இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 5

0

அவ்வை மகள்

நெஞ்சகம் நைந்து தொலைந்தழுத நோன்பு

இறையியல் சிந்தனைகள்

உறவுதான் உயிரிகளின் அடையாளம் என்றோம். உறவில் உதிப்பதே உயிரி. உறவுகொண்டொழுகலே உயிரியின் இயக்கம். முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பார்களே அதைப்போன்றது உயிரி – உறவின் தன்மை. சந்யாசிகள் கூட உறவு கொண்டு ஒழுகுபவர்களே. சன்யாசம் பூணும் முன் இருந்த உறவுகள் எத்தனையோ என்றாலும் சன்யாசம் பூண்ட பின், மதம், ஆச்சாரம் என்கிற ஷரத்துக்களுக்காய், குருவுடனும், சிஷ்யர்களுடனும் உறவு நீள்கிறது. பொதுஜனத் தொடர்பெனும் உறவு பெரிதாய் நீள்கிறது – பிற சொந்தங்களை விலக்கினாலும் கூட, தாயுடன் உள்ள உறவு விடாது பின் தொடருகிறது.

சொந்தம் – சமூகம் என்னும் இந்த இரு வட்டங்களைத் தாண்டி தலைமை உறவாக – சன்யாசம் பூண்ட நிலையில் கொள்ளும் சிறப்பு உறவு இறைவனிடம் – இறைமையிடம் – அதுவும் சமூகப் பிரக்ஞையுடன் (வடமொழியில், லோக க்ஷேமம்) எழுகிறது. எனவே, காஷாயம் தரிப்பது என்பது உறவுகளை வெட்டிவிட்டுத் தனியே செல்வது அல்ல, உறவுகளை வலுப்படுத்தும் செம்மாந்த இலக்கை ஒட்டித்தான்.

உறவு என்பது பசுஞ்செடி. அதிகமாகக் கிளைக்கும்போது செடியின் கிளைகளை வெட்டி எறிந்து, மிச்சமிருப்பவற்றை இழுத்துக் கட்டி, தேவைப்பட்டால், ஒரு கோலை நாட்டி, இன்னமும் தேவைப்பட்டால், கம்பி வலையையோ அல்லது முட்படலையோ சுற்றிலும் கட்டி, செடி எவ்வாறு பாதுகாப்புடன் போஷித்து வளர்க்கப் படுகிறதோ அவ்வாறு வளர்க்கப்படுவது உறவு.

ஒரு மனிதனுக்கு உறவு எப்போது முளைக்கிறது என்று பார்த்தால் அது ஆதியிலே ஏற்பட்டுப்போவதைப் பார்க்கிறோம்.

பிறந்த குழந்தை, தாயின் முகத்தை மூன்றாவது மாதமே அடையாளம் கண்டு கொள்கிறது. அப்படியென்றால் அதற்கு முன் தாயை அக்குழந்தை அறியாதா எனக் கேட்கலாம். பிறந்த நிமிடமே குழந்தை, தாயின் மார்பகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிரசவத்தின் போது தாயின் புறவழியை அடையாளம் கண்டு கொள்கிறது. உருவாகும்போது தாயுடன் தந்தையையும் அடையாளம் கொள்கிறது. அவர்கள் இருவரின் என்னென்னெ க்ரோமோசோம்களின் கலவையில் தான் உருவாக வேண்டும் என்றும் கூட அதுவே தான் முடிவு செய்கிறது – அந்த முடிவை எடுக்கும் உள் ஆற்றல் அதற்கு இருக்கிறது! அவ்வாறு உருவான அந்த நொடி, தாயின் கருப்பைச் சுவற்றை அடையாளம் கண்டு கொண்டு அங்குபோய்ச் சேர்ந்து அங்கே ஒட்டிக்கொள்கிறது. உறுப்பென்று ஏதும் இல்லா நிலையில் விகுதிப்பகுதிகள் நிகழாது ஒற்றைச் செல்லாக இருக்கும்போதே ஒரு சிசு உறவு கோல் நாட்டி உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தெடுத்துக் கொள்ளுகிறது உயிரியான தனது அடையாளத்தை.

ஒரு சிசு இந்தச் சாயலோடு இந்த உளப்பாங்கோடு உருவாகிறது என்பதைப் பெற்றோர் நிர்ணயிக்க முடியாது – அதனை நிர்ணயிக்கும் வல்லமை உருவாகும் அந்த சிசுவுக்கு மட்டுமே உண்டு. இந்த நிர்ணயத்தை நாத்திகர்கள் புள்ளியியல் வாயிலாக, “probability” என்பர். நாத்திகர்கள் விளக்கம் இவ்வாறு இருக்கும்: “Chance Theory” யின் படி அன்னை-தந்தை இருவரின் க்ரோமோசோம்கள் கலக்கும்போது சாத்தியமாகக் கூடிய எத்தனையோ கலப்பு விகிதாசாரங்களில் (permutation/combination), உருவாகும் சிசுவின் விகிதாச்சாரம் ஒன்று என்பதால் அது அவ்வாறு உருவாகிறது.” ஆனால், “ஏன் அந்த விகிதாச்சாரம் இந்தத் தருணத்தில் நிகழ வேண்டும் வேறு விகிதாச்சாரம் இப்போது நிகழக்க்கூடாதா” என்று அவர்களைக் கேட்டால் திரு திருவென முழிப்பர். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?” அறிவியலில், கணிதத்தில் உள்ள ஷரத்துக்களின் பற்றாக்குறை நிலை இது. இறையியலோ இந்த நிகழ்வை மிக எளிதாக “சஞ்சித பாவம்” என்று அனாயாசமாகச் சொல்லிப் போந்தது. இதிலே “பாவம்” என்பதை நம்மவர்கள் Paavam என்று பொருள் கொள்வது சரி என்றாலும் அது சஞ்சிதத்தின் ஒரு பக்கமே. பாவம் என்பதை Bhaavam என்றும் கொள்வதும் மிகப் பொருத்தமாக இருக்கும். இது பாவத்தின் இன்னொரு பக்கம். Bhaavam என்பதை அவதாரம் என்று கொள்ளலாம். வடிவு, கோலம், ஒளி (Form, Appearance, and Radiance) ஆகிய மூன்றும் அவதாரத்தில் அடக்கம். ஒரே பிரசவத்தில் உருவான இரட்டையர்களைக் கவனித்துப் பார்த்தால் வடிவு, கோலம், ஒளி ஆகிய மூன்றும் ஒவ்வொரு ஜீவிக்கும் வேறு என்பது புலப்படும்.

இறையியல் காட்டும் “சஞ்சிதம்” என்பது என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. சஞ்சிதம் என்றால் “ஏற்கனவே உள்ள அறிவு” (pre-existing knowledge) என்று பொருள். அப்படியென்றால், ஒரு சிசு ஏற்கனவே எதையோ தெரிந்துவைத்துக்கொண்டு தான் இங்கு வந்து ஜனிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். எனவே சிசு சும்மா வரவில்லை எதையோ எதையோ தன்னுடன் எடுத்துக்கொண்டு எந்த காரணம் பற்றியோ இங்கு வந்து சிருஷ்டியாகிறது என்பது விளங்குகிறது. அது மட்டுமல்ல ஒரு சிசு இங்கு வரும் அதன் நோக்கம் நிறைவேறத்தேவையான சக்தியோடு, உருவத்தோடு, ஆயுளோடு அது உருவாகிறது. அந்த நோக்கம் நிறைவானவுடன் அது வேறு இலக்கு நோக்கிப் பயணிக்கிறது. ஆக, சஞ்சிதம் எனப்படும் “ஏற்கனவே உள்ள அறிவு” என்பது தான் சிசுவின்- ஜீவனின் “பூர்வ ஜென்மப் பலன்” என்பதே ஆன்மீகஆய்வியலின் குறிப்பாகும்.

இன்று, கணித – பௌதீக – புள்ளியியல் – ஆய்வாளர்கள் ஏன் ஒரு கலப்பு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் ஒரு தருணம் நிகழ வேண்டும் என்பதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்கிறார்கள் – ஒரு புதிய கலவை உருவாகிறபோது பழைய கலவை விகிதாச்சாரங்கள் நிகழ்வதில்லை என்பதை இப்போது அவர்கள் உணர்ந்து விட்டார்கள் – மேலும் ஏதோ ஒரு காலக்கணக்கும் பழைய சரித நினைவும் (time and past history) கொண்டதாய் ஒவ்வொரு கலவையும் ஜனிப்பதாகவும் அவர்கள் உணர்ந்து விட்டார்கள்- ஆனால் – அதனை விளக்கத்தெரியாமல் அவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதேதோ கணித சமன்பாடுகளைப் போடுகிறார்கள் – ஒருவருக்கொருவர் விதண்டாவாதம் செய்கிறார்கள் (காண்க: http://philosophy.fas.nyu.edu/docs/IO/4990/meacham.pdf). இவ்வாறு அவர்கள் விதம் விதமாக தர்க்கம் செய்தாலும் கூட – Chance-credence எனப்படும் வாய்ப்புக்கும் – உண்மையான ஜனனத்துக்கும் உள்ள தொடர்பில் காலக்கணக்கும் பழைய சரிதமும் இருப்பதை அந்த விதண்டாவாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிப் பேசுவதைக் நிதர்சனமாய்க் காண்கிறோம். அறிவியல் எப்போதும் ஜரூராகச் செல்லும் ஆனால் ஓரிடம் வரை போய் நின்று விடும் – அங்கிருந்து அதை மேலும் இட்டுச் செல்ல ஆன்மீகத்தால் மட்டுமே முடியும்.

எது எப்படி இருப்பினும், Time and Past History எனும் காலச்சரிதம், மற்றும் Bhaavam எனப்படும் அவதாரம் (credence) இரண்டையுமே Chance-Credence theory மூலம் நிரூபித்து, சஞ்சித பாவத்தை அறிவியல் வாயிலாக அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.

இது நிற்க.

ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு ஜனித்தார் என்பது இன்று உலகம் அறிந்த உண்மை. திருமணமாகாத நிலையில் ஆணும் பெண்ணும் உருவாக்கிய சிசு அவர். அந்த ஆண்-பெண் இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் கலாச்சாரம் என்ற காரணத்தினாலும் – மகளுக்கு ஏற்ற துணைவன் இவன் இல்லை என்று பெண்ணின் தந்தை கருதியதாலும் – அந்த ஆணும்-பெண்ணும் இருவருமே கூட – தாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழும் முதிர்ச்சி அற்றவர்கள் என்று எண்ணியதாலும் – இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் கூடத் தடையானது. அதே நேரம், கருச்சிதைவு செய்யலாகாது என்று சட்டம் இருந்த கால நிலைமை இருந்ததால் – மறைவில் ஒளிந்து வாழ்ந்து – கர்ப்ப காலத்தைக் கழிப்பது – குழந்தையைப் பிரசவித்து உடனே தத்து கொடுத்து விடுவது என்று முடிவானது. குழந்தை அவ்வாறே பிரசவிக்கப் படுகிறது. மதப்பற்று நிரம்பிய, படித்த, பணவசதி உள்ள பெற்றோரிடம் மட்டுமே தன் பிள்ளையைத் தத்து கொடுக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுகிறாள் – பிரயாசையும் படுகிறாள் – அவ்வாறே ஒரு ஜோடி கிடைக்கிறது – குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று இணங்கி வந்தவர்கள் ஏனோ கடைசி நிமிடம் மனம் மாறி – வேண்டாம் என்று பின்வாங்கிக்கொள்கின்றனர் – தேடல் தொடர்ந்தது – ஆனால் இறுதியில் கிடைத்ததோ, படிக்காத பெற்றோர் மட்டுமே – அமெரிக்காவில் பள்ளி செல்ல வேண்டும் என்பது சட்டமே என்பதால் இருவரும் பள்ளிப்படிப்பு பெற்றிருந்தனரே தவிர – கல்லூரி சென்றவர்கள் அல்லர். எனவே குழந்தையின் தாய்க்கு, அவர்களிடம் குழந்தையைத் தத்து கொடுக்க மனம் வரவில்லை – ஆனால் குழந்தையை வளர்க்கும் அருகதை அற்றவள் என்பதால் தத்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதையும் அவள் விரும்பவில்லை. எனவே தத்து எடுக்கும் பெற்றோர்கள் இருவரும் – கல்லூரிப் படிப்பு படிப்பேன் என்று சத்தியம் செய்தாலொழிய என் குழந்தையை தத்து கொடுக்க மாட்டேன் என்று நீதி மன்றம் வரை சென்று உறுதி மொழி வாங்கிய பின்பே தத்து கொடுக்கும் படலம் நிறைவு பெறுகிறது. இருப்பினும் தத்து எடுத்தப் பெற்றோர்கள் குழந்தையிடம் முதலில் அன்பு காட்ட மறுத்தனர் – கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் எந்த காரணம் காட்டி குழந்தையைத் தாய் எடுத்துக் கொண்டு போய்விடுவாளோ – அன்பு செலுத்திவிட்டுப் பின்னால் பிரிவில் துயருறக் கூடாது என்றே அந்த வளர்ப்புப் பெற்றோர் – அன்பு மறுத்ததனர். சட்டப்படியாக அளிக்க வேண்டிய உணவும், இருப்பிடமும், பராமரிப்பும் மட்டுமே முதல் ஆறு மாதம் அந்த குழந்தைக்கு கிடைத்தன. இருப்பினும் கருத்தரிக்க இயலாத உடல் நிலை (இனப்பெருக்க மண்டலாக் கோளாறு காரணமாக) கொண்ட அந்த வளர்ப்புத் தாய் குழந்தையின் மதிப்பு அறிந்தவள் எனவே – கல்லூரிப் படிப்பு படித்தால் தான் சட்டப்படி குழந்தையின் தாயாக முடியும் எனும் நிர்ப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெல்கிறாள் என்றாலும் – இக்கால கட்டத்தில் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிடுகிறது. “நானே தாய்” என்று வழக்கில் வெற்றி பெற்றபின் – குழந்தையை அணுகிப் பார்த்தால் – குழந்தை பிடிவாதம் கொண்ட குழந்தை என்பது புலப்படுகிறது. குழந்தைக்குப் பிறருடன் பழகும் பாங்கு இல்லை என்பதும் புலப்படுகிறது. இருப்பினும் குழந்தையை வெறுக்காமல் அவள் வளர்க்கிறாள்.

அடுத்தடுத்து அதிர்ச்சிகள் – குழந்தைக்குப் – பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை ஏனெனில், அங்கு ஆசிரியர்களுக்குத் தெரிந்திருப்பதை விட, குழந்தைக்கு அதிகம் தெரிந்திருக்கிறது – புத்தகங்களில் இல்லாததையே குழந்தையின் மனம் நாடுகிறது – பிற மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு குறும்புத்தனம் நிறைய பண்ணுகிறது – மொத்தத்தில் பொல்லாப் பிள்ளையாகக் குழந்தை பார்க்கப்படுகிறது.

தாய் கொஞ்சம் கலவரப்பட்டாலும் வளர்ப்புத் தந்தை அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிறுவயதில் பல்விதக் கொடுமைகளுக்கு ஆளானவர் அவர் என்பதால் வளர்ப்புக்கு குழந்தையின் நிலைமையை உணர்ந்தவராகவே தெரிந்தார்.

ஏறக்குறைய இதே நிலைமையை வள்ளலாரின் சரித்திலும் காண்கிறோம். கலாச்சார வேறுபாடுகள் மற்றும் நிகழ்வுகளின் தன்மையில் வேறுபாடுகள் ஆகியன இருப்பினும், நிஜப் பெற்றோர்கள் இன்றி அண்ணன் அண்ணியின் பராமரிப்பில் வள்ளலார் வாழ்ந்ததையும் – பள்ளிப்படிப்பில் – குறும்பு செய்தததையும் – சட்டாம்பிள்ளையைக் காட்டிலும் அவருக்கு குழந்தைப் பருவத்திலேயே அதிகமாகத் தெரிந்திருந்தையும் அறிகிறோம். ஸ்டீவ் ஜாப்ஸ் – வள்ளலார் இருவருமே conventional system of education எனப்படும் முறைசார் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

இருவருக்குமே தம் பிறவியின் தாத்பரியம் பற்றி அறிந்து கொள்ளும் முனைப்பு சிறுவயதிலேயே இருந்திருக்கிறது. ஆறு மாதத்தில் கோயிலில் செம்மாந்து வள்ளலார் சிரித்த நிகழ்வை இங்கு கவனத்தில் கொள்ளலாம். ஸ்டீவ், வள்ளலார் இருவருமே தம் பிறப்பு பற்றி அறிந்து கொண்ட தெளிவை பின்னாளில் அவர்கள் வாய்மொழியே காட்டுகிறது.

இதில், ஸ்டீவிற்கு தன் உடலாய்ந்த (bodily) பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இருந்த நெருக்கடி வள்ளலாருக்கு இல்லை. எனவே ஸ்டீவ் தன் நிஜப் பெற்றோர்கள் எவரென அறிந்து கொள்ளும் வேட்கை கொண்டவராக இருந்தார். பெற்றோர் யாரென அறியாமல் குழந்தைப் பருவத்தில் நெஞ்சகம் நைந்து நொந்து அவர் வாடியிருக்கிறார். தன் “மூலம்” எதுவென அறிய வெகுபிடிவாதமாய் முயன்றிருக்கிறார். இந்தத் தேடல் எத்தனை கொடுமையானது என்பதை விவரிக்க வார்த்தைகள் போதா. ஆனால் அந்த நோன்பின் பயனாய், தனது 27ஆம் வயதில் தான் தாயைக் கண்டிருக்கிறார். தந்தையை – (இருவருக்குமே தான் தான் தந்தை தான் தான் மகன் என்று தெரியாமலேயே) ஒருமுறை பார்த்திருக்கிறார். ஆனால், இறக்கும் வரைத் தந்தையை நேரில் சந்தித்ததில்லை. விரும்பவில்லை – முயலவும் இல்லை என்றே படுகிறது. தாயிடம் சிறிது நாள் தொடர்பு இருந்திருக்கிறது ஆனால் நிலைத்ததாய் எவ்விதத் தொடர்பையும் பெற்ற தாயிடம் கூட ஏற்படுத்திக்கொள்ளவில்லை. செஞ்சோற்றுக்கடன் எனும் எல்லை தாண்டி தான் வளர்ப்புப் பெற்றோரை அவர் நேசித்தது தெரிகிறது. “என் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்” என்று வளர்ப்புப் பெற்றோரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் ஸ்டீவ் . இதே போன்று தன்னை வளர்த்த அண்ணன் அண்ணியின் மீது வள்ளளார் உயர்ந்த அன்பும் அபிமானமும் கொண்டிருந்தார் எனவும் அறிகிறோம்.

தன்னைப் பெற்ற நிஜப் பெற்றோர்களைப் பற்றி ஸ்டீவ் குறிப்பிடும்போது, “எனது விந்து-முட்டையின் வங்கி” என்று கூறுகிறார். “my sperm and egg bank. That’s not harsh, it’s just the way it was, a sperm bank thing, nothing more.”

இருவர் வாழ்விலும் ஜீவிகளின் சிருஷ்டிக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் கருவிகளைப் போன்ற வகையில் மட்டுமே இயங்குகின்றனர் என்பதைக் காண்கிறோம். சிசுவின் சிருஷ்டியின் நோக்கத்தை பெற்றோர் கட்டுப்படுத்தும் அமைப்பு இயற்கையில் இல்லை என்பதும் புலப்படுகிறது. அதே நேரத்தில், சிருஷ்டிகள் தாய்-தந்தை எனும் உறவின்பால் மிகுந்த பக்தி கொண்டிருந்ததைக் காண்கிறோம். திருவருட்பாவில் தாயும் தந்தையும் அவர்களது அன்பும் எண்ணிறந்த வகையில் கையாளப் படுவதைக் காண்க

அவதார புருஷர்களின் உறவு உடலாய்ந்த உறவு எனும் நிலையை விட்டு உணர்வாய்ந்த நிலையை எட்டி அங்கிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல ஆயத்தமாவதைக் காண்கிறோம். இதில் ஸ்டீவ் மற்றும் வள்ளலார் கொண்டிருந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் ஒப்பிடற்குரியது.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *