்று எனக்குக் கோரிக்கை விடுத்தாள் தாய்.

    நான் தனிமையில் அவனுடன் பேசினேன். “இந்த அப்பாக்களுக்கே ஒரு குழந்தை உயர்த்தி. இன்னொன்றைக் காரணமின்றி அடிப்பார்கள், இல்லை திட்டுவார்கள்,’ என்று பொதுவாக ஆரம்பித்து, “ஒங்கப்பாவும் இப்படித்தானா?” என்று கேட்டேன்.

    “இல்லை!” கேள்வி முடியுமுன், மறுப்பு வந்தது. பதில் வந்த வேகத்திலிருந்தே அவன் சொல்வது உண்மையல்ல என்று தெரிந்துவிட்டது.

    நான் விடாப்பிடியாக, எனக்குத் தெரிந்த சிலரைப்பற்றிக் கூற, அவன் தன்னையுமறியாது, “எங்கப்பாவும் அப்படித்தான். எதுக்கு திட்டறாருன்னே புரியாது!” என்று ஒப்புக்கொண்டான்.

    அப்போது அவன் கல்லூரி மாணவன். மகா புத்திசாலி. “உன் பாடத்தில் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேளேன்!” என்றேன். தன்னை மகன் நாடுகிறானே என்று சிறிது பெருமை எழுந்தால், அவனுடன் நெருக்கமாக உணர்வாரோ என்று நினைத்தேன்.

    “சந்தேகமே கிடையாதே!” என்றான், பட்டென்று.

    அவன் பெரியவனாக ஆனபிறகும், முகத்தில் சிரிப்பே கிடையாது. காதல் மனைவியும் அவனை மதிப்பதில்லை. குடும்பம்’ என்றாலே இப்படித்தான் இருக்கும்போலிருக்கிறது என்று நினைத்தவன்போல், வேலையிலேயே மூழ்கி, தன்னை மறக்கிறான். அதனால் உத்தியோகத்தில் பெரிய பதவி.

    வேலை முடிந்து திரும்பியவனிடம் ஒரு முறை, “இன்று உன் தினம் எப்படிப் போயிற்று?” என்று கேட்டேன்.

    சுவாரசியமாக விவரித்தான். ஏதோ மீட்டிங். வழக்கம்போல், எல்லாரும் உணர்ச்சிவசப்பட, நாற்காலிகள் காற்றில் பறந்தன என்று அவன் கூற, இருவரும் சேர்ந்து சிரித்தோம். “நீயுமா?”

    பெருமையுடன், “ம்!” என்று ஆமோதித்தான். பல காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைப் பின் எப்படித்தான் வெளிப்படுத்துவது!

    அப்பா அவருடைய சிறு வயதில் நிறைய அடி வாங்கியிருக்கலாம். அப்போது தன் தந்தையை எதிர்க்க முடியாத நிலையில் இருந்ததால், அந்த ஆத்திரம் மகனிடம் திரும்பியிருக்கிறது. (வதைக்கும் பெற்றோர் தன்னைப்போல் இருக்கும் குழந்தையிடம்தான் வன்முறையைப் பிரயோகிப்பார்கள்).

    இது புரிந்து, `கருப்பையா’ மகனிடம் மிகக் கனிவுடன் நடந்துகொள்கிறான்.

    அவனுடைய தாய் என்னிடம், “அது எப்படி மூன்று, நான்கு வயதுவரை கொஞ்சி வளர்த்த மூத்த பையன், இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்ததும் வேண்டாதவனாக ஆகிவிடுகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறாள்.

    யாருக்குப் புரிகிறது இந்த மனிதர்களின் சுபாவம்!

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(128)

    செண்பக ஜெகதீசன்

     

     

    வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்       

    குறியெதிர்ப்பை நீர துடைத்து.

         -திருக்குறள் -221(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    ஏதுமில்லா வறியவர்க்கவர்

    இதயங் குளிர

    இயன்றவரைக் கொடுப்பதுதான்

    ஈகை..

