பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

13652649_1046331315421067_1817652577_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

100914400@N08_rபிரபு வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (72)

 1. சுமைதாங்கி
  வாரிசு சுமக்க
  வளா்ந்த பிள்ளை இவள்
  குலத்தைக் காக்கும்
  குழந்தை தொழிலாளி,
  எழுதுகோல் மறுக்கப்பட்டு
  அவளுக்கு
  இடைச்சுமை கொடுக்கப்பட்டது
  இலக்கணப் பிழையா
  இல்லை
  சிலரின்
  இல்லறப் பிழையா
  சுகமான சுமையாய்
  சுமக்கும் அவள்
  நம் கண்முன்னே
  சகோதரத் தாயாய்…….
  புன்னகை உதிர்த்து
  புறஉலகை நோக்கும்
  பிஞ்சுக்கரங்களுக்கு
  வஞ்சனை செய்தவரானோம்.

 2. தாய்மை வெல்லும்…

  தாயும்,
  தாயாக்கியவனும் இல்லாமல்
  தவிக்கும் பிள்ளைகள்..

  தயார்செய்கிறது காலம்
  தமக்கையை,
  தன்னலமில்லாத் தாயாய்-
  சின்னப் பிள்ளைக்குக்
  கிடைத்துவிட்டாள்
  சிறப்பான தாய்..

  சமுதாயமே,
  இயன்றால் உதவு
  இல்லை
  எட்டிச் செல்,
  ஏளனம் செய்யாதே..

  தாய் இல்லையெனிலும்
  தாய்மை வாழும் என்றும்…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. கள்ளமில்லா சிரிப்பு

  காலன் இட்ட பிச்சையா இல்லை
  கள்ளிப்பாலில் கூட கலப்படமா
  கடவுளின் கருணை மனுவில்
  கருச்சிதையை எழூச்சியுடன்
  காலால் எட்டி உதைத்த வெற்றிச் சிரிப்பு

  கால் வயிற்றிற்காக‌
  கடுமையாக உழைக்க அச்சமில்லை
  கஞ்சியோ கூழோ கிடைத்தால் போதும்
  காற்று மழை வெய்யில் கண்டு பயமில்லை
  கல்வி கற்க வழி செய்வீர்களா

  கன்னியாக நான் வளர்வதற்குள்
  கழுத்தில் தாலி ஏற்றி விடாதீர்கள்
  கண்களில் ஆயிரமாயிரம்
  கனவுகளோடு காத்திருக்கிறேன்
  கல்வி கற்க வழி செய்வீர்களா

  கலுடைக்க மட்டும் அனுப்பிடாதீர்கள்
  கையில் என்னுடன் பிறந்தவருடன்
  கனவுகளையும் சுமந்து நிற்கிறேன்
  கல்வி கற்க வழி செய்யுங்கள் இல்லை
  கனவு காண மட்டும் வழி செய்யுங்கள்

  அனுப்புனர்
  ராதா விச்வநாதன்

 4. அவல வாழ்க்கையிலும்
  ஆசை துறத்தல் எளிதல்ல
  இருக்கும் இருப்பின் கணக்குப்படி
  ஈடில்லா பேரின்ப பாசத்தோடு
  உடன் பிறப்பைஇடையில் சுமந்து
  ஊரார் பார்வையில் ஏளமானாலும்
  என்றும் அவள் செயலில் தெய்வத்தாய்
  ஏற்றத்தைத் தருகிறாள் தம்பிக்கு
  ஐயமில்லை அவள் பொறுமைசாலி
  ஒரு உன்னத உழைப்பாளி அவள்
  ஓயாது ஒழியாது துயரங்களைத் தூக்கி சுமப்பவள்
  ஒளஷதமாய் சிரிப்பை ஏற்றவள்
  அ.’’.தேதான் அவள் வாழ்க்கை
  அன்புத்தம்பியே
  அம்மா வரும் வரை
  ஆடு மேய்க்கலாம்
  மாடு மேய்க்கலாம்
  ஆடிப்பாடி சந்தோஷமாய் இருக்கலாம்
  அவலப்பட்டாலும்கேவலப்படக்கூடாது
  நகர் மக்களைப்போல்
  மனிதத்தை மட்டும் மறக்கலாதுடா !

  சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *