Blog

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    -மேகலா இராமமூர்த்தி

    நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான்.

    சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன்,

    ”காவலனே! மானிடக் காயத்தில் (உடம்பில்) உள்ள இராமன் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலேயன்றி வேறு யாருமல்லன்! அவ் அம்மானோடு (பெருமைக்குரியவன்) நீ நட்புக் கொள்! மாய மானாக வந்த மாரீசன் மாயும்படி அவனுக்கு மா யமானாக (பெரிய யமன்; யமான் – யமன் என்பதன் நீட்டல் விகாரம்) ஆனவன் இந்த இராமன்” என்று தேர்ந்த சொற்களால் சுக்கிரீவனிடம் இராமனின் திறலுரைத்தான்.

    ஆயமால் நாகர் தாழ் ஆழியானே அலால்
    காயமான் ஆயினான் யாவனே காவலா
    நீ அம்மான் நேர்தியால் நேர்இல் மாரீசன் ஆம்
    மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3898)

    தொடர்ந்தவன்… ”நிருதர்கோனான இராவணன் மதியின்மையால் இராமன் மனைவியை வஞ்சனையால் கவர்ந்துசென்றான்; அவளைத் தேடிவந்த அம்மானுடர்களின் கிடைத்தற்கரிய நட்பு நினக்குக் கிட்டியது நின் தவப்பயனே!” என்று இராமலக்குவரின் இயல்பைத் தன் நுண்ணறிவினால் கண்டுணர்ந்த அனுமன் அதனைச் சொல்வன்மை தோன்றத் தன் தலைவனிடம் விண்டுரைக்கின்றான்.

    இச்செய்திகளால் மனமகிழ்ந்த அருக்கனின் (சூரியன்) அருமை மைந்தன் சுக்கிரீவன், தன் துணைவர்கள் உடன்வர அனுமனோடு சென்று அண்ணல் இராமனைக் காணுகின்றான். ”திருமாலே மானுடனாய் வடிவெடுத்து வந்ததுபோல் அல்லவா இவன் இருக்கின்றான்!” என்று இராமனைக் கண்டு தன்னுள் வியந்தவன், இறைவனே மானுட வடிவில் தோற்றரவு செய்திருப்பதால் மற்றுள்ள தேவர் குழுக்களையெல்லாம் மானுடம் வென்றுவிட்டது என்று தெளிந்தான்.

    இராமனுக்கு அருகில்சென்ற சுக்கிரீவன், முற்பிறவியில் நானியற்றிய நல்வினைகளாலேயே உன்னைக் காணும் பேறுபெற்றேன் என்று உபசார மொழிகள் கூறிநின்றான். அதனைக் கேட்ட இராமன், ”சவரி எனும் மூதாட்டி வழிகாட்டியதன்பேரில் நாங்கள் உன்னைத் தேடிவந்தோம்; எங்கள் கையறு துன்பம் உன்னால் நீங்குமென்று மெய்யாய் நம்புகின்றோம்” என்று தாங்கள் சுக்கிரீவனைத் தேடிவந்த காரணத்தைச் செப்பினான்.

    ஆனால் சுக்கிரீவனோ சீதையைத் தேடுதற்குத் தான் துணை செய்கின்றேன் என்று உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, “என் அண்ணன் வாலி தன் தடக்கைகளை ஓங்கிக்கொண்டு என்னை இருள் நிலைபெற்ற இவ்வுலகிற்கு அப்பாலும் துரத்திவர, இம்மலையே எனக்குப் பாதுகாவல் என்று கருதி இங்கு ஒளிந்து உயிர்பிழைத்தேன்; உயிரைவிடவும் துணிவில்லாத நான் உன்னைச் சரண் புகுந்தேன்; என்னைக் காத்தலே உனக்கு தருமமாகும்!” என்று தனக்கு முதலில் உதவுமாறு இராமனிடம் இறைஞ்சுகின்றான். 

    முரணுடைத் தடக் கை ஓச்சி
         முன்னவன் பின்வந்தேனை
    இருள்நிலைப் புறத்தின்காறும் உலகு
         எங்கும் தொடர இக் குன்று
    அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்
         ஆர் உயிர் துறக்கலாற்றேன்
    சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
         தாங்குதல் தருமம் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3912)

    எந்த உயிருமே முதலில் தன்னைப் பற்றித்தான் சிந்திக்கும்; தான்படும் தொல்லைகளிலிருந்து விடுபடவே விழையும்; விரையும். பின்புதான் மற்றவர்களின் துயருக்கு உதவத் தலைப்படும். இதுவே உயிர்களின் உளவியல். இந்த உளவியலைச் சுக்கிரீவன் பாத்திரப் படைப்பு வாயிலாக நமக்குத் தெளிவாய் உணர்த்திவிடுகின்றார் கல்வியில் வல்லவரான கம்பர்.

    சுக்கிரீவனின் நிலைகண்டு இரங்கிய இராமன், அவன் துன்பத்தை முதலில் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்தவனாய், ”இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நின்னை வருத்தியவர் என்னை வருத்தியவர் ஆவர்; தீயரே ஆயினும் உனக்கு நட்பானவர்கள் எனக்கும் நண்பரே; உன் உறவினர் எனக்கு உறவினர்; என் சுற்றத்தார் உன் சுற்றத்தார்; நீ என் இன்னுயிர் நண்பன்!” என்று கூறி அவனோடு நட்புக் கொள்கின்றான்.

    மற்றுஇனி உரைப்பது என்னே
         வானிடை மண்ணில் நின்னைச்
    செற்றவர் என்னைச் செற்றார்
         தீயரே எனினும் உன்னோடு
    உற்றவர் எனக்கும் உற்றார் உன்
         கிளை எனது என் காதல்
    சுற்றம் உன்சுற்றம் நீ என்
         இன் உயிர்த் துணைவன் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3914)

    எளியோரின் நிலைகண்டு இரங்குதலும் அவர்கட்கு உதவுதலும் உயர்ந்தோர் பண்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் சுக்கிரீவனைப் பற்றியும் அவன் அண்ணன் வாலியைப் பற்றியும் முழுமையாக எதுவும் அறிந்துகொள்ளாத நிலையில் சுக்கிரீவனிடம் உன் பகைவர் எனக்குப் பகைவர்; உன் நண்பர் எனக்கும் நண்பர் என்று இராமன் வாக்குறுதி அளிப்பதை அறிவுடைய செயலாகக் கருத இயலவில்லை. ”தேறற்க யாரையும் தேராது” என்பது வள்ளுவம் அல்லவா?

