செ. இரா.செல்வக்குமார்

இப்பதிவு சூன் 20 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இமய மலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய தமிழகத்தின் முதல் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள்


இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள். படம் [2]

இந்தப் புவி உலக உருண்டையிலேயே ஆகப்பெரிய உயரமான மலை இமயமலையில் உள்ள எவெரெச்சுட்டு முகடே. இதன் உயரம் 8,848 மீட்டர். உலகத்தில் வட அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ, ஆத்திரேலியாவிலோ 7000 மீட்டர் உயரம் உள்ள மலைகூடக் கிடையாது. ஆசியாவைத் தாண்டி உள்ள உலகில் தென்னமெரிக்காவில் அருச்செண்டீனாவில் உள்ள அக்கான்காகுவா (Aconcagua) மலையே மிக உயரமானது. அதன் உயரம் 6,961 மீட்டர் மட்டுமே. ஆனால் இமயமலைத் தொடரில் 8,000 மீட்டர் உயரத்தை எட்டும் மலைமுகடுகளோ 14 உள்ளன! இமயமலைத்தொடரில் 7000 மீட்டரைத்தொடும் மலைமுகடுகள் 126 உள்ளன. இமயமலை அடுக்குத்தொடர் முழுவதுமே கரடுமுரடான, பனிமூடிய கொடுமுடிகள் நிறைந்தவை. இவற்றில் எவெரெசுட்டு மலையானது உலகின் உச்சி. இம்முகட்டை முதன்முதலாக எட்டியவர்கள் செர்ப்பா என்னும் மக்கள் இனத்தைச் சேர்ந்த தென்சிங்கு நோர்கே (Tenzing Norgay) என்பாரும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்டு இல்லரி (Edmund Hillary) என்பாருமே. இவர்கள் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு உச்சியை எட்டி அரியசெயல் செய்து உலகப்புகழீட்டினார்கள்[3]. அதற்குமுன் யாரும் இந்த உச்சியை எட்டவில்லை. 2010 ஆம் ஆண்டுவரை 3,142 பேர் உச்சியை எட்டியிருக்கின்றார்கள் [3]. இந்த எவரெசுட்டு முகட்டைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் எவரும் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள் எட்டும்வரை எட்டவில்லை. ஆனால் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் மூவர் எட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் திரு. மகேந்திரன் முனுசாமி (எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு மோகனதாசு நாகப்பன் ((எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு தி. இரவீந்திரன் (இவர் வடக்கே இருந்து திபெத்திலிருந்து ஏறிய முதல் ஆசியர்; உச்சியை எட்டியது 2013 இல்) ஆகிய மூவரையும் குறிப்பிடல் வேண்டும் [4]. ஆனாலும் தமிழகத்தைச்சேர்ந்த தமிழர் எவரும் திரு சிவக்குமார் எவெரெசுட்டை எட்டவில்லை.

எவரெசுட்டு மலையை எட்ட முயன்று 200 உக்கும் மேலானவர் உயிர்துறந்துள்ளார்கள். மலையில் உச்சிப்பகுதிகளில் காற்றின் அழுத்தமும் உயிர்வாழ இன்றியமையாத உயிர்வளி எனப்படும் ஆக்சிசனின் அளவும் மூன்றில் ஒருபங்குதான் இருக்கும். கடல்மட்டத்தில் ஒரு மணித்துளிக்கு 20-30 மூச்சிழுப்புகள் இருக்குமென்றால், மலையின் உயரமான பகுதிகளில் அதே அளவு உயிர்வளியை மூச்சாக உட்கொள்ள ஒரு மணித்துளிக்கு 80-90 முறை மூச்சு இழுத்துவிடவேண்டும். எவெரெசுட்டுக் கொடுமுடியை எட்டி அரிய செயல் நாட்டியிருக்கும் அவில்தார் சிவக்குமார் அவர்களைப் பாராட்டி சூன் 20 ஆம் கிழமையின் வல்லமையாளராக அறிவித்து நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] இப்பதிவு சூன் 20 அன்று வரவேண்டியது. எதிர்பாராத காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
[2] The Hindu, June 13, 2016
[3] ஆங்கில விக்கிப்பீடியா ‘Mount Everest”
[4] முகநூலில் ஐயை மணிமேகலை இராசன் அவர்கள் செ.இரா. செல்வக்குமார் பதிவில் கருத்திட்டதைத் தொடர்ந்து திரட்டிய செய்தி. ஆங்கிலவிக்கிப்பீடியா (https://en.wikipedia.org/wiki/M._Magendran ) (http://malaysianindianhistory.blogspot.ca/2013/08/t-ravindran-first-asian-to-conquer.html)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. சிங்க நடை போட்டு, சிகரத்தில் ஏறிய வல்லமையாளர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  2. இந்திய தேசியக் கொடியை இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கட்டுரையை திறம்பட தொகுத்த பேராசிரியர்செ. இரா.செல்வக்குமாருக்கம் எனது பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *