கற்றல் ஒரு ஆற்றல் -35
க. பாலசுப்பிரமணியன்
எப்படி எப்போது படிக்கவேண்டும்?
பல வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது:
” படிக்கும் போது இவனுக்கு கவனமே இருப்பதில்லை”;
“ஏண்டா. கன்னத்திலே கைவைத்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டு படிக்கிறே?”;
“நீ படிக்கிற இடத்திலே புத்தகத்தில் வெளிச்சமே விழலே.. என்னதான் படிக்கிறாயோ?”
“இப்படி உட்கார்ந்து படித்தால் முதுகிலே கூனல் விழுந்து விடும்”
“படிக்கும்பொழுது எதுக்கு ஐ போனைக் காதிலே வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு படிக்கிறாய்?”
“சோபாவிலே படுத்துக்கொண்டு படிச்சா எப்படி மண்டையிலே ஏறும்?” – என்றெல்லாம் சொல்லுவதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
படித்தல் என்பது ஒரு தனி நபருடைய ஈடுபாடான செயல். அது ஒவ்வொருவரின் உள்ளுணர்வுகளை ஒட்டி வேறுபட வாய்ப்பிருக்கின்றது. இருந்தாலும் பொதுவாக படிப்பத்தைச் சீர்படுத்த சில விதிமுறைகள் உள்ளன. அந்த கோட்பாடுகளை பின்பற்றும் பொழுது அந்தச் செயல் சிறப்பாக அமைகின்றது. .
உதாரணமாக:
- படிப்பதற்க்கென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து படித்தல் நலம்.
- படிக்கும் இடம் அமைதியான இடமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
- படிக்கும் இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.
- படிக்கும் இடத்தில் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் பொருள்களை நீக்கிவிட வேண்டும்,
- படிக்கும் இடத்தில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும்.
- படிக்கும் இடம் காற்றோட்டமாக இருத்தல் நல்லது,
- நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல் கவனத்தை அதிகரிக்க வாய்ப்பு தரும்.
- படிக்க ஆரம்பிக்கும் முன் சில நிமிடங்கள் கண்களைமூடி கவனத்தை நிலைநிறுத்தினால் கவனம் சிதறாது.
- படிக்கும் நேரத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி, அலைபேசி, கணினி ஆகியவற்றை அந்த இடத்தில் இருந்து நீக்குதல் நல்லது.
- எதை படிக்கவேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்தல் நல்லது.
- கண்கள் சோர்வாக இருக்கும் பொழுது படிப்பதை தவிர்ப்பது நல்லது.
- மூளை சோர்வடைந்த நிலையில் இருக்கும்போது படித்தலைத் தவிர்த்தல் நலம்.
- செடிகொடிகள் சன்னலருகில் இருக்கும் இடங்களில் அமர்ந்து படித்தல் பயன் தரும்.
- மெல்லிய இசை அலைகள் படிப்பதற்கான சூழ்நிலையை மேம்படுத்தும்.
- கடின உழைப்பிற்குப் பின் ஓய்வின்றி படித்தலைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது படித்தல் அதிக பலனைத் தராது. மேலும் அது நீண்ட நாட்கள் தொடரும்போது கண்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தலாம்.
மூளை செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் மூளையின் கற்கும் திறனை வகைப்படுத்தும் வகையில் வலது மூளை மற்றும் இடது மூளையின் சிறப்புத் திறன்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதைப் பற்றி தனது ( Brain Based Learning ) “மூளை சார்ந்த கற்றல் ” என்ற புத்தகத்தில் எரிக் ஜான்சன் என்பவர் வலது மூளை- இலக்கியம், இசை, மொழிவல்லமை, கலைத்திறன்கள் போன்றவற்றிக்கு உறுதுணையாகவும், இடது மூளை -கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மற்றும் தர்க்க சம்பந்தமான கற்றலுக்கு உறுதுணையாகவும் இருப்பதை விளக்கியுள்ளார். மேலும் மூளை- வலது மூளைத் திறன்களையும், இடது மூளைத்திறன்களையும் மாறி மாறி உபயோகப் படுத்துவதாகக் கூறியுள்ளார். ஆகவே, ஒரு சாதாரண மனிதனின் மூளை 90 நிமிடங்கள் வலது சார்புடையதாகவும் அடுத்த 90 நிமிடங்கள் இடது சார்புடையதாகவும் வேலை செய்வதாகவும், இதுபோன்று 24 மணி நேரத்தில் 18 முறை மாற்றங்கள் நடப்பதாகவும் ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். இதன் பொருள் அந்த நேரத்தில் மூளையின் மாற்றுப் பகுதி வேலை செய்யாது என்பதல்ல. அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கலாம் என்பதே. தற்போது மூளையின் இருபகுதிகளும் இணைந்து வேலை செய்யும் (Whole Brain Learning) திறன்களைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் வெளி வந்துள்ளன.
ஆகவே, படிக்கும் பொழுது பாடங்களையும் நேரத்திற்கும் மூளையின் செயல்பாடுகளுக்குத் தக்கபடியும் மாற்றியமைத்தல் படிப்பு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிக்கூடங்களில் பாடங்களுக்கான அட்டவணை அமைக்கும் பொழுது கற்றலுக்கான விஷயங்களை இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைத்தல் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
(தொடரும்)