    சுக்கிரீவனுக்கும் இராமனுக்குமிடையே மலர்ந்த நட்பைக்கண்டு மகிழ்ந்த குரக்குச் சேனை ஆர்த்தது; அஞ்சனைச் சிறுவனும் மேனி பூரித்தான். இராமலக்குவரோடு ஆங்குள சோலைநோக்கிச் சென்றனர் அனைவரும். சோலைபுக்கதும், இராமனும் சுக்கிரீவனும் பூக்களால் செய்த அணையில் அமர்ந்து உரையாடினர்.

    பின்னர், நீராடிவிட்டு வானரர்கள் படைத்த விருந்தை உண்டு மகிழ்ந்த இராமன், அங்கே விருந்தோம்பப் பெண்டிர் யாரும் இல்லாததைக் கண்டான். அதன்மூலம் சுக்கிரீவனும் தன் மனையாட்டியைப் பிரிந்திருக்கின்றானோ என்று ஐயப்பாடுற்றான். அதனை அறிந்துகொள்ளுமுகத்தான், ”நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாயா?” என்று வினவினான்.

    ……பொருந்து நன் மனைக்கு
         உரிய பூவையைப்
    பிரிந்துளாய்கொலோ நீயும்
         பின் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3922)

    விருந்தோம்புதலை மகளிர்க்குரிய தலையாயக் கடனாக – அறனாகக் கருதியவர்கள் தமிழர்கள். கோவலனோடு மதுரையில் தங்கியிருந்த கண்ணகி, அவனைப் பிரிந்திருந்த காலத்தில், அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமாகிய மகளிர்க்குரிய அறங்கள் அனைத்தையும் தான் செய்யமுடியாமல் போனதுபற்றி அவனிடம் வருந்தியதை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.

    சுக்கிரீவன் நிலையை விரிவாக விளக்குவதே இராமனின் வினாவுக்கான விடையாக அமையும் எனக் கருதிய அனுமன், சுக்கிரீவனின் தமையனான வாலி பற்றி இராமனிடம் சொல்லத் தொடங்கினான்.

    நான்கு வேதங்களையும் வேலிபோல் பாதுகாக்கும் சிவபெருமானின் அருளைப் பெற்றவனும், பெருவலி படைத்தவனுமாகிய ஒருவன் இங்கே இருக்கின்றான்; அவன் பெயர் வாலி!

    திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அவுணரும் முயன்று வலியற்று நின்றவேளையில் அங்குவந்த வாலி, தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்த தோள்களை உடையவன். நிலம் நீர் காற்று நெருப்பு எனும் நான்கு பூதங்களின் ஆற்றலையும் தான் ஒருவனே பெற்றவன்.

    வாலியை எதிர்த்து யார் போருக்கு வந்தாலும் வந்தவர்களின் வலிமையில் செம்பாதி அவனுக்கு வந்துவிடும் வரத்தைச் சிவபிரானிடம் பெற்றவன் அவன். அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை நாள்தவறாது எட்டுத் திக்கும் சென்று பணிபவன். [பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் (இயமான னாம்விமலா – திருவாசகம்) ஆகியோர் அட்டமூர்த்திகள் எனப்படுவர்.  இவ் எண்மரையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின் சிவபிரான் ‘அட்டமூர்த்தி’ எனப்பட்டான்.]

    கிட்டுவார்பொரக் கிடைக்கின் அன்னவர்
    பட்ட நல்வலம் பாகம் எய்துவான்
    எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
    அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3927)

    அந்த வாலியின் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் காற்றுச் செல்லாது; கந்தவேளின் வேலும் அவன் மார்பைத் துளைக்காது; அவன் வால் செல்லும் இடத்தில் இராவணனின் கோல் செல்லாது; அவனது வெற்றிக் கொடியும் செல்லாது என்றுரைக்கின்றான் அனுமன்.

    கால்செலாது அவன் முன்னர்
         கந்த வேள்
    வேல் செலாது அவன்
         மார்பில் வென்றியான்
    வால் செலாத வாய்
         அலது இராவணன்
    கோல் செலாது அவன்
         குடை செலாது அரோ.  (கம்ப: நட்புக் கோட் படலம் – 3928)

    ”இந்திரன் முதலான தேவர்களை வென்றவன் நான்” எனத் தருக்கித் திரியும் தசமுகனான இராவணனின் வீரமும் வாலியிடம் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்? இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கமும் வாலியின் தோள்வலியின்முன் நிற்கும் திறனற்றது என்று வாலியின் இணையற்ற தோளாற்றலை இராமனுக்கு அறியத் தருகின்றான் அஞ்சனையின் அரும் புதல்வன்.

    அந்த வலிமிகு வாலி அரசனாகவும் சுக்கிரீவன் இளவரசனாகவும் இந்தக் கிட்கிந்தையை ஆட்சிசெய்து வருகின்ற காலத்தில் ஒருநாள் மயன் மகனான அரக்கன் மாயாவி, வாலியோடு போர்புரிய வந்தான். சிறிது நேரத்துக்குள்ளாகவே வாலியை எதிர்த்துநிற்க இயலாமல் ஆற்றல்குன்றித் தோற்றோடினான். பூமியில் எங்கிருந்தாலும் வாலி தன்னைத் தேடிவந்து காலிசெய்து விடுவான் என்றஞ்சிய மாயாவி புகுவதற்கரிய பிலம் (பூமிக்குள் செல்லும் சுரங்கவழி) ஒன்றிற்குள் ஓடி ஒளிந்தான்.

    வாலியும் அவனை விடவில்லை; துரத்திச் சென்றான். பிலத்தருகே வந்தவன் தம்பி சுக்கிரீவனிடம், “நான் உள்ளே சென்று மாயாவியைப் பிடித்துக் கொணர்வேன். அதுவரை அவன் வெளியில் எங்கும் தப்பிச் செல்லாவண்ணம் நீ பிலத்தின் வாயிலில் சிறிதுநேரம் காவல் இரு!” என்று கூறிவிட்டுப் பிலத்தினுள் புகுந்தான்.

    காலம் கரைந்தது; இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் வாலி வெளியில் வரவில்லை. ”இவ்வளவு காலமாகியும் வாலி வெளியில் வரவில்லையே…ஒருவேளை அவன் இறந்துபட்டானோ?” என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று.  

    நாடோ அரசனில்லாது தாயற்ற குழவிபோல் தவித்திருந்தது. அதனைக்கண்ட நாங்கள், ”நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்” என்று இளவரசனான சுக்கிரீவனிடம் வேண்டினோம் என்றான் அனுமன்.

    சுக்கிரீவன் அதற்கு உடன்பட்டானா?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 57

    பழகத் தெரிய வேணும் – 57

    நிர்மலா ராகவன்

    பொறாமை ஏன் எழுகிறது?

    புதிதாக மணமானவன் சீலன். `உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான்.

    `நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’

    `இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான்.

    ஆனால், உண்மை அதுவல்ல.

    ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி.

    பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம்.

    பாராட்டுவதுபோல் கூறுவது பொறாமையின் வெளிப்பாடு. அவனுடைய கணக்குப்படி, அவன் தாழ்ந்திருக்கிறான். மகிழ்ச்சி அற்றுப்போக, தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் நோக அடிக்கிறான்.

    ஆண் மட்டுமல்ல, தன் தகுதிக்குமீறிய ஒருவரை மணந்துவிட்டோமோ என்று குழம்பும் பெண்ணும் இத்தகைய உணர்ச்சிகளால் தன்னையே வருத்திக்கொள்ளக்கூடும்.

    பொறாமை ஏன் எழுகிறது?

    பொறாமை என்கிற குணம் எல்லா மனிதர்களிடமும் இயற்கையாக அமைந்திருப்பது.

    தன்னைவிட வேறு ஒருவர் பணம், அழகு, அந்தஸ்து இப்படி எதிலாவது சிறந்திருக்கிறாரோ என்ற சிறுமை உணர்ச்சி, அதனால் எழும் அச்சம், பொறாமையாக மாறுகிறது.

    ஒரு பெண் கணவனைவிட அதிக உயரமாக இருந்தால், `அவர்களிடையே ஒற்றுமை இருக்குமா?’ என்று அதிசயப்பட்டுப் பார்க்கிறோம்.

    பொதுவாகவே, மனைவி தன்னை எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு ஆண்களுக்கு உண்டு.

    ஆனால் ஒரு முரண். அவள் பிறரைப் பொறாமையில் ஆழ்த்தும் அளவிற்கு உயர்ந்த தகுதி உடையவளாக இருக்கவேண்டும்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவி சராசரியைவிட மிக அதிகமான உயரம். அந்த நபரை விளையாட்டாகக் கேட்டேன், “நீ உன் மனைவியைவிட உயரமா?”

    “Of course!” சற்றே கோபத்துடன் வந்த அவரது பதிலின் தொனி, `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்பதுபோல் இருந்தது.

    இல்லறத்தில் அன்புதானே முக்கியம்? அதற்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்?

    குழந்தைகளிடையே பொறாமை

    தாயின் மடியில் இன்னொரு குழந்தை தவழ்வதைக் கண்டால் ஒரு குழந்தையின் சுபாவமே மாறிப்போகும். யாரும் பார்க்காதபோது, சின்னக் குழந்தையின் கண்ணைக் குத்த வரும். தாய் திட்டுவாள். அதனால் தம்பி அல்லது தங்கையைப் பிடிக்காமல் போகும்.

    சற்று வளர்ந்ததும், அக்காள் தன்னிடம் ஏன் அன்பாக இல்லை என்று புரியாது, அவள் சொல்வதையெல்லாம் தாயிடம் போய் கோள் சொல்வாள் தங்கை.

    `இது ஏதோ குழந்தைகள் சண்டை!’ என்று தாய் அதைப் பெரிதுபடுத்தாது விடவேண்டும்.

    அல்லது, “நான் கேட்டேனா? இன்னொருவரைப்பற்றிக் கோள் சொல்லாதே!” என்று இளையவளுக்குப் புத்திகூற வேண்டும்.

    அதைவிட்டு, பெரியவளைக் கண்டித்தால், சகோதரிகளிடையே இருக்கும் உறவில் விரிசல் அதிகமாகும்.

    பிறர்தான் என்னைவிட உயர்த்தி

    சிலருக்குத் தன்னிடமிருக்கும் சீரிய தன்மைகள் முக்கியமாகத் தோன்றாது.

    பார்ப்பவர்கள், கேள்விப்படுகிறவர்கள் எல்லாரையும்விடத் தான் தாழ்ந்திருப்பதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய அமைதி பறிபோகாமல் என்ன செய்யும்?

    கதை

    பதின்ம வயதிலேயே திருமணமாகிவிட்ட அபிராமிக்குத் தான் அதிகம் படிக்கவில்லையே என்று குறை. தனக்குக் கிடைக்காதது எல்லாம் மகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று உறுதிபூண்டாள்.

    மகளும் தாயின் ஆதங்கம் புரிந்து, நல்ல உழைப்பால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

    சிறுமியாக இருந்தபோது, மகள் அடைந்த சிறு, சிறு வெற்றிகளால் பூரித்த அபிராமி மாறிப்போனாள். அவள் வளர்ந்தபின்னரோ பொறாமைதான் ஏற்பட்டது.

    அபிராமியைப்போல் அவள் மகளுக்குக் கோலம் போடவோ, சமைக்கவோ தெரியாது. எந்த பண்டிகைக்கு என்ன செய்யவேண்டும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தாயைப்போல் எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தாது, படிப்பிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் தாய்க்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம்.

    பிறர் அடையும் வெற்றியால் மற்றொருவர் எதையும் இழந்துவிடுவதில்லை.

    தான் அடைந்த வெற்றியைவிடப் பிறரது வெற்றியைக் கவனித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஒருவர் தன்மேல் கொண்டிருக்கும் மிகையான அன்பின் வெளிப்பாடு.

    ஒப்பீடு எதற்கு?

    தமக்கு இருக்கும் திறமைகளைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்கிறவர்கள், `நான்தான் சிறந்தவன்! நான் செய்வதையெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். இதனால் எந்தவிதப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

    பொறாமைக்கு ஆளானவர்களுக்கு உள்ளுக்குள் ஏதோ கசப்பு இருக்கும். நம்மைப்பற்றி – நம்மிடமே – அவதூறாகப் பேசுவார்கள்.

    நம்மிடமுள்ள சிறப்புகளைப் பொறுக்க முடியாதவர்களே `இவனிடம் என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் உறவுகளையும், நட்பையும் பிரிக்க முயல்வார்கள்.

    கதை

    எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்த மோகனா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். சில ஆண்டுகளிலேயே மோகம் குறைந்தது.

    கல்யாணத்துக்குப் பிறகு கணவர் தன்னைக் கவனியாது, நண்பர்களுடனேயே பொழுதைப் போக்குகிறாரே என்ற வருத்தம் மோகனாவிற்கு. அந்த உணர்வு தன்னைப்போல் இல்லாது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தும் பிற பெண்கள்பால் திரும்பியது.

    அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா!

    `உன் கணவரைப் பிற பெண்களுடன் பார்த்தேன்,’ என்று ஆரம்பிப்பாள்.

    அந்த மனிதர் வேலை முடிந்து, அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் காரில் ஏற்றிப் போயிருப்பார். அதிகம் ஆராயாது, கணவர்மேல் சந்தேகம் கொண்டு, சண்டை பிடிப்பாள் மனைவி.

    இதைத்தானே மோகனாவும் எதிர்பார்த்தாள்!

    இப்படியாக, பல குடும்பங்களில் தகராறு எழச் செய்தாள் மோகனா. அதில் ஒரு அற்பதிருப்தி.

    அவளுடைய திட்டம் புரிந்த ஆண்கள் தம் மனைவியை எச்சரிக்கை செய்யும் அளவிற்குப் போயிற்று அவளது கலகம்.

    யாரைத்தான் நம்புவது?

    வெற்றி பெற்றவர்களும், தம்மால் இயன்றதை மட்டும் செய்து திருப்தி அடைந்தவர்களும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை.

    இவர்களால் நமது வெற்றியை ஊக்கமாகக்கொண்டு நடக்க முடியும். நம் வீழ்ச்சி இவர்களை வருத்தம் கொள்ள வைக்கும்.

    கீழே இருப்பவர்கள்

    தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தம்மைப்போல் கீழே இறக்கிவிட நினைத்து, அதன்படி நடப்பவர்கள் கீழேயேதான் இருப்பார்கள்.

    இது புரிந்து, அவர்களது செய்கையால் நாம் மாறவும் கூடாது, மனம் வருந்துவதிலும் பயனில்லை.

    தாழ்ந்திருப்பவரைப் பார்த்து யாராவது  பொறாமை கொள்கிறார்களா?

    பிறரைப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு நாம் சிறந்திருக்கிறோமே என்று பெருமைகொள்ள வேண்டியதுதான்!

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

    சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

    மதுராந்தகன் 

    (கனவு இலக்கிய வட்டத்திற்காக)

    திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “அந்நியர்கள்“ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது .

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் (044 28270 937).

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார்.

    ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை  ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது.

    Share
  • நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

    பல்லவி

    நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
    நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

    அனுபல்லவி

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)

    சரணம்

    ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.

    பல்லவி

    சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச

    அனுபல்லவி

    அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
    அடி முடி காணா நெடுமலை வாணா
    அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)

    சரணம்

    அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
    அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
    பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
    பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
    பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நற்றுணையாவது நமச்சிவாயவே

    நற்றுணையாவது நமச்சிவாயவே

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா 

    சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த, விழித்திருவில் – வி, இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ, சீட்டாடுவதோ, களியாட்ட விடுதிகளை நாடுவதோ, முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருடபுராணம், அக்னிபுராணம், அருணாசலபுராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் , அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

    ஆசீர்வாதம் (Self Blessing)  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும். அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான் சிவன் என்கிறோம். இந்தச் சிவனை உருவமாய், அருவமாய், அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

    சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான், திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள். சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

    “வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே”

    “நற்ற வாவுனை நான்ம றக்கினும்
    சொல்லும் நாநமச்சி வாயவே”

    “நமச்சிவாய வாழ்க”  இந்த வார்த்தை சிவனைக் குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

    நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்.

    நமசிவாய மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்க்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க , சித்திவழங்கும் “நமச்சிவாய” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினைத் தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திடச் சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    “சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானவன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே” 

    “இல்லக விளக்கது விருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே” 

    Share
  • படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பசுமை வயல்கள் காண்போர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்ட, தலைச்சுமையாய் வாழைத் தாறு சுமந்து நடந்துவருகின்றார் பெரியவர் ஒருவர். கவிதைபோல் அமைந்த இந்தக் காட்சியைப் படம்பிடித்திருப்பவர் திரு. சரவணன் தண்டபாணி. இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    வாழைக் குலையை நாம் ’வாழைத் தார்’ என்றே தவறாகச் சொல்லிப் பழகிவிட்டோம். அதனை ’வாழைத் தாறு’ என்று கூறுவதே சரி.

    தாறு நாறுவ வாழைகள் தாழையின்
    சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
    நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
    சேறு நாறுவ செங்கழுநீர் அரோ.

    என்ற கம்பராமாயணப் பாடலில் இச்சொல் பயின்று வந்திருப்பதைக் காண்க.

    கண்ணுக்கினிய இக்காட்சிக்குக் கவிஞர்கள் தீட்டியிருக்கும் தண்டமிழ்க் கவிதைகளைக் கண்டுவருவோம் வாருங்கள்!

    *****

    ”வாழைக் குலை விற்கும் ஏழையை ஏய்க்காதீர் தரகர்களே! அவர்களும் வாழட்டும்!” என்று உழவரின் நல்வாழ்வுக்கு உரிமைக்குரல் எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பயன் பெறட்டும்…

    வாழைக் குலையது விளைந்ததென
    வயலில் வெட்டிக் கொண்டுசென்றால்,
    ஏழையை ஏய்க்கிறான் சந்தையிலே
    இடையே புகுந்திடும் தரகனுமே,
    வாழ வழியிலை உழவனுக்கே
    வழிப்பறி கொள்ளைதான் வழியினிலே,
    பாழும் மனிதரே திருந்திடுவீர்
    பயனது பெறட்டும் விவசாயியே…!

    *****

    ”அகிலமெங்கும் கிடைக்கும் பழம்; ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்” என்று தொடங்கி வாழைப் பழத்தின் பயன்பாடுகளைப் பாங்குறப் பாட்டில் பட்டியலிட்டிருக்கின்றார் திருமிகு. இராதா. 

    அகிலம் எங்கும் கிடைக்கும் பழம்
    ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்
    இல்லை இதற்கு எங்கும் இவ்வுலகில்
    ஈடு உண்டோ சொல்வீர்கள்…

    உடலைப் பேண உதவும் இந்தப் பழம்
    ஊரெங்கும் எளிதாகக் கிடைத்திடுமே
    எத்தனையோ வகைகளும் உண்டு
    ஏழைகூட வாங்க இயலும் பழமிது!

    ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் இதனை
    ஐந்து வயதுக் குழந்தைகூட தின்னலாம்

    ஒன்றை தினமும் சாப்பிடக் கிடைக்கும்
    ஓடி உழைத்திட பல சத்துக்கள்!

    காயாக இருக்கக் கறிக்கும் உதவுதே
    கால்நடைகளும் உண்டு களிக்குதே
    பாட்டி தாத்தா பாங்காய் உண்ணவே
    பழுத்த பழம் அவரின் பசி தீர்க்குமே!

    மனிதன் உண்டபின் இதன் தோலும்
    மண்ணுக்கும் உரமாகுதே காணீர்!
    புதுமை வேண்டி ரசாயனத்தை இதில்
    புகுத்தப் போகுதே உயிர்ச் சத்துக்கள்

    வகை வகையான இந்த வாழை
    வாழ வைக்க வந்தது நமக்கிது வரமே!
    வாழையடி வாழையாக நாம் வாழவே
    வந்த வாழையை வளர்த்திடுவோமே!

    *****

    சுவைபொதி வாழையைப்போல் கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.  

    அடுத்து இடம்பெறுவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வாழை

    உழைக்கும் மக்கள் குறும்பசியைத்
    தீர்த்து வைக்கும் வாழை
    ஏழை மக்கள் வீட்டினிலும்
    குடியிருக்கும் வாழை

    உயிர்ச்சத்து தாதுஉப்பு
    உயர்ந்திருக்கும் வாழை
    உடல் நலத்தைச் சீராக்க
    உதவி செய்யும் வாழை

    மருந்தாக மக்கள் நலம்
    காத்து நிற்கும் வாழை
    விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
    வீற்றிருக்கும் வாழை

    மனிதர் வாழ்வில் மங்களங்கள்
    சேர்த்திருக்கும் வாழை
    புனிதச் சின்னமாக என்றும்
    பூத்திருக்கும் வாழை

    ”உழைப்போரின் பசி தீர்க்கும்; ஏழைகள் வீட்டில் குடியிருக்கும்; மருந்துக்கும் விருந்துக்கும் பயன்படும்; மனித வாழ்வில் மங்கலம் சேர்க்கும்; புனிதச் சின்னமாய்ப் பூத்திருக்கும்” என்று வாழையின் மகத்துவத்தை கவித்துவத்தோடு விளம்பியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள்.

    நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே?

    குடி ஆணையும் பெண்ணையும் பாதிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் பெண் அதிகமான பாதிப்புக்கும், வேறு சில விஷயங்களில் ஆண் அதிகமான பாதிப்புக்கும் ஆளாவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆணுக்கு ஏற்படும் பாதிப்பு அவனைவிடவும் பெண் குறைவாய்க் குடித்தாலும் அவளுக்கு அதே அளவு ஏற்படுவதாய்த் தெரியவந்துள்ளது.  ஆனால் அந்தப் பாதிப்புகளிலும் சில வேறுபாடுகள் உள்ளனவாம். குடிவெறியில் கொலை செய்வது, வன்னுகர்வு செய்வது போன்றவற்றில் பெண் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உடலளவில் பெண் அதிகமாகவும், மனத்தளவில் ஆண் அதிகமாகவும் பாதிக்கப்படுவதாய் இதிலிருந்து நினைக்க வேண்டியுள்ளது.

    பெண் குடிப்பதால் அவளது உடல் நிலையில் ஏற்படக்கூடிய சீர்குலைவு அவள் பெறும் குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டுமாயின், ஒரு பெண் குடிகாரியாக இல்லாதிருக்கவேண்டும். அதிலும், குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது ஒரு பெண் இந்த விஷயத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு பெண் உட்கொள்ளும் உணவுகள் அவள் சுமக்கும் கருவையும் பாதிக்கின்றன எனும் நிலையில் அவள் தன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியதாகிறது. சில உணவுகள் கர்ப்பத்தையே கலைத்துவிடக் கூடியவை.  சில உணவுகள்  வேறு வகையான குறைபாடுகளைக் கருவில் உற்பத்திசெய்துவிடக் கூடியவை. எனவே கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் தன் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளாள். அவ்வாறு இல்லையெனில், குழந்தைகள் பிறவி யிலேயே அவற்றைப் பாதிக்கும் நோய்களுடன் மட்டுமல்லாது, பல்வேறு ஊனங்களுடனும் பிறக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும் உரிமை எந்தப் பெற்றோர்க்கும் கிடையாது.

    இதைப் பற்றியெல்லாம் அறியாமல், பெண்ணுரிமை என்பதன் பெயரால் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெணகள் தாங்களும் செய்ய முற்படுவது அசட்டுத்தனம் அல்லது அறிவீனமாகும்.  ‘பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்களே! இது எதில் போய் முடியும்?’ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.  இது நியாயமான கவலைதான். குடிகாரிகளின் எண்ணிக்கை குடிகாரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவுதான். ஆனால், இதை எண்ணி நாம் நிம்மதி யடைந்துவிடலாகாது. இந்த எண்ணிக்கை பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விதைக்கும் விதை நன்றாக முளைக்கவேண்டுமாயின் அது விதைக்கப்படும் நிலம் செழிப்புள்ள நல்ல நிலமாக இருத்தல் வேண்டும். கருவைப் பெற்றுத் தன்னுள் வைத்து வளர்க்கும் பெண்ணை நிலத்துக்கு ஒப்பிடுவார்கள்.  நிலம் மட்டுமே நல்ல நிலமாக இருந்துவிட்டால் ஆயிற்றா? அதில் விதைக்கப்படும் விதையும் சேதமடைந்ததாகவோ, சொத்தையாகவோ இருக்கலாமா? ஒரு நிலம் என்னதான் களர்நிலமாக இல்லாமல் செழிப்பானதாக இருந்தாலும், அதில் ஊன்றப்படும் விதை சொத்தையாக இருந்தால் அது முளைத்து வளருமா என்ன!

    குடியால் ஓர் ஆணுக்கு ஏற்படும் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று அவனுடைய உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்பதாகும். குடித்துக் குடித்துச் சொத்தையான உடம்பை வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணின் மனைவி குடிப்பவளாக இல்லாவிட்டலும் கூட, அவன் மூலம் அவள் பெறும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்குமா என்ன?

    எனவே,  ‘அய்யோ! பெண்கள் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று அங்கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களும் குடிக்காமல் இருப்பதற்கான உபதேசங்களை இவர்கள் செய்வது நடுவு நிலையான செயலாக இருக்கும். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசையுமன்றோ இவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் கண்டிக்க வேண்டும்? ஆணோ பெண்ணோ தவறிழைப்பதற்கான அத்தனை தவறுகளுக்கும் அடித்தளம் அமைத்திருக்கும் அரசன்றோ  கண்டனத்துக்கு உரியது? ஆனால், அரசுக்குத் தமுக்கு அடிப்பார்கள், அல்லது கண்டுங் காணாதிருப்பார்களே தவிர, அதற்கெல்லாம் இவர்களுக்குக் கடுகளவு துணிச்சலும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

    புகை பிடிப்பதும், போதை மருந்து உட்கொள்ளுவதும் கூட ஆணின் உயிரணுக்களைப் பாதிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ, ஊனத்துடனோதான் பிறப்பார்கள். எனவே, தீயவற்றுக்கு அடிகோலும் அரசு, அவற்றுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரையும் இவர்களுக்கெல்லாம் துணைநிற்கும் காவல்துறையினரையும் ஒருமித்துச் சாடுவதே முறையாக இருக்கும்.

    மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்பதற்கான சாக்குப் போக்குகள் ஏற்புடையனவல்ல. காவல்துறை அலுவலர்களும், ஆட்சியாளர்களும், இன்ன பிற அரசியல்வாதிகளும் ஒழுங்காகச் செயல்பட்டு நடக்க முற்படின், எதையும் சாதிக்கலாம். ஒரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் இருப்பின், அந்தப் பகுதியைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என்று சட்டமியற்றினால், கள்ளச் சாராயம் எப்படி ஒழியாமலிருக்கும்? வெறும் இடமாற்றம் தண்டனையாகுமா? வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் காவல்துறையினர் அங்கும் அதையேதானே செய்வர்?

    ராஜாஜி சொன்னதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது ‘கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லுபவர்களுக்காக மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது’ என்று அன்றே அவர் சொன்னதை  நினைவுகூர்ந்து நடப்பதே அறிவார்ந்த – மனிதாபிமானம் மிக்க – நிலைப்பாடாக இருக்கும்.

    இன்று பணிப்பெண்களின் கணவன்மார்கள் அனைவருமே குடிப்பதாய்த் தெரிகிறது. புருசனுக்காகப் படையல் வைத்துக்கொண்டிருந்த பெண்கள் இன்று, ‘அவன் என்னைக்குச் செத்து ஒழியறானோ அன்னைக்குத்தான் என் கொழந்தைங்களும் நானும் நிம்மதியாயிருப்போம்’ என்று விரல் சொடுக்குகிற அளவுக்கு வெறுத்துப் போய் ஒருமையில் அவனைக் குறிப்பிட்டுப் பல்லைக் கடிக்கிறார்கள்.

    மாணவர்களில் பலரும், மாணவிகளில் சிலரும் குடிக்கத் தொடங்கியிருப்பது எதில் போய் முடியும் என்பதை மனச்சாட்சியுள்ள ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். …ஹ்ம்…மனம் என்னும் ஒன்றே  இல்லாதவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்ப்பதும் மடத்தனம்தானே?

    Share
  • Chandrababu

    Chandrababu

    Baskar Seshadri

    Joseph Pichai Chandrababu was born in 1927 and He died on March 8th in 1974 at the prime age of 47. He would have turned 94 this year had he been alive. A No nonsense man and straight forward person could not survive for long here in the industry. His last days were too pathetic and the owner of the house where he lived had cut the electricity (Babu could not pay even the small Electricity bill or the rental) and Babu had no means to eat or manage. At times It was the family of MSV which used to get him the food.

    Many oldies may be aware that it was Chandra babu who lived such a lavish life had even built his car parking in the first floor where he used drive in atop to reach home. All came to a standstill and at a point when Bhantalu went to Book him for Sabash Meena (Double role) he insisted that he be paid one Rupee extra than what Sivaji Ganesan was Paid. When the news went to Ganesan he simply said “He is a performer and pay him what he needs” Such was the generosity and confidence one had in their talent. When everyone left Babu It was Visvanathan who helped him to his best level and as a gratitude Babu told the people around him on death bed that MSV be informed first about his death. In deference to his wishes the cortege carrying Chandrababu stopped a while at the house of MS Viswanathan. Then went on to Rest at Quibble islands Cemetery. Today is the day of His Memorial. His life is a Lesson to everyone. An Actor who has no parallel.

    Share
  • இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

    இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை மைல் உயரத்துக்கு மேல் தீக்குழம்பை வீசிப் பொழிந்தது. இந்தச் சீற்றம் 30 மணி நேர இடைவெளியில் விட்டுவிட்டு 16, 18, & 19 தேதிகளில் செந்தீப் பிழம்பை வெளியே எறிந்தது. திடீரென்று 20 ஆம் தேதி விதி மாறிப் பூத எரிமலை ஆனது. இருட்டத் தொடங்கியதும், ஒளிமின்னும் சிறுசிறு துகள் கள் பன்னூறு அடி உயரத்தில் வான வேடிக்கை செய்தன. நள்ளிரவு 1:30 மணிக்கு இடி முழக்கி பெரும் கட்டிகள் எரிமலைக் குண்டுகள் போல் 3300 அடிக்கு மேல் வெடிச் சத்தம் உண்டாக்கின. தீப்பொறிகள் 6 மைல் உயரம் ஏறி இடிநகை புரிந்த பயங்கரச் சத்தம், மலை சரிவில் வாழ்ந்து வரும் மில்லியன் மக்கள் காதில் விழுந்தது! பிப்ரவரி 22 இல் தீவிரக் காட்சிகள் கடுமை தணிந்து, எரிமலைக் குழம்பு 6500 அடியாகத் தாழ்ந்தது.

    எட்னா எரிமலையின் அசுரப் பேரழிவுக் கடுமை கடந்த 3500 ஆண்டுகளாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 2013 செப்டம்பர் வரை, தடைப்பட்ட எழுச்சிகளாய்த் தெரிந்தும், 2019 செப்டம்பர் வரைத் தொடர்ச்சியாகவும், 2020 டிசம்பர் முதல் செங்குத்து நிகழ்ச்சியாகவும், வழியும் பொழிவாகவும் காணப் படுகிறது.

    பிறகு வியப்பூட்டும் நிகழ்ச்சி, எரிமலைக் குழம்பில் பேரளவு நீர் மய ஆவி தென்பட்டது. ஆயின் அது தீக்கனல் வெப்பத்தைத் தணிக்க வில்லை. ஒரு மணி நேரத்தில் மாறுபட்ட வடிவத்தில் எரிமலைக் குழம்பு காட்சி தருகிறது, உயரத்தில் செங்குத்தாய் எழும் கருஞ் சாம்பல் திரண்ட தூண் தூள்கள், பயங்கர வெடிச் சத்தமுடன் பரவும் தீப்பொறிகள்! இத்தாலிய மக்கள் எட்னா எரிமலைக் கோரத்தை எதிர்கொள்ளத் தயாராய், சாம்பல் பொழிவுகளைத் தெருக்களில் நீக்குகிறார். சிரமங்களைப் பொறுத்துக் கொள்கிறார்!

    https://www.usatoday.com/picture-gallery/news/world/2021/02/23/mount-etna-volcano-eruptions-rise/4554726001/

    இத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

    1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் !  2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம்.  காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை!  இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன!  லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின!  லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன!  அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.

    நிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது. பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது.  இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்).  முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின.  அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன!  அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.

    fig-2-earthquake-force-in-tnt

    இத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது.  மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது.  அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது.  மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன.  பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன!

    fig-4-the-himalayan-fault-line

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    fig-5-the-indian-plate-monitoring-satellite

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்!

    fig-5-indo-eurasian-plate-movements

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    major-earthquakes-1

    World’s Most Earthquake Disasters

    +++++++++++++++

    தகவல்:https://www.usatoday.com/picture-gallery/news/world/2021/02/23/mount-etna-volcano-eruptions-rise/4554726001/

    ********************

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    எறிபத்தர் என்ற மன்னர் அக்கருவூரில் வாழ்ந்தார். அவ்வூரில் அமைந்த ஆனிலையப்பர் திருக்கோயிலில் சிவபூசை மரபுகளைப் பேணி வளர்த்த தொண்டராக அவர் திகழ்ந்தார். அவரைப்பற்றி இப்பாடல்கூறுகிறது.

    பாடல்:

    மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க
    வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
    முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும்
    பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்  பெற்றார்.

    பொருள்:

    நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடைய இறைவன் அன்பர்களுக்கு அடுக்கத்தகாத இடர்கள் வந்த காலத்தில், குகையினின்றுங் கிளம்பிப் பாயும் சிங்கம்போல, விரைவில்  தோன்றி அந்த முரண்பட்ட வலிமை கெடும்படி எறிந்து தீர்க்கும் படைக்கலமாகிய, பழமறைகளாற் போற்றப்பட்டதாகிய பரசாயுதத்தை எப்போதும் ஏந்துகின்றவர் (அவர்).

    விளக்கம் :

    மழைவளர் உலகு – உலகம் மழையின் றுணையானே வளர்ந்து வழங்குவதாம். “வானின் றுலகம் வழங்கி வருதலால்”என்பது திருக்குறள்.

    உலகில் எங்கும் மன்னிய சைவம் – மன்னிய சைவம் எங்கும்  ஓங்க என்க. சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது. உலகத்தென்றும் சிவசம்பந்தமே நிறைவது – சிவ நிறைவுட்பட்டது உலகம்.

    “ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
    யங்கங்கே சிவமாகி நின்றார் தாமே”

    என்ற திருத்தாண்டகமுங் காண்க. மன்னுதல் – இடையூறு வந்த காலத்தும் அழிவின்றி நிலைபெறுதல். ஓங்க – எங்கும் மேம்பட்டு நிற்க. நிலைபெற்ற நிறைவாகிய அது பொதுவகையாலன்றிச் சிறப்பாக விளக்கம் பெற. சைவம் எங்கும் மன்னியதாயினும் இடையூற்றின் மிகுதிப்பாட்டாற் சிலவிடத்து ஓங்காது குன்றி நிற்கும். கூன்பாண்டியர்

    காலத்தே சமணம்மிக்குச் சைவ விளக்கம் குன்றியது போலக் காண்க.

    அவ்வாறு குன்றாது ஓங்க இந்நாயனார் இடையூற்றினை எறிந்து தீர்க்கப் பரசு எடுத்தனர் என்பது. உலகில் எங்கும் மழை மன்னும்பொருட்டுச் சைவம் ஓங்க என்று கருதுக. சைவம் ஓங்குதலால் மழைமன்னுதல் “வீழ்க தண்புனல்” என்ற திருப்பாசுரத்தாற் காண்க.

    அரசினால் அடாதன நீங்கின; அவை நீங்கச் சைவம் ஒங்கிற்று; அது ஒங்க மழை மன்னிற்று; அது மன்ன உலகம் வளரும் – எனக் கொண்டுரைக்க. இச்சரிதத்தே யானையால் நேர்ந்த சிவாபசாரம் இந்நாயனாரது செயலினாலே நீங்க, மன்னனும் ஒங்கியது காண்க. மன்னனது கோலோங்குதலும் மழைக்குக் காரணமாமென்ப. திருப்பாசுரத்தினும் “வீழ்க தண்புனல்; வேந்தனு மோங்குக” எனத் தொடர்ந்து கூறியருளியதுங் காண்க. இதுபற்றிய விரிவுரையில் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்,

    “வேள்வி நற்பயன் வீழ்புன லாவது,
    நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்,
    லாளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை,
    மூளு மற்றிவை காக்கு முறைமையால்”

    என்றருளியிருப்பதையும் இங்குவைத்துச் சிந்திக்க.

    அழல் அவிர் சடை – தீப்போலச் செந்நிறத்தனவாகி விரிந்தசடை.

    “அழனீரொழுகியனைய சடை”, “மின்னார் செஞ்சடை”, “மின்வண்ண, மெவ்வண்ணமவ்வண்ணம் வீழ்சடை” என்பனவாதி திருவாக்குக்கள் இதனை நிறுவும்.  மின் தீயினது கூறாகும் என்க.

    அடாதன – அடுக்கத்தகாதன. வரத்தகாத தீங்கு. அடியார்களுக்கு நேரும் தீங்கினைத் தம் வாக்கினாலும் சொல்லாத மரபுடைய ஆசிரியர், அம்மரபுபற்றி அடாதன என்றார்.

    முழையரியென்ன – முழை – சிங்கங்கள் பதுங்கி வசிக்கும் மலைக்குகை முதலிய மறைவிடங்கள். அரி – சிங்கம். பசிமுதலிய அவசியம் நேர்ந்தபோ தன்றிப் பிறகாலத்து இது வெளிவராது. அவசியம் நேர்ந்தபோது எவ்வகையிடையூற்றுக்கும் அஞ்சாது வீரத்தோடெழுந்து பாயும். யானைமேற் பாய்தல் சிங்கத்தினாலன்றிப் பிறவற்றில்   இயலாது. இவை முதலியகாரணங்கள் பற்றி இங்குச் சிங்கத்திற்கு ஒப்புமை கூறினார்.  “செங்கண் வாளரியிற்கூடி” (572) என்று பின்னருங் கூறினார்.

    சீறி – இச்சீற்றம் அன்பர்க்கடாதன அடுத்தபோது தீர்க்கும் அன்புடைமையால் எழுந்த கோபம். சிவப் பணியிடையின் நிகழ்வதாகலின் நூல்களால் விலக்கப்பட்ட மனக்குற்றங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படாததாம் என்க. இறைவனது கோபப் பிரசாதம் போலக் காண்க.

    முரண்கெட – பகை நீங்குமாறு. முரண்செய்த காரணத்தைக் கெடச்செய்தலே அடாதனவற்றைத் தீர்க்கும் வழியாம்.  அடுத்தார்க்கு அரணும் அடுக்காதார்க்கு முரணுமாம்.

    எறிந்து தீர்க்கும் பரசு – மறைபரசும் பரசு – எனப் பரசு என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. மறைபரசும் பரசு – சிவபெருமான் கையில் உள்ளது. பரசு ஹஸ்தாய நம : என்பது சிவாஷ்டோத்தரம். “பரசுபாணியர்” முதலாகவுள்ள தமிழ் வேதங்களும் காண்க. இறைவன் திருக்கரத்தில் ‘பரசு’ என்ற மழு  விளங்கியதைத்  திருமுறைகள் ஆங்காங்கே செப்புகின்றன.  இங்கு நாயனார் ஏந்தியது அது போன்றதே என்பதாம். இது பற்றியே முதனூலாகிய தமிழ் மறையும் “இலைமலிந்த வேல்” என்று போற்றியது.

    பரசும் பரசு – பரசும் =போற்றுகின்ற, பரசு = மழு;   சொற்பின் வருநிலை என்ற சொல்லணி. தூயபரசு – இங்குப் பரசு, எறிந்து கொலைசெய்யும் படையாயிருந்தும், தூய் – என்றது  என்னை? எனின், அடியார்க்கு அடுக்கும் அடாதனவற்றை நீக்கித், தூய நல்ல சிவதருமஞ்செய்யத் துணை செய்தலானும், அடாதன செய்து அடியார்பால் அபசாரப்பட்டாரை ஒறுத்து அவரையுந் தூய்மை செய்தலானும் அது தூயதேயாம் என்க.

    “கோல மழுவா லேறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன்,
    மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்”   என்பது  சண்டீசர் புராணம்.

    “பாதகமே சோறு பற்றினவா” – திருவாசகம்.

    முன் எடுக்கப்பெற்றார் – முன் – முதன்மையாக. எப்போதும் தம்முன்னர் விளக்கம் பெற. எடுக்கப்பெற்றார் – எடுத்துத் தாங்கும் பேறு பெற்றார்.

    அடியார் பணிகள் இருவகைப்படும். அவர் வேண்டுவன கொடுத்தல் ஒன்று. இளையான்குடிமாற நாயனார், இயற்பகை நாயனார் முதலியோர் செய்தன. இவ்வகை.

    அடியார்க் கடாதன அடுத்தபோது முன்வந்து தீர்க்கும் வீரம் மற்றொரு வகை. இங்கு நாயனார் செய்கை இவ்வகைப்பட்டது. விறன்மிண்ட நாயனார், சத்திநாயனார் திருப்பணிகளும் இவ்வாறேயாவன.

    மறை, இறைவன் வாக்காய் அநாதியாயுள்ளதென்பார் பழமறை யென்றார். இப்பாடலால்  அரசன்  அரண் போலக் காக்கவும், முரண் நீக்கவும்  ஆயுதம் ஏந்தி இருப்பார் என்பது கூறப்பட்டது. இறைவனின்  திருவுருவங்கள் ஆயுதங்களை ஏந்தி மறக்கருணை புரிவதும்  இது பற்றியே ஆகும். இறைவன்  மழுவேந்தி ஆடிய தலம் ‘திருமழுவாடி’ (திருமழபாடி) என்பது இங்கே நினைந்து மகிழத்தக்கது.

    Share
  • குசுத் தீவுக்கு ஒரு பயணம்

    குசுத் தீவுக்கு ஒரு பயணம்

    சிங்கப்பூரின் செந்தோசா அருகில் உள்ள குசுத் தீவு எனப்படும் ஆமைத் தீவுக்கு ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

    ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

    எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பெற்ற ஜெயந்தி சங்கர், ஓவியத் துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். அபாரமான படைப்பூக்கத்துடன், சார்க்கோல், பென்சில், பேஸ்டல், அக்ரிலிக், நீர்வண்ணம் (வாட்டர் கலர்) எனப் பல விதங்களில் வரைந்து வருகிறார். செப்டம்பர் 2018இல் இவரது தனிநபர் ஓவியர் கண்காட்சியாக ஒரு முழுநாள், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவோடு, தேசிய நூலகத்தில் நடந்தது. எல்லா இனத்தவருமாக, எல்லா வயதினருமாக சுமார் 500 பேர் வருகை புரிந்து ஓவியங்களைக் கண்டு களித்தனர். இந்தக் கண்காட்சி, பெரும் வெற்றியாக அமைந்தது.

    ஜனவரி 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான 20 மாதக் காலக்கட்டத்தில் ஜெயந்தி சங்கர். 600க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் 300க்கும் மேலான ஓவியங்களை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். இந்தப் பதிவின் பின்னணியில் ஜெயந்தி சங்கரின் வீணையிசையும் இழைகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜெயந்தி சங்கரின் ஓவியங்களும் இசையுமாக இந்த இரட்டை விருந்தை உங்கள்முன் படைப்பதில் மகிழ்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்களின் வித்தக விந்தைகள்

    பெண்களின் வித்தக விந்தைகள்

    சக்தி சக்திதாசன்

    என் இனிய அன்பு உள்ளங்களே !

    மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

    சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
    சித்தியெனக்களித்தவள் என் அன்னை
    புத்தியெனக்களித்தவள் என் அன்னை
    முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

    தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
    தந்தான்  ஆதிமூலம் தந்த மகத்துவம்
    எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
    வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

    அன்னையாராக அன்பு மழை பொழிவர்
    சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
    காதலியராக கனவுகளை உயிர்ப்பிப்பர்
    தோழியராக எம் துயர் பகிர்ந்திடுவர்

    அன்றெம்   முப்பாட்டன் பாரதி
    ஆணித்தரமாய் அடித்துரைத்தான்
    அந்நியர் அடிமை கொள்ளல் போல்
    அன்னையரை அடிமை கொள்ளலாமோ?

    தெள்ளிய உண்மைகளைத் தமிழில்
    தெள்ளத் தெளிவாய்ச் சொன்னார்  பாரதி
    உள்ளத்தில் வாங்கினோமா உண்மைகளை?
    உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

    வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
    சோதனை பல வென்று தன்னிரகற்ற
    சாதனையான மகவுகள் தந்தனர் தோழரே!
    போதனையல்ல சத்தியமே உண்மை

    மகளிர் தினம் இதுவென்று உலகில் நாம்
    மார் தட்டிக் கொள்வதில்லை பெருமை
    மகளிரும் உயர்ந்தோரெனும் உண்மை
    விளக்கிட்டோமா என்பதே கேள்வி?

    சமுதாயக்கலாச்சாரம் எனும் போர்வையில்
    மாதர்கள் கால்களில் பூட்டிட்ட விலங்குகளை
    சமத்துவம் கொண்டு என்று நாமதை
    உடைக்கின்றோமோ அதுவே மகளிர் தினம்

    எமையீன்ற அன்னையரைப் போன்றே
    சேய்களுக்கு  வாழ்வை அர்ப்பணித்த
    தியாகச் செம்மல்கள் அனைவருக்கும்
    வணக்கங்களோடு வாழ்த்துகள்.

    Share
  • பெண்களுக்கும் சமூகநீதி!

    பெண்களுக்கும் சமூகநீதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா

    “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும், அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரம், பெண்களின் வாக்குரிமை, பெண் அடிமை, விடுதலை, என்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும். இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    “சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக ‘சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘ சர்வதேச மகளிர் தினத்தைக் “ கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸ் இணக்கம் தெரிவித்தார். இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8ஆம் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முன்வந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை  வென்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  ” பெண்கள் ” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்கு? பெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்கு? பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணுகிறோம். ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் , சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடைமுறை வாழ்வில் சமஉரிமை கிடைப்பதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியாகவும், இன சமூகரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது. காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது.

    “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்“

    என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதல் மிக  அவசியம்.

    Share