படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பசுமை வயல்கள் காண்போர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்ட, தலைச்சுமையாய் வாழைத் தாறு சுமந்து நடந்துவருகின்றார் பெரியவர் ஒருவர். கவிதைபோல் அமைந்த இந்தக் காட்சியைப் படம்பிடித்திருப்பவர் திரு. சரவணன் தண்டபாணி. இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!
வாழைக் குலையை நாம் ’வாழைத் தார்’ என்றே தவறாகச் சொல்லிப் பழகிவிட்டோம். அதனை ’வாழைத் தாறு’ என்று கூறுவதே சரி.
தாறு நாறுவ வாழைகள் தாழையின்
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ.
என்ற கம்பராமாயணப் பாடலில் இச்சொல் பயின்று வந்திருப்பதைக் காண்க.
கண்ணுக்கினிய இக்காட்சிக்குக் கவிஞர்கள் தீட்டியிருக்கும் தண்டமிழ்க் கவிதைகளைக் கண்டுவருவோம் வாருங்கள்!
*****
”வாழைக் குலை விற்கும் ஏழையை ஏய்க்காதீர் தரகர்களே! அவர்களும் வாழட்டும்!” என்று உழவரின் நல்வாழ்வுக்கு உரிமைக்குரல் எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
பயன் பெறட்டும்…
வாழைக் குலையது விளைந்ததென
வயலில் வெட்டிக் கொண்டுசென்றால்,
ஏழையை ஏய்க்கிறான் சந்தையிலே
இடையே புகுந்திடும் தரகனுமே,
வாழ வழியிலை உழவனுக்கே
வழிப்பறி கொள்ளைதான் வழியினிலே,
பாழும் மனிதரே திருந்திடுவீர்
பயனது பெறட்டும் விவசாயியே…!
*****
”அகிலமெங்கும் கிடைக்கும் பழம்; ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்” என்று தொடங்கி வாழைப் பழத்தின் பயன்பாடுகளைப் பாங்குறப் பாட்டில் பட்டியலிட்டிருக்கின்றார் திருமிகு. இராதா.
அகிலம் எங்கும் கிடைக்கும் பழம்
ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்
இல்லை இதற்கு எங்கும் இவ்வுலகில்
ஈடு உண்டோ சொல்வீர்கள்…
உடலைப் பேண உதவும் இந்தப் பழம்
ஊரெங்கும் எளிதாகக் கிடைத்திடுமே
எத்தனையோ வகைகளும் உண்டு
ஏழைகூட வாங்க இயலும் பழமிது!
ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் இதனை
ஐந்து வயதுக் குழந்தைகூட தின்னலாம்
ஒன்றை தினமும் சாப்பிடக் கிடைக்கும்
ஓடி உழைத்திட பல சத்துக்கள்!
காயாக இருக்கக் கறிக்கும் உதவுதே
கால்நடைகளும் உண்டு களிக்குதே
பாட்டி தாத்தா பாங்காய் உண்ணவே
பழுத்த பழம் அவரின் பசி தீர்க்குமே!
மனிதன் உண்டபின் இதன் தோலும்
மண்ணுக்கும் உரமாகுதே காணீர்!
புதுமை வேண்டி ரசாயனத்தை இதில்
புகுத்தப் போகுதே உயிர்ச் சத்துக்கள்
வகை வகையான இந்த வாழை
வாழ வைக்க வந்தது நமக்கிது வரமே!
வாழையடி வாழையாக நாம் வாழவே
வந்த வாழையை வளர்த்திடுவோமே!
*****
சுவைபொதி வாழையைப்போல் கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.
அடுத்து இடம்பெறுவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
வாழை
உழைக்கும் மக்கள் குறும்பசியைத்
தீர்த்து வைக்கும் வாழை
ஏழை மக்கள் வீட்டினிலும்
குடியிருக்கும் வாழை
உயிர்ச்சத்து தாதுஉப்பு
உயர்ந்திருக்கும் வாழை
உடல் நலத்தைச் சீராக்க
உதவி செய்யும் வாழை
மருந்தாக மக்கள் நலம்
காத்து நிற்கும் வாழை
விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
வீற்றிருக்கும் வாழை
மனிதர் வாழ்வில் மங்களங்கள்
சேர்த்திருக்கும் வாழை
புனிதச் சின்னமாக என்றும்
பூத்திருக்கும் வாழை
”உழைப்போரின் பசி தீர்க்கும்; ஏழைகள் வீட்டில் குடியிருக்கும்; மருந்துக்கும் விருந்துக்கும் பயன்படும்; மனித வாழ்வில் மங்கலம் சேர்க்கும்; புனிதச் சின்னமாய்ப் பூத்திருக்கும்” என்று வாழையின் மகத்துவத்தை கவித்துவத்தோடு விளம்பியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.