“அவன், அது, ஆத்மா”
மீ. விசுவநாதன்
அத்யாயம்: 49
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
“பாரதி இரா. சுராஜ்”
“பாரதி கலைக்கழகம்” என்ற அமைப்பு எண். 50, மசூதித் தெரு, சைதாப்பேட்டை என்ற இடத்தில் இயங்கி வந்தது. கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லம்தான் அது. அமைப்பின் நிறுவனத் தலைவர் பாரதி இரா. சுராஜ் அவர்கள். அவனை அந்தக் கவிஞர் குழாமில் சேர்த்து அணைத்து நெறிப் படுத்திய பெரியவர் திரு. பாரதி இரா. சுராஜ் அவர்கள்தான். நல்ல அறிஞர். மிகச் சிறந்த ரசிகர். ஒவ்வொரு கவியரங்க அழைப்புக் கடிதத்திலும் அவனது கவிதைகளை ரசித்து அவர் ஒரு தபால் கார்டில் விமர்சனமாக எழுதி அனுப்புவார். அது அவனுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும். கருத்து பிடிக்கவில்லை என்றால் அதையும் அழகாக ரசிக்கும்படியாக எழுதுவார்.
ஒரு முறை “பாபநாசம்” என்ற தலைப்பில் கவிதை எழுதி அதை கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரங்கில் படித்தான். கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கவியரங்கத்தை திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அவனது கவிதையில்,
” நீருக்குள் நிறவெறியை நீக்கி விட்ட,
ஏராள மீனினங்கள் எதிர்நீச்சல் போட்டுவரும்,
கூர்மூக்குக் கொக்குகளோ கூடியதை ரசித்திருக்கும்,
சேராத நாய்பூனை சேர்ந்தருகே உணவருந்தும்,
நேர்மாறாய் இருக்குதுபார் நேர்சென்று பார்த்தேனும்
சீர்ப்படுமா நமது மனம், சீக்கிரம்வா பாபநாசம்”
என்று அவனது கவிதையில் வரும் வரிகளை மிகவும் ரசித்து, மீண்டும் படிக்கச் சொல்லி “பலே,பலே” என்று கொண்டாடினார். அதன் பிறகு என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ” விஸ்வநாதன்…அந்த பாபநாசம் அருவியைப் போல கவிதையை நீங்கள் தர வேண்டும்” என்று சொல்லுவார். ஒவ்வொரு கவியரங்கத்திலும் கலந்து கொள்ளும் கவிஞர்களின் கவிதைகளில் அவர் ரசித்த வரிகளை அந்த அரங்கம் முடிந்தவுடன் அவர் தொகுத்துச் சொல்லும் அழகே தனிதான். எந்த அரங்கமானாலும் முதலிலேயே வந்து கலந்து கொள்ளும் பண்பு அவருக்கு இன்று வரை இருக்கிறது.
பாரதி கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் நாகநந்தி அவர்கள் இயக்கிய “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தில் “திருத்தராஷ்டிரன்” பாத்திரத்தில் நடித்திருந்தார் பாரதி சுராஜ். அதில் பாரதியாரின் கவிதை வரிகளை அவர் ரசித்துச் சொல்லும் குரல் இன்றும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பேராசிரியரின் முயற்சியாலும், பாரதி சுராஜ் அவர்களின் ஆர்வத்தாலும்தான் அந்த நாடகம் முழுக்க முழுக்க பாரதி கலைக்கழகக் கவிஞர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கவியரங்கத்திற்கு பாரதி சுராஜ் தரும் தலைப்பே அழகாக இருக்கும். பலவருடங்களுக்கு முன்பு ஒரு முறை “நினைச் சரணடைந்தேன்” என்ற தலைப்புக் கொடுத்திருந்தார். தண்டமிழ்க் கொண்டால் சிதம்பரம் சாமிநாதன் அவர்கள் அரங்கத்தின் தலைவர். அன்று அவன் காஞ்சிப்பெரியவரைப் பற்றி வெண்பாவில் அந்தாதியாக ஒரு பதிகம் எழுதிப் படித்தான். அவனது அந்தக் கவிதையை மிகவும் ரசித்து,” விசு..ஒன்னோடு வெண்பா அருமை போ” என்று தண்டமிழ்க் கொண்டல் அவனைப் பாராட்டினார். அந்த மோதிரக்கை குட்டுப் பட்டவுடன், பாரதி சுராஜ் அவனிடமிருந்து அந்தக் கவிதையை வாங்கி வைத்துக் கொண்டார். சில நாட்கள் சென்றதும் அவனைத் தொலைபேசியில் அழைத்து,” விஸ்வநாதன் “கவிஞர்கள் நெஞ்சில் காஞ்சி முனிவர்” என்ற தலைப்பில் ஒரு அன்பர் கவிஞர்களிடம் கவிதையை வாங்கித் தொகுத்து வெளியிடவிருக்கிறார். உங்களது “நின்னைச் சரணடைந்தேன்” கவிதையை அவர்களிடம் கொடுத்திருக்கிறேன்” என்றார். அந்தப் புத்தகத்தை தினமணிக் கதிரில் (1997ல் அக்டோபர் மாதம் என்று நினைவு) விமர்சனம் செய்திருந்த திருப்பூர் கிருஷ்ணன் இந்த வெண்பாக்களைப் பாராட்டி எழுதி இருந்தார்.
அவனது முதல் சிறுகதைத் தொகுப்பு “இரவில் நனவில்” 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அவன் அந்தச் சிறுகதைத் தொகுப்பை பாரதி சுராஜ் அவர்களுக்குக் கொடுத்த பொழுது, மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு,” ஒங்க சிறுகதைகள நான் படிச்சிருக்கேன். நல்ல நடை கைவந்திருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்..நானும் சிறுகதைகள் எழுதி இருக்கிறேன் ” என்று சொன்னதோடு அந்தத் தொகுதியில் இருந்த பதினான்கு சிறுகதைகளையும் விமர்சனம் செய்து ஒரு அருமையான கட்டுரை எழுதி அவனுக்கு அனுப்பி இருந்தார். அவனது திருமண வரவேற்புக்கு பாரதி சுராஜ் முன்னிலை வகிக்க கவிமாமணி வ.வே.சு. தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
பாரதி கலைக்கழகம் சார்பில் கவிமாமணி விருது வழங்க, அவனது பெயரைத் தேர்வு செய்த விபரத்தை அவனுக்குத் தொலைபேசியில் வாழ்த்தாகச் சொன்ன பெரியவரே பாரதி சுராஜ் அவர்கள்தான். அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ” விஸ்வநாதன்..நீங்கள் எழுதிய கவிதைகளைத் தேர்வு செய்து ஒரு கவிதைத் தொகுப்பும் கொண்டு வாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். அதற்கு ஒரு அருமையான வாழ்த்துரையும் கொடுத்திருந்தார். இப்படி அவனை மாத்திரம் இல்லாமல் அத்தனை கவி உள்ளங்களையும் தேடிச் சென்று வாழ்த்தும் நல்ல உள்ளம் கொண்டவர்தான் பாரதி பக்தர் உயர்திரு. பாரதி சுராஜ்.
இந்த வருடம் 30.06.2016 அன்று அவருக்கு எண்பத்தி எட்டாவது பிறந்த தினம். அன்று அவன் “காலம்” என்ற தலைப்பில் இப்படி ஒரு வெண்பா எழுதி தன்னுடைய வணக்கத்தை அவருக்குத் தெரியப்படுத்தி இருந்தான்.
“நேர்மையும் தூய்மையும் நெஞ்சிலே பாரதி
பார்வையும் எந்தப் பகட்டுமிலாச் சீர்மையும்
கார்முகில் கண்ணன் கழலடி எண்ணமுமாய்
ஒர்”சுராஜ்” தானிங்கே உண்டு.”
07.07.2016
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
மிக அற்புதமான நெகிழ்ச்சிதரும் கட்டுரை. அதுவும் எம் அன்புத்தலைவர் பாரதி சுராஜ் பற்றி விசு எழுதியது கண்ணில் நீரை வரவழைத்தது. அந்த வெண்பாவும்(ஈற்றடி பிரமாதம்) மிக அருமை—– யோகியார்