     

    இது தவிர

    ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

    ஈகையாகாது,

    அவரிடம்

    ஏதோ ஒன்றை

    ஏதிர்பார்த்துச் செய்வதேயாகும்…!

     

    குறும்பாவில்…

     

    இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை,

    ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

    எதையோ எதிர்பார்த்துக் கொடுப்பதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இல்லை யென்று வருவோர்க்கே

         இருப்பதை மனதுடன் கொடுப்பதுதான்

    நல்ல செயலாம் ஈகையென்பதால்

      நாளும் இதனைச் செய்வீரே,

    அல்லா தோர்க்குக் கொடுப்பதெல்லாம்

       அவரிடம் எதையோ எதிர்பார்க்கும்

    பொல்லாச் செயலாய் போய்விடுமே,

      புரிந்து கொள்வீர் மானிடரே…!

     

    லிமரைக்கூ…

     

    ஈகையென்பது இல்லாதவர்க்குக் கொடுப்பதே,

    மற்றவர்களுக்குக் கொடுப்பது அவரிகளிடம் எதையோ

    எதிர்பார்க்கும் அவப்பெயரை எடுப்பதே…!

     

    கிராமிய பாணியில்…

     

    குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

    கைநெறயக் குடுத்து ஒதவணும்,

    இல்லயெண்ணு வருவோர்க்கு

    இருக்கிறதக் குடுத்து ஒதவணும்

    இதுக்குப்பேருதான் ஈக..

     

    இதவுட்டு

    இருக்கவுனுக்கே குடுத்தியண்ணா

    ஈகயில்ல அது ஈகயில்ல,

    எதயெதயோ அவங்கிட்ட எதிர்பாக்கிற

    ஈனச்செயலாப் பேயிருமே..

     

    அதால,

    குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

    இல்லயெண்ணு வருவோர்க்கு

    இருக்கிறதக் குடுத்து ஒதவணும்…!

     

    –செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • “மீண்டும் போ-டிப்ஸ் ” (ஆலிவர் கோல்ட்ஸ்மித் மன்னிப்பாராக !!)

    க. பாலசுப்பிரமணியன்

    “ஆறு மணி ஆச்சு, சீக்கிரம் எழுந்திரும்மா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா, காலையிலே எந்திருதோம்மா, குளிச்சோம்மான்னு இல்லாம, இப்படியா தூங்கிக்கொண்டு….” பதஞ்சலி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவதைக்கண்ட அவர் மனைவி பார்வதி..”கொஞ்சம் கேளுங்கோ.. அவ ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுக்கொண்டிருந்தா.. தூங்கினா தூங்கிட்டுப்போறா கொஞ்ச நேரம் ” தன் மகள் ஜெயந்திக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வர…

    ஜெயந்தி தன்னுடைய தூக்கத்திலே ஒரு புன்முறுவலுடன் ” அப்பா.. வாசல்ல யாரோ கதவைத் தட்டுகிறார்கள் பாருங்கோ” என்று சொல்ல, கதவைத் திறந்து பார்த்து விட்டு “ஒருத்தருமில்லை. இந்தக் காலையிலே யார் நம்ம வீட்டுக்கு வரப்போறா ” என்கிறார்.

    பதஞ்சலி ஒரு சாதாரண நல்ல மனிதர். கும்பகோணத்தில் மூதாதையர் காலம் முதல் குடியிருப்பு. சிறு வயது முதலே அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வேலை. அந்த விநாயகர்தான் அவருக்குத் துணை.

    காலை ஆறு மணி முதல் பகல் பதினொன்று வரை கோவிலில் இருப்பார். பின் மதியம் வீட்டில் உணவு அருந்தி விட்டு சிறிய தூக்கம். மீண்டும் மாலை நாலரை முதல் இரவு ஒன்பது வரை கோவிலே கதி .. பார்வதி காலையிலே குளித்துவிட்டு கோவிலுக்கு நைவேத்தியத்திற்கு ஏதாவது பண்ணிக் கொடுப்பார். அதே போல் மாலையிலும்…

    அவர்களுக்கு ஒரே மகள்.. ஜெயந்தி ..பத்தொன்பது வயது.. அருகிலுள்ள பெண்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு ..இரண்டாவது வருடம்… ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பு.  அவளுக்கு ஆசை அதிகம்.. தூக்கத்தில் எங்கெங்கெல்லாம் அவள் உலா போவாள் என்று அவளுக்கே தெரியாது.

    “அப்பா… சரியாய் பாருங்கோ வாசலிலே யாரோ நிக்கறா.. “

    பதஞ்சலி மீண்டும் கதவைத் திறக்க… “ஹல்லோ .. மிஸ்டர். பதன்..எலி ..வீடு இதுதானே” .

    அதிசயமாக அந்த உருவத்தைப் பார்த்தவர் “பதன் எலி இல்லை.. நான் பதஞ்சலி..” என்று திருத்த.. “சாரி.. ” என்று வந்தவர் தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள ..

    பதஞ்சலி வந்தவரைக் கூர்ந்து கவனிக்கிறார்.. ஒல்லியான தேகம். சுமார் 5 அடி 9 அங்குலம் உயரம். சிவப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வண்ணம்.. தலைமுடி மஞ்சளும் வெள்ளையும் கலந்தது போன்ற தோற்றம்..

    பல கிழிசல் துணிகளை எடுத்துத் தைத்தது போல் பல வண்ணங்களுடய ஒரு சட்டை.. நீலத்தில் ஒரு ஜீன்ஸ் பாண்ட் .. அதிலும் சில ஓட்டைகள்.. தலையில் கருநிறத்தில் ஒரு நீளமான தொப்பி..கையில் ஒரு நீளக் கம்பு.. (வாக்கிங் ஸ்டிக் போல).. மொத்தத்தில் பதஞ்சலிக்கு அவருடைய ஊர் குடுகுடுப்பாண்டி புதிய வேடம் புனைந்து  வந்தது போலிருந்தது…

    “இவரைப் பார்த்தால் நம்ம ஊர்க்காரர் மாதிரித் தெரியலேயே.. இங்கிலாந்தா.. அமெரிக்காவா ..இல்லை.. வேறே ஏதாவது நாடா… ” பதஞ்சலியால் ஊகிக்க முடியவில்லை.

    “நான்.. போ… ” என்று சொல்லிக்கொண்டே தான் கையை அவரிடம் குலுக்குவதற்காகக் கொடுக்க, தயங்கிய பதஞ்சலி “நமஸ்காரம் ..” என்று கைகுவிக்க, ” நான்.. போ.. டிப்ஸ் .. லண்டனிலேந்து ” அவன் சொன்னது, ஏதோ உருகிய உலோகம் தரையில் விழும் போது போடும் சத்தத்தைப் போல் அவர் காதில் விழுந்தது..

    அவனை உள்ளே வரச்சொல்லலாமா இல்லை வெளியிலிருந்தே கைகழுவி விடலாமா என்று அவர் யோசிக்கும் தருவாயில், ஒரு வெளிநாட்டுக்காரனை வாசலில் கண்ட ஆனந்தத்தில் பார்வதி   “ஏன்னா, வந்தவாளை உள்ளே வரச்சொல்லுங்கோ ..” என்று ஒரு நாற்காலியை இழுத்துப்போட அவர் முழிக்கிறார்.

    போ-டிப்ஸ் அடுத்த வார்த்தைக்கு காத்துக்கொண்டிராமல் “ஜெயந்தி எங்கே?” என்று ஆங்கிலத்தில் கேட்டதும் பதஞ்சலிக்கு தூக்கிவாரிப் போடுகிறது.

    “இவனுக்கு ஜெயந்தியை  எப்படித் தெரியும்? ” என்றும் சந்தேகம் எழுந்தது.

    “ஏண்டி.. சீக்கிரம் எழுந்திரு.. உன்னைப் பார்க்க வெளி நாட்டுலேந்து யாரோ வந்திருக்கா .. முகத்தைக் கழுவிண்டு ஓடி வா…” ஏதோ பெண் பார்க்க தான் மகளை தயார் படுத்தவது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு.

    ஜெயந்தி கண்ணாடி முன் நின்றுகொண்டு தான் முகத்தையும் புடவையையும் ஒருமுறை சரி செய்து கொண்டாள். கருப்பு மையிடும் பென்சிலைக்கொண்டு தான் புருவத்தையும் சற்றே சரிசெய்து கொண்டு, அம்மா தயாராக வைத்திருந்த காப்பி டம்பளரை எடுத்துக்கொண்டு போவின் முன்னே “காப்பி” என்று சொல்லிக்கொண்டே நீட்டினாள்.

    “ஹாய் பேபி,  எப்படி இருக்கே?” என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே தான் கையை அவளிடம் நீட்டினான். ஜெயந்தியும் ஒரு முறை தன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே கைகுலுக்குவதற்க்காக கையை முன் நீட்டினாள்.

    “கண்றாவி .. கண்றாவி ” என்று மனதுக்குள்ளே உறுமிக்கொண்டே பதஞ்சலி தன்னுடைய பெண்ணின் தைரியத்தைக் கண்டு சற்றே வியந்தார். “பரவாயில்லே.. படிக்க வைத்ததுக்கு நல்ல தைரியம் வந்திருக்கு.. எல்லாரையும் சமாளிக்கறாளே” என்ற பெருமிதம் பார்வதிக்கு..

    “தாங்க்ஸ் ஜெயந்தி.. காபி இஸ் வெரி நைஸ்..  ” என்று பாராட்டிக்கொண்டே தன் அருகில் இருந்த மோடாவை இழுத்துப் போட்டு ” ப்ளீஸ் .. உட்காருங்க…” என்று சொல்ல ஜெயந்தி மோடாவில் அமர பதஞ்சலிக்குக் கோபம் உச்சந்தலையைத் தொட்டது..

    ஜெயந்தியை இவனுக்கு எப்படித் தெரியும்? இவர்கள் முன்னதாக சந்த்தித்திருக்கிறார்களா? சாத்தியமில்லையே .. என நினைத்த பதஞ்சலியின் மனம் பல வேறு கோணங்களில் சிந்திக்க .ஆரம்பித்தது.

    ஒருவேளை.. போன வருடம் லீவுக்கு சென்னையில் தான் மச்சினன் வீட்டுக்கு சென்று இருந்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டது.. “இருக்கலாம். மச்சினனும் காதல் கல்யாணம் தானே.. “ அவன் மனசு எப்படி இருந்திருக்கும்? ஜெயந்தியை வைத்து அவன் தன்னை பழி வாங்குகிறானோ என்றும் நினைத்தார்.

    “டார்லிங்.. லேடி பிரௌன், லார்ட் பிரௌன் ரெண்டு பெரும் உன்னை ரொம்ப விசாரிச்சாங்க..உன்னுடைய சிரிப்பை எப்போதும் பாராட்டுவாங்க.. :” என்று போ ஆங்கிலத்தில் சொல்ல, “தாங்க்ஸ்” என்று ஜெயந்தி பதில் கொடுத்ததை பார்த்த அவருக்கு முதலில் எப்படி அவனை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்ற சிந்தனை தோன்றியது..

    “ஏம்மா. ஜெயந்தி.. காலையிலே அவர்  டிபன் ஏதாவது சாப்பிடுவாரா.. தேங்காய் சட்னி அரைக்கட்டுமா” என்று பார்வதி சொன்னவுடன் பதஞ்சலி அவளை முறைத்துப் பார்த்தார்.  கொஞ்சம் விட்டால் இவனை வீட்டோடு மாப்பிளையாக ஆக்கிக் கொண்டு விடுவாளோ என்ற பயமும் ஏற்பட்டது.

    ” ஞாபகம் இருக்கா ஜெயந்தி… லண்டன் ஹைட் பார்க்கல நாம ரெண்டு பெரும் கைகோர்த்துக்கொண்டு போகும் பொழுது எப்படி எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள் என்று.. அப்புறம் தேம்ஸ் நதிக்கரையோரம்…   .”

    ஜெயந்தி மனத்திற்குள் சிரித்த்துக்கொண்டாள்..

    “நாசமாய் போச்சு… இவன் என்ன என்னலாமோ சொல்றானே.. இந்தப் பெண்ணும் எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்காளே…என்ன நடக்கறதுன்னு ஒண்ணுமே புரியலியே..” என்று பதஞ்சலியின் மனம் படபடத்தது…

    “சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு வா. உன்னை மறுபடியும் லண்டனுக்கு அழைத்துக்கொண்டு போகணும். ” என்று போ சொன்னபோது பதஞ்சலிக்கு கொஞ்சம் தலை சுற்ற ஆரம்பித்தது..

    “சார்… உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க யாருன்னே எங்களுக்குத் தெரியாது.. என்ன வேணும் சொல்லுங்கோ..எங்களுக்கு வேற வேலை நிறைய இருக்கு… ” பதஞ்சலி படபடவெனப் பேசினார்.

    “ஐ வாண்ட் ஜெயந்தி… எனக்கு ஜெயந்தி வேணும்.. அவளை நான் லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகணும் “

    பதஞ்சலி ஜெயந்தியின் முகத்தை சற்றே கூர்ந்து நோக்கினார். அவள் மௌனம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

    பார்வதியோ தன் பெண்ணின் பிரசவத்திற்கு லண்டன் போனால் எப்படி இருக்கும் என்ற கனவில் இறங்கிவிட்டாள்

    “”பகவானே.. ஜகத்பாலகா ..இது என்ன சோதனை…” என்று நொந்து கொண்டே பதஞ்சலி குளியலறையை நோக்கி சென்றார்.. “முழுகிடறேன்.. தலை முழுகிடறேன் ..” என்று சொல்லிக்கொண்டே அண்டாவிலிருந்து நாலு சொம்பு தண்ணீரை மட மடவென்று தலையில் கொட்டிக்கொண்டவர்..அப்படியே ஒரு சொம்பு தண்ணீரை ஜெயந்தி தலையில் கொட்டிவிட…

    “அப்பா… அப்பா… தலையிலே தண்ணி கொட்டாதீங்கோ.. ” என்று அலறிக்கொண்டே எழுந்த ஜெயந்தி

    “போ.. போ டிப்ஸ் எங்கே.? போயிட்டாரா.. நீங்க அவரை விரட்டிட்டேளா? லண்டனுக்கே திரும்பிட்டாரா? ” என்று கேட்டாள்.

    “போ.. வாவது.. வாவாவது .. ஏதாவது கனவு கண்டாயா?” என்று பார்வதி தன் மகளை உலுக்கிவிட…

    “என்னடி கனவு?… நல்லதா?.. பொல்லாததா?… காலையிலே கனவு கண்டால் பலிக்கும்னு சொல்லுவாங்களே.. என்னடி கனவு கண்டே ?” என்று தந்தை அங்கலாய்க்க ..

    படுக்கையை விட்டு எழுந்த ஜெயந்தியின் உடலிலிருந்து அவள் முந்திய இரவு படித்துக் கொண்டிருந்த ஆங்கில பாடப் புத்தகம் கீழே விழ…

    “பரவாயில்லே.. மேடம்.. ஆலிவர் கோல்ட்ஸ்மித்தோட “போ-டிப்ஸ் ” பாடத்தை நல்லாவே  நடத்தினாங்க ” என்று அவள் மனம் சூளுரை சொல்ல…

    அவள் கண்கள் வாசலை நோக்கி ஓடின.. ஒரு வேளை போ-டிப்ஸ் வெளியே வந்து நிற்பானோ என்ற சந்தேகத்தில்..!!

    Share