நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது

4

பேராசிரியர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்

maanikavasagar

 

 

 

 

 

 

 

 

 

நரியைப் பரியாக்கிய சிவபெருமானின் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது என்பது சைவசமயிகளின் உணர்வில் கலந்த நிகழ்வு. இந்நிகழ்வு தனக்காக நிகழ்த்தப்பட்டதென்றோ, தனது வாழ்வில் நிகழ்ந்ததென்றோ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்; இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பதுபோலத்தான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகின்றாரே அன்றித் தன்வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது இவர்கள் வாதம். அதனால் திருவாசகத்தில் உள்ள அகச்சான்று வலுவாக இல்லை என்றும், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பது மறைமலையடிகளைப் போன்ற ஒரு சிலரின் கருத்தேயன்றி, ஆய்வு முறையில் நோக்கினால் இது ஒரு வலுவற்றவாதம் என்றும் முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் கருதுகின்றனர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை நிறுவ திருவாசகத்தின் கீர்த்தித் திருஅகவல் ஒன்றே போதுமானது. திருவாதவூரர் குதிரை வாங்கப் பாண்டியன் அரண்மனையிலிருந்து பொன் எடுத்துப் போனதும், எடுத்த பொன்னுக்குக் குதிரை வாங்கமுடியாமற் போனதும், நரிகளைப் பரிகளாக்கிப் பாண்டியனுக்கு விற்ற இறைவன், (முன்பே பாண்டியனிடமிருந்து திருவாதவூரர் குதிரை வாங்கப் பொன் எடுத்துச் சென்றமையால், வாதவூரரின் கடனை அடைக்க) பாண்டியன் கொடுத்த பொன்னை ஏற்றுக்கொள்ளாது சென்றதையும், திருவாதவூரர் எல்லாம் அவன் அருள் விட்டவழி என்று இருந்ததுவும் கீர்த்தித்திருவகவலில்

அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான் நரியைக் குதிரையாக்கிய நன்மையையும்

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று

ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப

                                                                                                   –     திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்

என்று மணிவாசகப் பெருமான் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருவம்மானை இருபதாம் பாட்டிலே, தம்மை பிறரால் அறிவதற்கு அரிய பெருந்துறைப் பெருமான், பெற்ற பொன்னுக்குக் குதிரை வாங்காமல் நிற்கும் அடியவரான தனது குற்றங்களை நீக்கியதோடல்லாமல், தன்னைச் சுற்றிய வினைத்தொடரறுத்து, பற்றிய பாசங்களைப் பற்றுஅற அப்பெருமானைப் பற்றியப் பேரானந்தத்தை இதோ மகிழ்வோடு பாடுகின்றார்:

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 

கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்

குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 

சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே

பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 

பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.

                                                        –     திருவாசகம்: திருவம்மானை-20

திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட பெருமானே கொற்றக் குதிரையின் மீதேறி வந்து தனது குற்றங்களை நீக்கினான் என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகப் பெருமான்.

திருவாசகத்தில் ஆனந்தமாலைப் பதிகத்தின் ஏழாம் பாட்டில் ‘நரியைக் குதிரைப் பரியாக்கி, இவ்வுலகோரெல்லாம் அறியும்வண்ணம் மதுரையெல்லாம் பிச்சேற்றிய பெரிய தென்னனாம் எம் பெருந்துறைப் பெருமானே!’ என்று ஆனந்திக்கின்றார் மணிவாசகப் பெருமான்.

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்

பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்

                                                                          –     திருவாசகம்: ஆனந்தமாலை-7

மீண்டும் திருவாசகம் திருவேசறவுப் பதிகத்தின் முதற்பாடலில், ‘கங்கையை முழுவதுமாக தனது சடையினிலே உலவுமாறு செய்த எம் உடையானே! நரிகளை எல்லாம் பெருங்குதிரைகளாக்கியது உன் பேரருளே அல்லவா!’ என்று பரவசமடைகின்றார் பெருமான்.

ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்

பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே

                                                                       –     திருவாசகம்: திருவேசறவு-1

கீர்த்தித்திருவகவல் தொடங்கி, திருவாசகமெங்கும்   சிவபெருமானின் மற்ற திருவிளையாடல்களைக் குறித்துப் பாடும்போதெல்லாம், சிவபெருமானைத் தன்மையில் வைத்துப் பாடிவரும் மணிவாசகப் பெருமான், சிவபெருமான் நிகழ்த்திய நரியைப் பரியாக்கி, குதிரைச் சேவகனாக வந்த திருவிளையாடளைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘திருப்பெருந்துரையானே! என்றும், ‘உன்பேரருளே!’ என்றும், முன்னிலையில் வைத்துப் பாடுவது அத்திருவிளையாடல் அவர் பொருட்டே சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான வலுவான சான்றுகளாகும்.

இவைகளுக்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல, திருவாசகத்தின் திருப்பாண்டிப்பதிகத்திலே ‘இருக்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்தி சிவபெருமான் மேல் அன்புசெய்யுங்கள்! நம் கருத்தினால் அறிவதற்கு அரியவனான ஈரேழுஉலகங்களைஎல்லாம் உண்ட திருமாலொடு, நான்முகனும், வானவர்களும் அடைதற்கு அரிய ஆலகால விடத்தையுண்ட எங்கள் பாண்டிப்பிரானாகிய சிவபெருமான் தன் அடியவருக்காக  மூலபண்டாரமாகிய பேரின்பச் செல்வத்தை வழங்குகின்றான்;   விரைந்து வந்து பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்று அடியவர்களை எல்லாம் விரைந்து அழைக்கும் மணிவாசகப்பெருமான், குதிரைச் சேவகனாக வந்த எம்பெருமான் வடிவையன்றி யாருடைய வடிவத்தையும் என் உள்ளம் அறியமாட்டாது (பரிமேல் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாது என்றன் உள்ளமதே!’’) என்று முதற்பாடலிலேயே உருகிப் பாடுகின்றார்..

இத்துணை அளவு ‘நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்’ குறித்து மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திலே அகச்சான்றுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தும்,  முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் ஐயம் எழுப்புவதின் நுண்ணரசியலைச் சற்று உற்றுக் காண்போம்.

நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்ற  உண்மை ஆய்வு மூலம் நிறுவப்பட்டுவிட்டால், மாணிக்கவாசகரின் காலம் குறித்த பல தமிழாய்வுகள் நீர்த்துப்போய்விடும்; இறைக்கொள்கையின்றி துறவைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்த பௌத்த, சமண ஆதிக்கத்தால், பெருவாரித் தமிழர்கள் இல்லறம் துறந்ததால், மக்கள்தொகை குறைந்து போர்த்தொழில் மறந்த தமிழினம், களப்பிரர் வசம் எளிதில் வீழ்ந்தது;  தமிழினத்தைத் துறவினின்று மீட்டுத் தலைநிமிரச் செய்தது கி.பி. மூன்று மற்றும் நான்கு ஆண்டுகளில் தொடங்கிப் பின் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பேரெழுச்சி பெற்ற சைவமறுமலர்ச்சி இயக்கம், அம்மையப்பனாக, சிவசக்தியாக இறைவனை முன்னிறுத்தி, இல்லறமே நல்லறம் என்றும், இல்லறக்கடமையாற்றி, முழுமையான அன்புவழிபாட்டினால் இறைவனை அடைய இயலும் என்றும் முழங்கிற்று. அதன் காரணமாகக் களப்பிரர் ஆதிக்கத்தினின்று விடுபட்டு வீறுகொண்டு மீண்டது தமிழினம். சைவம் தமிழின மீட்பு இயக்கமாவே தோற்றமாகியது என்பதை நினைவு கொள்வது அவசியம்.

வேள்வியை மையமாகக் கொண்ட வேதமதமும், பக்தியை மையமாகக் கொண்ட சைவமதமும் முற்றிலும் வேறுவேறு நிலைப்பாடு கொண்டவை என்றாலும், வேதமதம் இறைக்கொள்கை கொண்டதாதலால் அதனுடன் சமரசம் செய்துகொண்டு, சைவம் பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காரைக்கால் அம்மையார், திருமூலர், மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகள். இவர்களின் பாடல்களில் வேதமதத்தைக் குறித்த சமநோக்கு சமரசக்கோட்பாடு மட்டுமே காணப்படுவது இவர்கள் வேதமத சமரசக்கோட்பாடு முன்னோடிகள் என்பதற்குச் சான்றுகள்.

வேதங்களைக் குறித்த மிகுதியான பதிவுகளைப் பிற்காலச் சைவ இலக்கியங்களில் காணப்பெறலாம். வேதமதப்பதிவுகள் அதிகம் உள்ள சைவ இலக்கியங்களான மூவர் தேவார காலங்களை முன்னோக்கி நகர்த்த வேண்டியது வேதமதத்தை சைவத்தில் முதன்மை பெற வைப்பதற்கு முதல் தேவை; மேலும் அப்பர் மற்றும் சம்பந்தர் தேவாரங்களில் காணக்கிடைக்கும் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் பதிவுகள் மாணிக்கவாசகரின் காலத்தை முன்னோக்கி நகர்த்திவிடுவதைத் தடுக்க ஒரே வழி அத்திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிரூபிப்பதே ஆகும். அதைச் செய்துவிட்டால் வேதத்திலிருந்தே சைவம் தோன்றியது என்ற கருத்துரு நிலைநிறுத்தப்படும். வேதகாலத்திற்கு முற்பட்ட சங்கத்தமிழனின் தத்துவப்பின்புலங்கள் வேதத்தில் கரைக்கப்பட்டுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழனுக்கென்று சொந்தமாக வழிபாடு முறைகளோ, சமயமோ, மெய்யியலோ, தத்துவமோ, மெய்யியல்தத்துவமோ கிடையாது; இவையெல்லாம் வேதமதம் தமிழனுக்கிட்ட பிச்சை என்று எளிதாக நிறுவிவிடலாம். இந்த சமயநுண்ணரசியலே நரியைப்-பரியாக்கும் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிறுவ முயலும் முயற்சிகளின் பின்னணி.

ஏழாம் திருமுறை தேவாரம் அருளிய சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளால் திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கு அடியேன்’ என்று அடையாளம் காட்டப்பெற்ற மணிவாசகரின் திருவாசகம் எட்டாம் திருமுறையிலும், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று வெளிப்படையாக அடையாளம் காட்டப்பெற்ற திருமூலதேவநாயனாரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையிலும், காரைகாலம்மையாரின் பதிகங்கள் பதினொன்றாம் திருமுறையிலும் வைக்கப்பட்டதற்கு அக்காலகட்டத்தில் நிலவிய ‘சைவசமயாசிரியர் என்பவர் சுயமத ஸ்தாபனமும் பரமதக் கண்டனமும் தீர்க்கமாகச் செய்தவரே ஆவர்’ என்னும் வரைவிலக்கணத்தை உள்ளடக்கிய சமயநுண்ணரசியலே காரணமன்றி, சைவசமயாசிரியர்கள்  வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் அன்று என்பதை அறிதல் நலம்.

வேள்வியை மையமாகக் கொண்டு, வேள்வித்தீ மூலம் படையல்களைக் கடவுளர்க்குப் படைக்கும்  வேதமதத்தின் ஆணிவேரான வேதங்களே அனைத்து சமயங்களின், குறிப்பாக தமிழர்களின் சமயமான சைவசமயத்தின் மூலம் என்று நிறுவுவதே, சைவசமயத்தில் ஊடுருவிய வேத தத்துவவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

எல்லாம் சரி! இது ஒன்று மட்டுமா காரணம்? ஏன் மாணிக்கவாசகர் அறுபத்து மூவரில் ஒருவராக ஏற்கப்படவில்லை? திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுவது மணிவாசகரையா? பட்டினத்துப் பிள்ளைக்கு முற்பட்ட அப்பர், சம்பந்தர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி,  சேக்கிழார் உள்ளிட்ட சைவ ஞானியர்களும், சைவ அறிஞர்களும் ஏன் வெளிப்படையாக மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தை முன்மொழியாமல், மறைவாகவே தங்கள் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர்? சைவச் சாத்திர நூலான திருமூலரின் திருமந்திரம் ஏன் சைவத் தோத்திர நூலாக பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டது? திருமுறைகளின் தொகுப்பு வைப்புமுறைகளின்  அடிப்படைகள் யாவை?  இந்தக் கேள்விகளுகெல்லாம் விடை காண்பது சைவ இலக்கிய வரலாற்றை நேர் செய்ய உதவும்; மேலும் வேதக் கலப்பை சுத்திகரித்துத் தமிழனின் சுய தத்துவ வரலாற்றை மீட்டெடுக்கவும், தமிழ்ச் சைவ மரபை மீள்நிறுத்தவும் அவசியமாகும். இவை குறித்து விரிவான கட்டுரைகள் எழுதப்படும். இந்தக் கட்டுரை நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை மாணிக்கவாசகரின் திருவாசக அகச்சான்றுகளின் வழி நிறுவுதல் என்ற அளவில் நிறைவு பெறுகின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது

  1. கட்டுரையாசிரியர் மாணிக்கசாசகர் மற்றியும் , சைவ சமயம்,  அதன் பற்றிய பார்வை பற்றியும் எனக்கு திடமான அபிப்பிராயம் இல்லை. ஆனால் இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தன – “இறைக்கொள்கையின்றி துறவைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்த பௌத்த, சமண ஆதிக்கத்தால், பெருவாரித் தமிழர்கள் இல்லறம் துறந்ததால், மக்கள்தொகை குறைந்து போர்த்தொழில் மறந்த தமிழினம், களப்பிரர் வசம் எளிதில் வீழ்ந்தது”.

    பெருவாரித் தமிழர்கள் இல்லறம் துறந்தனர் என்பதற்க்கு என்ற சான்றும் இல்லை. பல சமூகங்களில் துறவிகள் மதிக்கப்பட்டுள்ளனர் , அச்சமூகங்கள் போர்க்குணத்தை இழந்தனர் என்பதற்க்கு ஒரு சான்றும் இல்லை. உதாரணம் கிருஸ்துவ நாடுகள். அங்கு கத்தோலிக்க துறவிகள் மதிக்கப்பட்டனர், ஆனால் ஐரொப்பியர் போர்க்குணம் எப்பொழுதும் மங்கவில்லை,. உண்மையில் பல கத்தோலிக்க துறவி நிறுவனங்கள் படையாகவும் வேடம் பூண்டு பல போர்களை நடத்தினர் , முக்கியமாக சிலுவையுத்த காலத்தில். வட இந்தியாவில் இந்து துறவிகளும் போர்த்தொழிலை செய்துள்ளனர்.  மேலும் “போர்க்குணம்” என்பது இனமீட்பு என்பதும் ஆதாரமற்றது, எவ்வளவோ இனங்கள் போரால் அழிந்துள்ளன.

    களப்பிரர் பற்றிய தகவல்கள் அவ்வளவாக இல்லை , அக்கால தமிழ் சமூகம் பற்றிய தகவல்களும் அவ்வளவாக இல்லை. அதனால் ஆதாரமற்ற யூகங்களில் , ஸ்பெகுலேஷன்களில் ஈடுபட வேண்டாம். அதனால் “சைவம் தமிழின மீட்பு இயக்கமாவே தோற்றமாகியது” எனக் கூருவது மதச்சாய்வு பார்வையே தவிர உண்மை அல்ல.

    வ.கொ.விஜயராகவன்

  2. சமண் சமயத்திலும் புத்த சமயத்திலும் இறைக்கொள்கை இல்லை. சமண் சமயம் உயிரின் இருப்பை ஏற்கும். புத்தசமயம் உயிரின் இருப்பையும் ஏற்பதில்லை. அது, அனாத்மா-வைப் பற்றிப் பேசும். களப்பிரர் தமிழர் அல்லர். அவர் சமயம் சமணம் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. தாங்கள் குறித்த பார்வைகள் பற்றி எனது தொடர் ஆய்வுக் கட்டுரைகளில் விரிவான ஆதாரங்களைத் தர உள்ளேன். மதச் சார்பாக எழுதுவது ஆய்வுக் கட்டுரை ஆகாது. நிறைய விவாதிப்போம்.

  3. கட்டுரை, ஆதிகாரிகமாக கருத்தை நிலை நாட்டுகிறது. மிகவும் ஆழமான ஆய்வு. அருமை.

  4. Nice information about Maanikkavasakar. Please post the information about basic history also sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *