நூறு வருடங்களுக்கு முன்னால் 3

இன்னம்பூரான்
ஜூலை 8, 2016

மனிதவியலும் சமூகவியலும் தவிர்த்த மருத்துவம் உதவாக்கரை. தக்கதொரு மருத்துவ நல்வரவுகள் இல்லாத சமூகம் பாழ். ஏழை பாழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை/உதவி/ஆலோசனை எல்லாம் ஒரே தரத்தில் இருப்பது தான் நியாயம். காசுக்கேற்ப வசதி கிடைப்பது நடைமுறைதான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் என்பது அடாவடி. அண்மையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில், லஞ்சம் கொடுக்க முடியாததால், ஒரு சாவு. தற்காலம் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் பெருகி இருப்பதும், அரசு தர்ம ஆஸ்பத்திரிகள் முடங்கி இருப்பதும் கண்கூடு. எனினும், அரசு மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்லும் நான், ஆங்காங்கே நல்ல முன்னேற்றங்களைக் காண்கிறேன்.

சென்னை மருத்துவ மனை துவக்கப்பட்டது நவம்பர் 16, 1664. ராணுவ மருத்துவமனையான அதில் இந்திய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டது 1842ல் தான். 1964ல், அதாவது, துவக்கி முன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்னும், அங்கு இலவசமருத்துவமும், தரமான சிகிச்சையும், மனித நேயம் குறையாத அணுகுமுறையும் காணக்கிடைத்தன. என் தந்தைக்கு 1964ல் சிக்கலான ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவ பேராசிரியர். அறுவை சிகிச்சைக் கட்டணம் ரூபாய் 15/-, தந்தையின் வரும்படி அடிப்படையில். ஏழைக்கு இலவசம்.

அமெரிக்காவில் நூறாண்டுகளுக்கு முன் வைத்திய நடைமுறையை பற்றி ஜூலை 8, 1916 அன்று ஒரு கட்டுரை ‘ஜாமா’ (Journal of American Medical Association) என்ற பிரபல மருத்துவ இதழ் பிரசுரம் செய்தது. அதுவும் நான் அடிக்கடி பார்வையிட நேர்ந்த சைண்ட் லூயிஸ் நகரத்து வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதியது.

நமது முன்னேற்றங்களைப் பாராட்டும் பொழுது குறைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது தான் நல்லது. நாம் தேவையான சமாச்சாரங்களை ஆய்வு செய்து, தெளிவான முடிவுகளை நிறைவேற்றுவது அரிது. உதாரணமாக, 1970-2010 காலகட்டத்தில் தருமமிகு சென்னை மருத்துவமனைகளில் அதருமம் தலையெடுத்ததைப் பற்றி ஒரு ஆய்வும் கிடைக்கவில்லை. ஆனால் நூறு வருடங்கள் முன்னால் ‘ஜாமா: ஜூலை 8, 1916’ இதழில் ஏழை பாழைகளும் ஆஃப்ரோ அமெரிக்கர்களும் நிறைந்த பகுதியிலிருந்து மத்தியதர மக்கள் வாழும் இடத்திற்கு மூன்று மருத்துவ ஆலோசனை மன்றங்கள், ஒன்றாக இணைக்கப்பட்டு, மாற்றப்பட்டதின் விளைவை சாங்கோபாங்கமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஏனெனில் மருத்துவ ஆலோசனை பழைய இடத்தில் இலவசமாகவே அமைந்தது நியாயமே. புது இடத்தில், வருமானத்தின் அடிப்படையில் ஆலோசனை அமைவதும் நியாயமே. அவர்கள் பல மாநிலங்களிடமிருந்து நடைமுறை விசாரித்தார்கள். அதில் க்ளீவ்லாந்து பதில், ‘எனக்கு மருத்துவம் சம்பந்தமில்லாத விசாரணைகளுக்கு நேரமும் கிடையாது; உண்மையும் வராது. அதனால் பிரயோஜனமில்லை.’ சிந்திக்கவைக்கிறது.

சென்னையில் போனவருடம் அரசு ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றிருந்தேன். குமாஸ்தா வருமானம் எவ்வளவு என்று கேட்டார். என் ஓய்வூதியம் சொன்னவுடன், சிரித்துக்கொண்டே குறித்துக்கொண்டார். பின்னர் அந்த எழுத்தை படிக்கமுடியவில்லை. இலவசமாக தான் ஆலோசனை அளித்தார்கள். அவரிடம் விளக்கம் கேட்டபோது, அங்கு ஆலோசனை இலவசம். சிகிச்சைக்குத்தான் வருமான அடிப்படை. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று, உங்கள் வசதிக்காக கிறுக்கி வைத்தேன் என்று ஒரு போடு போட்டார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

https://wuphysicians.wustl.edu/Portals/0/Skins/wash-u-physicians/images/wash-u-physicians-logo.png

படித்தது:
https://jama.jamanetwork.com/issue.aspx?journalid=67&issueid=10559

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *