தமிழ்த்தேனீ

கொள்ளுன்னா வாயைத் தொறக்கறதும் கடிவாளம்னா வாயை மூடிக்கறதும் குதிரைக்கு மட்டுமல்ல மனுஷனுக்கும் அதுதான் இயல்பு.

அடுத்த வீட்டுக்காரன் பாம்பைப் பிடிச்சா மத்தவங்க எல்லாருக்குமே அல்லித் தண்டு மாதிரிக் குளிர்ந்துதான் இருக்கும்.

சின்னக் க‌ஷ்டமா இருந்தாலும் பெரிய கஷ்டமா இருந்தாலும் வலி என்னான்னு அவவனுக்கு வரும் போதுதான் தெரியும் புரியும்.

ஒரு பையன் அரசாங்க வேலை இன்னொருத்தன் ஆடிட்டர் ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறதே இல்லே நியாத்தை சொல்லி ரெண்டு பேரிலே யாருக்கு சாதகமா பேசினாலும் நீங்க பாரபக்‌ஷம் பாக்கறீங்க உங்களுக்கு எப்பவுமே அவன் தான் உசத்தி அப்பிடீன்னு ரெண்டு பேரும் இவங்களையே திருப்பிக்குவாங்க அந்த அபாயம் இருக்கு ரெண்டு பேருமே அவர் பெத்த பசங்க.

ஒரு நாள் மூத்த பையன் அப்பா அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க உங்களுக்கும் அம்மாவுக்கும் டாக்டர்கிட்ட போயி ஹெல்த் செக்கப் பண்ணிட்டு வரலாம் என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.

எல்லாப் பரிசோதனையும் முடித்து காது மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு அப்பாவுக்கு ஒண்ணும் பரச்சனை இல்லே காதிலே செவிப்பரை நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு சார் நீங்க கொஞ்சம் வெளியிலே உக்காருங்க என்றார்.
வெளியிலேயும் மருத்துவர் சொன்னது காதிலே கேட்டது.

உங்க அப்பாக்கு காதிலே ஒரு ப்ரச்சனையும் இல்லே ஆனா நீங்க அவருக்கு காது கேக்கலைன்னு சொல்றீங்க லக்‌ஷத்திலே ஒருத்தருக்கு எல்லாம் சரியா இருந்தாலும் வயசு காரணமா காது கேக்காம போக வாய்ப்புண்டு. திடீர்ன்னு மறுபடியும் கேக்கத் தொடங்கலாம் இல்லே மொத்தமாவே கேக்காம போயிடவும் வாய்ப்புண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் விட்டத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவர் மெல்ல பூனைபோல் எழுந்து சப்தம் போடாமல் நடந்து அவருடைய மேஜை அறையைத் திறந்தார் . அதிலிருந்த அவருடைய அம்மாவின் படத்தை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அப்படியே சற்று நேரம் உறைந்திருந்தார்

திருமணமாகி முதல் நாள் இரவு அம்மா பேசிக்கொண்டிருக்கிறாள் அவர் மனைவி யமுனாவிடம் தண்ணீர் குடிக்க வந்த சபேசன் காதில் யதேச்சையாக அது விழ சரி அம்மா என்னதான் சொல்றான்னு கேப்போமே என்று அங்கே மறைவாக நின்றார் ஒரு ஆர்வத்தில் அவர் காதிலும் அம்மா சொல்வதெல்லாம் தெளிவாக கேட்டது
இதோ பாரும்மா யமுனா நீயும் என் பொண்ணு மாதிரிதான் உங்க அம்மா இல்லேன்னு வருத்தப்படாதே நான் அவனுக்கு மட்டுமில்லே உனக்கும் நான்தான் அம்மா நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே நான் என் வாழ்க்கையிலே அடைஞ்ச அனுபவத்தை உனக்கு சொல்றேன் இது உண்மையிலேயே பெரிய ரகசியம்
நாம எல்லாரும் பொறக்கறோம் வாழறோம் ஆனா சில ரகசியங்களை தெரிஞ்சுக்கறதில்லே
நீ பூ வெச்சுக்கோ மஞ்சள் பூசிக் குளி வாழ்க்கையோட எல்லா அனுபவத்தையும் ருசி ரசி வேணாங்கலே ஆனா நாம பொறக்கும் போதே நாம எவ்ளோ வருஷம் வாழணும் எப்பிடி வாழணும்னு எல்லாமே ஒரு கணக்கு போட்டுத்தான் நம்மை அனுப்பறான் ஆண்டவன். எல்லாமே கணக்குதான்  அதுனாலே நீ என்ன செய்யணும் எவ்ளோ செய்யணும் என்ன பேசணும் எவ்ளோ பேசணும் எவ்ளோ கேக்கணும் எல்லாமே கணக்குதான்.

அதுனாலே கொஞ்சமா பூ வெச்சிக்கோ எல்லாத்திலேயும் ஒரு அளவு வெச்சிக்கோ ஏன்னா நாம பேங்குலே எவ்ளோ போட்டு வெச்சிருக்கோமோ அவ்ளோதான் செலவழிக்க முடியும்.  அதுனாலே சிக்கனமா இருந்தா அதிக நாள் நம்ம கணக்கிலே பணம் இருக்கும் அதுமாதிரிதான் இந்த உலகத்திலே எல்லாமே அதுனாலே சிக்கனமா இருந்தா அதிக காலம் தீராம இருக்கும் என்றாள் என்ன புரிந்ததோ ஏதோ மாமியார் அக்கறையா சொல்றாங்க புரியுதோ புரியலையோ கேட்டுக்குவோம் என்று பவ்வியமாக தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தலையை ஆட்டினாள் யமுனா அம்மாவும் மகிழ்ச்சியா ஏதோ சொல்லணும்னு தோணித்து சொன்னேன் சரி அவன் காத்திண்டு இருப்பான் நீ போ மிச்ச வேலையை நான் பாத்துக்கறேன் என்றபடி அனுப்பினாள்.

அம்மாவை நமஸ்கரித்துவிட்டு யமுனா கையில் பால் சொம்போடு வருவதைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் மீண்டும் வந்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் உட்கார்ந்தார் ஒன்றும் அறியாதவர் போல் .

இதெல்லாம் பழசுதான் ஆனாலும் பழசிலே நிறைய பொருள் இருக்கு என்ரு நினைத்துக் கொண்டே தூங்கத் தொடங்கினார் சபேசன்.

மறுநாள் ஏதோ வாக்குவாதம் இவரைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிக்கொண்டிருந்தனர் யமுனாவும் பிள்ளைகளும் மறு மகள்களும்.

திடீரென்று திரும்பிப் பார்த்த மூத்த பிள்ளை நீங்க சொல்லுங்கப்பா இவன் செய்யறது சரியா என்றான்.

அதிகமாவே பேசிட்டோம் அதிகமா கேட்டுட்டோம் போதும் இதோட நிறுத்திக்கலாம் என்று தோன்றியது.

நான் சாப்டாச்சுப்பா என்றார்.

அதில்லேப்பா இவன் சொல்றது சரியா என்றான் இளைய மகன்.

நான் டாக்டர் குடுத்த மருந்தெல்லாம் ஒழுங்காத்தான் சாப்படறேன் என்றார்.

ஏங்க அப்பாவுக்கு டாக்டர் சொன்னா மாதிரி காது சுத்தமா கேக்கலை என்றாள் மருமகள் .தேங்க்ஸ்மா என்றார் சபேசன்.

பக்கத்தில் படுத்திருந்த மனைவியை தொட்டார் சபேசன் என்ன தண்ணி வேணுமா இந்தாங்க என்று அவரிடம் பாட்டிலை நீடிவிட்டு இந்தப் பக்கம் திரும்பி படுத்தாள் யமுனா அம்மாவுக்கும் உனக்கும் தேங்க்ஸ் என்றார் சபேசன்.

யமுனா திரும்பிப் படுத்துக் கொண்டு இந்த மனுஷன்கிட்ட நான் இப்ப ஒண்ணுமே சொல்லலையே எதுக்கு செத்துப்போன அம்மாவுக்கும் எனக்கும் தேங்க்ஸ் சொல்றாரு இவருக்கு நாம ஏதாவது பேசினா காது கேக்காது ஆனா ஒண்ணுமே சொல்லாதப்போ ஏதோ சொன்னா மாதிரி நெனைச்சிண்டு தேங்க்ஸ் சொல்லுவாரு ஒண்ணுமே புரியலே என்று அலுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள் யமுனா.

சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கடிவாளம்

 1. What is love?
  Love is the absence of judgement…. Thalai Lama
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  A perfect marriage is just two imperfect people who refuse to give up one each other..
  Aum
  V.Subramanian

 2. நான் எழுதிய கதையைப் படித்து கருத்து பதிந்தமைக்கு மனமார்ந்த நன்றி திரு வே. சுப்ரமணியன் அவர்களே

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published.