Featuredஇலக்கியம்பத்திகள்

6. பெண்ணியலும் பெண்ணறமும்

அவ்வைமகள்

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத பணியில் பெண்கள் படும் அவதி என்கிற வகையில், பென்னி ஹாரிங்டனின் கதை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கிற ஒன்று. தெரியாத சரிதங்கள் எத்தனையோ! இன்றைய கால கட்டத்தில், பொதுவாக, அமெரிக்காவில், காவல் துறையில் அதிமேல் பதவிகளுக்குப் பெண்கள் முயற்சி செய்யும் எண்ணமும் கூட இல்லாதவர்களாக இருப்பதாக, நான் சந்தித்த பல பெண் காவல் அதிகாரிகள் கூறினார்கள்.

இந்நிலையில், ஒரு ஆண் காவல் தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் சொன்ன விவரங்களைப் பற்றி பேசும் முன் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் நிலைமை பற்றி அறிவது நல்லது. எனவே இவ்விஷயத்திற்குப் பிறகு வருவோம்.

அமெரிக்க இராணுவத்தில், பெண்கள் 1775 லிருந்து பணி புரிந்து வருகிறார்கள். 240 ஆண்டுகள் பெண்மை கண்ட பராம்பரியம் இது. இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் இவ்வாறு இராணுவப் பணிக்கு வந்த பெண்களில் மிகப் பெரும்பாலோர் செவிலியர்களாக, துணி துவைப்பவர்களாக, துணியை மடித்து இஸ்திரி போடுபவர்களாக, இருப்பிடங்களைத் தூய்மைப் படுத்தி ஒழுங்கு செய்பவர்களாக, சமையல்காரர்களாக, சில பேர் எழுத்தர்களாக என்று மட்டுமே பணியாற்றி வந்தனர். அதற்கடுத்த கட்டத்தில், தொழிநுட்ப உதவிக்கென கணினி, ஆய்வகம், அளவீடுகள் போன்ற பணிகளில் பெண்கள் வந்தமர்ந்தார்கள். இவ்வாறான உபரிப் பணிகள் மட்டுமே இராணுவப் பணிகளில் 67 விழுக்காடாகும். மற்ற 33 விழுக்காடு பணிகள் “Combat” எனப்படும் சண்டையில் இறங்கும் பணியைச் சார்ந்தவை. அப்பணிகளில் பெண்களை அமெரிக்கா அனுமதிக்கவில்லை – 1993ல் பெண்களை “Combat” பணியில் பணியமர்த்தக்கூடாது என்று தடைச் சட்டமே கூட வந்தது. ஆனால், ஆண்-பெண் சமத்துவம் பரவலாக்கப் பேசப்பட்ட நிலையில், 1970 வாக்கில் இராணுவ நிலைமையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு சண்டையின் சற்றே உட்புறமான பணிகளில் பெண்கள் அனுமதிக்கப் படலாயினர். இதையும் சேர்த்தால் மொத்தம் 78 விழுக்காடு இராணுவப்பணிகளில் பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு உருவானது. இருப்பினும், முந்தைய 67 விழுக்காட்டுப்பணிகளுக்கு அளித்த முன் உரிமையைப் பெண்கள், பிந்தைய 11 விழுக்காட்டுப் பணிகளுக்கு அளிக்கவில்லை. இந்நிலையில், 2013ல் புரட்சிகரமாக, “Combat” பணிகளிலும் பெண்களை அனுமதிக்கலாம் என் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவ்வாணையின்படி பெண் இராணுவ அதிகாரிகள் போர் முனையில் நேரடியாக நின்று போரிடும் ஆற்றல் பெற சிறப்புப் பயிற்சி (இரண்டரை ஆண்டு காலம்) வழங்க ஏற்பாடானதோடு 2016 ஜனவரி முதல் பெண்கள் “Combat” பணியில் பணியமர்த்தப் படுவர் என்றும் ஆனது. பரபரப்பான மீடியா கவனமும், பெண்ணிய வெற்றியாளர்களின் உற்சாகமும் இணைந்து கொப்புளிக்க, அமெரிக்க இராணுவத்தில் ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. உலகின் மகோன்னத வரலாறு எனும்படியாக அது பதிவு செய்யப்பட்டது. இந்த முடிவு வெளியான உடனே, “பெண்களை “combat” பணியில் அமர்த்தக் கூடாது!” என மில்லியன் கணக்கில் கூக்குரல்கள் எழுந்தன – அந்தக் கூக்குரல்களில் நியாய தர்மமும் கரிசனமும் இருப்பதை அமெரிக்க இராணுவக் கழகம் கவனிக்கத் தவறவில்லை.

இருப்பினும், திட்டமிட்டபடி, பெண் போர் வீரர்களுக்கான பயற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக, ஆண் போர் வீரர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் எத்தனைத் தீவிரமாக – எத்தனைக் கடுமையாக வழங்கப் படுமோ அவ்வாறே பாரபட்சம் இல்லாமல்போர்முனைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

“Army Rangers” பயிற்சிப் பள்ளியில் போர்முனைப் பயிற்சிக்காக 19 பெண்கள் சேருகிறார்கள். பயிற்சிக்குச் சேர்ந்த இந்த 19 பெண்களில் 11 பேர் நான்காவது நாளே பயிற்சியில் இருந்து விலகினர். இருந்த மீதம் எட்டு பேரும் முதல் டெஸ்டில் தேர்ச்சியுறவில்லை. அதில் தேவாலம் என்றிருந்த மூன்று பேரை வைத்துக்கொண்டு பாக்கி ஐந்து பேரை பயிற்சியை விட்டு விலக்க வேண்டியிருந்தது. இரண்டரை ஆண்டு காலம் சென்று. பயிற்சி முடிந்து பார்த்தால், அந்த மூன்று பேரில் இருவர் மட்டுமே பயிற்சியை வெற்றிகரமாக முடித்து “பாஸ்” ஆகிறார்கள். மூன்றாவது ஆள் இரண்டாம் தவணையாக “பாஸ்” ஆகிறார்.

“Marine Corps” நிறுவனத்தின் காலாட்படைப் போர்முனைப்பயிற்சிப் பள்ளியில் ஆண்களுக்கே என்ற நிலைமையை மாற்றி 2013 ல் பெண்களையும் சேர்த்துக்கொண்டார்கள் – இருவர்க்கும் ஒரே பயிற்சி வழங்கப்பட்டது – ஆனால் வந்த பெண்டிர் யாவரும் பயிற்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போயினர் – ஒரே ஒரு பெண் மட்டுமே பயிற்சியில் “pass” ஆகிறார். இங்கு, ஆண்-பெண் இருவரையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நிறுத்தி ஒரே பயிற்சி வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கப்பற்படைப் பயிற்சிப் பள்ளியில் இதே போன்ற கதைதான். போனது போக எஞ்சிய இரண்டு பெண்களும், பயிற்சியின் இறுதிப் பரிட்சையில் தோற்றுப் போகிறார்கள். ஆக மொத்தம், பூஜ்ஜியம் பெண்களே பயிற்சியில் வென்றது என்றானது.

பெண்களைப் போர்முனைக்கு combat பணிக்கென அனுப்புவது குறித்த அமெரிக்கர்களின் ஏகோபித்த கரிசனக் கூக்குரல் இராணுவக் கழகத்தால் கவனிக்கப்பட்டது என்று கூறினேன் அல்லவா அதன் விளைவாக ஒரு முக்கியமான பணியை அமெரிக்க இராணுவக் கழகம் செய்தது. அது என்னவென்றால், இந்த இரண்டரை ஆண்டு காலம் நிகழ்ந்த போர் முனைப் பயிற்சியில் – ஆண்-பெண் இரு பாலருடைய செயல் திறன் எவ்வாறு அமைந்தது என்று மிக விரிவானதும் ஆழ்ந்த நுணுக்கங்களை உடையதுமான நேரடி ஆய்வு நிகழ்த்தப்பட்டு, அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை கண்டு இந்த உலகமே ஒரு அதிர்ச்சியான நிலை கண்டது எனலாம். அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

பெண் போர் முனை வீரர்கள் ஆண் போர் முனை வீரர்களை விட மிக மிக அதிகமாக காயப்படுகிறார்கள். தோலும், காரமும், கால்களும் அப்படியே பட்டென்று ஓடிகின்றன.
போர்முனை ஆயுதங்களைக் கையாளும்போது குறி தவறும் பிழை பெண்களுக்கு மிக மிக அதிகமாய் ஏற்படுகிறது.

பெண் போர்வீரர்கள் ஆண் போர் வீரர்களைப் போல வேகமாக ஓடுவதில்லை.

சக போர் வீரர் அடிபட்டு வீழ்ந்தால், அவரைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தும் அடிப்படை வேலையைப் பெண்வீரர்களால் செய்யமுடியவில்லை ஏனெனில் இன்னொரு ஆளைத் தூக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. மிக பலசாலியானவர் என்று பேர் பெற்ற ஒரு பெண் வீரர் ஒரு ஆளைத் தூக்கினார் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இது மிகப் பெரிய ஆபத்து கண்மூடிக் கண் திறக்கும் நேரம் எனும்படியாக வீழ்ந்த ஆளைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்த வேண்டும் இல்லையேல் மிகப்பபெரிய விளைவுகளை நிகழும். கணநேரத்தில், ஆளைத் தூக்கி அப்புறப்படுத்த இயலவில்லை என்றால் அது போர்முனையில் மிகப்பெரிய தடை – இழிவு! பளுதூக்குவதில் பெண்களின் உடல் எத்தனை பலவீனமாக இருக்கிறது என்றால் – போர்முனைப் பயிற்சியே இல்லாத சாதாரண ஒரு ஆண் கூட, போர் முனைப் பயிற்சி பெற்ற இராணுவப் பெண்வீரரை விட அதிக ஆற்றலுடன் அதிக சீக்கிரமாக இன்னொரு ஆளைத் தூக்க முடிகிறது.

சக பெண் போராளி அடிபட்டு விழும்போது ஆண் போர்வீருக்கு கவனக் குறைவு ஏற்பட்டு அவரது செயல்திறன் வெகுவாகக் குறைகிறது.

இன்னும் சிலபல முடிவுகள் இருப்பினும் மேற்கண்ட அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.

இந்நிலையில் இந்நாட்டு மக்கள் ஏன் பெண்கள் போர்முனையில் combat பணிக்கு வரக்கூடாது என்று கூறும் கருத்துக்கள் இதோ:

அதிகமாகவும் சுலபமாகவும் அடிபடும் உடம்பு பெண் உடம்பு என்பதால், பெண் வீரர்களை ஸ்திரமான ஒரு “படை பலம்” என்று நம்பி எந்தப் போர்க் களத்திலும் இறங்கி விட முடியாது.

போர் முனையில் பொத்து பொத்தென சுலபமாய் விழும் பெண் வீரர்களைக் காப்பாற்றுவதும், மருத்துவ உதவி அளிப்பதுமே முதன்மைப் பணியாகப் போகுமென்பதால், “Mission” ஐ (போர்ப்பணியை) முடிக்க அதிக ஆள் பலம், சிலவு ஆகியனவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

போர் முனையில் தங்குமிடங்களில் பெண்களுக்கென பிரத்யேக வசதிகளை ஏற்படுத்துவது சில அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

முகாம்களில் பெண் போர்வீரர்கள் ஆண்வீரர்களின் சிலபல தனிவகை சுதந்திரத்துக்கு இடைஞ்சலாய் இருப்பார்கள்.

ஏற்கனவே பாலியல் பிரச்சனைகள், அவைதொடர்பான மிரட்டல்கள், அடக்குமுறை என்று இராணுவப் பெண்கள் அச்சத்தில் வெளியே சொல்லமுடியாமலும் சொல்லாமலும் இருக்க முடியாமலும் இருக்கும் நிலையை போர்முனைப் பயிற்சியும். போர்முனைப் பணியும் மேலும் சிக்கலாக்கும். பெண் போர் வீரர்களுக்கு உகந்த பாதுகாப்பு இல்லை ஏனெனில் அங்கே வேலியே பயிரை மேயும் கதையாகும்.

நம் படையில் பெண்கள் என்றால் எதிர்ப்படைக்கு மிகவும் லாபம். அவர்களுக்கு வெற்றி எளிதாகவும் கிடைத்து விடும். அது மட்டுமல்ல, பெண் போர் வீரர் கடத்தப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் வெகு சுலபமாக நிகழும். போர் முனையில் வெளிநாட்டுப் படைகளால் களவாடப்படும் பெண் போர்வீரர்கள் எதிர்ப்படையினரால் கற்பழித்துக் கொல்லப்படலாம் அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவிகளாகவும் மாற்றப்படலாம்.

இவ்வாறான கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் உள்ள நிலையில், இராணுவத்தின் நிலை என்னவாயிருக்கும் என்று வினவினேன். முத்தாய்ப்பான பதில் கிடைத்த்து: இராணுவப் போர்முனை வீரர் எனும் பணி சுலபமான வேலை இல்லை – இது உடல் திறனையும் – துரிதமாக இயங்கும் ஆற்றலையும், ஒரு துளி பிசகும் ஏற்படாதவாறு – எதிரியைக் குறிவைத்து அழிக்கும் திட மனதையும் கொண்டவர் செயுயும் வேலை. இராணுவத்தில் ஆண் – பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இரண்டு பேரும் ஒரே விதமான திறமை காட்டவேண்டும் என்பது அடிப்படையான விதி. எனவே பெண்களுக்கு, பயிற்சியில் எவ்வித சலுகையும் காட்டமுடியாது. இது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம்.

உடல் ரீதியாக பெரும்பாலான பெண்கள் இப்பணிகளுக்கு நுழைவுத்தகுதி கூட பெறுவதில்லை. ஆனால் உடல் பலம் பொருத்தமாய் இருக்கிற பெண்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்கிற உண்மையைப் பேசியாகவேண்டும். எனவேதான், Special Tactics Officer, Combat Control, Special Operations Weather Technician, Combat Rescue Officer, Pararescue and Tactical Air Control Party ஆகிய பணிகளை ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளாக இன்றும் வைத்திருக்கிறோம். என்றும் இது இவ்வாறே இருக்கவும் கூடும். பெண்கள் பிற இராணுவப் பணிகளை முயலத் தடையில்லை. எடுத்துக் காட்டாக விமானப்படையில் போர் விமானப் பைலட்டுகளாகப் பெண்கள் இருக்கிறார்கள். அமரிக்காவில் இது வெகு நாட்களாக சாத்தியமாகி இருக்கிறது. இது போன்று, இராணுவத்தில் அவர்களுடைய உடலுக்கு ஏற்ற வேலையை அவர்கள் ஏற்றுக்கொள்வதில் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை. இது பெண்கள், அவரவர் உடல்நிலையைக் கருத்தில் வைத்து, பணியின் கஷ்டநஷ்டங்களை ஆலோசித்து, அவர்களது சொந்த வாழ்க்கையின் அகல நீளங்களையும் கணக்கில் வைத்து. அவர்களே சுயமாக எடுக்கவேண்டிய முடிவு. ஆண்-பெண் என்ற சமத்துவம் உடம்புக்கு இல்லை. என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் – நாம் புரிந்து கொண்டால் எல்லா விஷயங்களுமே எளிமையாகிவிடும். பெண்ணியம் என்பதை விட பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம். “

மேலும் பேசுவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க