Featuredஇலக்கியம்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் – 12

நிர்மலா ராகவன்

வெண்ணையும், சுண்ணாம்பும்

நலம்-
மூத்த மகன் அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பப்பட, இளையவன் தனியார் பள்ளிக்குப் போனான். ஏனெனில், மூத்தவன் கறுப்பு.

தம் செல்வச் செழிப்பு, உயர் கல்வி இதிலெல்லாம் அடைந்த பெருமையைவிட, பெற்றோர் இருவருக்கும் தாம் கறுப்பாக இருக்கிறோமே என்பதுதான் பெரிய குறையாக இருந்தது. அதைப் போக்கவேபோல் இரண்டவதாகப் பிறந்த `வெள்ளையனை’ (அவனுடைய செல்லப்பெயர்) தெய்வமாகவே மதித்து நடத்தினார்கள்.

வெள்ளையன் கேட்பதற்கு முன்னாலேயே அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும். பெரியவன் `கருப்பையா’வுக்கோ தந்தையிடமிருந்து அடிதான் கிடைத்தது.

`நான் எந்த தப்புமே பண்ணலியே! அப்பா ஏம்மா என்னை அடிக்கிறார்?’ என்று தாயிடம் முறையிட்டான் மகன்.

“அப்பாதானே! பரவாயில்லே. வாங்கிக்கோ,’ என்றாளாம் தாய்! (அவள் என்னிடம் கூறியது).

மகனும் பொறுத்துப்போனான். எலும்பும் தோலுமாக மகன் ஆனபின்னர்தான் தாய் விழித்துக்கொண்டாள்.

மகனை இன்னமும் அடித்தால், தான் அவனை அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிடுவதாக கணவனை எச்சரிக்க, அவர் தன் போக்கை மாற்றிக்கொண்டார். அடிக்குப் பதில் ஓயாத வசவு.

“அவன் ரொம்ப ஒடுங்கி இருக்கிறான். ஏதாவது செய்யுங்களேன்!’ என்று எனக்குக் கோரிக்கை விடுத்தாள் தாய்.

நான் தனிமையில் அவனுடன் பேசினேன். “இந்த அப்பாக்களுக்கே ஒரு குழந்தை உயர்த்தி. இன்னொன்றைக் காரணமின்றி அடிப்பார்கள், இல்லை திட்டுவார்கள்,’ என்று பொதுவாக ஆரம்பித்து, “ஒங்கப்பாவும் இப்படித்தானா?” என்று கேட்டேன்.

“இல்லை!” கேள்வி முடியுமுன், மறுப்பு வந்தது. பதில் வந்த வேகத்திலிருந்தே அவன் சொல்வது உண்மையல்ல என்று தெரிந்துவிட்டது.

நான் விடாப்பிடியாக, எனக்குத் தெரிந்த சிலரைப்பற்றிக் கூற, அவன் தன்னையுமறியாது, “எங்கப்பாவும் அப்படித்தான். எதுக்கு திட்டறாருன்னே புரியாது!” என்று ஒப்புக்கொண்டான்.

அப்போது அவன் கல்லூரி மாணவன். மகா புத்திசாலி. “உன் பாடத்தில் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேளேன்!” என்றேன். தன்னை மகன் நாடுகிறானே என்று சிறிது பெருமை எழுந்தால், அவனுடன் நெருக்கமாக உணர்வாரோ என்று நினைத்தேன்.

“சந்தேகமே கிடையாதே!” என்றான், பட்டென்று.

அவன் பெரியவனாக ஆனபிறகும், முகத்தில் சிரிப்பே கிடையாது. காதல் மனைவியும் அவனை மதிப்பதில்லை. குடும்பம்’ என்றாலே இப்படித்தான் இருக்கும்போலிருக்கிறது என்று நினைத்தவன்போல், வேலையிலேயே மூழ்கி, தன்னை மறக்கிறான். அதனால் உத்தியோகத்தில் பெரிய பதவி.

வேலை முடிந்து திரும்பியவனிடம் ஒரு முறை, “இன்று உன் தினம் எப்படிப் போயிற்று?” என்று கேட்டேன்.

சுவாரசியமாக விவரித்தான். ஏதோ மீட்டிங். வழக்கம்போல், எல்லாரும் உணர்ச்சிவசப்பட, நாற்காலிகள் காற்றில் பறந்தன என்று அவன் கூற, இருவரும் சேர்ந்து சிரித்தோம். “நீயுமா?”

பெருமையுடன், “ம்!” என்று ஆமோதித்தான். பல காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைப் பின் எப்படித்தான் வெளிப்படுத்துவது!

அப்பா அவருடைய சிறு வயதில் நிறைய அடி வாங்கியிருக்கலாம். அப்போது தன் தந்தையை எதிர்க்க முடியாத நிலையில் இருந்ததால், அந்த ஆத்திரம் மகனிடம் திரும்பியிருக்கிறது. (வதைக்கும் பெற்றோர் தன்னைப்போல் இருக்கும் குழந்தையிடம்தான் வன்முறையைப் பிரயோகிப்பார்கள்).

இது புரிந்து, `கருப்பையா’ மகனிடம் மிகக் கனிவுடன் நடந்துகொள்கிறான்.

அவனுடைய தாய் என்னிடம், “அது எப்படி மூன்று, நான்கு வயதுவரை கொஞ்சி வளர்த்த மூத்த பையன், இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்ததும் வேண்டாதவனாக ஆகிவிடுகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறாள்.

யாருக்குப் புரிகிறது இந்த மனிதர்களின் சுபாவம்!

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க