“மீண்டும் போ-டிப்ஸ் ” (ஆலிவர் கோல்ட்ஸ்மித் மன்னிப்பாராக !!)

0

க. பாலசுப்பிரமணியன்

“ஆறு மணி ஆச்சு, சீக்கிரம் எழுந்திரும்மா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா, காலையிலே எந்திருதோம்மா, குளிச்சோம்மான்னு இல்லாம, இப்படியா தூங்கிக்கொண்டு….” பதஞ்சலி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவதைக்கண்ட அவர் மனைவி பார்வதி..”கொஞ்சம் கேளுங்கோ.. அவ ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுக்கொண்டிருந்தா.. தூங்கினா தூங்கிட்டுப்போறா கொஞ்ச நேரம் ” தன் மகள் ஜெயந்திக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வர…

ஜெயந்தி தன்னுடைய தூக்கத்திலே ஒரு புன்முறுவலுடன் ” அப்பா.. வாசல்ல யாரோ கதவைத் தட்டுகிறார்கள் பாருங்கோ” என்று சொல்ல, கதவைத் திறந்து பார்த்து விட்டு “ஒருத்தருமில்லை. இந்தக் காலையிலே யார் நம்ம வீட்டுக்கு வரப்போறா ” என்கிறார்.

பதஞ்சலி ஒரு சாதாரண நல்ல மனிதர். கும்பகோணத்தில் மூதாதையர் காலம் முதல் குடியிருப்பு. சிறு வயது முதலே அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வேலை. அந்த விநாயகர்தான் அவருக்குத் துணை.

காலை ஆறு மணி முதல் பகல் பதினொன்று வரை கோவிலில் இருப்பார். பின் மதியம் வீட்டில் உணவு அருந்தி விட்டு சிறிய தூக்கம். மீண்டும் மாலை நாலரை முதல் இரவு ஒன்பது வரை கோவிலே கதி .. பார்வதி காலையிலே குளித்துவிட்டு கோவிலுக்கு நைவேத்தியத்திற்கு ஏதாவது பண்ணிக் கொடுப்பார். அதே போல் மாலையிலும்…

அவர்களுக்கு ஒரே மகள்.. ஜெயந்தி ..பத்தொன்பது வயது.. அருகிலுள்ள பெண்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு ..இரண்டாவது வருடம்… ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பு.  அவளுக்கு ஆசை அதிகம்.. தூக்கத்தில் எங்கெங்கெல்லாம் அவள் உலா போவாள் என்று அவளுக்கே தெரியாது.

“அப்பா… சரியாய் பாருங்கோ வாசலிலே யாரோ நிக்கறா.. “

பதஞ்சலி மீண்டும் கதவைத் திறக்க… “ஹல்லோ .. மிஸ்டர். பதன்..எலி ..வீடு இதுதானே” .

அதிசயமாக அந்த உருவத்தைப் பார்த்தவர் “பதன் எலி இல்லை.. நான் பதஞ்சலி..” என்று திருத்த.. “சாரி.. ” என்று வந்தவர் தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள ..

பதஞ்சலி வந்தவரைக் கூர்ந்து கவனிக்கிறார்.. ஒல்லியான தேகம். சுமார் 5 அடி 9 அங்குலம் உயரம். சிவப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வண்ணம்.. தலைமுடி மஞ்சளும் வெள்ளையும் கலந்தது போன்ற தோற்றம்..

பல கிழிசல் துணிகளை எடுத்துத் தைத்தது போல் பல வண்ணங்களுடய ஒரு சட்டை.. நீலத்தில் ஒரு ஜீன்ஸ் பாண்ட் .. அதிலும் சில ஓட்டைகள்.. தலையில் கருநிறத்தில் ஒரு நீளமான தொப்பி..கையில் ஒரு நீளக் கம்பு.. (வாக்கிங் ஸ்டிக் போல).. மொத்தத்தில் பதஞ்சலிக்கு அவருடைய ஊர் குடுகுடுப்பாண்டி புதிய வேடம் புனைந்து  வந்தது போலிருந்தது…

“இவரைப் பார்த்தால் நம்ம ஊர்க்காரர் மாதிரித் தெரியலேயே.. இங்கிலாந்தா.. அமெரிக்காவா ..இல்லை.. வேறே ஏதாவது நாடா… ” பதஞ்சலியால் ஊகிக்க முடியவில்லை.

“நான்.. போ… ” என்று சொல்லிக்கொண்டே தான் கையை அவரிடம் குலுக்குவதற்காகக் கொடுக்க, தயங்கிய பதஞ்சலி “நமஸ்காரம் ..” என்று கைகுவிக்க, ” நான்.. போ.. டிப்ஸ் .. லண்டனிலேந்து ” அவன் சொன்னது, ஏதோ உருகிய உலோகம் தரையில் விழும் போது போடும் சத்தத்தைப் போல் அவர் காதில் விழுந்தது..

அவனை உள்ளே வரச்சொல்லலாமா இல்லை வெளியிலிருந்தே கைகழுவி விடலாமா என்று அவர் யோசிக்கும் தருவாயில், ஒரு வெளிநாட்டுக்காரனை வாசலில் கண்ட ஆனந்தத்தில் பார்வதி   “ஏன்னா, வந்தவாளை உள்ளே வரச்சொல்லுங்கோ ..” என்று ஒரு நாற்காலியை இழுத்துப்போட அவர் முழிக்கிறார்.

போ-டிப்ஸ் அடுத்த வார்த்தைக்கு காத்துக்கொண்டிராமல் “ஜெயந்தி எங்கே?” என்று ஆங்கிலத்தில் கேட்டதும் பதஞ்சலிக்கு தூக்கிவாரிப் போடுகிறது.

“இவனுக்கு ஜெயந்தியை  எப்படித் தெரியும்? ” என்றும் சந்தேகம் எழுந்தது.

“ஏண்டி.. சீக்கிரம் எழுந்திரு.. உன்னைப் பார்க்க வெளி நாட்டுலேந்து யாரோ வந்திருக்கா .. முகத்தைக் கழுவிண்டு ஓடி வா…” ஏதோ பெண் பார்க்க தான் மகளை தயார் படுத்தவது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு.

ஜெயந்தி கண்ணாடி முன் நின்றுகொண்டு தான் முகத்தையும் புடவையையும் ஒருமுறை சரி செய்து கொண்டாள். கருப்பு மையிடும் பென்சிலைக்கொண்டு தான் புருவத்தையும் சற்றே சரிசெய்து கொண்டு, அம்மா தயாராக வைத்திருந்த காப்பி டம்பளரை எடுத்துக்கொண்டு போவின் முன்னே “காப்பி” என்று சொல்லிக்கொண்டே நீட்டினாள்.

“ஹாய் பேபி,  எப்படி இருக்கே?” என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே தான் கையை அவளிடம் நீட்டினான். ஜெயந்தியும் ஒரு முறை தன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே கைகுலுக்குவதற்க்காக கையை முன் நீட்டினாள்.

“கண்றாவி .. கண்றாவி ” என்று மனதுக்குள்ளே உறுமிக்கொண்டே பதஞ்சலி தன்னுடைய பெண்ணின் தைரியத்தைக் கண்டு சற்றே வியந்தார். “பரவாயில்லே.. படிக்க வைத்ததுக்கு நல்ல தைரியம் வந்திருக்கு.. எல்லாரையும் சமாளிக்கறாளே” என்ற பெருமிதம் பார்வதிக்கு..

“தாங்க்ஸ் ஜெயந்தி.. காபி இஸ் வெரி நைஸ்..  ” என்று பாராட்டிக்கொண்டே தன் அருகில் இருந்த மோடாவை இழுத்துப் போட்டு ” ப்ளீஸ் .. உட்காருங்க…” என்று சொல்ல ஜெயந்தி மோடாவில் அமர பதஞ்சலிக்குக் கோபம் உச்சந்தலையைத் தொட்டது..

ஜெயந்தியை இவனுக்கு எப்படித் தெரியும்? இவர்கள் முன்னதாக சந்த்தித்திருக்கிறார்களா? சாத்தியமில்லையே .. என நினைத்த பதஞ்சலியின் மனம் பல வேறு கோணங்களில் சிந்திக்க .ஆரம்பித்தது.

ஒருவேளை.. போன வருடம் லீவுக்கு சென்னையில் தான் மச்சினன் வீட்டுக்கு சென்று இருந்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டது.. “இருக்கலாம். மச்சினனும் காதல் கல்யாணம் தானே.. “ அவன் மனசு எப்படி இருந்திருக்கும்? ஜெயந்தியை வைத்து அவன் தன்னை பழி வாங்குகிறானோ என்றும் நினைத்தார்.

“டார்லிங்.. லேடி பிரௌன், லார்ட் பிரௌன் ரெண்டு பெரும் உன்னை ரொம்ப விசாரிச்சாங்க..உன்னுடைய சிரிப்பை எப்போதும் பாராட்டுவாங்க.. :” என்று போ ஆங்கிலத்தில் சொல்ல, “தாங்க்ஸ்” என்று ஜெயந்தி பதில் கொடுத்ததை பார்த்த அவருக்கு முதலில் எப்படி அவனை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்ற சிந்தனை தோன்றியது..

“ஏம்மா. ஜெயந்தி.. காலையிலே அவர்  டிபன் ஏதாவது சாப்பிடுவாரா.. தேங்காய் சட்னி அரைக்கட்டுமா” என்று பார்வதி சொன்னவுடன் பதஞ்சலி அவளை முறைத்துப் பார்த்தார்.  கொஞ்சம் விட்டால் இவனை வீட்டோடு மாப்பிளையாக ஆக்கிக் கொண்டு விடுவாளோ என்ற பயமும் ஏற்பட்டது.

” ஞாபகம் இருக்கா ஜெயந்தி… லண்டன் ஹைட் பார்க்கல நாம ரெண்டு பெரும் கைகோர்த்துக்கொண்டு போகும் பொழுது எப்படி எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள் என்று.. அப்புறம் தேம்ஸ் நதிக்கரையோரம்…   .”

ஜெயந்தி மனத்திற்குள் சிரித்த்துக்கொண்டாள்..

“நாசமாய் போச்சு… இவன் என்ன என்னலாமோ சொல்றானே.. இந்தப் பெண்ணும் எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்காளே…என்ன நடக்கறதுன்னு ஒண்ணுமே புரியலியே..” என்று பதஞ்சலியின் மனம் படபடத்தது…

“சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு வா. உன்னை மறுபடியும் லண்டனுக்கு அழைத்துக்கொண்டு போகணும். ” என்று போ சொன்னபோது பதஞ்சலிக்கு கொஞ்சம் தலை சுற்ற ஆரம்பித்தது..

“சார்… உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க யாருன்னே எங்களுக்குத் தெரியாது.. என்ன வேணும் சொல்லுங்கோ..எங்களுக்கு வேற வேலை நிறைய இருக்கு… ” பதஞ்சலி படபடவெனப் பேசினார்.

“ஐ வாண்ட் ஜெயந்தி… எனக்கு ஜெயந்தி வேணும்.. அவளை நான் லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகணும் “

பதஞ்சலி ஜெயந்தியின் முகத்தை சற்றே கூர்ந்து நோக்கினார். அவள் மௌனம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

பார்வதியோ தன் பெண்ணின் பிரசவத்திற்கு லண்டன் போனால் எப்படி இருக்கும் என்ற கனவில் இறங்கிவிட்டாள்

“”பகவானே.. ஜகத்பாலகா ..இது என்ன சோதனை…” என்று நொந்து கொண்டே பதஞ்சலி குளியலறையை நோக்கி சென்றார்.. “முழுகிடறேன்.. தலை முழுகிடறேன் ..” என்று சொல்லிக்கொண்டே அண்டாவிலிருந்து நாலு சொம்பு தண்ணீரை மட மடவென்று தலையில் கொட்டிக்கொண்டவர்..அப்படியே ஒரு சொம்பு தண்ணீரை ஜெயந்தி தலையில் கொட்டிவிட…

“அப்பா… அப்பா… தலையிலே தண்ணி கொட்டாதீங்கோ.. ” என்று அலறிக்கொண்டே எழுந்த ஜெயந்தி

“போ.. போ டிப்ஸ் எங்கே.? போயிட்டாரா.. நீங்க அவரை விரட்டிட்டேளா? லண்டனுக்கே திரும்பிட்டாரா? ” என்று கேட்டாள்.

“போ.. வாவது.. வாவாவது .. ஏதாவது கனவு கண்டாயா?” என்று பார்வதி தன் மகளை உலுக்கிவிட…

“என்னடி கனவு?… நல்லதா?.. பொல்லாததா?… காலையிலே கனவு கண்டால் பலிக்கும்னு சொல்லுவாங்களே.. என்னடி கனவு கண்டே ?” என்று தந்தை அங்கலாய்க்க ..

படுக்கையை விட்டு எழுந்த ஜெயந்தியின் உடலிலிருந்து அவள் முந்திய இரவு படித்துக் கொண்டிருந்த ஆங்கில பாடப் புத்தகம் கீழே விழ…

“பரவாயில்லே.. மேடம்.. ஆலிவர் கோல்ட்ஸ்மித்தோட “போ-டிப்ஸ் ” பாடத்தை நல்லாவே  நடத்தினாங்க ” என்று அவள் மனம் சூளுரை சொல்ல…

அவள் கண்கள் வாசலை நோக்கி ஓடின.. ஒரு வேளை போ-டிப்ஸ் வெளியே வந்து நிற்பானோ என்ற சந்தேகத்தில்..!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *