இசைக்கவி ரமணன்

kural

 

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 2

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (01:01)

 

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டவை.

 

சொற்பொருள் – இலக்கணம்

 

அ = அந்த, (அப்பசியை, அவ்வூன்) உடைய

அகரம் = சாரியை பெற்ற எழுத்து

சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.

 

முதல = முதலை உடையன = அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று

 

எழுத்து = எழுதப் படுவது. எழும் எண்ணம் வரிவடிவம் பெறுவது எழுத்து.

 

ஆதி = முதல் (அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் 55:செங்கோன்மை:543) வடமொழி, காலப் பெயர்

 

பகவன் = கடவுள், ஆரியம் பகவான். ஆண்பால், பொருட்பெயர். பகவு என்றால் பிளவு, எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு 89: உட்பகை:889)

 

ஆதி பகவன் = Primal Deity

 

முதற்றே = முதலையுடையது, அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று.

 

உலகு = உலகம், இடப்பெயர்

 

டைப்பு என்பது மூன்று குணங்களாலானது. அவற்றின் விகிதாசார வேறுபாடுகளே மலையும், மனிதனும், விண்மீனும், புழுவும், புயலும், ஐம்பூதங்களும்! அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அறியப்படும். அவற்றுள், சத்வத்தால் அறமும், ரஜஸால் பொருளும், தமஸால் காமமும் விளைகின்றன என்பது உரை. இந்த மூன்று குணங்களும் ஒரு சரிசமமான முக்கோணமாக அமையும்போது மனிதன் என்பவன் தெய்வமாகிறான். அவற்றை எப்படிச் சமநிலையில் அமைத்துக்கொள்வது என்பதைச் சொல்லவே வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துப் பாடினார்.

அகரம் என்பது எல்லா எழுத்துக்களுக்கும் மூலம். `அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்` என்று கீதையில் கண்ணன் மொழிகிறான். (10:33) `அ` என்னும் எழுத்து கடவுளைக் குறிப்பதாக வடமொழி அகராதி நமக்குச் சொல்லும். `அ` என்பது எழுத்து மட்டுமல்ல, படைப்பின் ஆதாரமான நாதத்தின் ஆரம்பம். `அ` ஓர் எழுத்தாகத் தனியாகவும் நிற்கும். மற்றைய எழுத்துக்களுக்கு ஏற்பாகவும், அவற்றோடு இணைந்தும் நிற்கும். இறைவன், அவனளவில் தன்னந் தனியன். ஆயினும், தான் படைத்த படைப்பில் உட்புகுந்து ஊடுருவியும் நிற்பவன்.

ஆக, எழுத்துக்களுக்கு அகரம் மூலம். உலகுக்கு ஆதிபகவன் மூலம். பகவனாய் அறியப்படும், வேறுவிதம் அறியமுடியாத ஆதி.

மேலும், நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் முதல்முதல் வாயைத் திறந்ததும் வெளிப்பட்ட ஒலி `அ` தானே! நமக்கு, இதைச் செய்வதற்கே கூட, உடம்பு, வயிறு, தொண்டை எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் இறைவனுக்கு? அவன் `அ` என்று சொல்லுமுன் தோன்றி முடிந்துவிட்டதுதானே படைப்பு! அவ்வளவு அநாயாசம்!

ஆதி என்றால் பழமை என்று மட்டுமா பொருள்? அனைத்துக்கும் மூலம் அவன் என்றுமல்லவா புரிந்துகொள்ள முடிகிறது!

ஓரொலி உள்ளொளி ஓம்.

இதைப் பிரபஞ்ச ரீங்காரம், பிரணவமாகிய ஓங்காரம் என்று நாம் அறிவோம். அதிலிருந்துதான் சிருஷ்டி என்னும் படைப்பு தோன்றியது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஒலியின் சிறப்பு என்ன? இது விகாரமற்ற நாதம். அதாவது, இதில் வளர்ச்சி, தேய்வு போன்ற மாற்றங்கள் எதுவும் இல்லை. அதன் ஒலி கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. அது யாரும் ஏற்பாடு செய்த ஒலியில்லை. அது தான்தோன்றியாய், தன்னிச்சையாய் இடையறாது ஒரே ரீதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒலி `ஓ` என்று தொடங்கி `ம்` என்று முடிவதில்லை. `ஓம் ஓம்` என்றும் ஒலிப்பதில்லை. ஒரே ஓம். ஓம் ஒன்றே. இது அது என்று இதனை விளக்க முடியாததால், இது, எதுவுமேயில்லை எனப்படுகிறது. இது, எதுவுமே இல்லை என்பதால்தான் இதுவே அனைத்தும் என்றாகிறது. ‘Om, like Guru, is the biggest nothing; that is why, it is everything,’ என்பார் என் குருநாதர்.

இந்த ஒலி, ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒலிக்கிறது. இதயம் என்றால் பெளதிகமான இதயம் அல்ல. நட்ட நடு நெஞ்சு. யோக மொழியில் அனாஹதம் என்னும் நிலையம். `ஆஹதம்` என்றால் இரண்டு பொருட்கள் மோதுவதால், உரசுவதால், அல்லது தொடர்புகொள்வதால் விளையும் ஒலி. `அனாஹதம்` என்றால் எதன் விளைவாகவும் இல்லாமல் தன்னிச்சையாக விளங்கிக்கொண்டிருக்கும் ஒலி. குருவருளாலும், இடைவிடாத பயிற்சியாலும் ஒருவன் இந்த ஒலியைத் தன்னகத்திலிருந்து கேட்கிறான். அப்போது பிரபஞ்சம் மட்டுமல்ல, படைப்பு முழுதும் பரவியும், அனைத்திலும் ஊடுருவியும், எதனாலும் விகாரப்படாமலும் இருக்கும் ஒலியை உணர்ந்துகொள்கிறான். உள், வெளி போன்ற பேதங்கள் தொலைந்து, விரிவில் ஒடுங்குகிறான்.

’அ உ ம’ சேர்ந்ததுதான் ஓம் என்று கேள்விப்படுகிறோம். இப்போது `அகர முதல` அதாவது எல்லாவற்றுக்கும் தலைமை `அ` என்பது விளங்குகிறதல்லவா? `அ` என்பது எழுத்துக்களுக்கு மட்டும் தலைமை அல்ல. படைப்புக்கே அதுதான் தலைமை. `அ` வின் விளைவு எழுத்துக்கள் மட்டுமல்ல, நாம் காணும், நாம் இன்னும் காணவிருக்கின்ற பிரபஞ்சமுமே என்று புரிகிறதல்லவா?

இதைப் பேராசிரியர் தி. வேணுகோபாலன் அவர்கள் நயம்பட விளக்குவார்:

  • காணப்படுவது உலகம். அது த்ருஷ்டம். காணப்படாதது கடவுள். அது அத்ருஷ்டம். காணப்படுவதை வைத்துக் காணப்படாததைச் சொல்வது அனுமானப் பிரமாணம். மரமும் வேரும் போல! மரம் என்ற ஒன்று காணப்படுமானால், அது வேர் என்ற ஒன்று இருப்பதால்தான்.
  • `முதற்றே உலகு` என்னும்போது அந்த முதலுக்கு உரியது உலகு; கடவுளுடைய உடைமை உலகம். உலகுக்கு உடமை கடவுளன்று என்று புரிந்துகொள்ள வேண்டும்.
  • நாதம் என்பது உருவமில்லாதது. அதன் வரிவடிவம் `அ.` அதேபோல் கடவுள் உருவமற்றவன், அவனுக்குக் கணக்கற்ற வடிவங்கள். அகரம் பலவித எழுத்து உருவங்களாய் விரிகிறது. கடவுளுக்கும் பல பெயர்கள். வடிவம், வண்ணம், பயன்படுபொருள் எல்லாம் எழுத்துக்கும் இறைவனுக்கும் ஒற்றுமையாய் இருக்கிறது என்பதை விளக்கவே இந்த உவமை.
  • அகரமே ஆதி; மற்றவை யாவையும் அதன் விளைவே.
  • `எழுத்தெல்லாம்` என்று நீட்டியது ஏன்? மீண்டும் எழுத்தையும் உலகத்தையும் இணைத்துப் பார்ப்போம். அங்கே உயிரெழுத்து, இங்கே உயிர்கள். அங்கே மெய்யெழுத்து, இங்கே சடப்பொருட்கள். அங்கே வல்லினம், மெல்லினம், இடையினம். இங்கே தூலம், திரவம், வாயு. அங்கே உயர்திணை, அஃறிணை. இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர். அங்கே வினைமுற்று, வினையெச்சம். இங்கே செயலை முடித்தவன், முடிக்காமல் விட்டுவைத்திருப்பவன். உலகம் எழுத்தைப் போலவே அல்லவா இருக்கிறது! எழுத்துகளுக்கு அகரம். உயிர்களுக்கு இறைவன்.
  • `முதல` என்றவர், மீண்டும் `முதற்றே,` என்கிறார். முதல் என்னும் சொல்லுக்கு இறைவன் என்று பொருள் சொல்கிறது நிகண்டு!
  • முதல் என்றால் வேர் என்று பொருள். ஊடி அவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்தற்று (1304) (நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்) என்னும் குறளில் முதல் என்பது வேரைத்தானே குறிக்கிறது? வேர், மரத்திலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை இரண்டுமே சரிதான்! அலை, கடலிலிருந்து வேறுபட்டதா? மரத்தை வெட்டினாலும் மறுபடி முளைவிடும். ஆனால் வேரின்றி அமையாது மரம்.
  • முதல் என்றால் காரணம் என்று பொருள். எப்படி? நோய்நாடி நோய்முதல் நாடி` என்கிறாரே! காரணம் கடவுள். காரியமாகிய விளைவு உலகம். காரணம் அகரம். விளைவு எழுத்தெல்லாம்.
  • முதல் என்றால் மூலதனம் என்று பொருள். விவசாயி, விதைநெல்லை வித்துமுதல் என்பான். வியாபாரத்திற்காகச் செலவிட வேண்டியதைக் கைமுதல் என்பான். அறுவடைக்குப் பின்வருவதைக் கண்டுமுதல் என்பான். இன்னும் கொள்முதலும் உண்டுதானே? இந்த முதல் எல்லாம் எதற்கு? ஊதியத்திற்கு. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, என்கிறாரே! எனவே, அகரம் என்னும் முதல் இல்லையென்றால் பிற எழுத்துக்கள் என்னும் விளைவாகிய ஊதியம் இல்லை. ஆண்டவன் என்னும் முதல்தான் உலகம், வாழ்க்கை என்னும் ஊதியத்திற்குக் காரணம்.
  • முதல் என்றால் எண்ணிக்கையில் முதல் என்று பொருள். ஒன்று என்பது ஒன்று. இரண்டு என்பது இரண்டு ஒன்று. கோடி என்பது கோடி ஒன்று. ஆக ஒன்றுதானே யாவும்? எந்த எண்ணிலும் ஒன்றுதானே ஒன்றியிருக்கிறது? எல்லாம் ஒடுங்குவது அந்த ஒன்றில்தானே? தொகை என்பதில் மருளாமல் அதன் ஆதாரமாகிய துளியைக் காண்பவர்கள் வித்தகர்கள். வள்ளலார் `மயில், குயிலாச்சுதடி` என்றதும், திருமூலர் `மரத்தை மறைத்தது மாமத யானை` என்றதும் இதைத்தானே?

எழுத்துக்களுக்கு அகரம் முதல். உயிர்களுக்கு ஆண்டவன் முதல். இடையில் அதுபோல் என்ற சொல்லில்லை. ஒன்றுக்கொன்று உவமையில்லை. இரண்டு தனிப்பட்ட கூற்றுகள், இங்கே சொல்லப்பட்டன என்பர் சிலர்.

 

 தொடருவோம்


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.